மக்கள் எல்லோரும், குறிப்பாக இந்தியர்கள்… அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு
தன்னிடம் அதிகமாகச் சேரும் தொகையை இரண்டு இடங்களில் முதலீடு செய்ய ஆசையாய் இருக்கும்.
ஒன்று தங்கம். இரண்டாவது வீட்டு மனை..!
அந்த முதல் பொருள்தான் நம்மிடையே மிகவும் அதிகமாகப்
புழங்கி, இந்தியப் பொருளாதாரத்தையே ஆட்டுவிக்கிறது என்றால் நம்பத்தான் வேண்டும்.
இந்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை
அதிகப்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி எல்லோரும் மிகவும் அதிர்ச்சியடைந்து பேசுகிறார்கள்.
குறிப்பாக நகைக்கடை முதலாளிகள், ‘அய்யோ! இது மக்களைத் தங்கம் வாங்க விடாமல் செய்யும்
முயற்சி! நடுத்தர ஏழை மக்கள் தங்கமில்லாமல் தத்தளிப்பார்கள் என்று குலவையிடுகிறார்கள்.
ஏன், இறக்குமதி அதிகமாவதற்கு முன் அவர்கள் வாங்கிய நகையை பழைய விலைக்கு நமக்காகக் கொடுப்பார்களா
என்று கேட்டுப்பாருங்களேன். அதேபோல், சேதாரத்தின் ஆதாரங்களை அலசினால் இன்னும் கொடுமையாகை
இருக்கும்.
ஆனால், அரசோ, நாம் தங்கம் வாங்காமல் இருக்க
வேண்டும் என்றுதான் இவ்வளவு வரி போடுகிறது. ஏனெனில் நாம் தங்கம் வாங்கிக்குவிக்கக்
குவிக்க, நம் பணத்தின் மதிப்பு அதல பாதாளத்துக்குச் செல்லத் தொடங்கும். ஆனால், அதையும்
மீறி, இன்னும் விலை அதிகமாகும். ஆகவே இப்போதே வாங்கி வைத்துக்கொண்டால் நல்லது என்று
எல்லா முதலீட்டு ஆசைகாட்டிகளும் சொல்வதை நம்பினால் அரோகரா நிச்சயம்! நம் பணத்தின் மதிப்பு
அதல பாதாளத்துக்குச் செல்லாமல் இருப்பதற்காக நமது அரசு போடும் கடிவாளம்தான் இந்த இறக்குமதி
வரி.! அப்படியாவது வாங்குறதைக் குறைச்சுக்கங்களேண்டா.. என்பதுதான் அது!
ஆனால் நாம் மாட்டிக்கொண்டிருப்பது, ‘அட்சய
திருதியை’ என்ற நாளை தன் வியாபாரத்துக்காகப் பயன்படுத்தும் நகை வியாபாரிகள் கையில்தான்.!
தங்கம் என்ற வஸ்து, நம் வீட்டு வாஸ்துவை விட சிறப்பானது என்ற நம்பிக்கையில்தான் நாம்
ஓட்டிக்கொண்டிருக்கிறோம். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு , அவ்வப்போது வைத்து
எடுத்துக்கொள்ள தங்கம் ஒரு சுழல் நிதி வழங்கி ! ஆனால், நடுத்தர, மேல்தட்டு மக்களுக்கு
அது ஒரு நாளும் பணமாகிவிடக்கூடாது என்று நம்பித்தான் வாங்குகிறோம். ஆனால் அதையும் நம்
சொத்துக்கணக்கில் சேர்க்கிறோம். ஆக, தங்கம் நம்மிடம் முடங்குவதற்காகவே இந்தியா தேவையில்லாமல்
இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.
கொஞ்சம் எளிமையாகச் சொன்னால், தங்கம் ஒரு தேசத்தின்
கையிருப்பில் இருந்தால், அந்த தேசத்துக்கே மதிப்பு அதிகம். அதே தங்கம் தேச மக்களிடம்
அதிகமாக இருந்தால் அதன் மதிப்பு மிகவும் ஆபத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில்
, உலகிலேயே ஒரு பொருளை உற்பத்தியே செய்யாமல், அதே பொருளை உலகிலேயே அதிகமாகப் பயன்படுத்தும்
நாடு இந்தியாதான்.
அதாவது ஒரு கிராம் தங்கம்கூட உற்பத்தி செய்யாமல்,
ஏற்றுமதியும் செய்யாமல், அதே தங்கத்தை அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்வதால், நாம்
செலுத்தவேண்டிய அந்நியச் செலாவணி அதிகமாகிறது. அதாவது, மென்பொருள் ஏற்றுமதி செய்து
சம்பாதித்த காசை தங்கமாக இறக்குமதி செய்து வீணடிக்கிறோம். ஏற்றுமதியை விட இறக்குமதி
அதிகமாகும்போது அந்த நாடு ஏழை நாடுகளின் பட்டியலுக்கு விரைந்துகொண்டிருக்கிறது என்று
அர்த்தம்.
உலகநாடுகள் அனைத்தும் இந்தியாவின்….அல்ல..இந்தியர்களின்
தங்க வேட்டையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. 17000 டன் தங்கம் இந்தியர்கள் கையில்
இருக்கிறது என்கிறார்கள். ஆண்டுக்கு 400 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.
அதே சமயம், சீனா தனக்கான தங்க ஏற்றுமதியை அதிகப்படுத்திக்கொண்டே வருகிறது. இந்தியாவுக்கு
தங்கத்தை ஏற்றுமதி செய்துவிட்டு அதன் வீழ்ச்சிக்காக சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கிறது.
இப்படியே போனால், இந்திய அரசின் தங்கக் கையிருப்பு டுஸ்ஸ்ஸாகினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
நாம் தங்கத்துக்கு செலுத்தும் மதிப்பு அதன்
உண்மையான மதிப்பு இல்லை. உண்மையில், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் வேலையாள் செலவுகள்
மற்றும் லாபம் சேர்த்து, ஒரு கிராம் தங்கம் இன்றைய தேதிக்கு 589 ரூபாய் வரை விற்கமுடியும்
என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது அதன் பயன்பாட்டு மதிப்பு அவ்வளவுதான்.
அப்படியானால், நாம் கொடுக்கும் 2500 சொச்சம்...? அதற்கான பண்ட மாற்று மதிப்பு! அது
என்று வேண்டுமானாலும் தொபுக்கட்டீர் என்று பள்ளத்தில் விழுந்து மொக்கையாகி கிராம்
1000 ரூபாய்க்கு வர வாய்ப்பிருக்கிறது. கேட்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாகத் தெரியும்.
இதைப் புரிந்துகொள்ள சில அடிப்படை விபரங்கள் தெரிந்தால் போதும்.
உப்பு ஒரு காலத்தில் நாடுகளிடையே பண்ட மாற்றுப்
பொருள். சம்பளமாக உப்பைத்தான் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். சாலரி என்ற ஆங்கில வார்த்தைகூட
உப்பு என்ற பொருள்படும் லத்தீன் வார்த்தைதான். ஆனால், மிகவும் மதிப்பு வாய்ந்த பொருளாக
இருந்த உப்புதான் இன்று உள்ளதிலேயே விலை குறைவான உணவுப்பொருளாக இருக்கிறது.’உப்பிட்டவரை
உள்ளளவும் நினை’ என்ற தமிழ்ப் பழமொழியே, உப்பு என்பதை சம்பளம் என்று உணர்த்தியிருக்கிறது
அதேபோல்தான்
சில நூற்றாண்டுகளுக்கு முன், கருக்காத, பளபளப்பான, ஆபரணமாக்கி அழகு பார்க்கக்கூடிய
ஒரு பொருள் வெறும் ஆபரணம் என்ற தகுதியை மீறி, ஒரு பண்டமாற்றுப் பொருளாக மாறத் தொடங்கியதில்
இருந்துதான் சிக்கல்.! அதுவும் தன்னிடம் அதிகத் தங்கத்தை கையிருப்பாகக் கொண்ட நாடுகள்தான்
இன்று வல்லரசாக மதிக்கப்படுகின்றன. அன்று உப்பு
பெற்ற இடத்தைத் தங்கம் பிடித்திருக்கிறது. திடீரென்று வெள்ளியை பண்டமாற்றாக அறிவித்தாலோ,
அல்லது பண்ட மாற்றே வேண்டாம். எல்லாமே கரன்ஸியை வைத்து விளையாடிக்கொள்வோம் என்றோ உலகநாடுகள்
முடிவெடுத்துவிட்டால், தங்கமும், உப்பும் ஒரே நிலைக்குத்தான் தள்ளப்படும்.
கேட்பரீஸ் ஜெம்ஸின் ஒரு விளம்பரம் உண்டு.
டாக்டர் பாண்டா பொம்மை ஒரு பெரியவருக்குத் தேவைப்படுகிறது. ஆனால் அவரிடம் மற்ற பாண்டா
பொம்மைகள் இருக்கிறது. அவரது தேவை தெரிந்த அவரது நண்பப் பெரியவர், 5 பாண்டாவுக்கு ஒரு
டாக்டர் பாண்டா என்று பேரம் பேசுவார். இவரும் அநியாயம் என்று சொல்லி வாங்கிச் செல்வார்.
இந்த நிலைதான் இன்று இந்தியாவுக்கு உலகத்தில் தங்க உற்பத்தி செய்யும் நாடுகளிடையே ஏற்பட்டிருக்கிறது.
நம்மிடம் டாக்டர் பாண்டா இல்லை.. அவர்கள் கேட்பதைக் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம்.
என்னமோ தன்னிடம் அதிகத் தங்கம் இருந்தால், எப்பொழுது
பொருளாதாரச் சிக்கல் வந்தாலும் நகைக்கடைக்காரர்கள் உடனே வீடு தேடி வந்து வாங்கிக் கொண்டு
அன்றைய விலையில் பணம் கொடுத்துவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றுவரை
ஒரு நகைக்கடையிலாவது அவர்களிடமே வாங்கிய நகையாய் இருந்தால் கூட, அதைக் கொடுத்துவிட்டு
பணத்தைக் கொடுக்கிறார்களா பாருங்கள்!. அதற்குப் பதிலாக மீண்டும் நகை வாங்கச் சொல்லித்தான்
சொல்லுவார்கள்.
நாம் நகையை விற்றே ஆகவேண்டுமென்றால், அதற்கென்றே
இருக்கும் சேட்டுகள் அன்றைய விலையில் 10% கழித்துவிட்டு, ‘இது 22 கேரட் நஹி ஹை ஸாப்!” என்று எடையிலும் கை
வைத்து… கொடுக்கும் பணம்.. நாம் வாங்கிய விலையை விடக் குறைவாக இருக்கும். இதுதான் இந்த
முதலீட்டின் பின்னால் உள்ள தந்திரம். பாவம் கடைக்கோடி இந்தியன் இது புரியாமல் ‘சமயத்துக்கு
உதவும்’ என்று வாங்கிக் கொண்டே செல்கிறான்.
அடகு இன்னும் அநியாயம்.! ஒரு குறிப்பிட்ட
விலைக்கு அடகு வைத்துவிட்டீர்கள். தங்கத்தின் விலை இறங்கும்போது, உடனடியாக உங்கள் தங்கம்
முழுகிவிடும். இவ்வளவு தொகையை உடனே கட்டுங்கள் என்று நோட்டீஸ் விடுகின்றன முத்தூட்
மற்றும் மணப்புரங்கள்… அதே நேரத்தில் தங்கம் விலை ஏறும்போது உங்களை அழைத்து..இந்தாங்க
விலை ஏறியிருக்கு இந்தக்காசையும் கடனா வச்சுக்குங்க என்று கொடுக்கவா செய்கின்றன? ஆகவே..
கையில இருக்கே தங்கம் கவலைப்படுடா சிங்கம் என்று கொஞ்ச நாளில் ஆகிவிடும்..!
உண்மையிலேயே
தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தால், தங்கப் பத்திரங்கள் வாங்கலாம். அது உலகளாவிய
தங்கத்தின் மதிப்பை வைத்து நிர்ணயிக்கப்படுவதாலும், அது ஒரு மறைநிலைப் பொருளாகவும்
பார்க்கப்படுவதால், ஓரளவு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதையும் இப்போது செய்தால்
பிரச்னை வர வாய்ப்புள்ளது. ஏனெனில் எப்போது இந்தியாவில் தங்க இறக்குமதி மிகக்குறைந்து
ஆண்டுக்கு 5 முதல் 15 டன்னுக்கு வருகிறதோ, அன்றுதான் தங்கத்தின் உண்மையான விலையும்
வெளியில் வரும். அதனால்தான் இப்போது வங்கிகளில் தங்கம் விற்பதையும் அரசு தடை செய்கிறது.
மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கத்தை தங்கள் ஊழியர்களுக்கு பரிசாகக் கொடுப்பதன்
பின்னணியிலும் சில வரி ஏய்ப்புகள் உள்ளன. அது வேறு கதை..!
அரசு நம்மிடம் உள்ள தங்கத்தை வங்கிகளில்
செலுத்தச் சொல்லி, அதற்கு மாற்றாக ஒரு குறிப்பிட்ட வட்டி வீதத்துடன் கடன் பத்திரங்களாக
மாற்றிக்கொள்ளச் சொன்னால், யோசிக்காமல் செய்யுங்கள். வளமான தேசத்தில் வாழ நாம் செய்யப்போகும்
நல்ல முடிவாக இருக்கும். அமெரிக்கா இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இப்படித்தான் செய்தது.
மேலும் தங்க நகைகளை வைக்க லாக்கருக்கு நாம் பணம் கட்டவேண்டியதில்லை. அரசே காசும் கொடுத்து,
நகையையும் பத்திரமாக வைத்துக்கொள்ளும். திருட்டு பயம் இருக்காது. அது தவிர, நம் விழாக்களுக்கு எப்படியாவது கடன் வாங்கி, நகை
போடுவதை நம் கலாச்சாரத்திலிருந்து மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இன்றைய தேதியில், இந்தியப் பொருளாதாரத்தின்
மிகப்பெரிய அச்சுறுத்தல் நமது தங்க இறக்குமதி. இந்தியர்களிடம் அதிகத் தங்கம் இருக்கிறது என்பது பெருமைக்குரிய செய்தி இல்லை.அதனை சீர் செய்ய வேண்டும் என்று உண்மையிலேயே
நினைத்தாலோ, கையிலிருக்கும் காசு , காசாகவே நிலைக்கவேண்டும் என்று நினைத்தாலோ, தயவு
செய்து தங்கம் வாங்காதீர்கள். நகையைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும் பெண்களும் கொஞ்சம் அமைதி காத்தல் அவசியம்.! நம் ஆசையே நமக்கு உலை வைத்துவிடும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு
இந்தியர்கள் தங்க நகைகள் வாங்குவதை நிறுத்தினால், உண்மையான தங்கத்தின் மதிப்பு வெளியில்
வரும் பாருங்கள்!
அப்போது கொண்டாடுங்கள் தீபாவளியை..!!