Wednesday, February 17, 2010

மறைக்கிறான் சார்!

கறம்பக்குடி டி இ எல் சி தொடக்கப்பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ரேடியோவில், காலை 11.40க்கு கல்வி ஒலிபரப்பில் ஒவ்வொரு வகுப்புக்கும் பாடம் எடுப்பார்கள். அந்தப்பாடத்தை , அந்தந்த வகுப்புக்கு போட்டுக்காட்டுவதில், எங்கள் தலைமை ஆசிரியருக்கு அலாதி விருப்பம். அந்த கல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சி இன்றுவரை ரேடியோவில் வந்துகொண்டிருக்கிறது. யார் கேட்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் நானே பலமுறை அந்த ஆளில்லாத கடையில் டீ ஆத்தியிருக்கிறேன்.

ரேடியோ இருந்தது தலைமை ஆசிரியர் அறையில். அது ஒரு மரப்பெட்டிபோல் இருக்கும் வால்வு ரேடியோ! தலைமை ஆசிரியர் அறை வாசலில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உட்கார்ந்திருப்பார்கள். எந்த வகுப்புக்கு ரேடியோவில் பாடம் வருகிறதோ, அந்த வகுப்பு 11:30 மணிக்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப்பின்னால் அமர வேண்டும். அவர்களில் ஒரு பெரிய மாணவன் தான் சட்டாம்பிள்ளை.!

ரேடியோ மெதுவாக தன் முனகலை ஆரம்பித்து...கனைத்து.. ' ஆல் இண்டியா ரேடியோ' என்று ஆரம்பிக்கும்போது நாங்கள் ஹோ வென்று கூச்சல் போட்டு எங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம். என்னமோ எங்களுக்காகவே ரேடியோவுக்குள் ஒரு ஆள் இருந்துகொண்டு பாடம் நடத்துவதாக நினைப்பு!

இப்படியாக, ஒருநாள் எங்கள் வகுப்புக்கான கல்வி ஒலிபரப்பு அறிவிக்கப்பட்டது. எங்கள் வகுப்பிலிருந்து வரிசையாகச் சென்று ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப்பின்னால் அமர்ந்தோம். பேசாம அஞ்சாம் வகுப்புப்பையனா பொறந்திருக்கலாம். டெய்லி ரேடியோ முன்னாடி உக்காரும் சான்ஸ் கிடைக்குது! என்கிறபடியாக நான் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.அன்று எங்களுக்கெல்லாம் சட்டாம்பிள்ளையாக தலைமை ஆசிரியரே வந்திருந்தார். ஆள்காட்டி விரலை வாய்க்குக்குறுக்கே வைத்துக்காட்டிக்கொண்டே இருந்தார். அவர் சொன்னதுபோலவே செய்துகொண்டே உதடுகளை மூடிக்கொண்டு நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அதில் இரண்டு பேர்,

டேய்! இதுக்குள்ளேருந்து எப்படிடா பேசுறாங்க!

நம்மள மாதிரி இல்லாம குள்ள மனுசங்க இருக்காங்களாம். அவுகளை வாத்தியர் வேலைக்குச் சேத்துப்புட்டு - பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினா நம்மள விட குள்ளமா இருக்குறதால நம்மளையெல்லாம் அவுகளால அடக்க முடியாதுன்னு - ரேடியோக்குள்ள அனுப்பிருவாகளாம். அவுங்கதான் நமக்கு பாடம் எடுக்குறாங்க! - எங்க அப்பத்தா சொன்னுச்சு!

அப்புடியா? அடேயப்பா...நம்ம கிளாஸுலேயே நீதான்டா வெவரமான ஆளு!

இது என்ன பெரிய விசயம்.. போனவாட்டி இங்க வந்திருந்தோமுல்ல... அப்ப அந்த வலை மாதிரி இருக்குற துணில ஒரு ஓட்டை இருக்குல்ல...! ரேடியாக்குள்ளேருந்து அந்த வாத்தியாரு நம்மள்ல யார் யாரு பேசுறாங்கன்னு பாக்குறதை நான் பாத்தேன். அப்படியே பயந்துட்டேன். அதுலேருந்து நான் பேசுறதே இல்லை! என்று வாயில் விரல் வைத்து பேசிக்கொண்டிருந்தான்
இந்த சம்பாஷணை போய்க்கொண்டிருக்கும்போதே....மேசையின் மீதிருந்த ரேடியோ பேச ஆரம்பித்தது. "ஆல் இண்டியா ரேடியோ....."

அனைவரும் விரைப்பானோம். ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் உயரம். அதில் ஒருவன் கொஞ்சம் மிதமிஞ்சிய உயரம். மொத்தத்தில் இரண்டாம் வகுப்பு கோஷ்டி எல்லாருமே அவர்களைவிட குள்ளம்தான். ஆக.. மெதுவாக உட்கார்ந்திருந்த எங்களில் சிறு சலசலப்பு தோன்றி, எங்களில் சிலர் முட்டிக்கால் போட்டுக்கொண்டு ரேடியோவைப்பார்க்க ஆரம்பித்தோம்.

அப்போதுதான் ரேடியோவுக்குள் வாத்தியார் இருப்பதாகச்சொன்னவன், தலைமை ஆசிரியரைப்பார்த்து கத்தினான்.

"சார்! ரொம்ப நேரமா பாத்துக்கிட்டிருக்கேன். முன்னாடி இருக்குறவன் ரேடியாவை மறைக்கிறான் சார். என்னால பாடத்தை கவனிக்கவே முடியலை! உள்ள இருக்குற வாத்தியாரு என்னைப்பத்தி என்ன நினைப்பாரு?"

தலைமை ஆசிரியரும் ஓடி வந்தார். அவனுக்கு முன்னால் இருப்பவனை குச்சியால் அடித்துக்கொண்டே கேள்வியின் அபத்தம் புரியாமல் சொன்னார்.

"ஏண்டா ரேடியாவை மறைக்கிற? உக்கார்றா!!

இப்படித்தாங்க நானெல்லாம் ரேடியா பாத்து வளந்தேன்.!

32 comments:

 1. \\அதுலேருந்து நான் பேசுறதே இல்லை! என்று வாயில் விரல் வைத்து பேசிக்கொண்டிருந்தான்//  :) ரேடியோ பாத்து வளர்ந்து இப்ப ரேடியோல பேசறீங்க .:)

  ReplyDelete
 2. //ஏண்டா ரேடியாவை மறைக்கிற? உக்கார்றா!!//


  அதானே, அண்ணன மாதிரி படிக்கிற பிள்ளைங்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்காதா :))

  ReplyDelete
 3. // அவர் சொன்னதுபோலவே செய்துகொண்டே உதடுகளை மூடிக்கொண்டு நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். அதில் இரண்டு பேர்,//

  பெரிய ஆளுதான் நீங்க ! வித்தையெல்லாம் காட்டறீங்க

  ReplyDelete
 4. "இப்படித்தாங்க நானெல்லாம் ரேடியா பாத்து வளந்தேன்.!"

  வாய்விட்டு சிரித்து விட்டேன்.

  ReplyDelete
 5. இப்போ தான் எல்லாப் பதிவுகளையும் படிச்சேன்.

  சுவாரஸ்யம்!

  ReplyDelete
 6. அன்று மறைஞ்சது... இன்று தெரியுது.. நைஸ்

  ReplyDelete
 7. //டேய்! இதுக்குள்ளேருந்து எப்படிடா பேசுறாங்க!//

  பழைய நினைவுகள் - நானும் இது போல கேட்டிருக்கேன்..

  ReplyDelete
 8. வாங்க முத்துலெட்சுமி!

  ஆமாங்க! அந்த ரேடியோ என்ன கடுப்புல இருந்துச்சோ...
  இப்போ பலதடவை காலங்காத்தால..
  5:43க்கு ஆல் இண்டியா ரேடியோன்னு என் குரல்ல ஆரம்பிச்சு வைக்கிறேன்.!

  ReplyDelete
 9. வாங்க சங்கர்

  பாத்துக்குங்க, அண்ணன் லட்சணத்த! :)

  ReplyDelete
 10. அன்பு ராஜ நடராஜன்

  வாங்க! மிக்க மகிழ்ச்சி!

  ReplyDelete
 11. வாங்க ராஜன்!

  அதான் பொழப்பாவே போச்சே! :))

  ReplyDelete
 12. வாங்க மாதேவி!

  மிக்க நன்றிங்க!
  சந்தோஷமா இருந்தாச் சரிதான்!

  ReplyDelete
 13. வாங்க வெயிலான்..

  மிக்க நன்றி தலைவரே!

  ReplyDelete
 14. வாங்க கவிதைக்காதலன்...

  மிக்க நன்றிங்க!
  ஆமா..எல்லாரும் அனுபவிச்சிருப்போம்..!

  ReplyDelete
 15. கொஞ்சம் லேட்டா வந்துட்டனோ..? ஆனாலும் எல்லாப் பதிவையும் படிச்சிட்டேன். (கேள்வி கேக்க மாட்டிங்கள்ல?) ஞானாலயாவுக்காக வெயிட்டிங் சுந்தர்ஜி.. :)

  ReplyDelete
 16. வாங்க காயத்ரி!

  இப்பவாவது வந்தீகளே!
  :))

  மிக்க நன்றி!

  ReplyDelete
 17. //ஆமாங்க! அந்த ரேடியோ என்ன கடுப்புல இருந்துச்சோ...
  இப்போ பலதடவை காலங்காத்தால..
  5:43க்கு ஆல் இண்டியா ரேடியோன்னு என் குரல்ல ஆரம்பிச்சு வைக்கிறேன்.!//
  இங்க நாங்க ஆகாஷ் வாணின்னு ஆரம்பிக்கிறோம்.
  அது ஒரு காலம்.சூப்பர்

  ReplyDelete
 18. செம்ம காமெடி சார்... :)
  அதிலும் "ரேடியோவிற்குள் குள்ள வாத்தியார்" அருமை...
  பள்ளிக் காலங்கள் எல்லாம் நம் மனதில் என்றும் அழியாக் கோலங்கள் தான்.. இல்லையா?

  ReplyDelete
 19. வாங்க சாந்தி லெட்சுமணன்..!
  நீங்க அந்தமான் ரேடியோவா? :)
  அங்க எஃப்.எம் இருக்கா?

  நான் CCAதான்..! :)

  ReplyDelete
 20. வாங்க அன்புடன் மணிகண்டன்
  மிக்க நன்றி!

  உங்க சிரிப்பு என் கண்ணுக்குள்ளயே நிக்கிது!

  ReplyDelete
 21. அத்தினிக்கூண்டு வயசிலேயே எம்பூட்டு வேல பார்த்திருக்க பாருடோய்... :D.

  an interesting passage..

  ReplyDelete
 22. //நானெல்லாம் ரேடியா பாத்து வளந்தேன்//

  :-)))

  ReplyDelete
 23. வாங்க சாந்தி லெட்சுமணன்..!
  நீங்க அந்தமான் ரேடியோவா? :)
  அங்க எஃப்.எம் இருக்கா?

  நான் CCAதான்..! :)

  இங்க எஃப்.எம் இல்ல சார்.
  நானும் 17 வருஷமா CCA தான்.ஒரு நாளைக்கு 30 நிமிசம் நிகழ்ச்சி தான்.

  ReplyDelete
 24. பின்னீட்டீங்க சார்... நேரில் பார்ப்பது போலவே இருந்தது ... அருமை..

  ReplyDelete
 25. \\நம்மள மாதிரி இல்லாம குள்ள மனுசங்க இருக்காங்களாம். அவுகளை வாத்தியர் வேலைக்குச் சேத்துப்புட்டு - பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினா நம்மள விட குள்ளமா இருக்குறதால நம்மளையெல்லாம் அவுகளால அடக்க முடியாதுன்னு//

  என்ன ஒரு கண்டுபுடிப்பு அண்ணே. அந்த விஞ்ஞானி இப்பொது எங்க இருகார் !!

  ReplyDelete
 26. இவ்வளவு நாட்கள் உங்களை மிஸ் பண்ணி விட்டோமே. அங்கதம் எப்படி இத்தனை சுலபமாக வருகிறது! சூப்பர்.

  அனுஜன்யா

  ReplyDelete
 27. அட!ரொம்ப இனிமையான மலரும் நினைவுகள்!
  /இப்போ பலதடவை காலங்காத்தால..
  5:43க்கு ஆல் இண்டியா ரேடியோன்னு என் குரல்ல ஆரம்பிச்சு வைக்கிறேன்.!/
  அடடே அப்பிடியா???வழ்த்துக்கள்!

  ReplyDelete
 28. ரேடியோ கேட்டு தமிழை வளர்த்துக் கொண்டவர்களில் நானும் ஒருவன் ஸார்..!

  அனுபவே எவ்வளவு பெரிய அறிவைக் கொடுத்திருக்கிறது பாருங்கள்..!

  மிக எளிமையான உரைகல் போலிருக்கிறது உங்களது எழுத்து..!

  தேய்த்து, தோய்ந்தெழ பெரும் விருப்பம் கொண்டு உங்களுடைய பதிவுகளைத் தோண்டிக் கொண்டிருக்கிறேன்..!

  இவ்வளவு நாட்கள் நீங்கள் எப்படி என்னிடம் அறிமுகமில்லாமல் இருந்தீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. தெரியவில்லை.

  மன்னிக்கணும்.. நான்தான் உங்களை பின் தொடரவில்லை போலும்..!

  ReplyDelete
 29. உங்க அனுபவத்தை ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க அண்ணே...

  இவ்வளவு உயரமா இருந்துகிட்டு.... இப்போ எப்புடி நீங்க சின்ன சின்ன ரேடியோ-வுல எல்லாம் புகுந்து பேசுறீங்கன்னு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு.... :--)))

  உங்க தமிழுக்கே நீங்க ரேடியோவுல அறிவிப்பாளரா இருக்கலாம். அவ்வளவு நல்ல இருக்கு.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...