பிரபு சால’மைனா’!


          கமர்ஷியல் வெற்றியைப்பற்றி நினைக்காமல் கிங், கொக்கி, லீ, லாடம் என்று தரமான படங்களையே எடுத்துவந்த பிரபு சாலமன் இயக்கி, ஊரே எதிர்பார்த்த மைனா - கதாநாயகியின் பெயர். 

பெரியகுளம் கிளைச்சிறையில் இருக்கும் கைதி சுருளி.  ஏன் ஜெயிலுக்கு வந்தான் என்று நினைத்துப்பார்க்கிறான்.சிறுவயதில் சுத்தமாகப் படிப்புவராததால், மலைக்கிராமத்துக்கு வந்துசெல்லும் ஜீப்பில் உதவியாளனாகப் போய் வந்துகொண்டிருக்கிறான் சுருளி.அப்போது ஒருநாள் 
கடன்சுமையால் வீடிழந்து நிற்கும் மைனாவுக்கும் அவள் அம்மாவுக்கும் தனக்குத் தெரிந்த பாட்டி வீட்டில் தங்க ஏற்பாடு செய்து கொடுக்கிறான்.  அவள் அம்மா, சுருளியை ‘மருமகனே’ என்று கூப்பிடும் அளவுக்கு குடும்பத்து தினசரிச் செலவுக்கு மூட்டை தூக்கி ,உதவுகிறான். மைனாவின் மேல் இவனது அன்பு வளர்ந்துகொண்டே வந்து அவள் பூப்பெய்தும்போது காதலாக முழுமையடைகிறது. அவள்மேல் உயிரையே வைக்கிறான். அவள் தனக்குத்தான் என்று நம்புகிறான். 

ஒருநாள் மின்சாரம் போனதால் அவளால் படிக்கமுடியாமல் போகிறது. அவளுக்கு வெளிச்சம் தர, சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ஓட்டி, டைனமோ லைட்டை எரியவைக்கிறான். அதுவும் எரியாமல் போக, மின்மினிப்பூச்சிகளை ஒரு சீசாவில் போட்டுக்கொண்டுவருகிறான். இதைப்பார்த்து அவனது காதலைப்புரிந்துகொண்ட மைனா, உணர்ச்சிமிகுதியில் அவனை முத்தமிடுகிறாள். அந்த நேரத்தில் மின்சாரம் வர, மைனாவின் அம்மா அதைப்பார்த்துவிடுகிறாள். படிக்காத, கூலிக்காரனுக்கு மகளைக்கட்டிக்கொடுக்க விரும்பாத அவள், அவனிடமே மைனாவுக்கு மாப்பிள்ளை பார்ப்பதைப்பற்றிப்பேச, அப்போது நடக்கும் தகராறில் சுருளி , மைனாவின் அம்மாவை கல்லைத்தூக்கிப்போட்டு கொல்ல முயற்சிக்கிறான். கோபத்தில் மைனாவின் அம்மா சுருளியைப்பற்றி போலீசில் புகார் தந்துவிடுகிறாள். 15 நாள் ரிமாண்டில் வைக்கப்படுகிறான். 


14ம் நாள் சிறைவாசத்தில் தீபாவளிக்கு முதல்நாள், ரோட்டரி நடத்தும் விழா நடக்கிறது. மைனாவுக்கு அடுத்தநாள் திருமணம் என்று தெரிந்து சிறையில் இருந்து தப்பிக்கிறான். அந்த இடத்திலிருந்து அது கிளைச்சிறை காவலர்களின் பிரச்னையாகிறது. ஒரு கைதி சிறையிலிருந்து தப்பினால், எல்லா போலீஸாருக்கும் வேலை பிரச்னையாகும். மேலும் அடுத்த நாள் தீபாவளி என்பதால் அவரவர் குடும்ப எதிர்பார்ப்புகள் வேறு நெருக்குகிறது. இந்நிலையில் மேலிடத்துக்குத்தெரியாமல், சூப்பிரண்டெண்ட் அனுமதியுடன்,  இன்ஸ்பெக்டர் பாஸ்கரும், வார்டனும் (தம்பி ராமையா) கைதி சுருளியைத்தேடி புறப்படுகிறார்கள். இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு அது தலைதீபாவளி. ! அவரது மனைவி , தலைதீபாவளி கொண்டாட மதுரை செல்ல 
ரெடியாகி கூப்பிட்டுக்கொண்டே இருக்க, இவர் சுருளியின் கிராமத்துக்கு வந்துகொண்டிருக்கிறார்.
சிறையிலிருந்து தப்பி , மலை கிராமத்துக்கு வரும் சுருளி, மைனா வீட்டுக்கு செல்ல, அவளுக்கு திருமண ஏற்பாடுகள் நடத்தும் அவள் அம்மா, வீட்டை உள்ளே பூட்டிக்கொண்டு தீ வைத்துவிடுவேன் என்று மிரட்டுவதால், வாசலிலேயே காத்திருக்கிறான். உள்ளே மைனாவும் , சுருளியிடம் வர போராடுகிறாள். தீபாவளி அன்று அதிகாலை மாப்பிள்ளை வீட்டார் வர, மைனாவின் அம்மா கதவைத்திறக்கிறாள். மைனா ஓடி சுருளியிடம் வந்துவிடுகிறாள். அப்போது நடக்கும் பிரச்னையில் திருமணம் நின்றுவிடுகிறது. 

அதேநேரத்தில் இன்ஸ்பெக்டரும், வார்டனும் சுருளியைப்பிடித்து கைது செய்து திரும்ப பெரியகுளத்துக்குக் கொண்டுவரும் வழியில் ஏகப்பட்ட பிரச்னைகள், மலையில் நடை பயணம்!  மீண்டும் ஒருமுறை சுருளி தப்பித்துப்பிடிபடுகிறான். அவனை கொன்றுவிட போலீசார் திட்டமிடுகிறார்கள். இந்நிலையில்இவர்கள் வரும் பேருந்து மலைப்பாதையில் விபத்துக்குள்ளாக, இரண்டு போலீசாரின் உயிரையும் சுருளி காப்பாற்றுகிறான். அப்போது அவர்கள் மனம் மாறினாலும், பெரியகுளம் வந்தபின் சுருளியும், மைனாவும் என்ன ஆனார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இரண்டு நாட்களில் நடக்கும் சம்பவங்களை எடுத்துக்கொண்டு யதார்த்த பதார்த்தமாக தந்திருக்கிறார் இயக்குநர். வசனங்களில் பல இடங்களில் நியாயம் தெறிக்கிறது. அவரது பழைய படங்களில் இல்லாத காமெடி நிறைய இருக்கிறது. நடிகர்கள் தேர்விலும் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். சுருளி, மைனாவின் சிறுவயது பையனும்,பெண்ணும் அதே முகச்சாயலில் இருப்பது சிறப்பு! காட்சியமைப்புகளில் நிறைய மெனக்கட்டிருக்கிறார். இந்தப்படத்தில் வேலைபார்த்த நண்பர் ஒருவர் முழுக்கமுழுக்க இயற்கை வெளிச்சத்திலேயே மலைமுழுவதும் எடுத்ததாகச்சொன்னார். அது தெரியாத அளவுக்கு ஒளிப்பதிவு தெளிவாக உள்ளது. இசையமைப்பாளர் இமான், நகர இசைகளிலிருந்து வெளிவந்து கிராமிய இசையையும், சாதாரண ஒலிகளையும் வைத்துக்கொண்டு பின்னணி இசையிலும், பாடலிலும் தெளிவு காட்டியிருக்கிறார். ‘ஜிங்கு ஜிங்கு’ பாடலும், பேருந்தில் படமாக்கப்பட்ட விதமும் அருமை! 

சுருளியாக வரும் விதார்த் நன்றாக நடித்திருக்கிறார்.ஆனால் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமோ என்று தோன்றுகிறது. மைனாவுக்காக ஏங்கும்போதும், எந்த மகராஜன் வரப்போறானோ? என்று சொன்ன பெண்ணை குட்டும்போதும் நன்றாக இருக்கிறது. மைனாவுக்காக அவர் சைக்கிள் மிதித்து ஓளிதரும் இடத்தில் ஸ்கோர் செய்கிறார்.
மைனா- அமலா பால்! சிந்துசமவெளி பார்க்கும்போதே கேபிள்ஜியும் நானும் பேசிக்கொண்டோம்.! சூப்பரா நடிக்குதுல்ல இந்தப்பொண்ணு என்று! அதை வீணாக்காமல் விளையாடியிருக்கிறார். அம்மா செத்தாலும் பரவாயில்லை என்று சுருளிமேல் காதலைக்காட்டுமிடத்திலும், அவனை விழுங்குவதுபோல் பார்க்குமிடத்திலும், ஓடும்போது ஏற்படும் இடர்களை முகத்தில் காட்டும்போதும் பின்னியிருக்கிறார்.

முழு ஆச்சர்யம் - தம்பி ராமையா! இந்திரலோகத்தில் நா.அழகப்பன் இயக்குநர்! வார்டனாக கலக்கியிருக்கிறார். படத்தின் கலகலப்புக்கு மொத்த குத்தகைதாரர். பல்வேறு இடங்களில் கதையில் நமக்கு ஏற்படும் சந்தேகங்களை தனது வசனத்தால் தெளிவிக்கிறார். ‘கிளம்புங்க’ என்று இன்ஸ்பெக்டர் சொன்னதுக்கு மனைவியிடம் கொடுக்கும் விளக்கத்துக்கு தியேட்டர் அதிர்கிறது. புலி தீபாவளி கொண்டாடிடும் என்று சொல்லும்போது குலுங்கவைக்கிறார்.

இன்ஸ்பெக்டர் பாஸ்கராக வரும் நடிகர் சேது கதஎன்ன தேவையோ அதை சிறப்பாகச்செய்திருக்கிறார். ஒரு விரைப்பான, அதேசமயம் நல்ல போலீசாக மனதில் நிற்கிறார். பஸ் சம்பவத்துக்குப்பிறகு லேசாகப்புரியும் புன்னகை சரியாகச் செய்திருக்கிறார். அவர் மனைவியாக வரும் நடிகையும் அவரை நன்றாக டார்ச்சர் செய்கிறார். ஆனால் , அவரது மனைவியின் குடும்பத்தாரின் அராஜகம் ஏற்கமுடியாததாக இருக்கிறது. க்ளைமாக்ஸை கமல் மாற்றச்சொன்னாராம்.  அவர் சொல்லியதைக் கேட்டிருக்கலாம். க்ளைமாக்ஸில் சுத்தமாகத் திருப்தி இல்லை. திணிக்கப்பட்ட க்ளைமாக்ஸ் படுத்துகிறது.

கைவிலங்கிட்டு போலீசுடன் கொண்டுசெல்லப்படும் எத்தனையோ கைதிகளை பொது இடங்களில் பார்த்திருப்போம். ஆனால், அந்த இருவரும் சேர்ந்து பயணிக்கும்போது நடக்கும் நிகழ்வுகள் சுவாரஸ்யமாக  படமாக்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் காட்சியமைப்புகளாலும் , சம்பவங்களாலும் கொடி நாட்டியிருக்கிறது. இயக்குநர் படமான, பிரபு சால மைனா! 

Comments

  1. விமர்சனம் நல்லாருக்கு சார் :)

    ReplyDelete
  2. இவரு படத்துல கதை, பாத்திர படைப்பு எல்லாம் நல்லா இருக்கும். ஆனா, மனுஷன் திரைக்கதையில அவ்வளவா கவனமா இருக்குறதில்லை. மைனாவும் அதுக்கு விதிவிலக்கில்லை...

    ReplyDelete
  3. நன்றி இராமசாமி கண்ணன், ப்ரசன்னா ராஜன்!

    ReplyDelete
  4. இவரின் இயக்கத்தில் வந்த முதல் படமான கண்ணோடு காண்பதெல்லாம் படத்தில் இருந்து ஒவ்வொன்றுமே வித்தியாசமான பாணியில் இருக்கும். கலக்கல் விமர்சனம்

    ReplyDelete
  5. // முழு ஆச்சர்யம் - தம்பி ராமையா

    //

    இவரும் நம்ம ஊர்க்காரர்.உங்களுக்குத் தெரியுமா இவரை??

    ReplyDelete
  6. அண்ணே.. நீங்களுமா..?

    ஜோதில ஐக்கியமானதுக்கு வாழ்த்துக்கள்..

    அன்புடன் வரவேற்கிறேன்..!

    ReplyDelete
  7. விமர்சனம் நன்றாக உள்ளது!

    ReplyDelete
  8. வாங்க கானா பிரபா..நன்றி தல!

    ReplyDelete
  9. வாங்க அப்துல்லா! அப்படியா? அடடே!

    தெரியாதே! இ.லோ.அழகப்பன் ஷூட்டில் பார்த்தேன். ஆனா பேசலை!!

    பாத்தீகளா? நம்ம ஊர் ஆளுகதான் பின்றாங்க! இப்ப நீங்க இல்ல?? :)

    ReplyDelete
  10. வாங்க உண்மைத்தமிழன் அண்ணாச்சி!

    உங்க அளவுக்கு எழுத முடியுமா? :))

    ReplyDelete
  11. நன்றி மோகன் குமார்!

    ReplyDelete
  12. நன்றி மங்களூர் சிவா! எப்படிப்பா இருக்க?

    ReplyDelete
  13. வாங்க எஸ்.கே! நன்றிங்க!

    ReplyDelete
  14. வாங்க சி.பி.செந்தில்குமார்! நன்றிங்க!

    ReplyDelete
  15. Dear Sureka

    After reading your feedback, I got eagerness to view the picture. I have seen and enjoyed the movie.

    Thank you for sharing the Movie review.

    God Bless you dear

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !