பார்க்கமுடியாததைப் பார்ப்போம்!

சில திரைப்படங்கள் பார்த்தவுடனேயே -அதைப்பற்றி நண்பர்களிடம் - சொல்லவோ, விமர்சனம் எழுதவோ தோன்றும்..தூண்டும்!

ஆனால் சில திரைப்படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கவைத்து- பிரமிக்கவோ,விதிர்க்கவோ வைத்து , அசைபோட்டு பின்னர் சொல்லத்தூண்டும்.
இது இரண்டாவது ரகம் போலும்! ( லேட்டா பதிவு போடறதுக்கு இப்படி ஒரு பில்டப்பா?)

ஆம்..
BLINDNESS - அப்படிப்பட்ட படம்தான்.!

ஒரு நகரம்- அதன் காலைநேரப் போக்குவரத்துச்சந்தடிகளில் சிக்னலில் ஒரு மனிதர் காரில் - பச்சைவிளக்குக்காகக் - காத்திருக்கிறார். பச்சை விளக்கு எரியும்போது அவருக்கு, கண் தெரியாமல் போய்விடுகிறது. அது ஒருவிதமான வெள்ளைக்கண் குறைபாடு- WHITE BLINDNESS-காரை எடுக்கமுடியாமல் தவிக்கிறார். அவருக்கு உதவ வந்த மனிதன் இவரது பார்வையின்மையைப் பயன்படுத்தி காரைத்திருடிக்கொண்டு செல்ல, அவரைச்சோதிக்கும் மருத்துவர் கண்ணில் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் எப்படி ஆனதென்று
தெரியவில்லையென்று சொல்லிவிட, வீடு வந்து சேருகிறார். அப்போது பிடிக்கிறது கதையில் சூடு!

அவர் பார்த்த, அவரைப்பார்த்த எல்லோருக்கும் தொற்றுநோயாக பார்வையின்மை ஏற்பட, மக்கள் தவித்துப்போகிறார்கள். இதில் மருத்துவரும் அடக்கம்.உடனே அரசு இந்த வகை நோயாளிகளை வெளியுலகத்திலிருந்து தனிமைப்படுத்துகிறது.அப்படி தனிமை முகாமிற்கு மருத்துவர் அழைத்துச் செல்லப்படும்போது அவரது மனைவியும் வருகிறார். ஆனால் அவருக்கு பார்வை நன்றாகத்தெரிகிறது. (எப்போதுவேண்டுமானாலும் தனக்கும் பார்வை போய்விடும் என்று அவரும் நம்புகிறார்)

அவர்கள் அடைக்கப்படும் தனிமை முகாமுக்குள்தான் மீதிக்கதை பயணிக்கிறது.

அங்கு, முதலில் காரில் பார்வை இழந்தவரும், ஏனையோரும் வந்து அடைக்கப்படுகிறார்கள். அதற்கு கடுமையான காவலும், கதவுகளும் உள்ளன. உணவுமட்டும் வெளி உலகத்திலிருந்து வரும்.அப்போது சின்னச்சின்ன பிரச்னைகளை அவர்கள் சந்திப்பதையும், கண் தெரியாதவர்களின் உலகம் எவ்வளவு ஒழுங்கற்றதாக ஆகும் என்று மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.ஒரு சமயத்தில், உணவுப்பொருள் உள்ளே வரும் ஒரு வார்டில் இருக்கும் ஒருவனுக்கு ஆதிக்க வெறி வந்து,கையில் துப்பாக்கியோடு மற்ற வார்டில் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள பணம், பொருட்களை கொடுத்தால்தான் உணவு கிடைக்கும் எனக்கூற, அதன்படியே செய்கிறார்கள். இவர்களிடம் ஒன்றுமில்லாமல் போகும்போது , அடுத்த வேளை உணவுக்கு வில்லன் கேட்பது மற்ற வார்டில் உள்ள பெண்களை ! வேறு வழியின்றி உணவுக்காக, தம் வார்டில் உள்ள பெண்களையும் அனுப்புகிறார்கள்!இந்த நிலையிலும், ஆச்சர்யமாக மருத்துவரின் மனைவிக்கு மட்டும் அந்த நோய் தொற்றாமல், பார்வை போகாமல் இருக்கிறார்.
இந்நிலையில், வெளியிலிருந்து உணவு வருவதும் நின்றுபோகிறது.மேலும் மேலும் வில்லனின் அராஜகம் அதிகமாக, வேறு வழியின்றி கண் தெரியும் மருத்துவரின் மனைவி அவனைக் கொன்றுவிடுகிறார். மீதமுள்ளவர்களுடன் அந்த முகாமிலிருந்து வெளிவருகிறார். அப்போதுதான் நமக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்த நகரமே பார்வையின்மையால் பாதிக்கப்பட்டு சீரழிந்துபோய் இருக்கிறது. அந்த நகரத்திலேயே பார்வை தெரிந்தவர் கதாநாயகி மட்டும்தான்! மெதுவாக தன் கணவருடன் மற்றவர்களையும் கூட்டிக்கொண்டு தன் வீட்டை அடைகிறார். அங்கு அவர்கள் மெதுவாக தங்கள் வாழ்க்கையை வாழத்துவங்குகிறார்கள். முதலில் பார்வை இழந்தவருக்கு, மீண்டும் பார்வை வருகிறது . அத்துடன் படமும் நிறைவு பெறுகிறது.

இது நாவலாக வந்து படமாக்கப்பட்டிருக்கிறது. அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
José Saramago எழுதிய கதையின்
இயக்குநர் Fernando Meirelles.
கதாநாயகி Julianne Moore

படத்தின் ஒவ்வொரு காட்சியும் வீணாக்காமல் எடுக்கப்பட்ட்டிருக்கிறது.
கணவனின் மீது இவ்வளவு அன்பு மிகுந்த ஒரு மனைவியின் பாத்திரத்தை ஜுலியான் மூர் மிகச்சிறப்பாகச்செய்திருக்கிறார்.
அந்த முகாம் ஆரம்பத்தில் இருப்பதற்கும், போகப்போக அதில் ஏற்படும் மாற்றங்களையும் அதிர்ச்சிகரமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

வில்லனின் வார்டில் ஒரு இயற்கையிலேயே பார்வை இழந்தவர் இருக்கிறார். அவர் இவர்களைவிட பார்வையின்மைக்கு பழக்கப்பட்டிருக்கிறார் என்பது சிந்திக்கவைக்கிறது.அவருக்கு ப்ரெய்லி தெரியும் என்பது கூடுதல் திறமையாகப்பார்க்கப்படுகிறது.

முகாமிலிருந்து இவர்கள் வெளியேறியவுடன்,ஒரு சூப்பர்மார்க்கெட்டில் உணவுப்பொருட்களை எடுத்துக்கொண்டு வெளிவரும் ஜூலியான் மூரை கண்தெரியாதவர்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டு உணவைப்பிடுங்குவது சூழலுக்கேற்றவாறு பழகும் மனிதவளர்ச்சியை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் தேவைகளையும், அதற்காக அவன் போராட்டங்களையும், அவனுக்கு ஏற்பட்ட ஆதிக்க வெறியையும் அதற்காக அவன் அடைந்ததும் , இழந்ததுமான பாதையை இந்த முகாம் என்ற போர்வைக்குள் நமக்கு காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இன்னும் இந்தப்படத்தைப்பற்றி பேசிக்கொண்டே போகலாம்.

எப்ப வாய்ப்பிருந்தாலும்கண்டிப்பா பாருங்க !

Comments

 1. நீண்ட நெடு நாட்களாக எனது கணினியில் தூங்குகிறது இந்தப்படம், இன்று பார்த்துவிட வேண்டியது தான் ...  (புது வித நோய் வருவதும் அவர்கள் அனைவரையும் தனிமை படுத்துவதாகவும் பல படங்கள் எடுத்து விட்டார்கள், எல்லாமும் விருவிருப்பாய் ...)

  ReplyDelete
 2. வாங்க ஜமால்..

  வாங்க சிவா

  கண்டிப்பா படத்தைப்பாருங்க!

  ReplyDelete
 3. என்ன.. இப்பத்தான் தமிஷிஷ்ல இணைச்சீங்களா? நான்கூட புதுசா எதுவோ எழுதிருக்கீங்கன்னு வந்தேன்..

  ReplyDelete
 4. ஏற்கனேவே கேள்வி பட்ருக்கேன் இந்த படத்த பற்றி. பார்க்கணும்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

உன்னைக் காணாது நானிங்கு..