எதிரிவினைகளாகும் எதிர்வினைகள்








நண்பர்கள் வட்டத்தின் ஆரத்தை அதிகப்படுத்தி அதன் சுற்றளவைப் பெரிதாக்குவதில் முகநூல் மற்றும் பதிவுலகை விட மிகச்சிறந்த அமைப்பு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.

ஆனால், அத்தகைய நட்பு தரும் முகநூலில் நாம் எந்த அளவுக்கு நன்மையை விதைத்திருக்கிறோம் என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது. மாபெரும் பதிவர்கள் என்று போற்றப்பட்டவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்துக்கொள்வதும், ஒரு காலகட்டத்தில் அயர்ச்சியால் பதிவே எழுதாமல் இருப்பதும் நடந்தேறி வருகிறது.அதுபோல்தான் முகநூல் சுவர்களும், பிரபலங்களும்…

இதற்கு என்ன காரணமென்று பார்த்தால், ஏதோவொரு சர்ச்சை அவர்களது எழுத்தை முடக்கியிருக்கும். அல்லது இன்னொரு சர்ச்சையின் விளைவு அவர்களுக்கு ஆயாசத்தை ஏற்படுத்தி , நமக்கும் இது நடக்கலாம் என்ற பயம் கிளம்பியிருக்கும்.

அதைவிட மேலாக, இதை எழுதினால்..இவருக்குப்பிடிக்காது. அதை எழுதினால், அவருக்குப்பிடிக்காது என்று - எந்த எழுத்தால் நட்பு வளர்ந்ததோ - அந்த எழுத்தை நசுக்க வேண்டியிருக்கும்.

தொடர்பில்லாமல் பத்துப்பதிவுகளையோ, பத்து நிலைத்தகவல்கள் எனப்படும் ஸ்டேட்டஸ்களையோ எடுத்துப்பார்த்தால், குறைந்தபட்சம் ஆறு ,ஏதாவதொன்றின் எதிர்வினையாக அமைந்துவிடுகிறது. அது ஒன்றும் தவறில்லை. எதிர்வினைகள் தொடர்கதையாக மாறி அந்தச்சங்கிலி இறுகி சம்பந்தப்பட்டவர்களின் நட்புச்சங்கிலியை அறுக்கும்வரை!


நீங்கள் ஒரு விஷயத்தைப்பார்க்கிறீர்கள். உங்கள் கோணத்தில் பதிக்கிறீர்கள். அது மற்றொரு நண்பருக்கு தவறாகப்படுகிறதென்றால், உங்களுக்கு பின்னூட்டமிடலாம். அல்லது தன் மாற்றுக்கருத்தை தனது தளத்திலோ, முகநூல் பக்கத்திலோ தாராளமாகப்பதியலாம். அத்துடன் அது நின்றுவிட்டால், எதிர்வினைகள் தொடர்ச்சியாகி, வன்மம் வளர்ந்து, அந்தப்பதிவர் எதிரியாகவே பாதிக்கப்பட்டு, பதிவுலகில் அல்லது முகநூலில் நுழைவதே ஒரு வருத்தமான விஷயமாய் ஆகாது.
பழைய திருவிளையாடலில் ஒரு காட்சி வரும்.
பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்று அடம்பிடிக்கும் சி(வாஜி)வன், நக்கீரன் சொல்லச்சொல்ல மறுத்துக்கொண்டே வருவார்.
அதையும் மீறி நக்கீரன் ,”நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று சொல்லவும்… சிவன்,
அங்கம் புழுதிபட, அறுஞ்சாந்து நெய்பூசி சங்கதனைக் கீர் கீர் என்று கீறும் கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்வது என்பார்.
அதாவது, உடலெங்கும் புழுதியோடு, எண்ணை தடவிக்கொண்டு, மீனை வெட்டும் மீனவன் நீயா என் பாட்டில் குற்றம் சொல்வது என்று சொல்லிவிடுவார்.
அதுவரை கருத்து மோதலாக இருந்த இடம்..ஜாதி மோதலாக மாறத்துவங்கும்..
அடுத்து நக்கீரர் எதிர்வினை தருவார்…
சங்கறுப்பது எமது குலம்.. சங்கரனார்க்கு ஏது குலம்.. சங்கை அரிந்துண்டு வாழ்வோம்..உம்போல் இரந்துண்டு வாழ்வதில்லை.. !
எங்களுக்காவது குலம் என்று ஒன்று உள்ளது. உனக்கு அதுகூட இல்லை. மீன் வெட்டி சாப்பிடுபவர்கள் நாங்கள். உன்னைப்போல் பிச்சைக்காரர்கள் இல்லை.. என்று வெடித்துவிட, மீதியை வெள்ளித்திரையில் கண்டிருக்கலாம்..

       இதுபோல்தான் இங்கும் நடக்கிறது. ஒரு கருத்துக்கு, விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று முன்னவரும், அந்த விளக்கத்தை உடைக்கிறேன் என்று பின்னவரும் கச்சை கட்டிக்கொண்டு இறங்கும்போது நட்பு தன் பலத்தை இழந்து, விளக்கங்களும், தர்க்கங்களும் கோலோச்ச ஆரம்பிக்கின்றன. மெதுவாக கருத்து மோதலிலிருந்து நழுவி, தனிமனிதத் தாக்குதலில் இறங்கிவிடுகிறோம். பின்னர் இந்தப்பக்கம் நாலுபேர் , அந்தப்பக்கம் நாலுபேர்.கோஷ்டியாக எதிர்வினைக் கச்சேரி அமர்க்களப்படும்.
அதற்குப்பிறகு பதிவுலகமும்,முகநூல் உலகமும், தன் கையில் தயாராக வைத்திருக்கும் பெயிண்ட் டப்பாவிலிருந்து ஒவ்வொரு தரப்பிற்கும் தகுந்த வண்ணங்களை அடித்து அனுப்பிவிடுகிறது. ஆனால் அடுத்து வரும் பிரச்னையில், இந்த வண்ணத்தை நினைவு படுத்த இன்னொரு பெயிண்ட் டப்பா வந்து நிற்கும்.
இதில் முழுமையாக, எதிர்வினைகளின் தொடக்கம் விளக்கம் சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.


ஒன்று மட்டும் நிச்சயம்!

நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!
நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!


அழகான சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு, வெற்றி பெறுவோம்.




நாம் ஒரு பிரம்மாண்டமான பதிவர்கள் சமூகத்தை நம்மையறியாமல் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். அதன் வளர்ச்சி நிலையில் ஏற்படும் சில குளறுபடிகள்தான் இப்போது நடந்து கொண்டிருப்பதும்! 



எத்தனையோ பத்திரிகைகளின் எதிர்(நிகழ்)காலத்தீனிதான் நாம்!

எத்தனையோ திரைப்படங்களின் இலவசக் காட்சி வழங்கிகள் நாம்! 

பிரபலங்களும் தன்னை இச்சமூகத்தின் அங்கமென்று பெருமைப்பட வைத்தவர்கள்தாம் நாம்!
கேட்டால் கிடைக்கும் என்று விழிப்புணர்வு கொடுப்பவர்கள் நாம்!

நமக்குள் ஏற்படும் சச்சரவுகள் நம் வீட்டுப் பிரச்னை!

நாம் பொழுதுபோக்காய் ஆரம்பித்தது , மன உளைச்சலின் சாவியாகக்கூடாது!

அழகாகச்சிந்திப்போம்..! 
அனைவரையும் அரவணைப்போம்! 
தெரியாமல் தவறுசெய்தால் 
தெளியவைக்கும் திறன் கொடுப்போம்!
தனிமனிதத் தாக்குதல்களை
தரம்பிரித்து தள்ளி நிற்போம்!

இப்படியும் சிந்திப்போம்…

கூடிக்கரையும் காகங்களல்ல நாம்!
கூடி மழை பொழியும் மேகங்கள்!


டிஸ்கி : ஏதோ தோணுச்சு .. எழுதிட்டேன். இதுக்கும் ஏதாவது எதிர்வினை இருந்தா.. விளக்கமெல்லாம் என்கிட்டருந்து வராது. சொன்னவனே சூனியம் வச்சுக்க மாட்டேன். இந்த மேட்டர் 2010ல் நான் எழுதினது. கொஞ்சம் டிங்கரிங் பார்த்து மறுபடியும் போட்டிருக்கேன்.




Comments

  1. 2010ல எழுதினது 2030லயும் செல்லுபடியாகும் போல...

    ReplyDelete
  2. ஒரு மரத்தில் காணப்படும் ஆயிரக்கணக்கான இலைகளை ஒன்றன் மேல் ஒன்று
    பொருத்திப் பாருங்கள்.

    ஒரு இலை எந்த ஒரு இழையோடும் பொருந்தாது.

    அதுபோல் பொது வாழ்வில் நமது நெருக்கமானவர்களிடம்கூட நம் கருத்துக்கள் பல சமயங்களில் விலை போவதில்லை.

    வீட்டிலேயும் அப்படித்தான். ரோட்டிலேயும் அப்படித்தான்.

    ஆயினும் நமது கருத்து எடுபடும் என்று தோன்றி இடத்தில் தான் சொல்லவேண்டும் என்று வாளா இருந்துவிடவும் முடியாது.

    நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு என வள்ளுவன் சொல்வதும் வேத வாக்கே.


    ஆக, சொல்லவேண்டியதை, சுருக்கமாக, விளக்கமாக, கேட்போர் மனம் குன்றாத வகையில் சொல்லுவோம்.

    வீட்டிலே கவனித்திருப்போம். கொதிக்கும் எண்ணையில் கடுகைப்போடுவார்கள்.
    அது வெடிக்கும். இருப்பினும், முடிவில் இரண்டுமே சுவை பெறும். அது போல, எவற்றை சொல்வதால், சொல்பவரும், கேட்பவரும் பயன் பெறுகிறார்களோ, அச்சொற்களைச் சொல்வோம்.

    பின்னூட்டம் போடுபவர் யாவரும் தாங்கள் எழுதியதை மிகவும் கவனத்துடன் மனதில் உள்வாங்கிக்கொள்தல் அவசியம்.

    சுப்பு தாத்தா
    www.subbuthatha.blogspot.com
    www.movieraghas.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com
    www.Sury-healthiswealth.blogspot.com

    ReplyDelete
  3. நல்ல கருத்துக்கள்! விளக்கம் அருமை! இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப வந்துள்ள நேரமும் சரியே! நேற்றய பதிவர் சந்திப்பில் தங்கள் பணி பாராட்டத் தக்கது!

    ReplyDelete
  4. விளக்கம் அருமை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!