பண குணம்பணம்..நம் அன்றாடத்தேவைகள் மட்டுமன்றி, நம் வாழ்க்கையையே நிர்ணயிப்பதாக அமைந்துவிட்டது. அதை வைத்து மனிதர்களுக்குள் வரும் பிரச்னை கொஞ்ச நஞ்சமல்ல.!

ஒருவரது அடிப்படை குணத்தை, அவர் பணத்தைக் கையாளும் தன்மையையும் வைத்துத்தான் நாம் எடைபோடுகிறோம். அதுவும் அவர் எப்படி தனக்கான கொடுக்கல் வாங்கல்களைச் செய்கிறார் என்பதை வைத்து அவரது குணாதிசயத்தை நிர்ணயிக்கிறோம். உண்மையில், பண குணம்தான் எல்லோரையும் பற்றி நமக்கு உலகுக்கு எடுத்துரைக்கிறது.

இதில் அடிப்படையாக இரண்டு விதம்..

கொடுப்பவர்,- 50 பைசா பிச்சை கொடுப்பவரிலிருந்து, அரை லட்சம் அவசரத்தேவைக்குக் கொடுப்பவர் வரை அனைவரும் கொடுப்பவரே!

 வாங்குபவர்..!! -கடையில் சாக்லெட் வாங்குவதிலிருந்து, கால் கோடி கடன் வாங்குவது வரை – அனைவரும் வாங்குபவரே..!

இருவருக்குமிடையேயான உறவில்தான் ஒருவருடைய பணகுணம் நிர்ணயிக்கப்படுகிறது.

நம்மில் எத்தனையோ நண்பர்கள், உறவினர்களுடன் பல்வேறு காலகட்டங்களில் செலவுகளைப் பகிர்ந்துகொள்ளும் நிலை வரும். அது ஒரு உணவகத்தில் சாப்பிடும்போது இருக்கலாம். மொத்தமாக ஐந்தாறு குடும்பங்கள் ஒரு பிரயாணம் செய்யும்போது இருக்கலாம். இன்னும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் வெவ்வேறு தளத்தில் உள்ள ஒரு குழுவாகச் செல்லும் மனிதர்கள் தங்கள் செலவுகளைப் பகிர்ந்துகொள்வார்கள்.

இதிலும், ஒரு சில மனிதர்கள் உண்டு.

ஒரு கூட்டத்தில் எல்லோரும் செலவழிக்கட்டும். நாம் பேசாமல் இருப்போம். நமக்கான செலவு என்ன பெரியதாக ஆகிவிடப்போகிறது? அப்படியே ஆனாலும் வலுவாக இருப்பவன் செலவழிக்கட்டுமே என்று இருப்பார்கள். அதில் அதிகமாகச் செலவழிப்பவர் பைசா சுத்தமாக கணக்கும் கேட்கமுடியாது. திரும்ப வாங்கவும் கூசும். ஆனால், தனக்காகத்தானே செலவழித்தார்கள் என்று எண்ணி அந்த ஆளே தானாகத் தந்திருக்கவேண்டும் அதுவும் நடக்காது.

இதுவாவது பரவாயில்லை.

ஒருவருக்கு கஷ்டமான நேரத்தில் உதவுகிறேன் என்று தன்னிடமிருக்கும் கொஞ்சம் தொகையைக் கொடுத்துவிட்டு, அதே தொகை தனக்குத் தேவைப்படும்போது பிறரிடம் கையேந்தும் நிலையும் சிலருக்கு ஏற்படும். இதற்குக் காரணம். அந்த உதவியை அடைந்தவர், முன்னவரின் துன்பத்தைப்பற்றியே கவலைப்படாததும். இவரிடம் நிறைய காசு இருக்கும். நம்மிடம் திரும்ப வாங்கத்தான் நடிக்கிறார் என்று எண்ணி அவர் திரும்பக்கொடுக்கும் ஒரே விஷயம் டிமிக்கிதான்.!

எந்த ஒரு சூழலிலும் தன்னிடம் , திரும்பக்கொடுப்பதற்கு இப்போது பணம் இல்லை, குறிப்பிட்ட நாளுக்குள் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லும் நேர்மையான மனநிலை வந்தால்தான், அவரைப்பற்றிய பணகுணம் நல்லவிதமாக அமைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்றும்.. பல்வேறு பொய்க்காரணங்களிலும் தன் தரத்தை தாழ்த்திக்கொள்பவர்களின் பணகுணம் அவர்களைப் பற்றிய மோசமான அபிப்பிராயத்தை விதைத்துவிடுகிறது.

ஒருவரிடம் வாங்கும்போது இருக்கும் மனநிலை, அவருக்குக் கொடுக்கவேண்டும் எனும்போது இழுத்தடிக்கிறோமே என்ற குற்றவுணர்ச்சி ஏற்படாமலேயே பல மனிதர்கள் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு மனிதன் தன் பணத்தை எந்த ஒரு சூழலிலும் ஏமாற்றப்பட்டோ, அநியாயமாகவோ இழக்க விரும்பாதவனாக இருந்தால் அவன் அதிகபட்சமாக அடுத்தவர் பணத்தை திரும்பக்கொடுத்துவிடுவான் எனக்கொள்க! (கேட்டால் கிடைக்கும் என்று போராடுபவர்கள் இந்த ரகம்தான்!) J


ஒரு நண்பர்கள் குழு டூர் செல்கிறதென்று வைத்துக்கொள்வோம். வண்டிக்கு பெட்ரோல் ஒரு நண்பர் போட்டிருப்பார். இறங்குமிடத்திலெல்லாம் தண்ணீர் பாட்டில், சிப்ஸ் என்று ஒரு நண்பர் வாங்கித்தள்ளிக்கொண்டிருப்பார். இடையில் உணவு சாப்பிடும்போது ஒரு நண்பர் சாப்பாட்டுக்குக் காசு கொடுப்பார். அதில் ஒருவர் மட்டும் ஒரு செலவும் செய்யாமல் வந்தால், மற்றவர்களுக்கு கொஞ்சம் வேகத்தான் செய்யும் அதே சமயம் குடும்பமாகச் செல்லும்போது, இவற்றை அனைவரும் பகிர்ந்துகொள்ளலாம் என்றுதான் முடிவெடுத்திருப்பார்கள். ஆனால் அதிலும் ஒரு குடும்பம் மட்டும் செலவே செய்யாமல் இருப்பதும் ஒருவிதமான சுயநல மனப்பான்மையே!

இது உன் பணம் என் பணம்… என் பணமும் என் பணம்! என்ற நிலை !

இது போன்ற சந்தர்ப்பங்களில், மொத்தமாகச் செலவு செய்ய ஒரு தொகையை ஒதுக்கிக்கொண்டு , எல்லாப் பொது செலவுகளையும் சேர்த்து, பின்னர் அந்தத்தொகையைப் பகிர்ந்துகொள்வதுதான் சிறப்பாக அமையும். அப்போதும் இன்னொரு பிரச்னை எழும். நான் அன்னிக்கு முட்டை தோசை சாப்பிடவே இல்லை. நானும் ஏன் அதுக்கு காசு தரணுமென்று சண்டைக்கு நிற்பார் ஒரு குடும்பத்தலைவி! இதையெல்லாம் சமாளித்து ஒரு சுற்றுலா செல்வதென்பது பெரிய காரியம்..!!

நான் வாங்குபவனாகவே இருக்கவேண்டும்.. கொடுப்பவனாக மாறமாட்டேன் என்பவர்களின் பணகுணம் அவர்களை கட்டாயம் குறைவாகவே மதிப்பிட வைத்துவிடுகிறது.

மேலும், நெருங்கிய சொந்தமாகவே இருந்தாலும், அடுத்தவர் சிரமப்படும் சூழலில், தன்னிடம் அதிகமாகப் பணம் இருந்தும் கொஞ்சம் கூடக் கொடுக்கும் மனநிலை இல்லாமல், ‘வெளியில் வேண்டுமானால் வட்டிக்கு வாங்கித்தரட்டுமா என்று கேட்டுவிட்டு,  அடுத்தவாரமே தனக்கென பத்து பவுன் அட்டிகை வாங்குபவர்கள் குணம் சொந்தத்துக்கிடையில் பல்லிளித்துவிடும். சிரமப்படும் நேரத்தில் நெருங்கிய சொந்தங்களுக்குக் கொடுப்பதும் உறவுகளை பலப்படுத்தும். அதே நேரத்தில், வாங்கியவர் கடனாக வாங்குகிறாரா, கொடையாக வாங்குகிறாரா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.!

இன்னொரு விதமான தன்மை இருக்கிறது.

எந்த ஒரு செலவாக இருந்தாலும் நான்தான் செலவழிப்பேன் என்பது… அத்தகைய மனிதர்கள் தங்கள் கருணை உள்ளத்தையோ, தங்கள் செலவழிக்கும் திறனையோ , அனைவரையும்விட தன்னிடம் அதிகப் பணம் இருக்கிறதென்று காட்டுவதற்காகவோ இதைச் செய்வார்கள்.
ஒரு உதவி என்று வரும்போது அவசரமாக ஒரு சிறு தொகையை கடனாக அவர்களிடம் பெற்றால், நியாயமாக திரும்பச்சென்று கொடுப்பவரையும் ‘வேண்டாம்’ உனக்கு நான் சும்மாத்தான் கொடுத்தேனென்று அவரைத் திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

அதேபோல், ஒரு பிரயாணத்தில், பெரும்பான்மையான செலவுகளைச் செய்வார்கள். அவருடன் பயணித்த யாராவது, தங்களுக்கான செலவைக் கொடுத்தால் திரும்ப வாங்க மாட்டார்கள். அவர்கள் நினைப்பது, நாம் மற்றவர்களுக்குச் செய்யும் செலவை திரும்ப வாங்கவேண்டியதில்லை என்பது.! இதில் பயன்பெற்ற ஒருசிலர், சரி! இந்தத் தொகை நமக்கு மிச்சம்தான் என்று நினைத்துக்கொள்வார்கள். ஆனால், அவரைப்போலவே கொடுத்துப் பழகியவர்களின் பணகுணம் அதனை ஏற்காது. அவர்கள் தனக்கான செலவை கொடுத்தே தீரவேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். இந்த முதல் மனிதர் செலவை வாங்கமாட்டார். அங்கு வேறுவிதமான வாக்குவாதம் அரங்கேறும்.

ஆனால், அத்தகைய மனிதர்கள், எதிராளியின் தன்மானத்தை உரசிப்பார்க்கிறார்கள் என்பதை எப்போதும் அறிவதில்லை.

நாம் சென்ற பிரயாணத்தில் நீங்கள் எனக்கும் சேர்த்து செலவழித்தீர்கள். எனக்கான தொகையை வாங்கிக்கொண்டால்தான் எனக்கு நிம்மதி என்று கேட்டால், ‘ உனக்கும் சேர்த்து நான் செலவழித்ததாக இருக்கட்டும்’ என்று பொருள்படும் வகையில் ‘வேண்டாம்’ என்று இவர்கள் மறுப்பது, பயனடைந்தவரை மிகவும் தாழ்வாக இவர் மதிப்பிடுவதாக அமைந்துவிடும். ‘நான் சம்பாதிக்கவில்லையா? என் செலவை பார்த்துக்கொள்ள எனக்குத்தெரியும் எனும் தன்மானம் ‘  வேறுவிதமாக வெளிப்பட்டு அது மனக்கசப்பாக மாறும் வாய்ப்பிருக்கிறது.

இத்தகைய மனிதர்கள் தங்கள் கொடுக்கும் குணத்தை கொஞ்சம் நீட்டி, தான் மட்டுமே கொடுப்பவராக இருக்கவேண்டும் என்று இறுமாப்புக் கொள்ளும்போது, இவரைப்போன்றே சிந்திக்கும் இன்னொரு மனிதரால் காயப்பட வேண்டியிருக்கிறது. இவர்கள்தான் முதலில் மற்றவர்களைக் காயப்படுத்தினார்கள் என்பதை மறந்தும் விடுகிறார்கள். மற்றவர்களை வலிய கையேந்திகளாக ஆக்குகிறார்கள் என்பதை விட்டு, தனது வள்ளல்தன்மையை நீட்டிக்கவே சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

வாங்கியே பழக்கப்பட்டவருக்கு பணத்தின் மீது இருப்பது ஈர்ப்பு – அது வெறியாக மாறி, மற்றவர் பணத்தையும் கொடுக்கவிடாமல் செய்கிறது.

கொடுத்தே பழக்கப்பட்டவருக்கு பணத்தின் மீது இருப்பது இறுமாப்பு – அது வெறியாக மாறி தன் பணத்தைக் கூட வாங்கவிடாமல் செய்கிறது.

முதல் பிரச்னையில் இரண்டு மிச்சங்கள்!
தன்னால் கொடுக்கப்படும் தொகை, திரும்பக்கிடைத்தால், பணம் மிச்சம்!
திரும்பக்கிடைக்காவிட்டால், எதிரி மிச்சம்!
கொடுத்த பணத்தைக் கேட்காவிட்டால் பணம் மிச்சம்.! கேட்டால், எதிரி மிச்சம்!

இரண்டாவது பிரச்னையிலும் இரண்டு மிச்சங்கள்!
தான் செலவழித்த தொகையை, திரும்ப வாங்கிக்கொண்டால் மரியாதை மிச்சம்…! மறுத்தால், மனக்கசப்பு மிச்சம்!
தனக்காக அடுத்தவர் செலவழித்த தொகையை திரும்பக்கொடுத்தால் மரியாதை மிச்சம்.! கொடுத்தவர் வாங்க மறுத்தால், மனக்கசப்பு மிச்சம்!

வாங்கியவர் முறையாகக் கொடுத்தால் போதும்!
கொடுத்தவர்  முறையாக வாங்கிக் கொண்டால் போதும்!

ஈர்ப்பும் இறுமாப்பும் இன்றி… நட்புடன் அணுகுவோம்..பணகுணம் மேம்படும்.!

Comments

 1. தங்களின் அற்புதமான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் (www.tamiln.org) இணையுங்கள்.

  ReplyDelete
 2. நன்றாக அலசி இருக்கிறீர்கள்...எனக்கும் இது போன்ற அனுபவம் இருக்கிறது.அவசர தேவை என நண்பன் கேட்டதால் கொடுத்த பணம் இன்னும் வரை வரவில்லை..முடிவில் நட்பை தொலைத்தது தான் மிச்சம்.(இனி தொந்தரவு இருக்காது)அதே போல் இன்னொரு நண்பர் இருக்கிறார்..இதுவரைக்கும் என்னை எந்த செலவும் செய்ய விட்டதில்லை.அப்படியே மீறி நான் முயன்றாலும் என்னிடம் கோவித்து கொள்வார்.அவ்ளோ நல்லவர்.
  அப்புறம் இதுவரை நான் கணக்கு பார்த்து பழகவில்லை யாரிடமும்....
  நல்ல பதிவு

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோவை நேரம்..!!

   ஆம்.. நம்மில் பலர் இந்தப் பணகுணத்தை பெரிதாகப் பார்க்கவில்லை என்று தோன்றியதால் எழுதினேன்.. கொடுக்கல் , வாங்கல் நமக்கு நிறையக் கற்றுத்தருகிறது.

   அன்புக்கு மீண்டும் நன்றி!

   Delete
 3. வாங்கியவர் முறையாகக் கொடுத்தால் போதும்!
  கொடுத்தவர் முறையாக வாங்கிக் கொண்டால் போதும்!////

  இது மாதிரி இருக்கிறவங்க குறைந்த பேர் தான்.

  ReplyDelete
 4. நல்ல அலசல்... நன்றி...

  1) பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை..... மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை.....

  2) வாழும் நாளிலே கூட்டம்கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா...
  கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா...
  பணத்தின் மீது தான் பக்தி என்ற பின் பந்த பாசமே ஏனடா....?
  பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா...

  3) தேசம் ஞானம் கல்வி ஈசன் பூஜை எல்லாம் காசு முன் செல்லாதடி...!

  கேட்க... படிக்க... இரு பதிவுகள் உண்டு...

  ReplyDelete
 5. பணம் என்ற ஒரு காகிதத்திற்கு இருக்கும் மரியாதை கூட ஒரு மனிதனுக்கு இல்லை என்பது தான் உண்மை....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 6. உறவுகளுக்கு நடுவே கொடுப்பதும் வாங்குவதும் என்றுமே ஒரு வித மனக்கசப்பையே ஏற்படுத்துகிறது.

  நண்பர்களிடையே எதிர்பார்ப்பின்றி கொடுப்பதும் வாங்குவதும் இருப்பின் நட்பின் ஆயுள் நீடிக்கும் என்பது என் கருத்து.

  சிறந்த பகிர்வுங்க நன்றி.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தசாவதாரம் - விமர்சனம் !

நித்யானந்தாவும், நானும்..!

அகவை 70ல் அப்பா!