அசைபோடுதல் ஆனந்தம்
பழமையை அசைபோடும் சுகம் தனிதான். அதுதான்
நம்மை எப்போதும் உயிர்ப்புடனும் , ஒருவித மகிழ்ச்சியை ஊற்றெடுக்க வைத்துக்கொண்டும்
இருக்கிறது என்று நான் உளமாற நம்புகிறேன்.
வட்டியும் முதலும் என்று தலைப்பிட்டு , ஆனந்தவிகடனில்,
ராஜுமுருகன் எழுதிவரும் கட்டுரைகள் பலரது உள்ளம் கவர்ந்தவை. அவை அனைத்துமே அவரது அழகான
அசைபோடல்கள். அந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது, அதுபோன்று நமக்கும் நடந்த நிகழ்வுகளை
உள்ளம் கவனித்துப்பார்க்கிறது. அதனால்தான் நம்மைப்போன்றே இவருக்கும் நிகழ்ந்திருக்கிறது
என்று சிலாகித்து அந்தக் கட்டுரைகளை விரும்பிப்படித்துக்கொண்டிருக்கிறோம்.
அதில் அவர் எழுதும் பாணியும் மிகவும் அழகாகவும்,
இயல்பாகவும் இருப்பதால் எல்லோருக்கும் அவரையும் சேர்த்துப் பிடிக்க ஆரம்பித்துவிடுவதில்
ஐயம் இல்லை. அதனை மீறி நான் உட்பட பலர் அவரிடம் அன்பு செலுத்தத் தொடங்கிவிடுகிறோம்.
ஏனெனில் தன் நிறை குறைகளை வெளிப்படையாகக் கூறும் குணம் அவருக்கு இயல்பாக வாய்த்திருக்கிறது.
அத்தகைய மனிதர்களை குறைகளுடன் ஏற்றுக்கொள்வதுதான் அன்பு என்ற அடிப்படையில் ஏற்றுக்கொள்வது
இயல்பாகிவிடுகிறது.
அசைபோடல் ஒரு அற்புதமான விஷயம். நாம் பார்த்து,
கவனித்து, கேட்டு, உணர்ந்து, பழகி வந்த பல்வேறு அனுபவங்கள் ஒவ்வொரு விதமான அசைபோடலுக்குள்ளும்
இருத்திப் பார்க்கும்போது ஒரு இனம்புரியாத நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
இதுபோன்று யாரெல்லாம் அசைபோடுவதில் ஆர்வம்
காட்டி எழுதுகிறார்களோ அவர்களெல்லாம் மிகவும் கொண்டாடப்பட்ட எழுத்தாளர்களாக இருந்திருக்கிறார்கள்.
டால்ஸ்டாய் தொடங்கி, நமது எஸ்.ரா வரையில் அவர்களது பயணங்களும், பாதைகளும் தந்த அனுபவங்கள்
நம்மிடையே எழுத்துக்களாக வந்து பல்வேறு பாராட்டுக்களையும் அவர்களிடையே நமக்கிருக்கும்
நெருக்கத்தையும் உணரவைத்திருக்கின்றன. ‘துணையெழுத்து’ தொகுப்பில் ஒரு சாவிக்கூடை பற்றி
வரும். அப்போது அனிச்சையாக நம் வாழ்வில் நாம் அதைப் பார்த்திருக்கிறோமா என்றும் அது
தொடர்பான நிகழ்வுகளிலும் என் மனம் லயிக்க ஆரம்பித்துவிட்டது.
நான் கணிப்பொறி நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தபோது,
கானாடுகாத்தானில் ஒரு பெரியவர் தனது வீட்டில் கணிப்பொறி பழுது நீக்க அழைத்திருந்தார்.
அவர்கள் வீட்டின் வாசலிலிருந்து கொல்லைப்பக்கத்தை அடைய ஆட்டோ வைத்துத்தான் செல்லவேண்டும்
என்ற அளவுக்கு நீளம்..! ஒருமுறை நான் சென்றபோது எஸ்.ரா கூறியிருந்ததைப் போன்று ஒரு
கூடை நிறைய சாவிகளை வைத்துக்கொண்டு ஏதோ தேடிக்கொண்டிருந்தார். அப்போதுதான் ஒரு வீட்டுக்கு
இவ்வளவு சாவிகள் இருக்கமுடியும் என்ற ஆச்சரியம் எனக்கு வந்தது.
அப்போது அவர் அதன் பின்னணியை விரிவாக்கினார்.
அவரது மகன் ஒரு மிகப்பெரிய நிறுவனம் ஆரம்பிக்க இருப்பதாகவும் அதற்காக ஒரு தனியார் முதலீட்டு
நிறுவனத்தில் 50 லட்சம் ரூபாய் கடன் கேட்கப்போனபோது, பிணையாக அவர்களது வீட்டுப்பத்திரத்தை
கேட்டிருக்கிறார்கள். அது தொடர்பாக விட்டுப்போன சில ஆவணங்களைத் தேட சில அறைகளைத் திறந்து
பார்க்கவேண்டியிருப்பதால், அந்தச் சாவிக்கூடையை நோண்டிக்கொண்டிருந்தார்.
அடுத்தமுறை நான் சென்றபோது, அவராகவே ஆரம்பித்தார்.
தம்பீ! ஒரு பெரிய விஷயம் நடந்துச்சே! தெரியுமா?
என்ன சார்? சொல்லுங்க!
அன்னிக்கு அந்த சாவிக்கூடையை நோண்டிக்கிட்டிருந்தேன்ல,
அப்போ அதன் அடியில மூணு மோதிரம் கெடந்துச்சு.. ! எல்லாமே தங்க மோதிரம்..! உடனே அதை
நல்லா சுத்தப்படுத்தி, நான், என் மனைவி, என் மகன் ஆளுக்கு ஒண்ணா போட்டுக்கிட்டோம்.
நாங்க தேடின பத்திர பேப்பரும் கிடைச்சுருச்சு..! அதை எடுத்துக்கிட்டு அந்த ஃபைனான்ஸியர்க்கிட்ட
என் பையன் போக, அவர் இவன் கையில் இருந்த மோதிரத்தைப் பார்த்து , கழட்டித் தரச்சொல்லிக்
கேட்டிருக்கார். என் மகனும் கொடுக்க, அதை கூர்ந்து பார்த்துட்டு,
இந்த ஒரு மோதிரம் போதும். ஏன்னா, இதுல ஒரிஜினல்
கனக புஷ்பராகம் பதிச்சிருக்கு! ஒரு கோடி மதிப்பிருக்கும்.
இது உங்ககிட்ட இருக்குன்னு தெரிஞ்சிருந்தா, பத்திரமே கேட்டிருக்கமாட்டேனே?
என்று சொல்லி உடனடியாக 50 லட்சத்துக்கு செக் குடுத்துட்டாரு!
இதுமாதிரி எத்தனை புதையலை எங்க பாட்டன்,பூட்டன் இந்தவீட்டில் வச்சிட்டுப் போயிருக்கானோ? என்று சந்தோஷித்தார்.
சாவிக்கூடை பற்றிப் படித்தபோது இந்த சம்பவம்தான்
என் நினைவுக்கு வந்தது. படிக்கும் விஷயத்துடன் தான் சந்தித்த, அனுபவித்த சம்பவங்களை
பொருத்திப்பார்க்கும் மனோபாவம்தான் அசைபோடல்களை உச்சம் தொட வைக்கிறது.
எனக்குத் தெரிந்து பல அசைபோடும் மனிதர்களை
நானே வலியச் சென்று சந்திப்பேன். அவர்களது அனுபவங்களை அவர்கள் சிலாகித்துச் சொல்லும்போது
அவர்கள் முகத்தில் ஏற்படும் சந்தோஷத்தை உள்ளக் கேமராவில் பதிவு செய்வதற்காகவே நிறைய
முறை சென்றிருக்கிறேன். மேலும் பல்வேறு சிறப்பான அனுபவங்கள் நாம் புத்தகங்களில் கூடப்
படிக்க இயலாது.
எழுத்தாளர் திரு.தருமராஜன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது
ஒரு தகவலைச் சொன்னார். அவரைப்பற்றிச் சொல்லவேண்டுமானால், டால்ஸ்டாய் மேல் பற்றுக்கொண்டு
ரஷ்யாவிற்கே சென்று அங்கு பல ஆண்டுகள் தங்கி , வேலை பார்த்து வந்தவர். டால்ஸ்டாயின்
படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்ததில் இவருக்கு முதல் மற்றும் முக்கியப் பங்கு உண்டு.
அவரது அனுபவத்தில் ரயில்கள் பற்றிப் பேச்சு வந்தது. அப்போது ரஷ்யாவின் இருப்புப் பாதை
மட்டும் கொஞ்சம் அகலம் அதிகம் என்றும், அதனால், வேறு எந்த நாட்டிலிருந்தும் ரஷ்யாவுக்குள்
ஒரே ரயிலில் போகமுடியாது. இது அவர்களது பாதுகாப்பு உணர்வைக் காட்டுவதாக உள்ளது என்றார்.
அது எனக்கு மிகவும் புதிய தகவல். டால்ஸ்டாய் அமர்ந்து இறந்த இடத்தில் அதிக நேரம் சென்று
இருந்துவிட்டு வந்ததாக அவர் சொன்னபோது அவர் கண்ணில் கண்ட உணர்வை என்னால் விவரிக்கவே
இயலாது.
பல்வேறு நபர்கள் ‘நாங்கள்லாம் அந்தக்காலத்துல’
என்று துவங்கும்போது பலர் பின்னங்கால் பிடறியில் இடிக்க ஓடிவிடுவார்கள். ஆனால், உண்மையில்
பல்வேறு அனுபவங்கள் அசைபோடுதலாக வரும்போது அது தரும் ஆனந்தம் அலாதியானதுதான். ஆட்டோகிராப்
படத்தை நாம் கொண்டாடியதற்குக் காரணம் அதன் அசைபோடலில் நம்மையும் இணைத்துப் பார்த்ததுதானே?
இதைப்படித்துவிட்டு என் தோழி ஒருத்தி கட்டாயம்
ஃபோன் செய்வாள்!
அசைபோடுதல்
ஆனந்தம்கிற…? ஆனா நான் அசைபோட்டா மட்டும் திட்டுற?
அவளுக்கு
இப்போதே பதிலிடுகிறேன்.
லூஸு!
நான் சொல்றது மனசு செய்யுறது…நீ சொல்றது மாடு செய்யுறது!
nalla asaipoduthal....
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஅசை போடும் நினைவுகளால் தான் நாம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறோம் அருமையான விசயங்களை அசை போட வைத்த நண்பருக்கு நன்றி
ReplyDeleteநன்றி கோவை மு சரளா அவர்களே!
ReplyDeleteமிக நல்ல பதிவு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....
ReplyDeleteநன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
மொழிபெயர்ப்பாளர் நா.தர்மராஜன் உங்கள் நண்பரா? அட..!
ReplyDeleteஆமாம் அண்ணே!
Deleteஆஹா ஆஹா.... இப்போ இதுக்குப்பெயர் கொசுவர்த்தியாக்கும் கேட்டோ:-))))
ReplyDeleteவாங்க டீச்சர்! ஆமா..ஆமா..! அதேதான்!
Deleteஅசைபோடல் சுகமே தனிதான்! அவை மலரும் நினைவுகளாக மனதில் வரும்!