லவ்டேல் மேடியின் திருமணம், ஈரோட்டில்..
கண்டிப்பாகப்போய்விடவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். திருமண கொண்டாட்டங்களை மீறி அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. ஆனால் இப்போது செய்ய ஆரம்பித்துள்ள வேலையின் திடீர் அழைப்பால் , போக இயலவில்லை. நிறைய பதிவர்கள் வருவதாக வால்பையன் கூறியிருந்தார். நண்பர்களைச் சந்திப்பதில் வெறி பிடித்தலையும் எனக்கு இது மிகப்பெரிய வாய்ப்பை நழுவவிட்டதில் பெருத்த ஏமாற்றம்தான்.
பதிவர்களின் நட்பு மிகவும் அன்பும், ஆச்சர்யமும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், உதவும் எண்ணமும் நிறைந்ததாக உணர்கிறேன். பள்ளி, கல்லூரிக்கால நண்பர்கள்கூட எங்கெங்கிருக்கிறார்கள் என கண்டுபிடித்து நட்பைத்தொடர்வது மிகவும் இயலாத சூழலாக உள்ளது. ஆனால் பதிவர் நட்பு, உலகம் முழுக்க வியாபித்து, எல்லாத்துறைகளிலும் கோலோச்சி, நம்மை வேறொரு தளத்துக்குக்
கொண்டுசெல்வதை நான் பலமுறை அனுபவித்துள்ளேன்.
இத்தகைய சந்திப்புகளை, நம் நட்பை பலப்படுத்தும் நிகழ்வாக மட்டுமின்றி, நமக்குள் இருக்கும் சமூக அக்கறைக்கு செயல்வடிவம் கொடுக்க ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்தவேண்டும் என்று விரும்புகிறேன்.
நாம் பல்வேறு செயல்பாடுகளால் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த முனையலாம். எனக்குத்தோன்றிய சிலவற்றை (ஈரோட்டில் பகிர நினைத்தவை) இங்கு பகிர்கிறேன்.
1. பதிவர்கள் அனைவரும் லஞ்சம் கொடுப்பதில்லை (வாங்குவதில்லை) என உறுதி எடுப்பது...அதை செயல்படுத்துவது!
2. பதிவர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகையில் விவசாயத்துக்கு தன் பங்களிப்பை அளிப்பது. (அதற்கான திட்டம் தயாராக உள்ளது)
3. அந்தந்தப்பகுதி பள்ளி , கல்லூரி இளைஞர்களின் படைப்புத்திறனை அதிகப்படுத்த கூட்டுப்பயிற்சிகள் அளிப்பது.
4 பதிவர் சமூகம் மூலம் ஒரு சிறு காட்டையே உருவாக்குவது ( இது சாத்தியம் )
5. நுகர்வோர் விழிப்புணர்வை நாம் இருக்கும் பகுதிகளில் நாள்தோறும் ஏற்படுத்துவது. (குறைந்தபட்சம் MRP க்கு மேல் விற்கும் பொருட்களை புறக்கணிப்பது அல்லது போராடி நியாய விலைக்கு வாங்குவது)
6. நம் பகுதி இளைஞர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அல்லது அதிகப்படுத்துவது.
7. கல்விக்கூடங்களில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகளை - ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து மின்னஞ்சல் மூலம் - அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வது.
8. இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைப்பயிற்சிகள் அளித்து அவர்களின் சுயஒழுக்கத்தை மேம்படுத்துவது.
9. எல்லாத்துறைகளிலும் நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்க்க , நாமே ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி ஆலோசனை அளிப்பது. - ( இணையம்வழிதான் )
10. இது சாத்தியமா என்று தெரியவில்லை...கொஞ்சம் ஓவராகவே இருந்தாலும்.....பதிவர்கள் பொது இடங்களில் புகைப்பதை நிறுத்துவது.
இவற்றில் சிலவற்றை சாத்தியப்படுத்தினால்கூட...மீதமுள்ளவை தானே சாத்தியமாகும் காலம் சீக்கிரம் வந்துவிடும். பின்னர்தான் என் 11 வது விஷயமான மிகப்பெரிய திட்டத்தைக் கூற முடியும்.
இது முதலில் படிக்கும்போது சிறுபிள்ளைத்தனமாகவோ, லூசுத்தனமாகவோ இருந்தால்....மன்னிக்கவும்!
எனக்கு நம்பிக்கையிருக்கிறது.