Tuesday, February 14, 2012

ட்விட்டுரை # 2

                           






எனது பல்வேறு காலகட்ட கீச்சுக்களின் தொகுப்பு

அக்கா..வீட்டிலியே இருந்தா வெளிச்சொத்துக்களை யாரு பாத்துப்பா? _அப்ப சரி!! குடும்பத்தோட வெளில போய் பாதுகாத்துருங்க! - அப்ப மக்கள்? ஹெஹெஹெ!!


சொத்துக்குவிப்பு வழக்கில், அப்ரூவரானா அல்வாக்கடை வச்சுத்தரேன்னாரு வூட்டுக்காரரு...நான் வரேன்க்கா!! #யாருடீ இவுங்களை வெளில அனுப்பிச்சது?


முல்லைப் பெரியாறை விட்டுட்டு மன்னைப் பெரியோரை நினைக்கும் இந்த தமிழ்க்கூட்டம்..!! கிடைத்த கேப்பில் கட்டையப்போடுடே சாண்டி!!


நானே எப்படிடா வெளில போலாம்... இதுவரைக்கும் அமுக்கினதை அனுபவிக்கலாம்னு நெனச்சிக்கிட்டுருந்தேன்.மவராசி..தானே கழட்டிவுட்டுட்டா! #யாரு?யாரோ!


காந்தித்தனம் நன்றுதான்எதிராளி ஆங்கிலேயனாக இருக்கும் பட்சத்தில்..! இந்தியனென்றால்..டையர்த்தனம்தான் நல்லது..#ச்சுட்டேபுடணும்!


பணக்கார பையனை காதலிக்கும், அழகான பெண்ணை காதலனுக்கும் அறிமுகப்படுத்துங்கள்!அப்புறம் என்ன ? Break Up தான்! ஸ்வீட் எடு கொண்டாடு #Breakup Idea


அம்மா பிடிக்குமா? அப்பா பிடிக்குமான்னு கேட்டால்...ரெண்டுபேரையுமே பிடிக்காது முகத்துக்கு நேராகச் சொல்லும் நேர்மையான பாப்பாதான் நாளைய VIP


இனி ஒரு விதி செய்யப் புறப்படும் மருத்துவ விஞ்ஞானியின் வேலை. இனி ஒரு வியாதி செய்வது!! - இது என் 9ம் வகுப்பில் எழுதியது!!


இதுஇல்லாமஇதுபண்ணினாலோ, ‘இதுபண்ணாமஇதுபோட்டுக்கிட்டாலோஇதுவரும்..ஜாக்கிரதை!! #HIV


நீங்கபாட்டுக்கு மலைக்குப் போறேங்கிறீங்க? நாங்க இங்க ஒரு பெரிய பிரச்னைக்கு பிச்சிக்கிட்டிருக்கோமே மேdam!!


30 நாளில் 3000 கோடி செலவழிக்கணுமா அருணாச்சலம்!! # டேய் அண்ணனை பஸ்ஸில் ஊரைச்சுத்திக்காட்டி , பால் வாங்கிக்குடு!


ஊழலை ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது - சோனியா # ஏன் இந்த திடீர்த் தற்கொலை முடிவு?


அணு உலை வேணுங்கிற அப்பாடக்கரெல்லாம் அங்கயே உக்காந்துக்கவேண்டியதுதானே? சொல்லிட்டு டெல்லிப்பக்கம் ஓடிர்றானுங்க! #நீங்க இருந்து காட்டுங்க!



பள்ளி இருக்கும் நாளில் 7:30 மணிக்கு எழுப்ப பெரிய போரே நடக்கும்..! லீவுன்னு சொன்னவுடனே பயபுள்ளை 6 மணிக்கெல்லாம் எந்திருச்சு ஆட்டம்.!.#சேட்டை மகன்.


எது எப்படியோ? இன்னிக்கு ஒரு சொந்தக்காரப்பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சு அவன் வாழ்க்கையை சீரழிச்சாச்சு! அப்பாடா!


மயக்கம் என்ன : அடுத்தவன் காதலியை சுடலாம்.. நம்ப  படத்தை அடுத்தவன் சுடப்புடாது..! இதுதான் கருத்து.. இல்லையா யுவர் ஆனர்? #டவுட்டு


நான் ஏன் எந்தக்கருத்துமே சொல்லாமமண்மோகனா இருக்கேன்னு தெரியுதா? ஏதாவது பேசினா அடிக்கிறாய்ங்க! இல்ல சரத்து? #யாரு? யாரோ!


800 ஆண்டு பழமையான அனுமார் கோவிலை எப்படிச் சுருக்கமாகச் சொல்வது? ‘மாருதி 800’ !! # முடியல!



Thursday, February 9, 2012

நெஞ்சுரமிருந்தால், லஞ்சம், பஞ்சாகும்!





                                      



        

 ’அன்புடன் கிரண்பேடி’ நிகழ்ச்சியை விஜய் டிவிக்காக நான் இயக்கியபோது அறிமுகமான நண்பர் ஆண்ட்ரூ தனூஜ் குமார்.! ஒரு தனியார் விளம்பர நிறுவனம் மற்றும் ஆலோசனை நிறுவனம் நடத்திவருகிறார். அவரது CHIC CONSULTANCY என்ற நிறுவனம்தான் அந்த கிரண்பேடி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

உண்மையில் நாட்டில் ஊழல் குறையவேண்டுமென்றால், மக்களின் தட்டிக்கேட்கும் மனோபாவம் வளரவேண்டும் என்ற கருத்தை ஆழமாகக் கொண்ட மனிதர்.! ஒத்த கருத்துடையவர்கள் நாங்கள் என்பதால், மிகவும் எளிதாக ஒட்டிக்கொண்டோம். மிக அருமையாக கிதார் வாசிப்பார்.(என் கிதார் குரு! J )  கடந்த கிறிஸ்துமஸின் பொழுது, எங்கள் வீட்டுக்கு ஒரு அற்புதமான நண்பர்கள் குழாத்தோடு வந்து, கீதங்கள் இசைத்துச் சென்றார். நேர்மை பற்றி பேசிக்கொண்டிராமல், செயலில் காட்டும் நல்ல நண்பர்.! கேட்டால் கிடைக்கும் என்பது பற்றி நாங்கள் பலமுறை பேசியிருக்கிறோம்.



      அவர் புதிதாக ஆரம்பித்த தனது நிறுவனத்துக்காக TIN எண் வாங்குவதற்காக, ஆயிரம் விளக்கு வணிகவரித்துறை அலுவலகம் சென்றிருக்கிறார். உண்மையில் அந்த வேலைக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ.500 மட்டுமே. ஆனால், அங்கிருந்த துணை வணிகவரி ஆணையர் ஜெயலட்சுமி மேலும் 5000 ரூபாய் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

இவர், அதெல்லாம் எங்க கம்பெனியில் தர வழியில்லை. அரசாங்கம் என்ன தொகை கட்டச்சொல்லியிருக்கோ அதான் கட்டிட்டேனே என்று பொறுமையாக பதில் சொல்ல,



உடனே, இவர் விண்ணப்பத்தைப்  பார்த்துவிட்டு இது நொட்டை, இது நொள்ளை என்று குறை சொல்லி திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். இவரும் விடாக்கண்டராய் நொட்டை , நொள்ளையெல்லாம் சரிசெய்துவிட்டு மீண்டும் சென்றிருக்கிறார். அந்த பெண்மணி நக்கலாக..



’ஏன் சார்..! படிச்சிருக்கேங்கிறீங்க…! இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் உங்களுக்குத் தெரியாதா?’ என்று சொல்ல..



’விண்ணப்பத்தை பூர்த்தி பண்ணி, பணம் கட்டறதுதானே ஃபார்மாலிட்டி! அதைத்தான் செஞ்சுட்டேனே’?… என,



’உங்களோட பெரிய தொந்தரவா(!) போச்சு! அது தவிர, தரவேண்டிய அமவுண்ட் கொண்டு வந்தீங்களா? சரி தொலையுது..உங்களுக்காக(?) ஆயிரம் குறைச்சுக்கிறேன். நாலாயிரமா தாங்க!’



’அந்த அமவுண்ட்டுக்கு ரசீது குடுப்பீங்கன்னா நான் தரேன் மேடம்..!’



’யோவ்! அதெல்லாம் தரமுடியாது.. ! நீங்க எப்படி டின் நம்பர் வாங்குறீங்கன்னு பாக்குறேன் என்று வம்பாகப் பேசியிருக்கிறார்



இதில் பெரிய விஷயம் என்னவென்றால், இரண்டாம் முறை பணம் கேட்டது முதல், நொட்டை சொன்னது வரை ஆண்ட்ரூ தன் மொபைல் போனில் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவாக எடுத்துவிட்டார்.



அதை எடுத்துக்கொண்டு அன்றே லஞ்சஒழிப்புத்துறை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார். அங்கு அந்த வீடியோவைப் போட்டுக்காட்டி, விபரம் சொல்ல, அவர்கள் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டு, புகாரை எழுதி வாங்கிக்கொண்டு, அந்த பெண்ணிடம் செல்பேசியில் பேசச் சொல்லியிருக்கிறார்கள்.

அதன்படி பேச ஆரம்பித்து, ஸ்பீக்கர் போனில் போட்டு மொத்தத்தையும் போட்டு வாங்கி, மேலும் அந்த அதிகாரிகளில் ஒருவரே, ஆண்ட்ரூவின் ஆடிட்டர் போலப் பேசியிருக்கிறார்.



’என்ன சார்! உங்க க்ளையண்ட்டுக்கு எந்த விபரமும் தெரியாதா? கமர்ஷியல் டாக்ஸ் ஆபீசுக்கு வந்தா இதெல்லாம் சகஜம்ன்னு சொல்லுங்க சார்! நாளைக்கு வந்து பணத்தைக் குடுத்துட்டு வேலையை முடிச்சுக்குங்க சார்!’ என்று அந்த பெண்ணும் அதிகாரமாகப் பேசிவிட…முதல் ஆதாரம் சிக்கியது.!



பற்றிக்கொண்டது பரபரப்பு!



அடுத்தநாள், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆண்ட்ரூவிடம் ரசாயனம் தடவப்பட்ட நான்கு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து, எப்படிக் கொடுக்கவேண்டும் என்று ஒத்திகையும் பார்க்க வைத்து, கல்வித்துறையிலிருந்து இரண்டு அதிகாரிகளை சாட்சியத்துக்கு தயார் செய்து, அதில் ஒருவரை அவர் கூடவே அனுப்பி வைத்துவிட்டு, பின்னாலேயே வந்துவிட்டனர்.



அந்த அம்மாவின் டேபிளுக்கு ஆண்ட்ரூ செல்கிறார். கூட வந்திருப்பவரைக் காட்டி,



இவர் யாரு? என்று அந்தப் பெண்மணி கேட்க,



எங்க அக்கவுண்ட்டட் மேடம்.! இனிமே கமர்ஷியல் டாக்ஸ் மேட்டரெல்லாம் இவர்தான் பாக்கப்போறாரு..!



ஓஹோ..!, சரி..நம்ப மேட்டர் என்னாச்சு?



ஸாரி மேடம்..! எனக்கு உங்க ஃபார்மாலிட்டி தெரியலை ! இப்ப நீங்க சொன்ன நாலாயிரம் கொண்டுவந்திருக்கேன்.



ஸ்…ஏன் சத்தமா பேசுறீங்க..? ஓக்கே. அதை அப்படியே டேபிள் மேல் வையுங்க!



இவர் வைக்க, அந்த பணத்தின் மீது தனது கால்குலேட்டரை வைக்கிறார்.



எப்ப மேடம் என் டின் நம்பர் கிடைக்கும்?



செக்‌ஷன் க்ளார்க் இன்னிக்கு லீவு! நாளைக்கு வந்து வாங்கிக்குங்க!



சரி மேடம் என்று சொல்லிக்கொண்டே , அந்த அம்மா, பணத்தை கையால் தொடவில்லையே என்று நினைத்துக்கொண்டே, கீழே நின்றுகொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு போன் செய்ய… அவர்கள் மாடியேறி தபதபவென வந்துவிடுகிறார்கள்.



மூத்த அதிகாரி..



மேடம்.. நாங்க லஞ்ச ஒழிப்புத் துறைலேருந்து வரோம்..! மிஸ்டர் ஆண்ட்ரூகிட்ட TIN நம்பர் தர்றதுக்காக, லஞ்சம் வாங்கின குற்றத்துக்காக உங்களைக் கைது பண்றோம்.’



எது..? நான் எப்ப லஞ்சம் வாங்கினேன். அவர்தான் பணத்தை என் டேபிள் மேல வச்சாரு! என்று அந்த அம்மா பதற..



அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்..! நீங்க வக்கச்சொன்னீங்க! வச்சாரு! அப்புறம் கால்குலேட்டரை எடுத்து ஏன் அதுக்கு மேல வச்சீங்க! என்று ஆண்ட்ரூவுடன் வந்த சாட்சிய அதிகாரி சொன்னபிறகுதான்…தான் வலையில் சிக்கிக்கொண்டது உறைத்திருக்கிறது அந்த லஞ்சப் பெருச்சாளிக்கு!



பின்னர்…ஆண்ட்ரூவைப் பார்த்து..ஒரேயடியாய் அழுது..அரற்றி..



என்ன சார். இப்படி பண்ணிட்டீங்க! அய்யய்யோ அய்யய்யோ..! என் மரியாதை போச்சே..மானம் போச்சே என்று அலறிக்கொண்டே போலீஸ் வண்டியில் ஏறியிருக்கிறார். அன்றே, நீதிமன்ற உத்தரவுப்படி புழலில் அடைக்கப்பட்டார்.



ஆண்ட்ரூவின் TIN எண் தானாக அடுத்த நாள் கடிதத்தில் வந்து சேர்ந்துவிட்டது. வெறும் ஐநூறு ரூபாய் செலவில்..!!

         
     இதில்..பணத்தை விட்டுவிடுவோம். ஏதோ ஒருமுறை நுழைவுத்தேர்வு எழுதி ஒரு அரசு நாற்காலி கிடைத்துவிட்டது என்பதற்காக ஆண், பெண் பேதமின்றி ஆட்டம்போடும் இதுபோன்ற சொறிநாய்களிடம், நம் படிப்பு, அறிவு, அனுபவம் இவற்றையெல்லாம் அடகு வைக்கவேண்டுமா என்று ஒரு நிமிடம் யோசித்தால், லஞ்சம் கொடுக்க மனது வராது.  அப்படிக் கொடுத்துப் பழக்கியதால்தான். இவர்கள் ஆட்டத்துக்குத் துணைபோக அரசியல்வாதிகளையும் சேர்த்துக் கெடுத்து நாட்டையே சூறையாடுகிறார்கள். பந்தாவுக்கு மட்டுமே மயங்கிய அரசியல்வாதிகளுக்கு பணத்தைக் காட்டியவர்கள் அதிகாரிகள்தான்!



   எல்லாவற்றையும் விடுவோம். அரசு அலுவலகத்தில், அந்த வேலைக்குரிய பணத்தை மட்டும் கட்டிவிட்டு, லஞ்சமில்லாமல்- முடிந்தால் அந்த ஆளை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மாட்டிவிட்டு-  வேலையை முடித்துப்பாருங்கள். அன்றிரவு தூக்கத்தின் நிம்மதிக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.






டிஸ்கி:
                                            





      நண்பர் ஆண்ட்ரூவுக்கு வாழ்த்துச் சொல்ல விரும்பினால் aliceandy@gmail.com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம். நல்ல உள்ளங்கள் துணைக்கு இருப்பது அவரை பயமின்றி, இன்னும் உற்சாகமாகச் செயல்பட வைக்கும்.

தொடர்பான செய்திகள் :

லஞ்ச ஒழிப்பில் உதவி தேவையென்றால் கேட்டால் கிடைக்கும் அமைப்பை kettaalkidaikkum@gmail.com என்ற மின்னஞ்சலில் அணுகினால், ஆட்டம் களைகட்டும்.!




Monday, January 23, 2012

கந்தக சாமி!



அய்யா..

ஏம்பேரு கந்தக சாமி!
பொறந்த எடம் பூமிதாஞ் சாமி!
நான் வானத்தில் இல்லாத சாமி
ஆனா வாணம் செய்யுற சாமி!

நாம்பாட்டுக்கும் செவனேன்னு
நல்லகாலம் பொறக்குமுன்னு
மண்ணுக்குள்ள மகிழ்ச்சியா
மக்கிக்கெடந்தேன் சாமி!

என்னயத்தேடிவந்து
எக்குத்தப்பா நோண்டித்தந்து
எதுக்காவது பயன்படுவேன்னு
எப்படியோ கண்டுக்கிட்டாங்க.!

மொதல்ல நாம்பாட்டுக்கும்
மொறயாத்தான் இருந்தேன்.
பொறவியிலேயே நமக்கு
கோபம் கொஞ்சம் அதிகம் சாமி!
அதப்போய் மறந்துப்புட்டு
அடக்கிவச்சு அடக்கிவச்சு
அழுத்தமா மூடிவச்சு
ஒருநாள் வெடிக்கவச்சு
ஒண்ணுமில்லாம பண்ணிப்புட்டாங்க!

நானும் சும்மா இல்ல..
நாலஞ்சு பயலுகளை நயமா
நரகத்துக்கனுப்பிட்டு..

அதெப்புடி நரகம் னு
அசதியா கேக்குறீகளா?
என்னய தூக்கிப்போட்டு
எகனை மொகனையா
வெளயாண்டவன்
எப்புடி சாமி சொர்க்கம் போவான்?

நல்லதே நடக்காதான்னு
கலங்கிப்போய் கெடந்தப்பதான்
பளபளப்பா எரிய வச்சு
பட்டாசா மாத்தி என்னை
பார்புகழ வச்சாங்க.!

சிவகாசிப்பக்கம்
அந்த சின்னப்புள்ளைங்க
என்னைத்தொட்டு
வேலைபாத்து
அவுக தாத்தா பட்ட கடன
தடுமாறி அடச்சாங்க!

அதுல ஒரு கொடுமை சாமி!
ஏங்கொணம் எனக்கே பிடிக்காது.
மனுசப்பய மாதிரியே
எங்க இருக்கோம்னு தெரியாம
ஏறிக்குதிச்சுப்புடுவேன்.
அப்புடித்தான் செலபேர
அழிக்கவேண்டியதா போச்சு!

எல்லாப்பயலுக்குள்ளும்
எங்கேயோ நான் இருக்கேன்
கோபம் சேமிக்காம
கொதிச்செழுந்து வர்றவனும்
கோபத்துக்கே பொறந்த நானும்
கிட்டத்தட்ட ஒண்ணுதான்!

நல்லவன் ஒருத்தன
நசுக்க நெனக்கிறவன்
ஒருத்தன குறிவச்சு
ஒரு கூட்டம் கொல்லுறவன்
அத்தன பேருந்தான்
என்னோட மொதலாளி!
ஆனாலும் பலதடவை
அவனுக்கே நான் கொலையாளி!

நாட்டு வெடிகுண்டா
நெறய நாள் இருந்திருக்கேன்.!
நக்ஸலைட் பொக்கிஷமா
நாந்தானே எப்பவுமே!

சீனாக்காரன் என் சித்தப்பா
மொறவேணும்
ஆனா இந்த அமெரிக்கா.?
அண்ணன் மொற வேணும்.!
என்னய விட மோசமா
இடம் பொருள் பாக்காம
எதுத்தவன அடிக்கும் பய!

இப்பல்லாம் நமக்கு
வயசாகிப்போச்சு சாமி!
இளந்தாரிப்பயலுக
பலபேரு வந்துட்டாய்ங்க!

டெட்டனேட்டர் பூதம்கிறான்
ஆர் டி எக்ஸ் ங்குறான்!
பாஸ்பரஸ் பாமுங்குறான்!
பெட்ரோல் வெடிகுண்டுங்குறான்!

டைனமைட்டுன்னு ஒரு
சாத்தான செஞ்சவரு
தப்பால்ல போயிருச்சுன்னு
நோபல் பரிசு செஞ்சு
நல்லபேர வாங்கிக்கிட்டாராம்.!

என்னய கண்டபய
என்ன புண்ணியம் செஞ்சாலும்
என் பாவம் கழுவ
இன்னும் எவனும் பொறக்கல !

ஆனாலும் நாந்தான் சாமி
அத்தனைக்கும் மூத்த சாமி!
ஏன்? னு கேளு சாமி
எனக்கப்புறம் இங்க
எத்தனைபேர் வந்தாலும்
மொதல்ல வெடிச்சது
நாந்தான் சாமி!

இருந்தாலும் எனக்கு
மனசு கொதிக்குது சாமி!
எத்தனை பேரை
கொன்னுருப்பேன்!
எத்தன நிம்மதி
தின்னுருப்பேன்!
இதெல்லாம் வேணாம்னு
இப்பவே முடிவெடுத்து
என்னய மறுபடியும்
எடுத்த எடத்துலயே
புதைங்க சாமி!

அப்படிச்செய்யலைன்னா
அதுவரைக்கும்...

ஆக்கலுக்கு யாருன்னு
அடிச்சுக்குங்க சாமி!

காத்தலைப்பத்தி நீங்களே
கவலைப்படல சாமி!

அழிக்கறதுக்கு
நமக்குத்தான்
ஆணை இருக்கு சாமி!


அதுனால இங்கு நான்
கடவுள் வரிசையிலே...

கந்தகசாமி!


ஒரு நெருங்கிய பிரபலத்தின் விருப்பத்தின் பெயரில் மீண்டும்.. 


 (   பதிவெழுத நேரமில்லைன்னா சும்மா இருக்கலாமுல்ல.. மீள்பதிவு...!! ஹூம் ...இது ஒரு பொழைப்பு!?   - என்று தங்கமணி சொல்லலை!  )

Friday, January 20, 2012

பொட்டண வட்டி




'எப்புடி இருந்தாலும் ரெண்டு லெச்சம் இல்லாம ஒண்ணும் செய்யமுடியாது.''

           நேற்று இளங்கோ அண்ணன் சொன்னது மீண்டும் மீண்டும் வந்துபோனது. அப்பா காலத்திலிருந்த டெடில் மிஷினை வைத்து அச்சகம் நடத்தி ,இன்றைய தேதிக்கு பிழைப்பது என்பது , பேப்பர் வெட்டும் இயந்திரத்தில் தலையைக்கொடுப்பதற்குச் சமம் என்று தெரிந்து போனது. சரி..இருக்கும் பொருட்களை விற்கலாம் என்றால், அதுவும் முடியாது, வேண்டுமானால் அச்சு எழுத்துக்களின் ஈயத்தையும் இரும்பையும் எடைக்கும், படக்கட்டைகளை குப்பைக்கும். எழுத்துக்களை வைத்திருந்த சிறு அறைகளாகப்பிரிக்கப்பட்ட பெட்டிகளை உடைப்பதற்கும்,அந்த பிரம்மாண்டமான லண்டனில் செய்யப்பட்ட , ராயல் சிம்பல் பொறித்த அச்சடிக்கும் எந்திரத்தை பழைய இரும்பு விற்கும் சுரேஷ் அண்ணனிடமும் கொடுக்கலாம்.

            அதில் ஒரே மிச்சம், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் , பெடலால் மிதித்து ஓட்ட முடியவில்லை என்பதற்காக பொருத்திய மோட்டார்.! அதையும் ஆயிரம்கூடப்பெறாது அண்ணே என்று எலக்ட்ரீஷியன் பாலு சொல்லிவிட்டான். நானும் பல்லைக்கடித்து இத்தனை ஆண்டுகள் ஓட்டிவிட்டேன். யாராவது ஒருவர் சிக்கினாலும் அவர்கள் கடன் சொல்லுவார்கள். அல்லது ஆப்செட்டில் ரேட் படியாமல் என்னை சிக்கவைப்பார்கள். அதிகபட்சமாக தனியார் பஸ் டிக்கெட் ஆர்டர் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது அதற்கும் மிஷின் வந்துவிட்டது. மாதாந்திரச் செலவுக்கு வாங்கிய கடனே ஒரு லட்சத்தைத்தாண்டிய பிறகுதான் ஏதாவது செய்தாகவேண்டும் என்ற எண்ணம் வந்தது.

               எனக்கு முன்னரே முழித்துக்கொண்டு, இன்று நகரின் முன்னணி ஆப்செட் பிரிண்டர்ஸ் என்று பெயரெடுத்த இளங்கோ அண்ணன் கடைக்கு சென்றேன். ஊரிலேயே பிரபலமாக அச்சுத்தொழில் நடத்திய காலத்தில் எங்களிடம் வேலை பார்த்தவர். ஒரு காலத்தில் அவர் என்னை முதலாளி மகன் என்ற அன்பில் பல இடங்களுக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். என் பெயரை மட்டும் கம்போஸ் செய்து, கட்டை அடித்து, பேப்பர்களில் ஓட்டிக்கொடுத்திருக்கிறார். அதை என் புத்தகங்களில் ஒட்டி பள்ளியில் நான் பெருமைப்பட்டிருக்கிறேன்.

அண்ணே...! ஆப்செட் மிஷின் போடலாம்னு இருக்கேண்ணே!

ரொம்ப சந்தோசம்...! ஆனா இதுக்கு நீ இவ்ளோ காலமாக்கியிருக்கவேணாம்.!

எப்படியாவது ஓட்டிரலாம்னு நினைச்சேண்ணே!

            இங்க பாரு முகுந்தா! இப்பெல்லாம் தெருவுக்குத்தெரு ஆப்செட் பிரிண்ட்டர் வந்துருச்சு! போட்டியும் அதிகம்.. நான் உங்கப்பாக்கிட்ட வேலை பாக்கும்போது டெடில் மிஷின்ல பத்திரிக்கை அடிக்க கொறைஞ்சது மூணு நாளாகும். இப்பெல்லாம் பத்திரிகை மாதிரியை கொண்டாராய்ங்க! பேருகளைச்சொல்றாய்ங்க! கம்பியூட்டர்ல அடிச்சு ப்ரூப் பாக்குறாய்ங்க! ஓக்கேங்கிறாய்ங்க இருவது நிமிசத்துல ரெண்டு கலர் ஓட்டி ஐநூறு பத்திரிக்கையை வாங்கிட்டுப்போயிர்றாய்ங்க! ஒலகம் அவ்ளோ ஸ்பீடா போய்க்கிட்டிருக்கு.! நீ இதுக்கே இவ்ளோ நாளாக்கிட்ட! சரி ! பரவால்ல! மிசின்  மட்டும் போடணுமா? கம்ப்யூட்டருமா?

ரெண்டுந்தாண்ணே போடணும்.. நம்பக்கிட்டயே கம்பியூட்டர் இருந்தாத்தானே நல்லது.!

அதுவும் சரிதான்! எவ்ளோ பணம் வச்சிருக்க?

ஒரு லச்ச ரூவா கடன்!

சுத்தம்...அப்ப மினிமம் மூணு லெச்சம் வேணும்..!

ஏண்ணே!

பின்ன...ஆப்செட் மிஷின், கம்ப்யூட்டர், லேசர் ப்ரிண்டர்ன்னு ரெண்டு லெச்சம், முன்ன வாங்கின கடனை அடைக்க ஒரு லெச்சம்!

இப்ப என்னண்ணே பண்றது? ஒரு அம்பதாயிரத்துல முடிக்கிறமாதிரி ஏதாவது செய்யமுடியுமா? எங்க மாமனார்க்கிட்ட கேட்டுப்பாக்குறேன்....! பழைய சாமான்லாம் வித்தா பத்தாயிரமாவது தேறும். கடன்காரனுக்கு தேதி சொல்லிக்கலாம்.!

அதற்கு பதிலாகத்தான் முதல் வரியைச்சொன்னார் இளங்கோ அண்ணன்..!


           திரும்பத்திரும்ப யோசித்ததில், என்னுடன் பள்ளிக்கூடத்தில் படித்த சதாசிவம் வட்டிக்கடை வைத்திருப்பது ஞாபகம் வந்தது. ரொம்ப அடாவடி என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். இன்ன விதமாத்தான் வட்டி கேட்பான் என்றில்லாமல் அநியாயமாக வட்டி வாங்குவான் என்று பலர் திட்டியிருக்கிறார்கள். ஆனால் , அவன் முன்னால் யாராலும் சொல்லமுடியாது. ஏனெனில் கிட்டத்தட்ட எல்லோருமே அவனிடம் சிக்கியவர்கள்தான். எனக்கு ஒரு நப்பாசை ஏற்பட்டது. அவனிடம் கேட்டாலென்ன?

மீண்டும் இளங்கோ அண்ணன்.!

யேய்! ஒனக்கு என்ன கிறுக்குப் பிடிச்சுப்போச்சா? அவன்கிட்ட போய் கடன் வாங்குறேங்குற? அதுக்கு நீ வேற எங்கயாவது வேலைக்குப்போய் பொழச்சுக்கலாம்.! லேட்டானாலும் பரவால்ல! பேங்க்ல லோன் ட்ரை பண்ணு!

இல்லண்ணே! அவன் என் க்ளாஸ்மேட்!

அதெல்லாம் அவன் பாக்கமாட்டான்ப்பா!

இதை வந்து நான் வத்சலாவிடம் புலம்ப....அவள்

’உங்களுக்கு ஒலகமே தெரியலைங்க! இளங்கோ அண்ணனே தனக்கு உங்களை போட்டியா உருவாக வுடுவாரா? அதான் நீங்க உங்க க்ளாஸ்மேட்டுக்கிட்ட கடன் வாங்குறதை தடுக்கப்பாக்குறாரு! மேலும் பேங்க்குல எப்ப அப்ளை பண்றது? எப்ப அவுங்க லோன் குடுக்குறது? அதெல்லாம் ஆவாத வேலை!! மொதல்ல எத எடுத்தாலும் இளங்கோ அண்ணன்கிட்ட போறதை நிறுத்துங்க! உங்க நண்பர் சதாசிவத்துக்கிட்டயே கேட்டுப்பாருங்க! கண்டிப்பா குடுப்பாரு!.’

அவளது தலைகோதல் வேலை செய்தது.

          காலை 9 மணிக்கு சதாசிவம் வீட்டுத்திண்ணையில் சென்றமர்ந்தேன். எனக்கு முன்னால் இரண்டுபேர் காத்திருந்தார்கள். பளீரென்ற வெள்ளைச்சட்டையும், கருப்பு ஜீன்ஸும் அணிந்து கையில் இரண்டு செல்போன்களுடன், வாயில் எதையோ மென்றுகொண்டே சதாசிவம் வாசலுக்கு வந்தான். எங்களை மையமாகப் பார்த்தான். எதிர் திண்ணையில் இருந்த கண்ணாடி அறைக்குள் சென்றுவிட்டான். ஒரு மணிநேரம் கழித்து நான் அழைக்கப்பட்டேன்.

சதாசிவம்! நல்லாருக்கியா?

ம்..நீ முகுந்தந்தானே!

ஆமாம்ப்பா! எங்க மறந்திருப்பியோன்னு நினைச்சேன்..!

அதெல்லாமில்ல! சொல்லு!

என் பிரச்னையையும், அதற்கான தீர்வு அவனிடம் இருப்பதையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உருக்கமாகச்சொன்னேன். அவ்வப்போது எங்கள் பால்யத்தையும் ஊறுகாயாக்கினேன்.

நான் அவசரமா வெளியூர் போய்க்கிட்டிருக்கேன். நாளைக்கு வா!

        அன்று முழுவதும் சந்தோஷம் கரைபுரண்டது. கட்டுக்கட்டாக பணத்தை வாங்கி யார் யாரிடம் என்னன்ன ஆர்டர் கொடுக்கவேண்டும் என்று கனவெல்லாம் வந்தது. பில்கேட்ஸ் என் கடைக்கு கம்ப்யூட்டரை ஹீரோஹோண்டாவில் வந்து வைத்துவிட்டுப்போனார்.

அடுத்தநாள்.காலை 9 மணி..சதாசிவம் வீடு!

        நான் அன்று முழுவதும் அழைக்கப்படவே இல்லை. தொண்டரடிப்பொடிகளிடம் பல முறை என் அறிமுகம் சொல்லி, அவர்கள் அடிக்காமல் விட்டது அதிர்ஷ்டம்தான்!

       ‘பாவம்! அவருக்கு பலவேலை இருந்திருக்கும். அதான் மறந்திருப்பாரு! நாளைக்குபோங்களேன். கண்டிப்பா குடுப்பாரு!’ - வத்சலா சப்போர்ட்டினாள்.

         மீண்டும் அடுத்தநாள் 9 மணி! சதாசிவம் அன்று அதிகாலையே கிளம்பி வெளியில் சென்றுவிட்டு இரண்டுமணிக்குத்தான் வந்தான். நான் சரியாக வணக்கம் வைத்தேன். என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

          எனக்கு அழுகையே வந்தாலும், வத்சலா , அவளே சதாசிவமாக மாறி பல்வேறு சமாதானங்கள் சொன்னாள்!

          இப்படியே எந்த ஒரு கவனிப்பும் இன்றி 10 நாட்கள் கடந்தது. இவன் வீட்டிலேயே தவம் கிடப்பதால், வரும் ஒன்றிரண்டு ஆர்டரும் போச்சு.! மேலும் வரவேண்டிய சின்னச்சின்ன வசூலும் இல்லை! வத்சலாவிடம் சொல்லாமல், மீண்டும் இளங்கோ அண்ணனைப்பார்க்கப்போனேன். அரைகுறையாக நடப்பைச்சொன்னேன்.

’இவ்ளோ நாள் கண்டுக்கலைன்னா அவன் உனக்கு பணம் தர பிரியப்படலைன்னு உனக்குத்தெரியலையா? அது கூடப்புரியாம புருசனும் , பொண்டாட்டியும் நம்பி திரியிறீங்க! சரி! இப்ப அடுத்தது என்ன?

நானே கொஞ்சம் கொஞ்சமா நம்ப நண்பர்கள்கிட்ட கேட்டு வாங்கலாம்ணு இருக்கேண்ணே..!

’முதல்ல அதைச்செய்! நீ இப்பவரைக்கும் என்கிட்ட யோசனைதான் கேட்ட! காசு கேக்கலை! அதாண்டா எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சது! என் மொதலாளி மவன் நல்லா வந்தா எனக்குத்தாண்டா பெருமை.. ! என்னால பெரிசா உதவ முடியாது. என் கிட்ட ஒரு பழைய ரிப்பேரான கம்பியூட்டர் இருக்கு! அதை எடுத்திக்கிட்டு போய் சீர் பண்ணிக்க! இந்தா ஐயாயிரம்! எப்ப வேணும்னாலும் திருப்பிக்குடு...!’

         கண்ணீர்மல்க நன்றி சொல்லிவிட்டு, நண்பர்களைச்சந்தித்தேன். என் நிலை புரிந்து அனைவரும் உதவி செய்ய , ஒரே மாதத்தில் ஆப்செட் ப்ரஸ் ஆரம்பித்துவிட்டேன்.

          கடை ஆரம்பித்து பதினைந்து நாட்கள் ஆகியிருக்கும். அன்று மதியம் மூன்று மணி அளவில், சதாசிவம் வீட்டில் பார்த்த குறுந்தாடி வைத்த ஒருவனும், கொஞ்சம் குண்டான ஒருவனும் வாசலில் வந்து இறங்கினார்கள்.

முகுந்தன் யாருங்க?

நாந்தான்!

’ஒரு மாசத்துக்கு மேலாகிப்போச்சு! இன்னும் வட்டி தராம இருக்கீங்களாம். அண்ணன் பாத்துட்டு வரச்சொன்னாரு!’

’என்னது? வட்டியா? சதாசிவத்தோட கூடப் படிச்சவம்ப்பா நானு! நான் பணம் வாங்கலை! குடுத்ததா நினைச்சுக்கிட்டிருக்கப்போறாரு!’

’அதெல்லாம் தெரியாது. எதுவா இருந்தாலும் அண்ணனை வந்து பாத்து சொல்லிருங்க!’

         இது என்னடா சோதனை? என்று ஒருபக்கம் நினைத்தாலும், ஏதோ தவறு நடந்திருக்கிறது, இவர்கள் ஆள் தெரியாமல் வந்து கேட்டிருக்கவேண்டும். அல்லது நம் பெயரைச்சொல்லி வேறு யாரோ வாங்கியிருக்கவேண்டும். என்ன இருந்தாலும் சதாசிவம் என் க்ளாஸ்மேட்..சொன்னால் கேட்டுக்கொள்வான். என்ற எண்ணத்தில் உடனே கிளம்பினேன்.

காத்திருக்கவேண்டிய அவசியமே இல்லாமல், சதாசிவத்தின் அறைக்குள் அழைக்கப்பட்டேன். தூக்கக் கலக்கமா?, போதையா? என்று தெரியாத ஒரு மத்திம நிலையில் சதாசிவம் அமர்ந்திருந்தான்.

’என்ன சதாசிவம்? நம்ப பசங்க வெவரம் தெரியாம என்கிட்ட வந்து வட்டி கேக்குறாங்க?’ வலியச் சிரித்துக்கொண்டே சொன்னேன்.

’நீ என்கிட்ட வந்து பணம் கேட்டீல்ல?’

’ஆமா!’

’’நான் குடுக்கமாட்டேன்னு சொன்னேனா?’

’இல்லை!’

’இங்கபாரு!’ என்று சொல்லிவிட்டு சதாசிவம் மேசையின் இடப்பக்க ட்ராயரைத்திறந்தான்.

            இரண்டு ஆயிரம் ரூபாய்க்கட்டுகள்! அது ஒரு வெள்ளைக்காகிதத்தால் சுற்றப்பட்டிருந்தது. அந்த வெள்ளைக்காகிதத்தில் கொட்டை எழுத்தில் ' முகுந்தன் ' என்று எழுதப்பட்டு , தேதி போட்டிருந்தது.

’பாத்தியா? நீ வந்துட்டுப்போன பத்து நாள்லயே எடுத்துவச்சுட்டேன். அப்படியே இருக்கு! நீ வந்து வாங்கிக்கலைன்னா நான் பொறுப்பில்லை! அப்படி பணம் வேணாம்கிறவன். என்கிட்ட வந்து சொல்லிட்டுப்போயிருக்கணுமா இல்லையா?  உனக்கு பணம் எடுத்து வச்சிக்கிட்டு இருக்கிறதுக்கு நான் கிறுக்கனா.? நீ அன்னிக்கே வேணாம்னுருந்தீன்னா வேற யாருக்காவது குடுத்திருப்பேன்ல! நீ வேற ஏதோ வேலைல இருக்க, வந்து வாங்கிக்குவன்னு நானும் வெய்ட் பண்ணிக்கிட்டிருக்கேன். நீ என்னடான்னா வெவரமா வேற எடத்துல அரேஞ்ச் பண்ணி கடை நடத்துற! சரி..சரி.. எதுக்கு வீண் பேச்சு? முப்பத்தஞ்சு நாளாச்சு... அஞ்சு நாளை பழகினத்துக்கு கழிச்சுக்குறேன். ஒரு மாச வட்டியை கட்டிட்டு நடையைக்கட்டு! அசல் திரும்பிட்டதா நெனைச்சுக்குறேன்.

எனக்கு கிறுகிறுத்தது. சதாசிவம் என்னை கவனிக்காததுபோல், என் பெயர் போட்ட பொட்டலத்தை எடுத்துவைத்துவிட்டு இன்னொரு பொட்டலத்தை எடுத்து அடுத்த ஆட்டுக்கான அரிவாள்போல் , மேசைமேல் வைத்துக்கொண்டிருந்தான். பயத்தில் வயிறும், கண்களும் கலங்கியதில் அதிலிருந்த பெயர் சரியாகத்தெரியவில்லை. பாவம்! எவன் மாட்டினானோ?

தள்ளாடிக்கொண்டே வெளியில் வந்தேன். குண்டன் அருகில் வந்து சிரித்துக்கொண்டே சொன்னான். ' பொட்டண வட்டியை எப்பண்ணே வந்து வாங்கிக்கட்டும்? '




Thursday, January 19, 2012

சாதனை அரசிகள்






வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்!

அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள்.

மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது.

முதலில் ரம்யா தேவி! – இவரை நான் ஒருமுறை அப்துல்லா அண்ணனின் அலுவலகத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன். சில நிமிடங்கள் பேசினோம். ஆனால்..இவ்வளவு சிறந்த பெண்மணியை சந்தித்திருக்கிறோம் என்று இதைப்படித்தவுடன்தான் உணர்ந்தேன்.  13 வயதில் வாழ்வைப் புரட்டிப்போட்ட தீ விபத்திலிருந்து மீண்டு இன்று பலரது வாழ்வை நல்முறையில் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறார். இவர் புதுக்கோட்டையில் படித்திருக்கிறார் என்பது எனக்கு தனிப்பெருமை! ரம்யா தேவி அவர்களே! உங்களைப் பாராட்டுவது சிறியது! வணங்குவதே உரியது!

அடுத்து மோகனா சோமசுந்தரம் – ஆலோசனை சொல்லி வந்த ஆங்கிலக் கடிதத்தை , காதல் கடிதம் என்று எண்ணி அல்வாவில் விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்த குடும்பத்திலிருந்து வந்த சுயம்பு! கல்வியின் மேன்மையால் தன்னையும் சமூகத்தையும் உயர்த்திய உத்தமப் பெண்.! புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இரும்புப் பெண்மணி!

மணிமேகலை – புத்தக வெளியீட்டன்று இவரை நேரிலேயே சந்தித்தேன். நீண்ட நாள் பழகியவர் போல் அன்பாகப் பேசிக்கொண்டிருந்தார். உணவருந்த அமர்ந்த சிறுமி, பக்கத்து வீட்டில் தீ பற்றுகிறது என்று தெரிந்தவுடன், யாரும் சொல்லாமல், நீரை எடுத்துச்சென்று ஊற்றி அணைத்திருக்கிறார். இது போதும்! அவரது உதவும் குணம் சொல்ல! அப்படிப்பட்டவர் இன்று ஒரு பெரிய அரசு அதிகாரி..! தலித் பெண்களின் துயர்துடைக்கும் சாதனையாளர்.!

சாருமதி,தமிழரசி, வெங்கடேசன் – சமூக அக்கறையுடன், வெறுப்பின்றிச் செயல்படும் கூட்டுச் சாதனையாளர்கள்.

மாங்குரோவ் காடுகளைப்பற்றி ஆய்ந்து முனைவர் பட்டம் பெற்ற, சூழல் அக்கறை உள்ள ஆஸ்வின் ஸ்டான்லி..

 உடலில் நோய்கள் முற்றுகை இட்டாலும், உள்ளத்தில் உறுதியை முற்றுகையிடவைத்து அரசுப்பள்ளியில் அற்புதங்கள் நிகழ்த்தும் ஆசிரியை லூர்துராணி.!

இருளர் இனத்துப் பெண்களின் இருள் நீக்குவதே குறிக்கொளாகக் கொண்ட வசந்தி!

அன்னையின் மரணச் சோகம் கூட ஆட்டத்தை பாதிக்காத வகையில் வெறியுடன் வெற்றிகண்ட கிரிக்கெட் வீராங்கனை திருஷ்காமினி

இதயநோயுடன் போராடினாலும்,  இன்முகத்துடன் செவிலியராய் வலம் வரும் உமா ஹெப்சிபா!

குழந்தை நட்சத்திரமாய் மிளிர்ந்து, நடனப்பள்ளியை நடத்திவரும் லெஷ்மி என்.ராவ்!

உயிர்போக்க வந்த தன் நோய் தீராமல், உறுப்பு தானம் செய்து பிறர் துயர் தீர்த்த அனுராதா!

அ வில் ஆரம்பித்த வாழ்வை ஆட்டோவால் நிமிர்த்தி, சி ஐ டி யு வின் மாநிலக்குழு உறுப்பினராக உயர்ந்திருக்கும் சாந்தி!

ஐந்து வயதில் தாயை இழந்து, நம்பிக்கையை உரமாக்கிக்கொண்டு, பிறர் வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் ஸ்ரீலேகா!

ஒரு கட்டுப்பெட்டிக் குடும்பத்திலிருந்து ,கனவுகளை மட்டுமே கருவாகக் கொண்டு திரைப்பட இயக்குநராக  திரு திரு துறு துறுவென வெற்றிப் படியேறும் நந்தினி ஜே எஸ்! ( புத்தக வெளியீடு அன்று குட்டிப்பாப்பாவுடன் வந்திருந்தார். மிகவும் எளிமையாகப் பழகும் அன்புக்குரியவர்)

படித்தது கணிப்பொறியாக இருந்தாலும், கவிதைப்பொறியால் கலக்கி, திரைப்படப் பாடலாசிரியராக, கட்டுரையாளராக, தமிழ்ப்பேச்சாளராக வலம்வரும் 25 வயது தோழி பத்மாவதி!

சோதனைகளைக் கடந்து ஆயத்த சீருடை அதிபராய் வளர்ந்து நிற்கும் மகேஸ்வரி!

வாலிபத்திலேயே வால் ஸ்ட்ரீட்டை புரிந்துகொள்ளாதவர்கள் மத்தியில் , வயோதிகத்தில் பங்கு வர்த்தகம் செய்யும் உதாராண ஆச்சி முத்து சபா ரத்தினம்   என சாதனையாளர்களின் சரித்திரங்களால் நிரம்பிக்கிடக்கிறது 80 பக்கங்கள்!

மனம் சோர்வாய் இருக்கும்போது , இதில் ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தால், ஒரு சாதனையாளரின் வாழ்க்கை விரியும். அவர் சந்தித்த துன்பங்களும் அதன் மீட்சியும், எழுச்சியும் நம்மைத் தட்டியெழுப்பி, ‘நமக்கு வந்திருப்பதெல்லாம்  ஒரு கஷ்டமா? என்று தெளிவடைய வைத்து அடுத்த செயலை நோக்கிச் செல்ல வைப்பதுதான் இந்தப்புத்தகத்தின் ஒரே சிறப்பு, !

என் தோழி ஒருவருக்கு வாழ்வில் மிகப்பெரிய பிரச்னை ! என்னிடம் சொல்லி அழுதார்! எதேச்சையாக ஊருக்குக் கொண்டு சென்றிருந்த இந்தப் புத்தகத்தை அவரிடம் கொடுத்து படிக்கச்சொன்னேன்.. முடித்துவிட்டு அவர் சொன்னது இதுதான்..! எனக்கு வந்திருக்கிறதெல்லாம் ஒரு பிரச்னையா? பி.எச்.டி வேலை அப்படியே கெடக்கு அதைப் பாக்குறேன்..! என்று தெளிவாகிவிட்டார்.

இதுதான்..இந்த நூலின் வெற்றி!

உண்மையிலேயே செய்வதைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென்ற முனைப்புடன் தன் எழுத்துலகப் பணியில் வெற்றி நடை போட்டுவரும் -இந்த நூலில் சொல்லப்படாத,- சாதனை அரசியான தேனம்மை லட்சுமணன் அவர்களே! சாதனைப் பெண்களை எங்களுக்கு வெளிக்காட்டியதற்கு நன்றி!

சாதனை அரசிகள் – தேனம்மை லட்சுமணன் – முத்துசபா பதிப்பகம் – ரூ.50.00

கிடைக்குமிடம்:  : நம்ம டிஸ்கவரிதான்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...