Sunday, September 30, 2012

வலைப்பதிவர் திருவிழா – வாசற்படி நன்மைகள் # 2
பதிவர் சந்திப்பு நடந்தேறி, அதைப்பற்றிய நேர், எதிர் விவாதங்களும் சூடேறி, கொதித்து, அடங்கி் மீண்டும் அவரவர்கள் அடுத்த வேலைகளைப் பார்க்கச் சென்றுகொண்டிருக்கும் இந்நேரத்தில்..எனது அடுத்த பாகம்…

இந்தப் பதிவர் சமூகத்தை சமூகமும், ஊடகங்களும் ஒரு ஓரப்பார்வை பார்த்தபடிதான் உள்ளன. பதிவுலகத்துக்கென்று ஒரு சில பக்கங்களை ஒதுக்க ஆரம்பித்துவிட்டன. ஒரு புத்திசாலிகளின் ஒருங்கிணைப்பாகத்தான் பார்க்கின்றன. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை கணிப்பொறியில் வேலை பார்த்துக்கொண்டே , அதிலேயே கருத்துக்களையும், படைப்புகளையும் எழுதுபவர்கள் மிகவும் அறிவாளிகளாகவும், சமூக சிந்தனை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது அவர்களது கணிப்பு..!! பாவம்! J

உண்மையில் நம்மில் பலர், அப்படித்தான் இருக்கிறார்கள். சமூக அக்கறையுடனும், நியாயமான படைப்புகளுடனும் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், எதிர்வினைகளாலும், எதிரிவினைகளாலுமே காலம் கடத்தும் பதிவுகளையும் மற்றவர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். ஆனால் அப்படிப்பட்ட பதிவுகளை விலக்கிவிட்டுப் பார்த்தால், வலைப்பூக்கள் மிகப்பெரிய ஊடகமாக மிளிர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

கடந்த ஒரு மாதத்தில் எனக்குத்தெரிந்து கிட்டத்தட்ட  4500 பதிவுகள் வந்திருப்பதை கவனித்தேன். சராசரியாக தினசரி 150 பதிவுகள் ! ஒரு சிலர் தினம் எழுதுகிறார்கள். சிலர் ஒரு நாளிலேயே 2 பதிவுகள்!  சிலர் வாராவாரம் ! இதில் மாதம் 3,4 பதிவுகள் மட்டுமே எழுதும் என் போன்றவர்களும் அடக்கம்.! கண்டிப்பாக இது இன்னும் அதிகமாகத்தான் இருக்கும். ஆக ஒரே நாளில் 150 தனிக் கட்டுரைகள். அதில், அரசியல், சினிமா, நூல், சமூகம், அனுபவம் , சரித்திரம், ஆன்மீகம், குடும்பம், சமையல், தொழில்நுட்பம், இலக்கியம், படைப்புகள் என்று எல்லாமே அடக்கம். ஆக ஒரு பதிவுக்கு 2 பக்கங்கள் என்று ஒதுக்கினாலும், ஒவ்வொரு நாளும் சுமார் 300 பக்கங்கள் கொண்ட ஒரு இணைய இதழை நாமெல்லாம் சேர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறோம். அந்த இணைய இதழை எத்தனை பேர் புரட்டிப்பார்க்கிறார்கள் என்ற கணக்கு வழக்குக்குள் எல்லாம் நான் போகவில்லை. ஆனால், நம்மில் ஒவ்வொரு நாளும் 150 எழுத்தாளர்கள் வேலை பார்த்து இந்த கட்டமைப்பின் சுழற்சியை மேம்படுத்திக்கொண்டிருக்கிறோம்.


இதில் பல்வேறு விதமான துறை வல்லுநர்கள் சர்வசாதாரணமாக எழுதிக் குவிக்கிறார்கள். சில சிறப்பான தகவல்கள் நம்மிடையே அநாயாசமாகக் கடந்துபோகின்றன. ஆக மொத்தத்தில், இதுபோன்ற ஒரு அற்புத உலகம் கிடைத்திருப்பது நமது தலைமுறைக்கு ஒரு வரமென்றே திண்ணமாக எண்ணுகிறேன்.


அதையும் ஒரு குழுமமாக்க முயற்சித்து ஓரளவுக்கு வெற்றியும் பெற்றாகிவிட்டது. எந்தவொரு தனிமனிதனும் செய்யமுடியாததை ஒரு குழுமம் செய்யலாம் என்றுதான் சமூகம் என்ற கட்டமைப்பிலேயே சங்கங்கள், இயக்கங்கள், கட்சிகள் என்று வளர்ந்து அது அரசியலில் சங்கமித்து ஒரு தேசத்தையே நிர்வகிக்கும் நிலையை அடைந்திருக்கிறது. ஆகவே இந்தப் பதிவர் சமூகமும் குழுமமாக உருவெடுப்பது நன்மை பயக்கக்கூடியதுதான். ஆனால், யாருக்கு? எதற்கு? என்பதில்தான் ஆழமாக சிந்திக்கவேண்டியுள்ளது. அதை சிறப்பாகப் புரிந்துகொண்டால், இந்தப் பதிவர் குழுமம் மிகச்சிறப்பாகச் செயல்பட எல்லா வாய்ப்புகளும் வாசற்படியில் நிற்கின்றன.


நமது பதிவர் சமூகமும் என்னன்னவெல்லாம் செய்யலாம் என்று சிந்தித்தபோது கிடைத்த யோசனைகள் இவை : இவை தவிர , இதைவிட சிறந்த யோசனைகள் எல்லா வலைப்பதிவரிடமும் கிடைக்கும் என்பதிலும் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. முதலில்.. என்னமாதிரியான விஷயங்களைக் கையில் எடுத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.


தனிமனித வளர்ச்சி, சமூக வளர்ச்சி, இவை இரண்டுதான் இந்தக்குழுமத்தால் சாதிக்க முடிந்ததாக அமையும்.


முதலில்.. தனிமனித வளர்ச்சி:


ஒவ்வொரு பதிவரும் ஏதாவது ஒரு வேலையில் இருக்கலாம். தொழில் செய்யலாம். கலை வல்லுநராக இருக்கலாம். அவர்கள் தங்கள் வேலையில் என்னன்ன வளர்ச்சியை எட்டலாம் என்று முறையாக ஏற்பாடு செய்து பயிலரங்கங்கள் வைக்கவேண்டும்.

பதிவர்களின் Database ஒன்று தெளிவாக உருவாக்கி, அவர்களில் முகம்காட்ட விரும்புபவர்களிடம் முழுத்தகவல்களும் வாங்கி ஒரு கேள்வி பதில் தளம் உருவாக்கவேண்டும். எனக்கு ஒரு மைக்ரோவேவ் அவன் அல்லது நீர் சுத்திகரிப்பான் வாங்கவேண்டும் என்ற எண்ணம் வரும்போது அதைப்பற்றி விபரம் சொல்ல ஒரு பதிவரை நான் அணுகும் வகையில் குழுமத்திடம் தகவல்கள் இருக்கவேண்டும். அந்தத்தளத்தில் என் கேள்விக்கு அந்தப் பதிவரிடம் பதில் வாங்கிப் போடவேண்டும். இது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்குப் பிறகு மிகவும் பயனுள்ள தளமாக மாற 100 சதவீத வாய்ப்பு உள்ளது.

கேள்விகளை ஒரு வலைப்பூவுக்கு அனுப்பினால், பதிலை குழுமமே வாங்கிப்போடவேண்டும். அல்லது புதிய வல்லுநர் ஒருவர் தன்னார்வத்துடன் வந்து பதில் போடவேண்டும்.

தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் பதிவர் சந்திப்புகளை குழுமம் ஊக்குவிக்கவேண்டும். அப்போது எந்தந்த ஊரில் எத்தனை பதிவர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். (அதுவே தீர்மானமான தகவல் அல்ல! ) அதன்மூலம் அந்தந்த ஊர்களுக்குச் செல்லும்போது பதிவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளலாம். அந்த ஊரில் தனக்கு நடைபெற வேண்டிய வேலையில் உதவிகள் பெற்றுக்கொள்ளலாம். இது இப்போது தனித்தனியாக பழகிய பதிவர்களுக்கிடையே நடந்துகொண்டிருக்கிறது. இதுவே ஒரு குழுமத்தின் குடையின் கீழ் வந்தால் இன்னும் சிறப்பாகச் செயல்படும். (இதில் கடன், கொடுக்கல் வாங்கல்களுக்கு கம்பெனி பொறுப்பாகாது எனக்கொள்க!)

இன்னும் தனிமனித வளர்ச்சியில் சொல்லவேண்டியது நிறைய இருக்கிறது.. அடுத்த பாகத்தில் பார்ப்போமே..

Thursday, September 27, 2012

அகவை 70ல் அப்பா!


         எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் அவரை நான் பார்த்துவருகிறேன். ஒரு சாதாரணக் குடும்பத்தில் இரண்டு அண்ணன்கள், இரண்டு தங்கைகள், ஒரு தம்பியுடன் பிறந்து ஒரு அரிசி மில்லில் வேலைபார்த்துக்கொண்டே படித்து, பின்னர் பள்ளிக்கல்வியை மிகுந்த சிரமத்துக்கிடையே முடித்து, ஆசிரியக்கல்வியும் கற்று, ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றத்தொடங்கி, பின்னர் மாநில அரசின் ஊரக வளர்ச்சித்துறையில் கிராமசேவக் எனப்படும் பணியில் நிலைபெற்று வாழத்துவங்கி ஊராட்சி ஆணையராக பணி ஓய்வு பெற்றவர் அவர்.!

     என்னிடம் அதிகம் பேசுபவரில்லை. நிறைய அறிவுரைகளும் சொல்பவரில்லை. நான் என்ன செய்யக்கூடாtது என்று பட்டும் படாமல் சொல்லிச் செல்வார். சிறுவயதில் இவர் எனக்கு சிம்ம சொப்பனம்.

அரசாங்க ஊழியராய் இருந்துகொண்டு லஞ்சம் வாங்காமல் இருந்தவர். ஒருமுறை லஞ்சம் கொடுக்க வந்த ஆளை அடிக்கச்சென்றவர்.

அந்த மனிதரிடமிருந்த நேர்மைதான் என்னை மிகவும் வியப்பிலாழ்த்தியது. எந்தக்காலகட்டத்திலும் அவர் நேர்மையை விட்டுக்கொடுத்து நான் பார்த்ததே இல்லை. தவறு யார் செய்திருந்தாலும், தைரியமாக தட்டிக்கேட்கும் உறுதி கொண்ட மனிதர்!

எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதன் ஆழம் வரை சென்று நன்கு கற்றறிந்து , பின்னர் விவாதிக்க ஆரம்பித்தால், மாற்றுக்கருத்துச் சொன்னவரை மண்டியிட வைத்துவிடுவார்.

பிறருக்கு உதவுவதில் இவரைப் பார்த்து அதிசயித்திருக்கிறேன்.

“எந்த வீட்டு சந்தோஷத்துல கலந்துக்கலைன்னாலும் பிரச்னை இல்லை. அவங்க சங்கடத்துல கட்டாயம் கலந்துக்கணும்! அவங்களுக்கு கஷ்டம்னு வந்தா உதவ நாம் இருக்கோம்னு நினைக்கணும்!” என்று சொல்லி அதன்படியே செய்து காட்டியவர்!

அவரது சகோதர, சகோதரிகளும் அவரிடம் அதீத அன்புகாட்டுபவர்களாக அமைந்ததுதான் இன்னும் சிறப்பு ! இன்றுவரை அவர்கள் 6 பேரின் அன்பு மாறாமல், மிகவும் ஒற்றுமையாக இருப்பதைக் கண்டு வியந்துகொண்டிருக்கிறேன்.

தனது பெற்றோரிடம் மிகவும் அன்புகாட்டினார். பெற்றோருக்காக தனது 10 ஆண்டுகால பணிமூப்பை விட்டுக்கொடுத்துவிட்டு வந்தார்.

இரவு  9 மணிக்கு வீடு திரும்புவார். தந்தைக்கு அன்றிரவு உண்ண வாழைப்பழம் இல்லையென்றால், உடனே சென்று வாங்கித்தந்துவிட்டுத்தான் தனக்கான உணவை உண்ணுவார்.

காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, நடமாட இயலாமல் இருந்த 85 வயதான தாய்க்கு , தானே ஒரு தாயாக மாறி எல்லா உதவிகளையும் ஒரு குழந்தைக்குச் செய்வதுபோல் செய்தவர்.


செல்வம் பெரிதாக இல்லையென்றாலும், செல்வந்தர் மனநிலை என்னவென்று செயலில் காட்டியவர். வீட்டில் சில்லறைக்கென்று ஒரு சின்ன டப்பா, பணத்துக்கென்று ஒரு பெரிய டப்பா வைத்து யார் வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதற்கான கணக்கு மட்டும் எழுதினால் போதும் என்று, பொருளாதார சுதந்திரத்தை மிகவும் அற்புதமாக உணர்த்திக்காட்டியவர்.! இன்றுவரை தான் செய்த செலவுகளுக்குக் கணக்கு எழுதிக்கொண்டிருப்பவர். 88ம் வருடம் திருச்சியிலிருந்து சென்னை வர எவ்வளவு செலவானதென்றும், மற்ற அத்தியாவசியப்பொருட்களின் விலைவாசி பற்றியும் இவரது கணக்குப்புத்தககம் கதைகளாய்ச் சொல்லும்.

50 ரூபாய் செலவாகும் இடத்துக்கு 100 ரூபாய் எடுத்துச்சென்றால் தவறில்லை. 49 ரூபாய் எடுத்துச்செல்வது முட்டாள்தனம் என்று தெளிவாகச் சொல்லுவார். அவர் செலவுக்கு அஞ்சி நான் பார்த்ததே இல்லை. தனக்காகப் பிறர் செலவழிப்பதை ஏற்றுக்கொள்ளாதவர்.

அவரது எழுத்து மிகவும் அழகாக இருக்கும். தன்னுடைய அலுவலகக் குறிப்பை , ஒரு சிற்பியின் நேர்த்தியுடன் கையாள்வதைப்பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன். அவரது அலுவல் நாட்களில் அதிகாலை 6 மணிக்குக் கிளம்பிச்சென்று, இரவு  11 மணிக்குத்தான் வீடு திரும்புவார்.

மிகுந்த கவனம் வாய்ந்தவர். ’
பொருட்களை நேர்த்தியாக வைத்துக்கொள்ளத்தெரிந்தவர்
காலத்தை சிறப்பாக நிர்வகிப்பவர்.
ஓவியம் தெரிந்தவர்!
நாடக நடிகர்!
வேலை பார்த்த ஊரில் சிறியதாக மெஸ் நடத்தியவர்
நிறைய பயணம் செய்திருக்கிறார். தமிழகத்தின் அனைத்து ஊர்களைப்பற்றியும் நிறைய தகவல் தெரிந்தவர்.
சகோதர, சகோதரிகளை மிகவும்  நேசிப்பவர்!
உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புபவர்


தனது கருத்தை ஆழமாகவும், அழுத்தமாகவும், கொஞ்சம் ஆக்ரோஷமாகவும் வைக்கத்தெரிந்தவர்..

மகனை எந்த வயதுவரை கட்டுப்படுத்தலாம். எந்த வயதுக்குமே சுதந்திரமாக விடலாம் என்று தெளிவாகத் தெரிந்தவர்

இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அத்தனைக்கும் அவர்தான் காரணம்.!

நான் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு வந்து வீட்டில் சொன்னபோது, மிகவும் நிதானமாக “ இந்த வயசுல நல்லா பிரயாணம் பண்ணி நாலு எடத்தைப் பாத்துட்டு வா! “ என்று வித்தியாசமாக வாழ்த்தியவர்.

திருமண வயதில், ‘ நீ ஏதாவது பொண்ணை பாத்து வச்சிருக்கியா? சொல்லுடா! என்று காதலுக்கு மரியாதையாகக் கேட்டவர்.

நான் எது செய்வதாக இருந்தாலும். தடை சொல்லாமல், ‘மகன் செய்தால் சரியாகத்தான் இருக்கும்’ என்று என்னை நம்பி அப்படியே என்னை ஏற்றுக்கொண்டிருப்பவர்..!!

என் குழந்தைகளிடம் பேரன்பு கொண்டிருப்பவர்..! தாத்தாவிடம் சொன்னால் கிடைத்துவிடும் என்று அவர்களை நம்பவைத்திருப்பவர்!


இன்று என்னிடம் இருக்கும் அத்துனை நற்குணங்களுக்கும் அவர்தான் பொறுப்பு!

அவருக்கு நேற்று அகவை 70 நிறைவடைந்து 71ல் அடியெடுத்துவைத்தார்.
என்னால் முடிந்த வரையில், சிறியதும் பெரியதுமாக 70 பொருட்கள் வாங்கி அவருக்குப் பரிசளித்தேன். பெருமையாக அனைவருக்கும் தொலைபேசிச் சொன்னார் !!


சிறுவயதில் அதிக கண்டிப்பு…!
கொஞ்சம் வளர்ந்த பருவத்த்தில் மிதமான கண்டிப்பு!
கல்லூரிக்குச் செல்லும்போது லேசான மேற்பார்வை!
வேலைக்குச் சென்றபின் தூரத்திலிருந்து ரசிப்பு!
நிறுவனம் நடத்தும்போது உற்றாரிடம் பெருமை!
இப்போது செய்யும் ஒவ்வொரு செயலிலும் தனது வாழ்த்துக்களைச் சொல்லி ஊக்குவித்தல் என..
ஒரு சிறப்பான ஊட்டச்சத்து உணவுபோல் இருக்கும் இந்த அற்புத மனிதரைத்  தந்தையாகப் பெற்றதுதான்  என் பேறு!

Saturday, September 1, 2012

முகமூடி.. – பாத்துட்டோம்ல..!


மிஷ்கின் இயக்கத்தில் முகமூடி திரைப்படத்துக்கான டிக்கெட்டை’ அன்புடன் கொடுத்த ஒரு திரையுலகப் பிரபலத்துக்கு எனது நன்றி..!

12 மணி காட்சிக்குச் சென்றேன். கமலா தியேட்டர் நிரம்பி வழிந்தது. ‘நான்’ திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள் நிறைய இருப்பதாகப் பேசிக்கொண்டார்கள்.

நான் இணைய ஆதாரத்தைக் காட்ட, எனக்கு ஒரு டிக்கெட் கொடுத்தார்கள். என்னவோ நாந்தான் முகமூடி போல ஒவ்வொருவரும் நாலுமுறை டிக்கட்டைப் பார்த்து செக் செய்தார்கள்.

போய் இருக்கையில் அமர்ந்தேன். படம் பார்த்தேன்.

வில்லனின் பெயரும், ஜீவாவின் அப்பாவின் பெயரும் நரேன் என்று இருப்பதை இரசித்தேன். சிலருக்கு அப்பாதான் வில்லனே..!!

 எனது நண்பரும், மிஷ்கினின் இணை இயக்குநருமான தெய்வா கை நிறைய பாட்டிலை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராகக் கொடுத்துக்கொண்டே வந்து கடைசியில் ஜீவாவுக்கும் ஒரு பாட்டில் கொடுத்ததை இரசித்தேன்.

போதிதர்மர் கற்றுக்கொடுத்ததை, ஜீவா நினைவுபடுத்திக்கொண்டிருந்ததை இரசித்தேன்.

நரேன் வைத்திருந்த ஹார்டுவேர் கடையையும் அதன் உபதளவாடங்களையும் இரசித்தேன்.

அம்பாசிடர் வைத்திருப்பவர்கள்தான் ரோட்டில் வாழைப்பழத்தோலை போடுவார்கள் என்ற கூற்றை இரசித்தேன்.

அன்புநிறை மனிதரும், அதீத நூலறிவும் கொண்டவரான சச்சிதானந்தம் அய்யாவை இரசித்தேன்.

பன்னீர்சோடா குடிக்குமிடத்தில் இருந்த ட்யூட்களை இரசித்தேன்.

குங்ஃபூ பள்ளியில் படிப்பவர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள் என்ற பொதுமையை இரசித்தேன்.

இடைவேளையில் வந்திருந்தவர்களை இரசித்தேன்.  


இடைவேளை வரை சூப்பர் என்று டிவிட்டினேன். அதை முகப்புத்தகத்தில் லைக்கியவர்களை இரசித்தேன்.


என் அருகில் அமர்ந்திருந்தவர் ஆண்ட்ராய்டில் ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாடியதை இரசித்தேன்.

ஒரு சண்டைக்காட்சியில்… செல்வாதான் சூர்யா… நரேந்தான் டாங் லீ என்று மக்கள் ஏழாம் அறிவை இன்னும் நினைவூட்டியதை இரசித்தேன்.

எனக்கு பின்பக்கம் இருந்த ஜோடி முகமூடியே இல்லாமல் இருந்ததை இரசித்தேன். ( அந்தப்பையன் எனக்குத் தெரிந்தவரின் மகன் என்பதையும் சேர்த்து..)

இடைவேளைக்குப்பிறகு ஏ.சியில் வந்த தூக்கத்தையும் இரசித்தேன்.

படம் முடிந்து வெளியில் வந்தேன். ‘நான்’ திரைப்படம் ஃபுல் என்றார்கள். மிகவும் இரசித்தேன்.
பதிவுலகில் இதுபோன்று முகமூடி அணிந்துகொண்டிருந்துவிட்டு, இப்போதுதான் முகத்தைக் காட்டியிருப்பவர் ‘ சேட்டைக்காரன் அண்ணன் அவர்கள்.

அவர் பதிவர் சந்திப்பில் பேசும்போது. நான் தமிழ் இலக்கியத்துக்கு சேவை செய்கிறேன். ஏனெனில் நான் கவிதை எழுதுவதில்லை என்று சொன்னதை இரசித்தேன்.

அவருக்குக் கிடைத்த வரவேற்ப்பைப் பார்த்து, முகமூடி என்பது முக்கியமில்லை. நாம் அதைப்போட்டுக்கொண்டு என்ன செய்கிறோம் என்பது முக்கியம் என்பதை உணர்ந்தேன்

இப்போதும் பதிவுலகில் முகமூடியோடு திரியும் வவ்வால் வெளிவரும் நாளை எதிர்பார்க்கிறேன்..
.
முகமூடி படத்தைப் பற்றி நான் விமர்சிக்கவில்லை..நான் இரசித்தவைகளை மட்டுமே கூறியிருக்கிறேன். மிஷ்கினுக்கும் திரை சறுக்கும் அவ்வளவுதான்...ஆனால் மிஷ்கின் திறமைசாலிதான்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...