அத்தை மகனே !

          என் அத்தைமகனை நான் என் பாட்டி வீட்டுக்குப்போகும்போதுதான் பார்த்தேன். மிகவும் அழகாக படியப்படிய தலையை வாரிக்கொண்டு, என்னை குறுகுறுவென்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அப்போதுதான் என் பாட்டி , தாத்தா , பெற்றோர் எல்லோரும் சொன்னார்கள்! இவனோடுதான் உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடப்போகிறேன் என்று! அதற்கு முன்னரே ஒரு கிராமத்தில் காரணமே இல்லாமல், பதிவேட்டிலும் பெயர்  இல்லாமல் ஆறு மாதங்கள் பள்ளி சென்றிருக்கும் மமதை என்னிடம் கொஞ்சம் இருந்தது. அவனை ஏற இறங்கப்பார்த்துவிட்டு பழக ஆரம்பித்தேன்.

         ஒன்றாகப் பள்ளி செல்லத்தொடங்கினோம். ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என இரண்டு வருடங்கள் அவனும் நானும் சேர்ந்து படித்தோம்.
பள்ளிக்கு இருவரும் சேர்ந்தே செல்லுவோம். திரும்பவும் சேர்ந்தே வருவோம். ( இப்போதுபோல் அடுத்த தெருவில் உள்ள பள்ளிக்குக்கூட ஆட்டோவோ, பள்ளிப்பேருந்தோ இல்லாத காலகட்டம் அது) பள்ளியும் 2 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது.

            அடிக்கடி அன்பையும் , அதற்குமுன்னால் அடிகளையும் பரிமாறிக்கொண்டு வளர்ந்த அந்த பால்யத்தில் , அடிப்படையில் எங்களுக்கிடையே ஒரு அதீத பாசம் இழையோடியிருக்கவேண்டும். அதனால், அத்தை தனியாக ஊருக்கு வரும்போது, அவனை முதலில் விசாரிப்பது என் வழக்கங்களில் ஒன்றாகிப்போனது. அனேக தருணங்களில், அவன் தன் தம்பிகளுடன், எங்கள் ஊருக்கு விடுமுறைக்கு வருவான். நன்கு விளையாடுவோம். கிரிக்கெட் என்ற விளையாட்டையும் அதன் சட்டதிட்டங்களையும் கற்றுத்தந்தவன் என்ற வகையில் அவனிடம் எப்போதும் ஒரு மரியாதை உண்டு.

மிகவும் நன்றாகப் படிப்பான். குடும்பத்தில் என்னுடன் ஒப்பிட அவனைத்தான் அதிகமாக என் தந்தை பயன்படுத்தியிருக்கிறார். பள்ளிக்காலத்தில், எங்கள் மதிப்பெண்கள் இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் ஓட்டங்கள் மாதிரி பார்க்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் நாங்கள் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்ளவும், வாழ்த்திக்கொள்ளவும் தவறியதில்லை!

               நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, அவனுக்கு வங்கியில் வேலை கிடைத்தது. அதை அறிந்து என் வீட்டில் என்னுடன் அவனை ஒப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவனுக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்களை மனதுக்குள்ளேயே சொல்லியவன் நான் தான்.! ஏனெனில் என் தந்தை ஒரு அரசு அதிகாரி! எங்களுக்கு எந்த பிரச்னையுமில்லை! நான் வேலை பார்த்துத்தான் என் குடும்பத்தை காக்க வேண்டும் என்ற கவலை இல்லை! ஆனால் அவனது தந்தையோ, ஒரு தனியார் திரையரங்கு மேலாளர்! அதனால் என் அத்தையின் சிக்கனமான நடவடிக்கைகளாலும், நிர்வாகத்திறனாலும்தான் அந்தக்குடும்பம் நடந்துகொண்டிருந்தது. அதை தூக்கி நிறுத்த அவனைப்போன்ற ஒரு பொறுப்பான பிள்ளைக்கு நல்ல வேலை கைகொடுக்கவேண்டும் என்று நான் விரும்பியது நடந்ததும் நான் மகிழ்ந்ததற்கு முதற்க்காரணம்.! அதேபோல் அவனும் வங்கிவேலையில் சேர்ந்து பல தேர்வுகளை எழுதி இன்று ஒரு பன்னாட்டு வங்கியின் அன்னியச்செலாவணி மேலாளராக கம்பீரமாக வலம் வந்துகொண்டிருக்கிறான்.

            எங்கள் சந்திப்புகள் எப்போதும், அன்னியோன்யமாகவே இருந்திருக்கின்றன. நீண்ட நாட்கள் தொலைபேசாமல் இருந்தாலும், பேச ஆரம்பிக்கும்போது மிகச்சாதாரணமாக காலையில்தான் சந்தித்ததுபோல இயல்பாக ஆரம்பிப்பான். அதேபோல் அவர்கள் வீட்டில் ஒரு நாள் நாங்கள் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்ததைப்பற்றி இப்போதும் என் அத்தை சிலாகிப்பார்கள். அதில் என்ன விசேஷம் என்றால் நாங்கள் இரவெல்லாம் பேசிக்கொண்டிருந்தது இரகசியங்கள்! தலைக்கு அருகில் படுத்திருந்த அத்தைக்கே கேட்கவில்லையென்றால் பாருங்கள்!

          எனக்கு வங்கித்துறையில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வான். மிகச்சாதாரணமாகப் பழகுவான். வேலைத்தளத்தில் அவனைக்கண்டால் அனைவரும் மதிக்கும்படி வேலைபார்ப்பான். இருவருக்கும் சம வயது எனினும், என்னைவிட இளமையாகக்காட்சி தருவான். அவன் கொஞ்சம் நன்றாகச் சாப்பிடலாம் என்பது என் அபிப்ராயம்.! அவன் தாய்தந்தையை மிகவும் நேசிப்ப்வன்.! மதிப்பவன். அதை அவர்களிடம்
காட்டிக்கொள்ளத்தெரியாதவன்.! நிறைய உதவும் மனப்பாங்கு கொண்டவன்.

        அவனுக்கும் எனக்கும் குணத்தில் மிகுந்த வேறுபாடுகள்! நான் பேசும் பேச்சுக்களை எழுத ஆரம்பித்தால் 20 வருடப்பேச்சுக்களை எழுத 60 ஆண்டுகள் ஆகும். அவன் 20 ஆண்டுகள் பேசியதை அதிகபட்சம் ஒரு வாரத்தில் எழுதிவிடலாம். அவ்வளவு குறைவாகப்பேசுவான். நான் உணர்ச்சிவசப்படுவேன். அவன் உணர்ச்சிவசப்படுவதை நான் கண்டதே இல்லை. நான் ஒரு கருத்துக்கள் நிறைந்த யதார்த்தவாதி! அவனோ யதார்த்தம் நிறைந்த கருத்தானவன்! இப்படி நிறைய வித்தியாசங்கள்.!

          ஆனாலும் அந்த பள்ளிக்கூடப்பழக்கமோ, அத்தைமகன் என்ற உறவோ, சம வயதோ - ஏதோ ஒரு காரணம் அவனை எனக்கு நெருங்கிய நண்பனாக வைத்திருக்கிறது. ஜூலை 24 கஸின்ஸ் டே என்று மேலைநாடுகளில் கொண்டாடுகிறார்கள். நாம் கொண்டாட ஆரம்பித்தாலும் இல்லாவிட்டாலும் அவனுக்கு என் வாழ்த்துக்களை கூறிக்கொண்டே இருப்பேன். என் நட்பான உறவினன் இராஜாவுக்கு!

 

Comments

 1. வருடத்தில இருக்கற ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தருக்கு டெடிகேட் பண்ணிட்டாங்க போலிருக்கு.

  அத்தைமகளைத்தான் அனாவரும் சிலாகிப்பார்கள்.

  அத்தைமகனை சிலாகத்து எழுதியிருக்கிறீர்கள். அதில் உங்கள் நட்பு தெரிகிறது.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. கஸின்ஸ் டே வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. பொண்ணா இருந்திருந்தா கலியாணம் பண்ணியிருந்திருக்கலாம்.

  ReplyDelete
 4. /
  பள்ளிக்காலத்தில், எங்கள் மதிப்பெண்கள் இந்திய-பாகிஸ்தான் கிரிக்கெட் ஓட்டங்கள் மாதிரி பார்க்கப்பட்டிருக்கின்றன.
  /

  எல்லா வீட்டுலயும் இப்பிடித்தானா :(

  நல்லா கொசுவத்தி சுத்திருக்கீங்க!!

  ReplyDelete
 5. ஓ, கஸின் டே யெல்லாம் இருக்கா?

  ReplyDelete
 6. //புதுகைத் தென்றல் said...

  அத்தைமகனை சிலாகத்து எழுதியிருக்கிறீர்கள். அதில் உங்கள் நட்பு தெரிகிறது.

  வாழ்த்துக்கள்.//

  வாங்க! நீண்ட நாட்களுக்குப்பிறகு அவனிடம் நேற்று பேசினேன். எழுதவேண்டும்போல் இருந்ததால்...

  நன்றிங்க!

  ReplyDelete
 7. சின்ன அம்மிணி said...

  //பொண்ணா இருந்திருந்தா கலியாணம் பண்ணியிருந்திருக்கலாம்.//

  வாங்க வாங்க!

  அட ஆமாங்க! நீங்க வேற ! அத்தைக்கு மூன்றும் மகன்கள்! :( :(

  ReplyDelete
 8. சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

  ஓ, கஸின் டே யெல்லாம் இருக்கா?//

  அதானே, கஸின் டே எல்லாம் இருக்கா ;-)...

  ச்சே, பெண்ணா பொறாக்காம போயிட்டாரே, ராஜா? இருந்தாலும் நீ அதனையும் மிஸ் பண்னியிருப்பா, சம வயசா இருந்தா நமக்கு முன்னாடியே பொண்ணுங்க திருமணமாயி போயிடுங்க முதல்ல, ஏன்னா நாம பல விதத்தில வளர்ந்துதான் அந்த தகுதியையே அடைவோம்...

  என்னடா இப்படி அனுபவப் பூர்வமா சொல்றேனேன்னு பார்க்கிறீயா, அந்தக் கதையை ஏன் கேக்குறே ;).

  ReplyDelete
 9. sureka!
  உங்கள் நட்புக்கு வாழ்த்துக்கள்!

  july 24th cousine dayva?
  happy cousine day.

  sari july 25th yenna day?nnu theriyuma?


  ***************************
  for u
  did u received my first comment to this post?
  i got doubt that is why i am sending again.

  ReplyDelete
 10. அப்பப் பூனை டே என்னிக்கு?

  ReplyDelete
 11. உறவின‌ர்க‌ளிடையே ந‌ட்பு பார‌ட்டுத‌ல் என்ப‌து அரிதான‌தே.
  உஙக‌ள் இருவ‌ரிடையே இருப்ப‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்.

  க‌சினுக்கு த‌மிழில் என்ன‌?
  ஒன்று விட்ட ச‌கோத‌ர‌ர் "தின‌மா"?

  ReplyDelete
 12. //துளசி கோபால் said...

  அப்பப் பூனை டே என்னிக்கு?//

  வாங்கம்மா!

  அமெரிக்கால...அக்டோபர் 25 தேசிய பூனைதினம்!

  feral cats day - அக்டோபர் 16.

  இந்த வருஷம் நல்லா கொண்டாடுங்க !!!
  ம்யாவ் :)

  ReplyDelete
 13. //umakumar said...

  உறவின‌ர்க‌ளிடையே ந‌ட்பு பார‌ட்டுத‌ல் என்ப‌து அரிதான‌தே.
  உஙக‌ள் இருவ‌ரிடையே இருப்ப‌த‌ற்கு வாழ்த்துக்க‌ள்.

  க‌சினுக்கு த‌மிழில் என்ன‌?
  ஒன்று விட்ட ச‌கோத‌ர‌ர் "தின‌மா"?//

  வாங்க வாங்க!

  நன்றிங்க!

  கசின்னு மொத்தமா ஆங்கிலத்தில் சொல்லிடறோம்
  ஆனா ஒவ்வொரு உறவுக்கும் தமிழில் பெயர் இருக்கே!

  நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்.

  ReplyDelete
 14. //சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

  ஓ, கஸின் டே யெல்லாம் இருக்கா?//

  ஆமாங்க...அமெரிக்கால இருக்கு!!

  ReplyDelete
 15. //மங்களூர் சிவா said...


  எல்லா வீட்டுலயும் இப்பிடித்தானா :(

  நல்லா கொசுவத்தி சுத்திருக்கீங்க!!//

  வாங்க சிவா...!

  ஆமாங்க..அதே கூத்துதான்.!
  அங்கயும் அனுபவம் போல!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

உன்னைக் காணாது நானிங்கு..