தங்கம் வாங்குவதை நிறுத்துங்க!
மக்கள் எல்லோரும், குறிப்பாக இந்தியர்கள்… அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு
தன்னிடம் அதிகமாகச் சேரும் தொகையை இரண்டு இடங்களில் முதலீடு செய்ய ஆசையாய் இருக்கும்.
ஒன்று தங்கம். இரண்டாவது வீட்டு மனை..!
அந்த முதல் பொருள்தான் நம்மிடையே மிகவும் அதிகமாகப்
புழங்கி, இந்தியப் பொருளாதாரத்தையே ஆட்டுவிக்கிறது என்றால் நம்பத்தான் வேண்டும்.
இந்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை
அதிகப்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி எல்லோரும் மிகவும் அதிர்ச்சியடைந்து பேசுகிறார்கள்.
குறிப்பாக நகைக்கடை முதலாளிகள், ‘அய்யோ! இது மக்களைத் தங்கம் வாங்க விடாமல் செய்யும்
முயற்சி! நடுத்தர ஏழை மக்கள் தங்கமில்லாமல் தத்தளிப்பார்கள் என்று குலவையிடுகிறார்கள்.
ஏன், இறக்குமதி அதிகமாவதற்கு முன் அவர்கள் வாங்கிய நகையை பழைய விலைக்கு நமக்காகக் கொடுப்பார்களா
என்று கேட்டுப்பாருங்களேன். அதேபோல், சேதாரத்தின் ஆதாரங்களை அலசினால் இன்னும் கொடுமையாகை
இருக்கும்.
ஆனால், அரசோ, நாம் தங்கம் வாங்காமல் இருக்க
வேண்டும் என்றுதான் இவ்வளவு வரி போடுகிறது. ஏனெனில் நாம் தங்கம் வாங்கிக்குவிக்கக்
குவிக்க, நம் பணத்தின் மதிப்பு அதல பாதாளத்துக்குச் செல்லத் தொடங்கும். ஆனால், அதையும்
மீறி, இன்னும் விலை அதிகமாகும். ஆகவே இப்போதே வாங்கி வைத்துக்கொண்டால் நல்லது என்று
எல்லா முதலீட்டு ஆசைகாட்டிகளும் சொல்வதை நம்பினால் அரோகரா நிச்சயம்! நம் பணத்தின் மதிப்பு
அதல பாதாளத்துக்குச் செல்லாமல் இருப்பதற்காக நமது அரசு போடும் கடிவாளம்தான் இந்த இறக்குமதி
வரி.! அப்படியாவது வாங்குறதைக் குறைச்சுக்கங்களேண்டா.. என்பதுதான் அது!
ஆனால் நாம் மாட்டிக்கொண்டிருப்பது, ‘அட்சய
திருதியை’ என்ற நாளை தன் வியாபாரத்துக்காகப் பயன்படுத்தும் நகை வியாபாரிகள் கையில்தான்.!
தங்கம் என்ற வஸ்து, நம் வீட்டு வாஸ்துவை விட சிறப்பானது என்ற நம்பிக்கையில்தான் நாம்
ஓட்டிக்கொண்டிருக்கிறோம். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு , அவ்வப்போது வைத்து
எடுத்துக்கொள்ள தங்கம் ஒரு சுழல் நிதி வழங்கி ! ஆனால், நடுத்தர, மேல்தட்டு மக்களுக்கு
அது ஒரு நாளும் பணமாகிவிடக்கூடாது என்று நம்பித்தான் வாங்குகிறோம். ஆனால் அதையும் நம்
சொத்துக்கணக்கில் சேர்க்கிறோம். ஆக, தங்கம் நம்மிடம் முடங்குவதற்காகவே இந்தியா தேவையில்லாமல்
இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.
கொஞ்சம் எளிமையாகச் சொன்னால், தங்கம் ஒரு தேசத்தின்
கையிருப்பில் இருந்தால், அந்த தேசத்துக்கே மதிப்பு அதிகம். அதே தங்கம் தேச மக்களிடம்
அதிகமாக இருந்தால் அதன் மதிப்பு மிகவும் ஆபத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில்
, உலகிலேயே ஒரு பொருளை உற்பத்தியே செய்யாமல், அதே பொருளை உலகிலேயே அதிகமாகப் பயன்படுத்தும்
நாடு இந்தியாதான்.
அதாவது ஒரு கிராம் தங்கம்கூட உற்பத்தி செய்யாமல்,
ஏற்றுமதியும் செய்யாமல், அதே தங்கத்தை அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்வதால், நாம்
செலுத்தவேண்டிய அந்நியச் செலாவணி அதிகமாகிறது. அதாவது, மென்பொருள் ஏற்றுமதி செய்து
சம்பாதித்த காசை தங்கமாக இறக்குமதி செய்து வீணடிக்கிறோம். ஏற்றுமதியை விட இறக்குமதி
அதிகமாகும்போது அந்த நாடு ஏழை நாடுகளின் பட்டியலுக்கு விரைந்துகொண்டிருக்கிறது என்று
அர்த்தம்.
உலகநாடுகள் அனைத்தும் இந்தியாவின்….அல்ல..இந்தியர்களின்
தங்க வேட்டையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன. 17000 டன் தங்கம் இந்தியர்கள் கையில்
இருக்கிறது என்கிறார்கள். ஆண்டுக்கு 400 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.
அதே சமயம், சீனா தனக்கான தங்க ஏற்றுமதியை அதிகப்படுத்திக்கொண்டே வருகிறது. இந்தியாவுக்கு
தங்கத்தை ஏற்றுமதி செய்துவிட்டு அதன் வீழ்ச்சிக்காக சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கிறது.
இப்படியே போனால், இந்திய அரசின் தங்கக் கையிருப்பு டுஸ்ஸ்ஸாகினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
நாம் தங்கத்துக்கு செலுத்தும் மதிப்பு அதன்
உண்மையான மதிப்பு இல்லை. உண்மையில், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் வேலையாள் செலவுகள்
மற்றும் லாபம் சேர்த்து, ஒரு கிராம் தங்கம் இன்றைய தேதிக்கு 589 ரூபாய் வரை விற்கமுடியும்
என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது அதன் பயன்பாட்டு மதிப்பு அவ்வளவுதான்.
அப்படியானால், நாம் கொடுக்கும் 2500 சொச்சம்...? அதற்கான பண்ட மாற்று மதிப்பு! அது
என்று வேண்டுமானாலும் தொபுக்கட்டீர் என்று பள்ளத்தில் விழுந்து மொக்கையாகி கிராம்
1000 ரூபாய்க்கு வர வாய்ப்பிருக்கிறது. கேட்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாகத் தெரியும்.
இதைப் புரிந்துகொள்ள சில அடிப்படை விபரங்கள் தெரிந்தால் போதும்.
உப்பு ஒரு காலத்தில் நாடுகளிடையே பண்ட மாற்றுப்
பொருள். சம்பளமாக உப்பைத்தான் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். சாலரி என்ற ஆங்கில வார்த்தைகூட
உப்பு என்ற பொருள்படும் லத்தீன் வார்த்தைதான். ஆனால், மிகவும் மதிப்பு வாய்ந்த பொருளாக
இருந்த உப்புதான் இன்று உள்ளதிலேயே விலை குறைவான உணவுப்பொருளாக இருக்கிறது.’உப்பிட்டவரை
உள்ளளவும் நினை’ என்ற தமிழ்ப் பழமொழியே, உப்பு என்பதை சம்பளம் என்று உணர்த்தியிருக்கிறது
அதேபோல்தான்
சில நூற்றாண்டுகளுக்கு முன், கருக்காத, பளபளப்பான, ஆபரணமாக்கி அழகு பார்க்கக்கூடிய
ஒரு பொருள் வெறும் ஆபரணம் என்ற தகுதியை மீறி, ஒரு பண்டமாற்றுப் பொருளாக மாறத் தொடங்கியதில்
இருந்துதான் சிக்கல்.! அதுவும் தன்னிடம் அதிகத் தங்கத்தை கையிருப்பாகக் கொண்ட நாடுகள்தான்
இன்று வல்லரசாக மதிக்கப்படுகின்றன. அன்று உப்பு
பெற்ற இடத்தைத் தங்கம் பிடித்திருக்கிறது. திடீரென்று வெள்ளியை பண்டமாற்றாக அறிவித்தாலோ,
அல்லது பண்ட மாற்றே வேண்டாம். எல்லாமே கரன்ஸியை வைத்து விளையாடிக்கொள்வோம் என்றோ உலகநாடுகள்
முடிவெடுத்துவிட்டால், தங்கமும், உப்பும் ஒரே நிலைக்குத்தான் தள்ளப்படும்.
கேட்பரீஸ் ஜெம்ஸின் ஒரு விளம்பரம் உண்டு.
டாக்டர் பாண்டா பொம்மை ஒரு பெரியவருக்குத் தேவைப்படுகிறது. ஆனால் அவரிடம் மற்ற பாண்டா
பொம்மைகள் இருக்கிறது. அவரது தேவை தெரிந்த அவரது நண்பப் பெரியவர், 5 பாண்டாவுக்கு ஒரு
டாக்டர் பாண்டா என்று பேரம் பேசுவார். இவரும் அநியாயம் என்று சொல்லி வாங்கிச் செல்வார்.
இந்த நிலைதான் இன்று இந்தியாவுக்கு உலகத்தில் தங்க உற்பத்தி செய்யும் நாடுகளிடையே ஏற்பட்டிருக்கிறது.
நம்மிடம் டாக்டர் பாண்டா இல்லை.. அவர்கள் கேட்பதைக் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம்.
என்னமோ தன்னிடம் அதிகத் தங்கம் இருந்தால், எப்பொழுது
பொருளாதாரச் சிக்கல் வந்தாலும் நகைக்கடைக்காரர்கள் உடனே வீடு தேடி வந்து வாங்கிக் கொண்டு
அன்றைய விலையில் பணம் கொடுத்துவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றுவரை
ஒரு நகைக்கடையிலாவது அவர்களிடமே வாங்கிய நகையாய் இருந்தால் கூட, அதைக் கொடுத்துவிட்டு
பணத்தைக் கொடுக்கிறார்களா பாருங்கள்!. அதற்குப் பதிலாக மீண்டும் நகை வாங்கச் சொல்லித்தான்
சொல்லுவார்கள்.
நாம் நகையை விற்றே ஆகவேண்டுமென்றால், அதற்கென்றே
இருக்கும் சேட்டுகள் அன்றைய விலையில் 10% கழித்துவிட்டு, ‘இது 22 கேரட் நஹி ஹை ஸாப்!” என்று எடையிலும் கை
வைத்து… கொடுக்கும் பணம்.. நாம் வாங்கிய விலையை விடக் குறைவாக இருக்கும். இதுதான் இந்த
முதலீட்டின் பின்னால் உள்ள தந்திரம். பாவம் கடைக்கோடி இந்தியன் இது புரியாமல் ‘சமயத்துக்கு
உதவும்’ என்று வாங்கிக் கொண்டே செல்கிறான்.
அடகு இன்னும் அநியாயம்.! ஒரு குறிப்பிட்ட
விலைக்கு அடகு வைத்துவிட்டீர்கள். தங்கத்தின் விலை இறங்கும்போது, உடனடியாக உங்கள் தங்கம்
முழுகிவிடும். இவ்வளவு தொகையை உடனே கட்டுங்கள் என்று நோட்டீஸ் விடுகின்றன முத்தூட்
மற்றும் மணப்புரங்கள்… அதே நேரத்தில் தங்கம் விலை ஏறும்போது உங்களை அழைத்து..இந்தாங்க
விலை ஏறியிருக்கு இந்தக்காசையும் கடனா வச்சுக்குங்க என்று கொடுக்கவா செய்கின்றன? ஆகவே..
கையில இருக்கே தங்கம் கவலைப்படுடா சிங்கம் என்று கொஞ்ச நாளில் ஆகிவிடும்..!
உண்மையிலேயே
தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தால், தங்கப் பத்திரங்கள் வாங்கலாம். அது உலகளாவிய
தங்கத்தின் மதிப்பை வைத்து நிர்ணயிக்கப்படுவதாலும், அது ஒரு மறைநிலைப் பொருளாகவும்
பார்க்கப்படுவதால், ஓரளவு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதையும் இப்போது செய்தால்
பிரச்னை வர வாய்ப்புள்ளது. ஏனெனில் எப்போது இந்தியாவில் தங்க இறக்குமதி மிகக்குறைந்து
ஆண்டுக்கு 5 முதல் 15 டன்னுக்கு வருகிறதோ, அன்றுதான் தங்கத்தின் உண்மையான விலையும்
வெளியில் வரும். அதனால்தான் இப்போது வங்கிகளில் தங்கம் விற்பதையும் அரசு தடை செய்கிறது.
மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கத்தை தங்கள் ஊழியர்களுக்கு பரிசாகக் கொடுப்பதன்
பின்னணியிலும் சில வரி ஏய்ப்புகள் உள்ளன. அது வேறு கதை..!
அரசு நம்மிடம் உள்ள தங்கத்தை வங்கிகளில்
செலுத்தச் சொல்லி, அதற்கு மாற்றாக ஒரு குறிப்பிட்ட வட்டி வீதத்துடன் கடன் பத்திரங்களாக
மாற்றிக்கொள்ளச் சொன்னால், யோசிக்காமல் செய்யுங்கள். வளமான தேசத்தில் வாழ நாம் செய்யப்போகும்
நல்ல முடிவாக இருக்கும். அமெரிக்கா இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இப்படித்தான் செய்தது.
மேலும் தங்க நகைகளை வைக்க லாக்கருக்கு நாம் பணம் கட்டவேண்டியதில்லை. அரசே காசும் கொடுத்து,
நகையையும் பத்திரமாக வைத்துக்கொள்ளும். திருட்டு பயம் இருக்காது. அது தவிர, நம் விழாக்களுக்கு எப்படியாவது கடன் வாங்கி, நகை
போடுவதை நம் கலாச்சாரத்திலிருந்து மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இன்றைய தேதியில், இந்தியப் பொருளாதாரத்தின்
மிகப்பெரிய அச்சுறுத்தல் நமது தங்க இறக்குமதி. இந்தியர்களிடம் அதிகத் தங்கம் இருக்கிறது என்பது பெருமைக்குரிய செய்தி இல்லை.அதனை சீர் செய்ய வேண்டும் என்று உண்மையிலேயே
நினைத்தாலோ, கையிலிருக்கும் காசு , காசாகவே நிலைக்கவேண்டும் என்று நினைத்தாலோ, தயவு
செய்து தங்கம் வாங்காதீர்கள். நகையைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும் பெண்களும் கொஞ்சம் அமைதி காத்தல் அவசியம்.! நம் ஆசையே நமக்கு உலை வைத்துவிடும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு
இந்தியர்கள் தங்க நகைகள் வாங்குவதை நிறுத்தினால், உண்மையான தங்கத்தின் மதிப்பு வெளியில்
வரும் பாருங்கள்!
அப்போது கொண்டாடுங்கள் தீபாவளியை..!!
இவ்வளவு பொறுமையாக மிக உபயோகமான பதிவை வெளியிட்டதற்கு முதலில் பாராட்டுக்கள்.. ஆனால் இதை படித்து பாராட்டிவிட்டு நம் மக்கள் நகைகடையை தேடி ஒடிக் கொண்டே இருப்பார்கள். அவர்களை மாற்றுவது என்பது எளிதல்ல
ReplyDeleteநன்றிங்க!
Deleteபடிக்கிறதுக்கு கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு... ஆனா நம்ம மக்கள் தங்கம் வாங்கிறதை நிறுத்த மாட்டாங்க. நீங்க சொல்ற அந்த பேங்க் லாக்கரையும் மக்கள் பயன்படுத்த மாட்டாங்க. தொடர்ந்து திருட்டு நடந்து கொண்டே இருந்தால் ஒருவேளை அவர்கள் பயன்படுத்த வாய்ப்பு இருக்கலாம்...!
ReplyDeleteபார்ப்போம்.. என்ன நடக்கிறது என்று..!!
Deleteடீட்டெயிலான காட்டுரை. கடைசி பேரா கடைசி வைரி செம பஞ்ச்!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஉபயோகமான (தங்கமான) யோசனைகளுக்கு நன்றி...
ReplyDeleteஆனால் எதுவும் "நம் கையில் இல்லை...!!!"
ம்.. அதுவும் சரிதான்!
Deleteஅன்பின் சுரேகா
ReplyDeleteஅழகாக வடிவமைக்கப் பட்ட தவறான கட்டுரை...
நாட்டு நலன் கருதி தங்கம் வாங்குவதை நிறுத்துங்கள் - என் அறிவுக்கு எட்ட்டிய வரையில் இந்த ஒரு வாக்கியத்தைத் தவிர கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அனைத்துமே தவறானவை.
மதிப்பு மிக்க அன்னியச் செலாவணியை பெட்டியில் தூங்கப் போகும் தங்கத்துக்காக வீணடித்துக் கொண்டிருக்கிறோம். இதைக் கட்டுப் படுத்த தங்கத்தின் விலையை செயற்கையாக ஏற்ற மத்திய அரசு முயல்கிறது. Checks and Balances தத்துவப் படி அரசு எடுக்கும் ஒரு நடவடிக்கை - இதை ஒத்துக்கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடிகிறது.
இப்ப மத்த பாயிண்டுகளைப் பாப்போம்
1. Historically தங்கம் ஒரு நல்ல முதலீடு. 1953 - ஒரு அவுன்ஸ் தங்கம் 295$ 1988 - 870$ 2013 - 1700$ வரை போய் இப்போ 1400$ இல் இருக்கு. இடையிடையே வீழ்ச்சியடைந்தாலும் மீண்டு எழும் போது முந்தைய விலையை விட மேலதான் போயிருக்கு
தங்கத்தின் விலை. இதுதான் வரலாறு.
2. //இந்தியாவுக்கு தங்கத்தை ஏற்றுமதி செய்துவிட்டு அதன் வீழ்ச்சிக்காக சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கிறது. இப்படியே போனால், இந்திய அரசின் தங்கக் கையிருப்பு டுஸ்ஸ்ஸாகினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.//
இந்தியர்கள் வாங்குவதால் தங்கத்தின் விலை எப்படி குறையும் என்று விளக்க முடியுமா? மேலும் இப்படியோ போவதற்கும் இந்திய அரசின் தங்க கையிருப்புக்கும் என்ன சம்பந்தம் என்றும் விளக்கி விடுங்க..
இதை எழுதும் முன் நீங்க கொஞ்சம் ஹோம் வொர்க் செய்திருக்கலாம் - சைனா இந்தியாவை முந்திக் கொண்டிருக்கிறது எதில் தெரியுமா? தங்க இறக்குமதியில்? என்ன அங்கு வங்கிகள் இறக்குமதி செய்கின்றன, இங்கே மக்கள் இதுக்கும் இவற்றை படித்துவிடுங்க
http://blogs.barrons.com/focusonfunds/2013/02/06/china-soon-to-be-worlds-biggest-gold-importer-if-it-isnt-already/
http://sgmmetals.com/KnowledgeCenter/LatestNews/tabid/75/entryid/30/China-On-Track-to-Become-World-s-Top-Gold-Importer.aspx
இந்தியர்களின் டிமாண்ட் தங்க விலைக்கு ஒரு காரணியே தவிர, முடிவு செய்யும் இடத்தில் நாமில்லை. தங்க விலை சர்வதேச சந்தையில் முடிவு செய்யப் படுகிறதேயன்றி மும்பையில் அல்ல. தங்கத்தின் சப்ளையும் டிமாண்டும்தான் விலையை நிர்ணயிக்கின்றன.
பிற முதலீடுகள் லாபம் கொழிக்கையில் சந்தை தங்கத்தில் பெருமளவு முதலீடு செய்வதில்லை - விலை இறங்கும். டாலரும் யூரோவும் நொண்டியடிக்கையில் எல்லார் கவனமும் தங்கத்தின் பக்கம் - விலை ஏறும்
இப்ப இறக்கத்தின் காரணம் - ஐரோப்பாவின் தேக்கம். நாடுகள் கைவசமிருக்கும் தங்கத்தை விற்கப் போகின்றன என்ற செய்தி வந்ததுமே இறங்கத் தொடங்கிய விலை இன்னும் sluggish ஆகவே இருக்கிறது. இன்னும் ஓரிரு ஆண்டுகள் இப்படியே இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
But I am very positive that you should buy now if you can hold on to the gold for next 20 - 25 years.
3. //அப்படியானால், நாம் கொடுக்கும் 2500 சொச்சம்...? அதற்கான பண்ட மாற்று மதிப்பு! அது என்று வேண்டுமானாலும் தொபுக்கட்டீர் என்று பள்ளத்தில் விழுந்து மொக்கையாகி கிராம் 1000 ரூபாய்க்கு வர வாய்ப்பிருக்கிறது.//
சுரேகா, நீங்க சொல்வது உண்மையாக இருக்குமானால் தங்கம் கிடைக்கும் சைனாவில் விலை குறைவாகவும், மிகப் பெரிய கஸ்டமரான இந்தியாவில் கொஞ்சம் அதிகமாகவும், சின்ன கஸ்டமரான அமெரிக்கவில் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் அல்லவா?
இன்று ஒரு அவுன்ஸ் தஙகத்தின் விலை சைனாவில் 8457 yuan, அமெரிக்காவில் 1384$ இந்தியாவில் 81500. அனைத்து இடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே விலை. இருக்கும் சிறு வித்தியாசம் கூட வரிகளால்தான். எப்போது வேணாலும் தொபுக்கட்டீர் என்று விழ
அது ஒன்றும் இந்திய அரசியல் கட்சிகளின் கூட்டணி அல்ல.
நன்றி ஸ்ரீராம் அண்ணே!
Deleteநான் படித்து, புரிந்துகொண்டது மற்றும் இந்தியாவில் தங்க வியாபாரத்தின் பெயரால் நடக்கும் பிரச்னைகளை வைத்துத்தான் எழுதினேன். தவறுகள் இருந்ந்தால் சரி செய்துகொள்கிறேன்.
மேலும், அமெரிக்காவின் நிலை, டாலரைத் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் செய்யும் தகிடுதித்தங்கள், மற்ற ஐரோப்பிய நாடுகள் டாலருக்கு மாற்றுத் தேடும் விவகாரம், சீனாவின் அதிகரித்துக்கொண்டே செல்லும் தங்க உற்பத்தி, ஆப்பிரிக்க நாடுகளில் தங்கத்தின் விளையாட்டு, உற்பத்தி மற்றும் வர்த்தக விலை வித்தியாசங்கள், பண அச்சடித்தலை தங்கத்தை வைத்து நிர்ணயிக்கும் சர்வதேச நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அதே சமயம் அவ்வளவையும் எழுத முடியாமல் ஒரு சிறு விழிப்புணர்வு கொடுக்க முடியுமா என்று எண்ணினேன். அதேபோல் நீங்கள் சொன்ன முதல் வரி விளக்கம்தான் அடிப்படைக் காரணம்.
தங்கள் விளக்கத்துக்கு நன்றி அண்ணே!
4. தங்கமும் உப்பும் தவறான உதாரணங்கள். Availability of Salt is Infinite while the availability of Gold is Finite. உலகிலுள்ள தீரக்கூடிய பொருட்களின் (பெட்ரோல், தங்கம், சென்னையில் உள்ள நிலம் இன்ன பிற)விலை அடியோடு குறைய வாய்ப்பில்லை.
ReplyDelete// மிகவும் மதிப்பு வாய்ந்த பொருளாக இருந்த உப்புதான்// //அன்று உப்பு பெற்ற இடத்தைத் தங்கம் பிடித்திருக்கிறது. திடீரென்று வெள்ளியை பண்டமாற்றாக அறிவித்தாலோ, அல்லது பண்ட மாற்றே வேண்டாம். எல்லாமே கரன்ஸியை வைத்து விளையாடிக்கொள்வோம்
என்றோ உலகநாடுகள் முடிவெடுத்துவிட்டால், தங்கமும், உப்பும் ஒரே நிலைக்குத்தான் தள்ளப்படும்//
உப்பு அன்றும் இன்றும் என்றும் மக்கள் அனைவரும் பயன் படுத்தும் பொருள். கரன்சி கண்டுபிடிக்கப்படும் வரை அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு பண்ட மாற்றுப் பொருளாக உப்பு இருந்தது. கரன்சி கண்டுபிடிக்கப் பட்டதும் உப்பு
ஐபிஎல் விளையாடும் நாப்பது வயசு சச்சின் மாதிரி ஆகிடுச்சு.
இப்ப எந்த ஏற்றுமதியும் தங்கத்தில் நடப்பதில்லை. கரன்சிகளில்தான் நடக்கிறது. டாலரையும் ஆயிலையும் பிரிக்க சதாம், சாவேஸ் போன்றோர் போராட, அதைத் தக்க வைக்க அமெரிக்க எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறது.
5. // அவர்கள் கேட்பதைக் கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம்.// இல்லவேயில்லை. அனைத்து நாடுகளும் வாங்கும் அதே சர்வதேச விலையில்தான் நாமும் வாங்கிக் கொண்டிருக்கிறோம்.
சுரேகா, இது போன்ற கட்டுரைகள் எழுதும் முன் கொஞ்சம் “சரி பார்த்தல்” நலம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
பண்டமாற்று என்று நான் சொல்ல வந்தது.. ஒரு பொருளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதாரம் நிர்ணயிக்கப்படுவது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.
Deleteசர்வதேச விலையில்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம். சரிதான். ஆனால், அதன் இந்திய ரூபாய் அளவு டாலரை வைத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வது ஆபத்துதானே?
பொதுவாக நான் சொல்ல வந்தது.. .இப்போதைக்கு தங்கம் வாங்காமல் இருப்பது நல்லது என்றுதான்..
அது சரிதானே அண்ணே? :)
அன்புக்கு நன்றி!
// இப்ப எந்த ஏற்றுமதியும் தங்கத்தில் நடப்பதில்லை. கரன்சிகளில்தான் நடக்கிறது.//
ReplyDeleteஒரு தேசத்தில் பணம் அச்சடிப்பது தங்கத்தின் கையிருப்பை வைத்தே (புல்லியன் ஸ்டான்டர்ட் மெத்தட்) முடிவு செய்யப்படுகிறது.அந்த அடிப்படையில் பார்த்தால் இன்றைக்கும் வர்த்தகத்தின் பண்டமாற்றுப் பிண்ணனி தங்கம்தான். சுரேகா அதைத்தான் சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன். பொதுவாக பொருளாதார ரீதியில் அமையும் கட்டுரைகளில் அதன் அடி ஆழம் வரை ஆராயாமல் அதன் உள் அர்த்தம் விளங்கினால் போதுமானது என்று நினைக்கிறேன். காரணம் பொருளியல் கோட்பாடுகள் அதை விரும்பிப் படித்த என் போன்ற பொருளாதார மாணவர்களுக்கே பல நேரங்களில் போர் அடிக்கும் விசயம் :)
வாங்க அப்து அண்ணே!
Deleteமிகவும் நன்றி! நான் சொல்ல வந்ததை மிக அருமையாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். போரடிக்காமல் சொல்ல முயற்சித்தேன்.
சரியான நேரத்தில் விளக்கமளித்ததற்கு மீண்டும் அன்பு அண்ணே!
ஸ்ரீராம் அண்ணனும், கட்டுரை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறையில்தான் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
Deleteசுரேகாஜி,
Deleteநேரத்திற்கு ஏற்ற நல்லப்பதிவு,ஆனால் ரொம்ப "light"ஆ எழுதி இருக்கீங்க, நல்ல வேளை நான் பிழைத்துக்கொண்டேன்,தங்கம் பற்றி நானும் ஒரு பதிவு எழுதிட்டு இருக்கேன்ல :-))
//உண்மையிலேயே தங்கத்தில் முதலீடு செய்ய நினைத்தால், தங்கப் பத்திரங்கள் வாங்கலாம். அது உலகளாவிய தங்கத்தின் மதிப்பை வைத்து நிர்ணயிக்கப்படுவதாலும், அது ஒரு மறைநிலைப் பொருளாகவும் பார்க்கப்படுவதால், ஓரளவு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.//
சரியான ஆலோசனை அல்ல,இப்பனு இல்லை பங்கு வணிகத்தில் தங்க முதலீடும் ரிஸ்கானதே, இப்போதைய தங்க விலை வீழ்ச்சிக்கு ஒரு பெரிய காரணம், "கம்மோடிட்டி மார்க்கெட்" ஆகும். விரிவாக பதிவில் சொல்கிறேன்.
# ஶ்ரீராம் சொல்லி இருப்பதில் சில சரியானவனை,சில தவறானவை.
இன்டர் நேஷனல் கோல்டு கவுன்சில் ,தங்க விலையை நிர்ணயிப்பதாலே ,விலை நிர்ணயம் சப்ளை &டிமாண்ட் அடிப்படையில் நியாயமான விலை ஆகிவிடாது, விலை நிர்ணயமே கோல்மால் தான் ,அதையும் எனது பதிவில் சொல்கிறேன்.
//உலகிலுள்ள தீரக்கூடிய பொருட்களின் (பெட்ரோல், தங்கம், சென்னையில் உள்ள நிலம் இன்ன பிற)விலை அடியோடு குறைய வாய்ப்பில்லை. //
தங்கம் தீரக்கூடிய பொருளே அல்ல, எவ்வளவு தங்கம் வெட்டியெடுக்கப்பட்டதோ அவ்வளவும் சேமிப்பாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது, சேமித்து வைத்த தங்கம் வேண்டாம் என்று வெளியிட்டாலும் சந்தையில் கிடைக்கும்.
தங்கம் ஒரு மாற்று முதலீடு என்ற ஸ்தானத்தில் இருக்கும் வரையே அதற்கு மதிப்பு. மேலும் தொழிற் தேவைகள் கொஞ்சம் இருக்கு.
//நீங்க சொல்வது உண்மையாக இருக்குமானால் தங்கம் கிடைக்கும் சைனாவில் விலை குறைவாகவும், மிகப் பெரிய கஸ்டமரான இந்தியாவில் கொஞ்சம் அதிகமாகவும், சின்ன கஸ்டமரான அமெரிக்கவில் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும் அல்லவா?//
தங்கம் கிடைக்கும் இடத்தில் விலைக்குறைவு தான் அதாவது தங்க சுரங்கத்தில் இருந்து விற்கப்படும் தங்கம் விலை நாட்டுக்கு நாடு மாறி குறைகிறது, கோல்டு கவுன்சில் சர்வதேச விலை என தீர்மானிப்பது "வாடிக்கையாளர் விலை".
மேலும் சீனாவிலே நடக்கும் தங்க உற்பத்ஹ்டி குறைவே, ஆஃப்ரிக்கநாடுகளில் தங்க சுரங்க உரிமம் பெற்று உற்பத்தி செய்கிறது.
தங்கத்தின் உற்பத்தியாளர் விலை ஒரு அவுன்ஸுக்கு 450 டாலர் முதல் 600 டாலர் என்ற அளவில் தான்.
ஒரு அவுன்ஸ் 1400 டாலர் என கோல்டு கவுன்சில் நிர்ணயிப்பது எல்லாம் உட்டாலக்கடி வேலை. எனது பதிவில் விரிவாக சொல்கிறேன்
-----------
அப்துல்லாண்ணே,
//ஒரு தேசத்தில் பணம் அச்சடிப்பது தங்கத்தின் கையிருப்பை வைத்தே (புல்லியன் ஸ்டான்டர்ட் மெத்தட்) முடிவு செய்யப்படுகிறது.அந்த அடிப்படையில் பார்த்தால் இன்றைக்கும் வர்த்தகத்தின் பண்டமாற்றுப் பிண்ணனி தங்கம்தான்.//
கோல்டு ஸ்டாண்டர்ட் கரன்சி திட்டமெல்லாம் இரண்டாம் உலகப்போர் காலத்தோடு வழக்கொழிந்து போய்விட்டது, அதன் பின்னர் ஒவ்வொரு நாடும் கரன்சியை அவர்கள் நாட்டு பொருளாதாரத்தின் அடிப்படையில் அதாவது ஜிடிபி அடிப்படையில் அச்சடித்துக்கொள்கிறார்கள்.
எவ்வளவு குட்ஸ் &சர்வீசஸ் சந்தையில் கிடைக்கிறதோ அவற்றை வாங்க தேவையான அளவுக்கு கரன்சி அச்சடிக்கலாம். நாட்டில் கிடைக்கும் குட்ஸ்& சர்வீசஸ் அளவுக்கு மேல் கரன்சி அடித்து புழக்கத்தில் விட்டால், பண புழக்கம் அதிகரித்து, குட்ஸ்& சர்வீசச்ஸ் அளவு குறைவாக இருப்பதால் விலைவாசி உயர்ந்து ,பணவீக்கம் அதிகரிக்கும்.
இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்க காரணம், ஒவ்வொரு ஆன்டும் பட்ஜெட்டரி டெபிசிட்டை சமாளிக்க வெளியில் சொல்லிக்காமல் மத்திய அரசு கரன்சியை அச்சடித்துக்கொள்வதும் ஒரு காரணம். அப்படி அச்சடித்த பணத்தினை அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பிற திட்ட செலவுனு அரசு செலவழித்து சந்தையில் புழக்கத்துக்கு வந்து பணவீக்கம் அதிகரிக்குது.
பணவீக்கத்தினை குறைக்கவே வங்கிகளில் சேமிப்பு செய்ய அரசு ஊக்குவிக்குறது, மேலும் அரசு பாண்ட்கள் வாங்கினால் வரிச்சலுகைனு ஆசைக்காட்டுவதும், இதனால் சந்தையில் உபரி பணம் புழங்குவது கட்டுப்படுத்தப்படும்.
//ஒரு தேசத்தில் பணம் அச்சடிப்பது தங்கத்தின் கையிருப்பை வைத்தே //
ReplyDeleteயே அப்து, நீ இன்னும் நிக்சன் காலத்திலேயே இருக்கியா? இது மாறி ரொம்ப நாளாச்சப்பு
//தங்கம் தீரக்கூடிய பொருளே அல்ல, எவ்வளவு தங்கம் வெட்டியெடுக்கப்பட்டதோ அவ்வளவும் சேமிப்பாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது,//
வவ்வால்ஜி, ரெண்டாவது ஸ்டேட்மெண்ட்டின் லாஜிக் படி முதல் வரி சரி. but Gold is not Infinite like Salt, it is finite like oil. ஆயிலை எடுத்து எரித்து விடுகிறோம், தங்கத்தை எடுத்து லாக்கரில் வைக்கிறோம் - இது இன்னுமே ஆபத்தானது - உலகின் கடைசி சொட்டு தங்கம் வெட்டி எடுக்கப் பட்டதும் தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறும்.
//கோல்டு கவுன்சில் சர்வதேச விலை என தீர்மானிப்பது "வாடிக்கையாளர் விலை".// நானிங்கே கூறியவை அனைத்தும் வாடிக்கையாளர் விலை பற்றியே , ஏனென்றால் இக்கட்டுரையும் நுகர்வோர் தங்கம் வாங்குதல் குறித்தே
//ஒரு அவுன்ஸ் 1400 டாலர் என கோல்டு கவுன்சில் நிர்ணயிப்பது எல்லாம் உட்டாலக்கடி // while I agree to this, I would like to highlight that consumers across the world pay almost the same price. Indians aren't in a disadvantageous position as mentioned in Surekha's post.
அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஶ்ரீராம்ஜி,
Deleteநீங்க சொல்வதும் சரி தான் ,தங்கம் ,உப்பு போல அளவற்றது அல்ல தான். தங்கத்தின் உற்பத்தி நின்று , தட்டுப்பாடு உருவானால் ,உலகநாடுகள் தங்கத்தின் "reserve asset" ஸ்டேட்டசை மாற்றினாலே பொதும்,வேறு ஒரு உலோகத்தினை தங்கத்திற்கு பதிலாக ஃபெடரல் வங்கிகள் சேமிக்க ஆரம்பித்து. தேவை குறைந்து விலை இறங்கிவிடும்,
//consumers across the world pay almost the same price. Indians aren't in a disadvantageous position as mentioned in Surekha's post.
//
நுகர்வோர் ஒரே மாதிரியான விலை கொடுக்கும் நிலை என்பது உண்மையே, ஆனால் நிறுவன மற்றும் மொத்த தங்க வியாபாரிகள் நிலை வேறு.
இந்தியாவின் செயல்படும் மொத்த தங்க வியாபாரிகள் பலரும் நேரடியாக மத்திய ஆப்ரிக்க,கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கானா, கோல்டு கோஸ்ட், உகாண்டா, கென்யா போன்ற நாடுகளில் உள்ள சிறு மற்றும், சட்டவிரோத தங்க சுரங்கங்ளில் கொள்முதல் செய்கிறார்கள்,அவர்கள் கொடுக்கும் விலை கோல்டு கவுன்சில் விலையை விட பல மடங்கு கம்மி ஆனால் 99.99% தூய்மைக்கு உத்தரவாதம் இருக்காது.
பல உலக நாடுகள் அத்தகைய தங்கச்சுரங்களில் கொத்தடிமை முறை, சுற்றுச்சுழல் பாதுகாப்பு இல்லை என " டர்ட்டி கோல்ட்" என சொல்லி வாங்குவதில்லை, இந்திய போன்ற நாடுகளே விலைக்குறைவு என வாங்கிக்கொண்டுள்ளன. தங்கம் சரியும் நிலையில் நம்ம வியாபாரிகள் இன்னும் மலிவாக கிடைக்குதுனு "டர்ட்டி கோல்டை" வாங்கிக்குவிக்க ஆரம்பிக்கலாம் ,பின்னாளில் விலை ஏறும் என,அதனை தடுக்கவே இப்பொதைய வரி உயர்வு என நான் நினைக்கிறேன்.
நிதியமைச்சரின் எச்சரிக்கை நுகர்வோருக்கு என்பதை விட தங்க வியாபாரிகளுக்கே ஆகும்.ஏன் எனில் நிறைய டர்ட்டி கோல்ட் வாங்கிவிட்டு விற்க முடியாமல் சிக்கிக்கொள்ள கூடாது என்பதாகவும் இருக்கலாம். இதுல என்ன டிஸ் அட்வாண்டேஜ் வருது,மலிவான தங்கம் தானே என நினைக்கலாம், தங்கத்தின் மூலம் எதுவென தெரியாமல் உலக நாடுகள் தங்கத்தினை வாங்காது எனவே டர்ட்டி கோல்ட் அதிகம் சேர்ந்தாலும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது,எந்த நாட்டில் வெட்டி எடுக்கப்பட்ட தங்கம்னு டிரேஸ் எலிமெண்ட் டெஸ்ட் செய்து கண்டுப்பிடித்துவிடலாம். எல்லாவற்றையும் உள்நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் தான் விற்க வேண்டும், இது மெதுவாக நடக்கும் என்பதால் பொருளாதார பாதிப்பு வரும்.
நம்ம நாட்டு கேரளா நகையாவாரிங்க எல்லாம் கோடிக்கணக்கில் செலவழித்து விளம்பரம் கொடுத்து நகை வியாபாரம் செய்ய காரணமே விலை மலிவான டர்ட்டி கோல்டை வாங்கி விற்பதாலே.
வவ்வால் அண்ணே, மன்னிக்கவும். நான் இன்னும் தெளிவாக எழுதி இருக்க வேண்டும். நேரமின்மையால் விவரித்து எழுதவில்லை. புல்லியன் ஸ்டான்டர்ட் இன்று பல நாடுகளில் வழக்கில் இல்லை. இருப்பினும் தங்கத்தின் மேல் வைத்த அடிப்படை இன்று அந்நியச் செலாவணி கையிருப்பிலும், பொருட்களின் மொத்த உற்பத்தியின் மதிப்பின் மேலும் மாறி இருந்தாலும் அடிப்படை ஒன்றுதானே? பழைய மொந்தையில் புதிய கள். அவ்வளவே.
ReplyDeleteஅப்துல்லாண்ணே,
Deleteநீங்க வலை உலகத்துக்கே அண்ணா என்னய போய் அண்ணேனு சொல்லிட்டிங்களே அவ்வ்!
//பொருட்களின் மொத்த உற்பத்தியின் மதிப்பின் மேலும் மாறி இருந்தாலும் அடிப்படை ஒன்றுதானே? பழைய மொந்தையில் புதிய கள்//
நீங்க விவரித்து எழுதினால் உலகப்பொருளாதாரமே சொல்வீங்கனு தெரியும், ஆனால் கிடைச்ச கேப்பில நாமும் கருத்த்து சொல்லிக்குவோம்னு தான் :-))
நீங்க சொல்வது ஒரு வகையில் சரி என்றாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி சார்ந்து நாணய அச்சடிப்பு என்னும் போது உள்நாட்டு தற்சார்பு உருவாகிவிடுவதால் ,தங்கத்தின் முக்கியத்துவம் முன்பு போல அரசுகளுக்கு இல்லை எனலாம்.
இப்பொழுதும் ஃபெடரல் வங்கிகள் தங்கத்தினை இருப்பு வைப்பது ஹெட்ஜிங் அகய்ன்ஸ்ட் டாலர் &ஈரோ எனலாம்.
டாலர்& ஈரோ மதிப்பு குறைந்தால் தங்கத்தின் மதிப்பு உயருவது வழக்கம் எனவே கையிருப்பில் உள்ள அன்னிய செலவாணியின் குறையும் மதிப்பினை ஈடு கட்டலாமெனவே தங்கம் என்பது முக்கிய இடத்தில் இருக்கவே செய்யும்,ஆனால் நீங்கள் சொன்னதில் இருந்து மாறுபட்டு என்பதே நான் சொல்ல வந்தது.
கம்மோடிடி வாலாக்களூக்கு சாதகமான சூழல் உருவானதும் மீண்டும் தங்கத்தின் விலை மேலே போகும்,மக்களும் ஓடி போய் வாங்கத்தான் போகிறார்கள் :-))
பல தகவல்களை உள்ளடக்கிய நல்ல பதிவு மற்றும் பின்னூட்டங்கள். நன்றி.
ReplyDelete
ReplyDeleteDear Sureka
As said by other members the Economy is concerned with BOP and not with the Gold. This is changed long before.
Further it is really useful and eye opener for those who are running to jewellery now and then.
With Blessings
S Bhaskar