Sunday, March 27, 2011

சித்தப்பா
சிறுவயதில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு உறவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அவர்கள் நடை,உடை, பாவனைகள் எல்லாவற்றையும் கவனித்து அதைப்போல நடக்க நினைப்போம் அல்லது அதைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம்.அப்படி ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த மாமா, மூத்த அண்ணன், சித்தப்பா போன்ற உறவுகள் அமைந்திருக்கும்.

அப்படி எனக்கு அமைந்த உறவுதான் அவர்! என் அப்பாவின் கடைசித்தம்பி! என் அப்பாவுக்கு அடுத்து அவர்தான் பையன் என்பதால், என் பெரியப்பா மகன்களுக்கு இரண்டு, மூன்று சித்தப்பாக்கள் இருந்தபோதும், எனக்கு மட்டும் ஒரே ஒரு சித்தப்பாதான்! ஆக, மற்றவர்கள் அவரை ’சின்ன சித்தப்பா’ என்று அழைக்கும்போது, நான் மட்டும் சித்தப்பா என்றே அழைப்பேன்.
     
எனக்கு விபரம் தெரிந்து அவரை நான் பார்த்தது நாங்கள் இருந்த கலியாப்பட்டி என்ற ஊருக்கு அவர் வந்துசென்றபோதுதான்! ஆனால் அப்போது நான் மிகவும் சிறுவன்! முகத்தையோ நடவடிக்கைகளையோ அவ்வளவாக கவனிக்கவில்லை. பின்னர் நான் மூன்றாவது படிக்கும்போது, அவருக்குத் திருமணம் என்ற பேச்சுக்கள் வந்தபோதுதான் அவரை நான் கவனிக்க ஆரம்பித்தேன்.

சொந்த ஊரான கறம்பக்குடிக்கு செல்லும்போது பார்த்தால், கல்யாண மாப்பிள்ளை மீசை இல்லாமல், இளமையாக, கமலஹாசன்போல் தூக்கி வாரிக்கொண்டு, ,எல்லோரிடமும் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தார். அவரது உண்மைப்பெயர் நடராஜன். ஆனால் எல்லோரும் அவரை அம்பி என்றே அழைத்துப்பழகினர். அவரது ஒவ்வொரு பேச்சின் முடிவிலும் ஒரு நகைச்சுவை கலந்த கிண்டல் தொனித்தது என்னை ஈர்த்திருக்கலாம்..

அதற்குப்பிறகு அவரை கொஞ்சம் ஆழமாக கவனிக்க ஆரம்பித்தேன். பின்னர் அவர்தான் எங்கள் குடும்பத்தின் முதல் மீசை வைத்த மனிதராகவும் ஆனார். திருமணத்துக்குப்பிறகு கோயம்புத்தூரில் வேலைக்காக செட்டிலானவர், மீண்டும் கறம்பக்குடிக்கே வந்தார். அங்கிருந்து புதுக்கோட்டையில் உள்ள அவரது வங்கிக்கு சென்றுவரத்தொடங்கினார்.

காலையில் சரியாக 7:25 வரும் RSR ஐப்பிடிக்க பஸ் ஸ்டாப்புக்கு சென்றுவிடுவார். ஒவ்வொரு நாள் இரவு உணவும் எங்கள் அனைவருடனும் சேர்ந்து உண்பார். அன்று வங்கியில், பேருந்தில் நடந்த சுவாரஸ்யமான விஷங்களை அழகாகச் சொல்லுவார். புதிய படங்களைப்பற்றி தகவல்கள் சொல்லுவார். வார இறுதியில் அவரது குடும்பம் இருந்த கோவைக்குச் சென்றுவிடுவார்.

                ஆனால் சில வாரங்களில், சனிக்கிழமைகளில் மாலை கொஞ்சம் சீக்கிரமே கறம்பக்குடி வீட்டுக்கு வந்து விடுவார். வந்தவுடன் முகம் கழுவிவிட்டு , அந்த ஊரில் இருக்கும் ஒரே திரையரங்கமான முருகனில் எந்தப்படம் போட்டிருந்தாலும் எங்களைக்கூட்டிக்கொண்டு சென்றுவிடுவார். பின்னர் ஞாயிறு கொஞ்சம் தாமதமாக எழுந்திருப்பார். டிபன் சாப்பிட்டுவிட்டு, துணிகளைத் துவைப்பார். தன் துணிகளை யாரையும் துவைக்க விடமாட்டார். பின்னர் குளித்துவிட்டு வந்து மதிய சாப்பாடு. சாப்பிட்டுவிட்டு படுத்தால், மிக நீண்ட தூக்கம். அப்போது மட்டும் வீடடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.யாரும் சத்தம்போடக்கூடாது. அப்படியும் எங்கள் குடும்பம், ரேடியோவில் மூன்றுமணி நாடகத்தை கேட்டுவிட்டுத்தான் ஓயும்.

அவர் மதியத்தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டார் என்பது குப்புறப்படுத்துக்கொண்டு பின்னங்காலை ஆட்டிக்கொண்டிருப்பதிலிருந்து கண்டுகொள்ளலாம். மாலை காபிக்குப்பிறகு, வீட்டின் உள் திண்ணையில் அயன்பாக்ஸை வைத்து, வேட்டியை மடித்துக்கட்டி, படியில் அமர்ந்துகொண்டு தன் துணிகளை அயன் செய்வார். (அவர் கறம்பக்குடியை விட்டுச்சென்றவுடன் நான் கல்லூரியில் படிக்கும்போது, அதே இடத்தில் வைத்துத்தான் என் துணிகளை அயன் செய்வேன்.)    சில நாட்களில் ஞாயிறு படம் உண்டு. விடுமுறையை பயனுள்ளதாகவும், ரசனையுடனும் கழிக்க வேண்டும் என இவரிடம்தான் கற்றுக்கொண்டேன்


                வெள்ளிக்கிழமையானால், குமுதத்துடன் வீட்டுக்கு வருவார். அதை ஞாயிற்றுக்கிழமை வரை வைத்திருந்து படிப்பார். நான் 7வது படிக்கும்போதே பத்திரிகைகள் படிப்பதில் அதிக ஆர்வம் இருந்ததால், அவர் வருகிறாரோ இல்லையோ, அவர் பையிலிருந்து வெளிவரும் குமுதத்துக்காக காத்திருப்பேன். அவரும் என் ஆர்வத்தை ஆட்டம் காணவைத்து வெளியிலெடுத்துவிட்டு 10 தோப்புக்கரணம் போட்டுவிட்டு வாங்கிக்கோ என்பார். சொன்னதைச் செய்துவிட்டு வாங்கிச்சென்றுவிடுவேன்.

                சமயலறையில், அம்மிக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, மிக்ஸியை வீட்டுக்குள் கொண்டுவந்தவர் அவர்தான்! அதேபோல்தான் குக்கரும்!

                வீட்டில் முதன்முதலில் , டேப் ரெக்கார்டர் வாங்கி அதில் எங்கள் அனைவரது குரலையும் பதிந்து காட்டியவர் அவர்தான்!

      புதிய தொலைக்காட்சியை வாங்கி, அதில் வியாழன் இரவுகளில் ‘World This Week’ ம், வெள்ளி இரவுகளில் ஆங்கிலப்படங்களும் பார்க்கவைத்தவர் இவர்தான்! என்னுடைய திரையுலகப் பிரவேசத்தில் இவருக்கும் ஒரு பங்கு நிச்சயம் உண்டு!
     
      ஒருநாள் என்னையும், என் அத்தைமகன் கண்ணனையும், பட்டுக்கோட்டை சென்று முழுநாளும் படம்பார்த்துவிட்டு வரச்சொல்லி பணம் கொடுத்தனுப்பினார். அன்று நாங்கள் தொடர்ச்சியாக அபூர்வ சகோதரர்கள், சிவா, நினைவுச்சின்னம்  ஆகிய மூன்று படங்கள் பார்த்தோம்..

  எங்கள் பாட்டியைக்கண்டால், எங்கள் குடும்பமே பயந்து நடுங்கும். இவர்மட்டும் சிங்கத்திடம் விளையாடும் முயலைப்போல, அவரை மிகவும் கிண்டல் செய்து , அவரையும் சிரிக்கவைத்துவிடுவார். இவர்தான் பாட்டிக்கு கடைசிப்பிள்ளை என்பதால், பாட்டிக்கும் இவர்மீது பிரியம் அதிகம்.

  என் வாழ்வின்மீது அக்கறையுடன் இருப்பார். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஒரு தவறான காரணத்துக்காக என்னை ஒரு ஆசிரியர் அடித்துவிட்டார் என்பதற்காக, இவர் வீட்டுக்கு வந்தவுடனேயே, என் அப்பாவை அழைத்துக்கொண்டு பள்ளி முதல்வரைச் சந்தித்து அந்த ஆசிரியரை எங்கள் வீட்டுக்கு வரவைத்து மன்னிப்பும் கேட்க வைத்தார்.

  தேர்வு சமயங்களில், அவருக்கும் மார்ச் மாத வங்கி வேலைகள் இருக்கும். இரவு தாமதமாகத்தான் வருவார். இருந்தபோதும், நான் அன்று எழுதிய தேர்வைப்பற்றி விசாரித்துவிட்டுத்தான் தூங்குவார். அண்ணன் மகன்தானே என்ற மேம்போக்கு எண்ணம் இல்லாமல் உரிமை எடுத்துக்கொள்ளுவார்.

  இன்று என் பேச்சில் தொனிக்கும் கிண்டலுக்கு இவர்தான் மூலகாரணமாக இருந்திருப்பார். நகைச்சுவை உணர்ச்சி நிறைந்த மனிதர். சத்தம்போட்டு சிரிக்கமாட்டார். ஆனால் சிரிக்க ஆரம்பித்தால், கண்ணீர் வரும்வரை சிரிப்பார்.

  பக்தி நிறைந்தவர். குடும்பத்துடன் அவர் அதிகம் சென்ற சுற்றுலாத்தலம் திருப்பதியாகத்தான் இருக்கும். என் அப்பாவிடம் மிகப்பெரிய பாசம் வைத்திருக்கிறார்.

  சுத்தம் பேணுவதில் முதன்மையானவர். மூலையில் ஒரு தூசி கிடந்தாலும் தானே கூட்ட ஆரம்பித்துவிடுவார். அடுத்தவர்களின் சிரமம் பொறுக்கமாட்டார். உடனே உதவி செய்துவிடுவார். எங்கள் உறவினர்களில் சிரமப்பட்டவர்கள் அனைவருக்கும் அதிகம் உதவியிருக்கிறார். அதுவும் படிக்கவேண்டுமென்றால் எல்லாச்செலவையும் ஏற்றுக்கொள்பவர்.

எனக்கு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைத்தபோது, நம் குடும்பத்தில் முதல் பொறியியல் பட்டதாரி இவனாக இருக்கட்டும் என்று தன் சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்து என் அப்பாவிடம் கொடுத்து சென்னை அனுப்பிவைத்தார். அன்றைய தினம் அவர் மாமனாரின் அறுபதாம் கல்யாணம் வேறு!

  இப்போதும் என் வளர்ச்சியின் மீது அக்கறையும், பெருமிதமும் கொண்ட அன்பான மனிதர் அவர்! சென்ற வாரம் கூட என் பதிவுகளை உளமாரப் பாராட்டி ஒரு அழகான மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இப்போது கோவையில் அவரும் சித்தியும் மட்டும் வசிக்கிறார்கள். என் இரு தம்பிகளும் நல்ல வேலையில் சென்னை, பெங்களூரில் இருக்கிறார்கள்

      .வேலை வேலை என்று தன் உடல்நிலையை கவனிக்காமல் இருந்துவருகிறார். அனைவரது வற்புறுத்தலுக்குப் பிறகும், வங்கி வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெறுவது என்று முடிவெடுத்துள்ளார். அனேகமாக இந்த மாதத்துடன் ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்துவிடுவார். உடல்நிலையும் சரியாகிவிடும். மீண்டும் அந்த ரசனையான வாழ்வை வாழ..
        
      WELCOME HOME CHITHAPPA!!Tuesday, March 8, 2011

பெண்மையே.. பெண்களே..வாழ்க நீங்கள்!
    நம் உலகத்தை அன்புமயமாக்கிய அத்தனை பெருமையும், பெண்களையே சேரும். அவர்களது தாய்மை, சகோதரத்துவம், நட்பு பாராட்டுதல், பாசம்,அன்பு, நேர்த்தி இல்லாமல் ஆண்களின் வாழ்வு சூன்யமாகவே இருந்திருக்கும்..
என் வாழ்வில் நட்பாக, உறவாக உள்ள பெண்களின் பட்டியலில்..
2008 
2009 
2010 

இவர்கள் போக,
மேலும், இந்த ஆண்டில்
நட்பு காட்டும்

ரேவதி வர்மா
தேஜாஸ்ரீ

நமீதா
ஆருஷி
கவிதா
ரம்யா

மற்றும்
அன்புநிறை பதிவர்கள்

அகிலா ஸ்ரீராம்
மதார்
உமா
மற்றும் வேலையிட நண்பர்கள்
ரமணி
சித்ரா
ஜானகி
சுதா
சௌம்யா
ஆகிய …
என் வாழ்வை அர்த்தப்படுத்தும் அத்துனை பெண்களுக்கும் இந்த பெண்கள் தினத்தில்  எனது உளமார்ந்த அன்பையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்.


பெண்களே..பெண்மையே வாழ்க நீங்கள்!

Wednesday, March 2, 2011

மூன்று வரித்திரைப்படங்கள்


திரைப்படங்களை மூன்றுவரிகளில் எழுதிப்பார்க்கும் ஆர்வம் இன்னும் குறையவில்லை. அதன் பாதிப்பாக.....

சேவல் சண்டையில் குருவின் அடிமை!
அவரின் துரோகம் தெரிந்ததே கொடுமை!
காட்டிக்கொடுக்காத சிஷ்யனின் நேர்மை

இவனின் தொழிலே திருட்டு!
போலீஸென நினைத்து எதிரியின் விரட்டு!
அவராய் மாறி வில்லனை மிரட்டு!

ஊர்சுற்றி லூட்டி அடித்தான்
டுட்டோரியலில் தொழில் படித்தான்
காதலியைக் கைப்பிடித்தான்!


பொது இடத்தில் வெட்டுண்ட கை
போலீஸால் தேடப்படும் மெய்!
பழிவாங்கும் குடும்பத்தை உறுதி செய்!

கண்டுபிடித்ததை பின்னூட்டமிடுங்கள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...