ஊடலே யுத்த காரணி
அலங்கோலமாய்க்கிடக்கும் வீட்டில்
இருவரும் வேலைசெல்லும் பரபரப்பில்!
அமீபாவாய் ஆரம்பித்த வார்த்தைகள்
அனகோண்டாவாக மாற...
ஆனந்துக்கும் , அகிலாவுக்கும்
ஆரம்பமானது சண்டை..!
அடிப்படைக்காரணம்.?
நேரமாகிவிட்டது இன்னும்
காலுறையைக்காணவில்லையாம்!
யாருக்கு பொறுப்பு என்று
பாப்பையா இல்லா பட்டிமன்றம்!
தடித்த வார்த்தைகளை
தவ்விப் பிடித்துக் கொண்டு
தகராறை முற்றவிட்டு
கணவனும் மனைவியும்
கால்சென்ட்டர் கிளம்புகிறார்கள் !
நிறுவனத்தில் நுழைந்து
தன் இருக்கைவந்து
' தலை பேசியை ' மாட்டிக்கொண்டு
அழைப்புக்காய் காத்திருக்கிறான்.!
'என்னமாய் பேசிவிட்டாள் !'
துடிக்கிறது உதடுகள்..
முதல் அழைப்பு வந்ததுமே
பதில்சொல்ல விழையும் முன்'
கேட்பவனின் கேள்வியில்
கடுகளவு கோபம்!
'உன் நிறுவன மடிக்கணிணியில்
இப்படி ஒரு பிரச்சனை!'
என்னவென்று விளக்கவேண்டிய
இவன் பதிலும் இனிமையில்லை.!
இவன் பொறுமையெல்லாம்
எப்போதோ போய்விட்டது!
அதை எடுத்து மடித்துக்கொண்டு
அவள் காலை சென்றுவிட்டாள்
இது தெரியா எதிராளி
எதிர்க்கேள்வி கேட்டுவைக்க
எரிந்து விழுந்து முழங்குகிறான்..
"என்னய்யா ஆட்கள் நீங்கள்?
இது கூடத்தெரியாமல்?
என் உயிரை வாங்குகிறீர்?"
பேச்சுவார்த்தை தடிக்கிறது.
அவன் பேச
இவன் பேச
ஆத்திரம் அதிகம் பேச
மொத்ததில் அவ்வழைப்பு
மூர்க்கமாய் முடிகிறது !
முடிந்த அழைப்புக்குப்பின்
முகம்தாங்கி சிந்தித்து
எவனோ ஒருவன்
இன்றுவந்து
என் வாயில் சிக்கினானே
என்னவெல்லாம் பேசிவிட்டேன்
என்று எண்ணி மாய்ந்து போனான்!
அது...
வேறொரு நாடு!
அதிபர் மாளிகையின் அவசரக்கூட்டம்!
இராணுவத்தளபதி
அவர்தன் செயலரை
அச் செய்தி தயாரா?
என்று அவசரமாய் கேட்டுவைக்க
'அய்யா ! அத்தகவலெல்லாம்
இந்த மடிக்கணிணியில் போட்டு
மறக்காமல் எடுத்து வைத்தேன்'!
அந்தக் கணிணியிலே
ஏதோ கோளாறு!
கோளாறு சரிசெய்யும்
நிறுவனத்தை தொடர்பு கொண்டால்
மரியாதை இல்லாமல்
ஒரு மனிதன் பேசுகிறான்..!"
என்று கூறி வருந்தி நிற்க,
'அதுவெல்லாம் தெரியாது.
எனக்குடனே சரியாகி
கூட்டத்தில் காட்டவேண்டும்.!
அதிபர் முன்னிலையில்
என் கவுரவம் சரிந்துவிடும்.
ஏதாவது செய்து
சரியாகக் கொணருங்கள்!
என்றந்தத் தளபதியும்
எடுத்தெரிந்து பேசிவிட..
நிறுவனத்தை தொடர்புகொள்ள
நேரமில்லை செயலருக்கு,
அலுவலகத்தில் வேலைபார்க்கும்
ஆண்டனியைக்கூப்பிட்டு
காகிதத்தின் குறிப்புகளை
அவசரப்படியெடுத்து
அனுப்பிவிட்டார்
தளபதிக்கு!
தவறான தகவலென்றே
தெரியாமல் தளபதியும்
அதிபரிடம் எடுத்துவைக்க..!
அவர் தந்த விபரப்படி
அயல்நாட்டின் மீது
அபாண்டம் ஏறிநிற்க
அதிபரும்;
"எடுக்கிறேன் பார் நடவடிக்கை !"
என்றுலகில் சீறிவைக்க
தொடங்கியது யுத்தம்!
யுத்ததில் பல நாடும்
தன்படையை அனுப்பிவைக்க,
உலகமே இருதரப்பாய்
உடைந்து நிற்கிறது.
போர்க்களம் கண்ட நாட்டில்
சீறிப்பாயும் குண்டுகளை
சி என் என் காட்டும்போது
அத்தனை செய்திகளையும்
அகிலாவின்
அரவணைப்பில்
தொலைக்காட்சியில்
இரசிப்பது....
நமது
ஆனந்த்.!!!!
சின்ன தீப்பொறி = சின்ன ஆணவம்
ReplyDelete