நாடா நினைவுகள்     வீடு மாற்றும்போது, பழைய பொருட்களை பரணில் இருந்து இறக்கிக்கொண்டிருந்தேன். ஒரு பெரிய அட்டைப்பெட்டி கண்ணில் பட்டது. அட! என்று ஆசையுடன் அதை இறக்கிவைத்து விட்டு, திறந்து காட்டி, இதையும் சென்னை கொண்டு போறோம். என்று தங்கமணியிடம் சொல்ல, ”ஹ்க்க்ம்!” என்ற ஒரு கனைப்பு வந்தது. அதற்கு என்ன அர்த்தம் என்று அவரிடம் கேட்கவும் முடியாது.
பாட்டு கேட்பது என்பது இப்போது மிகவும் எளிமையான செயல். கேட்க நினைக்கும் பாடலை இணையத்தில் தேடி, நமது இசைபாடும் கருவியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் கேட்கத்தொடங்கிவிடலாம். இதில் இருக்கும் வேகமும், எளிமையும் நம்மை பரவசத்தில் ஆழ்த்துவது உண்மைதான்!
ஆனால்,ஒரு காலத்தில், திருவிளையாடல் படத்தின் அனைத்துப்பாடல்களும், ஒரு கருப்பு வட்டத்தட்டில் இருக்கும். அதற்கு இசைத்தட்டு என்று தமிழிலும், ரெக்கார்ட் என்று ஆங்கிலத்திலும் கூறினார்கள். இந்த வார்த்தைகளை நான் மனப்பாடம் செய்துகொள்ள பலமுறை சொல்லிப்பார்த்திருக்கிறேன். அதனை ஒரு பெரிய அட்டை உறையில் போட்டு வைத்திருப்பார்கள். ஒவ்வொருமுறை பாடலை ஒலிக்கவிடும்போதும், ஒரு பெரிய கிராமபோன் பெட்டியில் போட்டு சுழல விடுவார்கள். இப்போதுபோல் பாடலை உடனே தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், இலுப்பூர் பிடாரிகோயிலில் இசைத்தட்டு போடும் அந்த அண்ணன் இப்ப பாக்குறியா? கரேட்டா ‘பாட்டும் நானே’ போடுறேன் என்று ஓரளவு அதற்கு அருகில் போய் முள்ளை வைத்துவிடுவார். அது ’பாத்தா பசுமரம்’ என்று ஆரம்பிக்கும். எப்படி மாறிப்போச்சு என்று முனகிக்கொண்டே, மீண்டும் முயற்சித்து பாடவைத்துவிடுவார்.
லேசான கொரகொரப்புடன் அது ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என ஆரம்பித்து ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்று ஆரம்பிக்கும்போது, நான் அவ்வையார் இதற்குள் எப்படிப் போனார் என்று பலமுறை வியந்திருக்கிறேன். ஆனால், கிராமபோன் வாங்கித்தாருங்கள் என்று அப்பாவிடம் கேட்க எனக்கும் தைரியமில்லை. வாங்கிவந்தால், மூன்றாவது நாள் அதை நோண்டாமல் ஒழுங்காக வைத்திருப்பேனா என்று என்மேலும் நம்பிக்கையில்லை. ஆனால், அதில் அவ்வளவு ஆசை இருந்தது.
பின்னர் பாடல்கள் கேட்கும் ஆர்வம் , வானொலியிலும், எங்காவது செல்லும் விழாக்களிலுமாக சுருங்கியிருந்த வேளையில், பக்கத்துவீட்டு லைப்ரேரியன் வீட்டில், சிங்கப்பூரிலிருந்து ஒரு பெரிய பெட்டிபோன்ற வஸ்து வந்து அமர்ந்திருந்தது. சிறுவர்கள் அனைவரும் அதைச்சென்று பார்த்தோம். அதன் பெயர் நேஷனல் டேப் ரெக்கார்டர் என்றார்கள். அது என்ன ஒற்றுமை என்று தெரியவில்லை. அதில் நான் கேட்ட முதல் பாடல் ‘ இசையால் வசாமாகா இதயமெது?’. அன்றே அந்த டேப் ரெக்கார்டரில், என்னைப்பாடச்சொல்லி, பதிவுசெய்வதாகச் சொன்னார்கள். நான் பாடிய முதல் பாடல் ‘ புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!’
பாடல்கள் பெட்டியிலேயே இருக்குமா? அல்லது வெளியில் எடுக்கலாமா? இசைத்தட்டு எங்கே வைப்பார்கள்? முள்ளை எப்படி நகர்த்தி வைப்பது? பட்டனெல்லாம் எதுக்கு? செவப்பு பட்டனை ஏன் அமுக்கினீங்க? என்று நான் கேட்ட கேள்விகளால் அந்த கருப்பையா மாமா திணறித்தான் போயிருப்பார். சொல்றேன் என்று கூறிவிட்டு, ஒரு பட்டனை அழுத்தினார். பிளந்த எங்கள் வாய்கள் போலவே ஒரு சிறிய கதவு திறந்தது. அதிலிருந்து, ஒரு பொருளை எடுத்தார்.  இருபுறமும் துளைகளுடன் ஒரு செவ்வகப்பெட்டி. அதில் ஒருபக்கம் மட்டும் வெளியில் தெரியும் காப்பிப்பொடி நிற நாடா. அதைச்சுற்றிக்கொள்ள இரு துளைகளிலும் சுழலுமாறு இரு சக்கரங்கள் என மிகவும் அழகாக இருந்தது. அதனுள் இருக்கும் நாடாவில்தான் பாடல் இருக்கும் எனவும், அது ஒருபக்கம் சுற்றிமுடித்தபின் திருப்பிப்போட்டால், வேறு பாடல் கேட்கலாம் எனவும் தெரிந்துகொண்டேன். அது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஏனெனில், நம் குரலையும் அதில் பதிந்துகொள்ளலாம் என்ற இன்னொரு அம்சம்! அதற்கு கேசட் என்று பெயர் சொன்னார்! ‘சட்டுன்னு பாட்டு கேட்கலாம் என்று யோசித்து ‘கேள்-சட்’ ஐத்தான் இப்படி வைத்திருக்கிறார்கள் என்று நானாகவே ஒரு காரணம் யோசித்துவைத்துக்கொண்டேன்.


அப்போதிலிருந்து ஆரம்பித்தது கேசட் மோகம். கேசட்டுகளை எங்கு பார்த்தாலும் ஆசையாக இருக்கும். வெளிவரும் எல்லா கேசட்டுகளையும் வாங்கிவிடவேண்டும் என்று லட்சியம் வைக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கேசட் கடைக்காரர்கள் மீது பொறாமையாக இருக்கும். பிடாரிஅம்மன் கோயில் அண்ணன் கேசட் ப்ளேயருக்கு மாறியதும் கேசட்டுகளின் நெருக்கம் அதிகமானது. தெரிந்த விழாக்களுக்குச்செல்லும்போது, முதலில் மைக் செட் அண்ணனை நட்பாக்கிக்கொள்ளுவது அத்தியாவசியமாகிப்போனது.


                                     நாடா நினைவுகள் தொடரும்....!

Comments

  1. கேல் சட்.. சூப்பர்.. சுரேகா..:)

    ReplyDelete
  2. அன்பின் சுரேகா - எண்பதுகளின் துவக்கத்தில் இக்கேசட்டுகளூம் - கேச்ட் ரெகார்ட் பிளேயரும் வைத்து பொத்திப் பொத்தி பயன் படுத்தியது நினைவில் மலரும் நினைவுகளாய் நிழலாடுகிறது. நல்ல தொரு கொசு வத்தி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

உன்னைக் காணாது நானிங்கு..