பயணச் CHEAT         

          இந்த மாதத் தொடக்கத்தில், விருதுநகர் செல்லவேண்டிய வேலை இருந்தது. உடனடிப்பயணம் என்பதால், எந்த முன்பதிவும் செய்யவில்லை. அப்படியே கிளம்பி கோயம்பேடு சென்று மதுரை செல்லும் பேருந்தில் சென்றுவிடலாம் என்று திட்டமிட்டேன். அதன்படி கோயம்பேடு சென்றால்,  அங்கு போக்குவரத்தை திருப்பி விட்டிருந்தார்கள். பேருந்து நிலையத்தின் உள்ளிருந்து , பிரதான வாசலை நோக்கி, எல்லா ஊர்களுக்குமான பேருந்துகளும் வந்துகொண்டிருந்தன. வரிசையாக, திருச்சி, சிதம்பரம் என்று படித்துக்கொண்டே வந்தபோது, மதுரை என்று போட்டு ஒரு ULTRA DELUXE பேருந்து நகர்ந்து வந்துகொண்டிருந்தது.
          
          உடனடியாகக் கை காட்டி, மதுரைக்கு இருக்கை இருக்குமா? என்று கேட்டேன். முன்னால் அமர்ந்திருந்த நடத்துனர்,

ஒரு சீட்தான் இருக்கு! ஏறுங்க என்றார்…

உடனே ஏறினேன். வண்டி நகர ஆரம்பித்தது. நான் உள்ளே செல்வதற்குள் , நடத்துனர் என்னை அழைத்து,

’மதுரைக்கு 400 ரூபாய் ஆகும்’ என்றார்.

பேருந்து கட்டண உயர்வுக்குப்பிறகு இவ்வளவு ஆகிவிட்டதா? என்ற அதிர்ச்சியில்
’அவ்வளவா? அடேயப்பா!’ என்றேன்.

’இல்லை..டிக்கட் + முன்பதிவுக்கட்டணம் 350 ரூபாய் வரும். அப்புறம் 50 ரூபாய் எங்களுக்கு?’ என்றார்.

எனக்குச் சுரீரென்றது.
’என்னது? எதுக்கு நான் உங்களுக்கு 50 ரூபாய் அதிகமா குடுக்கணும்?’

’400 ரூபாய் கொடுக்கிறதா இருந்தா உள்ள போங்க! இல்லைன்னா எறங்குங்க! அண்ணே! வண்டியை நிறுத்து…!’ என்றார்.

நானும் சிரித்துக்கொண்டே..
’ஆமாம்.அண்ணே!வண்டியை நிறுத்துங்க! அவர் மேலதிகாரிக்கு போனைப்போட்டு விபரத்தைப் பேசிட்டு கிளம்புவோம்.’என்றேன்.

கொஞ்சம் அதிர்ந்தார். ஆனாலும்.. அவர் ’இதெல்லாம் பேசாதீங்க! குடுக்க முடியலைன்னா கீழ எறங்குங்க!’ என்றார்.

’ஹாஹா..நான் இப்போ காலியா இருக்குற சீட்டில் போய் உட்காருவேன். டிக்கெட் காசு மட்டும்தான் தருவேன்’ என்றேன்.

’அதெல்லாம் ஒத்துவராது. நான் சொல்லாம எப்படி நீங்க எப்படி உட்கார முடியும்? அடாவடி பண்றீங்களா? உங்களையெல்லாம் போலிஸில் சொன்னால்தான்…’.என்று எழுந்தார்.

நான் அவரை மதிக்காமல், உள்ளே சென்று காலியாய் இருந்த 7ம் எண் இருக்கையில் அமர்ந்தேன். பின்னாலேயே ஆவேசமாக வந்த அவர்!
’ஹலோ..வண்டில சீட் இல்லை! இது வி.ஐ.பி .சீட் ..நீங்க எறங்குங்க !’ என்றார்.

’அதெப்படி? உள்ளே ஆளை ஏத்தும்போது மட்டும் இது வி.ஐ.பி சீட்டுன்னு தெரியலையா? அப்படியே இருந்தாலும்…நான் வி.ஐ.பிதான் அதுவாவது தெரியுமா? இல்லைன்னா…மினிஸ்டரை விட்டு உங்களுக்குப் பேசச்சொல்லவா? அப்புறம்..ஏதோ போலீஸ்…ன்னீங்களே…நீங்க கூட்டிக்கிட்டுப் போகவேண்டாம்.. நான் உங்களை கூட்டிக்கிட்டுப் போறேன். இப்ப்வே சொல்றேன். டிக்கட்டுக்கு மேல காசு கேட்டு என்னை பஸ்ல இருந்து இறக்கிவிடறேன்னு மிரட்டுறாருன்னு சொல்றேன்’ என்றேன்.

’அதெல்லாம் தெரியாது நீங்க எறங்குங்க’ என்றார்..

இப்போது நான் சிரிக்க ஆரம்பித்தேன்.
’சார்..! நீங்க இப்ப என்கிட்ட வலுவா மாட்டிக்கிட்டீங்க! டிக்கெட் காசை விட அதிகமா கேட்டது லஞ்சம்.! நான் இப்பவே உங்க SETC விஜிலென்ஸ் கமிஷ்னருக்கு போனைப் போடப்போறேன். நீங்க முடிஞ்சதைச் செஞ்சுக்குங்க! அனேகமா இதுதான் உங்களுக்கு கடைசி வேலை நாளாக இருக்கும்’ என்று சொல்லிவிட்டு என் போனில் எண்ணைத் தேட ஆரம்பித்தேன்.

அதற்குள் அவர்..
’சார்..அது ரிஸர்வேஷன் சீட்டு சார்.. ஆள் ஏறலைன்னா நீங்க உக்காந்துக்குங்க’ என்று கொஞ்சம் இறங்குவதுபோல் பேசினார்.

’அதெப்படி..ரிஸர்வேஷன் சீட்டுன்னு ஏறும்போது தெரியாதா? ஓஹோ..400 ரூபாய் எவன் குடுக்குறானோ அவன்தான் ரிஸர்வ் செஞ்சவன்…அவன் தான் வி.ஐ.பியும் கூட…!’ என்று கத்த ஆரம்பித்தேன்.

‘சரி.உக்காருங்க!’என்று கோபமாக என்னை முறைத்துவிட்டு, தன் இருக்கையில் போய் அமர்ந்துகொண்டார்.

உடனே நண்பர் கேபிள் சங்கருக்கு அழைத்துப் பேசினேன். நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டேன்.

பேருந்து போய்க்கொண்டே இருந்தது. செங்கல்பட்டு தாண்டும்போது, என் அருகில் வந்தார். ஒரு டிக்கெட்டை எடுத்துக்கொடுத்தார்.

அதை வாங்கிப் பார்த்தேன். ரூபாய். 325 என்று போட்டிருந்தது.

இது இன்ப அதிர்ச்சி.! .நடத்துநர் என்னிடம் 50ரூபாய் அதிகம் என்று சொன்னதும் பொய்..! நிமிர்ந்து அவரைப்பார்த்தேன் அவசரத்துக்கு ஏறும் பயணியிடமிருந்து 75 ரூபாய் கறக்க முயற்சிக்கும்..ரத்தக்காட்டேரியாக எனக்குத் தெரிந்தார்.  இதில் கொடுமை என்னவென்றால்..சபரிமலைக்கு மாலை வேறு போட்டிருந்தார்.
சிரித்துக்கொண்டே, பணத்தை எடுத்துக்கொடுத்தேன். அப்போது சொன்னேன்.
’எப்புடி? வருஷம் முழுக்க இப்படி கொள்ளையடிக்கிற பாவத்தைக் கழுவத்தான் சபரிமலைக்குப் போறதா?’

பதிலே இல்லை!

இடையில் வண்டி ஓரிடத்தில் நின்றபோது… என்னருகில் வந்து நடத்துநர் கேட்டார்.. 
‘சார்…எந்த டிப்பார்ட்மெண்ட்டு?’

‘ம்…பப்ளிக் டிப்பார்ட்மெண்ட்!’

’இல்லை சார்..! இந்த சம்பவத்தை பெரிசு பண்ணிடாதீங்க ! இனிமே இப்படி நடக்காது!’

’இன்னிக்குத்தானேங்க உங்களுக்கெல்லாம் சம்பளம் அதிகமாக்கி முதல்வர் அறிவிச்சிருக்காங்க! (அன்றுதான் போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு பற்றிய செய்தி படித்திருந்தேன்.)அதுவே எங்க காசை அடிச்சுப்பிடுங்கித்தானே கொடுக்குறாங்க..அப்புறம் என்ன மறுபடியும் ஸ்பெஷலா நீங்க வேற அடிச்சுப்பிடுங்குறீங்க?’ என்று சொல்லிவிட்டு…அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.

இதில் மிகப்பெரிய அவலம்.. அந்தப் பேருந்தில் என்னுடன் பயணம் செய்த மற்ற 35 பேரும் நடந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, வாயை மூடிக்கொண்டு இருந்ததுதான்!

ஒன்றுமட்டும் நிச்சயம்!

தட்டிக்கேட்க வக்கில்லாத சமூகம் நாசமாய்த்தான் போகும்!
ஆனால்..தட்டிக்கேட்டால்….எல்லாமே கிடைக்கும்!

ஆம்..கேட்டால்.. கிடைக்கும்!Comments

 1. பாராட்டுக்கள் சுரேகா..!!

  ReplyDelete
 2. சார் , நல்ல காரியம் செய்து உள்ளீர்கள் ,பாராட்டுக்கள் .. அப்போதுதான் அவர்களுக்கு புத்தி வரும் ,இதில் சாமிக்கு மாலை வேறு , நம் மக்கள் தவறை கூட வாடிக்கையாக செய்யவும் அது தவறு என்றே தெரியவில்லை போலும் !?

  ReplyDelete
 3. //இதில் மிகப்பெரிய அவலம்.. அந்தப் பேருந்தில் என்னுடன் பயணம் செய்த மற்ற 35 பேரும் நடந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, வாயை மூடிக்கொண்டு இருந்ததுதான்!//

  அவர்கள் அனைவரும் அமைதி காத்தது குறித்து நீங்கள் சந்தோசப்படவேண்டுமே தவிர நொந்துகொள்ளகூடாது... அவர்கள் வாயை திறந்திருந்தால், ஏன்யா நல்லா போயிகிட்டிருந்த பஸ்சில் ஏறி வம்பு பண்ணுற, பேசாம கீழே இறங்குயா எங்களுக்கு நேரமாச்சுன்னு உங்களை தான் திட்டியிருப்பார்கள்... எல்லாம் அவ்வளவு பிசியான மக்கள்...

  அந்த SETC விஜிலன்ஸ் அதிகாரிகளின் தொடர்பு எண்களை கொஞ்சம் பகிர்ந்து கொள்ள முடியுமா?

  பிரச்சனைக்குரிய நேரத்தில் அவர்களும் உதவவில்லையென்றால் நாம் யாரை தொடர்புகொள்வது... அந்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டால் நலம்...

  தங்கள் அனுபவத்தினை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி...

  ReplyDelete
 4. பாராட்டுக்கள் சார் , நல்ல காரியம் செய்து உள்ளீர்கள் ,பாராட்டுக்கள்

  ReplyDelete
 5. //இதில் மிகப்பெரிய அவலம்.. அந்தப் பேருந்தில் என்னுடன் பயணம் செய்த மற்ற 35 பேரும் நடந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, வாயை மூடிக்கொண்டு இருந்ததுதான்!///

  இஃஃகி நானு அவனுங்களையும் நாக்கப் புடுங்கறமேரி கேட்டுட்டுத்தான் இறங்கி இருப்பேன் :)

  ReplyDelete
 6. மிகப் பெரிய சல்யூட் உங்களுக்கு. அருமையான பகிர்வு. இனி நானும் இது போல எதிர்கொண்டால் உதவும்.அந்த எண் தெரிந்தால் பகிரவும்.

  ReplyDelete
 7. நன்றி ப்ரதீப்..!!

  ReplyDelete
 8. நன்றி பிரபாகரன் கண்ணன்

  ReplyDelete
 9. வாங்க சென்.. மிக்க நன்றி!

  நீங்கள் சொல்வதும் சரிதான்..அப்படிப்பேச ஆரம்பித்திருந்தால், நான் தாண்டவமே ஆடியிருப்பேன்.

  ReplyDelete
 10. வாங்க ஷங்கர் ஜி!

  இன்னொரு கொடுமை என்னன்னா.. எல்லாரும் சின்ஸியரா டிவில மதுரை டூ தேனி படம் பாத்துக்கிட்டிருந்தானுங்க!!

  கரெக்ட்தான்..!! எவனாவது என்கிட்ட வாயைத் தொறந்திருந்தான்னா நாறியிருக்கும்!!

  ReplyDelete
 11. பாராட்டுகள், வாய் உள்ள பிள்ளைதான் வாயுள்ளவர்களிடம் ஏமாறாது.

  ReplyDelete
 12. வாங்க கோவி அண்ணே..!! சாதா வாய் பத்தாது...! சட்டம் பேசும் வாய் வேணும்! :))

  ReplyDelete
 13. ரொம்ப நல்ல பதிவு..அண்ணே...!இது ஒரு நல்ல விழிப்புனர்ச்சி னும் சொல்லலாம் என்போன்றவர்களுக்கு

  ReplyDelete
 14. அன்பின் சுரேகா - நன்று நன்று - ஆனால் எல்லோராலும் இப்படி பேச இயலாது - கேட காசைக் கொடுத்து விட்டு அவசரத்திற்குச் செல்லவேண்டியது தான். இருப்பினும் தங்களைப் பின் தொடர முயல்வோம். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சுரேகா - நட்புடன் சீனா

  ReplyDelete
 15. Super Surekaa! i wish i would have been with u :-)

  ReplyDelete
 16. அவர்கள் அனைவரும் அமைதி காத்தது குறித்து நீங்கள் சந்தோசப்படவேண்டுமே தவிர நொந்துகொள்ளகூடாது... அவர்கள் வாயை திறந்திருந்தால், ஏன்யா நல்லா போயிகிட்டிருந்த பஸ்சில் ஏறி வம்பு பண்ணுற, பேசாம கீழே இறங்குயா எங்களுக்கு நேரமாச்சுன்னு உங்களை தான் திட்டியிருப்பார்கள்... எல்லாம் அவ்வளவு பிசியான மக்கள்...

  //

  பதிவைவிட இந்த பின்னூட்டம் ரெம்பப் பிடிச்சிருக்கு :)

  ReplyDelete
 17. சுரேகா கேட்டால் கிடைக்கும் என்று நம் குழுவிற்கு பெயர் மட்டும் நாம் வைக்கவில்லை என்பது பெருமையாக இருக்கிறது.

  ReplyDelete
 18. நன்றி ப்ரபு கிருஷ்ணா..!

  ஒன்றுமில்லை.. உங்கள் மொபைலை எடுத்து இதோ போன் போடுகிறேன் என்று சொல்லுங்கள் போதும்..!! :))

  ReplyDelete
 19. வாங்க சீனா சார்!

  எல்லாரும் கேட்கணும்கிறதுதான் என் ஆசை!! அது பேராசையும்கூட!

  ReplyDelete
 20. வாங்க ப்ரதீப்..!!

  இன்னோரு தடவை பிரச்னை வரும்போது கூப்பிடுறேன் வந்துருங்க!! :))

  ReplyDelete
 21. வாங்க அப்துல்லா அண்ணே!

  இவ்ளோ பரபரப்புலயும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு!! :)))

  ஆமா.. அந்த பின்னூட்டம் எனக்கும் பிடிச்சிருக்கு!! :)

  ReplyDelete
 22. நன்றி கேபிள் ஜி!

  இப்படி ஆரம்பித்தாலதானே ஏதாவது செய்ய முடியும்!!

  ReplyDelete
 23. //ஒன்றுமில்லை.. உங்கள் மொபைலை எடுத்து இதோ போன் போடுகிறேன் என்று சொல்லுங்கள் போதும்..!! :))//

  ஹா ஹா ஹா செம சார்

  ReplyDelete
 24. மன்னிக்கவும்..!


  அனானி பின்னூட்டங்களுக்கு நான் பதில் சொல்வது இல்லை. ஏனெனில் அது ஏதோ காற்று வெளியைப்பார்த்து பேசுவதைப்போல் உணர்வதால்...!

  பாராட்டினாலும் சரி..! திட்டினாலும் சரி.! அனானியாக வந்தாலும், பின்னூட்டத்துக்குக்கீழ் பெயர் எழுதலாம். மின்னஞ்சல் முகவரி எழுதலாம். அவர்களுக்கு பதில் சொல்வதில் ஒரு நியாயம் உள்ளது.

  ReplyDelete
 25. பிரபு கிருஷ்ணா..

  கம்பெனி சீக்ரெட் இதான் ....:))

  உண்மையில் சில எண்கள் தெரியும்.. இருந்தாலும் அவர்களை நமக்குத்தெரியவேண்டுமல்லவா?

  ReplyDelete
 26. //இதில் மிகப்பெரிய அவலம்.. அந்தப் பேருந்தில் என்னுடன் பயணம் செய்த மற்ற 35 பேரும் நடந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, வாயை மூடிக்கொண்டு இருந்ததுதான்!//

  May be they (or most of them) were charged only the ticket price and he might have tried his luck with you (and few others who boarded last)

  ReplyDelete
 27. வாங்க டாக்டர் புருனோ..!

  நீங்க சொல்வது சரிதான்.! அவர் எல்லாரிடமும் அப்படிச் செய்திருக்க முடியாது. மற்றவர்கள் முன்பதிவு செய்தவர்களாக இருந்திருக்கலாம். இந்த டிக்கெட்டில் அவர் பொங்கல் கொண்டாட நினைத்திருக்கலாம்..! :)

  ReplyDelete
 28. இவங்கலாம் தானா திருந்த மாட்டாங்க. நாம தான் திருத்தணும்.


  எனக்கு ஒரு உதவி தேவை. எங்க ஏரியா வில் ஒரு அரசு பள்ளி உள்ளது, அதில் சத்துணவு அமைபளராக ஒருவர் இருக்கிறார். இவர் தலைவராகவும் அதில் இருக்கிறார். பள்ளிக்கு வரும் உணவு பொருட்களை ஓபன்னாக வீட்டிற்கே மினி வேன் ஒன்றில் கொண்டு வருகிறார். முட்டை, அரிசி, பருப்பு, கொண்ட கடலை அனைத்தும வரும் இதை அவர் மனைவி பக்கத்துக்கு வீட்டில் விற்கிறார்(விலை என்ன நு கேட்டா மார்க்கெட் ரேட் என்ன நு தெரியல நாளைக்கு கேட்டுட்டு சொல்றேன்னு வேற சொல்லுறாங்க அந்த அம்மா).

  இது தவிர சத்துணவில் வேலை வாங்கி தருவதற்கு 50 ஆயிரம் ருபாய் வரை வசூலிக்கிறார். நான் எங்கே இதை பற்றி முறை இடுவது எண்டு தெரிய விலை கொஞ்சம் சொலுங்க. நாகை மாவட்டம் இது. என்னால் வீடியோ கூட எடுத்து தர முடியும். அனால் நேரிடையாக என்னால் இதில் தலை இட முடியாது. பிளஸ் ஹெல்ப்

  ReplyDelete
 29. வாங்க நிலா..

  ஆஹா..இது லட்டு மாதிரி மேட்டராச்சே..!

  முழு விபரமும் என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்க ! மிச்சத்தை ‘கேட்டால் கிடைக்கும்’ பாத்துக்கும்!!

  surekaanow@gmail.com

  ReplyDelete
 30. த‌ட்டிக்கேட்கும் த‌ன்மை வ‌ரனும்'ன்ற‌ உண‌ர்வை த‌ருகிற‌து இப்ப‌திவு..வார்த்தைகாக‌ சொல்ல‌வில்லை..பாராட்டுக்க‌ள்..

  ReplyDelete
 31. அருமை சுரேகா. கலக்கறீங்க போங்க.. தொடரட்டும் இந்த பயணம்...

  ReplyDelete
 32. Sureka! You are inspiring me a lot! Let me try to follow your way!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

சென்னைப் பிழை!