இலவசங்கள் வசப்படுமா?



உங்களுக்காக இவ்வளவு விஷயங்களை இலவசமாகச் செய்திருக்கிறோம். எங்களையா வீழ்த்தவேண்டும் என்று திராவிட முன்னேற்றக்கழகம் ஒரு பக்க விளம்பரம் ஒன்றை நாளிதழ்களில் தந்திருக்கிறது. மிகவும் அபத்தமான கையேந்தலாகத்தான் இதைப் பார்க்கமுடிகிறது.

இலவசமாக ஒரு பொருளைத்தருவதற்குமுன் தனி மனிதனின் கணக்கொன்று உண்டு.
உண்மையிலேயே பிரதிபலன் பார்க்காமல் அவனுக்குத்தந்துவிடுவது.! 

அல்லது  
இவனால் கட்டாயம்  காரியம் ஆகும் என்று இலவசமாக அதைத்தருவது!

இதில், கலைஞரின் இலவசங்களுக்குப் பிண்ணனி என்னவென்று எல்லோருக்கும் தெரியும். என்றுமே மனிதர்கள் தன் தவறுகளை மறைக்க தானத்தில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், அது தன் பணத்தில்தான் இருக்கும்.  இவரோ, தன் குடும்பத்தினர் அனைவரது ஆக்கிரமிப்பும் கட்சி, சமூகம், அரசு அலுவலகங்கள் என்று சந்துபொந்தெல்லாம் வியாபித்திருப்பதை மறைக்க, இதோ இலவசம் ! அதோ இலவசம் என்று அறிவித்துக்கொண்டே இருக்கிறார். அவருக்கென்ன? சொந்தப்பணமா? அரசுதான் டாஸ்மாக் மூலம் அள்ளிக்கொடுக்கிறதே! இது உன் வீட்டைக் கொளுத்திக்கொள்கிறேன். அதில் கிடைக்கும் காப்பீட்டுத்தொகையில் உனக்கு உணவு வாங்கித்தருகிறேன் என்பதைப்போல் இருக்கிறது.

இலவச வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டி என்ற செயலே ஒரு சமூகத்தின் விழிப்புணர்வை திசைதிருப்பும் அரசியல் ஆயுதமாகத்தான் பார்க்கமுடிகிறது. நான் வெளியில் என்ன செய்கிறேன் என்பதை என் சொந்த ஒளிபரப்பு ஊடகத்தின்மூலம் காட்டுகிறேன். பார்த்துக்கொள்.! தேவையில்லாமல் கேள்வி கேட்க தெருவில் இறங்காதே! - இதுதான் அடிப்படை. மேலும் சொந்த இன்னோவாவிலும், இண்டிகாவிலும் வந்து  தொலைக்காட்சிப்பெட்டிகளை ஏற்றிச்செல்லும் சோற்றுக்கில்லாத ஏழைகளுக்குத்தான் இது அதிகம் பயன்படுகிறது.

கலைஞர் காப்பீட்டுத்திட்டம் ! இலவசம் என்று அறிவிக்கப்பட்ட இந்தத்திட்டத்தில் என்னென்ன அட்டூழியங்கள் நடக்கின்றன என்பதை கொஞ்சம் உள்ளே சென்று பார்த்தால்தான் தெரியும். ஒரு நோயாளி தனக்கான அறுவை சிகிச்சை செலவை இந்தத்திட்டத்தின்மூலம் ஈடுகட்டிக்கொள்ளலாம். அடிப்படையில் இலவசமாக மருத்துவம் செய்ய அரசு மருத்துவமனை இருக்கும்போது , என்னால் முடியாது! தனியார் மருத்துவமனையில் பார்த்துக்கொள்! அதற்கான செலவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லுவதே முழுமையான கையாலாகாத்தனம்! அதற்கும்மேல், இதைப்பயன்படுத்தும் நோயாளிகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதமும், மருத்துவமனைகளில் பெரும் சதவீதமும் கொள்ளையர்களாக மாறுவது எப்படி என்று வகுப்பெடுக்கும் அளவுக்குத் தேறியிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு மருத்துவமனை போலியாக நோயாளி விபரங்கள் தயாரித்து, அறுவை சிகிச்சை செய்ததாக பல லட்ச ரூபாயை சுருட்டியிருக்கிறது. ஒரு நோயாளி அறுவைசிகிச்சையே செய்துகொள்ளாமல், வரும் தொகையில் மருத்துவமனையிடம் பங்குபிரிக்கும் ஒப்பந்தம் போட்டிருக்கிறார். 

மேலும் பல இலவசங்கள் முட்டிக்கொண்டு முன்னே வர முயற்சித்தாலும், மாநிலம் முழுவதும் மின்வெட்டு, அறிவிக்கப்படாத பேருந்துக்கட்டண உயர்வு, தமிழ் மீனவர்களின் கொலைகள், முல்லைப்பெரியார், இலங்கைத்தமிழர் பிரச்னையில் போட்ட வேடங்கள், கிழிக்கப்பட்ட முகமூடிகள் ஆகியவை மேலே வந்து தெளிவாக நிற்கின்றன.! இலங்கையைப்பற்றி வருத்தப்பட்டு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதும்போது,பேரனின் மந்திரி பதவிக்காக நேரில் போனாரா? கடிதம் எழுதினாரா? என்று சிந்தனை சீண்டுகிறது.  நான் என்ன பெரிசா தப்பு செஞ்சுட்டேன்? அவன் செய்யலையா? இவன் செய்யலையா? என்று தன் தவறுகளை நியாயப்படுத்தும் அவரது குணம் கலைஞரிஸம் என்று கூறிக்கொள்ளும் அளவுக்கு புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

இதில் முக்கியமான விஷயம், மக்களை ஓட்டுக்காக பணம் வாங்குபவர்களாக மாற்றிய சாதனை! இவையெல்லாம் மீறி, ஜெயலலிதாவும் சமூக அக்கறையுடன் தனது எதிர்ப்பைக்காட்டுகிறாரா என்றால் அவரை கொடநாடு வளைத்துவைத்துள்ளது. அவரது அண்மைய போராட்ட முயற்சிகள் தேர்தலை நேசித்துப் போட்ட கூட்டங்களாகவே தெரிகிறது. ஆனால், அதில் மக்கள் கூட்டம், திமுக ஆட்சியின் மேல் உள்ள வெறுப்பை பிரதிபலித்திருக்கிறது. இதை ஜெயலலிதா ஆதரவு என்று தப்பர்த்தம் எடுத்துக்கொண்டுதான் அவரும் காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார். அம்மா! உங்களுக்கும் அவருக்கும் பெரிய வித்யாசம் ஒன்றுமில்லை!

மொத்தத்தில்,தமிழனின் எந்தவொரு உரிமைக்கும் போராடாமல் , தமிழ், தமிழன் என்ற பெயரை முகமூடியாகக்கொண்டு, ஒவ்வொரு படியாக ஊழலையும்,அராஜகத்தையும் அவிழ்த்துவிட்ட தலைவராகத்தான் கலைஞர் கருணாநிதியைப் பார்க்கமுடிகிறது. மிகவும் வருந்தக்கூடிய விஷயம் இலவசமாக இவ்வளவு கொடுத்திருக்கிறேன்! எனக்கென்ன செய்யப்போகிறீர்கள் என்று அவர் கேட்கும் கேள்வி! எதை எடுத்தாலும் இலவசம் என்று எங்களை பிச்சைக்காரர்களாக்குகிறீர்களே! எங்களுக்கான வேலை வாய்ப்புகளையும், தொழில் செய்யும் சுதந்திரத்தையும் நியாயமாக அளியுங்கள்! அதுபோதும்! உங்களிடம் இலவசமாக வாங்கி குடும்பம் நடத்தும் அளவுக்கு தமிழன் தரம் தாழ்ந்துவிடவில்லை. மேலும்..அய்யா! நாங்கள் இலவசமாக போனமுறை போட்ட ஓட்டுக்குத்தான் நீங்கள் இவ்வளவும் பிரதிபலனாகச் செய்தீர்கள். அடுத்தமுறை நாங்கள் உங்கள் இலவசங்களுக்கு மயங்கப்போவதில்லை என்றுதான் மக்களும் எண்ணவேண்டும். அதனால், காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் அவல நிலைக்கு எம்மக்கள் மாறிவிட்டால் எல்லோரும் கலைஞராவதைத் தடுக்க யாராலும் முடியாது.

Comments

  1. வாங்க ப்ரசாத்..

    ஆமா..அது உண்மைதான்!!

    ReplyDelete
  2. next avatharam
    yenna politiciana?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !