Monday, February 22, 2010

நன்றி நவிலல்!

இந்த வாரம் முழுமையும்
எது எழுதினாலும் ரசித்து
குறைகளோடு ஏற்று,
வந்திருந்து வாழ்த்தி,
அன்புகாட்டி அசத்தி,
என்னுள்ளம் கொள்ளை கொண்ட
பதிவுலக நண்பர்களுக்கு
பணிவான நன்றிகள்!

திடீரென்று இன்பம் தந்து
திகட்டத்திகட்ட வாய்ப்பு தந்த
தமிழ்மண நிர்வாகத்திற்கு
தலைவணங்கி நன்றிகள்!

இனியென் எழுத்தில்
ஏதேனும் மாற்றத்தை
இயன்றவரை கொண்டுவந்து
எடுத்திருக்கும் நற்பெயரை
எப்போதும் தக்கவைப்பேன்.!

வாசிப்பில் வளர்ந்தாலும்
வாசிக்கும்படி வளர்வது
பதிவுலகம் எனக்குத்தந்த
பரிசாக எண்ணுகிறேன்!

சென்ற ஏழுநாட்களும்
எனக்கு வாரமல்ல!
வரம்!

Sunday, February 21, 2010

புதுக்கோட்டை

புதுக்கோட்டையைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால், வாழ்ந்து கெட்ட ஊர்! கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைப்பெயர்களுடன் சதுரமாக, ராஜ வீதிகள்! அதன் உள்ளே பழைய அரண்மனை மற்றும் கோவில்! ஒவ்வொரு ராஜவீதிப்பக்கமும், 4 தொடர் வீதிகள். ஒவ்வொரு வீதியும் ஒன்றையொன்று சந்திக்குமாறு அமைந்த தெருக்கள். அந்தக்காலத்திலேயே கழிவுநீர் வாய்க்கால் வசதி மிகச்சிறப்பாக மன்னராட்சி நடந்த பகுதி இப்போது நாடாளுமன்றத்தொகுதி அந்தஸ்து கூட இல்லாமல் தடுமாறுகிறது. இங்கே மீதி விபரங்கள்

மற்றபடி கலைகளில் ஆர்வமும், ஆச்சர்ய மனிதர்களும் நிறைந்த அற்புதமான ஊர்! வடிவமைத்து நிர்மாணிக்கப்பட்ட மிகச்சில இந்திய நகரங்களில்
இதுவும் ஒன்று!

இங்கு பார்ப்பதற்கும் பழகுவதற்கும் ஏராளமான அற்புத நபர்கள் இருக்கிறார்கள். அவர்களில் இந்த நகரத்தையும், மாவட்டமும் சார்ந்த நமது புதுகைத்தென்றல், அப்துல்லா, புதுகைச்சாரல், பாண்டியன், தெக்கிக்காட்டான், சுந்தரவடிவேல் போன்ற பதிவுலக நண்பர்களும் அடக்கம்!

நேர்மையைப் பிரதிபலிக்கும் நாமக்கல் கலெக்டர் திரு.சகாயம் அவர்கள் ,மகசேசே விருது வாங்கியிருக்கும் அடையாறு கேன்ஸர் இன்ஸ்ட்டிட்யூட்டின் டாக்டர் சாந்தா ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்துக்காரர்கள்.

பி.யு.சின்னப்பா, ஜெமினி, ஏவிஎம் ராஜன், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என இன்னும் புதுக்கோட்டையின் பிரபலமானவர்களைப்பற்றி இணையம் நிறையச்சொல்லும்.

நட்சத்திரவாரத்தை மனதில் கொண்டு நான் எடுத்த புகைப்படங்கள் சில..
புதுகையின் பெருமைக்காக!

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்பேருந்து நிலையம்!. எம் ஜி ஆர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்று!கீழ ராஜ வீதி.


புதிய அரண்மனை. இங்குதான் இப்போது அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கலெக்டர் அலுவலகம் இதற்குப்பின்னால்....


புதிய அரண்மனையின் மேலிருந்து...நகராட்சிக்கட்டிடம்.

யான்பு அல் சினைய்யா

ஊர்களும் மனிதர்களும் என்னைச்செதுக்கியவர்களென்றால்...அது மிகையில்லை. கடல்கடந்த ஒரு தேசத்தில், அதன் கலாச்சாரம், மொழி, உணவுவகைகள் என்று எதுவுமே தெரியாமல் நான் போய் இறங்கிய ஊர்தான் யான்பு அல் சினைய்யா. சௌதி அரேபியாவின் மிகச்சிறந்த கடற்கரை நகரங்களில் இதுவும் ஒன்று.!

சௌதி அரேபியாவின் பல கடற்கரை நகரங்கள் அரபிக்கடலில் அமைந்திருந்தாலும்..யான்பு என்ற அந்த நகரம் செங்கடல் ஓரத்தில் அமைந்திருக்கிறது. அதாவது தேசத்தின் மேற்கு எல்லையில்..! ஊருக்குக்கிளம்பும் முன்னால், சௌதியைப்பற்றி பல்வேறு வதந்திகளை சுற்றியுள்ளவர்கள் கிளப்பியிருந்தாலும், ஊர்களும், மனிதர்களும் தரும் போதையில் நான் ஆட்பட்டிருந்ததால், அவர்கள் சொல்லியவற்றை காதில் வாங்காமல், மனதை வெள்ளைக்காகிதமாய் வைத்துக்கொண்டு , எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் சென்று இறங்கினேன்.

அதற்கு பங்கம் வைக்காமல், ஒரு அழகான, சக மனிதர்களை மதிக்கும், உழைப்பை நம்புபவர்களுக்கு உயர்வளிக்கும், கட்டுப்பாடான வாழ்க்கையை வலியுறுத்தும், ஒழுங்கைக் கடைபிடிக்கும்,கடவுளை நம்பும் ஒரு அற்புத தேசம் என்னை வரவேற்றது.

சௌதி அரேபிய மன்னராட்சி, இரண்டு நகரங்களை தொழில் வளர்ச்சிக்கென்றே நிறுவியிருக்கிறது. அவை ஜுபைல் மற்றும் யான்பு..அப்படி 1970களின் இறுதியில் நிர்மானிக்கப்பட்ட யான்புவில்தான் நான் குடியேறினேன். யான்பு அல் பஹார் என்பது நகரத்தின் பெயர். அதாவது கடற்கரையிலுள்ள யான்பு அல்லது துறைமுக யான்பு! அங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் மதினா செல்லும் சாலையில் கட்டமைக்கப்பட்ட நகரத்தின் பெயர்தான் யான்பு அல் சினைய்யா! அதாவது தொழிற்பூங்கா யான்பு!

சாலைகளும், கட்டிடங்களும் எனக்கு பிரமிப்பூட்டின. இப்படி ஒழுங்காக இருக்கமுடியுமா என்று ஏங்க வைத்தன. யான்புவிலிருந்து கிளம்பும் சாலையில் மனித நடமாட்டமே இல்லாத பகுதிகளிலும், சாலை முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது. யான்பு அல்சினைய்யா. இரண்டு பெரிய பகுதிகளை உள்ளடக்கியது. Yanbu Light Industries Park, Yanbu Industrial College. LIP யில்தான் அனைத்து தொழிற்சாலைகளும், இதில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமும், கடல்நீரைக்குடிநீராக்கும் நிறுவனமும் அமெரிக்க நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை இங்குதான் உள்ளது. மணல் மாபியா என்று தூத்துக்குடி பக்கம் டாட்டாவுக்கும், இன்னொரு .....ராஜன் (பெயர் நினைவில்லை) என்பவருக்கும் முட்டிக்கொண்டு பிரச்னையானதே , அந்த டைட்டானியம் டை ஆக்ஸைடுதான்!

மக்களில் பாதிக்குப்பாதி வெளிநாட்டவர்கள். ! இந்தியா,இலங்கை , வங்கதேசம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மக்கள்தான் அதிகம். அதிலும் பெரும்பான்மையானவர்கள் தன் குடும்பத்தை விட்டுவிட்டு தனியாளாக வந்து வேலைபார்க்கும் ஆண்கள்தான்.! சொற்ப அளவிலான பெண்கள் தாதிகளாகவும், வீட்டு வேலைக்கும் வந்திறங்கியிருப்பார்கள்.

அவர்கள் தேசத்திலும், ஆண்டாண்டு காலம் வாழ்ந்தவர்களை ஒதுக்கிவிட்டு, வந்தேறிகள் ஆட்சிசெய்யும் ஒரு அவல நிலை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது பெரிய அளவில் வெளிவரவில்லை. காரணம், மன்னராட்சி..சுமுகமாக, மக்களுக்கு எல்லாம் கிடைக்கும் வண்ணம் நடந்துகொண்டிருப்பது.!ஆதி அரேபியர்களை பதூ.. என்று அழைப்பார்கள். அவர்கள் பெரும்பான்மையாக விவசாயம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒட்டகம் வளர்த்துக்கொண்டிருப்பார்கள்.

மக்களைப்பொறுத்தவரை, வெளிநாட்டவரைப் புகழ்வதும் இல்லை . இகழ்வதும் இல்லை. சமமாகத்தான் பாவிக்கிறார்கள். நம் ஆட்கள் செய்யும் சேட்டைதான் அவர்களை கோபப்பட வைத்துவிடுகிறது.

மக்கள் அனைவரும், சட்டதிட்டத்துக்கு கட்டுப்பட்டுவிடுவார்கள். ஆளில்லா சாலையில் கூட சிக்னலை மீறும் சௌதிக்கள் மிகக்குறைவு. எல்லா விஷயங்களிலும் ஒரு ஒழுங்கை இங்குதான் நான் கற்றுக்கொண்டேன். வேலை செய்யும் நேரம் காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிக்கு முடிந்ததும் இங்குதான்.

பெரிய அதிகாரிகளை நேரடியாகப் பெயர்சொல்லி அழைக்கலாம். தவறில்லை என்று கற்றுக்கொண்டதும் இங்குதான். (நமக்குத்தான் சார்..சார்.. என்றே கூப்பிட்டுப்பழகிவிடுகிறது)
அதிவேகமாகக் கார் ஓட்டி முன்னூறு கிலோமீட்டர் தூரத்தை இரண்டு மணிநேரத்தில் கடந்ததும் இங்குதான்!
யான்புவில்தான் நான், பில்லியர்ட்ஸ் ஆடக்கற்றுக்கொண்டேன். செஸ்ஸில் பல உயரங்களை எட்டினேன். பிலிப்பினோ மாஸ்டர் திரு. மெலிட்டன் டெலா க்ரூஸிடம் கராத்தே கற்றுக்கொண்டேன்.

நிறைய வாசித்தேன். அதைவிட நிறைய நிறைய படம் பார்த்தேன். நிறைய நண்பர்களைப்பெற்றேன். மலையாளம், உருது, அரேபிய மொழிகளும், வங்காள , பிலிப்பினோ மொழிகளில் கொஞ்சமும் கற்றுக்கொண்டேன்.

விடுமுறையில், கெய்ரோ, அலெக்ஸாண்ட்ரியா என்று எகிப்திய நகரங்களைச் சுற்றிவந்தேன். கெய்ரோ விமான நிலையத்தில் நடந்த நிகழ்வு ஒன்று....இன்று நான் தொடர்ந்து குருதிக்கொடை கொடுப்பதற்கு அடிப்படைக்காரணமாக அமைந்தது.(அது இன்னொரு சமயம்..)

என் வாழ்வின் 3 ஆண்டுகளைக் கழித்த இந்த நகரம், என் வாழ்வின் 10 ஆண்டுகளுக்கான அனுபவத்தை அள்ளித்தந்தது.

பொதுவாக சௌதிக்கள் ஆழ்ந்து சிந்திப்பதில்லை என்று ஒரு எண்ணமுண்டு. சில நேரங்களில் அது உண்மையென்பதை நானே கண்டிருக்கிறேன். அப்படி ஒருமுறை முட்டாள்தனம் செய்த ஒரு சௌதி நண்பனிடம் பேசிக்கொண்டே காரில் சென்று கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நான் கேட்டேன்.

ஏண்டா..நீங்க கொஞ்சம் மந்தமாவே இருக்கீங்க? சில சமயங்களில் அடி முட்டாளா இருக்கீங்க?

அதற்கு அவன் சொன்னான்.

நாங்க முட்டாளா இல்லைன்னா, உங்களை இங்க வந்து வேலை பாக்க வர விட்டிருப்போமா? உங்க பொழைப்பு நாறியிருக்கும்...!

வாஸ்தவமான பேச்சு! :)

அறந்தாங்கி

என் பட்டியலில் உள்ள ஊர்களைப்பற்றி நட்சத்திர வாரம் தாண்டியும் எழுதலாம் போலிருக்கிறது. :)

என் வாழ்வில் கல்லூரி ஆண்டுகளைக்கழித்த ஊர். அறந்தாங்கி! புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் செல்லும் வழியில் இருக்கும் ஒரு தாலுக்கா தலைமையகம்! (இந்த ஊர் மட்டும் நான் போகும்போதே தாலுக்கா) சிறிதாகத்தெரியும் பெரிய ஊர்!

காரைக்குடியிலிருந்து ஒரு சாலையும், புதுக்கோட்டையிலிருந்து மற்றொன்றும் வந்து செக்போஸ்டில் சந்தித்து வி.எஸ் தியேட்டர் , எம் ஜி ஆர் சிலை வழியாக ஊருக்குள் போகும்.
அடுத்த சாலை ஆவுடையார்கோவிலிலிருந்து வந்து கோட்டை வழியாக எம் ஜி ஆர் சிலை வரும். அது இரண்டும் சேர்ந்து கட்டுமாவடியிலிருந்து வரும் சாலையோடு சேர்ந்துகொண்டு ஊருக்குள் பஸ்ஸ்டாண்ட் நோக்கி பயணிக்கும். மற்றபடி எதிர்த்திசையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சாலைகளும் பேருந்து நிலையத்தில் முட்டும்.

நான் இருந்தது கோட்டைப்பகுதி! அந்தக்கோட்டையின் ஒரு பகுதியில் உயரத்தில் ஒரே ஒரு சிற்பம் இருக்கும். அதுவும் படு அடல்ட்ஸ் ஒன்லி ஐட்டம்! வெளியூரிலிருந்து நம்மைப்பார்க்க வரும் நண்பர்களிடத்தில் அதைக்காட்டி டெம்ப்ட் ஆக்குவதில் அலாதி மகிழ்ச்சி!

வாணி தியேட்டர் - காலைக்காட்சிகளும், டிவி டெக்கெடுத்துப்பார்த்த படங்களும், நண்பர்களின் காதல்களும், பல்வேறு மோதல்களும் என சூப்பராகப்போன வாழ்க்கை அது! வாழ்க்கை பற்றிய பயத்துடன் படித்ததால், ஆழமாக ஆட்டம் போட முடியவில்லை. ஆனாலும் எங்கள் ரூமில் இரண்டு பேருக்கு வாடகை கொடுத்துவிட்டு தினமும் பத்து பேர் நெருக்கியடித்துத்தூங்கிய சுகம்...ஆஹா..!

பாண்டியன், முருகேஷ்குமார், அப்துல்லா, கருணாநிதி, பார்த்திபன், எழிலரசு, ரெங்கராஜன்,பேரின்பநாதன்...என ஒரு ஜமா! இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியலை! எழிலரசு மட்டும் இன்னும் தொடர்பில் இருக்கிறான்.

எங்களுக்கு ஒரு சீனியர் இருந்தார். அமைதியாக இருப்பார். தஞ்சாவூர்க்காரர் என்பார்கள். கவிதைகளெல்லாம் எழுதுவார். ராகிங் பண்ணமாட்டார். ஜூனியர்களைப்பார்த்து சினேகமாகச்சிரிப்பார்.
பல ஆண்டுகளுக்குப்பிறகு அவரை ஊடகத்திலும், அவர் கவிதைகளைப்பாடலாகவும் பார்த்தேன். அவர்....கவிஞர் யுகபாரதி!

Saturday, February 20, 2010

தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தில், என் ஞாபக அடுக்குகளில் ஈரம் சேர்த்துவைத்திருக்கும் ஊர்! என் சிறுவயது அனுபவங்களில் நான் பார்த்த மிகப்பெரிய ஊர்.
நான் பிறந்தது அங்குதான். திருநெல்வேலி சாலையில், முனிசிபல் ஆபீஸுக்கு பின்னால் அபிஷேகபுரம் தெரு! தெருவின் இருமருங்கிலும் நேர் எதிர் வீடுகள். தெருவின் கடைசியில் ஒரு பெரிய பிள்ளையார்.! சிறிய கோவில்.! தெருவுக்குப்பின்னால் தாமிரபரணி. ஒவ்வொருவீட்டுக்கும் ஒரு படித்துறை!

அங்கு அப்போது பரதன், பாக்கியலெட்சுமி, வாஹினி என மூன்று தியேட்டர்களில் லீவுக்குச்செல்லும் ஒரு மாதமும் திரையிடும் அனைத்துப்படங்களையும் பார்த்திருக்கிறேன். நினைச்சா குற்றாலத்துக்கு நண்பர்களுடன் நடந்தோ, சைக்கிளிலோ சென்று ஆட்டம் போட்டுவிட்டு நல்லபிள்ளையாக மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவது.!

அதைவிட்டால், சன்னதித்தெருவில் ஒரு மாடியில் இருந்த அரசு நூலகத்தில் சென்று கோகுலம், அம்புலிமாமா, பாலமித்ரா, முத்தாரம், யுனெஸ்கோ கூரியர் என்று பலவகைப் புத்தகங்களைப் படித்துவிட்டு வருவது!

தென்காசியில்தான் நான் ரம்மி விளையாடக்கற்றுக்கொண்டேன். அப்புறம் ட்ரேட் என்றொரு விளையாட்டு! கிரிக்கெட் ஆடக்கற்றுக்கொண்டதும், அதன் சட்டதிட்டங்கள் தெரிந்ததும் அங்குதான்! இரவானால் ஐஸ்பாய் அல்லது செஸ்! விளையாட்டுக்காக ஓவர் டைம் பார்த்த நாட்கள் அவை! கனவெல்லாம், கிரிக்கெட் ஸ்டெம்ப்பை செஸ் போர்டில் ஊன்றி கட்டம் கட்டமாகத் தாவி ரன் எடுப்பது போலெல்லாம் வரும்!

அந்தத்தெருவில், நான் விளையாடாத வீட்டு வாசலோ, பந்து பொறுக்காத சாக்கடையோ, முட்டியில் ரத்தம் வரவைக்காத கருங்கல்லோ இல்லை! குரங்குகளின் ராஜ்ஜியம் மிகுந்த ஊர். ஒரு நாள் அம்மா உப்புமா கிண்டிவைத்துவிட்டு , தெருவில் விளையாடிய என்னைக்கூப்பிட வர, நாங்கள் வீட்டுக்குள் நுழையும்போது, சுட்டாலும் பரவாயில்லை என்று முழு உப்புமா பாத்திரத்தையும் தூக்கிக்கொண்டு ஒரு குரங்கார் நின்று கொண்டிருந்தார். நாங்கள் அவரை விரட்ட, மேலே ஏறி நிதானமாக, என்னை பார்க்கவைத்துக்கொண்டே எல்லா உப்புமாவையும் தின்று முடித்தார். அந்த உப்புமா இன்னும் ஏக்க லிஸ்ட்டிலேயே இருக்கிறது. (அடுத்த ஜென்மத்துல நான் குரங்கா பிறந்து அதுக்கிட்டேருந்து உப்புமாவைப் பிடுங்கித்திங்கலை..? :) )

என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாவம் செய்த ஊரும் அதுதான்!
அடுத்தவர் நலன்மேல் அக்கறை வரவைத்த ஊரும் அதுதான்!

அது இன்னொரு நாளில்.....

பொருள் ஒழுங்கு!

நம்ம மொத்த வாழ்நாள், சராசரியா 80 ஆண்டுகள்ன்னு வச்சுக்கிட்டா தூங்குறதில் சுமார் 30 ஆண்டுகள் போயிடும்! மீதமிருக்கும் 50 ஆண்டுகளில் நம்ப வேலை நேரமா சுமார் 15 ஆண்டுகள் போயிடும். அப்புறம் குளிக்க, சாப்பிட, சொந்த வேலைகள் பார்க்கன்னு தனித்தனியா கணக்குப்போட்டுக்கிட்டே வந்தா ஒவ்வொண்ணும் ஒரு கணிசமான இடத்தைப்பிடிச்சுக்கும். இந்த பட்டியலில்
மொத்த வாழ்நாளில் 3 ஆண்டுகளைப்பிடிச்சுக்கிற ஒரு தேவையில்லாத விஷயம் இருக்குன்னு புள்ளிவிபர அறிஞர்கள் கண்டுபிடிச்சுருக்காங்க! அது எது தெரியுமா? நாம் ஏதாவது ஒரு பொருளை இடம் மாத்தி வச்சுட்டு தேடுறதுக்கு செலவழிக்கும் நேரம்தான்!

மொத்த வாழ்நாளில் 3 ஆண்டுகளை நம்முடைய ஒரு தவறுக்காக செலவழிக்கும் நேரத்தில் என்னவெல்லாம் செய்யலாம்? ஆனா அதை நாம் ஜஸ்ட் லைக் தட் புறந்தள்ளிட்டுப் போயிடுறோம்.

ஏன் இப்படி நடக்குது? ஒரு பொருளின் தேவையும் , தேவையின்மையும் நமக்கு முதலில் தெரியலை! ஜப்பானிய தொழில் நேர்த்தி ஒண்ணு இருக்கு அதுக்கு 5எஸ் ன்னு பேரு!

செய்ரி..செய்ட்டன்...செய்சோ..செய்கெட்ஸு...மற்றும் சிட்சுகே ஆகிய ஐந்துதான் அது! இதில் முதல் இரண்டு விஷயங்களைத்தான் நாம் இப்ப பாக்கப்போறோம்.

செய்ரின்னா தேவையில்லாததை அகற்று! இதுதான் ரொம்ப முக்கியமான அம்சம். நாம் எங்காவது வெளியூர் போயிட்டு வந்தா அந்த பஸ் அல்லது ரயில் டிக்கெட் இன்னபிற காகிதங்களை அப்படியே வைப்போம். அதேபோல் பல்தேய்க்கும் பேஸ்டிலிருந்து, முக க்ரீம் வரை எல்லாப்பொருட்களின் அட்டைப்பெட்டியையும் அங்கங்கே போட்டு வைத்திருப்போம். ஒரு கட்டத்தில் தேவையில்லாத பொருட்கள் நிறைஞ்சு போய் தேவையான பொருட்களை தேட வச்சுடும்.ஒரு பொருள் வாங்கினா அதன் ரசீதை ஓரிடத்தில் பத்திரப்படுத்தாமல் அப்படியே போட்டுட்டு, அந்தப்பொருள் ரிப்பேரானா அதற்கான வாரண்ட்டிக்காக நாம் அந்த ரசீதைத்தேடும்போது வீடே அமளி துமளியாகும். ஒரு காலகட்டத்தில் நாம் தேடவேண்டிய பொருளின் அடையாளம் கூட மறந்து போயிருக்கும்.!

இப்படித்தான் மொக்கச்சாமி ஒரு கடைக்கு டிவி வாங்கபோனார். உள்ளே நுழைஞ்சதும் இடதுபுறம் பார்த்துட்டு...இந்த டிவி என்ன விலை? ன்னார் . உடனே கடைக்காரர்..உங்க பேர் என்னன்னார். நம்ம ஆளும் பேரைச்சொன்னார். உடனே மொக்கைச்சாமிக்கு டி வி விக்கிறதில்லைன்னார் கடைக்காரர்.! அடுத்தநாள் யாரும் கண்டுபிடிக்கமுடியாத மாறுவேஷத்தில் போனார் மொக்கைச்சாமி. போய் அந்த டிவி என்ன விலை? ன்னார். மறுவிநாடி கடைக்காரர்...யோவ் மொக்கச்சாமி உனக்கு டிவி விக்கிறதில்லை போய்ட்டு வா! ன்னார். மொக்கச்சாமியும் விடலை..ஒருவாரம் கழிச்சு சுத்தமா மொட்டை அடிச்சுக்கிட்டு பக்காவா தன்னை மாத்திக்கிட்டு கடைக்குள்ள போய் இந்த டிவி என்ன விலை? ன்னார். கடைக்காரருக்கு வந்ததே கோபம்..! என்ன மொக்கச்சாமி! எத்தனை தடவை சொன்னாலும் கேக்கமாட்டேங்குற! உனக்கு டி வி விக்கிறதா இல்லைன்னார். மொக்கச்சாமிக்கு ஒரே ஆச்சர்யமா போச்சு! அய்யா கடைக்காரரே..எனக்கு நீங்க டி வி விக்கவே வேண்டாம். ஆனா எப்படி பொசுக்குன்னு நாந்தான் வந்துருக்கேன்னு கண்டுபிடிச்சீங்கன்னு கேட்டாரு! கடைக்காரர் சொன்னாரு! உன்னைத்தவிர வேற எந்த முட்டாளும் இத்தனை தடவை மைக்ரோ வேவ் ஓவனைப்பாத்து டிவி ன்னு நினைச்சு விலை கேட்டதில்லை...ஒரு பொருளை அடையாளமே கண்டுபிடிக்க முடியாத உனக்கெதுக்கு டி.வி ன்னார் ! இப்படி இருந்தா அப்புறம் எப்படி விளங்கும்?

நமக்கு பொருட்களை அடையாளம் வச்சு இனங்கண்டு ஒரு ஒழுங்கா வைக்க பெரிய பயிற்சியெல்லாம் தேவையில்லை. தினசரி அதை ஒரு நடவடிக்கையா செஞ்சுக்கிட்டிருந்தாலே போதும். ஜப்பானிய 5எஸ் இதைத்தான் சொல்லுது!

செய்ட்டன்னா — தேவையானவற்றை ஒழுங்கு படுத்துங்கிறதுதான் அடுத்தது !
தேவையில்லாததை கழிச்சுக்கட்டிட்டாலே தேவையானதை சுலபமா ஒழுங்குபடுத்திடலாம். எது தேவையில்லாதது?ங்கிறதுதான் பெரிய கேள்வி..! இதுக்கு ப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலு சொல்லும் பதில்தான் நல்லா இருக்கும். நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்!! ன்னுவார். கடந்த 6 மாதமாக எந்தப்பொருளை பயன்படுத்தலைன்னு பாருங்க ! அது கட்டாயம் தேவையில்லாத பொருள்தான். அதுக்காக நான் சொன்னேன்னு கடந்த இரண்டு ஆண்டுகளா தொடாத உங்க வீட்டுப்பத்திரத்தை எடுத்து வீசிடாதீங்க!

வீட்டை , அலுவலகத்தை ஒழுங்கா வச்சுக்குறது ஒரு கலை! நாம ஒரு பொருளை கவனமில்லாம போட்டுவிட்டு தேடும்போதுதான், ஆஹா..! அதை ஒழுங்கா வச்சிருக்கலாமோன்னு தோணும். மேலும்

நாளைலேருந்து மிகச்சரியா வச்சுக்கணும்னு திட்டம்போடுவோம். ஆனா அடுத்த நாளும் அதே பொருளைத்தேடுவோம். இப்படி தினசரி பைக் சாவி தேடும் வீடுகள் நம் நாடு முழுதும் இருக்கு!

தேவையானவற்றை ஒழுங்குபடுத்த, அலுவலகம் மாதிரியே வீட்டிலும் கோப்புகளைப்பயன்படுத்தலாம். எல்லாப்பொருட்களுக்கும் அடையாளப்பெயர் ஒட்டி வைக்கலாம். வீட்டில் உள்ள சின்னவர்களையும்

அப்படியே பழக்கலாம். வீடா மியூசியமான்னு கேட்கப்படும் கேள்விக்கு ஒரு பதில் இருக்கு! மியூசியம்... பார்வைக்கு! ஆனால் வீடு...பயன்ப்டுத்த ! ஆக அடுக்குவதுதான் சிறந்தது.

இந்த ஒழுங்கின் வெற்றி என்னவா இருக்கணும்னா.. வீட்டிலோ, அலுவலகத்திலோ எந்த ஒரு பொருளையும் அடுத்த பத்துவினாடிகளுக்குள் கையில் எடுக்க வைக்கணும். தளராமல் இதைச்செய்து

வெற்றியும் அடுத்த பத்துவிநாடிகளுக்குள் உங்களை அடைய என் உளமாரந்த வாழ்த்துக்கள் !

Friday, February 19, 2010

அய்யனார் கம்மாவின் லெமன் ட்ரீ நிழலில் ஒரு டைரிக்குறிப்பு!


ஒரு சிறுகதைத்தொகுதியிலோ, ஒரு மாத, வாரப்பத்திரிக்கையிலோ புரட்டிக்கொண்டே வரும்போது ஒரு கதையைப்படிக்கிறோம். அது மிகவும் சுவையாக இருக்கிறது. உடனே அந்த எழுத்தாளர் யார் என்று பார்ப்போம். அவரைப்பற்றி நண்பர்களிடம் கேட்போம். அவர்களுக்கும் அவரைப்பற்றித்தெரிந்திருந்தால், அவர் எழுதிய மற்ற கதைகளைப்பற்றி தெரியவரும். அவற்றைத்தேடிப் படிக்க ஆரம்பிப்போம்.

பின்னர் அவர் எந்தப்புத்தகத்தில் எழுதினாலும், எதைப்புத்தகமாக எழுதினாலும் விரும்பி வாங்குவோம். அவரது படைப்புகளின் நடையைப்பற்றி சிலாகிப்போம். அவரை ஒரு நாள் சந்தித்து அவரது படைப்புகளைப்பற்றி பாராட்டியும் , கொஞ்சமாக விமர்சித்தும் பேசவேண்டும் என்று திட்டமிட்டு, அதே போல் ஒரு நாள் அவரைச் சந்தித்து, சிந்தித்ததில் பாதியளவாவது அவரிடம் பேசிவிட்டு, அந்த
எழுத்தாளரை நேரில் சந்தித்தேன் என்று நண்பர்களிடம் கூறுவோம். பின்னர் (அவருக்கோ, நமக்கோ) பிடித்திருந்தால் அந்தச் சந்திப்பு நட்பாகத்தொடரும். இதுதான் பொதுவாக எல்லா வாசகர்களுக்கும் நடப்பது!

பதிவுலகில் அது அப்படியே வேறு கோணம்! முதலில் ஒரு பதிவைப்படித்து, அது பிடித்ததால், அந்தப்பதிவருடன் நட்புக்கொண்டு, அந்த அன்பின் வெளிப்பாடாய் அவரது படைப்புகள் எந்த அச்சு ஊடகத்தில் வந்தாலும் வாழ்த்துத்தெரிவித்து மகிழ்வோம். அதுவே இன்னும் கொஞ்சம் உயர்ந்து, அவர் ஒரு படைப்பை நூலாக வெளியிடுகிறார் என்றால், அதற்கு சக பதிவராக, நண்பராக எல்லா ஊக்கங்களும்
கொடுத்து, அந்தப் படைப்பை உலகறியச்செய்வோம். அதனால் அவர்கள் சுமாரான படைப்புகளைத் தந்துவிடவும் முடியாது.அப்படி ஒரு நட்புச்சாரலில் பூத்த மனோரஞ்சிதப்பூக்கள்தான் இந்தப் புத்தகங்கள்!

நண்பர்கள் நிறையப்பேர் அலசியிருந்தாலும்...என்னிடமுள்ள நகல்கள் சொன்னவற்றை... இதோ!

நர்சிம்மின் அய்யனார் கம்மாவில் ஒரு கலவையான உணர்ச்சித்தாண்டவம் ஆடியிருக்கிறார்.

தலைப்புக்கதையின் கடைசி இரு வரிகள் - நெடுஞ்சாலைத்திருப்பத்தில் திடீரென வரும் தண்ணீர் லாரி!

தாயுமானவன் - //சுடுகாட்டுக்குத் தெலுகு வார்த்தைக்கு எங்கே போவேன் என்று கண்களில் வழிந்த நீரைத்துடைத்துக்கொண்டே ..நாக்கை வெளியே நீட்டி இறந்ததுபோல் காட்டி, புதைப்பதற்கு என்று செய்கையில்....// அழுதேவிட்டேன் அய்யா!

திகட்டத்திகட்டக் காதலி - காதலில் இவ்வளவு திறமையாக வெல்லமுடிவது வரம்! எஸ் எம் எஸ் ரகசியங்கள் நிறைய வெளிவந்திருக்கிறது.

செம்பட்டைக்கிழவி - // முக்கியமாய், வாட்சு கட்டிக்கொண்டிருக்கும் கையை உடலைவிட்டு சற்றுத்தள்ளி வைத்துக்கொண்டும் நடக்கும் அன்றாட மக்கள் // காட்சிப்படுத்தினால் சிரிப்பு வரவழைக்கும், அவர் கவனம் தெரிகிறது.

ஞாபகமாய் ஒரு உதவி - யாருக்கெல்லாம் இப்படி வாக்குக்கொடுத்தோம் , அவர்கள் என்ன ஆனார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

ம'ரணம்' - // கார்த்திக் கிளினிக். சற்று சுத்தமாக இருந்தது. சத்தமாகவும் தான் // வார்த்தை விளையாட்டு அழகு!

சந்தர்ப்பவதம் - // திலீப் எப்படி இருப்பான் என்று ஒரு பாரா வர்ணிப்பதைவிட ஏதாவது ஒரு டிவி சீரியலில் ஒரே ஒரு மனைவியுடன் மட்டும் வாழும் ஏதாவது ஒரு கதாநாயகனை நினைத்துக்கொள்ளுங்கள் // - என்னா ஒரு லந்து! கொஞ்சம் சுஜாதாவும், நிறைய நர்சிம்மும் வந்துபோகிறார்கள்.

தலைவர்கள் - சூழல் சித்தரிப்பும், தயாரிப்பும் செய்து கலக்கியிருக்கிறார்.

மனக்குரங்கு , தொடரும் முடிவுகள், மாநரகம், வெத்தலப்பொட்டி என வெவ்வேறு களங்களில் கிராமம், நகரம் என்று வாழ்ந்து பார்க்க வைத்திருக்கிறார்.

இதில் நான் எதிர்பார்த்து..இல்லாமல் போன கதை ஒன்றுண்டு.. மோட்டிவ் இல்லாமல் கொல்லும் மோட்டிவ் கொண்ட கொலைக் கதை! ஆ.வியில் வந்தது. ஏன் பாஸ் விட்டுட்டீங்க?

பொதுவாக இந்தக்கதைகளில் ஒரு சில வர்ணனைகள் அந்த காட்சியை ஒரு திரையில் ஓடவிட்டுக்காட்டுகின்றன. ஒரு சில வார்த்தை விளையாட்டுகளான வசனங்கள் அவரது இயல்பான நகையுணர்வை மீட்டுகின்றன. எல்லாவிதமான கதைகளிலும் தன்னால் களம் அமைக்கமுடியும் என்று நிரூபித்திருக்கிறார். 'நறுக்' என்ற நர்சிம்..!

அய்யனார் கம்மாவில் நிழல் தருவதற்காக ஒதுங்கியதுதான் இந்த சங்கர் நாராயணின் லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்!

காமத்தை கொல்ல நினைத்தாலே அது இன்னும் பல்கிப்பெருகும் என்பதுதான் உண்மை! அதுபாட்டுக்கும் கெடந்துட்டுப்போகுது கழுதை என்றோ, அதுவும் மகிழ்வான தருணங்களைத்தரும் ஒரு உணர்வே என்றோ மதித்தோமென்றால், அதுவும் சும்மா இருக்கும்! நமது வேலையும் கெடாது.

எனக்குத்தெரிந்த ஒரு அன்பான இயக்குநர் எழுதிய கவிதையின் சாரம் இது...

கலவியால்தான்
எல்லோரும் பிறந்தோம் என்று
நண்பன் சொன்னபோது
எங்கள் பெற்றோர் மட்டும்
நல்லவர்கள் என
எண்ணியிருந்தேன்
அடுத்த குழந்தை வீட்டில்
பிறக்க அவர்கள்
எடுத்த முயற்சியை
அன்றொரு இரவில்
கண்டபோது
அதிர்ந்தேபோனேன்.

யாருடைய காமம், எங்கு விதைக்கப்படுகிறது. எங்கு அறுக்கப்படுகிறது என்று சில கதைகளில் சங்கர் நாராயண் கதாபாத்திரங்கள் மூலமாக விளாசியிருக்கிறார். முத்தத்தில் ஆரம்பித்து ,தலைப்புக்கதை வரையில் பல இடங்களில் பெண்ணும் , மதுவும் கதாபாத்திரங்களுக்கு போதையளிக்கிறார்கள். சில இடங்களில் போதனை அளிக்கிறார்கள்.

துரை..நான்..ரமேஷ் சார்! சூப்பர்! ராஜியை ஒரு நாள் வீட்டுக்கு அழைச்சு மனைவி கையால தலைவாழை இலைபோட்டு சாப்பாடு போடணும் ஜி!

என்னைப்பிடிக்கலையா? - அதிர்ச்சியாகவும், கோபமாகவும், படித்தவர்கள் உணர்ந்தாலும், சமூக ஆர்வலனாகவும் , குடும்பநல ஆலோசகனாகவும் இருக்கும் எனக்கு நன்றாகத் தெரியும். இன்று இது பல்கிப்பெருகியிருக்கிறது. இந்துஸ்தான் லீவர் உயரதிகாரியின் மனைவிக்கு இண்டேன் கேஸ் சிலிண்டர் பாய் போதும்! கடைசிவரிகள் யதார்த்த சிந்தனையின் வீச்சு!

தலைப்புக்கதையில் சொல்லப்படும் பாடல்களை சும்மா எழுதியிருக்க வாய்ப்பில்லை. தன் திறன் எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார்.!

காமம் கொல்! - சூப்பரான கதை! சாமியாரின் மனநிலைக்கு யார் காரணம்! இதைத்தான் ஓஷோ சொல்றாரு! அவரைப்போய்......!

மாம்பழ வாசனையின் தீவிரம் ஒரு ரகமென்றால், நண்டின் , கணவன் மனைவி அன்பு ' நான் அவனில்லை' என்று ஆசிரியரைக் கத்த வைத்திருக்கிறது.

மொத்தத்தில் கேபிள் சங்கர் என்று உலகத்தாரால் அறியப்படும், வருங்கால சூப்பர் ஹிட் திரைப்பட இயக்குநர் திரு. சங்கர் நாராயணின் லெமன் ட்ரீயில் வீசிய எல்லா வாசனைகளும் வாழ்க்கை பொதுவாக எல்லோருக்கும் கொடுத்திருப்பதுதான்.! சிலருக்கு நுகர மட்டும் விருப்பம்! சிலருக்கு நுகர்ந்ததை மறுக்க! இவருக்கு நுகர்ந்ததைப் பரப்ப!.....

இப்படியாக நான் எழுதுவதே டைரிக்குறிப்புதான்....என்னுள் நட்பாகத்தோன்றி நானாகவே மாறிவிட்ட பரிசலின் தொகுப்பை முதலில் படித்த கர்வம் எனக்கு ஏறியிருப்பதால்..அனைவரும் அதற்கான என் பார்வையை...புத்தகம் வாங்கி முன்னுரையில் படியுங்களேன்....நான் எப்படி எழுதினாலும்..என்னை நானே வாழ்த்திக்கொள்வதுபோல் தோன்றும். அப்படித்தானே பரிசல்?

ஒரே ஒரு திருத்தம் அதில் :
//ஒவ்வொரு கதையிலும் தன் பரிமாணத்தையும், வாசிப்பின் ஆழத்தையும் நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர். தனிமை-கொலை-தற்கொலை , தலைப்பே கவிதையாக இருக்க, தனிமை இரு மனிதர்களை எப்படி முடிவெடுக்க வைக்கிறது என்று அழகுபடக்கூறியிருக்கிறார். இந்தக்கதையில்..
'தாமரை மலர்வதை யாராவது வீடியோ எடுத்திருக்கிறார்களா? அப்படியே எடுத்திருந்தாலும் மெ து வா க அது மலர்வதில் என்ன சுவாரஸ்யமிருக்கும்? ' என்று ஒரு இடம் வருகிறது. சில விஷயங்களை எழுத்தில் கொண்டுவரமுடியாது என்ற எண்ணத்தை உடைத்திருக்கிறது இந்த 'மெ து வா க ' என்ற வார்த்தை ! இதைப்படிக்கும்போதே தாமரை மலர்வதை நாம் மெதுவாக உணரலாம். வார்த்தைகளில் காட்சியமைக்கும் திறன் மிகவும் அற்புதம்!//

இந்த வரிகளில் ...மெ து வா க என்பது மெதுவாக என்று அச்சிடப்பட்டுவிட்டது. அதனால் நான் சொன்னதன் அர்த்தம் புரியாமல் போகலாம். பிழை பொறுத்து படித்துச்சொல்லுங்கள்!

வாழ்த்துக்கள் நூலாசிரியர்களே...! நன்றிகள் பதிப்பகத்தாரே!

சாராள் இல்லம்

அன்று குழந்தைகள் தினம்..! நண்பர் ஒருவர் அழைப்பு விடுத்தார்.

புதுக்கோட்டையில் இருக்கீங்களா?

ஆமாம்!

அப்ப மாலை ஒரு நிகழ்ச்சி இருக்கு வரமுடியுமா? பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஒரு தன்னம்பிக்கை நிகழ்ச்சி வழங்கணும்!

சரி! பண்ணிட்டா போச்சு!

*************************************************

தினசரி அப்பா, அம்மாவுக்கிடையில் சண்டை! அதைப்பார்த்தே வளர்ந்தார்கள் அந்த ஐந்து குழந்தைகளும்! ஒரு நாள் சண்டை முற்றி, இனிமேல் உன்னோடு வாழ்வதில்லை என்று முடிவெடுத்து அவர்கள் விவாகரத்தும் செய்துகொண்டார்கள். அப்பாவிடம் மூன்று குழந்தைகள், அம்மாவிடம் இரண்டு குழந்தைகள் என குழந்தைகள் பிரிக்கப்பட...

அம்மா என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென்று தன்னிடம் இருக்கும் இரண்டு ஆண்பிள்ளைகளையும் ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டு கண்காணாமல் சென்றுவிட்டார். அந்த இருவரில் மூத்தவனுக்கு வயது நான்கு, இளையவனுக்கு வயது ஒன்று! தன்னுடன் இருக்கும் ஒரே சொந்தம் தம்பிதானென்று இவனுக்குத்தெரியும். ஆனால் தம்பிக்கு அதுவும் தெரியாது. அந்தச்சிறு பிள்ளையை எப்படித்தூக்குவது என்றுகூடத்தெரியாமல், எல்லா சொந்தங்களும் இருந்தும், அனாதை வாழ்வை ஏற்கத்தொடங்கியிருக்கிறார்கள் அந்தச்சிறுவர்கள்.

எப்படியோ பாடுபட்டு வளர்ந்து, ஒரு நிலையில் தான் தம்பியை நன்கு வளர்க்க வேண்டுமென்று நினைத்து வேலைக்குச்செல்கிறான் மூத்தவன். அது ஒரு எடுபிடி வேலை! ஒரு நாள் அந்த ஊர் தியேட்டரில் வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள் என்று தகவல் வர, அங்கிருந்த போலீஸ்காரர்களும், தியேட்டர் முதலாளியும் 'அனாதைதானே செத்தாலும் குற்றமில்லை' என்று வெடிகுண்டு இருப்பதைக்கண்டுபிடிக்க இவனைப்பயன்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல் 'தீ' என்று எழுதியிருக்கும் வாளியில் வெடிகுண்டு உண்மையிலேயே இருந்திருக்கிறது. அதை இவன் கண்டுபிடித்துத் தூக்கிப்போடும்போது வெடித்து, வீசப்பட்டு நினைவிழந்து போயிருக்கிறான்.

இவன் நிலை பார்த்த ஒரு பாட்டி இவனைத்தூக்கிச்சென்று சிகிச்சை அளித்து, இவன் எழும்போது மூன்று மாதங்கள் ஓடிப்போய்விட்டன. தான் வளர்த்த தம்பி எங்கிருக்கிறான் என்பதும் தெரியாமல், சூனியமான வாழ்க்கையில் சிரமப்பட்டு வேலைகள் பார்த்து, பல ஆண்டுகள் கழித்து, தன் குடும்பத்தினர் அப்பா, அம்மா, அண்ணன்கள், தம்பி என ஒவ்வொருவராய்க் கண்டுபிடித்திருக்கிறான். அவர்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கும்போது, இவன் மட்டும் அன்றாடங்காய்ச்சியாய் ஆகிப்போனான். இவனைப்பார்த்த மகிழ்ச்சியில், குடும்பத்தினர் சேர்ந்து இருக்க வற்புறுத்தியபோது சொன்னான்!

'எல்லாம் இருந்த என்னையே அனாதையாக்கி அழகுபாத்தீங்களே! யாருமே இல்லாத எத்தனையோ பிள்ளைங்க உண்மையிலேயே எவ்வளவு கதறிக்கிட்டிருக்கும்! நான் அவுங்களுக்கு சொந்தமாப் போறேன். என்னைய விட்டுருங்க! இந்த எண்ணம் வரவைச்ச கடவுளுக்கும், அனாதை இல்லத்தில் சேத்த அம்மாவுக்கும் நன்றி!' என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.

***************************************************************************

அன்று மாலை நாங்கள் சென்ற இடம் புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் அரசு ஐடிஐ இருக்கும் பகுதிக்கு எதிரில் உள்ள ஒரு வாடகை வீடு! அதன் பெயர் 'சாராள் இல்லம்'.

அதனை நிர்வகிப்பவர் திரு.டைசன்! அவர்தான் மேலே சொன்ன வாழ்க்கைக்கு உரியவர்!

மொத்தம் ஐம்பத்திரண்டு குழந்தைகள்! ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கதை! நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் எண்ணவைத்த கொடுமையான வாழ்க்கைகள்!

டைசனும், அவர் மனைவி -அவரைப்போலவே வாழ்வில் சிரமப்பட்ட ஈழத்துப்பெண் - வளர்மதியும் சேர்ந்து இந்த இல்லத்தை நடத்துகிறார்கள். குழந்தைகள் பல்வேறு வகுப்புகளில், பல்வேறு அரசுப்பள்ளிகளில் படிக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தன் பிள்ளைகளாகவே வளர்க்கிறார்கள் இந்தத்தம்பதியினர்! பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிப்போய் இருக்கிறார்கள். வருமானம் எதுவும் கிடையாது. நன்கொடைகள் திரட்டவும் வழியில்லை. தினம் தினம் யாராவது தரும் சிறு தொகைகளை வைத்து மிகமிகச்சிரமப்பட்டு ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகம், பேனாக்கள் வாங்கக்கூட கடன் சொல்லித்தான் ஓட்டவேண்டியிருக்கிறது என்று கண்ணீர் உகுக்கிறார். முகூர்த்த நாட்களில் பல இடங்களிலிருந்து உணவுகள் அளவுக்கு மிஞ்சி வந்துவிடுகின்றன. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் என்ன செய்வதென்று தெரியவில்லை என்று மறுகுகிறார். அவருக்கு என்னால் இயன்ற உதவிகளைச்செய்துவருகிறேன்.
நான் சொன்னவுடன் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சிப்பொறுப்பாளர் திரு.நடராஜன் (சுப்ரா என அறியப்பட்டவர்) அவர்கள் உதவிகள் செய்திருக்கிறார்.

நம் பதிவர் சமூகத்தால் முடியாதது எதுவும் இல்லை.என் நோக்கமெல்லாம்...நாம் ஒவ்வொரு பதிவரும் ஒவ்வொரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளவேண்டும். நம்மால் ஆன கல்வி, உணவு , உடை உதவிகளைச்செய்யவேண்டும். இது நம் நிலைக்கும் மிகச்சிறு தொகையாகத்தான் இருக்கும். இதை நாம் கூட்டாகவும் செய்யலாம். இரண்டு,மூன்று பதிவர்கள் சேர்ந்து ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம். ஒரு ஆண்டுக்கு ஆகும் செலவை கொடுத்துவிட்டால், ஒரு குழந்தை தன் வாழ்வை உங்கள் பெயரால் வாழும். வாருங்கள் வடம் பிடிப்போம்.!

மற்ற விபரங்களுக்கு...

97894 97531 - சுரேகா

கை கொடுக்கும் கை!

இலுப்பூர் பள்ளியில் என்னால் முடிந்தவரை படித்து இரண்டாவது அல்லது முதல் ரேங்க் எடுத்துக்கொண்டு ஓட்டிக்கொண்டிருக்கும்போது, ( ஆமாம்ப்பா ரொம்ப நல்லவன்ன்! னு ஓட்டப்புடாது! எனக்கு முதல் ரேங்க் குடுக்குறாங்கன்னா, கூட இருந்த பயபுள்ளைக எந்த லட்சணத்துல படிச்சிருக்குனு பாருங்க! ) எனக்கு அறிமுகமான நண்பன் சந்திரன். கெச்சலாக என்னைப்போலவே கொஞ்சம் டகால்ட்டி பேர்வழியாக இருந்ததால் ஒட்டிக்கொண்டோம்.

இருவரும், சேர்ந்தே திரிவோம். பள்ளி நாட்களில் வீட்டிலிருந்து தூக்குச்சட்டியில் சாப்பாடு கொண்டுவந்துவிடுவேன். அவன் வீடு அருகில் இருந்தாலும், எனக்காக அவனும் சோறு கட்டிக்கொண்டு வருவான். நல்ல பேச்சாளன். மதிய உணவு சாப்பிட்டுவிட்டு இருவரும் ஊர்க்கடைசியில் உள்ள ஊரணிக்கு சென்று சரி ஆட்டம் போட்டுவிட்டுபள்ளிக்குத் திரும்புவோம். சட்டையை மட்டும் கழட்டிவிட்டு குளிப்பதால்,டவுசர் ஈரம் நடந்து வரும்போதே காய்ந்துவிடும்.
அவர்களுக்கு பெரிய கல்லுப்பட்டறை இருந்தது. அங்கு சென்று அவன் முதலாளியாக நடந்துகொள்வதிலும், சின்ன முதலாளியின் நண்பனாக நான் நடந்துகொள்வதிலும் அல்ப சந்தோஷம் இருந்தது. அவனிடம்தான் செயற்கை வைரம் பட்டைதீட்டும் ரவை, உருட்டு, அரக்கு, குச்சி, போன்றவற்றின் மகத்துவத்தை அறிந்துகொண்டேன்.
அவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான். அவன் எங்களைவிட இரண்டு வகுப்பு பெரியவன். பெயர் சூரியன். அவன் ஒருநாள் பள்ளிக்கு வந்துவிட்டு, பையை வைத்துவிட்டு எங்கோ ஊர் சுற்றப்போய்விட்டான். அதை ஒரு வீட்டுத்தகராறில் சந்திரன் அவன் அப்பாவிடம் போட்டுக்கொடுத்துவிட்டான். அண்ணனுக்கு சரியான மாத்து!

அன்று சுதந்திர தினம். காலையில் கொடியேற்றி , சிறு கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்துவிட்டு, நேரம் பார்த்தால் மணி 10. அப்போது சூரியன் அண்ணன், எங்களைப்பார்த்து,

' டேய்! 'கை கொடுக்கும் கை 'காலைக்காட்சி போவோமா?

"இல்லை! நாங்க வரலை!" - இது சந்திரன்

ஏண்டா இப்படிச்சொல்ற? அண்ணனே கூப்புடுது! - நான்!

சும்மா இரு! ஏதாவது வெவகாரம் இருக்கும்!

நீயா பயந்துக்காதடா! அண்ணன் ரொம்ப நல்லவரு!

போடா போ! அவன் எப்பேர்ப்பட்டவன்னு எனக்குத்தான் தெரியும்!

என்னடா! நீ பாட்டுக்கும் பேசிக்கிட்டே போற? நான் எந்த பிரச்னையும் பண்ணலை! ரஜினி படமாச்சே ! வரீங்களான்னு கேட்டேன். - இது சூரியன்.

ரஜினி என்ற தீனியை மாட்டிய தூண்டிலில், (என் தூண்டுதலில்) மீன்கள் வசமாகச் சிக்கிக்கொண்டது.

சரி வரோம் என்றேன் நான்!

கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கி, மூவரும் அருகருகே அமர்ந்தோம். ஓரத்து கருப்புத்திரைகளெல்லாம் இழுத்துவிட்டவுடன்... சூரியன்,

' டேய் வயிறு வலிக்குது! இருங்க போய்ட்டு வந்துர்றேன்''

படம் பார்க்கும் ஆர்வத்தில் ...ம்...ம்.. போய்ட்டு வாங்க என்றோம்.

படம் போட ஆரம்பித்து, ரஜினியைப்பார்த்து நாங்கள் லயித்திருந்த நேர்த்தில், ஓரத்து திரை விலக்க,
தியேட்டருக்குள் வெளிச்சம் பரவ,
வாசலில் சூரியன் அண்ணனுடன் அவர்கள் அம்மா! ..கையில் விளக்குமாறுடன்.!

அவர்களால் இழுத்து வரப்பட்டு,
சந்திரன் அடிவாங்க,
நான் அறிவுரை வாங்க....
சூரியன் அண்ணன் ஒரு நக்கல் சிரிப்புடன், சந்தோஷம் வாங்க....

'அப்பவே சொன்னேன்ல! இவன் வில்லத்தனம் பண்றான்னு! ஏமாந்துட்டியேடா!' என்று சொல்லிக்கொண்டே அழாமல் இருந்தான் சந்திரன். எனக்கு அழுகை பீறிட்டு வந்தது. படத்தை பாதியில் விட்டுவிட்டுப்போகிறோமே என்று! :)

இப்போது சூரியன் ஒரு பிரபல தொழிலதிபர்!
சந்திரன் ஒரு பிரபல அரசியல்வாதி!

Thursday, February 18, 2010

இலுப்பூர்

புதுக்கோட்டையிலிருந்து 29 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஊர்! இதுவும் நான் பள்ளிப்பருவத்தில் பார்த்த ஊர்! அப்போது தேர்வுநிலை பேரூராட்சி. இப்போது தாலுக்கா! (என்னமோ நம்ப வந்துட்டுப்போனாலே தாலுக்காவாக்கிடுறாங்க! :-) )

புதுக்கோட்டை, அன்னவாசல் வழியே ஊருக்குள் நுழையும்போது அரசு மருத்துவமனை, வலதுபுறம் அரசு மேல்நிலைப்பள்ளி, பின்னர் கடைவீதி. அதைத்தாண்டி இரண்டு ' ட ' வளைவுகளுக்குப்பிறகு நேரே சென்றால் விராலிமலை செல்லும் சாலையில் சிறிய பேருந்து நிலையம். அதன் பின்புறம் மிக நீளமான உடமான் குளம். பேருந்துநிலையம் தாண்டி கொஞ்சதூரம் சென்றால் ஊரின் கடைசி ஏரியாவான கோட்டைத்தெரு. அதை அடுத்து பிடாரி அம்மன் கோவில். அப்படியே சாலை மேடேறி விராலிமலை நோக்கிச் சென்றுவிடும்.

இலுப்பூரில் பள்ளிப்படிப்பு 3ம் வகுப்பிலிருந்து 6ம் வகுப்பு வரை... அந்த நான்கு ஆண்டுகளும் மிகச்சிறந்த படிமங்களை ஞாபக அடுக்குகளில் விட்டுச்சென்றிருக்கின்றன. ஏனெனில் எனக்கு நூலகம் அறிமுகமானது அப்போதுதான்.!

ஊரின் மிக முக்கியத்தொழில் செயற்கை வைரம் பட்டை தீட்டுவது...! 80களில் இலுப்பூர் இந்தத்தொழிலில் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. என் பல நண்பர்கள் பள்ளி முடிந்ததும் கல் உருட்டச் செல்கிறேன் என்பார்கள். பகலில் வீதிகளில் சென்றால் டக்சடக், டக்சடக் என்ற உருட்டு எந்திரத்தின் சத்தமும் , இடையிடையே கீச்ச்ச்ச் என்ற கல்லை சாணையில் வைக்கும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். அவர்களது பொழுது போக்கே ரேடியோவும், டேப் ரிக்கார்டரில் ஒலிச்சித்திரமும் கேட்பதுதான். 'விதி' திரைப்படத்தின் அனைத்து வசனங்களும் இன்று கேட்டாலும் எனக்கு அத்துப்படி. அவ்வளவு முறை அதை விடுமுறை நாட்களில் கல்லுப்பட்டறைகளில் அமர்ந்து கேட்டிருக்கிறேன்.

நாங்கள் இருந்தது ஊர்க்கடைசியிலுள்ள கோட்டைத்தெருவில்..எந்த ஊர் செல்வதானாலும் வாசலில் ஓடிவந்து பஸ் ஏறலாம். எதிர் சாரியில் ஒரு மளிகைக்கடையும், டீக்கடையும் மட்டும்தான். எங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு அற்புதமான பள்ளி உண்டு. (ஏன்னா அது நான் படிச்ச பள்ளி ! ஹி..ஹி) ஆர்.சி. நடுநிலைப்பள்ளி. அந்தப்பள்ளியின் மதர் சுப்பீரியரிலிருந்து எல்லா சிஸ்டரும் அன்பொழுகப் பாடம் நடத்துவார்கள். கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளி! படிப்பிலும் நற்பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தது. நல்லொழுக்கப்பாடம் (Moral Studies) என்ற பாடமும் அதனடிப்படையில் மதிப்பெண்களும் வழங்கும் வழக்கம் அந்தப்பள்ளியில் இருந்தது. இப்பெல்லாம் அது இருக்கா? கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்க பாஸு!

அங்குதான் நான் மேடைப்பேச்சு பழகினேன். சந்தியாகு டீச்சர், ரத்னாபாய் டீச்சர், கஸ்தூரி டீச்சர், மங்களா டீச்சர், டெய்ஸி சிஸ்டர், மரியம் சிஸ்டர் என்று பல அன்பான ஆசிரியைகள், எங்களுக்கு அழகாக மேக்கப் போட்டு, அந்தக்காலகட்டத்திலேயே மிகவும் சரியாக உடைகளைத்தேர்வு செய்து பல நாடகங்களை கர்ம சிரத்தையாக எங்களை வைத்து அரங்கேற்றுவார்கள். ஓதேல்லோ, ஷைலாக் என ஆங்கிலத்தில் பேசிய நாடகங்களும், சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன், கோலியாத், என தமிழில் பேசிய நாடகங்களும், பாடப்புத்தகத்தை மீறி கற்றுக்கொள்ள வெளியில் நிறைய இருக்கிறது என்ற படிப்பினையை எனக்கு வழங்கின. இந்த டீச்சர்களில் ஒருவருக்கு திருமணம் ஆன அன்று உலகமே இடிந்து விழுந்ததுபோல் உணர்ந்தேன். கொஞ்சம் வெய்ட் பண்ணியிருந்தா நாம் கல்யாணம் பண்ணியிருக்கலாமே என்று மறுகினேன்.

என் அம்மாவுக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது. ஒரு ஊருக்குப்போனவுடன் அவர்கள் செய்யும் முதல் செயல் அந்த ஊரின் நூலகத்தில் உறுப்பினராவதுதான். அப்படித்தான் அங்கும் ஆனார்கள். அவர்கள் எடுக்கச்சொல்லும் புத்தகத்தை கொண்டுவந்து தரும் பணியில் நான்!

அப்படி எடுக்கச்செல்லும்போது சின்னச்சின்ன சிறுவர் பத்திரிகைக்களைப்படிக்கும் பழக்கம், பின்னர் அம்மா படிக்கும் ஆனந்தவிகடன், கல்கண்டு, குங்குமம், தாய் என வளர்ந்து லஷ்மி, சிவசங்கரி,அனுராதா ரமணன், தி.ஜானகிராமன், ஜாவர், சாவி, கல்கி, சுஜாதா, பாலகுமாரன்,என படர்ந்தது. பின்னர் படமில்லாத பத்திரிக்கைகளும் கவர ஆரம்பித்தன.

மஞ்சரி, குண்டூசி, அமுதசுரபி போன்றவற்றில் வெளிவரும் புரிந்தும் புரியாமலிருந்த கதைகளை வலியப்படித்த வயது அது! பின்னர் எனக்கும் சேர்த்து புத்தகம் எடுக்க ஆரம்பித்தேன். இது நடக்கும்போது நான் ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன். அப்போது எந்த உள்நோக்கமுமில்லாத தாகம் இருந்தது. வாசிக்கும் எல்லைகள் விரிந்துகொண்டே சென்றன.

அந்த விதை, பத்தாம் வகுப்பு படிக்கும்போது,திருட்டுத்தனமாக கிரைம் நாவல், நாவல் லீடர், உங்கள் ஜூனியர் ஆகிவற்றை ஐம்பது பைசாவுக்கு பழைய புத்தகமாக, வாங்கிப்படித்துவிட்டு தூக்கிப்போடும் வரைக்கும் விருட்சமானது. அப்படித்தூக்கிப்போட்ட நாவல்களை வைத்தே ஒரு லெண்டிங் லைப்ரேரி வச்சுப்பொழச்சிருக்கலாம்.

அங்குதான் எனக்கு ஒரு நண்பன் கிடைத்தான். கூடவே அவன் வில்லத்தனமிக்க அண்ணனும்...என்ன ஆச்சுன்னா....

(தொடரும்)

ஞானாலயா

புதுக்கோட்டையில் எனக்குத்தெரிந்த நண்பரின் நண்பர் கூப்பிட்டு, நான் சொல்லும் முகவரிக்கு வாருங்கள். கொஞ்சம் கம்ப்யூட்டர் வேலை இருக்கிறது என்றார். நானும் என் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த வீட்டுக்குப்போனபின், பிரமித்துப்போனேன். அந்த வீடு முழுவதும் புத்தகங்கள்! வரிசைக்கிரமமாக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு ஒரு நூலகம்போல் இருந்தது. அப்புறம்தான் உறைத்தது.
அது ஞானாலயா! தமிழகத்தின் தனிச்சிறப்பு மிக்க தனியார் நூலகம்.! புதுக்கோட்டையின் பெருமைகளில் முக்கியமானது! இன்றைய தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும் வந்துபோகும் கோவில்! அந்த நூலகம் எங்கள் பகுதியில்தான் இருக்கிறது என்று எனக்குத்தெரியும். ஆனால் அப்புறம் போய்க்கொள்ளலாம் என்று மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டேன். ( அதற்காக இன்றும் வருந்திக்கொண்டிருக்கிறேன் ). ஆனால் இப்போது நான் ஞானாலயாவின் செல்லப்பிள்ளை! :)அதன் நிறுவனர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் டோரதி கிருஷ்ணமூர்த்தி தம்பதியர். அவர் பள்ளி தலைமை ஆசிரியராய் இருந்தவர். திருமதி டோரதி அவர்கள் கல்லூரி முதல்வராய் இருந்தவர். இருவரும் பணி ஓய்வு பெற்றுவிட்டு ஞானாலயாவை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள்.

திரு,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உடலாலும், அறிவாலும், உள்ளத்தாலும்அளவிடமுடியா உயரமானவர்! மனிதர்களை நேசிப்பவர். நேர்மையை சுவாசிப்பவர். ஒரு செய்தியின் அடி ஆழம்வரை சென்று அலசுபவர்! அங்கு வரும் ஆர்வலர்களுக்கு முகம் கோணாமல் விபரங்களை அள்ளித்தருபவர். அவர் விளக்கம் சொல்லாமல் ஒரு புத்தகத்தை படிப்பது உப்பில்லாப்பண்டம் உண்பதைப்போல! அவர் ஒரு நூலகர் அல்ல.! நல்ல வாசகர்! நீங்கள் எந்த தமிழ்ப்புத்தகம் தேடிக்கொண்டிருந்தாலும் இங்கு இருக்கும் சாத்தியம் அதிகம்! மேலும் அதைப்பற்றிய பின்னணித் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.

திருமதி.டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அன்பான தாய் மற்றும் அறிவுசால் ஆசான்! கணவரின் எல்லாச்செயல்களிலும் துணை நின்று ஒரு நல்ல ஆலோசகராகவும் திகழ்பவர்! மிகவும் அற்புதமாகச் சமைப்பார். (நம்மல்லாம் படிக்க போகச்சொன்னா தின்னுப்புட்டு வர்ற கூட்டம்! என்ன பண்றது? ) தவிர..மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்! அவர் எழுதி பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் மலேசியாவிலும், ஐரோப்பாவிலும் கௌரவப்படுத்தப்பட்டு, விருதுகள் பெற்றிருக்கிறார்கள். ஆனால் நம் மத்திய, மாநில அரசுகளோ...ம்ஹூம்.. !இங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. தமிழில் அரிய நூல்கள் அனைத்தும் இருக்கின்றன. நான் ஒரு எழுத்தாளர் பற்றியோ, படைப்புகள் பற்றியோ தெரிந்துகொள்ள விரும்பினால், அடுத்து போய் விழும் இடம் அதுதான். இங்கு எல்லா சிற்றிதழ்களும் ஆரம்பம் முதல் உள்ளன. இன்றும் வந்துகொண்டிருக்கின்றன. வட அமெரிக்க FETNA வின் தென்றல் இதழைக்கூட நான் படித்திருக்கிறேன்.டெல்லியிலிருந்து வெளிவரும் வடக்கு வாசல் இங்கு வருகிறது.பல நாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி மாணவர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த அறிவுப்பெட்டகத்துக்கு ஒரு மாதம் அந்துருண்டை வாங்கவே அவர்களுக்கு ஒரு தொகை செலவாகிறது. மேலும் இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல கணிணி மயமாக்குவதும், புத்தகங்கள் அனைத்தையும் மின்புத்தகமாக மாற்றுவதும், அதை இணைய நூலகமாக்கி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த வைப்பதும் காலத்தின் கட்டாயம்.! . இவர்கள் இன்றுவரை தங்கள் சொந்த ஓய்வூதியத்தையும், சேமிப்பையும் வைத்தே நூலகத்தை பராமரித்து வருகிறார்கள். ஆர்வலர்கள் நிறைய புத்தகங்களைத் தந்து குவிக்கிறார்கள். ஆனால் பொருளுதவிக்காக இப்போதுதான் மத்திய, மாநில அரசுகளிடம் திட்ட முன்வரைவு வைக்கப்பட்டுள்ளது.

நாம் ஏதாவது இந்த நூலகத்துக்குச்செய்யவேண்டும்.! என்ன செய்யலாம்?

ஏதாவது ஒரு நல்ல நோக்கத்தோடோ, பாராட்டவோ, அவரைத்தொடர்பு கொள்ள விரும்பினால்.. +91 99656 33140

Wednesday, February 17, 2010

எனக்கு ஏன் இந்த தண்டனை?


சுக்ரீவ ராசா ரொம்ப கவலையா இருக்காரு! அவரு சம்சாரம் அவுக அண்ணன் வூட்டுலயே இருந்துக்கிச்சாம்.

அதுவா இருந்துக்கிச்சா? அவரு புடிச்சு வச்சுக்கிட்டாரா?

அதுவும் தெரியலை..மொத்தத்துல ராசா ரொம்ப கவலையோடவே திரியிறாரு!

சரி..சரி..நீ இருக்குற வாழத்தாருல கொஞ்சத்தை எடுத்து தின்னுப்புட்டு போ..தோலை வாசல்லயே போட்டுறாத.. புள்ள வழுக்கி வுழுந்துட்டான்.

நான் ஏதாவது ரோசனைல இருந்திருப்பேன்.நீயாவது எடுத்து வீசியிருக்கலாமுல்ல.! சரி நம்ம சோட்டான் எங்க போனான். ?

அதான் பத்து வயசுக்கு மேல உள்ள புள்ளைங்களுக்கெல்லாம் சண்ட கத்துத் தராகளாமுல்ல ! அதான் போயிருக்கான். ஒங்க ராசா பொண்டாட்டிய மீக்க, ஏம்புள்ளய சண்டைக்கு அனுப்ப வேண்டியிருக்கு!

அடியே சத்தம்போட்டு பேசாதடீ! யாரு காதுலயாவது வுழுந்துடப்போவுது!

சரி..சரி பாத்து போ..வாலை மிதிச்சுப்புடாத!

ஒதுங்கி ஒக்காராம..பாதைல ஒக்காந்துக்கிட்டு அளும்பு பண்றியா?

கோவுச்சுக்காதய்யா..என் ம்ம்முத ராசா!

இப்புடி பாசமான பொஞ்சாதிக்காக என்னவேணும்னாலும் பண்ணலாம்டீ!

அது சரி..எனக்காக நீ என்னவேணும்னாலும் பண்ணலாம். ஒரு கூட்டத்தையே சங்கடப்படுத்தினா நல்லா இல்லைல்ல!

ஏய்..இப்ப என்ன சொல்ல வர்ற?

இல்ல...நம்ம சுக்ரீவ ராசா..பொஞ்சாதிய காப்பாத்த அந்த வாலி ராசாவோட சண்ட போட ஒங்களையெல்லாம் தயார்ப்படுத்துறாரேன்னுதான் பயமா இருக்கு!

அதுக்கு என்ன பண்றது..நாம எந்தப்பக்கம் இருக்கோமோ, அந்தப்பக்கம் நியாயம் இருக்கறதா நெனச்சுக்க வேண்டியதுதான்.!

சரி. பாத்து பத்தரமா போய்ட்டு வா! என்னிக்கு சண்டைன்னு சொல்லு! நான் சின்னப்புள்ளய கூட்டிக்கிட்டு காட்டுக்குள்ள வேற எடத்துல போய் உக்காந்துக்குறேன்.

கவலப்படாதடீ..எல்லாம் நல்லபடியா நடக்கும்.

வூட்டவுட்டு கெளம்பி பக்கத்து மரத்துல இருந்த சொம்பானோட காட்டுக்குள்ள மத்த ஆளுகளையும் பாத்து கூப்புட்டுக்கிட்டே போனோம்.நாங்க எல்லாரும் கவலையோடவே ராசா ஒளிஞ்சிருக்கிற எடத்துக்கு போனோம். எதுத்தாப்புல அனுமாரு சந்தோசமா , வாலே இல்லாத லச்சணமா இருந்த ரெண்டு ஆளுகளோட பேசிக்கிட்டு வந்தாரு.! ஒருத்தரு கையில பெரிய வில்ல வச்சிருந்தாரு. இன்னொருத்தரு அவரு தம்பி போல.. ரெண்டுபேரும் மூஞ்சிய உம் முன்னு வச்சிக்கிட்டு அனுமாருக்கிட்ட என்னமோ பதில் சொல்லிக்கிட்டு வந்தாக.. பாவம் அவுகளுக்கு என்ன கவலயோ?

ராத்திரி வூட்டுக்கு வந்தேன்.


மத்தாயி ! ஒரு விசயம் தெரியுமா?

என்னய்யா!

இன்னிக்கு ரெண்டு மனுசங்க நம்ம காட்டுக்கு வந்தாக!

சரி..அதுக்கென்ன?

அவுங்கள்ல ஒருத்தர் பேரு ராமனாம். பெரிய வில் வித்தைக்காரராம்.

ம்

இன்னொருத்தர் லச்சுமணனாம். அவரும் பெரிய வீரராம்.

சரி.

அவுங்களால நமக்கு ஒரு விடிவு காலம் பொறக்கப்போவுது!

என்ன விடிவுகாலம்.. நமக்கெல்லாம் வூடு கட்டி குடுக்கப்போறாராமா?

இல்லடீ! அத வுட நல்ல விசயம்!
அந்த ராமரு..வாலி மகாராசாவை கொல்லப்போறாராம். !

தனியாவா?

ஆமாங்குறேன்.

மவராசன்.நல்லா இருக்கணும்.! எங்க நீங்கள்லாம் புத்திகெட்டு அந்த வாலி ராசாவோட சண்டைக்கு போய் தோத்து...இல்ல உனக்கு எதாவது ஆகி..நான், புள்ளைகள்லாம் திண்டாடிப்போயிருவோமோன்னு நெனச்சேன்.

களுத..நீ ஏன் கவலப்படுற? அதான் நல்லது நடக்கப்போவுதுல்ல!

ஆமா..எப்புடி கொல்லப்போறாராம்.?

அதெல்லாம் திட்டம் தீட்டிட்டாங்க.. அந்த வெவரமெல்லாம் மேல் அதிகாரிகளுக்கே தெரியல.. நான் ஒரு சாதாரண சிப்பாய்! எனக்கு எப்புடி தெரியும்?

சிப்பாயா? யோவ்..நீ பாட்டுக்கும் காட்டு வேலை பாத்துக்கிட்டிருந்த! மொத வாட்டி நடந்த சண்டைல எல்லா சிப்பாய் கூட்டத்தையும் சாகக்குடுத்துட்டு ராசா ஆளெடுத்ததுல இப்பத்தானே சிப்பாயா ஆகியிருக்க? பெருசா பீத்திக்கிற?

அது கெடக்கு! நீ ஏன் ரொம்ப கவலைப்படுற!

சொல்லுவய்யா சொல்லுவ..! உன்னய வெளில அனுப்பிட்டு , சின்னப்புள்ளய வயித்துல கட்டிக்கிட்டு , அடுத்து என்ன நடக்குமோன்னு திக்கு திக்குன்னு நானுல்ல அலையுறேன்.

சரிடா கண்ணு! நான் என்ன பண்றது சொல்லு! இனிமே சண்டை வராதுன்னு நினைக்கிறேன். சந்தோஷமா தூங்கு.!
அடுத்த நாளே அந்த நல்ல சேதி வந்துருச்சு! ராமரு எங்கயோ மறைஞ்சு நின்னு சுக்ரீவ ராசா குடுத்த சமிக்ஞை மூலமா வாலி ராசாவை கொன்னுட்டாராம். எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசம். எந்த ஒரு போரும் இல்லாம, ஒரேடியா வேலை முடிஞ்சு போச்சேன்னு! அன்னிக்கு எல்லாருக்கும் நெறைய வாழத்தாரு..தேங்கா, பழங்க ன்னு சுக்ரீவ ராசா வாரி எறைச்சாரு.


வூட்டுக்கு சந்தோசமா வந்தேன்.


அடியே..! இப்ப பாத்தியா? உன் நல்ல மனசுக்கு ஒரு கொறையும் இல்லாம, எல்லாம் சுமுகமா முடிஞ்சிருச்சு!

எல்லாம் அந்த நல்ல மனுசன் ராமன் பண்ணுன வேலை! உங்க எல்லாராலயும் சாதிக்க முடியாதத ஒத்த ஆளா சாதிச்சிருக்காரு.! நம்ம சுக்ரீவ ராசா பொண்டாட்டிய காப்பாத்தறதுக்குன்னே வந்திருக்காரு போல!

ஆமாங்குறேன்.

அடுத்த நாள் அந்த இடி மாதிரி சேதிய அந்த சொம்பான் பய வந்து சொன்னான். அந்த ராமரோட பொண்டாட்டிய ராவணனன்னு ஒரு அசுர ராசா தூக்கிட்டு போய்ட்டானாம். அந்த அம்மாவ மீக்க எல்லாரும் படையெடுத்து போவணுமாம். அதுவும் இந்த காட்டுல இல்லயாம். வேற ஏதோ லங்காபுரியாம். ரொம்ப தூரம் தள்ளி இருக்காம். எனக்கு பக்குன்னு இருந்துச்சு.! என்னடா இது ! இப்பதான் சண்டை சச்சரவு இல்லாம பண்ணினாரேன்னு சந்தோசமா புள்ளக்குட்டிகளோட இருக்கலாமுன்னு நெனச்சோம். இப்புடி ஒரு சோதனையா?

அவக்கிட்ட போய் சொல்றதுக்குள்ள...அளுது தீத்துப்புட்டா!

கவலப்படாதடீ ! சின்ன சண்டயாத்தான் இருக்கும். சீக்கிரம் திரும்பி வந்துரலாம். காட்டை சுக்ரீவ ராசாவுக்கு மீட்டுக்குடுக்கறதா ராமரு ஒத்துக்கிட்டதே நம்ம ஆளுக அவருக்காக லங்காபுரிக்கு சண்டைக்கு வருவோம்னுட்டுதானாம். அது முன்னாடியே அனுமாரு பேசி முடிச்சிட்டாராம்.

அது எப்புடி பேசுவாக! எனக்கு ராமரோட நாயமே புரியல! அவரு மனுசருதானே.! ராவண ராசாவை பல தடவ தொம்சம் பண்ணின வாலி ராசாவையே ஒத்த ஆளா கொன்னவரால..அவரு பொண்டாட்டிய மீக்க முடியலயா? என்ன கெரகம் இது?
அவுங்கள்லாம் அரக்கருங்களாமுல்ல! அவுகள்ட்ட இந்த மூஞ்சியையும் வாலையும் வச்சுக்கிட்டு எப்புடி நீங்கள்லாம் சண்ட போடப்போறீக? யோவ்! ஒனக்கு எதாவது ஆச்சு, நானும் புள்ளைங்களும் அடுத்த நிமிசம் செத்துருவோம் ஆமா!

ஏண்டி இப்புடி பொலம்புற? நாம எந்த பாவமும் செய்யல..அப்பறம் ஏன் கவலப்படுற?

அதான்ய்யா கேக்குறேன். நாம எந்த பாவமும் செய்யல! அப்புறம் ஏன்யா நம்மள சுத்தி சுத்தி அடுத்தவன் பொண்டாட்டிய காப்பாத்த இழுத்து வுடுறாங்க!

கவலப்படாதடீ செல்லம்.! எனக்கும் ஓன் நியாயம் புரியுது! இருந்தாலும் நாம ராச உத்தரவுக்கு கட்டுப்பட்டுத்தானே ஆவணும்.

எனக்கென்னமோ பயமா இருக்குய்யா!

அன்னிக்கு அவள சமாதானப்படுத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு! ஒரு வழியா போருக்கு கெளம்பியாச்சு ! எல்லாரையும் வரிசையா நடக்க வுட்டாங்க! கடல்ல கல்லெல்லாம் அடுக்கி பாலமா மாத்தி அந்த லங்காபுரி தீவ போய் சேர்றதுக்குள்ள அசந்து போச்சு! போனவுடனேயே சண்டையப்போடுங்கன்னுட்டாங்க!

எதிரி ஒவ்வொருத்தனும் மலை மாதிரி இருக்கான். அவனுங்களை கொல்லணும்கிற நெனப்ப விட எப்பிடியாவது இவனுங்ககிட்ட தப்பிக்கணுமேன்னுதான் தோணுச்சு! நானும் ஒரு வழியா ரெண்டு நாள ஓட்டிட்டேன். அன்னிக்கு சண்டை கொஞ்சம் உக்கிரமா இருந்துச்சு. ஒரு அரக்கனை அடிக்க ஓடினேன். அவன் கையில வச்சிருந்த ஆயுதத்த இதுவரைக்கும் நான் பாத்ததே இல்ல! என்ன நோக்கி ஓடி வந்தான். நான் தப்பிக்க நெனக்கிறதுக்குள்ள வயித்துல நல்லா குத்திக்கீறிட்டான். அப்புறமா என் வாலைப்புடிச்சு தூக்கி என்னைய தரையில அடிச்சுப்புட்டான். தலை ரொம்ப வலிச்சுது. தொட்டுப்பாத்தேன் ஈரமா இருந்தது. ரத்தம்..வயித்துலேருந்து கொடல் வெளில வந்துருச்சு ! எல்லாம் மங்கலா தெரிய ஆரம்பிச்சது! தூரத்துல ராமரு
ராவணனைப்பாத்து என்னமோ சொல்லிக்கிட்டிருந்தாரு..! உன்னிச்சு கேட்டேன்..'இன்று போய் நாளை வா' ! கண்ணெல்லாம் இருட்டிருச்சு...அனேகமா செத்துருவேன்னுதான் நெனக்கிறேன்.ஐய்யோ..! என் பொண்டாட்டி ,புள்ளைங்க கதி?

என்ன ராமரே.! நீங்க பாட்டுக்கும் கையில கிடைச்ச ராவணராசாவை வுட்டுப்புட்டு...நாளைக்கு வரச்சொல்றீஙக.! நாளைக்கு இன்னும் என் கூட்டாளிக எத்தனை பேரு சாவப்போறாங்களோ..உங்களுக்கு உங்க நியாயம் நிக்கணும்..ஆனா,

நான் என்ன தப்பு செஞ்சேன்?


டிஸ்கி : நட்சத்திர வாரத்தில் மினிமம் ஒருஅட்வைஸ் பதிவு, ஒரு மீள்பதிவு போடணுமாம்.! இவற்றை மீறி... 2008ல் படிச்சவுங்க லூஸுல வுட்றுங்க! :)
மறைக்கிறான் சார்!

கறம்பக்குடி டி இ எல் சி தொடக்கப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ரேடியோவில், காலை 11.40க்கு கல்வி ஒலிபரப்பில் ஒவ்வொரு வகுப்புக்கும் பாடம் எடுப்பார்கள். அந்தப்பாடத்தை , அந்தந்த வகுப்புக்கு போட்டுக்காட்டுவதில், எங்கள் தலைமை ஆசிரியருக்கு அலாதி விருப்பம். அந்த கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சி இன்றுவரை ரேடியோவில் வந்துகொண்டிருக்கிறது. யார் கேட்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் நானே பலமுறை அந்த ஆளில்லாத கடையில் டீ ஆத்தியிருக்கிறேன்.

ரேடியோ இருந்தது தலைமை ஆசிரியர் அறையில். அது ஒரு மரப்பெட்டிபோல் இருக்கும் வால்வு ரேடியோ! தலைமை ஆசிரியர் அறை வாசலில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்திருப்பார்கள். எந்த வகுப்புக்கு ரேடியோவில் பாடம் வருகிறதோ, அந்த வகுப்பு 11:30 மணிக்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப்பின்னால் அமர வேண்டும். அவர்களில் ஒரு பெரிய மாணவன் தான் சட்டாம்பிள்ளை.!

ரேடியோ மெதுவாக தன் முனகலை ஆரம்பித்து...கனைத்து.. ' ஆல் இண்டியா ரேடியோ' என்று ஆரம்பிக்கும்போது நாங்கள் ஹோ வென்று கூச்சல் போட்டு எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம். என்னமோ எங்களுக்காகவே ரேடியோவுக்குள் ஒரு ஆள் இருந்துகொண்டு பாடம் நடத்துவதாக நினைப்பு!

இப்படியாக, ஒருநாள் எங்கள் வகுப்புக்கான கல்வி ஒலிபரப்பு அறிவிக்கப்பட்டது. எங்கள் வகுப்பிலிருந்து வரிசையாகச் சென்று ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப்பின்னால் அமர்ந்தோம். பேசாம அஞ்சாம் வகுப்புப்பையனா பொறந்திருக்கலாம். டெய்லி ரேடியோ முன்னாடி உக்காரும் சான்ஸ் கிடைக்குது! என்கிறபடியாக நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.அன்று எங்களுக்கெல்லாம் சட்டாம்பிள்ளையாக தலைமை ஆசிரியரே வந்திருந்தார். ஆள்காட்டி விரலை வாய்க்குக்குறுக்கே வைத்துக்காட்டிக்கொண்டே இருந்தார். அவர் சொன்னதுபோலவே செய்துகொண்டே உதடுகளை மூடிக்கொண்டு நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அதில் இரண்டு பேர்,

டேய்! இதுக்குள்ளேருந்து எப்படிடா பேசுறாங்க!

நம்மள மாதிரி இல்லாம குள்ள மனுசங்க இருக்காங்களாம். அவுகளை வாத்தியர் வேலைக்குச் சேத்துப்புட்டு - பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினா நம்மள விட குள்ளமா இருக்குறதால நம்மளையெல்லாம் அவுகளால அடக்க முடியாதுன்னு - ரேடியோக்குள்ள அனுப்பிருவாகளாம். அவுங்கதான் நமக்கு பாடம் எடுக்குறாங்க! - எங்க அப்பத்தா சொன்னுச்சு!

அப்புடியா? அடேயப்பா...நம்ம கிளாஸுலேயே நீதான்டா வெவரமான ஆளு!

இது என்ன பெரிய விசயம்.. போனவாட்டி இங்க வந்திருந்தோமுல்ல... அப்ப அந்த வலை மாதிரி இருக்குற துணில ஒரு ஓட்டை இருக்குல்ல...! ரேடியாக்குள்ளேருந்து அந்த வாத்தியாரு நம்மள்ல யார் யாரு பேசுறாங்கன்னு பாக்குறதை நான் பாத்தேன். அப்படியே பயந்துட்டேன். அதுலேருந்து நான் பேசுறதே இல்லை! என்று வாயில் விரல் வைத்து பேசிக்கொண்டிருந்தான்
இந்த சம்பாஷணை போய்க்கொண்டிருக்கும்போதே....மேசையின் மீதிருந்த ரேடியோ பேச ஆரம்பித்தது. "ஆல் இண்டியா ரேடியோ....."

அனைவரும் விரைப்பானோம். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் உயரம். அதில் ஒருவன் கொஞ்சம் மிதமிஞ்சிய உயரம். மொத்தத்தில் இரண்டாம் வகுப்பு கோஷ்டி எல்லாருமே அவர்களைவிட குள்ளம்தான். ஆக.. மெதுவாக உட்கார்ந்திருந்த எங்களில் சிறு சலசலப்பு தோன்றி, எங்களில் சிலர் முட்டிக்கால் போட்டுக்கொண்டு ரேடியோவைப்பார்க்க ஆரம்பித்தோம்.

அப்போதுதான் ரேடியோவுக்குள் வாத்தியார் இருப்பதாகச்சொன்னவன், தலைமை ஆசிரியரைப்பார்த்து கத்தினான்.

"சார்! ரொம்ப நேரமா பாத்துக்கிட்டிருக்கேன். முன்னாடி இருக்குறவன் ரேடியாவை மறைக்கிறான் சார். என்னால பாடத்தை கவனிக்கவே முடியலை! உள்ள இருக்குற வாத்தியாரு என்னைப்பத்தி என்ன நினைப்பாரு?"

தலைமை ஆசிரியரும் ஓடி வந்தார். அவனுக்கு முன்னால் இருப்பவனை குச்சியால் அடித்துக்கொண்டே கேள்வியின் அபத்தம் புரியாமல் சொன்னார்.

"ஏண்டா ரேடியாவை மறைக்கிற? உக்கார்றா!!

இப்படித்தாங்க நானெல்லாம் ரேடியா பாத்து வளந்தேன்.!

கறம்பக்குடி

புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஊர்! விவசாயத்தை மட்டும் நம்பியிருக்கும் தேர்வுநிலைப்பேரூராட்சியாக இருந்து, இப்போது தாலுகா தலைமையிடமாக மாறியிருக்கிறது.

புதுக்கோட்டையிலிருந்து செல்லும் சாலையில் ஊருக்குள் நுழையும்போதே பெரியாறு (காவிரியின் ஏகப்பட்ட கிளை நதிகளில் இதுவும் ஒன்று! இப்போது வெறும் மணலாறு) பாலத்தைக்கடந்தால்,இன்னும்

சிறிய நரியாற்றுப்பாலம்! அதற்குப்பிறகு ஊரின் காவல் தெய்வம் முத்துக்கருப்பையா கோவில்! இதில் பரம்பரைப்பூசாரிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டு இரண்டாவது முத்துக்கருப்பையாவை உருவாக்கி, அவருக்கும் கோவில்! அவர் பெயர் சின்னக்கருப்பர்!

இந்த இருகோயில்களுக்கும் பின்னால் 16ம் நூற்றாண்டு சிவன் கோவில்! அதற்கு எதிரில் உள்ள குளத்துக்கு சிவன் குளம் என்று பெயர் இருந்திருந்தால் அது நியாயம். ஆனால் அதன் பெயர் கருப்பர் குளம்.!

புதுக்கோட்டை சாலை இன்னும் நீளும்போது வரிசையாக ரேஷன் கடை, கால்நடை மருத்துவமனை, பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், அதற்கு எதிரில் யூனியன் ஆபீஸ் க்வார்ட்டர்ஸ் அதற்குப்பின்னால் தெருக்கள் என, ஊர் ஆரம்பிக்கும். அந்த யூனியன் ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தருகில்தான் எங்கள் வீடு இருந்தது.

ஊரின் மையப்பகுதியாக இருக்கும் அந்த நான்கு ரோடு சந்திப்பிற்கு அரசாங்கம் என்ன பெயர் வைத்திருக்கிறதென்று தெரியவில்லை. ஆனால் இன்றுவரை அதன் பெயர் - சீனிகடை முக்கம்! புதுக்கோட்டையிலிருந்து ஒரு சாலை ஊருக்குள் செல்லும். பட்டுக்கோட்டையிலிருந்து திருவோணம் வழியே ஒரு சாலை , புதுக்கோட்டை சாலையை இந்த சீனிகடை முக்கில்தான் சந்திக்கும். பட்டுக்கோட்டையிலிருந்து இடையாத்தி வழியாக இன்னொரு சாலையும் இந்த முக்கில்தான் சந்திக்கும். இவை மூன்றும் சேர்ந்து நான்காவது திசையில் பேருந்து நிலையம் நோக்கி பயணிக்கும்.

ஊர்க்கடைசியில் பேருந்து நிலையம். அதன் எதிரிலேயே காவல் நிலையம். அதன் அருகிலேயே அரசினர் மேல்நிலைப்பள்ளி. பள்ளிக்கு மிகப்பெரிய விளையாட்டு மைதானம்! சீனிகடை முக்கம்தான் மாலை வேளைகளில் மக்கள் சங்கமிக்கும் இடம். ஊரின் ஒரே தியேட்டரான முருகனில் என்ன படம் ஓடுகிறதென்பதை சீனிகடை முக்கத்திலுள்ள மிகப்பெரிய போஸ்டர் சொல்லும். கோட்டைப்பட்டினத்தார் கடை, முல்லை மெஸ் , முருகன் டீஸ்டால், வேலு மிக்ஸர் கடை , தனுஷ்கோடி கடை என பல்வேறு கடைகள்! நெய்வேலி கிராமத்தின் வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையில், தெக்கிக்காடு இருக்கிறது. அந்தப்பகுதிக்காரர்தான் நம்ம தெக்கிக்காட்டான் அவர்கள்! பிறகு நமது தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான சுந்தரவடிவேலும் இந்த ஊர்தானுங்க!

ஊருக்குள் பல்வேறு லேண்ட் மார்க்குகள் இருக்கின்றன. 1980 களிலேயே ஊருக்குள் த.சு.லூ.தி (தமிழ்நாடு சுவிசேஷ லூத்திரன் திருச்சபை - TELC) பள்ளி செயல்பட்டு வந்தது. அந்தப்பகுதியிலேயே வள்ளுவர் திடல். பெரிய பேச்சரங்கங்கள், பொதுக்கூட்டங்கள் இங்குதான் நடக்கும். அதற்குப்பின்னால் பங்களா குளம்! பிறகு ஒரு அரசாங்கத் தொடக்கப்பள்ளி. ஆனால் அதை சிறப்பாக நடத்திய ஆசிரியர் திரு.செங்கமலம் என்பவரது பெயரால் செங்கமலம் ஸ்கூல் என்றே வழங்கப்பட்டு வந்தது.

சின்ன வயதில் ' செங்கமலம் சிரிக்கிது! டிஇஎல்சி அழுவுது'! என்று பாடித்திரிந்ததுண்டு!

அந்த ஊரில்தான் TELC பள்ளியின், முதல் வகுப்பில் என்னை சேர்த்துவிட்டார்கள். அப்போது பெற்றோர் கலியாப்பட்டியிலேயே இருந்தனர். நானும், என் அத்தை மகனும் தாத்தா, பாட்டியுடன் இருந்தோம்.

அந்தப்பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படிக்கும்போதுதான் அது நடந்தது.


(தொடரும்)

Tuesday, February 16, 2010

எதிர்(ரி)வினை!

நண்பர்கள் வட்டத்தின் ஆரத்தை அதிகப்படுத்தி அதன் சுற்றளவைப் பெரிதாக்குவதில் பதிவுலகை விட மிகச்சிறந்த அமைப்பு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.

ஆனால், அத்தகைய நட்பு தரும் பதிவுலகில் நாம் எந்த அளவுக்கு நன்மையை விதைத்திருக்கிறோம் என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது. மாபெரும் பதிவர்கள் என்று போற்றப்பட்டவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்துக்கொள்வதும், ஒரு காலகட்டத்தில் அயர்ச்சியால் பதிவே எழுதாமல் இருப்பதும் நடந்தேறி வருகிறது.

இதற்கு என்ன காரணமென்று பார்த்தால், ஏதோவொரு சர்ச்சை அவர்களது எழுத்தை முடக்கியிருக்கும். அல்லது இன்னொரு சர்ச்சையின் விளைவு அவர்களுக்கு ஆயாசத்தை ஏற்படுத்தி , நமக்கும் இது நடக்கலாம் என்ற பயம் கிளம்பியிருக்கும்.

அதைவிட மேலாக, இதை எழுதினால்..இவருக்குப்பிடிக்காது. அதை எழுதினால், அவருக்குப்பிடிக்காது என்று - எந்த எழுத்தால் நட்பு வளர்ந்ததோ - அந்த எழுத்தை நசுக்க வேண்டியிருக்கும்.

தொடர்பில்லாமல் பத்துப்பதிவுகளை எடுத்துப்பார்த்தால், குறைந்தபட்சம் ஆறு பதிவுகள் ஏதாவதொன்றின் எதிர்வினையாக அமைந்துவிடுகிறது. அது ஒன்றும் தவறில்லை. எதிர்வினைகள் தொடர்கதையாக மாறி அந்தச்சங்கிலி இறுகி சம்பந்தப்பட்டவர்களின் நட்புச்சங்கிலியை அறுக்கும்வரை!

வலையுலகின் மிகப்பிரபலமான, இன்று நாம் எழுதும் கட்டமைப்பு வசதிகளுக்கு ஆதாரமாக இருந்த, இருக்கும் ஒரு தளத்துக்கு நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் ஒரு அன்பான பதிவரை சமீபத்தில் சந்தித்தேன். ஏன் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் அப்படியே மேற்சொன்ன கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. எதிர்வினைகள் அதிகமாகிவிட்டன என்றார்.

உண்மைதான். நீங்கள் ஒரு விஷயத்தைப்பார்க்கிறீர்கள். உங்கள் கோணத்தில் பதிக்கிறீர்கள். அது மற்றொரு நண்பருக்கு தவறாகப்படுகிறதென்றால், உங்களுக்கு பின்னூட்டமிடலாம். அல்லது தன் மாற்றுக்கருத்தை தனது தளத்தில் தாராளமாகப்பதியலாம். அத்துடன் அது நின்றுவிட்டால், எதிர்வினைகள் தொடர்ச்சியாகி, வன்மம் வளர்ந்து, அந்தப்பதிவர் எதிரியாகவே பாதிக்கப்பட்டு, பதிவுலகில் நுழைவதே ஒரு வருத்தமான விஷயமாய் ஆகாது.

ஆனால், விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று முன்னவரும், அந்த விளக்கத்தை உடைக்கிறேன் என்று பின்னவரும் கச்சை கட்டிக்கொண்டு இறங்கும்போது நட்பு தன் பலத்தை இழந்து, விளக்கங்களும், தர்க்கங்களும் கோலோச்ச ஆரம்பிக்கின்றன. பின்னர் இந்தப்பக்கம் நாலுபேர் , அந்தப்பக்கம் நாலுபேர். அதற்குப்பிறகு பதிவுலகம், தன் கையில் தயாராக வைத்திருக்கும் பெயிண்ட் டப்பாவிலிருந்து ஒவ்வொரு தரப்பிற்கும் தகுந்த வண்ணங்களை அடித்து அனுப்பிவிடுகிறது.ஆக..எதிர்வினைகளின் தொடக்கம் விளக்கம் சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம்!

நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!
நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!


அழகான சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு, வெற்றி பெறுவோம்.

போட்டுக்கொடுத்த பொடிப்பையன்கலியாப்பட்டியிலிருந்து தினசரி மலையடிப்பட்டிக்கு பள்ளி செல்லும் நான் ஏதாவது கற்றுக்கொண்டே ஆகவேண்டுமென்று நினைத்தேனா.. வீட்டுக்கு வந்தவுடன் என்னடா சொல்லிக்குடுத்தார்கள் என்று வீட்டில் கேட்கும் கேள்விக்கு பயந்தேனா.. என்று தெரியவில்லை. ஆனால் எனக்கு அந்த ஆசிரியரின் மீது கடுப்பு அதிகரித்துக்கொண்டே இருந்திருக்கவேண்டும். ஏனெனில் அவர் எனக்கென்று எதுவுமே சொல்லிக்கொடுக்கவில்லை. ஒரே கைவீசம்மா கைவீசு, நிலா நிலா ஓடிவாவும், ஒரு சிங்கம் நாலு மாடு கதையும் எனக்கு அலுப்புத்தட்டியிருக்கவேண்டும். அவரைப்பொறுத்தவரைக்கும் நான் லிஸ்ட்டிலேயே வராத பையன். ச்சும்மானாச்சுக்கும் பள்ளி வந்து செல்பவன். முக்கியமாக கிராம சேவக் மகன்! அவர் கொடுத்த மரியாதை, சக மாணவர்களிடத்திலிருந்தும் எனக்குக்கிட்டிய மமதையில் நான் திரிந்துகொண்டிருந்தேன்.

இப்படியாகப்பட்ட காலத்தில்தான், அந்த நாளில் பள்ளிக்கு Inspection என்ற பெயரில் ஒரு அதிகாரி வந்தார். அவரும் எல்லோரிடத்திலும் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தார். என்னிடத்தில் என்ன கேட்டார் என்று நினைவில்லை. ஆனால் நான் சொன்ன பதில்தான் இங்கே முக்கியம்..!

' சார்! இந்த வாத்தியார் தினமும் வரார். நல்லா தூங்குறார். பாட்டுக்கேக்குறார். குறட்டை விடுறார். ஆனா எந்தப்பாடமும் எனக்கு சொல்லித்தரமாட்டேங்குறார் ' என்று குற்றப்பத்திரிக்கையை குள்ளநரித்தனமாக வாசிக்க, அதற்குப்பிறகு நடந்ததை இன்று வரை என் பெற்றோர் சொல்கிறார்கள்.

அன்றே அவர் என்னைப்பற்றி விசாரிக்க, சக மாணவர்கள் விபரம் சொல்ல... அன்று மாலை நான் ஒன்றுமே நடவாதது போல் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும்போது , ஒரு பையில் பிஸ்கெட் , பழங்கள் வாங்கிக்கொண்டு அந்த அதிகாரி வீட்டுக்கே வந்துவிட்டார். அப்போதுதான் அப்பாவும் வீட்டுக்கு வர, எனக்கு உதற.. அவர் என்னைப்பற்றி மிகவும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார்.

'சார்! பையன் ரொம்ப போல்டா பேசுறான். ஸ்கூல்ல ஆசிரியரைப்பத்தி தைரியமா புகார் சொன்னான். இப்படித்தான் சார் இருக்கணும். ஏன்னா, எல்லா இடங்களிலும் வாத்தியாரே பசங்களை Inspectionக்கு தயாரா வச்சிருப்பாங்க! இப்படியே வளருங்க!! அதுதான் நல்லது! என்று ஏத்திவிட்டுவிட்டு சென்றுவிட்டார்.

அடுத்த அரைமணி நேரத்தில், பாதிக்கப்பட்ட ஆசிரியரும் வீட்டுக்கு வந்து ' ஹி..ஹி.. பையன் ரொம்ப தைரியமா இருக்கான் சார். இருந்தாலும் என்னைப்பத்தி, டி இ ஓ க்கிட்ட தப்பா சொல்லிட்டாப்புல. இப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்போறாங்கன்னே தெரியலை..! பையன் இப்படித்தான் ஏதாவது சொல்லுவான்னு டி இ ஓக்கிட்ட கொஞ்சம் சொல்லுங்க சார்! என்று தர்மசங்கடமாகச் சொல்ல...

அப்பா அவர் சாப்பிட பிஸ்கட் கொடுத்துக்கொண்டே சொன்னார். இந்தாங்க பிஸ்கட் சாப்பிடுங்க! டி இ ஓ குடுத்தது! இனிமே நீங்க கொஞ்சம் நல்லா, வேலையை மட்டும் பாருங்க! பையன் ஒண்ணும் தப்பா சொல்லியிருக்க மாட்டான். !

இப்படி...இன்றுவரை என்மேல் நம்பிக்கை வைத்திருக்கும் அப்பாவுக்கு... நன்றி..!

Monday, February 15, 2010

கலியாப்பட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூருக்கு அருகில் கிள்ளுக்கோட்டை எனும் ஊருக்குச் செல்லும் சாலையின் உள்ளே 2 கிலோமீட்டரில் உள்ள மிக மிகச் சிறிய கிராமம்.

கலியாப்பட்டி ஒரு ஒற்றைச்சாலை கிராமம். மெயின் ரோட்டிலிருந்து வரும் கிளைச்சாலை நேரே சென்று ஊர்க்கோடியில் உள்ள நல்லாண்டவர் கோயிலில் போய் முடியும். அந்தச்சாலையின் இருபக்கமும் வீடுகள் கொண்டதுதான் ஊர்! இடையில் சிறு சிறு தெருக்கள். ஊர்ப்பெரியவர், வண்டியோட்டிகள் ,பூசாரி, பயமுறுத்திக் கிழவி என பரந்த மனம் கொண்ட மனிதர்களால் நிறைந்த கிராமம்..!

என் அப்பா ஒரு கிராம நல அலுவலர்! அவருக்கு வாடகைக்குத் தருவதற்கு அங்கு வீடு இல்லை. ஆகவே ஊர்ப்பெரியவர் தன் களத்துமேட்டில் சிறிது இடம் கொடுக்க.. அப்பாவே செங்கலும் செம்மண்ணும் வாங்கிக்கொடுக்க..மாரியய்யா என்ற அந்த அன்பு அண்ணன் விறுவிறுவென்று கட்டிய அந்தக் கூரைக் கோட்டைதான் எங்கள் வீடு! வீட்டில் ஒரே ஒரு பெரிய அறை! ( 10க்கு 15 இருக்கலாம்) வாசலில் கல்லுக்கால் ஊன்றி அதே அளவு வராண்டா...! வாசல் தரைக்கு செம்மண்ணும் , சாணிக்கரைசலும்தான் flooring..! உள்ளே கொஞ்சம் தரமாக சிமெண்ட் தரை! வாசலில் களத்துமேட்டுக்கு வரும் மாடுகள் குடிக்க ஒரு கழுநீர்த்தொட்டி..! கருவை மரங்களும், கம்மாக்கரையும் நிறைந்த ஊரில்..ரசிக்கிறோம் என்றே தெரியாமல் இயற்கையை ரசித்த வயது அது! ..

ஊருக்குள் பாம்புகள் சர்வசாதாரணம்.! எங்கள் வீட்டு வெங்காயக்கூடையில் அழகாகச்சுருட்டிக்கொண்டு படுத்திருந்த நல்ல பாம்பு ! என் தங்கையின் தூளியின் கயிற்றில் இறங்க எத்தனித்து , தூளி ஆட்டிக்கொண்டிருந்த லச்சுமி அக்கா மேல் விழுந்த ஓலைப்பாம்பு என.. இன்றும் பாம்புகள் மேல் பெரிய வெறுப்பு ஏற்படா வண்ணம் சகஜமாகப்பழகின. :)

நாங்கள் சரியாகச்சாப்பிடவில்லையென்றால், அம்மாவால் பயமுறுத்தப்பயன்படும் பயமுறுத்திக்கிழவியை இன்று நினைத்தாலும் டர்ராகும். ஆனால் அவள் மகள் ஏதோவொரு காரணத்தால் அரளி குடித்து இறந்தபோது..அவள் கதறியதைப்பார்த்த பின்தான் அவளும் மனுஷிதானோ என்று எண்ணத்தோன்றியது.

அங்கு பல வீட்டில் நல்லைய்யா என்ற பெயர் சகஜம். ஏனெனில் நல்லாண்டவர்தான் காவல்தெய்வம். அந்தக்கோவில் திருவிழாவில் கொடுக்கப்படும் பாதாம் இலையில் வைத்துத்தரும் சர்க்கரைப்பொங்கல் வாசனை இன்னும் போகவில்லை.

எனக்கு அங்கு ஒரு நண்பன் இருந்தான். ஊர்ப்பெரியவர் மகன்! ஆனால் படுபாவி.! அவனுக்கு என் அப்பா பெயர்! அதனால் சத்தம்போட்டுக்கூப்பிடவோ, திட்டவோ முடியாது. அது எனக்குமட்டும் தர்மசங்கடம் இல்லை. அந்த ஊர்க்காரர்களுக்கும்தான்..! ஆக..அவனுக்கு ஊரே சேர்ந்து 'தம்பி ' என்று பெயர் வைத்தது. அவனோடுதான் சுற்றுவேன். அப்போதே புரிந்தும் புரியாமலும் பல தகிடுதித்தங்களை பழகிக்கொடுத்த குரு அவன்!

அருகிலிருக்கும் மலையடிப்பட்டியில் ஒரு தொடக்கப்பள்ளி. அதில் அட்டெண்டென்ஸில் பெயரே சேர்க்காமல் நான்கு வயதில் கொண்டுபோய் விட்டுவிட்டார்கள். (அந்த அளவுக்கு வீட்டில் ரவுசு !)

பள்ளிக்கு எப்போதும் நடந்து செல்லவேண்டும். இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். மெயின்ரோட்டுக்கு வந்துவிட்டால், தொற்றிக்கொள்ள மாட்டுவண்டி கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.! அப்பா வாங்கிக்கொடுத்த இண்டாலியம் பெட்டியில் 'டப டப' என தட்டிக்கொண்டே மாட்டுவண்டிக்காரரிடம் ஏதாவது பேசிச்செல்வதும், அதன் பின்பக்கம் நீட்டிக்கொண்டிருக்கும் குறுக்குக்கட்டையில் தொங்கிக்கொண்டே அதனுடன் நகர்வதும் ஆஹா...அனுபவிக்கணும் பாஸ்!

அது ஒற்றை ஆசிரியர் கொண்ட பள்ளி..முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை அவர்தான் கிளாஸ் எடுப்பார். அவர் எடுக்கும் வகுப்பையே எல்லோரும் பார்த்துக்கொண்டிருப்போம். வெகு நாட்களில் அவர் வந்து, வேட்டியின் நுனியை முறுக்கி..மூக்கில் விட்டு ' ஹச் ' எனத்தும்மிவிட்டு... ஒரு குச்சியை விட்டு காது குடைந்து கொண்டே தூங்குவார். அல்லது கையில் வைத்திருக்கும் பாக்கெட் ரேடியோவில் ஏதோ ஒன்று கேட்டுக்கொண்டிருப்பார். இப்படியாகப் போய்க்கொண்டிருந்த அவரது இன்பமயமான வாழ்க்கையில் நான் இழுத்துவிட்ட சிக்கல் ஒன்று....

(தொடரும் போடாம சுரேகா பதிவான்னு கேக்குறாங்கப்பா!

..அதனால்..தொடரும்.!)

ஓடுமீன் ஓட...

ஒரு நல்ல களம்....
முழுமையாக ஏழு நாட்கள்.
நீங்கள் எது எழுதினாலும் முகப்பில் வரும்.
கொஞ்சம் அதிகமாக பதிவர்களின் கவனம் பெறும்.
உங்கள் எழுத்தின் பிம்பம் பெரிதாகவோ சிறிதாகவோ ஆகும்.
இப்படி படிப்படியான காரணங்களுடன் தமிழ்மண நட்சத்திர வாய்ப்பு!

நண்பர்களும், நலம்விரும்பிகளும், இமாலய திறமைசாலிகளும், பரந்துபட்ட வாசிப்பு தாகம் மிக்கவர்களும் நிறைந்த சபையில் ஒரு ஓரமாகக் கைகட்டி நிற்கும் எனக்கு திடீரென்று மேடையில் தோன்றும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஏற்படும் உதறலுடன் தான் இதை அணுகுகிறேன்.

சில விஷயங்களை எழுதவேண்டும் என நினைப்பேன்.
இல்லை..இதை தமிழ்மண நட்சத்திர வாரத்தில் எழுதிக்கொள்ளலாம் என சேர்த்துவைப்பேன்.
( ஒரு அசட்டு நம்பிக்கைதான்....என்னையும் நட்சத்திரமாக்கிடுவாங்கன்னு! ) :-)

எழுதத்தூண்டிய இயற்கைக்கும், சமூகத்துக்கும், நட்புக்கும், தமிழ்மணத்துக்கும் நன்றியுடன்....
உறுமீனுக்காக வாடி நின்றிருந்து... எழுத நினைத்த பதிவுகளை எழுதுகிறேன்.
(ரொம்ப பெரிசா எதிர்பார்க்காதீங்க! சட்டியில இருக்குறதுதான் வரும் :) )

ஒரு முன்னோட்டமாக.. இந்தவாரம் வரப்போகும் பதிவுகள் !

கலியாப்பட்டி !
போட்டுக்கொடுத்த பொடிப்பையன்!
எதிர்(ரி)வினை
கறம்பக்குடி!
மறைக்கிறான் சார்!
சாராள் இல்லம்
இலுப்பூர்!
கைகொடுக்கும் கை
ஞானாலயா
அறந்தாங்கி!
தென்காசி!
புதுக்கோட்டை!உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் என் உளம்கனிந்த நன்றிகள்!

Wednesday, February 10, 2010

ஆணாதிக்க மிச்சம்!பட்டுப்பாவாடையுடன்
விளையாடிய போதும்,
தாவணியில்
தாவி வந்த போதும்,
கணவனின் கைப்பிடித்து
சுற்றி வந்த போதும்
ஆனந்தமாய்ப்
பார்த்துக்கொண்டு
அங்கேயே நின்றாய்!
அவன் போய்ச்
சேர்ந்ததற்கும்,
அடுத்தடுத்து
நடந்ததற்கும்
நானும் வந்து
உன்னுடன்
அடுத்த தூணில்
நின்றிருக்கலாம்!

இது ஆணாதிக்க உச்சம்!
நான் அதன் மிச்சம்!

டிஸ்கி: இது நான் நேற்று ஒரு பிரபலமான கோவிலில் எடுத்த புகைப்படம்.
அந்தப் பாட்டியின் முகத்தை மறைக்கலாமென்று பார்த்தேன். ஆனால்
செய்யவில்லை.இதைப்பார்த்து யாரவது அவள் சந்ததியிடம் சொல்லி, இனியாவது அவளை இயல்பான பெண்ணாக ஆக்குவார்கள் என்ற நப்பாசையுடன்...

Monday, February 8, 2010

மீண்டும் நரி!காலையிலிருந்து
கிடைக்காத
உணவுக்காக
காடெங்கும் தேடிவிட்டு
நிழலுக்கு நின்றிருந்த
மரத்துக்கு
காகமொன்று வந்தது.

வாயினில் வடை!
பாடச்சொல்லி நான் கேட்க,
வடை எனக்கு அருகில்விழ,
தயவு செய்து கொடுத்துவிடு!
கேட்ட காகத்திடம்
வந்து எடுத்துக்கொள் என்றேன்.
கீழே வந்த காகத்தை
வினாடி பிசகாமல்
அடித்து உண்டேன்.
எவன் தின்பான் வடையை?
அதுவும் காகத்தின் எச்சிலை!

டிஸ்கி:
கொஞ்ச நாளைக்கு முன்னாடி கதையா அரைச்ச மாவை,
கவிதையா அரைச்சுப்பாத்தேன்...ஹி..ஹி..

Tuesday, February 2, 2010

பரிசலுக்கும்...கேபிளுக்கும்....!!

சூப்பரா ஆரம்பிச்சிருக்கு பிப்ரவரி!
எனக்கு பல வித மகிழ்ச்சிகள்!
அதுக்கு பல காரணங்கள்!


முதல் காரணம், !
நண்பர்கள் இருவரின் புத்தகங்கள் 'காதலர் தினமன்று' ரிலீஸ்!


இதுதான் புத்தகங்கள்!

மற்ற விபரங்களுக்கு....இங்கே போய் கட்டாயம் பாருங்க!

புத்தக ஆசிரியர்கள் பரிசல் மற்றும் கேபிளுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

இது..
பரிசலுக்கும்..கேபிளுக்கும் எல்லோரும் வாழ்த்துச்சொல்லும் நேரம்!
கூட்டம் போடாம வரிசையா வந்து வாழ்த்திட்டுப்போங்க! :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...