செம்மரச் சந்தேகங்கள் !
எத்தனையோ கேள்விகள் இடிக்கிறது !!
செம்மரக்கடத்தல் தவறுதான்… ஆனால் அது சுட்டுக்கொல்லும் அளவுக்குக் குற்றமா?
தப்பிச்செல்ல முயற்சிப்பவர்கள்… சுட்டுக்கொல்லப்படும் வரை அவ்வளவு பெரிய கட்டையை தூக்கிக்கொண்டேவா ஓடினார்கள்?
தாக்கினார்கள் என்றால், திருப்பி துப்பாக்கியால் சுடும் அளவுக்கு தூரத்தில் இருந்தார்களா? அப்படியென்றால், எதனால், எங்கு தாக்கினார்கள்...?
20 பேரும் கையில் செம்மரக்கட்டையையும் வைத்துக்கொண்டு, எதனால் தாக்கியிருக்கமுடியும்?
கீழே போட்டுவிட்டுத் தாக்கினார்கள் என்றால், ஓடும்போது சுட்டிருந்தால், அந்தக் கட்டைகள் அருகிலேயே மீண்டும் வந்து படுத்துக்கொண்டார்களா?
பிடிபட்டு தப்பிப்பவர்கள்தான் தாக்குவார்கள். மரம் கடத்தியவர்களை இன்னும் பிடிக்கவே இல்லை எனும்போது, அவர்கள் ஏன் தாக்கித் தப்பிக்கவேண்டும்.?
அதெப்படி இருபது பேரும் ஒரே வரிசையில் சுடப்பட்டார்கள்? இவர்கள் மட்டும் ஒரே வேகத்தில், சம தூரங்களில் ஓடிக்கொண்டிருந்தார்களா?
சுட்டது எத்தனை காவலர்கள்? அவர்கள் ஓடிய அனைவரையுமே குறிபார்த்துச் சுடும் அளவுக்கு அப்பாடக்கர்களா?
ஒரு குற்றம் நடந்தால், அதைச் செய்யத்தூண்டியவருக்கு(த்தான்) தண்டனை தரவேண்டும் என்று சட்டம் சொல்கிறது. அப்படி இருக்கும்போது, இவர்கள் நேரடியாக செம்மரத்தை வெட்டி, ஏற்றுமதி செய்ப்வர்களா? அல்லது, இவர்களை இப்படி வெட்டிவரச்சொன்ன முதலாளி யார்?
அந்த முதலாளியைக் காப்பற்றத்தான், ஒரு தடயமும் சாட்சியாகக் கூட பிடிபட்டுவிடக்கூடாது என்று குற்றம் செய்ததாகச் சொல்லப்படும் தொழிலாளர்கள் சுடப்பட்டார்களா?
இயற்கை வளம் சுரண்டப்பட்டுவிடக்கூடாது என்பதில்… அவ்வ்வ்வளவு அக்கறை நிறைந்தவர்களா அரசும், வனக்காவலர்களும்? அப்புறம் ஏன், மத்தியப்பிரதேசம் , சத்தீஸ்கர் போன்ற பல மாநிலங்களில் வனக்காவலர்களே , பழங்குடி மக்களை வைத்து பல இயற்கைப் பொருட்களைக் கடத்துகிறார்கள்?
செம்மரக்கடத்தலில் அவர்களுக்கும் பங்கிருப்பதாக பல ஆண்டுகளாக ஆந்திர வனத்துறை மீது பல்வேறு தெலுங்கு ஊடகங்கள் சொல்லிவருவது சரிதானோ?
கேள்விகேட்க ஆளில்லையென்றால், நாங்கள் காவலர்களாக இருக்க மாட்டோம். யாரையோ காக்க, யாரை வேண்டுமானாலும் போட்டுத்தள்ளுவோம் என்பதுதான் ஆந்திர வனத்துறையின் சட்டமா?
மனித உரிமை … மனித உரிமை என்று கதறிக்கொண்டிருக்கும் தேசத்தில், மனித உயிர்கள் துச்சமாவதுதான் நமது நாகரீக வளர்ச்சியா?
இயற்கையைக் காக்கிறேன் என்று போலியாகச் சொல்லிக்கொண்டு, மனிதனைப் பலிகொடுக்கத்தான், மனிதக்காவலர்களை நாம் வளர்த்துக்கொண்டிருக்கிறோமா?
சட்டம் தன் கடமையை இப்படித்தான் செய்யுமா?
அய்யா… நான் தமிழன் என்று கொதிக்கவில்லை.. இந்தியன் என்று கூவவில்லை., ஏழைப்பங்காளன் என்று எழுந்திருக்கவில்லை. மனிதன் என்றுதான் மருகிக்கொண்டிருக்கிறேன். சக மனிதனுக்கு இப்படி நடந்தது பதைக்காதா?
இந்தக் கட்டையைக் கொண்டு சேர்க்கவேண்டிய இடத்தில் சேர்த்தால்தான் அடுத்த வேளை சோற்றுக்கு கொஞ்சமாவது காசு கிடைக்கும். கிராமத்தில் விட்டுவந்த மனைவி குழந்தைகள் முகத்தைப்பார்க்கலாம் என்று – செய்வது தவறு என்று தெரிந்தும் – உயிர்வாழத் தவறு செய்தவர்களின் உயிரைப் பறித்தது எந்த விதத்தில் நியாயம்…?
எவனோ ஒரு செம்மரக்கடத்தல் சாம்ராஜ்ய அதிபனைக் காக்க – தன் அதிகாரிகளின் ஆணையைத் தீர்க்க – சட்டத்துக்கு முன் நிறுத்தியிருக்கவேண்டியவர்களை , கண்ணுக்கு முன் அப்பாவி என்று தெரிந்தும் சுட்டுக்கொன்றுவிட்டு, அன்றிலிருந்து, மனசாட்சி உறுத்தியே அச்சத்தில் வாழப்போகிற ஏதோ ஒரு காவலன் எழுதப்போகும் சுயசரிதை மட்டும்தான் நடந்த தவறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருமா?
அதுவரை நாமும் சொரணை இன்றிக் காத்திருப்போம்.
மனிதம் வாழ்க !
Correct point sir.....
ReplyDeleteபணம் எனும் பிணம் தின்னி கழுகுகள்...
ReplyDelete