சத்தியமாகக் கடவுளைப்பார்த்தேன்.!

பயணங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை ! கவனம் கவர்பவை!
எனக்கு எவ்வளவோ கற்றுக்கொடுத்திருக்கின்றன எனக்கான பயணங்கள் ! ஆகவே ஒவ்வொரு பயணத்திலும் என் விழிப்புணர்வு (தூங்காதபோது) கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்!

அது ஒரு குறுகிய தூரப் பேருந்துப் பயணம். பேருந்தில் உட்கார இடம் கிடைப்பது, அதுவும் நாமே தேர்ந்தெடுக்கும் வகையில் கிடைப்பது ஒரு மகிழ்வான அனுபவம். கொஞ்சம் குழப்பமானதும் கூட..! நாம் தேர்ந்தெடுத்த இருக்கையை விட இன்னும் கொஞ்சம் நல்ல இருக்கை பக்கத்தில் இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றும்..! கூட்டமாக இருந்தால் குழப்பமே இல்லை. எந்த இருக்கை கிடைக்கிறதோ அதுதான் சொர்க்கம்! எப்போதுமே எந்த அவசரமாக இருந்தாலும், நின்றுகொண்டு பேருந்துப்பயணம் செய்வதில், எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை!

அப்படி ஒரு குழப்பம் ஏற்படாதவகையில் -சொர்க்கமாக - மூன்று பேர் அமரும் இருக்கையின் உள் ஓர இடம் எனக்குக்கிடைத்தது. மெதுவாக கூட்டம் சேர ஆரம்பித்து, பேருந்தும் நகர ஆரம்பித்தது.
வழக்கம்போல் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கியும் போனேன்.

ஒரு குலுக்கலில் , கண்விழித்தபோது கூட்டத்தில் நெருக்கிக்கொண்டு ஒரு பத்து வயதுச்சிறுவனும், அவன் இடுப்பில் மூன்றுவயதுச்சிறுவனும் இருந்தார்கள். அந்தப்பத்துவயதுச்சிறுவன் நல்ல கறுப்பாக, ஒரு பச்சை நிற பள்ளி பெயரிட்ட பனியனும், வறுமையைப்பறைசாற்றும் ஒரு ஜீன்ஸும் அணிந்திருந்தான். குட்டிச்சிறுவன் இன்னும் கறுப்பாக, ஆனால் அழகாக, ஒரு வெள்ளை டிராயரும், இரண்டு மேல் பொத்தான்கள் இல்லாத சட்டையும் அணிந்திருந்தான். இதுதவிர பெரியவனின் இன்னொரு கையில் ஒரு ஜவுளிக்கடையின் அழுக்கேறிய கட்டைப்பை இருந்தது. இவர்கள், தன் உடல்நலமில்லாத தாயுடன் வந்திருந்தார்கள். தாய் என் அருகில் நின்றிருந்தாள். சிறுவன் எனக்கு முன் இருக்கையின் அருகில் நின்றுகொண்டிருந்தான்.

அப்போதுதான் எனக்கு முன் இருக்கைப்பயணியை கவனித்தேன்.
அவள் ஒரு கல்லூரி மாணவி, சுடிதார் அணிந்துகொண்டு, ஒரு சிறு பையை வைத்துக்கொண்டு, காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இருந்தாள். அது செல்போனாக இருக்கலாம், ஐ பாடாகவும் இருக்கலாம்!

இப்போது அந்த பெரிய சிறுவன் கூறினான்..

டேய்! தம்பி! வழுக்குதுடா..!

டேய் தம்பி! வலிக்குதுடா ..!

அவன் வயதுக்கு அந்தக்குட்டிச்சிறுவனை தூக்கி வைத்துக்கொண்டு ஓடும்,-நம்மூர் சாலையில் ஆடும்- பேருந்தில் நிற்பது என்பது கொஞ்சம் கடினம்தான்.! இதை நான் நினைத்துக்கொண்டிருக்கும்போதே...
அவன் அந்தப்பெண்ணிடம்..

அக்கா! தம்பியை உக்கார வைச்சுக்கிறீங்களா? -என்று கேட்க,

ஹெட்போனை காதிலிருந்து எடுத்து அவன் சொன்னதை மறுபடியும் கேட்டு, பின்னர் ஆக்ரோஷமாக மறுத்தாள்..அவளது முழு முக அசைவும் தெரியாவிடினும், திரும்பிச்சுளித்ததை தெளிவாக கவனித்தேன். என்ன பொண்ணு இவள்!? ஒரு சின்னப்பையன் இப்படிக்கேட்கிறான். கூப்பிட்டு வைத்துக்கொள்ளாமல் , பெரிய அலம்பல் பண்ணுகிறாளே? என்று வருந்தினேன்.

எனக்கென்னமோ குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரிப் பார்க்கத்தோன்றும். ஆகவே , அவள் மறுத்த மறுவினாடி, என்கிட்ட குடுடா..என்று கேட்டு வாங்கினேன். சில நெருக்கல்களுக்குப்பிறகு, அந்த வானமே எல்லை அழகன், என் மடிக்கு வந்தான். ஆனால் அவனுக்கு என்னைப்பிடிக்கவில்லை. சிறிது முறைத்துக்கொண்டு, அண்ணனிடம் மழலையில் பேசிக்கொண்டே வந்தான். அம்மாவிடம் குடும்ப நிலைமைகள் பற்றியும், பள்ளியில் கேட்ட கட்டணம் பற்றியும் முதிர்ந்த மனிதனாக அந்த பத்துவயதுப்பையன் பேசிக்கொண்டு வந்தான்.

நான் இறங்கவேண்டிய நிறுத்தத்துக்கு இரண்டு நிறுத்தம் முன்னால் வண்டி வந்தபோது, அடுத்த நிறுத்தத்தில் இறங்க என் முன்னிருக்கை கல்லூரிமாணவி வேகமாக எழுந்தாள்....

டர்ர்ர்ர் !

அவள் அணிந்திருந்த சுடிதாரின் கீழ்ப்பகுதி (கால்சட்டை) மேலிருந்து கீழாக தொடைப்பகுதியில் ஒரு அடி நீளத்துக்கு கிழிந்துவிட்டது. அப்படியே அவளது தொடை மற்றும் உள்ளாடை பளீரெனத்தெரிந்தது. ஒரு வினாடி அவளுக்குத்தன் உடை கிழிந்தது தெரியவில்லை. நான் நேர் பின்னால் என்பதால் உடனே பார்த்துவிட்டேன். அவள் மானம் போவதை எண்ணிப்பதறுவதை மீறி, கடவுள் இருக்கான்ப்பா! ஒரு குழந்தையை வச்சுக்க மாட்டேன்ன்னு சொன்னவளுக்கு உடனே கூலி குடுத்துட்டான் என்று ஒரு சாத்தான் குரல் எனக்குள் ஓடியது.அவளுக்கு அருகில் இருந்த பெண் 'அய்யய்யோ! சுத்தமா கிழிஞ்சிருச்சுப்பா!' என்றாள். இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் நிறுத்தம் வந்துவிட்டது.

அந்தப்பத்துவயதுக்காரனும் பார்த்துக்கொண்டிருந்தான்.
படீரென்று தன் கட்டைப்பையைத்திறந்தான்.
ஒரு சிகப்புத்துண்டை எடுத்தான்! அவள் இடுப்பில் ஒருபக்கமாக சுற்றி, அவள் கையில் திணித்தான்.
அக்கா! ஸ்டாப்பிங் வந்துருச்சு ! எறங்குக்கா! கவலப்படாம போக்கா!
அவள் விழிகள் என்ன சொன்னதென்று எனக்குப்படிக்க முடியவில்லை!

நான் அவனையே கண்ணீர் முட்டப்பார்த்துக்கொண்டிருந்தேன்..!

Comments

  1. சாத்தானின் குரல் தான் எமக்குள்ளும் எழும்பியது!

    சிறுவனுக்கு இந்த சிறிய வயதிலும் வாழ்க்கை பல நல்ல பாடங்களை கற்று தந்திருக்கிறது !

    ReplyDelete
  2. //என்கிட்ட குடுடா..என்று கேட்டு வாங்கினேன். சில நெருக்கல்களுக்குப்பிறகு, அந்த வானமே எல்லை அழகன், என் மடிக்கு வந்தான். ஆனால் அவனுக்கு என்னைப்பிடிக்கவில்லை//

    சில சந்தர்ப்பங்களில் மிகுந்த ஆர்வத்துடன் இப்படி நாம் உதவி செய்யும்போது சில குழந்தைகள் வர மறுத்து டெரரர் செய்யும் :( அந்த வேளைகளில் நம்ம மனசும் கொஞ்சம் டெரரர் ஆகும் மெல்ல சிந்தும் புன்னகையுடன்...!

    ReplyDelete
  3. நல்ல பதிவு.. கிட்டத்தட்ட இதே போன்ற அனுபவம் எனக்கும் உண்டு என்பதால் ரொம்ப அனுபவித்தேன். ஒரு சிறு குறிப்பு: கடைசி பத்தி (கிழ்க்கண்ட பகுதி) வெட்டப்பட்டால் இன்னும் நன்றாக இருக்கும்.

    // நான் அவனையே கண்ணீர் முட்டப்பார்த்துக்கொண்டிருந்தேன்..!
    அவனிடம் சத்தியமாகக் கடவுளைப்பார்த்தேன்.! //

    ReplyDelete
  4. சிறுவனுக்கு இந்த சிறிய வயதிலும் வாழ்க்கை பல நல்ல பாடங்களை கற்று தந்திருக்கிறது !

    வாழ்க வளர்க!

    ReplyDelete
  5. ரொம்பவும் நெகிழ்ச்சியான சம்பவம். ஒரு நல்ல சிறுகதைக்கான கரு!

    ReplyDelete
  6. உருவத்துக்கும் மனதுக்கும் சம்பந்தம் இல்லை என்று உணர்த்தும் கதை.

    ReplyDelete
  7. சுரேகா,
    நல்லா இருக்கிறது பதிவு !

    ReplyDelete
  8. அன்பின் சுரேகா

    நல்ல கதை - கடவுள் எப்பொழுதும் எல்லோரிடத்தும் இருக்கிறார். ஆனால் அவரை பல சமயம் சாத்தான் வென்று விடுகிறான். அப்பெண் மறுத்ததற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.

    சிறுவன் சிறுவன்தானே ! அதனால் சாத்தானால் அவனை ஒன்றும் செய்ய இயலவில்லை. கடவுளைக் கண்டீர்கள்

    ஒரு சிறு நிகழ்ச்சியினை கதையாக வடித்தமை நன்று - நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  9. // அப்படி ஒரு குழப்பம் ஏற்படாதவகையில் -சொர்க்கமாக - மூன்று பேர் அமரும் இருக்கையின் உள் ஓர இடம் எனக்குக்கிடைத்தது. //


    அய்யய்யோ ... மூணு பேரு ஒக்கார மாதிரி சீட்டா ... முடியாது சாமி....!! போன வாரம்தேன் ... ஊருல இருந்து வரும்போது ..தெரியா தனமா மூனுபேரு கோர்ற மாதிரி இருக்குற சீட்டுல தெரியாதத் தனமா போய் கோந்துட்டேன்..... !! அடங்கொக்கமக்கா... ஒரு ஆளு ஆபிரிக்கா யான சைசுக்கு வந்து தொம்முன்னு கோந்து .... " தம்பி கொஞ்சம் தள்ளி கோருப்பா சித்த... " ன்னு சொன்னா பாருங்க.... !! சன்னலோரம் ஒரு ஆளு வேற.... நடுவுல நசுங்கி ... சிக்கி.... சின்னாபின்னமாயிட்டேன்....!!!





    // காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இருந்தாள். அது செல்போனாக இருக்கலாம், ஐ பாடாகவும் இருக்கலாம்! //


    ரொம்போ ..முக்கியமுங்கோ தலைவரே....!!






    // நான் அவனையே கண்ணீர் முட்டப்பார்த்துக்கொண்டிருந்தேன்..!
    அவனிடம் சத்தியமாகக் கடவுளைப்பார்த்தேன்.! //


    பினிஷிங் நல்லாருக்குங்க தலைவரே......!!!




    நல்ல கதை...!! கடவுள்ன்னு சொல்வதை விட..... ஒரு மனிதனைக் கண்டேன்னு சொல்லுங்க.... !! அதுதான் உண்மை....!!

    ReplyDelete
  10. அனுபவம் நல்லா இருக்கு. 'இன்னா செய்தாரை'.....

    குறளைத் தெரிஞ்சுக்காமலேயே சிறுவன் நன்னயம் செஞ்சுருக்கான்.

    நல்லா இருக்கட்டும்.

    ReplyDelete
  11. வாங்க ஆயில்யன்!

    //சிறுவனுக்கு இந்த சிறிய வயதிலும் வாழ்க்கை பல நல்ல பாடங்களை கற்று தந்திருக்கிறது !//

    ஆமாங்க! அதில் மிக அழகாகத்தேறியிருக்கிறான் பாருங்கள்!

    ReplyDelete
  12. உண்மைதான்.. இதுதான் கடவுள்..

    சூப்பர் பதிவு சகா

    ReplyDelete
  13. கடைசி வரிகளில் மனிதம் தெரிகிறது

    ReplyDelete
  14. வாங்க தமிழ் பாய்! (tamilboy)

    உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க!

    (கடைசி வரியை வெட்டிட்டேன்)

    ReplyDelete
  15. வாங்க சிவா!

    அவனுக்கு என்ன செஞ்சேன்னு இன்னும் சொல்லலையே!? சொல்லிட்டா சுயவிளம்பரமாகிடும்..ஆகவே...

    ReplyDelete
  16. வாங்க சிவா!

    அவனுக்கு என்ன செஞ்சேன்னு இன்னும் சொல்லலையே!? சொல்லிட்டா சுயவிளம்பரமாகிடும்..ஆகவே...

    ReplyDelete
  17. வாங்க சுமஜ்லா!

    நீங்க சொல்வது சரி!
    கதையா எழுதியிருக்கலாம். ஆனா உண்மைக்கு வலு குறைந்து, கற்பனையா எல்லாரும் நினைச்சுரக்கூடாதில்ல! அதான்..அப்படியே மசாலா சேக்காம பரிமாறிட்டேன். :)

    ReplyDelete
  18. வாங்க சின்ன அம்மிணி..

    கண்டிப்பா சின்னப்பசங்களுக்குத்தான் மனசு பெரிசா இருக்கும்!

    அப்புறம், இது கதை இல்லைங்க..உண்மைச்சம்பவம்!

    ReplyDelete
  19. வாங்க கோவி சார்!

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  20. வாங்க சீனா சார்!

    உங்கள் அன்பான பாராட்டுகளுக்கு முன் , எல்லாமெ சின்னதாகிவிடுகிறது.

    மிக்க நன்றி சார்! இது சென்ற வாரம் எனக்கு நடந்த அனுபவம்!

    ReplyDelete
  21. வாங்க மேடி!

    எப்புடி இருக்கீங்க?

    :)

    ஆமாமா..3 பேரு உக்காரும் சீட்டில், பாக்கி ரெண்டு ஆளும் சரியான உருவத்தில் இருந்தா பொழைச்சோம். அப்படி இல்லைன்னா ...சட்னிதான்! :)

    ReplyDelete
  22. வாங்க துளசி அம்மா!
    ரொம்ப நாளாச்சு வூட்டுப்பக்கம் வந்து!

    உங்க ஆசீர்வாதம் கட்டாயம் அந்தப்பையனை நல்லா வச்சுக்கும்!

    ReplyDelete
  23. வாங்க கார்க்கி!

    மிக்க நன்றிப்பா!

    ReplyDelete
  24. வாங்க வசந்த்!

    ஆம் கடைசியில்...நான் பெரிய வாழ்க்கைப்பாடத்தையே கற்றுக்கொண்டேன்.

    ReplyDelete
  25. அழகிய நடை தெளிவான கருத்து, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. I really appreciate the apt Title given to this blog. That boy is an incarnation of Lord Krishna...Even in Mahabaratha, when Dhrowpathi explicitly asked for help, Lord Krishna saved her modesty by giving saree. Here, even though the girl did not ask his help, he saved her modesty...He is more than a God.

    ReplyDelete
  27. நல்லா இருக்கு தலைவரே!!

    ReplyDelete
  28. நிஜத்தில் அந்த பையனின் மனது கடவுள்தான்.----இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.

    ReplyDelete
  29. வாழ்க்கை பாடங்களுக்கு வயது பேதமில்லை. நல்ல பதிவு சுரேகா!

    ReplyDelete
  30. "கடவுள் இருக்கிறான்..." என்று உங்கள் மனதில் ஓடியது சாத்தான் குரல் இல்லை...

    ReplyDelete
  31. அந்த சிறுவன் வடிவ கடவுளை கடவுளாகவே நம் சமுதாயம் வைத்திருக்க வேண்டும் என்று கடவுளை பிரார்திப்போம்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!