Friday, May 30, 2008

தெய்வத் தொழிலாளி !

அது ஒரு 55 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம்.
இரவு மணி 12:40 க்கு கிளம்பினேன்.
அதுவரை இரவு உணவு சாப்பிடவில்லை.

சரி வழியில் ஏதாவது ஒரு ரோட்டோர ஹோட்டலில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டே பயணிக்க ஆரம்பித்தேன். காதில் 'முகுந்தா முகுந்தா....' வுடன் சென்று கொண்டிருக்கும்போது, மூன்று உணவு விடுதிகள் 3 கிலோமீட்டர் இடைவெளியில் கண்ணில் பட்டன. ஏனோ மனம் அதை நிராகரித்தது. பயணம் தொடர்ந்தது. முகத்தில் மோதிய வழிதவறிய வண்டொன்று கன்னத்தில் பளார் என்று அறைந்த அனுபவத்தைக்கொடுக்க, அதிர்ந்துபோய் நின்றபோது வலது பக்கம் அந்த உணவு விடுதி தெரிந்தது.

வாசலில், அடுப்பு தட்டுமுட்டுச்சாமான்களுடன் களேபரமாக இருந்தது. இடது பக்கம் டீ போடும் முஸ்தீபுகளுடன் ஒரு இடம். உள்ளே நுழைந்தேன். வண்டு அடித்த வலியை ஜீரணிப்பதற்காகவும், வயிற்றில் ஏற்பட்ட பசியை ஜீரணிப்பதற்காகவும்.!

'என்ன சார் சாப்பிடுறீங்க?' கேட்டவருக்கு 45 வயதிருக்கும். வளமாக இருந்தார்.

'என்ன இருக்கு?'

'புரோட்டா, தோசை அய்ட்டங்கள் இருக்கு சார்!'

'2 புரோட்டா போடுங்க! ஒரு ஊத்தப்பம்!'

சரி சார்.!

'முதலாளி ! தோசைமாவு புளிக்காம இருக்குல்ல!? ' - குரல் வந்த திசை பக்கம் திரும்பினேன். கல்லாப்பெட்டியில் அவர் அமர்ந்திருந்தார். நெற்றியில் குங்குமம்... கெச்சலாக இருந்தார். 55 வயதிருக்கும்.

என்ன இது ...? ஒரு சர்வரை கல்லாப்பெட்டியில் இருப்பவர் முதலாளி என்று கூப்பிடுகிறார்.! அல்லது இவர்தான் முதலாளியோ!? மனம் நினைத்துக்கொண்டிருக்கும்போதே பதில் இவரிடமிருந்து வந்தது.

'இல்ல குமரா! நல்லாத்தான் இருக்கு! கொஞ்சம் கொஞ்சமாத்தானே பிரிஜ்லேருந்து எடுத்துக்கிட்டு வரேன்.'

'அய்யய்யோ இல்ல முதலாளி! கஸ்டமருக்கு நல்லா இல்லாம போயிடக்கூடாதுன்னுதான் சொன்னேன்.'

'கவலையே படாத! சார் ரசிச்சு சாப்பிடுற மாதிரி செஞ்சுடுறேன்.'

'சரிங்க முதலாளி!'

இப்படியாக இவர்கள் சம்பாஷணை இருந்தது.
எனக்கு ஒன்று மட்டும் புரியவே இல்லை! இது என்னவிதமான உறவுமுறை? இதற்குப்பின்னணி என்னவாக இருக்கும். ஒரு நிர்வாகப்பாடத்தை இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளப்போகிறேனோ? ஒரு நாள் முதல்வர் போல் இது ஒரு நாள் முதலாளி அமைப்போ? மனிதவள மேம்பாட்டு ஆலோசகன் என்ற முறையில், ..ஒரு நல்ல நிர்வாகத்திறன் கொண்ட தன்முனைப்பு (EGO) அற்ற ஒரு முதலாளியின் எண்ண விருட்சமோ? எல்லாரும் எல்லா வேலையும் பார்க்கவேண்டும் என்று இப்படி செய்து கொண்டிருக்கிறாரோ!

புரோட்டாவுக்கு குருமா போட வந்தவரை நிறுத்திக்கேட்டேன். 'நீங்கதான் இந்தக்கடை முதலாளியா?'

'அட நீங்கவேற சார்...முதலாளி அதோ அவர்தான்.!'

'அப்புறம் ஏன் அவர் உங்களை முதலாளின்னு கூப்பிடுறார்.?'

'அதுவா....?'

'சார்...நாந்தான் இந்தக்கடை முதலாளி! ஆனா அவர்தான் எனக்கு முதலாளி!' என்றார் கல்லாப்பெட்டிக்காரர்.

எனக்கு தலை சுற்றியது.

சிரித்துக்கொண்டே....'ஏன் இன்னிக்கு வேற யாருமே சிக்கலையா? நடு ராத்திரி 1 மணிக்கு ஏன் இப்படி என்னை மண்டை காய வைக்கிறீங்க?' என்றேன்.

இருவரின் முகமும் கருத்துப்போனது.
யாரும் எதுவும் பேசவில்லை..இரண்டு நிமிடம் கழிந்தது. ஊத்தப்பத்தை எடுத்துக்கொண்டு வந்து என் இலையில் போட வந்தவர் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர். கட்டாயம் அது புகையால் வந்தது அல்ல!

'அய்யய்யோ என்ன சார் ஆச்சு? நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா?
மன்னிச்சுக்குங்க சார்!' என்று நான் பதறினேன்.

'அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்..! என் நிலைமை அப்படி...!'
என்று கலங்கிவிட்டு..தொண்டையை செருமிக்கொண்டு ஆரம்பித்தார்.

(தொடரும்)

Thursday, May 22, 2008

வார்த்தைகள் - பாகம் 2


ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி சொல்லுவாங்க! நட்பை பாதுகாத்துக்கணும்னா, நீ தவறு செய்தால் தயங்காமல் மன்னிப்புக்கேள் ! நண்பன் தவறு செய்தால் தயங்காமல் மறந்துவிடு! ன்னு அதாவது வார்த்தைகளைப்பிடிச்சு தொங்காம நிதானமா இருந்தாலே உறவுகளை அப்படியே வச்சுக்கலாம்.
ஏன்னா பதில் வார்த்தைகளால்தான் பிரச்னையே பெரிசாகும். நட்பு வேணும்னு நினைச்சா நல்ல சொற்களை மட்டுமே பேசினா போதும். அதேசமயம் வேறு ரெண்டுபேருக்கு இடையில் ஏற்படும் தகராறுக்கும் நாம காரணமா இருந்துடக்கூடாது. ஆனா அதுதான் நம்மிடையே அதிகமா நடக்குது. ரெண்டு பேரை சேத்துவைக்கத்தான் நமது வார்த்தைகள் பயன்படணும். அதில் கவனமா இருந்துட்டா அந்த ரெண்டுபேருக்குமே நாம கடவுளா தெரிவோம்.

பூவே உனக்காக படத்தில், நாகேஷுக்கும் நம்பியாருக்கும் குடும்பப்பகை இருக்கும். ஒருநாள் நாகேஷ் வண்டில பெட்ரோல் இல்லாம தள்ளிக்கிட்டு
வருவார். அதே சமயத்தில் நம்பியாருடைய காரும் ரிப்பேராகி நிக்கும். அங்கிருந்து ஊருக்குள்ள போகணும்னா 5 கிலோமீட்டர் நடக்கணும். அப்ப அங்க வரும் விஜய் ,ரெண்டுபேரின் கௌரவமும் கெட்டுப்போகாம நாகேஷ்கிட்ட , அவர் பெட்ரோலைக்கொடுத்து உங்க வண்டில ஏறிக் கிறேங்கிறார். கூட்டிக்கிட்டு போவோமா? ன்னு பேசி சம்மதிக்க வச்சுட்டு, நம்பியார்க்கிட்ட அவர் வண்டில உங்களைக்கூட்டிக்கிட்டு போறாராம் பெட்ரோல் மட்டும் உதவியா கேக்குறார்ன்னு சமயோஜிதமா சொல்லுவார். ரெண்டுபேரும் அந்த டீலுக்கு ஒத்துக்குவாங்க! அதேபோல், நம்பியார் காரில் இருந்து பெட்ரோலை எடுத்து நாகேஷ் வண்டிக்கு போட்டுட்டு ரெண்டுபேரையும் ஒரே வண்டியில் போக வச்சிடுவார். அந்த வண்டிப்பயணத்திலேயே அவர்கள் மீண்டும் நண்பர்களா ஆகிடுவாங்க!

இதுதான் சொல்வன்மைங்கிறது..நம்ம சொல்ற சின்னச்சின்ன பொய்களால் அடுத்தவங்களுக்கு பயன் இருந்தா கண்டிப்பா பொய் சொல்லலாம் தப்பே இல்லை. ஆனா அடுத்தவுங்களைக் கெடுக்க பொய் சொல்லக்கூடாது. இராமாயணத்தில் அனுமனை சொல்வன்மை மிக்கவன்ன்னு சொல்வாங்க ஏன்னா, சீதையைப்பாத்துட்டு வந்து, ராமனிடம் வந்து சொல்லும்போது...தகவலை இழுத்துச்சொல்லாம கண்டேன் சீதையை ன்னு ஆரம்பிச்சதுக்காக இன்று வரை இலக்கிய உலகம் அவரை ஒரு தகவல்தொடர்பு குருவாத்தான் பாத்துக்கிட்டிருக்கு!

ஆகவே பயனிலாச்சொல்லை சொல்வதைவிட, பிறருக்கு பயன்படக்கூடிய சொற்களை பேசி - வார்த்தைகளை வசப்படுத்தி வாழ்க்கையையும் வசப்படுத்துங்கள்! ஒரு நாள் வானமும் வசப்படும்! என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள்!

Wednesday, May 21, 2008

வார்த்தைகள்ரெண்டுபேருக்கு இடையிலே வாக்குவாதம் வந்தா...வார்த்தைய அளந்து பேசு..என்ன பேசுறோம்கிறதை தெரிஞ்சுதான் பேசுறியான்னு ஒருத்தருக்கு ஒருத்தர் கேட்டுக்குவாங்க!

அந்த அளவுக்கு நம்மை மீறி வெளிவரும் வார்த்தைகள் என்னிக்குமே மனிதர்களுக்கிடையில் உறவுகளை உடைக்கும் சுத்தியலாத்தான் பயன்படும்.
அதுனால எந்த பயனும் இருக்காது. சக மனிதர்களோட பேசுறதுங்கிறது ஒரு கலை! அதை சரி வர கையாண்டுட்டாலே நாம வாழ்க்கைல ஈஸியா ஜெயிச்சுக்கிட்டே இருக்கலாம்.

மொக்கச்சாமி ஒரு பெரிய தொழிலதிபர்க்கிட்ட பி ஏ வா வேலைபாத்தார். அப்ப வெளியூருக்கு போய் ஹோட்டல்ல தங்குறமாதிரி ஆகிப்போச்சு. முதல்நாள் மதிய சாப்பாட்டில் வெண்டைக்காய் போட்டு சாம்பார் வச்சிருந்தாங்க! அதை ருசிச்சு சாப்பிட்ட தொழிலதிபர், ஹோட்டல் சர்வரைக்கூப்பிட்டு ஆஹா வெண்டைக்காய் பிரமாதம்ன்னார்.உடனே மொக்கச்சாமியும் ஆமாமா பிரமாதம்ன்னார். அதை கவனிச்ச ஹோட்டல் முதலாளியும், இனிமே அந்த தொழிலதிபருக்கு வெண்டைக்காயில் செஞ்ச உணவுகளை அதிகமா பரிமாறும்படி சொல்லிட்டார். அடுத்தடுத்த நாள் வெண்டைக்காய் கூட்டு, வெண்டைக்காய் பொறியல், பச்சடி ன்னு சர்வம் வெண்டக்காய் மயம் ஆகிப்போச்சு ! ஒரு வாரம் நல்லா பாராட்டிக்கிட்டே சாப்பிட்டார் அந்தத்தொழிலதிபர்.! மொக்கச்சாமியும் அதேபோல் ஜால்ரா தட்டிட்டார். அடுத்தவாரமும் ஹோட்டலில் வெண்டைக்காய் போடவும் , தொழிலதிபர் டென்ஷனாகிட்டார். என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க? எப்பப்பாத்தாலும் வெண்டைக்காயா? நல்லாவே இல்லை! வெண்டைக்காயெல்லாம் ஒரு காயா?ன்னு கத்த ஆரம்பிச்சுட்டார். உடனே மொக்கச்சாமியும் ஆமாமா நானும் பாத்துக்கிட்டிருக்கேன். அதெல்லாம் ஒரு காய்ன்னு எங்க முதலாளிக்கு போடுறீங்க? அது நல்லாவா இருக்கு? இருக்கறதுலயே மட்டமான காய் அதுதான்னு ...இன்னும் ரெண்டுமூணு பிட்டை சேத்துப்போட்டாரு.
உடனே அவர் முதலாளிக்கு கோபம் வந்துடுச்சு.! மொக்கச்சாமி! என்ன நீ? நான் வெண்டைக்காய பாராட்டும்போதெல்லாம் அப்படி பாராட்டின?இப்ப திட்டும்போது நீயும் கடுமையா திட்டுறியே! ஏன் இப்படி நடந்துக்கிற? ன்னு கோபப்பட்டார். அதுக்கு
மொக்கச்சாமி மெதுவா சொன்னார். நான் என்ன வெண்டக்காய்கிட்டயா வேலை பாக்குறேன்! உங்ககிட்டதானே வேலைபாக்குறேன்னாரு!

இதுதான் சொல்வன்மை! இத்தகைய சூழலில் முதலாளியை சாந்தப்படுத்த , மொக்கச்சாமியோட உபாயத்தை பயன்படுத்தினாலே போதும்.பொழச்சுக்கலாம்.
ரெண்டுபேருக்கிடையில் வாக்குவாதம் வரும்போல் தெரிந்தால், மனசில் தோணும் வார்த்தைகளுக்கு ஒரு தற்காலிக சென்சார் போர்டு வச்சு உடனே அதை அப்பப்ப தணிக்கை செஞ்சு வெளியில் விட்டாலே அந்த வாக்குவாதம், மோதலாகாம தடுத்துடலாம். அதேசமயத்தில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளைவிட்டால் அவ்வளவுதான் மூன்றாம் உலகப்போருக்கு நீங்கதான் மூலகாரணமா ஆகிடுவீங்க!
(தொடரும்)

Friday, May 16, 2008

கயவாளிக் கனவான்கள்!
ரோடு போட்ட மவராசன்
பாதி ரோட்டை போட்டுப்புட்டு
மீதி ரோட்டை தனக்கும்,
லஞ்சம்வாங்கி நாய்களுக்கும்
போட்டுக்குடுத்துப்புட்டு
மழை பேஞ்ச மறுநாளே
பல்லிளிக்க வச்சுப்புட்டான்.

பல்லிளிச்ச ரோட்டில்
போராடிப்போராடி
நாத்தெல்லாம் நட்டு
நாத்தமடிக்க வச்சபின்னே
அவனுக்கு அப்பனான
ஒரு ஒப்பந்தக்காரன்
பள்ளமடைக்கும் பணி வாங்கி
ஜல்லியடிச்சுக்கிட்டிருக்கான்.
அடைக்கும் பள்ளத்திலேயே
அரைகுறையா விட்டுப்புட்டு
அலட்டிக்காம வேலைபாக்கும்
கேடுகெட்டவங்களை வச்சா
வல்லரசா ஆகப்போறோம்!?
அய்யா அப்துல் கலாம்!
ஒருதடவை இந்தப்பக்கம்
வந்துத்தான் பாருங்களேன்.
ஒப்பந்தம் எப்படி
வேலை பாக்குதுன்னு தெரியும்.

இது ரொம்ப நாள் கதையில்ல!
நேத்து நான் வந்தப்ப நின்னு
எடுத்த போட்டோ!
இதை மட்டும் செய்ய நான்
ஈனப்பிறவி இல்ல!
எல்லா பத்திரிகைக்கும்
எழுதியாச்சு நகலோட!
எவனுமே போடலைன்னா
என்ன பண்ண சின்னவன் நான்!

அதுனால இங்கயும் என்வீட்டில்
பதிஞ்சு வச்சேன்.
உச்சகட்ட லச்சணம்
என்னன்னு தெரியுங்களா?
இதுதான் இந்தியாவின்
தேசிய நெடுஞ்சாலை!
கண்ணுமண்ணு தெரியாம
கொள்ளை அடிக்கறது
கயவாளிக்கனவான்களுக்கு
கைவந்த கலை போல!
அட...நாசமத்துப்போவாய்ங்களா!
நாண்டுக்கிட்டு சாவுங்கடா!

அடுத்த தலைமுறையை
அழுகாம காப்பாத்த !

Tuesday, May 13, 2008

அத்தை மகனே !

          என் அத்தைமகனை நான் என் பாட்டி வீட்டுக்குப்போகும்போதுதான் பார்த்தேன். மிகவும் அழகாக படியப்படிய தலையை வாரிக்கொண்டு, என்னை குறுகுறுவென்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அப்போதுதான் என் பாட்டி , தாத்தா , பெற்றோர் எல்லோரும் சொன்னார்கள்! இவனோடுதான் உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடப்போகிறேன் என்று! அதற்கு முன்னரே ஒரு கிராமத்தில் காரணமே இல்லாமல், பதிவேட்டிலும் பெயர்  இல்லாமல் ஆறு மாதங்கள் பள்ளி சென்றிருக்கும் மமதை என்னிடம் கொஞ்சம் இருந்தது. அவனை ஏற இறங்கப்பார்த்துவிட்டு பழக ஆரம்பித்தேன்.

         ஒன்றாகப் பள்ளி செல்லத்தொடங்கினோம். ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என இரண்டு வருடங்கள் அவனும் நானும் சேர்ந்து படித்தோம்.
பள்ளிக்கு இருவரும் சேர்ந்தே செல்லுவோம். திரும்பவும் சேர்ந்தே வருவோம். ( இப்போதுபோல் அடுத்த தெருவில் உள்ள பள்ளிக்குக்கூட ஆட்டோவோ, பள்ளிப்பேருந்தோ இல்லாத காலகட்டம் அது) பள்ளியும் 2 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.

            அடிக்கடி அன்பையும் , அதற்குமுன்னால் அடிகளையும் பரிமாறிக்கொண்டு வளர்ந்த அந்த பால்யத்தில் , அடிப்படையில் எங்களுக்கிடையே ஒரு அதீத பாசம் இழையோடியிருக்கவேண்டும். அதனால், அத்தை தனியாக ஊருக்கு வரும்போது, அவனை முதலில் விசாரிப்பது என் வழக்கங்களில் ஒன்றாகிப்போனது. அனேக தருணங்களில், அவன் தன் தம்பிகளுடன், எங்கள் ஊருக்கு விடுமுறைக்கு வருவான். நன்கு விளையாடுவோம். கிரிக்கெட் என்ற விளையாட்டையும் அதன் சட்டதிட்டங்களையும் கற்றுத்தந்தவன் என்ற வகையில் அவனிடம் எப்போதும் ஒரு மரியாதை உண்டு.

மிகவும் நன்றாகப் படிப்பான். குடும்பத்தில் என்னுடன் ஒப்பிட அவனைத்தான் அதிகமாக என் தந்தை பயன்படுத்தியிருக்கிறார். பள்ளிக்காலத்தில், எங்கள் மதிப்பெண்கள் இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் ஓட்டங்கள் மாதிரி பார்க்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் நாங்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளவும், வாழ்த்திக்கொள்ளவும் தவறியதில்லை!

               நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அவனுக்கு வங்கியில் வேலை கிடைத்தது. அதை அறிந்து என் வீட்டில் என்னுடன் அவனை ஒப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவனுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்களை மனதுக்குள்ளேயே சொல்லியவன் நான் தான்.! ஏனெனில் என் தந்தை ஒரு அரசு அதிகாரி! எங்களுக்கு எந்த பிரச்னையுமில்லை! நான் வேலை பார்த்துத்தான் என் குடும்பத்தை காக்க வேண்டும் என்ற கவலை இல்லை! ஆனால் அவனது தந்தையோ, ஒரு தனியார் திரையரங்கு மேலாளர்! அதனால் என் அத்தையின் சிக்கனமான நடவடிக்கைகளாலும், நிர்வாகத்திறனாலும்தான் அந்தக்குடும்பம் நடந்துகொண்டிருந்தது. அதை தூக்கி நிறுத்த அவனைப்போன்ற ஒரு பொறுப்பான பிள்ளைக்கு நல்ல வேலை கைகொடுக்கவேண்டும் என்று நான் விரும்பியது நடந்ததும் நான் மகிழ்ந்ததற்கு முதற்க்காரணம்.! அதேபோல் அவனும் வங்கிவேலையில் சேர்ந்து பல தேர்வுகளை எழுதி இன்று ஒரு பன்னாட்டு வங்கியின் அன்னியச்செலாவணி மேலாளராக கம்பீரமாக வலம் வந்துகொண்டிருக்கிறான்.

            எங்கள் சந்திப்புகள் எப்போதும், அன்னியோன்யமாகவே இருந்திருக்கின்றன. நீண்ட நாட்கள் தொலைபேசாமல் இருந்தாலும், பேச ஆரம்பிக்கும்போது மிகச்சாதாரணமாக காலையில்தான் சந்தித்ததுபோல இயல்பாக ஆரம்பிப்பான். அதேபோல் அவர்கள் வீட்டில் ஒரு நாள் நாங்கள் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்ததைப்பற்றி இப்போதும் என் அத்தை சிலாகிப்பார்கள். அதில் என்ன விசேஷம் என்றால் நாங்கள் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தது இரகசியங்கள்! தலைக்கு அருகில் படுத்திருந்த அத்தைக்கே கேட்கவில்லையென்றால் பாருங்கள்!

          எனக்கு வங்கித்துறையில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வான். மிகச்சாதாரணமாகப் பழகுவான். வேலைத்தளத்தில் அவனைக்கண்டால் அனைவரும் மதிக்கும்படி வேலைபார்ப்பான். இருவருக்கும் சம வயது எனினும், என்னைவிட இளமையாகக்காட்சி தருவான். அவன் கொஞ்சம் நன்றாகச் சாப்பிடலாம் என்பது என் அபிப்ராயம்.! அவன் தாய்தந்தையை மிகவும் நேசிப்ப்வன்.! மதிப்பவன். அதை அவர்களிடம்
காட்டிக்கொள்ளத்தெரியாதவன்.! நிறைய உதவும் மனப்பாங்கு கொண்டவன்.

        அவனுக்கும் எனக்கும் குணத்தில் மிகுந்த வேறுபாடுகள்! நான் பேசும் பேச்சுக்களை எழுத ஆரம்பித்தால் 20 வருடப்பேச்சுக்களை எழுத 60 ஆண்டுகள் ஆகும். அவன் 20 ஆண்டுகள் பேசியதை அதிகபட்சம் ஒரு வாரத்தில் எழுதிவிடலாம். அவ்வளவு குறைவாகப்பேசுவான். நான் உணர்ச்சிவசப்படுவேன். அவன் உணர்ச்சிவசப்படுவதை நான் கண்டதே இல்லை. நான் ஒரு கருத்துக்கள் நிறைந்த யதார்த்தவாதி! அவனோ யதார்த்தம் நிறைந்த கருத்தானவன்! இப்படி நிறைய வித்தியாசங்கள்.!

          ஆனாலும் அந்த பள்ளிக்கூடப்பழக்கமோ, அத்தைமகன் என்ற உறவோ, சம வயதோ - ஏதோ ஒரு காரணம் அவனை எனக்கு நெருங்கிய நண்பனாக வைத்திருக்கிறது. ஜூலை 24 கஸின்ஸ் டே என்று மேலைநாடுகளில் கொண்டாடுகிறார்கள். நாம் கொண்டாட ஆரம்பித்தாலும் இல்லாவிட்டாலும் அவனுக்கு என் வாழ்த்துக்களை கூறிக்கொண்டே இருப்பேன். என் நட்பான உறவினன் இராஜாவுக்கு!

 

Thursday, May 8, 2008

'அட்டு' பாத்தது ஒரு குத்தமா?

ஐசிஐசிஐ பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணும்போது 2002வது வருஷம், என்னமா பம்மி பம்மி கவலையே படாதீங்க சார்..எல்லாம் சூப்பரா இருக்கும்னு போஜா காட்டினாய்ங்க! கொஞ்சம் கொஞ்சமா கொள்ளையடிச்சவய்ங்க இப்ப பல்க்காவே கொள்ளையடிக்க ஆரம்பிச்சுட்டய்ங்க!

செக் புக்கு ரெக்வெஸ்ட்டுன்னு ஆன்லைன்ல பண்ணின உடனே ரெண்டே நாள்ல வந்துடும்.அட இவ்வளவு சூப்பரா வேலை பாக்குறாங்களேன்னு புளகாங்கிதம் அடைஞ்சுக்கிட்டிருந்தேன். அப்பன்னு பாத்து அதுல 'அட்டு பாரு' (at par) ன்னு போட்டிருக்கும். எந்த ஊருக்கு வேணும்னாலும் குடுத்துக்கலாம்னு சொன்னாய்ங்க! அதை 'நம்பி' நானும் பல ஊருக்கு செக் குடுத்தேன். அவுங்களும் சந்தோசமா என் பணத்தை எடுத்துக்கிட்டிருந்தாங்க! (செக்கை கூரியர்லதான் அனுப்பணும்). அட அட்டு பாரு ...அட்டு பாருன்னு நானும் எல்லார்க்கிட்டயும் பீத்திக்கிட்டு திரிஞ்சேன்.

எப்ப பேமெண்ட் பத்தி பேச்சு வந்தாலும் ...யூ டோண்ட் ஒர்ரி சார்..! ஐ ஹாவ் அட் பார் செக்..ன்னு பண்ணின லந்து கொஞ்சமா நஞ்சமா?

அதுக்கு வச்சாய்ங்க ஆப்பு இந்த ஸ்டேட்மெண்டை அனுப்பி ...
அந்த மஞ்ச கலர்ல இருக்குறதுதான் என்கிட்டேருந்து அட் பாருக்காக கொள்ளையடிச்ச ஆதாரம். நான் குடுத்த செக்குக்கெல்லாம் டிடியா எடுத்திருந்தாலே அவ்வளவு செலவு ஆகியிருக்காது. ஒரு சலுகை குடுக்குறமாதிரி குடுத்து காசு புடுங்கும் கயமைத்தனம் எங்கடா கத்துக்கிட்டீங்க?
அட கொள்ளைக்காரய்ங்களா?

நானே செக்கை அனுப்பிடறேன்.
அதை அவங்க கொண்டுபோய் பேங்கில இருந்து பணமா எடுத்துக்கவோ, கணக்கில் போடவோ செஞ்சுக்கிட்டிருந்தாங்க. வேலையும் சுபமா , சுலபமா முடிஞ்சுது.

ஆனா இவய்ங்க அட்டு பாரு ன்னு தமிழ்லதான் எழுதியிருக்கானோன்னு தோணுது! அட்டுன்னாலே ஒண்ணுத்துக்கும் ஆகாத மொக்க மேட்டருக்குத்தான் சொல்லுவாங்க்! அப்ப இதுவும் அட்டு தானே? அதைப்போய் பாரு பாருன்னு கூவி விக்கிற லச்சணம் வேற!
உன் பேங்க் கணக்கு உள்ளவங்களுக்கு, உன் பேங்க் செக் குடுத்தது ஒரு குத்தமா?
என் சம்மதமில்லாம என் கணக்கிலே இருந்து நீ பாட்டுக்கும் கொள்ளையடிச்சுக்கிட்டே போற?
கம்ப்யூட்டரில் எந்த ஊரா இருந்தாலும் ஏத்தப்போற!
அந்த செக்கை எங்க ஊர்ல உள்ள உங்க ஊழியர் செய்யற அதே வேலைதான் இது.!
அதுக்காக இவ்வளவு கொள்ளையடிச்சுத்தான் வயித்த கழுவணும்னு இல்ல!

இந்தமாதிரி எத்தன ஆயிரம்பேர ஏமாத்திக்கிட்டிருக்காய்ங்க!
எல்லாரும் சும்மா இருக்கறது நல்லா இருக்காது! நான் ஒரு மெயிலத்தட்டிவுட்டுட்டு...கேஸும் போட்டுட்டேன்.
இதுக்காக அக்கவுண்ட்ட மூடிக்கிட்டு போகக்கூடாது. என்னதான் நடக்குதுன்னு பாப்போம்.
உங்களுக்கும் இந்த மாதிரி நடந்திருந்தா சொல்லுங்க! மேஞ்சுருவோம்.!

Tuesday, May 6, 2008

இது மாதிரி இருந்தாப் போதும் - 2

பென்சிலோட இன்னோரு தன்மை பாத்தீங்கன்னா, அதை வச்சு எழுதணும்னா, அதை கூர்மைப்படுத்திக்கிட்டே போகணும்.அது தன்னை கரைச்சுக்க அனுமதிக்கும். அப்பதான் தெளிவா எழுதமுடியும். ஒரு தடவை மழுங்கிட்டா, அப்படியே இருக்காம, தன்னை கூர்மைப்படுத்திக்கிட்டு மறுபடியும் பழைய மாதிரி எழுத ஆரம்பிச்சுடும்.
அதேமாதிரிதான். நாமும் நம்பளை வளத்துக்கணும். ஒரு படிப்பு படிச்சுட்டா, அடேயப்பா நாந்தான் இந்த ஊர்லயே ரொம்ப படிச்சவன்னு நினைப்பு நமக்கு வந்து, தன்னை வியக்க ஆரம்பிச்சுடுறோம். ஆனா அது ரொம்ப ஆபத்து. . நாம இந்த உலகத்தில் கத்துக்கவேண்டியது எவ்வளவோ இருக்கு. இன்னிக்கு ஒரு வெற்றியை சந்திக்கிறீங்கன்னா..அதை உடைக்க அடுத்த ஆள் தயாரா இருக்கும். அதுக்குள்ள நாம நம்ம அறிவை வளத்துக்கிட்டு அந்த வெற்றியை தக்க வச்சுக்கணும். எந்தத்துறைல இருந்தாலும், அதில் இன்னும் என்னன்ன புதுமை இருக்குன்னு கத்துக்கிட்டு மாற்றத்தை ஏத்துக்கத்தயாரா இருக்கணும்.
            வெற்றிங்கிற விஷயத்தில் பென்சில் எப்பவுமே தன்னை சமரசம் பண்ணிக்கிறது கிடையாது. கொஞ்சம் மழுங்கிப்போனாலும் தன்னை கூர்மைப்படுத்திக்க அனுமதிக்கும். ஆனா நமக்கு , அறிவு விஷயத்துல போதும்ங்கிற மனசும், பண விஷயத்துல போதாதுங்கிற மனசும் இருக்கு. அது அப்படியே மாறினா போதும். வெற்றிக்கு நிரந்தர நண்பனா ஆகிடலாம். நிம்மதியாவும் இருக்கலாம்.
நல்ல வெற்றியாளனுக்குள்ள அறிகுறியே , பாராட்டுகளை தலைக்குள்ள ஏத்திக்காமலும், விமர்சனங்களை மனசுல ஏத்திக்கிட்டும் இருக்குறதுதான். பென்சிலை சீவும்போது வலிக்கிறமாதிரிதான் இருக்கும். ஆனா பலன்? அழகான எழுத்து..! அதுமாதிரிதான் விமர்சனங்களைத்தாங்கினாத்தான் நம்மால் நம்பளை மெருகேத்திக்கிட்டு ஜொலிக்கமுடியும்.

பென்சிலோட அடுத்த பண்பு, ஒரு விஷயத்தை தப்பா எழுதிட்டா ரப்பரை வச்சு அழிச்சு மீண்டும் திருத்த அனுமதிக்கிறது.. இப்ப எல்லாம் பெரும்பாலான பென்சில்ல ரப்பரும் சேந்தே வருது. அதாவது தன் தவறுகளை ஏத்துக்குற மனப்பக்குவத்தை ரொம்ப எளிமையா புரியவைக்குது பென்சில்.

நாம ஒரு சிறந்த மனிதனா ஆகணும்னா, முதல் தகுதியே செஞ்ச தப்பை ஒத்துக்கிறதுதான். ஆனா நாம அதிகபட்சமா தப்பை ஒத்துக்கிறதே இல்லை. மேலும் அடுத்தவுங்களை அந்த தப்புக்கு பலிகடா வேற ஆக்குவோம். யாருமே கிடைக்கலைன்னா வேற ஏதாவது காரணம் சொல்லி தப்பிக்கப்பாப்போமே தவிர கடைசிவரைக்கும் நாம செஞ்சது சரிதான்னு நிரூபிக்கப்பாப்போம்.

மொக்கச்சாமி ஒரு பெரிய தென்னந்தோப்புல தேங்கா திருடலாம்னு போனாராம். மரத்திலயும் ஏறியாச்சு ! ஆனா அந்த நேரம்பாத்து தோப்போட சொந்தக்காரர் வந்துட்டாரு. ! ஆஹா இப்ப என்னடா பண்றதுன்னு மொக்கச்சாமியும் மெதுவா இறங்க் ஆரம்பிச்சாரு! அதை தோப்புக்காரர் பாத்துட்டாரு.! உடனே அவர் சத்தமா...ஏய் மொக்கச்சாமி..எதுக்குடா மரத்துமேல ஏறின? ன்னு கேட்டார்.

உடனே நம்ம மொக்கச்சாமி...இல்ல.. எங்க வீட்டு ஆட்டுக்கு புல்லு புடுங்கலாம்னு போனேன்..ன்னாரு! அங்க எங்கடா புல்லு இருக்கும்? ன்னாரு தோப்புக்காரரு. அங்க புல்லு இல்ல! அதான் எறங்கிட்டேன்ன்னாரு மொக்கச்சாமி! தோப்புக்காரர் எத்தனைபேரைப்பாத்திருப்பாரு? அதுக்கப்புறம் அவர் மொக்கச்சாமியை உரிச்சாருங்கறதெல்லாம் வேற விஷயம்!
ஆனா இப்படி சமாளிக்கிறதெல்லாம் எத்தனை நாளைக்குத்தாங்கும்? கெட்டிக்காரன் புளுகு எட்டே நாளில் தெரியும் னுவாங்க! அதிகமா நம்ம ஆளுங்க பொய் சொல்றதே தன் தவறை மறைக்கிறதுக்காகத்தான்.
விருமாண்டி படத்துல கமலஹாசன் ஒரு பிரச்னையில் தப்பு பண்ணிடுவாரு.. அன்னிக்கு ராத்திரியே அந்த எதிரி வீட்டுக்குப்போய் சொல்லுவாரு... மன்னிப்புக்கேக்கறவன் வீரன்...மன்னிக்கிறவன் மாவீரன். நான் வீரன்.. நீ எப்புடி? அப்படின்னுவாரு.
தப்பை ஒத்துக்க ஆரம்பிச்சுட்டாலே நம்ம மேல சமூகத்தில் ஒரு மரியாதை வந்துடும். நாமும், தப்பு செய்ய யோசிப்போம். சமாளிச்சுடலாம்னு நினைக்கிறதாலதான் அதிகமா தவறு செஞ்சுட்டு மாட்டிக்கிட்டு முழிக்கிறோம். இனிமேல் காரணங்களைக்கைவிட்டு, தீர்வுகளைத்தேடினாலே போதும்.
பென்சிலோட அற்புதமான குணமே செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு அதை சரிபண்ண தயாரா இருக்குறதுதான். ! அதை கடைபிடிச்சாலே நமக்கு தலைவனுக்குள்ள தகுதி வந்துருச்சுன்னு அர்த்தம்.

கடைசியா.....பென்சிலை எத்தனை துண்டா உடைச்சாலும் ஒவ்வொரு துண்டும் பென்சில்தான்.அதேபோல எத்தனை துன்பம் வந்தாலும் , கவலைப்படாம நம்ம இயல்பு மாறாம இருந்தாலே நாமதான் இந்த உலகத்தில் வெற்றிக்கு மொத்தக்குத்தகைதாரர்.

எனவே பென்சில் போல் வாழுங்கள். வெற்றிக்கோடுகள் வரையுங்கள்...என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

Monday, May 5, 2008

இது மாதிரி இருந்தாப் போதும் !

வாழ்க்கைல வெற்றி பெற்ற ஒரு மனிதரப்பத்தி சொல்லி அவரைப்போல இருக்கணும்னு சொல்றதுதான் சாதாரணமா அறிவுரையோ, அறவுரையோ சொல்ற முறை!
இன்னிக்கு அதைக்கொஞ்சம் மாத்தி, இதுமாதிரி இருந்தா ஜெயிக்கலாம்னு நாம பாக்கப்போறது ஒரு பொருள்! அதுவும், இயற்கையா உருவானது இல்ல! நம்மாலயே படைக்கப்பட்ட ஒரு பொருள்..!

என்னது அது?

ரெண்டு நாடுகள் இருந்துச்சு. முதல் நாடு பேரு அட்டெரிக்கா, ரெண்டாவது நாடு பேரு ரமிலியா..! எப்பவுமே இந்த ரெண்டு நாடுகளுக்குள்ளயும் எதை எடுத்தாலும் போட்டிதான்! அந்த நாடு ஒரு விஷயம் செஞ்சா, இது அதுக்கு மேல வேற எதாவது செஞ்சு வெறுப்பேத்தும்.
அப்ப, அட்டெரிக்கா விண்வெளிக்கு ஆளுங்களை அனுப்பிக்கிட்டிருந்தது.அதே போல ரமிலியாவும் அனுப்பிக்கிட்டிருந்தது.
அட்டெரிக்காவிலேருந்து விண்வெளிக்கு போய்ட்டு வந்தவுங்க யாரும், அதைப்பத்தின ரிப்போர்ட்டை எழுதாமலே வந்தாங்களாம்.இது என்னடாது கொடுமைன்னு விசாரிச்சா,
அய்யா! நாங்க எழுதறத்துக்கு தயாராத்தான் இருக்கோம். ஆனா நாங்க எடுத்துட்டுப்போன பேனா எல்லாமே, விண்வெளிக்கு போனதுக்கப்புறம் அங்க காத்தே இல்லாததாலயும், புவியீர்ப்பு விசை இல்லாததாலயும், எழுத மாட்டேங்குது! இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்காம ரிப்போர்ட் எழுதறது கஷ்டம்.! அப்டின்னாங்க

உடனே அட்டெரிக்காவுல உள்ள எல்லா விஞ்ஞானிகளும் ஒண்ணு சேந்து பெரிய அளவுல ஆராய்ச்சி பண்ணி 2 வருஷம் கழிச்சு ,விண்வெளிக்குப்போனாலும் பிரச்னை இல்லாம எழுதற மாதிரி பேனா ஒண்ணை கண்டுபிடிச்சுட்டாங்க. என்ன? செலவுதான் கொஞ்சம் அதிகமா ஆயிருச்சு. இருந்தாலும் இதை எல்லா நாடுகளுக்கும் சொல்லணும்னு ஒரு பெரிய மாநாட்டைக்கூட்டினாங்க!. இவுங்களோட நோக்கமே.. ரமிலியா நாட்டை அவமானப்படுத்துறதுதான். மேலும் உலக நாடுகள் இனிமே விண்வெளிக்கு ஆளை அனுப்பினா நம்ம பேனாவைத்தான் பயன்படுத்தியாகணும், அதுனால பேனா வியாபாரமும் நடக்கும்னு நினைப்பு!
மாநாடும் நடக்க ஆரம்பிச்சது! அட்டெரிக்கா தன்னோட பேனாவோட பெருமையெல்லாம் சொல்லி, எல்லாரையும் ஆச்சர்யப்பட வச்சிக்கிட்டிருந்தாங்க!
எல்லா நாட்டு விஞ்ஞானிகளும் மேடைல பேசினாங்க! அட்டெரிக்காவோட இந்த கண்டுபிடிப்பு இந்த உலகத்துக்கு ஒரு வரப்பிரசாதம்ன்னு சொன்னாங்க!
அட்டெரிக்கா விஞ்ஞானி ஒரு அறிவிப்பு செஞ்சார்.! இப்ப பேச வரப்போறது ரமிலியா நாட்டு விஞ்ஞானி! அவுங்க நாடும் விண்வெளிக்கு ஆட்களை அனுப்பிக்கிட்டிருக்கு! ஆனா பாவம் இந்த மாதிரி பேனா இல்லாம எப்படி கஷ்டப்படுறாங்களோ அப்படின்னு நக்கலா சொன்னார்.
அடுத்து மேடையேறினார். ரமிலியா நாட்டு விஞ்ஞானி.!
ஒரு சின்ன விஷயத்துக்கு அட்டெரிக்கா இவ்வளவு செலவு பண்ணியிருக்கு..! நாங்க வருஷக்கணக்கா விண்வெளிக்கு ஆளுங்களை அனுப்பிக்கிட்டிருக்கோம். ஆனா எங்களுக்கு இந்த மாதிரி ரிப்போர்ட் எழுதுற பிரச்னை வந்ததே இல்லை. ஏன்னா நாங்க பேனாவே யூஸ் பண்றதில்லை. நாங்க எழுதப்பயன்படுத்துறது ...........பென்சில்! அப்படின்னாரு.
எல்லா விஞ்ஞானிகளும் அப்படியே ஷாக் ஆகிட்டாங்க!  (இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா..? ஏற்கனவே தெரிஞ்ச கதைதான் ....வேற?)

இன்னிக்கு நாம பாக்க்பபோறதும் பென்சிலைப்பத்திதான்.!பென்சில் மாதிரி இருந்தா வாழ்க்கைல ஜெயிச்சுடலாம்ங்கிறதுதான் மேட்டர்!

உடனே பென்சில் மாதிரி ஒல்லியா இருக்கணுமான்னு கேட்டுராதீங்க! இது உங்க உடம்பு சம்பந்தப்பட்டது இல்லை! மனசு சம்பந்தப்பட்டது! இருந்தாலும், பென்சில் மாதிரி ஒல்லியா இருந்தா நோய் நொடி வராதுன்னு சொல்றாங்க! ஆக பென்சில் மாதிரி ஒல்லியா இருந்தாலும் நல்லதுதான்.

பென்சிலை கவனிச்சுப்பாத்தீங்கன்னா...ஒரு விஷயம் தெரிய வரும். இப்ப சொன்ன கதை மாதிரி...
எந்த சூழ்நிலைலயும் எழுதும். எந்த இடத்திலேயும் எழுதும். பேனாவை மேல்நோக்கி வச்சு எழுத முடியாது. பென்சிலை எப்படி வேணும்னாலும் வச்சு எழுதலாம். அதோட ஒரே வேலை எழுதறது! அதை கரெக்டா பண்ணிரும்.

அது மாதிரிதான் நாமளும் எந்தச் சூழல்லயும் மாறாம நம்ம வேலையை பாத்துக்கிட்டே இருக்கணும். நம்ம வேலை எதுவோ அதை சூழல் பாக்காம செய்யப்பழகணும். அப்பதான் லட்சியத்தை அடையமுடியும்.
நாற்காலில உக்காந்துதான் படிப்பேன். எங்க வீட்டில் தூங்கினாத்தான் எனக்கு தூக்கம் வரும்.ஒரே மூட் அவுட்.! இன்னிக்கு விட்டுட்டு நாளைக்கு படிக்கிறேன். இன்னிக்கு மழையா இருக்கு.., ஏண்டா இந்த வேலைக்கு வந்தோம்னு இருக்கு, இன்னிக்கு எனக்கு நேரமே சரியில்லை! மேலதிகாரி சரியில்லைன்னு ஏதாவது ஒரு சாக்குப்போக்கு சொல்லி நாம பிரச்னைல சோந்து போய் ஒக்காந்திருக்கோம். அல்லது - தப்பிக்கப்பாக்குறோம்.

பென்சில்கிட்டேயிருந்து கத்துக்க வேண்டிய முதல் விஷயம், இதுதான். எந்த சூழலிலும், நாம கலங்காம இருந்தாலே பாதி வெற்றியை அடைஞ்ச மாதிரிதான்.அதாவது வெளிச்சூழ்நிலை உங்க வேலையையோ,படிப்பையோ எக்காரணம் கொண்டும் பாதிக்கக்கூடாது. ஆனா பாதி பேர் வெற்றி இப்படி ஆகிடுது!

மொக்கச்சாமி இருந்த நாட்டு ராஜாவுக்கு ஒரு பொண்ணு.! ரொம்ப அழகா இருக்கும். அதுக்கான மாப்பிளை தேடும் முயற்சில இருந்தாரு ராஜா! அதுனால ஒரு அறிவிப்பு வெளியிட்டாரு. நம்ம நாட்டு அகழில யார் குதிச்சு , நீச்சலடிச்சு ,அந்தப்பக்கம் வராங்களோ, அவுங்களுக்குத்தான் இளவரசியை கட்டிக்கொடுப்பேன்ன்னுட்டாரு. அதே மாதிரி எல்லாரும் கூட்டமா அகழிமுன்னாடி கூடிட்டாங்க! அகழிக்குள்ள பாத்தா, பெரிய பெரிய முதலைங்களா இருக்கு! யாருமே குதிக்காம பயத்தோட வேடிக்கை பாத்துக்கிட்டிருந்தாங்க! ராஜாவுக்கு கவலையா ஆகிடுச்சு.! நம்ம நாட்டுல வீரன் யாருமே இல்லையான்னு கூட்டத்தைப்பாத்து கேட்டாரு.! திடீர்ன்னு நம்ம மொக்கச்சாமி படக்குன்னு பாஞ்சுட்டாரு..! கத்திக்கிட்டே எப்படியோ எதிர்க்கரைக்கும் வந்துட்டாரு. ராஜாவுக்கு ஒரே சந்தோஷம். உடனே மொக்கச்சாமியைக்கூப்பிட்டு, அடேயப்பா! உன்னைமாதிரி ஒரு தைரியசாலியை நான் பாத்ததே இல்ல! என் மகளை மணக்க தகுதியான ஆள் நீதான் ன்னு சொல்லி பாராட்டினாரு. ஆனா மொக்கச்சாமி படபடப்பாவே இருந்தாரு. அதெல்லாம் இருக்கட்டும் ராஜா! என்னைய அகழிக்குள்ள தள்ளிவுட்டது யாருன்னு மட்டும் கண்டுபிடிங்க! அவனுக்கு இருக்கு வேட்டு ! ன்னாரு.


தொல்லை தொடரும்.. (அய்....தொனாவுக்கு தொனா)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...