சுயமான விபரம் - நேர்முக்கியத்தேர்வு: 2

பொதுவாக நாம் ஒருவரைச் சந்திக்கும்போது, என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்வோம். அல்லது வேலை பார்த்துக் கொண்டிருந்தாலோ, தொழில் செய்து கொண்டிருந்தாலோ, அந்த நிறுவனத்தின் பெயருடன், நம் பெயரும் அச்சிடப்பட்டிருக்கும் விசிட்டிங் கார்ட் எனப்படும் அறிமுக அட்டையைக் கொடுப்போம்.
வேலை இன்னும் கிடைக்கவில்லை என்றால்… வேலைக்காகச் சந்திக்க வேண்டியவரிடம் நம்மைப் பற்றி ஏதாவது சொல்லலாம். அதைவிட, நம் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி, விருப்பங்கள் போன்ற விவரங்களுடன் நம்மைப் பற்றிய கொஞ்சம் பெரிய அறிமுக அட்டையாக அளிக்க வேண்டியதைத்தான் தமிழில் ‘சுய விவரக் குறிப்பு’ என்ற பொருளில் ‘BIO DATA’ என்று பெயரிட்டு அழைத்துக்கொண்டிருந்தோம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை, அதன் பொதுவான பெயர் பயோடேட்டாதான். பிறகு உலகளவிய அளவில், அதன் வடிவம் மாறி இப்போது RESUME, CV என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.


முந்தைய அத்தியாயத்தில் RESUME-க்கும் CV-க்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். பொதுவாக நான் சந்திக்கும் கல்லூரி மாணவர்கள் இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று சொல்வார்கள். ஆனால், RESUME – CURRICULAM VITAE இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது. இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னாலே வேலை கிடைக்கும் என்றால் என்ன செய்வோம்? உண்மையிலேயே ஒரு நிறுவனத்தின் நேர்முகத் தேர்வில் ரெஸ்யூமுக்கும் சிவிக்கும் உள்ள வித்தியாசத்தைக் கேட்டிருக்கிறார்கள். நம் ஆள் இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்களிடம் கடவுளுக்குப் பல பெயர்கள் இருப்பது மாதிரி இரண்டும் ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு என்று வாதாடியிருக்கிறார். அப்புறம் என்ன ஆச்சு? என்ற உங்கள் கேள்விக்கு “இதுகூடத் தெரியாத உங்களுக்கு இங்கு வேலை தர இயலாது’ என்ற அவர்களது பதில்தான், பதில்!!
ரெஸ்யூமே என்பது ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்லும் நறுக்குத்தெறித்த அறிமுகப் படிவம். இதில் உங்கள் சுய விவரம், கல்வித் தகுதி, திறமைகள் மற்றும் முன் அனுபவம் இருந்தால் அதனைப் பற்றிய ஒற்றை வரிச் செய்தி இவற்றுடன் நிறுத்திக்கொள்ளலாம்.
கரிக்குலம் விட்டே எனப்படும் CV என்பது, இரண்டுக்கு மேற்பட்ட பக்கங்களில் தன்னைப் பற்றிய விவரங்களை கொஞ்சம் விரிவாக, ஆற அமரப் படிக்கும் வகையில் அமைக்கும் அறிமுகப் படிவம். இதில் சுய விவரம். கல்வித் தகுதி. அந்தப் படிப்பில் செய்த ப்ராஜக்ட்கள் (செயல்முறைகள்), சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரைகள், விளையாட்டில் வாங்கிய பரிசுகள், பொது நிகழ்வுகளில் பங்களிப்பு, NSS, NCC, RED CROSS, ரோட்டரி, லயன்ஸ் போன்ற சங்கங்களின் கல்வி நிறுவன அமைப்புகளில் வகித்த பதவிகள் ஆகிய அனைத்தும் இடம்பெறும்.
முதலில் நாம் ரெஸ்யூமை பற்றி விரிவாகப் பார்ப்போம். பொதுவாக முதலில் நிறுவனம் நம்மைப் பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்ள விரும்பும்போது, ரெஸ்யூமைத்தான் கேட்பார்கள். ஏனெனில் இதனை முதலாம் நிலை வடிகட்டலுக்குப் பயன்படுத்தமுடியும்.
ஒரு நிறுவனத்தில் புதிய வேலைகளுக்கு 6 பேர் தேவைப்படுகிறார்கள் என்றால், முதலில் விண்ணப்பிக்கும் 250 நபர்களைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்வது கடினம் என்பதால், அவர்களது ரெஸ்யூமை பார்த்துத்தான் முதல்கட்ட முடிவு எடுப்பார்கள். அப்படியெனில், உண்மையிலேயே ஒரு வேலை தேடும் நபர், நிறுவனத்தின் மனத்துக்குள் நுழைய முதலில் வீச வேண்டிய அம்பு, ரெஸ்யூமேதான். அப்படியெனில் அது எப்படி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம். பொதுவாக நாம் செய்வது என்னவென்றால், நண்பனுடைய ரெஸ்யூமை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து, அதில் நம் தகவல்களை மட்டும் மாற்றிக்கொண்டு அப்படியே தேவையான நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துவிடுகிறோம்.
இதனை இப்படி ஒப்பிடலாம். ஒரு பெண்ணைக் காதலிக்க கடிதம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற சூழலில், ஏற்கெனவே ஒரு நண்பன் அதே பெண்ணுக்குக் கொடுத்த கடிதத்தை அப்படியே காப்பி அடித்து, அதில் பெயரை மட்டும் மாற்றிக்கொடுத்தால், அந்தப் பெண் நம்மைப் பற்றி என்ன நினைப்பாள்? (இந்தக் காலகட்டத்தில் அதனை இ-மெயில், SMS என்றுகூடக் கொள்ளலாம்) ஒரு பெண்ணுக்கு நண்பன் அனுப்பிய காதல் ப்ரோப்பஸல் SMS-ஐ அப்படியே பெயர் மாற்றி அவளுக்கே FORWARD செய்தால் எப்படிச் சொதப்புமோ… அதேபோல்தான் காப்பி அடித்து ரெஸ்யூமே அனுப்பினாலும் சொதப்பும்.
சொந்தமாகச் சிந்தித்து கொஞ்சம் கற்பனையும் கலந்து அனுப்பப்படும் ரெஸ்யூமேக்கள் நிறுவனங்களை வெகுவாகக் கவர்கின்றன. ஆனால், அது எந்த வேலை என்பதைப் பொறுத்து மாறுபடும். இங்கே சில கற்பனை மிகுந்த ரெஸ்யூமேகளை பார்க்கலாம்.
இதனையும் அப்படியே காப்பி அடித்துவிட வேண்டாம். உங்களைப்போலவே, நிறுவனத்தினரும் இந்த மாடல் ரெஸ்யூமேக்களை இணையத்தில் நிறையப் பார்த்திருப்பார்கள். அதனால், எச்சரிக்கையாக இருக்கவும்.
ஆனால், கொஞ்சம் வித்தியாசமாக, உண்மையிலேயே சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட ரெஸ்யூமிற்கு மதிப்பு அதிகம். அதனை பெயருக்குக் கீழ் எழுதும் OBJECTIVE என்ற விவரத்திலேயே நிறுவனம் கண்டுபிடித்துவிடும். பொதுவாக, அதில்தான் வேலை தேடும் அனைத்து நபர்களும் மாட்டுவார்கள். தன்னுடைய சுயசக்தியால், நேர்மையால், உழைப்பால், நிறுவனத்தையும் நிமிர்த்தி, தன்னையும் வளர்த்துக்கொள்வதுதான் நோக்கம் என்றபோக்கில் இருக்கும் அந்த வார்த்தைகள். இதெல்லாம் சினிமா வசனத்துக்கு வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆனால் யதார்த்தமாக எழுதப்படும் OBJECTIVE மீதுதான் நிறுவனம் அதிகக் கவனம் செலுத்தும்.
புதுப் பட்டதாரியாக இருந்தால், OBJECTIVE–ல் முதல் வேலையாக இருப்பதால், வேலை கற்றுக்கொண்டு, அதனை திறம்பட இங்கேயே செயல்படுத்திப் பார்க்க விரும்புகிறேன். வேலையில் என் திறமைகள் என்னவென்று கண்டுணர்ந்து, வளர்த்துக்கொள்ள என்னை இங்கு ஒப்படைக்க விரும்புகிறேன் என்ற ரீதியில் இருந்தால் ஓரளவுக்கு நன்றாக இருக்கும்.
ஏனெனில் HARD WORKING என்ற பதத்தை, முதலில் வேலை தேடுபவர்கள் பயன்படுத்தவே முடியாது. அவர்கள் படிப்பதற்காகச் செய்த கடின உழைப்பு வேறு. அதில் அவர்கள் பணம் செலவழித்து உழைத்தார்கள். ஆனால், வேலை என்று வரும்போது நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு உழைக்க வேண்டும். இதில் மனநிலையே மாறும். அதனை நிறுவனம் கண்டறிந்துகொள்ளும். கடினமாக உழைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தாலே போதும்.
அடுத்த அத்தியாயத்தில் தொடர்வோம்...


நன்றி : http://goo.gl/XMv1gM

Comments

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !