சித்தப்பா
சிறுவயதில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு உறவு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அவர்கள் நடை,உடை, பாவனைகள் எல்லாவற்றையும் கவனித்து அதைப்போல நடக்க நினைப்போம் அல்லது அதைப்பற்றி சிந்திக்கவாவது செய்வோம்.அப்படி ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த மாமா , மூத்த அண்ணன் , சித்தப்பா போன்ற உறவுகள் அமைந்திருக்கும். அப்படி எனக்கு அமைந்த உறவுதான் அவர்! என் அப்பாவின் கடைசித்தம்பி! என் அப்பாவுக்கு அடுத்து அவர்தான் பையன் என்பதால், என் பெரியப்பா மகன்களுக்கு இரண்டு, மூன்று சித்தப்பாக்கள் இருந்தபோதும், எனக்கு மட்டும் ஒரே ஒரு சித்தப்பாதான்! ஆக, மற்றவர்கள் அவரை ’சின்ன சித்தப்பா’ என்று அழைக்கும்போது, நான் மட்டும் சித்தப்பா என்றே அழைப்பேன். எனக்கு விபரம் தெரிந்து அவரை நான் பார்த்தது நாங்கள் இருந்த கலியாப்பட்டி என்ற ஊருக்கு அவர் வந்துசென்றபோதுதான்! ஆனால் அப்போது நான் மிகவும் சிறுவன்! முகத்தையோ நடவடிக்கைகளையோ அவ்வளவாக கவனிக்கவில்லை. பின்னர் நான் மூன்றாவது படிக்கும்போது , அவருக்குத் திருமணம் என்ற பேச்சுக்கள் வந்தபோதுதான் அவரை நான் கவனிக்க ஆரம்பித்தேன். சொந்த ஊரான கறம்பக்குடிக்கு செல...