விமானப் பயணத்தில் சினிமா வியாபாரம்




அடுத்தடுத்து சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கும் ஒரு விளையாட்டுவீரனை அவனும், அவன் நண்பர்களும், ரசிகர்களும், தேசமும் புகழ்ந்துகொண்டிருந்தாலும், அந்த வெற்றி நிலைக்கு வருவதற்காக அடைந்த அவமானங்கள், தலைகுனிவுகள், சிரமங்கள் ஆகியவற்றை அவனால் மறக்கவே முடியாது. அதிலேயே ஊறிப்போன அவன், நல்ல விளையாட்டுவீரனாவது எப்படி என்று ஒரு சிறப்பான பயிற்சியை அளிக்கமுடியும்.

சினிமா என்பது மற்றவர்களுக்கு பிரம்மாண்டமாய், சுலப வருமானமாய்த் தெரிந்தாலும், உள்ளிருப்பவர்களுக்குத்தான் அதன் சோகங்களும், சூட்சுமங்களும் தெரியும். அந்தவகையில், பல ஆண்டுகளாய் திரைத்துறையிலேயே வாழ்ந்து,
வென்று ,தோற்று , மீண்டும் வென்று அதனையே சுவாசித்துக்கொண்டிருக்கும் திரு.சங்கர் நாராயண் (பதிவர் கேபிள் சங்கர்) அவர்கள் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சினிமா வியாபாரம் படிக்க ஆரம்பித்தது ஒரு விமான நிலைய காத்திருப்பில்..! பின் எப்போது விமானத்தில் ஏறினேன்? அங்கு என்ன உண்ணக்கொடுத்தார்கள்? எப்போது அடுத்த நகரில் வந்திறங்கியது என்று தெளிவாக நினைவில்லாத வகையில் , சினிமா வியாபாரச் சுழலுக்குள் நான்
சிக்கிக்கொண்டேன்.





புத்தகம் சுலப நடையில் ஆரம்பித்து , அதே நடையில் ஆக்கிரமித்து, கடைசியில் கைகுலுக்கும் முன்னரே கைகாட்டிச்சென்றுவிடுகிறது.

தமிழ் சினிமாவின் சினிமா வியாபார யுக்திகள், தியேட்டருக்கு ஒரு படப்பெட்டி வரும் வரை ஏற்படும் சிரமங்கள், சாதாரண ஹீரோவுக்கும், சூப்பர் ஹீரோவுக்கும் கடைப்பிடிக்கப்படும் வித்யாசமான வியாபார முறைகள், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தியேட்டர் அதிபர் ஆகியோருக்கிடையில் இருக்கும் பிணக்குகளும், பிணைப்புகளும் என்று பல்வேறு தளங்களில் புகுந்து விளையாடியிருக்கிறார்.

விநியோகஸ்தர்கள் படும் சிரமங்களும், பட விநியோகத்தில் கிடைக்கும் திடீர் லாபங்கள் என எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியிருப்பது சிறப்பு! மேலும் இவரே பட்ட அனுபவங்களையும், பக்கா அனுபவங்களையும் சுவாரஸ்யமாக தேவையான இடங்களில் தூவியிருக்கிறார். அதிலும் அந்த ' உயிரிலே கலந்தது' ரிலீஸ் அன்று இவர்கள் செய்த செயலைப்பார்த்து மற்றவர்கள் ஏன் சிரித்தார்கள் என்று சொல்லும்போது இடம், நேரம் மறந்து நானும் குபீரென்று சிரித்துவிட்டேன்.

தமிழ் சினிமா என்றில்லாமல், ஹிந்தித் திரையுலக வியாபாரம் எப்படி இயங்குகிறது? ஹாலிவுட் படங்களின் வியாபாரம் எப்படி நடக்கிறது என்பதையும் இவர் கற்றுக்கொண்டு எளிய தமிழில் விளக்கியிருக்கிறார். தமிழகத்தில் ஹாலிவுட் படங்களை நீண்டகாலமாக விநியோகித்துவரும் ஒரு பெரிய மனிதரிடம் இந்தப்புத்தகத்தைப்பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு பயணத்தில் இருந்ததால், அட்டையை மட்டும் பார்த்துவிட்டு,

"மேட்டர் நல்லா இருக்கே? நம்ம ஆபீஸில் ஒண்ணு வாங்கிக்குடுத்துருங்க! " என்றார்! மேலும், ஹாலிவுட் படங்கள் குறைவான முதலீட்டில் நிறைவான லாபம் தரக்கூடியவை என்றும், அந்தப்பொன் முட்டையிடும் வாத்தைப்பற்றி யாருக்கும் தெரிவதில்லை எனவும், அவரது இன்னொரு தமிழ்ப்பட தயாரிப்பு நிறுவன முதலீடே, ஹாலிவுட் படங்கள் தரும் வருமானம்தான் என்ற இரகசியத்தையும் உடைத்தார்.

கிழக்கு பதிப்பகம் ஏன் வெற்றிகரமாக இயங்குகிறது என்பதற்கு, எழுத்தாளர்களையும், துறைகளையும் தேடித்தேடி அவர்கள் பதிப்பிக்கும் இதுபோன்ற புத்தகங்களே சாட்சி! விரைவில் இந்தப்புத்தகம் திரைப்படத் தயாரிப்பாளர்களாலும், விநியோகஸ்தர்களாலும், தியேட்டர் அதிபர்களாலும் வரவேற்புப் பெற்று பாராட்டப்படும் வாய்ப்பு உண்டு! படைப்பாளிகளும் படித்துவைத்துக்கொண்டால், அதற்கேற்றாற்போல் பட்ஜெட் போடவும் முடியும்!

சினிமா வியாபாரம் பற்றி சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் இந்தப்புத்தகத்திலும் சிறு சிறு குறைகள் உண்டு - அதை இங்கு சொல்லி என்ன ஆகப்போகிறது.? புத்தக ஆசிரியர் என் நண்பர்தான், போனில் சொல்லிக்கொள்கிறேன்.








Comments

  1. மிக்க நன்றி சுரேகா.. குறைகளை உங்கள் பதிவில் சொன்னால் இன்னும் மகிழ்ச்சியாக உணர்வேன். என்னை திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்குமல்லவா..

    cablesankar

    ReplyDelete
  2. இந்தப்புத்தகத்திலும் சிறு சிறு குறைகள் உண்டு - அதை இங்கு சொல்லி என்ன ஆகப்போகிறது.? புத்தக ஆசிரியர் என் நண்பர்தான், போனில் சொல்லிக்கொள்கிறேன்.

    உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு

    ReplyDelete
  3. வாங்க கேபிள் ஜி!

    பதிவைப்படிக்கும் நண்பர்களும்
    நான் கண்டுபிடித்த குறைகளை, புத்தகம் படிக்கும்போது, முன்முடிவோட அணுகினா நல்லா இருக்காது.

    புத்தகம் போட்டாச்சு!
    அடுத்த பதிப்புல
    எல்லாம் திருத்திக்கலாம்..திருத்திக்கலாம்.!

    ReplyDelete
  4. வாங்க காவேரி கணேஷ்!

    ஹி..ஹி.. நன்றிங்க!

    ReplyDelete
  5. புத்தகம் படித்துவிட்டேன்.. கூடிய விரைவில் என் விமர்சனமும்..

    ReplyDelete
  6. நல்ல பதிவு

    அருமை.....

    தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்.....

    ReplyDelete
  7. நல்ல பண்பு சுரேகா., குறைகளை நேரில்தான் சொல்ல வேண்டும்.. புகழ்வது என்பது பொதுவில் சொல்லாம்.. அருமை நண்பா

    ReplyDelete
  8. மிக்க நன்றி தேனம்மை லக்ஷ்மணன்..! உங்கள் நட்புக்கும், அன்புக்கும்...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !