Wednesday, March 31, 2010

சுகாதாரமான லஞ்சம் மற்றும் நாளைய செய்தி!

கடந்த சில நாட்களாக, மருந்துகள் கண்காணிப்புத்துறையும், சுகாதாரத்துறையும் மண்டை பிய்த்துக்கொண்டும், பிய்த்துக்கொள்ள வைத்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இதற்குப்பின்னணியில் இவர்களது லஞ்ச ஆட்டம் இருப்பது வசதியாக மறைந்துவிடுகிறது. அந்த ஆற்றாமையுடன் திரியும்போது இன்று ஒரு விஷயம் வினையாற்றவைத்திருக்கிறது.

சாராள் இல்லம் பற்றி முன்னரே எழுதியிருக்கிறேன்.
அதன் நிர்வாகி டைசன் மிகவும் சிரமத்துக்கிடையில் ஒரு வாடகை வீட்டில் அந்த இல்லத்தை நடத்திவருகிறார்.

இதற்கிடையில் சமூகநலத்துறையின் அங்கீகாரத்துக்காக , மற்ற துறைகளில் சான்றிதழ் வாங்கவேண்டும் என்று அவரிடம் அதிகாரிகள் கூற, ஒவ்வொரு துறையாக சுற்றிவந்திருக்கிறார். எங்கு பார்த்தாலும் லஞ்சம்!

அது ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட ஒரு தனிமனிதரிடம் வாடகைக்கு இருக்கும் பலமாக உள்ள கட்டிடம் - இது உண்மை
' பலமாக உள்ளது ' என்று பொதுப்பணித்துறை பொறியாளர் சான்றிதழ் தர, ரூபாய் 1500/-

ஒரே ஒரு கழிவறை உள்ளது. அனேகமாக எல்லாக்குழந்தைகளும் பக்கத்திலேயே உள்ள ஏரியைச்சுற்றியுள்ள கருவேலங்காட்டில் இயற்கை உபாதையைக்கழிக்கிறார்கள். - இது உண்மை!
, இருபது கழிவறை உள்ளது. நான் பார்த்தேன் என்று சுகாதாரத்துறை அதிகாரி சான்றிதழ் கொடுக்க ரூபாய் 1000/-

ஆறு வாளிகளில் மண்ணும், நீரும் வைத்திருக்கிறார்கள் - இது உண்மை!
தீயணைப்பு வசதிகள் அனைத்தும் உள்ளன. fire extinguisher இரண்டு உள்ளது என்று சான்றிதழ் கொடுக்க ரூபாய் 1000/-

அங்கு போர் வைத்து நீர் எடுத்து செலவழித்துக்கொண்டிருக்கிறார்கள். - இது உண்மை!
அது நல்ல நீர்தான் , நீர் ஆதாரம் சிறப்பாக உள்ளது என்று சான்றிதழ் கொடுக்க ரூபாய் 500/-


இன்று நானும் ஊரில் இருந்ததால், அவர் என்னிடம் வந்து புலம்பினார். இவரை நீண்டநேரம் வலியுறுத்தி, நான் எப்போதும் எடுக்கும் லஞ்ச ஒழிப்பு ஆயுதத்தை, எடுத்து நாளை சுகாதார அதிகாரி பிடிபடப்போகிறார்.

என் முன்னிலையில், அவர் சுகாதார அதிகாரியிடம் பேசியது ...

0331182000.wavலஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் பேசியது

0331185500.wav

நாளைய செய்தி? - சுகாதாரத்துறையில் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது ! - அப்புறம் என்ன ஆகும்?.....

போலி மருந்துகளையும், மாத்திரைகளையும் உண்டு உயிரிழந்த எண்ணற்ற மனிதர்களுக்கு இவர்கள் செய்த துரோகத்துக்கு முன்னால்........ :(

Monday, March 22, 2010

புன்னகைத் தூக்கு!
ஊரோரப்
புளியமரத்தில்
தூக்கில் தொங்குவேன்
நான் !

அழுதரற்றிக்
கால்பிடித்து
கழுத்திறுகல்
உறுதிசெய்து
என்
இறப்பில்
மகிழ்வான்
அவன்!

பக்கத்தில்
கண்ணீருடன்
பதைபதைப்பாள்
அவள்!
பத்தாம் நாள்
காரியத்திற்கு
பத்துநாள் இருக்கிறதே?

அதுவரை
அவள் வீட்டில்
ராத்தங்க
விடாமல்
செய்துவிட்ட
மகிழ்வொன்று
புன்னகையாய்
வெளிவந்து
என்
நாக்கை நீட்டும்!

Wednesday, March 17, 2010

'ஆனந்தி'யில் எதிரி!

ஐரோப்பிய தமிழ் மாத இதழான ஆனந்தியில் என் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது.
படத்தை க்ளிக்கி பெரிதாகப்பார்க்கலாம்.நான் எழுதி அனுப்பிய கட்டுரை:

எதிரி மேலாண்மை

நம் எல்லோருக்கும் அதிகபட்சமா தூக்கத்தைக் கெடுப்பது, சந்தோஷமான விஷயங்களை விட வருத்தமான விஷயங்கள் தான்! அதுவும் நமக்குப்பிடிக்காத ஒருத்தர் செஞ்ச செய்கையை நினைச்சே பல நாள் தூக்கம் தொலைச்சிருப்போம். அவுங்கதான் வாழ்க்கையிலேயே முதல் எதிரின்னு நினைப்போம்.ஒரு விழாவுக்குப்போனால் நாம் அதிகம் நினைச்சுக்கிட்டு போவது நமக்குப்பிடிக்காத அந்த எதிரியும் அங்க வந்திருப்பாங்களோன்னுதான்.! ஒரு நாளின் அதிக நேரத்தை அவுங்களைப்பத்தின நினைப்புதான் எடுத்துக்கும்!

ஆனா உண்மையா எதிரிங்கிறது யார்? உங்களிடம் பழகி, உங்களுக்கு தெரிஞ்சவராகவோ, நண்பராகவோ இருந்தவர்தான். திடீர்ன்னு ஒரே ஒரு சம்பவத்தால் அவரை எதிரியா பாவிக்க ஆரம்பிச்சுடுறோம். ஒரு மனிதனின் வாழ்வில் வளர்ச்சியைத்தடுப்பவர்கள் மட்டுமே எதிரியாகப் பார்க்கப்படணும். இதைத்தவிர கோபத்தில் திட்டினவுங்க, அவசரத்துக்கு பணம் தராதவங்க, கொடுத்த பணத்தைத் திருப்பித்தராதவங்க, உங்க சொந்தங்களுக்கிடையே சண்டை மூட்டினவங்க, புறம் சொன்னவர்கள், அலுவலகத்தில் மேலதிகாரிகிட்ட நீங்க செஞ்ச தப்பை போட்டுக்குடுத்தவர்கள் இப்படி வகை தொகையில்லாம எல்லாரையும் எதிரியா நினைச்சு, இவுங்களை என்ன செய்யலாங்கிற நினைப்பில் வாழ்வைத்தொலைச்சுட்டு நின்னுரக்கூடாது.

உங்களுக்கு எதிரியாகுறதுக்கு , யாரா இருந்தாலும் அவுங்களுக்கு ஒரு தகுதி வேணும்னு முதலில் நினைங்க ! இவுங்க நமக்கு எதிரின்னு முடிவெடுக்குறதுக்கு முன்னாடி சில விஷயங்களை சரி பாருங்க! அவர் நம் வளர்ச்சியையோ , வாழ்க்கையையோ கெடுக்க இந்தக்காரியம் பண்ணியிருக்காரா? அவர் மனசுல நம்மளை எதிரியா நினைச்சுக்கிட்டிருக்காரா? அவருக்கு நாம ஏதாவது மனசு நோகும்படியோ, அவர் வளர்ச்சியை பாதிக்கும்படியோ ஏதாவது செஞ்சிருக்கோமான்னு யோசியுங்க! அப்படி ஏதாவது லேசா சந்தேகம் வந்தாலும் நேரா அவரிடமே பேசுங்க! ஒரு நண்பரை— நண்பராகவே தக்கவைக்க முயற்சி பண்ணுங்க!

இப்படித்தான் மொக்கச்சாமிக்கும் அவர் எதிர் வீட்டுக்காரருக்கும் எப்பவுமே தகராறு நடக்கும். ரெண்டு பேரும் ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் அடிச்சுக்குவாங்க.! ஒரு நாள் மொக்கச்சாமி , ஊர்க்காரங்களைக்கூப்பிட்டு நம்ம வீட்டில் விருந்து எல்லாரும் வந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும்னார். என்ன விசேஷம்னு கேட்டதுக்கு எதிர் வீட்டுக்காரனுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்குன்னார். யாராலயும் நம்ப முடியலை. எதிரிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்குன்னதும் ஊருக்கே விருந்து குடுக்குறாரே ! நண்பர்களாயிட்டாங்களோன்னு ஊரெல்லாம் பேச்சு! அடேயப்பா! மொக்கச்சாமி! எதிரியா இருந்தாலும் அவன் சந்தோஷத்துல பங்கெடுத்துக்கணும்னு நினைச்சே பாத்தியா! நீதான்யா மனுஷன்னு எல்லாரும் பாராட்டும்போது...மொக்கச்சாமி சொன்னாரு! அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை! எதிர்வீட்டுக்காரனுக்கு லாட்டரி விழுந்தது வாஸ்தவம்தான்.. ஆனால் அந்தப்பணத்தை வாங்குறதுக்கு டிக்கட் வேணுமில்ல! அதைக்காணும்னு ரெண்டு நாளா திண்டாடிக்கிட்டிருக்கான். அந்த சந்தோஷத்தைக்கொண்டாடத்தான் இந்த விருந்துன்னாரு! இப்படி இருந்தா யாருதான் எதிரியாக மாட்டாங்க!

வேலை இடத்தில் நம்மை விட நல்லா வேலைபாத்து முன்னேறணும்னு நினைக்கிறவுங்க, தொழிலில் நம்மைவிட வேகமா செயல்பட்டு ஜெயிக்கிறவுங்க இவுங்களையெல்லாம் மறந்து போய்க்கூட எதிரி லிஸ்டில் சேத்துடக்கூடாது. அவுங்களெல்லாம் போட்டியாளர்கள் ! போட்டியாளர்கள் என்னிக்குமே நம்மை விட நல்லா முன்னேறணும்னு நினைப்பாங்களே ஒழிய நம்மை கீழே தள்ளணும்னு நினைக்கமாட்டாங்க! அப்படி நம்மை கீழே தள்ளும் அந்த விநாடியிலிருந்து அவுங்க போட்டியாளர்ங்கிற நல்ல தகுதியை இழந்து நமக்கு எதிரியா ஆகிடுவாங்க!

மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்த் தனக்கு ஒரு டெண்டர் கிடைக்குறதுக்காக சத்யராஜ் அலுவலகத்தில் கோல்மால் செஞ்சு அவரைவிட ஒருரூபாய் அதிகமா போட்டு அந்த டெண்டரை வாங்கிடுவாரு! சத்யராஜ் , ரஜினியை போட்டியாளாரா நி்னைச்சுக்கிட்டிருக்கும்போது, ரஜினியோ சத்யராஜை எதிரியா முடிவெடுத்து அவரை முடக்க நினைச்சு அதுக்கான வேலைகளில் இறங்கிக்கிட்டிருப்பாரு! ஆனா சத்யராஜ் அவரை போட்டியாளராவே நினைச்சு ஏமாந்துபோவாரு!

நாமும் யாருக்கும் போட்டியாளரா இருக்குறது ரொம்ப ஆரோக்கியமான விஷயம். ! நம் வாழ்க்கைக்கு எது நல்லதோ அதை எடுத்துக்கிட்டு நடை போடலாம். ஆனா அதில் ஒரு சின்ன நடவடிக்கை கூட அடுத்தவுங்களை பாதிக்கிறதா இருக்கக்கூடாது. எதிரி விஷயத்தில் இது ரொம்ப முக்கியம். நீங்க அழுவதைப்பாத்து யாருமே சிரிச்சுடக்கூடாது. உங்க சிரிப்பால் ஒருத்தர் கூட அழுதுடக்கூடாது. எதிரி இந்தப்புள்ளியில்தான் உருவாகிறார்கள்!

எதிரிங்கிறவங்க நம் வளர்ச்சியைத்தடுக்கிறவங்களா இருந்தா பதிலுக்கு அவுங்க வளர்ச்சியைத்தடுக்க முயலும்போதுதான் நாம் அவுங்களுக்கு எதிரியாகுறோம். அதுக்குப்பதிலா.. அவுங்க முயற்சிகளைப்புறந்தள்ளிட்டு நம்ம சக்தி முழுவதையும் நம் வளர்ச்சிக்கு செலவழிச்சோம்னா நம்மைவிட புத்திசாலி யாரும் இருக்க முடியாது.

எதிரிக்கும் பரிசளிக்கணும்னா மன்னிச்சுப்பழகுங்க! எதிரியை தண்டிக்கணும்னா வாழ்ந்துகாட்டுங்க..! வாழ்ந்துகாட்டுதலைவிட மிகச்சிறந்த பழிவாங்குதல் வேற எதுவுமே இல்லை! போட்டியாளர்களை இனங்கண்டு எதிரிகளைப்புறந்தள்ளி வாழ்வில் வெற்றிபெற உளமார்ந்த வாழ்த்துக்கள்.

சிறு மாறுதல்களுடன் வெளிவந்திருக்கிறது.

ஆனந்தி குழுமத்திற்கும், அன்பு நண்பர்களுக்கும் நன்றிகள்!Tuesday, March 16, 2010

பொட்டண வட்டி

'எப்புடி இருந்தாலும் ரெண்டு லெச்சம் இல்லாம ஒண்ணும் செய்யமுடியாது.''

நேற்று இளங்கோ அண்ணன் சொன்னது மீண்டும் மீண்டும் வந்துபோனது. அப்பா காலத்திலிருந்த டெடில் மிஷினை வைத்து அச்சகம் நடத்தி ,இன்றைய தேதிக்கு பிழைப்பது என்பது , பேப்பர் வெட்டும் இயந்திரத்தில் தலையைக்கொடுப்பதற்குச் சமம் என்று தெரிந்து போனது. சரி..இருக்கும் பொருட்களை விற்கலாம் என்றால், அதுவும் முடியாது, வேண்டுமானால் அச்சு எழுத்துக்களின் ஈயத்தையும் இரும்பையும் எடைக்கும், படக்கட்டைகளை குப்பைக்கும். எழுத்துக்களை வைத்திருந்த சிறு அறைகளாகப்பிரிக்கப்பட்ட பெட்டிகளை உடைப்பதற்கும்,அந்த பிரம்மாண்டமான லண்டனில் செய்யப்பட்ட , ராயல் சிம்பல் பொறித்த அச்சடிக்கும் எந்திரத்தை பழைய இரும்பு விற்கும் சுரேஷ் அண்ணனிடமும் கொடுக்கலாம்.

அதில் ஒரே மிச்சம், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் , பெடலால் மிதித்து ஓட்ட முடியவில்லை என்பதற்காக பொருத்திய மோட்டார்.! அதையும் ஆயிரம்கூடப்பெறாது அண்ணே என்று எலக்ட்ரீஷியன் பாலு சொல்லிவிட்டான். நானும் பல்லைக்கடித்து இத்தனை ஆண்டுகள் ஓட்டிவிட்டேன். யாராவது ஒருவர் சிக்கினாலும் அவர்கள் கடன் சொல்லுவார்கள். அல்லது ஆப்செட்டில் ரேட் படியாமல் என்னை சிக்கவைப்பார்கள். அதிகபட்சமாக தனியார் பஸ் டிக்கெட் ஆர்டர் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது அதற்கும் மிஷின் வந்துவிட்டது. மாதாந்திரச் செலவுக்கு வாங்கிய கடனே ஒரு லட்சத்தைத்தாண்டிய பிறகுதான் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற எண்ணம் வந்தது.

எனக்கு முன்னரே முழித்துக்கொண்டு, இன்று நகரின் முன்னணி ஆப்செட் பிரிண்டர்ஸ் என்று பெயரெடுத்த இளங்கோ அண்ணன் கடைக்கு சென்றேன். ஊரிலேயே பிரபலமாக அச்சுத்தொழில் நடத்திய காலத்தில் எங்களிடம் வேலை பார்த்தவர். ஒரு காலத்தில் அவர் என்னை முதலாளி மகன் என்ற அன்பில் பல இடங்களுக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். என் பெயரை மட்டும் கம்போஸ் செய்து, கட்டை அடித்து, பேப்பர்களில் ஓட்டிக்கொடுத்திருக்கிறார். அதை என் புத்தகங்களில் ஒட்டி பள்ளியில் நான் பெருமைப்பட்டிருக்கிறேன்.

அண்ணே...! ஆப்செட் மிஷின் போடலாம்னு இருக்கேண்ணே!

ரொம்ப சந்தோசம்...! ஆனா இதுக்கு நீ இவ்ளோ காலமாக்கியிருக்கவேணாம்.!

எப்படியாவது ஓட்டிரலாம்னு நினைச்சேண்ணே!

இங்க பாரு முகுந்தா! இப்பெல்லாம் தெருவுக்குத்தெரு ஆப்செட் பிரிண்ட்டர் வந்துருச்சு! போட்டியும் அதிகம்.. நான் உங்கப்பாக்கிட்ட வேலை பாக்கும்போது டெடில் மிஷின்ல பத்திரிக்கை அடிக்க கொறைஞ்சது மூணு நாளாகும். இப்பெல்லாம் பத்திரிகை மாதிரியை கொண்டாராய்ங்க! பேருகளைச்சொல்றாய்ங்க! கம்பியூட்டர்ல அடிச்சு ப்ரூப் பாக்குறாய்ங்க! ஓக்கேங்கிறாய்ங்க இருவது நிமிசத்துல ரெண்டு கலர் ஓட்டி ஐநூறு பத்திரிக்கையை வாங்கிட்டுப்போயிர்றாய்ங்க! ஒலகம் அவ்ளோ ஸ்பீடா போய்க்கிட்டிருக்கு.! நீ இதுக்கே இவ்ளோ நாளாக்கிட்ட! சரி ! பரவால்ல! வெறும் மிசின் போடணுமா? டி ட்டி ப்பியுமா?

ரெண்டுந்தாண்ணே போடணும்.. நம்பக்கிட்டயே கம்பியூட்டர் இருந்தாத்தானே நல்லது.!

அதுவும் சரிதான்! எவ்ளோ பணம் வச்சிருக்க?

ஒரு லச்ச ரூவா கடன்!

சுத்தம்...அப்ப மினிமம் மூணு லெச்சம் வேணும்..!

ஏண்ணே!

பின்ன...ஆப்செட் மிஷின், கம்ப்யூட்டர், லேசர் ப்ரிண்டர்ன்னு ரெண்டு லெச்சம், முன்ன வாங்கின கடனை அடைக்க ஒரு லெச்சம்!

இப்ப என்னண்ணே பண்றது? ஒரு அம்பதாயிரத்துல முடிக்கிறமாதிரி ஏதாவது செய்யமுடியுமா? எங்க மாமனார்க்கிட்ட கேட்டுப்பாக்குறேன்....! பழைய சாமான்லாம் வித்தா பத்தாயிரமாவது தேறும். கடன்காரனுக்கு தேதி சொல்லிக்கலாம்.!

அதற்கு பதிலாகத்தான் முதல் வரியைச்சொன்னார் இளங்கோ அண்ணன்..!

திரும்பத்திரும்ப யோசித்ததில், என்னுடன் பள்ளிக்கூடத்தில் படித்த சதாசிவம் வட்டிக்கடை வைத்திருப்பது ஞாபகம் வந்தது. ரொம்ப அடாவடி என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். இன்ன விதமாத்தான் வட்டி கேட்பான் என்றில்லாமல் அநியாயமாக வட்டி வாங்குவான் என்று பலர் திட்டியிருக்கிறார்கள். ஆனால் , அவன் முன்னால் யாராலும் சொல்லமுடியாது. ஏனெனில் கிட்டத்தட்ட எல்லோருமே அவனிடம் சிக்கியவர்கள்தான். எனக்கு ஒரு நப்பாசை ஏற்பட்டது. அவனிடம் கேட்டாலென்ன?

மீண்டும் இளங்கோ அண்ணன்.!

யேய்! ஒனக்கு என்ன கிறுக்குப் பிடிச்சுப்போச்சா? அவன்கிட்ட போய் கடன் வாங்குறேங்குற? அதுக்கு நீ வேற எங்கயாவது வேலைக்குப்போய் பொழச்சுக்கலாம்.! லேட்டானாலும் பரவால்ல! பேங்க்ல லோன் ட்ரை பண்ணு!

இல்லண்ணே! அவன் என் க்ளாஸ்மேட்!

அதெல்லாம் அவன் பாக்கமாட்டான்ப்பா!

இதை வந்து நான் வத்சலாவிடம் புலம்ப....அவள்

உங்களுக்கு ஒலகமே தெரியலைங்க! இளங்கோ அண்ணனே தனக்கு உங்களை போட்டியா உருவாக வுடுவாரா? அதான் நீங்க உங்க க்ளாஸ்மேட்டுக்கிட்ட கடன் வாங்குறதை தடுக்கப்பாக்குறாரு! மேலும் பேங்க்குல எப்ப அப்ளை பண்றது? எப்ப அவுங்க லோன் குடுக்குறது? அதெல்லாம் ஆவாத வேலை!! மொதல்ல எத எடுத்தாலும் இளங்கோ அண்ணன்கிட்ட போறதை நிறுத்துங்க! உங்க நண்பர் சதாசிவத்துக்கிட்டயே கேட்டுப்பாருங்க! கண்டிப்பா குடுப்பாரு!.

அவளது தலைகோதல் வேலை செய்தது.

காலை 9 மணிக்கு சதாசிவம் வீட்டுத்திண்ணையில் சென்றமர்ந்தேன். எனக்கு முன்னால் இரண்டுபேர் காத்திருந்தார்கள். பளீரென்ற வெள்ளைச்சட்டையும், கருப்பு ஜீன்ஸும் அணிந்து கையில் இரண்டு செல்போன்களுடன், வாயில் எதையோ மென்றுகொண்டே சதாசிவம் வாசலுக்கு வந்தான். எங்களை மையமாகப் பார்த்தான். எதிர் திண்ணையில் இருந்த கண்ணாடி அறைக்குள் சென்றுவிட்டான். ஒரு மணிநேரம் கழித்து நான் அழைக்கப்பட்டேன்.

சதாசிவம்! நல்லாருக்கியா?

ம்..நீ முகுந்தந்தானே!

ஆமாம்ப்பா! எங்க மறந்திருப்பியோன்னு நினைச்சேன்..!

அதெல்லாமில்ல! சொல்லு!

என் பிரச்னையையும், அதற்கான தீர்வு அவனிடம் இருப்பதையும் உருக்கமாகச்சொன்னேன்.

நான் அவசரமா வெளியூர் போய்க்கிட்டிருக்கேன். நாளைக்கு வா!

அன்று முழுவதும் சந்தோஷம் கரைபுரண்டது. கட்டுக்கட்டாக பணத்தை வாங்கி யார் யாரிடம் என்னன்ன ஆர்டர் கொடுக்கவேண்டும் என்று கனவெல்லாம் வந்தது. பில்கேட்ஸ் என் கடைக்கு கம்ப்யூட்டரை ஹீரோஹோண்டாவில் வந்து வைத்துவிட்டுப்போனார்.

அடுத்தநாள். 9 மணி..சதாசிவம் வீடு!

நான் அன்று முழுவதும் அழைக்கப்படவே இல்லை. தொண்டரடிப்பொடிகளிடம் பல முறை என் அறிமுகம் சொல்லி, அவர்கள் அடிக்காமல் விட்டது அதிர்ஷ்டம்தான்!

பாவம்! அவருக்கு பலவேலை இருந்திருக்கும். அதான் மறந்திருப்பாரு! நாளைக்குபோங்களேன். கண்டிப்பா குடுப்பாரு! - வத்சலா சப்போர்ட்டினாள்.

மீண்டும் 9 மணி! சதாசிவம் அன்று அதிகாலையே கிளம்பி வெளியில் சென்றுவிட்டு இரண்டுமணிக்குத்தான் வந்தான். நான் சரியாக வணக்கம் வைத்தேன். என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

எனக்கு அழுகையே வந்தாலும், வத்சலா , அவளே சதாசிவமாக மாறி பல்வேறு சமாதானங்கள் சொன்னாள்!

இப்படியே எந்த ஒரு கவனிப்பும் இன்றி 10 நாட்கள் கடந்தது. இவன் வீட்டிலேயே தவம் கிடப்பதால், வரும் ஒன்றிரண்டு ஆர்டரும் போச்சு.! மேலும் சின்னச்சின்ன வசூலும் இல்லை! வத்சலாவிடம் சொல்லாமல், மீண்டும் இளங்கோ அண்ணனைப்பார்க்கப்போனேன். அரைகுறையாக நடப்பைச்சொன்னேன்.

இவ்ளோ நாள் கண்டுக்கலைன்னா அவன் உனக்கு பணம் தர பிரியப்படலைன்னு உனக்குத்தெரியலையா? அது கூடப்புரியாம புருசனும் , பொண்டாட்டியும் நம்பி திரியிறீங்க! சரி! இப்ப அடுத்தது என்ன?

நானே கொஞ்சம் கொஞ்சமா நம்ப நண்பர்கள்கிட்ட கேட்டு வாங்கலாம்ணு இருக்கேண்ணே..!

முதல்ல அதைச்செய்! நீ இப்பவரைக்கும் என்கிட்ட யோசனைதான் கேட்ட! காசு கேக்கலை! அதாண்டா எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சது! என் மொதலாளி மவன் நல்லா வந்தா எனக்குத்தாண்டா பெருமை.. ! என்னால பெரிசா உதவ முடியாது. என் கிட்ட ஒரு பழைய ரிப்பேரான கம்பியூட்டர் இருக்கு! அதை எடுத்திக்கிட்டு போய் சீர் பண்ணிக்க! இந்தா ஐயாயிரம்! எப்ப வேணும்னாலும் திருப்பிக்குடு...!

கண்ணீர்மல்க நன்றி சொல்லிவிட்டு, நண்பர்களைச்சந்தித்தேன். என் நிலை புரிந்து அனைவரும் உதவி செய்ய , ஒரே மாதத்தில் ஆப்செட் ப்ரஸ் ஆரம்பித்துவிட்டேன்.

கடை ஆரம்பித்து பதினைந்து நாட்கள் ஆகியிருக்கும். அன்று மதியம் மூன்று மணி அளவில், சதாசிவம் வீட்டில் பார்த்த குறுந்தாடி வைத்த ஒருவனும், கொஞ்சம் குண்டான ஒருவனும் வாசலில் வந்து இறங்கினார்கள்.

முகுந்தன் யாருங்க?

நாந்தான்!

ஒரு மாசத்துக்கு மேலாகிப்போச்சு! இன்னும் வட்டி தராம இருக்கீங்களாம். அண்ணன் பாத்துட்டு வரச்சொன்னாரு!

என்னது? வட்டியா? சதாசிவத்தோட கூடப் படிச்சவம்ப்பா நானு! நான் பணம் வாங்கலை! குடுத்ததா நினைச்சுக்கிட்டிருக்கப்போறாரு!

அதெல்லாம் தெரியாது. எதுவா இருந்தாலும் அண்ணனை வந்து பாத்து சொல்லிருங்க!

இது என்னடா சோதனை என்று ஒருபக்கம் நினைத்தாலும், ஏதோ தவறு நடந்திருக்கிறது, இவர்கள் ஆள் தெரியாமல் வந்து கேட்டிருக்கவேண்டும். அல்லது நம் பெயரைச்சொல்லி வேறு யாரோ வாங்கியிருக்கவேண்டும். என்ன இருந்தாலும் சதாசிவம் என் க்ளாஸ்மேட்..சொன்னால் கேட்டுக்கொள்வான். என்ற எண்ணத்தில் உடனே கிளம்பினேன்.

காத்திருக்கவேண்டிய அவசியமே இல்லாமல், சதாசிவத்தின் அறைக்குள் அழைக்கப்பட்டேன். தூக்கக் கலக்கம்போல் சதாசிவம் அமர்ந்திருந்தான்.

என்ன சதாசிவம்? நம்ப பசங்க வெவரம் தெரியாம என்கிட்ட வந்து வட்டி கேக்குறாங்க? சிரித்துக்கொண்டே சொன்னேன்.

நீ என்கிட்ட வந்து பணம் கேட்டீல்ல?

ஆமா!

நான் குடுக்கமாட்டேன்னு சொன்னேனா?

இல்லை!

இங்கபாரு! என்று சொல்லிவிட்டு சதாசிவம் மேசையின் இடப்பக்க ட்ராயரைத்திறந்தான்.

இரண்டு ஆயிரம் ரூபாய்க்கட்டுகள்! அது ஒரு வெள்ளைக்காகிதத்தால் சுற்றப்பட்டிருந்தது. அந்த வெள்ளைக்காகிதத்தில் கொட்டை எழுத்தில் ' முகுந்தன் ' என்று எழுதப்பட்டு , தேதி போட்டிருந்தது.

இந்தா பாரு..! நீ வந்துட்டுப்போன பத்து நாள்லயே எடுத்துவச்சுட்டேன். அப்படியே இருக்கு! நீ வந்து வாங்கிக்கலைன்னா நான் பொறுப்பில்லை! அப்படி பணம் வேணாம்கிறவன். என்கிட்ட வந்து சொல்லிட்டுப்போயிருக்கணுமா இல்லையா? நான் கிறுக்கனா உனக்கு பணம் எடுத்து வச்சிக்கிட்டு இருக்கிறதுக்கு.? நீ அன்னிக்கே வேணாம்னுருந்தீன்னா வேற யாருக்காவது குடுத்திருப்பேன்ல! நீ வேற ஏதோ வேலைல இருக்க, வந்து வாங்கிக்குவன்னு நானும் வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கேன். நீ என்னடான்னா வெவரமா வேற எடத்துல அரேஞ்ச் பண்ணி கடை நடத்துற! சரி..சரி.. எதுக்கு வீண் பேச்சு? முப்பத்தஞ்சு நாளாச்சு... அஞ்சு நாளை பழகினத்துக்கு கழிச்சுக்குறேன். ஒரு மாச வட்டியை கட்டிட்டு நடையைக்கட்டு! அசல் திரும்பிட்டதா நெனைச்சுக்குறேன்.

எனக்கு கிறுகிறுத்தது. சதாசிவம் என்னை கவனிக்காததுபோல், என் பெயர் போட்ட பொட்டலத்தை எடுத்துவைத்துவிட்டு இன்னொரு பொட்டலத்தை எடுத்து மேசைமேல் வைத்துக்கொண்டிருந்தான். பயத்தில் வயிறும், கண்களும் கலங்கியதில் அதிலிருந்த பெயர் சரியாகத்தெரியவில்லை.

தள்ளாடிக்கொண்டே வெளியில் வந்தேன். குண்டன் அருகில் வந்து சிரித்துக்கொண்டே சொன்னான். ' பொட்டண வட்டியை எப்பண்ணே வந்து வாங்கிக்கட்டும்? '

Monday, March 8, 2010

பெண்களே..பெண்மையே....வாழ்க நீங்கள்!

காடுகளுக்குள்
கரடுமுரடாய்த்திரிந்துகொண்டிருந்த
எங்களினத்திற்கு
கனிவுகாட்டி
முரட்டுத்தனம்
நீக்கி
மென்மையாக்கி

பாட்டிகளாய்
தாயாய்
சகோதரிகளாய்
நண்பர்களாய்
உறவினர்களாய்
மகள்களாய்
வாழ்ந்துகொண்டிருக்கும்

2008ல் இருந்த பட்டியல் மற்றும்

2009 ம் ஆண்டு பட்டியல் போக..

நண்பர்கள்

லாவண்யா
கவிதாமோகன்
ப்ரீத்தா
லாரன் க்ரஹாம்
ஆண்ட்ரியா
கேத்தி
தன்யாலா
மஞ்சரி
அனிதா
சித்ரா ராமகிருஷ்ணன்
டாக்டர் ஷர்மிளா
கீர்த்தி சாவ்லா
சுஹாஸினி
பாரதி
ஜோதி


பதிவர்கள்
தேனம்மை லக்‌ஷ்மணன்
சாந்தி ல்க்‌ஷ்மணன்


என வாழ்வை
அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கும்..

பெண்களே...
பெண்மையே..!
வாழ்க நீங்கள்!

Wednesday, March 3, 2010

நித்யானந்தாவும், நானும்..!

இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது?

இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிருக்கிறது. நல்லா இருக்கீங்களா? என்று கேட்பதற்குமுன் நித்யானந்தா மேட்டர் தெரியுமா? என்று கேட்டுவிட்டுத்தான், நேரில் சந்திப்பவர்களும், தொலைபேசுபவர்களும் பேசவே ஆரம்பிக்கிறார்கள்.

என் கல்லூரிக்கால நண்பன் ஒருவன் அமெரிக்காவில் நித்யானந்தரின் சீடனாகவே ஆகிவிட்டான். தன் குழந்தைகளுக்கு நித்யா, ஆனந்தி என்று பெயர் வைத்திருந்தான். அந்த அளவுக்கு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டிருந்தான். இன்று அனேகமாக அவன் ரொம்ப துக்கப்படக்கூடும். காரணம் அவன் அவரை கருத்துக்களை மீறிக் கொண்டாடியதுதான்!

இந்த விஷயத்தில், நாம் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், நம் அடுத்த தலைமுறையையாவது தெளிவாக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இதைச்சொல்கிறேன்.

ஒரு மனிதன், வாழ்வின் சில விஷயங்களை ஒரு கார்ப்பரேட் ட்ரெய்னர் போல, (HR Trainer) போல, கொஞ்சம் ஆன்மீகம் கலந்து பேசுகிறான். அதன் பார்வையாளர்களும்,- வெவ்வேறு வயதினர், வெவ்வேறு தளத்தினர் - அதை ரசிக்கிறார்கள். ' அட! ஆமா! நாம இப்படித்தான் இருக்கோம்! - நம்பளை மாத்திக்கணும் என்று நினைக்கிறார்கள்'. சிலவற்றை மாற்றிக்கொள்ளவும் செய்கிறார்கள். அன்று கேட்ட சொற்பொழிவிற்கான கட்டணத்தையும் செலுத்தியிருக்கிறார்கள். அந்த விஷயத்தை கடைபிடித்து வாழ்வை நிதானமாக வாழாமல், சொன்ன ஆளை பூஜிக்க ஆரம்பிக்கும்போதுதான் , சும்மாக்கிடந்த ராஜசேகரனை, பரமஹம்ஸ நித்யானந்தாவாக்குகிறது உலகம்!

மேலும், சொற்பொழிவைக்கேட்டுவிட்டு, அன்று இரவே , மனைவியிடமோ, வேறு பெண்ணிடமோ காமம் பெற்றுக்கொண்டோ, குறைந்தபட்சம் மது ,சிகரெட் ஆகியவற்றில் சுகம் தேடும் பக்தனாகத்தான் பெரும்பாலோர் இருக்கிறார்கள். ஆனால் மேடையில் காவி உடை அணிந்துகொண்டு அரியாசனத்தில் அமர்ந்துகொண்டு , அந்த பக்தனுக்கு வாழ்க்கை நெறிகளைச்சொன்ன குற்றத்துக்காக புனிதன் பட்டம் கட்டிக்கொண்டு தன் சுய ஆசைகளை எல்லாம் திருட்டுத்தனமாக செய்யவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானதில் அவரது தவறைவிட நம் ஆட்டுமந்தை சமூகத்தின் தவறுதான் அதிகமாக இருக்கிறது.

இந்த வயதில், வாழ்வியல் அனுபவங்கள் ஏதுமின்றி ஒருவன் கூறும் எல்லா அறிவுரைகளையும் ஏற்றுக்கொள்ளும் இந்தச்சமூகம், அவனை தூக்கிவைத்துக் கொண்டாடுவதும்..ஸ்வாமியை நேரிலேயே பாத்துவிட்டேன், ஸ்வாமி கை என்மேல் பட்டுவிட்டது! ஸ்வாமி என்னைப்பார்த்து சிரித்தார் என்று உருவ....உடல் வழிபாட்டை ஆரம்பித்து , அவனை , சராசரி மனிதர்கள் செய்யும் எந்தச்செயலையும் செய்யவிடாமல் பார்த்துக்கொள்கிறது. பின்னர் என்ன? பூஜைகள்தான்..ஆராதனைகள்தான்! அதில் அவனுக்கு ஏற்படும் போதை , தன்னையே கடவுளாக எண்ணவைத்துவிடுகிறது. அந்த எண்ணம் வலுப்பெற்று, தலை அரித்தால் கூட பொறுத்துக்கொண்டிருந்துவிட்டு, உள்ளறைக்குள் போய் சொறிந்துகொள்ளும் அவலம் அவனுக்கு ஏற்பட்டுவிடுகிறது. பின்னர் ஆசிரமம் , கிளைகள், நன்கொடை , படாடோபம் என்று வரும்போது சுகம் தேடும் மனம் விழித்துக்கொள்வதில் , தவறிருப்பதாய் எனக்குத் தெரியவில்லை.

ஒரு வாழ்வியல் பயிற்சியாளனை தெய்வமாகப்பார்த்துவிட்டு , அவன் அதைச்செய்தான் இதைச்செய்தான் என்று கூறுவதில் துளியும் நியாயம் இல்லை!

அவர் செய்த ஒரே தவறு! அந்த ரூமில் கேமரா இருப்பதை முழுமையாக ஆராயாமல் செயலில் ஈடுபட்டதுதான் ! :)

மற்றதெல்லாம் நம்ம தப்பு பாஸு! இனிமயாவது சொன்ன கருத்தை மட்டும் எடுத்துக்குவோம். சொன்ன ஆளை வேண்டவும் வேண்டாம்! நோண்டவும் வேண்டாம்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...