நம்ம அப்துல்லாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பதிவூடகத்தைப்பற்றி, அதன் உறவு மேன்மைகளைப்பற்றி மனமார சிலாகித்துக்கொண்டிருந்தார்!
நானும் என் பங்குக்கு விலாவாரியாக விளக்கிக்கொண்டிருந்தேன். இதைப்பத்தி ஒரு பதிவு கூட போட்டிருக்கேன்ன்னு சொன்னேன்.
அப்ப மீள்பதிவா போடுங்க புது மக்கள்லாம் படிப்பாங்கன்னு சொன்னதால...
(எழுத மேட்டரோ நேரமோ இல்லைங்கிறது..வேற விசயம்..! அதை வெளீல சொல்வோமா?)
பதிவூடகம் - கொஞ்சம் மேலேதான்.!
எல்லாவகை ஊடகங்களையும் நாம் கடந்துவந்து இங்கே இளைப்பாற தொடங்கியிருக்கிறோம்.எல்லாவற்றிலும் இல்லாத சிறப்பு இதில் இருப்பதை உணர்கிறேன்.
ஒரு படைப்பாளியின் மகிழ்ச்சி, அதை இரசித்தவர்கள், பார்த்தவர்களின் பாராட்டுதல்களில் உள்ளது. ஒரு முதிர்ச்சியடைந்த படைப்பாளிக்கு விமர்சனத்தையும் நல்லதாக எடுத்துக்கொள்ளமுடியும்.
ஒரு புத்தகத்தில் (வெகுஜன பத்திரிக்கையில்) எழுதினால். அது எழுதியது ஒரு காலமாக இருக்கும். அது பிரசுரிக்கப்படுவது மறு காலம். அதன் பிறகு படித்தவர்களில் 2% க்கும் குறைவானவர்கள், விமர்சனமோ பாராட்டோ, அந்த பத்திரிக்கைக்கு எழுதுவார்கள். அதற்கு இவரால் பதில் போட முடியுமா என்பதும் சந்தேகமே!
அதேபோல், வானொலி - இதில் கேட்ட நிகழ்ச்சிகளுக்கான விமர்சனத்தையோ, பாராட்டையோ, உடனே அனுப்பினாலும் அவர்கள் எப்போது அதை படிப்பார்கள் என்று கூற முடியாது. அப்போது நாம் கேட்டால் நமக்கு கொஞ்சம் மகிழ்ச்சி..ஆனால் அதை வழங்கியவரிடமிருந்து பதில் கிடைப்பது மிகவும் அரிது ! (ஆனால் அந்த விமர்சனமும் நம்ம குரலில் , நாம் பேசுவதாக இருக்காது)
தொலைக்காட்சி - அதில் ஒரு நிகழ்ச்சி வழங்கினால். அதன் பின்னூட்டம் அவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்துவிடாது. அப்படியே வந்தாலும் , வார இறுதி விடுமுறை முடித்து...ஊரைச்சுற்றிவிட்டு, அசந்து தூங்கப்போகும் நேரத்தில் அரைமணிநேரம் படிக்கப்ப்டும். வழங்கியவர்களின் பதில்? ம்ஹூம்...
மறந்துட வேண்டியதுதான்.! (நாமே கேமரா முன் அமர்ந்து நம் விமர்சனத்தை படிக்க முடியாது)
சினிமா - படைப்பை வெளியிட்டு விட்டு காத்திருப்பார். விமர்சிக்கலாம். இதற்காக ஒரு சினிமாவே எடுக்கமுடியாது. மற்ற ஊடகங்களில்தான் விமர்சிக்கமுடியும். அதற்கும் அவரும் வேறு ஊடகங்கள் மூலம் பொதுவாக பதில் சொல்லுவார். ஒரு தனி மனிதனின் கருத்தாக விமர்சனமும் சரி, பதிலும் சரி..கண்டிப்பாக ஒலிக்காது.. ( விமர்சனத்துக்காக மட்டும் சினிமா எடுத்தால் அது பிச்சிக்கிட்டு ஓடும்)
ஓவியனின் படைப்பை ஒரு கண்காட்சியில் வைத்தாலும் , நாம் செல்லும் நேரத்தில் அவர் சாப்பிடப்போயிருந்தால், நம் விமர்சனம் அவ்வளவுதான்.!
அதையும் மீறி சொல்லிவிட்டாலும் பதிலை காதில் வாங்கிக்கொண்டு வரவேண்டியதுதான். அவருக்கும் பாரட்டுக்களை ஓவியமாக்க முடியாது. விற்கத்தான் முடியும்.
அனேகமாக எல்லா ஊடகங்களுக்கும் இருந்து வரும் சிக்கல் இதுதான்...ஆனால் வலைப்பூ என்ற பெயரில் வந்து கலக்கிக்கொண்டிருக்கும் இந்த பதிவூடகத்துக்கு மட்டும்தான் அற்புதச்சிறப்புகள் அதிகமுண்டு. மற்ற அனைத்து ஊடகங்களும் கவனிக்க ஆரம்பித்துவிட்டன.
நாம் எழுதலாம். சிந்தையில் சிந்தித்ததை நயம்பட, நம்மால் முடிந்தவரை அழகாக எழுதலாம்.
உடனுக்கு உடனே
விமர்சனம் கிடைக்கும்..
பாராட்டு கிடைக்கும்.
மாற்றுக்கோணம் கிடைக்கும்.
மீண்டும் நாம் பின்னூட்டத்தை மறுத்தோ,. நன்றி சொல்லியோ, வேறுகருத்துச்சொல்லியோ
அதே ஊடகத்தில் தொடரலாம்.
ஒரே விஷயத்தின் ஆழம் வரை செல்லலாம்.
நுனிப்புல்கள் தவிர்க்கலாம்.
படைப்பாற்றலை பெருக்கிக்கொள்ளலாம்.
உலகின் எந்தமூலைக்கும் படைப்பை அனுப்பலாம்.
அதைவிட மேலே..
நல்ல நண்பர்களை அடையலாம்.
முன்னறியாத ஊரில் முகமறியாத
பதிவர் உங்களுக்காக ஓடியாடி உதவிகள் செய்வார்.
உங்கள் உறவுகள் அதை உளம் குளிர வியந்து பார்க்கும்.
ஆக.. ஒரு படைப்பாளி விரும்பும் எல்லா அம்சங்களும் ஒருங்கே இருக்கும் இந்த
பதிவூடகம் ...கொஞ்சம் மேலேதான்.!