சுகம் எங்கே? காண்டேகரின் யுக்திகள்!
சுகம் எங்கே பற்றி இங்கே படித்துவிட்டு தொடர்ந்தால் நலம்...
கதை ஒரு மூன்றாம் மனிதனின் கோணத்தில் சொல்லப்படாமல், கதாபாத்திரங்களின் வாயிலாக சொல்லப்பட்டிருக்கிறது.
அதுவும் ஒரே கதாபாத்திரம் சொல்லாமல் எல்லோரும் சொல்லுமாறு, குழப்பமின்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
முதலில் முத்தண்ணா கதையை ஆரம்பித்து, ஆனந்தன் தொடர்ந்து, உஷா தன்னிலை கூறி என கதை மாந்தர்கள் மூலமாக அவர்கள் நிலையும் எடுத்துரைக்கப்பட்டு, கதையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படுகிறது.
கடைசிவரை இந்த யுக்தியில் சுவாரஸ்யம் குறையாமல் கையாண்டிருக்கிறார் காண்டேகர்.
பல அத்தியாயங்களில்...முதல் கதாபாத்திரம் விட்ட வார்த்தையிலிருந்து , அடுத்த கதாபாத்திரம் அதே வார்த்தையில் ஆனால் வேறொரு கோணத்தில் தொடர்கிறார்.
எடுத்துக்காட்டாக...
முத்தண்ணா கூறுகிறார்...
' விசுவாமித்திர முனிவர் அறுபதினாயிரம் வருஷங்கள் தவம் புரிந்தும் அவருக்கு இந்திரப்பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் முத்தண்ணாவுக்கோ மொத்தம் ஒன்பது வருஷங்களிலேயே..!
ஆனந்தன் தொடங்குகிறார்.
ஒன்பது வருஷங்கள் ! ஒன்பது வருஷங்களாக நான் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த ஒன்பது வருஷங்களில் ஒருமுறையாவது திரும்பிப்பார்க்கவில்லை. போர் வீரனுக்கு பின்னே திரும்பிப்பார்க்க ஓய்வு ஏது?
இப்படி மிகவும் அற்புதமாக ஒரு நாவலைக்கையாண்டிருக்கிறார் காண்டேகர்.
இவற்றையெல்லாம் மீறி, வாழ்வியல் வார்த்தைகள் எவ்வளவோ கொட்டிக்கிடக்கின்றன. இணையத்தில் ஒரு வரி படித்தேன்.
காண்டேகரின் நாவலைப்படிக்க உட்காரும்போது ஒரு பென்சிலையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதாக! அது உண்மைதான்! நானும் அடிக்கோடிட்டேன். அந்த வார்த்தைகள் இதோ!
'பெண் தீவிரமான அன்பினால் வாழ்கிறாள். ஆனால் அத்தகைய அன்பு உலகத்தில் எங்கே இருக்கிறது.? பெண் அன்பின்றி உயிர் வாழ்வதில்லை. ஆனால் சாவுதான் அவள்மீது உண்மையான அன்பு செலுத்தமுடியும்'
'உலகம் என்றாலே உயிர்களை மாய்க்கும் பெரிய ஆலை போலிருக்கிறது. எலிகளைப்பூனை கொன்றுவிடுகிறது. மனிதனை மனிதன் வாழவிடுவதில்லை. இந்த ஆலையை ஆண்டவன் எதற்காக அமைத்திருக்க வேண்டும்.'
'நம்முடைய மனத்துக்குத்தான் காதல், சினேகம், உறவு - இவற்றில் அற்புத ஆசை! இறந்த பின்புங்கூடத்தன்னோடு யாராவது இருக்கவேண்டுமென்று அது விரும்புகிறது..
உண்மையான அன்பு என்பது அக்கினியைப்போல் தெய்வீகமான பொருள். தியாகமின்றி, அகங்காரத்தை மறந்தாலன்றி, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தாலன்றி, உண்மையான அன்பு செய்ய முடியாது.
லட்சியத்துக்காக உயிரைக்கொடுக்கவேண்டும். உயிருக்காக உயிரைக்கொடுக்க வேண்டும். மண்ணுக்காக அல்ல!
காதல் என்பது ஒரு ரப்பர் பலூன். காற்றை நிரப்ப நிரப்ப அது அழகாகத் தோன்றும். நன்றாக உப்பும். ஆனால் அது எப்போது உடையும் என்பது மட்டும் நிச்சயமில்லை.
ஆண் பெண்ணின் உடலைக்காதலிக்கிறான். பெண் ஆணின் பணத்தைக்காதலிக்கிறாள்
வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம்
தனக்காக வாழ்வது என்பது தற்கொலை!
சுகம் பற்றற்ற தொண்டில் இருக்கிறது. சுகம் உயிருக்காக உயிரைத்தரும் மனிதர்களை நேசிப்பதில் இருக்கிறது. வாழ்க்கைச்சங்கீதம் இரு கம்பிகளால் இசைக்கப்படுகிறது. ஒன்று தொண்டு. மற்றொன்று அன்பு. தொண்டு உலகத்தைக் களிக்கச்செய்கிறது. அன்பு மனத்தைக் களிக்கச்செய்கிறது.
வாழ்க்கை என்பது கணிதப்புத்தகமல்ல. விசித்திரமான நாவல்..!
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
வேற்றுமொழி நாவல் என்ற எண்ணமே ஏற்படாத அளவுக்கு இதை மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்களுக்குத்தான் தமிழ் உலகம் தன் நன்றியைச்சமர்ப்பிக்கவேண்டும்.
இன்னும் நிறைய காண்டேகர் படிக்கவேண்டும்...
இன்னும் அந்த நாவல் படித்த தாக்கத்திலிருந்து நீ மீண்டு வரவே இல்லையா :)? சில வரிகள் எனக்கு ஞாபகமிருக்கு ...
ReplyDeleteஇருந்தாலும் நீ வைச்சிருந்த பிரதி ரொம்பப் பழசுப்பா... அந்தப் புதினத்திற்கே உரிய வயசைப் போல அதில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களும் அற்புதம். அனுபவித்ததை பகிர்ந்து கொண்டதிற்கு, நன்றியும் கூட.