மதுரை சம்பவம் !








 
ஒரு தனியார் நிறுவனத்தின் மாநில அளவிலுள்ள நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம்.!! மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டு, தேதி, இடம் ஆகியவை நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சி ! 

        ஒப்புக்கொண்டபடி நானும் நேற்று மதுரைக்குச் சென்றுவிட்டேன். பத்து மணிமுதல் நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது. அங்கு என் நிகழ்ச்சி 11 மணிக்குத் துவங்கவேண்டும். நானும் அங்கு சென்றடைந்துவிட, அந்தக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள நிறுத்துமிடத்தில், காரை வைத்துக்கொண்டு 20 நிமிடங்களுக்கும் மேல் காத்திருந்தோம். நிறுவன முக்கிய அதிகாரியும் என்னுடன் அமர்ந்திருந்தார். இடையில் ஃபோன் வர, வெளியில் சென்று பேசிவிட்டு வந்து அமர்ந்தார். அவர் முகத்தில் கவலை ரேகை..!! ஏன் என்ன ஆச்சு? என்று கேட்டால்,

“ஒரு சின்ன பிரச்னை சார்!”

என்ன?

ஸ்டாலின் மதுரை வந்திருக்காரு.. ! அவரோட நிகழ்ச்சிக்காக அவர் இந்த மண்டபத்தில் உள்ள இன்னொரு ஹாலை புக் பண்ணியிருக்காங்க! இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவாராம். அதனால, நம்ம நிகழ்ச்சியை நிறுத்திவைச்சுட்டு, அவர் வந்துட்டுப் போனதுக்கு அப்புறம் நம்மளை நடத்திக்கச் சொல்றாங்க! ஏற்கனவே நமக்குக் கொடுத்திருந்த மைக்கெல்லாம் எடுத்துக்கிட்டுப் போய்ட்டாங்க!

ரெண்டும் ஒரே ஹாலா?

இல்லை சார்.. ரெண்டு ஹாலுக்கும் சம்பந்தமே இல்லை.. தனித்தனி வராண்டா, தனித்தனி வாசல்!

அப்புறம் ஏன் நிறுத்தச் சொல்றாங்க!

அவங்களுக்கு நம் நிகழ்ச்சி இடைஞ்சலா இருக்குமாம். நம்ம எல்லாரையும் வெளில போய்ட்டு அவர் வந்துட்டுப் போனதுக்கப்புறம் வரச்சொல்றாங்க!

ஓ...அவர் எப்ப வராரு?

தெரியலை!

எவ்வளவு நேரம் அவங்க நிகழ்ச்சி?

அதுவும் தெரியலை!

நமக்கு எத்தனை மணி வரைக்கும் நேரம் இருக்கு..?

நாம 5 மணிக்கு மண்டபத்தை காலி பண்ணனும்.!

இப்ப என்ன பண்ணியிருக்கீங்க?

11:30க்கு விடவேண்டிய டீ ப்ரேக்கை இப்பவே விட்டாச்சு ! என்ன பண்றதுன்னு தெரியாம , உங்ககிட்டயும் சொல்லமுடியாம .....பேசிக்கிட்டிருந்தோம்.!

நம்மளை நிறுத்தச்சொல்லி நிர்ப்பந்திக்கிறது யாரு?

திமுக நிர்வாகிகளும், இந்த மண்டப மேனேஜரும்... !!

மிகவும் அநியாயமாகப் பட்டது..!! திமுகவினர், தங்கள் நிகழ்ச்சிக்காக, ஏற்கனவே திட்டமிடப்பட்டு, மூடப்பட்ட தனி அரங்கத்தில் நடத்தப்படும் தனியாரின் நிகழ்ச்சியின் மீது தங்கள் அதிகாரத்தை நீட்டிக்கிறார்கள் என்றால், அது மக்கள்விரோதப்போக்காகப் பட்டது.!

உடனே, அந்த அரங்கத்தின் பொறுப்பாளருக்கும், எங்கள் நிகழ்ச்சியை நிறுத்தச்சொன்ன திமுக நிர்வாகிகளுக்கும் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ளச் செய்தேன். “கேட்டால் கிடைக்கும்” என்று மீண்டும் நிரூபித்தோம். அது, அங்கு நமக்கு நாமே வாக வேலை செய்தது !! பிரச்னை முடிந்தது ! எங்களுக்கு விடிந்தது!

பிறகு, எங்கள் நிகழ்ச்சி தடையின்றி நடந்தது !!

இதுதான் NEWS... இனி எனது VIEWS...

இதில்.. ஒரு சாமானியனாக ,என் வருத்தமும் ஆதங்கமும், கோபமும் வெளிப்பட வேண்டியிருக்கிறது...

1 ஒரு தனியார் நிறுவனம், தங்கள் செலவில், மாநில அளவில் உள்ள நிர்வாகிகளை பயணிக்க வைத்து, முன்னரே திட்டமிட்டு, பயிற்சியாளரை சென்னையிலிருந்து வரவழைத்து ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தால், ஒரு தமிழகக் கட்சி.... அதுவும் எதிர்க்கட்சியாகக்கூட இல்லை.. ஏற்கனவே அதிகார துஷ்பிரயோகம் அதிகமாகச் செய்யும் கட்சி என்று பெயர் எடுத்திருப்பவர்கள், அதனாலேயே மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள்..மீண்டும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவேண்டும் என்று அந்தக் கட்சியின் பொருளாளர், மாநிலம் முழுவதும் மக்களோடு மக்களாக கலந்து பழகுகிறார் என்று பிம்பம் ஏற்படுத்துபவர்கள், தங்கள் நிகழ்ச்சிக்காக.. மாநிலம் முழுவதிலிருந்து வந்திருக்கும் 90 நபர்களை துன்பப்படுத்தினார்கள் என்றால், இந்த ஒற்றை நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் அந்த குறிப்பிட்ட நபர்கள் மூலம் பரவும் என்பது தெரியாமலா இருந்திருக்கும்?

2. ஒரு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவே இல்லை என்றால் பரவாயில்லை. நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியை நாங்கள் சொல்லும்வரை நிறுத்தவேண்டும் என்று இப்போதே அதிகார துஷ்பிரயோகம் செய்தால், உங்களிடம் அதிகாரத்தைக் கொடுக்கவே கூடாது என்று மக்கள் நினைப்பது உண்மையாகிவிடுமே? எந்த அரசு அதிகாரமும் இல்லாதபோதே, ஒரு நிகழ்ச்சிக்குள் தங்கள் எல்லையை நீட்டிக்கும் கட்சியின் மீது எப்படி நம்பிக்கை வைப்பது?

3. நிகழ்ச்சிக்காக வைத்திருந்த மைக்கையெல்லாம் நிர்வாகத்தின் மூலமாக பறித்துச்சென்றது எந்த விதத்தில் நியாயம்..? தங்கள் கட்சி நிகழ்ச்சி நடந்தால், அந்தப்பகுதியில் வேறு எந்த சத்தமும் வரக்கூடாது என்று நினைப்பது என்ன விதமான ஜனநாயகம்?

4.அவர் எத்தனை மணிக்கு வருவார், நிகழ்ச்சியின் கால அளவு எதுவுமே சரியாகத் தெரியாதபோது, ஒரு நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சியை, தங்கள் இஷ்டத்துக்கு வளைப்பது என்பது தர்மமே இல்லை! 

5.ஏதோ, கொஞ்சம் பேச முடிந்த, பேசத்தெரிந்த என் போன்றவர்கள், அவர்களுக்கு உண்மையை எடுத்துச்சொன்னதால், இருபக்கமும் பிரச்னையின்றி நிகழ்த்த முடிந்தது. இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்? நான் சென்ற நிகழ்ச்சியாளர்கள்...பயந்துபோய் , தங்கள் நிகழ்ச்சியை நிறுத்தி வைத்து, திட்டமிட்டபடி நடக்காமல், ஏனோதானோவென்று நடத்திவிட்டுச் சென்றிருப்பார்கள்.

6. இதுவே, திமுகவினருக்கு பயந்து, நிகழ்ச்சி நின்று போயிருந்தால்,..? அதுவே ஒரு ஆளும்கட்சி குடும்பத்தின் விழாவாக இருந்திருந்தால் ? ஒரு திமுக நிர்வாகி வீட்டுத் திருமணமாக இருந்திருந்தால்..? அஞ்சாநெஞ்சன் நடத்தும் விழாவாக இருந்திருந்தால்..? அரசு நிகழ்ச்சியாக இருந்திருந்தால்...?

7. இதுதான் உங்கள் நமக்கு நாமேவா? அதாவது நம் கட்சி மட்டும்தான் இருக்கவேண்டும்,, வேறு யாரையும் அந்தப் பகுதியில் இருக்க விடக்கூடாது. அதற்கு நாமே உதவிக்கொள்ளவேண்டும் என்று அர்த்தமா? இது போன்று நீங்கள் செய்வது உங்களுக்கு ஒரு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்று புரிகிறதா? இப்படியெல்லாம் செய்தால், உங்கள் கட்சித் தலைமை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணாகிவிடும் என்று தெரிகிறதா? என்று கேட்கவைத்தேன். நேரடியாகச் சண்டை போட்டிருந்தால், நிச்சயம் தங்கள் பலத்தை அவர்கள் காட்டியிருப்பார்கள்.

8. மக்களை நேரடியாகச் சந்திக்கிறேன் என்று மாநிலம் முழுதும் பயணம் செய்கிறார் திரு. ஸ்டாலின் அவர்கள். ஆனால், ஒவ்வொரு ஊரிலும் இதுபோன்று அராஜகங்களை அவரது கட்சிக்காரர்கள் அரங்கேற்றுகிறார்கள் என்ற தகவல் அவருக்குத் தெரியுமா? அப்படித் தெரிந்து செய்ய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இதற்குப் பிறகு அவருக்குத் தெரியவந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு, மக்கள் வெறுப்பை நேரடியாகச் சம்பாதிக்காமல் இருப்பது உத்தமம்! அவரால் , அவர்களைக் கட்டுப்படுத்தமுடிந்தாலே போதும் !!

9.ஏன் திமுகவை மக்கள் தள்ளிவைக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இதுபோன்ற நிகழ்வுகள்தான்! ஒரு தனி மனிதனாக, அடிபடும்போதுதான் இது ஆதங்கமாக வெளிப்படுகிறது.

ஒரு பிரச்னை.. அதுவும் சுமுகமாக முடிந்துவிட்டது. பின் ஏன் வெளியில் சொல்லவேண்டும் என்று கேட்பவர்களுக்கு : 

அது ஒரு தனி மனிதர் செய்திருந்தால், நிச்சயமாக வெளியில் சொல்லியிருக்கமாட்டேன். அது ஒரு நிறுவனம்.! கட்சி! அதில் ஒவ்வொரு தொண்டனுக்கும் இப்படி நினைப்பிருந்தால், மாற்றிக்கொள்ளலாம். ஏதோ தாங்கள் ஆட்சிக்கே வந்துவிட்டதுபோல் மமதை வருவதைத் தவிர்க்கலாம். அதற்குத்தான்! அப்படியானால்.. ஆட்சிக்கு வந்துவிட்டால், என்னவெல்லாம் செய்வார்களோ என்ற முன்னோட்ட பயத்தை ஏற்படுத்தாமலிருக்கலாம்.

என் அரசியல் சார்பு பற்றியோ .... அந்தக் கட்சி இப்படிச்செய்யவில்லையா? இந்தக்கட்சி அப்படிச் செய்யவில்லையா என்று கேட்பவர்களுக்கு :

இந்தச் சம்பவத்தில் எனக்குத் தொடர்பிருக்கிறது. பேசினேன். அதற்கு மட்டும் விளக்கம் போதும். வேறு ஒரு சம்பவம் நடந்தால், அதுபற்றி அதற்குத் தொடர்பானவர்களுடன் பேசவும்! மேலும் இப்படிக் கேட்பதுதான் திமுகவின் பலவீனம் என்ற மக்கள் பேச்சு உண்மையாகிவிடும்.

திமுகவினருக்கு:
இதில் ஹிட் ஃபார்முலா ஒன்று இருக்கிறது. அந்த நிறுவன நிகழ்ச்சி, அருகில் இருப்பதை அறிந்துகொண்டு, அந்த நிகழ்ச்சிக்கு, திரு.ஸ்டாலின் அவர்களைத் தலைகாட்டச் சொல்லி, 30 மாவட்ட தனி நபர்களின் நல்லெண்ணத்தை ஒரே நிமிடத்தில் பெறச்செய்வது! அதுதான் உண்மையான மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கான வெற்றி.. நான் ஆலோசகனாக இருந்திருந்தால்.. அதைத்தான் செய்திருப்பேன்..!! 

எனக்குப் பரிந்து பேசுவதாக எண்ணி, தங்கள் சார்பை நிலைநாட்ட எண்ணுபவர்களுக்கு:

இங்கு அதுபோன்ற சாயங்கள் வேண்டாம். இதில்.. எந்த தனிமனித வெறுப்போ, காழ்ப்புணர்ச்சியோ, கட்சி மீதான தனிப்பட்ட பார்வையோ கிடையாது. ஒரு சம்பவம்.. அதில் என் உணர்வுகள்.. அதன் பதிவு அவ்வளவே.. இனி நான் இதனைத் தூக்கிச் சுமக்கப்போவதில்லை..



நன்றி!

Comments

  1. Having been a Faculty in a public sector organisation's Training College,
    I understand.

    subbu thatha.

    ReplyDelete
  2. //இதில் ஹிட் ஃபார்முலா ஒன்று இருக்கிறது. அந்த நிறுவன நிகழ்ச்சி, அருகில் இருப்பதை அறிந்துகொண்டு, அந்த நிகழ்ச்சிக்கு, திரு.ஸ்டாலின் அவர்களைத் தலைகாட்டச் சொல்லி, 30 மாவட்ட தனி நபர்களின் நல்லெண்ணத்தை ஒரே நிமிடத்தில் பெறச்செய்வது! அதுதான் உண்மையான மக்களைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கான வெற்றி.. நான் ஆலோசகனாக இருந்திருந்தால்.. அதைத்தான் செய்திருப்பேன்..!! //
    Superb one !!

    ReplyDelete
  3. காசு வாங்கிவிட்டு நிகழ்ச்சியை நிறுத்த சொன்ன மண்டப நிர்வாகியின் கழுத்தில் துண்டு போட்டு கேட்டுவிட்டு திமுகவினர் பக்கம் வரவும்

    ReplyDelete
  4. ஜெயா செய்திகள் பார்ப்பது போலவே சிறப்பாக இருக்கிறது!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!