கடவுள் இருக்கிறாரா?
என் அறிவுக்கு எட்டாத, என் சிந்தனை போய் முட்டி நிற்கும் எல்லாச்செயலிலும் கடவுளைக்கொண்டுவந்து நிறுத்தி, திருட்டுப்போன பொருளுக்கு மட்டும் போலீஸைத்தேடியும், முடியாத உடலுக்கு மருத்துவரைத்தேடியும் கடவுளை நட்டாற்றில் நிறுத்துகிறான் ஆத்திகன்!
கடவுள் இல்லையா?
என் பகுத்தறிவை கூறாக்கி,,, பின் அதனைக்கூராக்கி..எல்லாம் உன்னால் முடியும்.! அதற்கு ஏன் இன்னொரு ஆளை இழுக்கிறாய் ? அதற்கு கடவுள் என்று பெயர் இடுகிறாய் என்று தெளிவான முடிவைச்சொல்லிவிட்டுவீட்டுக்கார அம்மாவின் பக்தியைத்தடுக்க முடியாமல் தவிக்கிறான் நாத்திகன்.!
எனக்கு இந்த இரண்டில்கூட குழப்பமில்லை!!
ஆனால் ஒரு முக்கியக்கேள்வி!
அதெல்லாம் சரி! கடவுளைப்பயன்படுத்தி நாம் சாதித்தது என்ன?
நாம் பெரியவர்களா? கடவுள் பெரியவரா? என்று எழும் கேள்விக்கு..எப்போதும் என் பதில், நாம்தான்..ஏனெனில்..நம்மைப்படைத்ததாகக்கூறி கடவுளையே படைத்தவர்கள் நாம்.! ஆனாலும் கடவுள் பெரியவராக ஆகிவிடுகிறார். நம்மைவிட்டே தம்மைப்படைக்கவைத்துவிட்டு!
என்னதான் கோயில்,சர்ச், மசூதி, இன்னபிற மத ஆலயங்கள் போய் கும்பிட்டு வந்தாலும் நாம் சொல்லும் பொய்களும், புரட்டும், திருட்டும்,வஞ்சகமும்...கொஞ்சம் கூடக்குறையாதவர்களாக நம்மைச்சுற்றியவர்களும்..சில சமயம், நாமும்... இருந்துவிடுகிறோம்.
அப்படியென்றால்....கடவுள் தேவையா?
நிறைய மதங்களைத்தோற்றுவித்தோம். இந்தக்காலத்தில் ஒரு மனிதவள ஆலோசகர் செய்யும் வேலையை..மத குருமார்களை விட்டு செய்யச்சொன்னோம். இன்றைய உயரதிகாரிகளின் சொகுசைப்போலவே அவர்களுக்கும், நிறைய சொகுசைப்பழக்கினோம். அவர்களும் கொஞ்சம் நல்லது பண்ணிப்பார்த்துவிட்டு..இதெல்லாம் வேலைக்காகாது என்று எதையெல்லாம் சிஷ்யர்களுக்கும், இவர்களது பக்தர்களுக்கும் செய்யவேண்டாமென்று சொல்லுகிறார்களோ
அதையெல்லாம் அச்சுப்பிறழாமல் செய்து வைத்து...அதிகமாகத் தப்பித்து..ஆசி வழங்க ஆரம்பித்தார்கள்! ஆக...அந்த மாதிரி மதகுருக்களுக்கு..பிழைப்பு நடத்த..கடவுள் தேவை!
இந்தக்கோயிலுக்கு இவ்வளவு நிதிவழங்கினோம்..அந்த பேராலயத்துக்கு அவ்வளவு நிதிவழங்கினோம் ஆகவே உங்கள் மதத்தார் மேல் எங்களுக்குத்தான் லவ்வு அதிகம்! உங்க ஓட்டெல்லாம்..எங்களுக்கே..ஹி ஹி எனும் அரசியல்வாதிகளுக்கு..... கட்டாயம் கடவுள் தேவை!
உம்மாச்சி கண்ணைக்குத்தும்...கருப்புசாமி நகர்வலம்வருது..வெளியவராத! அப்பத்தை கடிச்சா இரத்தமாவரும்..அப்பம்தான் இயேசு!..எச்சில் முழுங்கினா நோம்பு நிக்காது.., மறுமை ன்னு
குழந்தைகளையும் மாற்று மதத்தினரையும் பயமுறுத்தும் -அப்போதைக்கு தவறுகளையும், தலையீட்டையும் தள்ளிப்போடும்-பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும்...கடவுள் தேவை!
என்னதான் தவறுசெய்யும் உறுதி இருந்தாலும், "கண்காணி இல்லாதார்...." ன்னு தமிழ் இலக்கியம் வந்து பயமுறுத்தும் நேரத்தில் எதுக்கு இந்த வேலை.? நடக்கறபடி நடக்கட்டும்னு 'அவன்' மேல் பாரத்தைப்போட்டுட்டு தவறு செய்ய அஞ்சும் சாமான்ய மனிதனுக்கு....நிச்சயம் கடவுள் தேவை!
எப்படா அவளைப்பார்ப்போம்னு பகலெல்லாம் காத்திருந்து, வீட்டில் டேக்கா கொடுக்கக்கூடிய ஒரே காரணமான கோயிலைச்சொல்லிவிட்டு அவனைப்பாக்கவே வரும் அவளுக்கும் அவனுக்கும் 'அவர்' இருப்பதாகச்சொல்லப்படும் கோயில் தேவைப்படுவதால்...அவர்களுக்கும் கடவுள் தேவை!
வாழ்வில் எவ்வளவு துன்பம் வந்தாலும், கடவுள்விட்ட வழி என்று..அதை ஏற்றுக்கொண்டு சமூகத்தவறுகளில் ஈடுபடாமல் ஒரு வித கட்டுப்பாட்டுடன் வாழும் அப்பாவி மனிதனுக்கும்...கடவுள் தேவை!
கோயில்கோயிலாகச்சுற்றி, அந்த சாமி அதுக்கு நல்லது..இந்த மாதா இதுக்கு நல்லது..அந்த தர்கா
அதுக்கு நல்லதுன்னு பத்திரிக்கையில் எழுதி பளபளன்னு பென்ஸ் வாங்க நினைக்கும் எல்லா பக்தி எழுத்தாளிக்கும்...கடவுள் தேவை! (அங்க போனவன் நாசமாப்போனா இவனுக்கென்ன?)
அப்புறம்...கல்யாணம், கருமாதி, காதுகுத்துன்னு எல்லா எழவுக்கும் காசாகவே அவனைப்பாக்கும் புரோகிதர்கள்,
வாஸ்து நிபுணர்கள்,
இறை சிகிச்சை மருத்துவர்கள்,
உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் என்று ஊருக்கு ஊர் உண்டியல் வைத்து காலேஜா கட்டித்தீர்ப்பவர்கள்,
எங்க பரம்பரையே இந்தக்கோயில் சொத்துன்னு ஊர்க்காசை கொள்ளையடிக்கும் தீட்சிதர்கள்,
கோயில் ஆகம கொள்ளையர்கள்,
அனைத்துக்கோயில் பூசாரிகள்,
பாதிரிமார்கள்,
உழைக்காமல் ஊர்சுற்றும் பல்வேறு மத பிரசாரகர்கள்..
(இன்னும் பலர் பட்டியலில் விட்டுப்போயிருக்கும்) ஆகிய அனைவருக்கும் வயிறு வளர்க்க...
கடவுள் தேவை!
அப்ப கடவுள் தேவையில்லையா?
யாருக்கெல்லாம் தேவையில்லை?
- தொடரும்
டிஸ்கி: நீங்கள் என்னவேண்டுமானாலும் பின்னூட்டலாம். ஒரு விவாதம்தான் வேண்டும்!
இந்த சிந்தனையைத்தூண்டியவர், நண்பரும்..அண்ணனும் ஆன சுரேஷ் என்ற கிருஷ்ணமூர்த்தி.! அற்புத சிந்தனையாளர்!