Friday, January 23, 2009

படிச்சாச்சு லக்கிலுக்!

கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் வடிவமைப்புக்காகவும், உள்ளடக்க நேர்த்திக்காகவும் வாங்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக தொற்றிக்கொண்டுவிட்டது. நான் வாங்கிய முதல் 'கிழக்கு' - அடுத்த விநாடி(நாகூர் ரூமி) என்று நினைக்கிறேன்.

இப்போது தமிழ்மணத்திலும், லக்கிலுக்கின் பதிவிலும் கூறியிருந்ததால், அவருடைய-சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்-புத்தகத்தை வாங்கி, இதோ...படித்துமுடித்தாகிவிட்டது.

விளம்பரத்துறையைப்பற்றி இதுவரை தமிழில் தகவல்களுடன் புத்தகம் வெளிவந்திருப்பதாக நான் அறியவில்லை. அதுவும் நம் சக பதிவர் (கொஞ்சம் ஓவர்தான்...அவர் சக பதிவர் என்பதைவிட சூப்பர் பதிவர் எனலாம்) எழுதிய புத்தகம் என்ற பாசத்துடன் படித்தேன்.

முதலில், அவரது இந்த சுலபமான, அழகான, சகஜமான எழுத்து நடைக்கு இது ஒரு சிறந்த விளம்பரம்!

அப்புறம் அதன் சாராம்சம்.... வாசகனை மிகவும் குழப்பாமல், மிகவும் ஆழமான தொழில்நுட்பத்தகவல்களும் தெளிக்காமல், கவானமாகக்கையாண்டு கலக்கியுள்ளார்.
படித்துமுடிக்கும்போது விளம்பரத்துறையைப்பற்றி ஒரு அடிப்படை அறிவு ஏற்பட்டுவிடும் என்பது திண்ணம்.

புத்தகத்தின் பல்வேறு பகுதிகள் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. அதுவும் அந்த அழகி படம், செப்டம்பர் 2, 4ல் ஒவ்வொன்றாக களையப்படும் என்ற தகவல் , இதயம் நல்லெண்ணெய் விளம்பர நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை , இல்லாத பீர் கம்பெனி விளம்பரம் என்று சுவாரஸ்யமாக வழங்கியிருக்கிறார்.

ஒரு நாட்டுக்கே விளம்பரம், உள்ளூர் விளம்பரம் என்று எல்லாவற்றைப்பற்றியும் விலாவாரியாக சிறு சிறு எடுத்துக்காட்டுகள் மூலம் போகிறபோக்கில் கூறியிருக்கும் பாங்கு சிறப்பாக உள்ளது.

விளம்பரம் என்றதும் நினைவுக்கு வரும் எல்லா ஊடகங்களையும் ஒரு சிறு அலசல் அலசியிருக்கிறார். எந்தந்த விளம்பரங்கள் எங்கெங்கு செல்லும் என்றும் விபரம் தருகிறார்.

நீங்கள் ஒரு வியாபார நிறுவனத்தை நடத்திவந்தால், நீங்கள் எந்த வகையில் விளம்பரம் செய்தால் உங்கள் விற்பனையில் ஏற்றம் வரும் என்பதைத்தெரிந்துகொள்ள இந்தப்புத்தகம் ஒரு ஆலோசனை முதலீடாகப் பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் மிகவும் பயனுள்ளதாகவும், ரசிக்கும்படியும் எழுதி -விற்பனையில் சக்கைப்போடு போடப்போகும்படி - வெளியிட்டிருக்கும் நமது லக்கிலுக் என்ற யுவகிருஷ்ணாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகுக !

ஆமா..' கிழக்கு' மக்களே...! எப்புடிப்பா இப்படிப்பட்ட ஆட்களை வளைச்சு வளைச்சுப் பிடிச்சு தூள் கிளப்புறீங்க!

Thursday, January 22, 2009

என்னப்பா இது அநியாயம்?


நாம பாட்டுக்கும் யாருக்கும் தொந்தரவு தராம ஏதோ மனசுல தோணினதை நம்ம புள்ளைங்களுக்குள்ள பொலம்பிக்கிட்டு , சந்தோசப்பட்டுக்கிட்டிருக்கோம். அது எந்த மவராசனுக்கோ பிடிக்காம போச்சுபோல! நம்ம புள்ளைங்க வலைப்பூவெல்லாம் சுடுறாய்ங்களாம்..! நம்ம அப்துல்லா, அவர்பாட்டுக்கும் சந்தோசமா எழுதிக்கிட்டிருந்தார். அவர் வலைப்பூ காணாம போயிருக்கு!
என்னப்பா இது அநியாயம்?

வூடு பூந்து கொள்ளை அடிக்கும் இப்படிப்பட்ட செயல்களை எந்தவகைத்தீவிரவாதத்தில் சேர்ப்பது?

மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ! 

இனி இப்படி நடக்காம இருக்க, எல்லா வல்லுநர்களும் நிறைய வழிமுறைகள் சொல்லிக்குடுங்க!

அதன் முதல் படியை நட்புடன் ஜமால் ஆரம்பிச்சு வச்சிருக்கார்!

இன்னும் எவ்விதமான பாதுகாப்பு வழிமுறைகள் இருந்தாலும் நம்ம மக்களுக்கு பயனுள்ளதா பின்னூட்டலாம். அல்லது பதிவாவே போடலாம்..!

Saturday, January 17, 2009

தீவிரவாத(த்துக்கு) மருத்துவம் - ஒருவழியா முடிச்சாச்சு!

தனிமனிதனின் ஒரே ஒரு குணத்தால்தான் எல்லா வித தீவிரவாதங்களையும் முடிவுக்குக்கொண்டுவரமுடியும் என்பது என் கருத்து!

அது....தவறுகளை தட்டிக்கேட்கும் மனோபாவம் !

ஒன்று யோசித்துப்பாருங்கள் !

இன்றுவரை இந்தியாவில் ஏதாவது ஒரு குக்கிராமத்தில் குண்டு வெடித்தி ருக்கிறதா?எல்லாமே பெரிய நகரங்களில்தான்..!ஏனெனில் அங்குதான் மக்கள் கூட்டம் அதிகமாக சேதமாகும் என்று கூறலாம். கிராமங்களிலும், சந்தை, திருவிழா என்று கூட்டம்  கூடும் நிகழ்வுகள் உண்டே..! அங்கு குண்டு வைக்கலாமே? 

வைக்கமுடியாது .! ஏன் தெரியுமா? கிராமத்து ஆட்களுக்கு தட்டிக்கேட்கும் மனோபாவம் அதிகமாக இருக்கிறது. கிராமத்துக்குள் புதிதாக ஒரு ஆள் நுழைந்தாலும், தொடர்ந்து வந்து ' நீங்க எங்க போகணும்? யாரைப்பாக்கணும் ? என்று கேட்டு ஆள் தெரியாவிட்டால் துரத்திவிடும் மனோபாவம் இன்னும் இருக்கிறது ! பக்கத்துவீட்டில் இன்று எத்தனை பேருக்கு உலை கொதிக்கிறது என்று தெளிவாகத்தெரிந்து வைத்திருக்கும் மனிதர்கள் கிராமத்தில் அதிகம்! ரேஷன் கடையிலோ, அரசு மருத்துவமனையிலோ ஒரு அநீதி நடந்தால் உடனே தட்டிக்கேட்பது கிராமத்து மனிதர்கள்தான்..!

நகரம்?

சொல்லவே வேண்டியதில்லை. என் நண்பர் ஒருவரது அடுக்குமாடிக்குடியிருப்பில், எதிர்வீட்டை, திருடர்கள் சாவகாசமாக -டெம்ப்போவில் சாமான்களை ஏற்றி-காலி செய்யும் வரை எதுவுமே தெரியாமல் இருந்துவிட்டு , வீட்டுக்காரர்கள் வந்து குய்யோ முறையோ எனும்போது, oh! my god! என்று சர்வசாதாரணமாகக்கூறிவிட்டு சொந்த வேலைகளில் மூழ்கிவிடும் புத்திசாலிகள் இருக்கும் இடம்தான் நகரம். !அதுதான் குண்டுவெடிப்பு மற்றும் பயங்கரவாதச்செயல்களை நிகழ்த்துபவர்களுக்கு சாதகமாகப்போய்விடுகிறது.

நமக்குள் எத்தனையோ சங்கங்கள், சமூக அமைப்புகள், சேவை மையங்கள் வைத்திருந்தாலும், இதை அடுத்தவர் நன்மைக்காக செய்யவேண்டும் என்று மனதாரச் செய்யும் எண்ணம் நகரங்களில் மிகக்குறைவு!

எத்தனை நகரப்பேருந்துகளில், நடத்துநரின் அராஜகப்போக்கை தட்டிக்கேட்கும் சக பயணிக்கு ஒருவரும் ஆதரவளிக்காமல் வேடிக்கை பார்க்கும் மனநிலை இருக்கிறது? இதுவும் ஒரு வித தீவிரவாதம் என்பதை எப்போது உணரப்போகிறோம்?

எத்தனை வங்கிகளில் , தனக்கு ஏற்பட்ட ஒரு சேவைக்குறைபாட்டைப்பற்றி கேள்விகேட்கும் ஒரு வாடிக்கையாளரை , புழுவைப்போல் பார்க்கும் சக வாடிக்கையாளர்கள் நாம் பார்த்திருக்கிறோம்.?

அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்குறைபாட்டால் அநியாயமாக இறந்துபோன குழந்தையை வைத்துக்கொண்டு போராடும் ஒரு கும்பல் சாலையை மறித்து நியாயம் கேட்கும்போது, எத்தனைமுறை அவர்களிடையே கிடைக்கும் சந்துகளைப்பயன்படுத்தி வாகனங்களில் அவர்களைக்கடக்கிறோம்.

எல்லாவற்றிற்கும் காரணம்...நம்மிடம் நீர்த்துப்போன போராட்ட குணம்! நமக்கென்ன வந்தது? எதுக்கு இம்சை? இருக்கும் பிரச்னையே போதும்! என்ற உளுத்துப்போன சிந்தனைகள்தான் மும்பை தாக்குதல்வரை நம்மை கொண்டு நிறுத்தியிருக்கிறது. எல்லாத்தனிமனிதனுக்குள்ளும் கதாநாயகனுக்கு அவ்வப்போது வேலை கொடுத்தாலே போதும்! நகரவாசிகளுக்கு பிரச்னையே ஏற்படாது!

எப்படித்தெரியுமா?
இப்போது ஒரு வேற்று நாட்டு மனிதன் நம் அண்டை வீட்டில் குடியிருக்கிறான் என்றால், உடனே அவனை யாரென்று நேரடியாகக்கேட்டு விசாரித்து, அதிலும் சந்தேகம் கொண்டால், - உண்மையிலேயே தட்டிக்கேட்கும் மனிதர்களால் அமைந்த காவல்துறையும் இருந்தால் - காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உடனே அவர்களைப்பற்றிய முழுவிபரங்களையும் நோண்டினால் சுலபமாக பேரிழப்புகளைத் தவிர்க்கலாம்!

ஒன்றாகச்சேர்ந்து நலிந்தவர்களுக்கு உதவுவது என்பது வேறு! 
 
ஒன்றாகச்சேர்ந்து தவறுகளுக்கு எதிராக குரல் கொடுப்பது என்பது வேறு!

கண்முன் நடக்கும் எந்த ஒரு தவறையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் மண்புழுச்சமுதாயத்தில் இருந்துகொண்டு தீவிரவாதத்தை ஒழிப்பது என்பது மல்லாக்கப்படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதாகத்தான் அமையும்!

எப்போது எல்லாத்தவறுகளையும் நாம் தட்டிக்கேட்கவோ, தட்டிக்கேட்பவருக்கு ஆதரவாகவோ செயல்படத்துவங்குகிறோமோ, அப்போது சமூகம் பலப்படும். தீவிரவாதத்துக்கு மிகச்சரியான தீர்வாக இதுவாகத்தான் இருக்கமுடியும் என்பது எனது தாழ்மையான கருத்து!

எந்தத்தவறையும் உடனே தட்டிக்கேட்கும் சமூகத்தில் தீவிரவாதத்துக்கு இடமே இல்லை!
அனைவருமே நிம்மதியாக இருக்கலாம்!தீவிரவாத(த்துக்கு) மருத்துவம் - 4தீவிரவாதத்தின் ஆணிவேர் தனிமனிதன் தான் !


உலகம் , நாடு, அரசு எல்லாவற்றின் நடவடிக்கையிலும் ஒரு தனி மனிதனின் ஆசையும்,வக்கிரமும், ஆதிக்கவெறியும், தன்முனைப்பும், சினமும் கட்டாயம் வெளிப்பட்டுவிடுகிறது.

எங்கோ ஒரு மனிதனுக்கு நேர்ந்த அவமானமோ, அநீதியோ அவனைப் பொங்கவைத்து , அவனது தனிக்கோபம் சமூகத்தின்மீது காட்டப்பட்டு ஒரு பாவமும் அறியாத மனிதர்களையும் பலிவாங்கிவிடுகிறது.
இது இப்போது மட்டும் நடக்கும் செயல் அல்ல.!  தன் கணவன் அநியாயமாக (அவன் மிகவும் யோக்கியனாக இல்லாதபோதும்) கொல்லப்பட்டதை எதிர்த்து ஒரு தனி ஆளாக ஒரு நகரையே எரித்த முதல் தீவிரவாதி, கண்ணகிதான் ! அவளைத்தான் நாம் பத்தினித்தெய்வம் என்று கொண்டாடுகிறோம்.

 ஆனால் என்ன ஒரு ஆச்சர்யமெனில் , காப்பியத்தில் மன்னனையே தட்டிக்கேட்ட பெண் இருந்த இந்த தேசத்தில்தான் என்னைச்சுற்றி என்ன நடந்தாலும் பரவாயில்லை. என் வேலையைப்பார்த்துக்கொண்டு போகிறேன் என்று கொஞ்சம் கூட சொரணை இல்லாத புண்ணியவான்களின் எண்ணிக்கை பன்மடங்காக இருக்கிறது.

தன் வீட்டுக்குப்பைகளை எந்தப்பொறுப்பும் இல்லாமல் சாலையோரத்தில் வீசிவிட்டுப்போகும் மனிதர்களின் செயலில் இருப்பது எந்தவித மிதவாதம்?

என்பெயரை ஏன் கருத்துக்கணிப்பில் குறைத்து மதிப்பிட்டீர்கள் என்று வெறிகொண்டு, தன் கூட்டத்தை ஏவிவிட்டு சொந்தக்காரன் நிறுவனத்திலேயே மூன்று பேரை பலியிட்டது எந்தவித அஹிம்ஸாவாதம்?  ஒரு தனிமனிதனின் அப்பட்டமான தன்முனைப்பு வெறி!

கையூட்டு கொடுத்தால் போதும் காரியம் சாதித்துவிடலாம் என்ற நப்பாசையில் சட்டப்பூர்வமாக எந்த ஒரு செயலையும் செய்யாமல் திமிராகத்திரியும் நமக்குள் எத்தனைபேர் மிதவாதிகள்?
லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் இந்தக்காரியத்தைச்செய்வேன் என்று , - அரசுப்பணியில் இருக்கும் மமதையில்- வெறிபிடித்து 
அலையும் அதிகாரியை எந்த வித காந்தியவாதி என்பது?

தான் வேகமாகப்போனால் போதும் , எனக்கு மட்டும் போக்குவரத்து விதிகள் கிடையாது என்று விருட்டென்று வண்டியோட்டி, தான் இறந்து அல்லது தன்னால் பயந்தவர்களை இறக்கவைக்கும் தனிமனிதர்களிடம் இருப்பது பயங்கரவாதம்தானே?

பின்லேடன் என்ற தனிமனிதனின் ஆதிக்க மற்றும் மத வெறிதான் இன்று அல்-கொய்தாவாக வளர்ந்து நிற்கிறது.
புஷ் என்ற தனிமனிதனின் தன்னைக்காப்பாற்றிக்கொள்ளும் பதவிவெறிதான் ஈராக் போராக வந்து நிற்கிறது.
கருணாநிதி என்ற தனிமனிதனின் சொத்து சேர்க்கும் வெறிதான் பல்வேறு அரசியல் கொலைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.
ஜெயலலிதா என்ற தனிமனிதரின் தன்முனைப்புதான் 3 கல்லூரி மாணவிகளின் மரணமாக மாறி இருக்கிறது. (பல்வேறு ஆசிட் வீச்சுகள், செருப்படிகளும் அடக்கம்)
மோடி என்ற தனிமனிதனின் மத மற்றும் பதவி வெறிதான் குஜராத்தை கலவர பூமியாக்கி இருக்கிறது.
ராஜபக்ஷே என்ற தனிமனிதனின் அரசியல் காழ்ப்புணர்ச்சி மிகுந்த இனவெறிதான் ஈழத்தில் தமிழர்களை இழக்கவைக்கிறது.

எல்லா அழிவுகளுக்குள்ளும் காரணத்தை நோண்டிக்கொண்டே சென்றால் தனிமனிதன் தான் அப்பட்டமாக வந்து நிற்பான்.


பத்துபேராகத்திட்டமிட்டாலும், மனிதவெடிகுண்டாகச் செயல்படும் எல்லோருமே தனிமனிதர்கள் தானே?

திரைப்படங்களில் வரும் கதாநாயகர்கள் தனிமனிதனாக எல்லா கெட்டவர்களையும் போட்டுத்தள்ளுவதை நாம் மிகவும் விரும்புகிறோம். அதே அளவு தனிமனிதனாக நாம் எந்த அளவுக்கு நல்லவர்களாக, தெளிவானவர்களாக, நியாயத்தை நிலைநாட்டுபவர்களாக இருக்கிறோம்.? 

ஒருபக்கம் தனிமனிதனின் வெறியால் பல்வேறு தவறுகள் நடக்கின்றன !
இன்னொருபுறம் தனிமனிதனின் எதையும் கண்டுகொள்ளாத மெத்தனத்தால் பலப்பல தவறுகள் நடக்கின்றன..!

இதில் மிகப்பெரிய ஆபத்து என்னவெனில், எதையும் கண்டுகொள்ளாத மெத்தனவாதிகளால்தான் , வெறிபிடித்த தனிமனிதர்கள் அழிவுகளை ஏற்படுத்துகிறார்கள்!

ஆக...எல்லாத் தீவிரவாதத்துக்கும் அடிப்படை - தனிமனிதன் தான்! அவனது எந்த குணம் இவ்வளவுக்கும் காரணம்?

(தொடரும்)

Sunday, January 11, 2009

தீவிரவாத(த்துக்கு) மருத்துவம்- பாகம் 3

சென்ற ஆண்டின் இறுதியில் எழுதி.....நீண்ட இடைவெளிக்குப்பிறகு...இதைத்தொடர்கிறேன்.


அரசு என்பது அதிகாரிகளால் ஆனது !
இன்று அதிகாரிகளால்தான் பலதரப்பட்ட அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பதின் சூட்சுமத்தை உணர்ந்துள்ளார்கள் என்பது சர்வநிச்சயம்.

அதிகாரிகள் ஒரு விதமான தீவிரவாதத்தை நம்மீது பிரயோகித்துக்கொண்டே இருக்கிறார்கள்.அரசாங்கம் (மேல்மட்டம்) வெளியிடும் எந்த ஒரு நலத்திட்டமும் மக்களை வந்து அடையாமல் பார்த்துக்கொள்வதில் அவர்களின் பங்கு மேலோங்கி நிற்கிறது.

லஞ்சம்...- இந்தப்பதத்தை கண்டும் பிடித்து, கட்டவிழ்த்தும் விட்டு இப்போது அது நம்மை விழுங்குமளவுக்குச்செய்திருக்கிறார்கள்.
முன்னெல்லாம் சட்டத்தை மீறிய செயல்களுக்கு லஞ்சம் வாங்கினார்கள். பின்னர் தங்கள் வேலையைச்செய்வதற்கே லஞ்சம்...! இப்போது கொஞ்சம் முன்னேறி...அரசு அலுவலகங்களில் அடிக்கடி கேட்கும் வசனம்...அவரு ரொம்ப தங்கமான அதிகாரி..கைநீட்டி காசு வாங்கிட்டாருன்னா கண்டிப்பா செஞ்சு குடுத்துருவாரு! - அப்படியெனில் காசு வாங்கியும் செய்துகொடுக்காத நிலையில்தான் இன்றைய லஞ்சம் இருக்கிறது. இது எந்தவகை மிதவாதம்?

எல்லா மட்ட அரசு ஊழியர்களும் தன் நலம் மட்டுமே பெரிதென்று சிறிய - பேசித்தீர்க்கக்கூடிய - பிரச்னைகளுக்குக்கூட ஒரு நகரத்தின் செயல்பாட்டையே ஸ்தம்பிக்க முயற்சிப்பது எந்தவிதமான அஹிம்ஸாவாதம்.?


மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று முதலமைச்சர் அறிவித்த அடுத்தநாள் டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரமாக்கு என்று போர்க்கொடி பிடிப்பதற்குப்பின்னால் எந்தவிதமான சமூக அக்கறை உள்ளது?

உளவுத்துறையின் மெத்தனப்போக்கினால்தான் இந்த தாக்குதல் நிகழ்ந்தது என்று ஊருக்கு ஊர் வாய்கிழிய, காகிதம் கிழிய சொல்லப்படுகிறதே..அப்படி அது உண்மையெனில் அது அதிகாரிகளின் குறைபாடுதானே! கார்கரே மாதிரி துணிச்சல் மிக்க மிகச்சிலரையும் இது போன்ற சம்பவங்களில் பலிகொடுக்க வைத்தது எது?

தன் சொற்ப படிக்காசுக்காக, ஒரு தொலைதூரப்பேருந்தில், கடைசி நிறுத்தப்பயணிகள் மட்டும்தான் முதலில் ஏறலாம். அவர்களைத்தவிர வேறு யாருக்கும் ஏறும் உரிமை இல்லை என்று ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் அராஜகம் செய்யும் நடத்துனர்களை எந்தவிதத் தீவிரவாதிகள் என்பது?

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிவிட்டு, அவர்களையே அடிமைகளைப்போல் நடத்தும், (அ)நியாய விலைக்கடைகள், மின்வாரிய அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பொதுமருத்துவமனைகள், வட்டாரப்போக்குவரத்து அலுவலகம், தாசில்தார் மற்றும் இன்ன பிற அலுவலகங்களில் இருப்பவர்களை எந்தவித மனிதர்கள் பட்டியலில் சேர்ப்பது?

எத்தனையோ கேடுகெட்ட ஒப்பந்தக்காரர்களை வளர்த்துவிட்டு, அவர்களிடம் பிச்சையெடுத்து வாழ்ந்து, இப்போது மாட்டிக்கொண்டு, நாளை வெளிவந்துவிடப்போகும் திருச்சி மாவட்ட வருவாய் அதிகாரியின் செயல்பாட்டில் எந்தவிதமான மிதவாதம் இருந்திருக்கமுடியும்?

கடைமட்ட ஊழியர் முதல் மேல் மேல் மேல் அதிகாரி வரை - சம்பளம் பத்தவில்லை - என்ற சப்பைக்காரணத்துடன் ஊரையே கொள்ளையடிப்பது எந்தவிதமான அணுகுமுறை?, இவர்கள் விலைவாசி உயர்வுக்காக என்றாவது ரோட்டுக்கு வந்திருக்கிறார்களா என்றால் ...ஹி ஹி என்று சொறிவார்கள்..!

ஒரு சராசரிக்கணக்குப்பார்த்தீர்கள் என்றால், ஏழைகளிடம் எந்த அரசியல்வாதியும் லஞ்சம் வாங்குவதில்லை. அவர்களுக்குக்கொடுக்க
வேண்டியதை எடுத்துக்கொள்வார்கள் . அவ்வளவுதான்..! ஆனால் 
அதிகாரிகள்தான் ஏழைகளிடமும் ஐந்து , பத்து என்று பிச்சையெடுத்து உழைப்பையும் சேர்த்துச்சுரண்டும் அசிங்கம் பிடித்தவர்கள்..!
இவர்கள் நசுக்கிய குடும்பங்கள் எத்தனை என்று கணக்கெடுத்தால்தான் தெரியும். தீவிரவாதத்தில் நாம் இழந்த உயிர்களைவிட இவர்களால் நொந்து இறந்தவர்கள் அதிகம் என்பது !

அதிகாரிகள் நேர்மையாகவும், எந்த அரசியல்வாதிக்கும் தலையாட்டாமல் இருந்தால், அவர்கள் உயிருக்கு ஓரிரு இடங்களில் ஆபத்து நேரும்போது கண்டிப்பாக கடைநிலை மனிதன் அவர்களைக்காக்க துணிந்து இறங்குவான். ஏனெனில் அவனுக்கு முதலில் அரசாங்கத்தின் வாசல் கதவாகத்தெரிவது அதிகாரிகள்தான்.! நல்ல அதிகாரியை இடமாற்றம் செய்யாதே என்று போராடிய 
வரலாறுகள் நிறைய உண்டு!

அதிகாரிகள் மனதுவைத்தால் அவர்களது தீவிரவாதத்திலிருந்து உலகம் தப்பும் என்பது சர்வ நிச்சயம்...அடுத்து தனிமனிதனுக்கு வருவோம்.

(தொடரும்)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...