மரணதண்டனைக்கு மரணதண்டனையா?











இப்போதைய நிகழ்வான மூவரின் மரணதண்டனை  கருணை மனு நிராகரிப்புக்குப் பின், நடக்கும் இருபக்க தர்க்கங்களையும் ஒரே இடத்தில் தொகுத்தால் என்ன என்று தோன்றியது. கேள்விப்பட்ட, நண்பர்களிடம் விவாதித்த, படித்த, ஊடகங்களில் பார்த்த விபரங்களின் அடிப்படையில், எனது வார்த்தைகளால் கோர்த்து ஒரு வடிவமாக்கினால், அது இப்படியாக இருக்கிறது. 



வாதங்கள் 


1. முதன்மையாகத் தவறுசெய்த சிவராசன், தனு ஆகியோர் இறந்தாயிற்று. ஆதி மூளையாய்ச்செயல்பட்ட பிரபாகரனையும் திட்டமிட்டு இலங்கை அரசுடன் சேர்ந்து கொன்றுவிட்டோம் என்று அறிவித்தாயிற்று. இப்போது பேட்டரி வாங்கிக்கொடுத்தார் என்ற சப்பைக்காரணங்கள் கொண்டு ஒரு நிரபராதிக்கு மரணதண்டனை வழங்குதல் அநீதியானது. 

2. இன்றுவரை எத்தனையோ கொலைச்செயல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் பதவிசுகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, ஏதோ ஒரு வேகத்தில் தவறு செய்தவர்களுக்கு இருபது ஆண்டுகால சிறைத்தண்டனை போதாதா? இன்னும் அவர்களைக் கொன்று என்ன பலன் அடையப்போகிறது இந்த அரசும்..நீதிமன்றங்களும்? 



3. தாமதமாக ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டு, அதைவிடத்தாமதமாக கருணை மனுவை நிராகரித்தது , தனி மனிதர்களாக அவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சலைத் தந்திருக்கும்.? இனியேனும் அவர்களை நிம்மதியாக, திருந்தி வாழவிடுவதுதான் மனிதாபிமானம்.! 



4. சோனியா காந்தியின் பழிவாங்கும் உணர்வுக்கு, பலியான தமிழர்கள் லட்சக்கணக்கானோர். ! இப்போது தனது தலைமையிலான அரசின் பங்காக, இந்த மூன்று தமிழர்களையும் கொன்று என்ன சாதித்துவிடப்போகிறார்? அப்படியே கொன்றாலும்.. இறந்த ராஜீவ் காந்தி திரும்ப வருவாரா? 



5. மகாத்மா காந்தியின் கடைசி வேண்டுகோள். கோட்சேயை ஒன்றும் செய்யவேண்டாம் என்பதுதான். அத்தகைய மாமனிதரின் கட்சியான காங்கிரஸ் ஆட்சி நடத்தும்போது , அஹிம்சை வழி வந்த ஒரு தேசம். தவறுசெய்தார்கள் என்று வைத்துக்கொண்டால் கூட அவர்களை மன்னித்தல்தானே மாண்பு! 



6. ராஜீவின் மரணம் ஜீரணிக்க முடியாததுதான்.! ஆனால், அதற்காக ஒட்டுமொத்த தமிழினமே அழியவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் காங்கிரஸ் அரசுடன், தமிழக காங்கிரசாரும் ஒத்துப்போவது இன்னும் கொடுமை! இந்த நேரத்திலாவது தமிழர்களுக்காக குரல் கொடுக்காவிட்டால், பின்னர் எப்போதும் கொடுக்கமுடியாதபடி போய்விடும். 



7. பேரறிவாளன் உண்மையிலேயே நிரபராதி. அவருக்கு ராஜீவை கொல்லப்போகிறார்கள் என்று தெரியாது. தவறு செய்தவர்களின் கூட இருந்த காரணத்துக்காக மரணம் என்பதெல்லாம் சர்வாதிகார நாடுகளில்கூட இல்லாத நடைமுறை! இது முழுமையான பழிவாங்கும் உணர்வைக்காட்டுகிறது. அல்லது யாரையோ காப்பாற்ற பேரறிவாளன் பலியிடப்படுகிறார். 



8. மரணதண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற வாதம் இரண்டாம் பட்சம்தான்.! இவர்களை விடுவிக்கவேண்டும் என்பதுதான் முதல் நோக்கம். ! அதுதான் ஈழத்தமிழர்களுக்கு , நாம் தரும் சிறு ஆறுதலாக இருக்கும்! 



9. கருணை மனு ஒன்றை 12 ஆண்டுகளாக தன் அலுவலகத்தில் வைத்திருந்த குடியரசுத்தலைவர்கள் அந்தந்த கட்சிகளின் விருப்பத்திற்கேற்ப முடிவடுக்காமல், தன்னிச்சையாக முடிவெடுத்திருந்தால், மூவரும் விடுதலையாகி எத்தனையோ ஆண்டுகள் ஆகியிருக்கும். 



10. தமிழக அரசு, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து , ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினால் , மீண்டும் கருணை அடிப்படையில் பரிசீலித்து, தண்டனையைக்குறைக்க வாய்ப்பிருக்கிறது. 



11. தெரிந்தோ, தெரியாமலோ, செங்கொடி என்ற இளம்பெண் தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். அவளது உயிருக்கு மதிப்புக்கொடுத்தாவது மூவரின் உயிரைக்காப்பாற்றுவது ஓவ்வொரு தமிழரின் கடமையாகும். 



12. இது ஒரு தொடர் வினைதான்.. ! ராஜீவ் அமைதிப்படை அனுப்பினார். அது அட்டூழியம் செய்தது. அது தாங்காமல் புலிகள் ராஜீவைக்கொன்றனர். கொன்றவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். தலைவர் பிரபாகரனையும் ,இயக்கத்தையும் - பழிவாங்கும் நடவடிக்கையாக – இலங்கைக்கு ஆயுதம் கொடுத்து, இல்லாமல் செய்தாகிவிட்டது. அவ்வளவுதானே..மீண்டும் ஏன் சோனியா தன் வலியுறுத்தலால் குற்றவாளிகளுக்கு உடந்தை என்ற காரணத்துக்காக, இந்த அப்பாவிகளை தண்டிக்கவேண்டும்? 



13. இது முழுக்கமுழுக்க மனிதாபிமான அடிப்படையிலான கோரிக்கையும், போராட்டமுமே தவிர, சட்டத்தை வளைக்கவோ, தவறுகளை நியாயப்படுத்தவோ அல்ல! அதை மனதில் கொண்டால் இவர்களை விடுவித்து மூன்று குடும்பங்களில் நிம்மதியை ஏற்படுத்தலாம். 



14. ராஜீவ்காந்தி என்ற ஒரு மனிதனின் உயிர் இழப்புக்கு, சோனியா இன்னும் எத்தனை லட்சம் தமிழர்களின் உயிர்களைப் பலிவாங்கப்போகிறார்? 



தமிழர்களை சொரணைகெட்டவர்களாக மத்திய அரசு நினைத்துக்கொண்டு எல்லா உரிமைகளிலும் கை வைக்கிறது. கச்சத்தீவு, தமிழக மீனவர்கள், இலங்கைத்தமிழர்கள் என்று திட்டமிட்டு தமிழினத்தை அழிக்கும் செயலில் இந்திய அரசே ஈடுபடுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. சரியோ தவறோ, ஒரு மாநிலத்தின் உணர்வை மதிக்காத நாட்டில் இறையாண்மை என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்? 




                                                                



எதிர்வாதங்கள்: 





1. யாரையோ காப்பாற்ற பேரறிவாளன் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார் என்ற யூகம் விடுத்து, அந்த யார், யார் என்று வெளிப்படையாக காட்டிக்கொடுக்க யாராவது முன்வந்தால்...அவர்களைக் காப்பாற்ற முற்படுவதன் நோக்கம் முழுமையாகும். 



2. முருகனின் மகளை முன்னிருத்தும் ஊடகங்கள், ராஜீவ் இறக்கும்போது அவருக்கும் சிறிய மகள் ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் பிரியங்கா என்று நினைவில் வைத்திருக்கிறதா? 



3. ராஜீவ் கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்து மூவரையும் விடுவிப்பது முக்கியமா? அல்லது தப்பு நடந்துபோச்சு! அதுக்காக நீங்க குடுக்குற தண்டனையை எல்லாம் ஏத்துக்க முடியாது என்று சொல்வது சரியா? 



4. மரணதண்டனை கொடுக்கப்பட்டபின், ’தமிழர்களைக் காப்பாற்றவேண்டும்’ என்ற சொற்பிரயோகம் தேர்ந்த அரசியலாகத்தான் படுகிறது. அப்படியெனில், தமிழர்கள் கொல்ல உதவுவார்கள். தப்பிக்க நினைப்பார்கள் என்ற பொதுக்கருத்தை இந்தியர்களிடத்தில் விதைக்கிறோம். மேலும் அவர்கள் நிரபராதிகள் என்று வைகோ போன்ற வழக்கறிஞர்கள் முன்னரே தானாக ஆஜராகி வாதிட்டிருக்கவேண்டாமா? 



5. இன்றைய ஈழத்தமிழர்களின் அவலநிலைக்கும், அவர்களை கடைசி கட்டத்தில், கொலைகார இலங்கை அரசுக்கு வலியப்போய் உதவிய இந்திய அரசின் போக்குக்கும் அடிப்படைக்காரணம் ராஜீவ் காந்தியின் கொலைதான் என்பதில் மாற்றுக்கருத்தே இருக்கமுடியாது. 



6. அப்படிப்பார்க்கப்போனால், அத்தகைய சதிச்செயலுக்கு உடந்தையாய் இருந்த (அல்லது சட்டத்தால் நிரூபிக்கப்பட்ட) இந்த மூவரும், இன்றைய ஈழ நிலைக்கு எவ்வளவு பெரிய காரணியாய் இருந்திருக்கிறார்கள்? இவர்கள் அதைச்செய்திருக்காவிட்டால், இலங்கையில் இவ்வளவு கொடுமைகளையும் இந்தியா பார்த்துக்கொண்டிருந்திருக்காது. 

7. ராஜீவ் காந்தியின் அமைதிப்படை இலங்கைத் தமிழருக்குச் செய்த அக்கிரமங்கள் தெரிந்திருந்தும், அப்போது வாளாயிருந்துவிட்டு, அவர் மரணத்தின் அனுதாப ஓட்டுகள் பெற்று ஆட்சிகளை மாறி மாறி அனுபவித்த, அத்தனை அரசியல் கட்சிகளும், இன்று முதலைக்கண்ணீர் வடிப்பது ஒரு பொய் அரசியல் அன்றி வேறேதும் இல்லை. 

8. திட்டமிடாமல் செய்யப்பட்ட தருமபுரி பஸ் எரிப்பில் அப்பாவி மாணவிகள் இறக்கக்காரணமாயிருந்தவர்களின் தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காத சமூகம், ஆண்டுக்கணக்கில், திட்டமிட்டு, ஒரு தேசத்தின் தலைவரைக் கொலைசெய்தவர்களுக்கு துணைபோனதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரணதண்டனைக்கு மட்டும் ஏன் இவ்வளவு கரிசனம் காட்டவேண்டும்.? மரணதண்டனை கூடாதென்பவர்கள் அதற்கும் துணை போயிருக்கலாமே? 

9. உண்மையில் இலங்கையில் தமிழீழத்தை நேசிக்கும் எந்த ஒரு ஈழத்தமிழரும், தமிழகத்தமிழரும், ராஜீவின் கொலையை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி இருந்தாலும், இருபது ஆண்டுகள் கழித்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் தீர்ப்பை எதிர்த்து எந்த பிரயோஜனமும் இல்லை. 

10. மேம்போக்காக இவர்களது மரணதண்டனையை எதிர்க்கும் அனைவரும், ஒருவினாடி அமர்ந்து சிந்தித்தால், தனது அண்ணனையோ, அப்பாவையோ திட்டமிட்டுக் கொன்றவர்களுக்கு மரணதண்டனை கொடுப்பதுதான் நீதி என்று ஒத்துக்கொள்வார்கள். அல்லது அவர்களே திட்டமிட்டுக் கொல்வார்கள். 

11. செங்கொடி என்ற அந்தப்பெண் இறப்பை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவோ, தியாகப்படுத்தவோ முடியாது. அப்படிச்சொல்பவர்கள் செய்யட்டுமே அதை…! அது நமது போராட்டத் தலைவர்களாக இருந்தால் இன்னும் பலன் இருக்கும். 

12. அப்சல் குரு அல்லது கசாப்பை தூக்கிலிடக்கூடாது என்று ஐந்துபேர் தீக்குளித்தால் அவர்கள் தியாகி என்று கொண்டாடுமா இந்தச் சமூகம்? இந்த வழக்கை முறையாக எதிர்கொண்டு மூவரையும் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு உணர்ச்சிமயமாகக் கையாள்வது இன்னும் செங்கொடிகளை உருவாக்குமே ஒழிய, தீர்வைத்தராது. 

13.முத்துக்குமரனின் தீக்குளிப்பில் இருந்த ஓலம் உண்மையானது. வன்மையானது. அது அப்பாவிகளின் மரணத்துக்கு எதிரானது. அதில் ஒன்றுகூடுவதில் ஒரு நியாயம் இருந்தது. அதையும் செங்கொடியையும் ஒப்பிடவே முடியாது. பாவம்.. அந்தப்பெண்ணின் பெற்றோரைக்கேட்டால் தெரியும் அவள் இழப்பு என்னவென்று! 

14. கருணை மனுவை பத்து ஆண்டுகள் வைத்திருந்த குடியரசுத்தலைவர்களை என்ன செய்யப்போகிறோம்? அது கருணை அடிப்படையிலான மனுதான்..அதை வைத்து நிரபராதி என்று நினைத்துவிடக்கூடாது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். 

15. இதற்காகப்போராடும், குரல்கொடுக்கும் தலைவர்களில் ஒருசிலருக்கு குற்றத்தின் உண்மையான இழையில் பங்கிருக்கிறது. அதை மறைக்க அவர்கள் போடும் இந்த இன வேஷம், மனிதாபிமான வேஷம், நீதி வேஷமெல்லாம் ‘மரணதண்டனை’ உறுதி என்று தெரிந்தபின் தான் வெளிப்படுகிறது. ஏனெனில் அவர்களுக்கும் தெரியும் இனி இதை மாற்றமுடியாது என்று! 

16. அன்னா ஹசாரேவின் போராட்டத்தை கேலி பேசியவர்கள், இந்தப்போராட்டத்தை ஆதரிப்பது ஒருவித முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகிறது. ஊழலை ஒழிக்கமுடியாது. ஆனால் மரணதண்டனையை ஒழிக்கவேண்டும் என்பது எப்படி சாத்தியம்? ஒரு ஊழல் அரசியல்வாதி..அவனுக்கு வளைந்துகொடுக்காத அதிகாரி.. இவரை அவன் திட்டமிட்டுக்கொல்கிறான். அதற்கு உடந்தையானவர்களையும் சேர்த்து கைது செய்து மரணதண்டனை கொடுக்கிறது நீதிமன்றம்! அவனை விடுவியுங்கள். ஊழலை ஒழிப்பது ஒன்றும் பெரிதில்லை. மரணதண்டனையை ஒழிக்கவேண்டுமென்பது எப்படி நியாயமாகும்? 

17. மனசாட்சியைத் தொட்டுப்பார்த்தால், மூவரின் மரணதண்டனையை ரத்துசெய்யக்கோரி போராடுபவர்களுக்கு தங்கள் ஆதரவை, இருந்த இடத்திலிருந்து தரும் யாரும் அதை உளப்பூர்வமாகச் செய்யவில்லை. ஊரோடு ஒத்து வாழ்ந்துவிடுவோம். எதற்கு வம்பு? பின்னர் நம்மையும் திட்டுவார்கள் என்றுதான் எண்ணிக் கூடுகிறார்கள். தங்கள் கருத்தை ஆரோக்கியமாக முன்வைக்க இந்த சமூகமும், அமைப்புகளும் விடுவதில்லை. 





இன்றைய சூழலில் 

ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது எனும் வாதத்தை இந்த சமூகம் உடைத்து பல ஆண்டுகளாகிவிட்டது. 

இப்போதெல்லாம். ஒரு குற்றவாளியை விடுவிக்க, ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.

முதலில் குற்றவாளியைக்கண்டுபிடிப்போம். அல்லது காட்டிக்கொடுப்போம். பின்னர் நிரபராதிகள் தானாக வெளிவருவார்கள். 



இது போன்ற வாதங்களுடன் பதிவுகள்






Comments

  1. அன்பின் சுரேகா - வாதங்களையும் எதிர் வாதங்களையும் எடுத்து வைத்து ஒரு முடிவு கூறாமல் - வாசகனின் தீர்ப்புக்கே விட்டு விட்டீர்கள். வாதங்களும் சரி - எதிர் வாதங்களும் சரி - பலமாக இருக்கின்றன - தீர்ப்புக் கூறுவ்து கடினம். நல்லதொரு முயற்சி சுரேகா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. படித்தேன் சுரேகா!

    ReplyDelete
  3. Yethirvathangal correctaaa irukkura madiri irukku.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. வாங்க சீனா சார்!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  7. வாங்க செல்வா!

    அப்ப சரி!

    ReplyDelete
  8. என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!