நேர் முக்கியத் தேர்வு – பாகம் 3


பட்டப்படிப்பு முடிக்கும்போது இறுதி ஆண்டின் இறுதிக் கட்டத்தில், கல்லூரியிலேயே வளாக நேர்முகத் தேர்வு (CAMPUS INTERVIEW) நடப்பது இப்போது பெருகிவிட்டது. அப்படி நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்போதே, அனைத்து இறுதியாண்டு இளைஞர்களிடமும் ‘அவரவர் ரெஸ்யூமை ரெடி பண்ணிக்குங்க’ என்றிருப்பார்கள். உடனே அரக்கப்பரக்க, ஒருவர் தயாரித்த ரெஸ்யூமுக்கு, டிங்கரிங் பார்த்து, பெயிண்ட்டை மாற்றி அடித்து – அதாவது- பெயர், சொந்தவிபரங்களை மட்டும் மாற்றி, ஒரு ரெஸ்யூமே தயாரித்து அதனைக் கல்லூரிக்கு எடுத்துச் செல்வதுதான் இன்று பொதுவான வழக்கமாகப் போய்விட்டது. இதில் கொடுமை என்னவென்றால், யாருடைய ரெஸ்யூமே காப்பியடிக்கப்பட்டதோ, அவரை விட மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக மற்றவர்கள் தயாரித்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு விடுவார்கள். ஒரிஜினல் ஓனர், ஓரங்கட்டப்படுவார்.
      இப்படியாக தயாரிக்கப்பட்ட ரெஸ்யூமேகளை வளாக நேர்முகத்தேர்வில் பயன்படுத்திவிட்டு, அதில் தேர்வு செய்யப்படாமல், வெளியில் வேலை தேடும் நிலை வந்தால், அதே ரெஸ்யூமில், கடைசி செமஸ்டரின் மதிப்பெண்களை மட்டும் சேர்த்துக்கொண்டு, புதிதாக பிரிண்ட் எடுக்கத் துவங்குவார்கள். ரெஸ்யூமேகளை பிரிண்ட் எடுப்பதில் இரண்டுவகை திறமையாளர்கள் உண்டு !
      ஒருவர், நேர்முகத்தேர்வு அன்று காலை, ஒவ்வொரு இண்ட்டெர்நெட் பிரவுசிங் செண்ட்டராகத் தேடி, அவசர அவசரமாக ஒரு பிரிண்ட் எடுத்துக்கொண்டு செல்பவர்.
      இன்னொருவர், தான் வாழ்நாளில் கலந்துகொள்ளப்போகும் அனைத்து நேர்முகத்தேர்வுக்கும் மொத்தமாக 50 பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளும் முன் ஜாக்கிரதை முகேஷ் !
      இதில் இரண்டுபேருமே, கொஞ்சம் தங்களைச் சரி செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.
      முதலில், ரெஸ்யூமே எப்படித் தயாரிக்கவேண்டும் என்று தெரிந்துகொள்வது. அப்படித் தெரியவில்லையென்றால், இந்தக் கட்டுரையின் முந்தைய பாகங்களைப் படித்துப் பார்த்து அறிந்துகொள்வது. பின்னர்.. அதனை எத்தனை பிரிண்ட்டுகள் போடுவது என்று முடிவெடுப்பது.
      வேலைக்கான இண்டர்வ்யூ தினத்தில் , ரெஸ்யூமை பிரிண்ட் போடுவது, நமது மெத்தனத்தைக் காட்டுகிறது.
ரெஸ்யூமேகளை மொத்தமாக 50 பிரிண்ட் எடுத்துவைத்துக்கொண்டு சுண்டல் போல் விநியோகம் செய்வது அதைவிடக் கொடுமை.! முதல் வேலையே கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு தன்னம்பிக்கை இருப்பவர்களாகத்தான் நாம் வளரவேண்டும். அப்படியானால், எத்தனை பிரதிகள் ரெஸ்யூமே வைத்துக்கொள்ளலாம்.?
அதிகபட்சம் 5 பிரதிகள் எடுத்துவைத்துக்கொள்ளலாம். ஏனெனில் அதில். இடைப்பட்ட காலத்தில் படித்த ஒரு டிப்ளமோவைச் சேர்க்கலாம். திருத்தலாம். மாற்றங்கள் ஏற்படுத்தும்போது  இரண்டு மூன்று ரெஸ்யூமே தாள்கள்தான் வீணாகும். ஆனால் மொத்தமாக வைத்துக்கொள்ளும்போது , நம் ரெஸ்யூமே ஒருபக்கக் குறிப்பு நோட்டாவதை (One side rough note) தவிர்க்கமுடியாது.
      பொதுவாக, பல்வேறு நிறுவனங்கள் தங்கள் மின்னஞ்சலுக்கு ரெஸ்யூமை அனுப்பச் சொல்லி கேட்பார்கள். அப்படிக் கேட்கும்போது, ஒரு முறைக்கு இரண்டுமுறை படித்துப்பார்த்து, தவறுகளைச் சரிசெய்து அனுப்புவதுதான் சாலச் சிறந்தது.
      அய்யா… இத்துடன் எனது ரெஸ்யூமை இணைத்திருக்கிறேன். தகுந்த வேலைக்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
      என்று நல்ல பிள்ளையாக, தன்மையாக மெயில் டைப் செய்துவிட்டு, ரெஸ்யூமை அட்டாச் செய்ய மறந்துபோகும் அறிவுக் கொழுந்துகளாக சிலர் இருப்பார்கள். ஒரு அழகான கடிதம் எழுதி, அதனை உள்ளே வைக்காமல், வெறும் கவரை மட்டும் அனுப்புவதைப் போன்ற தவறு அது !! 
ஆனால், நிறுவனங்கள் - நம் ஆள், மீண்டும் ரெஸ்யூமை அட்டாச் செய்தால் கூட- உடனடியாக நிராகரித்துவிடும். ஏனெனில், தன் ரெஸ்யூமைக்கூட அட்டாச் செய்யாமல் அனுப்பும் அளவுக்கு கவனக்குறைவான ஆளை அவர்கள் வேலைக்குத் தேர்ந்தெடுக்க விரும்பமாட்டார்கள்.
ஆக, நேராகப் போய், சந்திக்கும்போதுதான் நேர்முகத்தேர்வு நடக்கவேண்டும் என்று இல்லை. அந்த நிறுவனத்துடன், நாம் ஏற்படுத்திக்கொள்ளும் தகவல் தொடர்பிலிருந்தே நமது தேர்வு துவங்குகிறது.
அவர்களுடன் நாம் இரண்டு விதங்களில்தான் தொடர்பு கொள்ளுவோம். ஒன்று மின்னஞ்சல், இரண்டாவது நேராகச் செல்வது. இந்தக் காலகட்டத்தில், முதல் வேலைக்கு நிறுவனத்தை அணுகுபவர்கள் பொதுவாக கடிதப்போக்குவரத்து மேற்கொள்வதில்லை.
அப்படி , தகவல் தொடர்பில் முதலாவதாக விளங்கும் மின்னஞ்சல் அனுப்ப நமக்கு ஒரு மெயில் ஐடி எனப்படும் மின்னஞ்சல் முகவரி வேண்டும். ஆனால், அதுவே நம் வேலைத் தகுதியை நிர்ணயம் செய்யும் அளவுக்கு முக்கியமானது.
மெயில் ஐடியில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்காக ஒரு புள்ளிவிபரம். உலகளாவிய வகையில் 86% நிறுவனங்கள் மின்னஞ்சல் முகவரியை வைத்து விண்ணப்பதாரரை எடைபோடும் பாணியைப் பின்பற்றுகின்றன. அதாவது, ஒரு தனிமனிதனின் குணாதிசயத்தை அவரது பெயரை வைத்து எடைபோட முடியாது. ஏனெனில், அந்தப்பெயர் அவரது பெற்றோர்கள் வைத்தது. மேலும் அவர் குழந்தையாக இருக்கும்போது வைத்தது. ஆனால், மின்னஞ்சல் முகவரியை மட்டும் தனக்குத்தானே வைத்துக்கொள்கிறோம். அப்படி நமக்கு நாமே திட்டத்தில் வைத்துக்கொள்ளும் மின்னஞ்சல் முகவரி. நமது குணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும் என்பது நிறுவனங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.!
உதாரணமாக கோபு என்ற புதிய மனிதரை ஒரு கூட்டத்தில் சந்திக்கிறீர்கள். பேசுகிறீர்கள். பின்னர் விலகும்போது, மின்னஞ்சல் பரிமாறிக்கொள்கிறீர்கள். அப்போது அவர் மின்னஞ்சல் முகவரியைச் சொல்கிறார். அது GUJAAL_GOPU@GMAIL.COM என்று இருக்கிறது. உடனே அவரைப்பற்றி நமக்கு என்ன அபிப்பிராயம் ஏற்படும் ?
நிறுவனங்களுக்கும் நமது வேடிக்கையான மின்னஞ்சல் முகவரிகளைப்பார்த்து அதே அபிப்பிராயம்தான் ஏற்படும்.
இங்கே சில மின்னஞ்சல் உதாரணங்களைப்பார்ப்போம்.
anushka_fan_anand@yahoo.com – இவர் வேலையை விட, அனுஷ்காவைத்தான் அதிகம் நேசிப்பார் என்பதை நிறுவனத்துக்குச் சொல்லுகிறார்.
Sweetlittlebabybanu@rediff.com  - இவ்வளவு சின்னக்குழந்தையான பானுவை வேலைக்குச் சேர்த்தால், குழந்தைத் தொழிலாளர் சட்டம் பாயும் என்ற பயம் நிறுவனத்துக்கு ஏற்படும்.
pulsarpandian@gmail.com – பைக் மட்டும் ஓட்டிக்கொண்டிருக்கட்டும் என்று நிறுவனம் விட்டுவிடும்.
Ilovejothi_martin@hotmail.com இவர் ஜோதிக்குத்தான் சரியாக வருவார் என்று நிறுவனம் நிராகரித்துவிடும்.
மேற்கண்ட முகவரிகள் அனைத்தும் கற்பனையே.. அந்த முகவரிக்கு மின்னஞ்சல் செய்துபார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். சில நேரங்களில், உண்மையிலேயே அத்தகைய முகவரிகள் இருந்தால், அவர்கள் பாவம். தான் செய்தது என்னவென்று தெரியாமல் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று விட்டுவிடலாம்.
மின்னஞ்சல் முகவரி எப்படி இருக்கக்கூடாது என்று பார்த்தோம். அப்படியானால், இமெயில் ஐடி எப்படி இருக்கவேண்டும்.?




Comments

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !