எந்திர அரசியல்
எந்திரன் - மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டு, தமிழின் பிரம்மாண்ட படமாக, ரசிகர்களின் ஆதரவுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. முதல்பாதியில் கதையும், இரண்டாம் பாதியில் கம்ப்யூட்டரும் ஆட்சி புரிந்திருக்கின்றன. 

மிகப்பெரிய வெற்றிகளாகக் கொண்டாடப்படும் எல்லா விஷயங்களும் , சம்பந்தப்பட்டவர்களை மட்டுமல்ல! சம்பந்தப்படாதவர்களையும் சந்தோஷப்பட வைக்கவேண்டும். ஒரு திரைப்படத்தின் வெற்றி அந்த வகையைச்சேர்ந்ததாகத்தான் இருக்கும். விளையாட்டில்கூட ஒரு அணி தோற்றால்தான் , இன்னொரு அணிக்கு வெற்றி.! தேர்தல் வெற்றியும் அப்படியே! இன்னும் பல்வேறு வெற்றிகள் இந்த வகையைச் சேர்ந்தவை! ஒருவர் தோற்றால்தான், இன்னொருவர் வெற்றி கொண்டாடப்படும். ஆனால் திரைப்படங்களின் வெற்றி என்பது இன்னொரு படத்தை தோற்கடிப்பதற்காக என்று எப்போதும் இருந்ததில்லை. ஆனால், சங்கர், ரஜினி, ரஹ்மான், கலாநிதிமாறன் என்ற பிரம்மாண்ட சுனாமிகள் சேர்ந்து தங்கள் வெற்றிக்காக எத்தனை சிறு திரைப்படங்களை அழித்துத்தள்ளிவிட்டார்கள். சுமாராக வசூல் செய்து கொண்டிருந்த படங்கள் கூட, இவர்களது திரையரங்க ஆக்கிரமிப்பில் சிதறிப்போய்விட்டன.

இன்று வெற்றி..வெற்றி என்று வெறியுடன் கதறிக்கொண்டிருக்கும் சன் குழுமம், இந்த வெற்றிக்காக எத்தனை பேரின் உழைப்பை அழித்திருக்கிறது என்று தெரியவில்லை.
ஒரு மாதத்தில் 10 திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம் . அவை அனைத்தும் , வினியோகஸ்தர், திரைப்பட உரிமையாளர் தகுதிக்கேற்ப அந்தந்த திரை அரங்குகளில் திரையிடப்படும்.

உதாரணமாக, 100 திரையரங்குகள் கொண்ட ஒரு நகரம். அதில் பெரிய பேனர் படம் 25 திரையரங்குகளிலும், அடுத்த வகை 10 திரையரங்குகளிலும், அடுத்தடுத்த வகை படங்கள் 10 முதல் 2 திரையரங்குகள் வரை தரத்துக்கேற்றாற்போல் ஓடிக்கொண்டிருக்கும். அவை அதற்கேற்றார்போல் வசூலும் செய்துவரும். இதில் நம்ம்ம்பி 25 திரையரங்குகளில் திரையிடப்பட்ட சூப்பர் ஹீரோ படங்கள் சூப்பு வாங்கியதும் உண்டு. பேனர் சின்னதாக இருந்ததால் 5 தியேட்டர்களில் வெளியிடப்பட்ட திரைப்படம் பிய்த்துக்கொண்டு ஓடியதும் உண்டு. இவையெல்லாம் எல்லா வகை திரைப்படங்களுக்கும் பொருந்தும். ஆனால் எந்திரன் என்ற ஒரு படம் ஒரு நகரத்தின் 60 திரையரங்குகளையும் ஆக்கிரமித்துக்கொண்டு ஓடினால், அடுத்தடுத்து ஓடிக்கொண்டிருந்த படங்கள் தனக்கான குறைந்த பட்ச வாய்ப்பையும் இழந்து பரிதாபமாகிப்போகும்.

இந்தக்காலகட்டத்தில் திரையுலகில் , எந்திரன் படம் ரிலீஸ்...அதனால் படம் ஓடலை என்று கூறும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களை சர்வசாதாரணமாகக்காணமுடியும். இதில் சிலர் படம் படு மொக்கையாய் இருந்து எந்திரனைக்காரணம் காட்டலாம். பலரது நல்ல படங்கள் உண்மையிலேயே பார்க்கப்படாமலேயே போகலாம். 

எந்த ஒரு வியாபாரத்திலும் இல்லாத ஒரு அழகு திரை வியாபாரத்தில் உண்டு. அதுதான் நான் முதல் வரியிலேயே கூறியது. யாரையும் தோற்கடிக்காமல் வெல்வது...! ஆனால் அதிலும் மண்ணள்ளிப்போட்டிருக்கிறது சன் குழுமம். !

இன்னொரு பக்கம். ... இது அவர்களது பயத்தையும் காட்டியிருக்கிறது. ரஜினி,ஷங்கர், ரஹ்மான்...எல்லாம் ஓக்கே.. படம் சூப்பு வாங்கிட்டா? இந்தக்கேள்வியும் கலாநிதி மாறனுக்கு எழுந்திருக்கலாம். அதனால் அதையும் காசாக்க முயன்றதன் பலன் தான் இந்த தொழில் நுணுக்கம்!

படம் சூப்பரா 100 தியேட்டர்களில் 10 நாள் ஓடுவதும், 1000 தியேட்டர்களில் ஒரு நாள் ஒடுவதும் ஒன்றுதான் என்று நினைத்திருப்பார்கள். அதில் இன்னொரு உண்மையும் உண்டு. முதல் நாள் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்து பார்க்க நாமெல்லாம் தயாராக இருக்கிறோம். அதில் அனைத்தும் அள்ளிவிடலாம்.  மேலும் இரண்டாம், மூன்றாம் நாள் வசூலும் குறைவாகிவிடாது என்ற சூட்சுமமும். வெளியிடப்பட்ட நாளான வெள்ளி ...முதல் நாள்...அடுத்து வந்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். ஆக...மொத்தத்தில் முதல் மூன்றுநாட்கள் கட்டாயம் ஓடிவிடும்.

இது தவிர.... நான் சன் குழுமத்தின் அனைத்து சேனல்களையும் வரிசைப்படுத்தி வைத்துக்கொண்டேன். தொலைக்காட்சியில் மாற்றி மாற்றி  பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒவ்வொரு மூன்று நிமிடத்துக்கொருமுறையும், எந்திரன் பட விளம்பரம் ஏதாவது ஒரு சேனலில்  ஓடிக்கொண்டிருந்தது. இவ்வாறு விளம்பரங்களை வெளியிட வேறு எந்த தயாரிப்பாளரும் நினைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். அதற்கு மட்டுமே கோடிக்கணக்கில் செலவாகும்.மேலும்..எந்திரன் எடுத்தவிதம், எந்திரன் எடுத்தவிதத்தை எடுத்தவிதம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் வரும் சனி, ஞாயிறுகளை நிரப்பிவிடும். இதெல்லாம் ஒரு சாதாரண தயாரிப்பாளருக்கு சாத்தியமே இல்லை!

சன் குழுமம், தன் வியாபார வெற்றிக்காக எந்தவொரு செயலிலும் இறங்கும் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறது. 

காமெடிக்கு யோசித்தால் கூட, இது நடக்குமோ என்று பயப்படத்தான் வேண்டியிருக்கிறது

சார்.. சன் டிவி அடுத்த படம் தயாரிக்கப்போறாங்களாம்.. நம்ம படத்தை அப்படியே நிறுத்திரலாம். செலவழிச்சவரைக்கும்தான் நஷ்டப்படும்.

சார். சன் பிக்சர்ஸ் படத்துக்கு எல்லா ஜூனியர் ஆர்ட்டிஸ்டும் போய்ட்டாங்க! உங்களுக்கு கட்டாயம் வேணும்னா நைஜீரியாலேருந்து வரவழைச்சுரலாம்.!

சார்..சன் பிக்சர்ஸ் படத்துக்கு எல்லா கேமராவும் புக் பண்ணிட்டாங்க...உங்க ஷூட்டிங்கை தள்ளி வச்சுருங்க!

சார்..சன் பிக்சர்ஸ் படம் எடிட்டிங் போய்க்கிட்டிருக்கு...எல்லா எடிட் சூட்டும் பிஸி...வேணும்னா அடுத்த மாசம் வாங்களேன்.

சார்..சன் பிக்சர்ஸ் தமிழ் இண்டஸ்ட்ரியை வாங்கிட்டாங்க..வேணும்னா எத்தியோப்பியால போய் படம் எடுங்களேன்..!

சார்..சன் பிக்சர்ஸ் படம் ரிலீஸாகுது..உங்க படப்பொட்டியை நீங்களே எடுத்திட்டுப்போயிடுங்க! இங்க பிள்ளைங்க பிலிமை பிச்சுப்போட்டுரும்!

சார். சன் பிக்சர்ஸ் பட போஸ்டர் ஒட்டணும்.. சுவரெல்லாம் சுண்ணாம்படிச்சு வைங்க!

சார்..சன் பிக்சர்ஸ் பட போஸ்டர் பிரிண்ட் ஆகிட்டிருக்கு...உங்க போஸ்டரை அடுத்தவருஷம் வாங்கிக்குங்களேன்!

சார்...சன் பிக்சர்ஸ் படத்துக்கு டிக்கெட் வாங்கணும்...இந்த நெக்லஸை அடமானமா வச்சுக்குங்க!

சார்..சன் பிக்சர்ஸ் படத்துல நடிக்கிறேன்.. உங்ககிட்ட வாங்கின அட்வான்ஸுக்கு வேணுன்னா 2067வது வருஷம் வந்து கதை சொல்லுங்களேன்!மொத்தத்தில்...


முதலீடு ஒரே இடத்தில் குவிந்திருக்கிறது..

அய்யா கார்ல் மார்க்ஸ் !  நீர் ஒரு தீர்க்க தரிசி!

கடைசிக்கொசுறு:  இன்றைய சன் டிவி டாப் டென்னில் புதிய வரவாக எல்லா தீபாவளி ரிலீஸ் படங்களும் காட்டப்பட்டன. ‘மைனா’ ,  ‘வ’ குவாட்டர் கட்டிங் தவிர! - அப்ப, குடும்பத்தில் இன்னும் சிக்கல் தீரலையா???  

Comments

 1. என்ன கொடுமை சார் இது?

  ReplyDelete
 2. //ஒட்டணும்.. சுவரெல்லாம் சுண்ணாம்படிச்சு வைங்க!
  //

  இது ஹைலைட்டு மாமு:)))


  ஹலோ மிஸ்டர் சுரேகா, சன்பிக்சர்ஸில் இருந்து பேசுறோம் மன்னாரன் புரோடெக்சனில் ஒரு கதை சொல்லியிருந்திங்களாம் அதை நாம ரஜினி கமல் வெச்சி செஞ்சிடலாம் நாளை காலை சூட்டிங் ஆரம்பிசிடுங்க...உங்க அக்கவுண்டில் 10கோடி போட்டாச்சு இது உங்களுக்கு அட்வான்ஸ் மட்டும் தான் என்று சொன்னால் செய்வீங்க சுரேகா?

  ReplyDelete
 3. சுரேகா! இதானே பல பேரு ‘கரடியா’ இங்கே கத்திக்கிட்டு இருக்காங்க. இந்த மாதிரியான மானோபாலி ரொம்பச் சீக்கிரம் சிறு மக்களை (இந்தத் துறையில) முழுங்கிடும்னு.

  இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா புரிந்து கொள்ள ஆரம்பிச்சிருக்கோம்.

  இதுக்கு பெரிய பெரிய நடிகர்களே விலை போறதுதான் பெரிய உருத்தலா இருக்கு. அதுக்கு சூப்பர் ஸ்டாரே பலிகிடாய் ஆனதும், இவரே இந்த சூதாட்டத்திற்கு ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டதுமாகியிருக்கிறது.

  அதுதானோ, ‘நான் ஒரு சூழ்நிலைக் கைதி’ என்ற வாசகம் அவரிடமிருந்து. This does not look like a healthy trend for the cine industry either, corporatesizing.

  அதே துறையில் நீ இருந்து கொண்டு இதனைப் பற்றி எழுதியிருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.

  ReplyDelete
 4. என்ன கொடுமை சஞ்சய்?

  ReplyDelete
 5. அய்யோ! இதுக்காகத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன் சார்! அந்த எந்திர அரசியல் கட்டுரை நான் எழுதலை! இன்னொருத்தர் எழுதி என் பதிவுல போட்டுட்டார். மத்தபடி அட்வான்ஸ்க்கு நன்றி! மிச்சம் 90 கோடியும் போட்டுட்டா உடனே படத்தை ஆரம்பிச்சுடலாம் சார்!ன்னு தடால்ன்னு கால்ல விழுந்துறவேண்டியதுதான்! :)

  சரிதானே குசும்பரே! :)

  அதில் 80 கோடிக்கு சின்னப்படங்களை வாங்கி ரிலீஸ் பண்ணுவேன்... இது என் டச்!

  ReplyDelete
 6. வாங்க தெகா அண்ணா!

  உண்மையச்சொல்லுறேன்.. இதுக்கு எந்தத்துறையில் இருந்தால் என்ன?

  உங்க அன்புக்கு மிக்க நன்றி அண்ணா!!

  ReplyDelete
 7. வியாபாரி எப்பவுமே வியாபாரதனமாதான் சிந்திப்பான். sentiment எப்பவுமே அவனுக்கு கிடையாது. இதுல ரஜினி வேற வழியில்லாம, இந்த அளவுக்கு பட்ஜெட்ல யாராலையும் செய்ய முடியாதுன்னு போய் கர்ணன் மாதிரி ஆயிட்டார்.

  ReplyDelete
 8. வாங்க விக்கி உலகம்!

  ஆமாங்க! இதில் ரஜினிமேல் தவறிருப்பதாகத் தெரியவில்லை!

  சன்னின் காத்துக்கொள்ளும் ஆசையைத்தான் சொன்னேன். ஆம்..வியாபாரிகள்தான் என்பதைச் சொன்னேன்.

  நன்றி!

  ReplyDelete
 9. //அதில் 80 கோடிக்கு சின்னப்படங்களை வாங்கி ரிலீஸ் பண்ணுவேன்... இது என் டச்!
  //

  அப்ப 80கோடி மக்களிடம் என் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை ரிலீஸ் செய்யப்போறீங்க அப்படிதானே?

  ReplyDelete
 10. Anbulla sureka, idhula indha kathaiya vera erkanave en naavalla velivanthathunnu oru eluthaalar case podraru... poonai kaluthila yaar mani katturathu sureka.

  ReplyDelete
 11. குசும்பன் படமா இருந்தா உலகம் முழுக்க குடுப்பேனே!! :)

  ReplyDelete
 12. வாங்க தேவா! ஆமா.. அதுவேற இருக்கு!!

  நன்றிங்க!

  ReplyDelete
 13. ஆகா ஆகா - எல்லாமே நல்லா இருக்கு - நன்று - கார்ல் மாக்ஸ் சொன்னது நடக்குது - என்ன செய்வது - ம்ம்ம்ம்ம் - கடசியா சிக்கல் சூப்பர் டச் -குசும்பன் படமா - உலகத்துக்கே டிச்ட்ரிபூஷனா - பலே பலே

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தசாவதாரம் - விமர்சனம் !

நித்யானந்தாவும், நானும்..!

அகவை 70ல் அப்பா!