சத்தியமாகக் கடவுளைப்பார்த்தேன்.!







பயணங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை ! கவனம் கவர்பவை! 
எனக்கு எவ்வளவோ கற்றுக்கொடுத்திருக்கின்றன எனக்கான பயணங்கள் ! ஆகவே ஒவ்வொரு பயணத்திலும் என் விழிப்புணர்வு (தூங்காதபோது) கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்!

அது ஒரு குறுகிய தூரப் பேருந்துப் பயணம். பேருந்தில் உட்கார இடம் கிடைப்பது, அதுவும் நாமே தேர்ந்தெடுக்கும் வகையில் கிடைப்பது ஒரு மகிழ்வான அனுபவம். கொஞ்சம் குழப்பமானதும் கூட..! நாம் தேர்ந்தெடுத்த இருக்கையை விட இன்னும் கொஞ்சம் நல்ல இருக்கை பக்கத்தில் இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றும்..! கூட்டமாக இருந்தால் குழப்பமே இல்லை. எந்த இருக்கை கிடைக்கிறதோ அதுதான் சொர்க்கம்! எப்போதுமே எந்த அவசரமாக இருந்தாலும், நின்றுகொண்டு பேருந்துப்பயணம் செய்வதில், எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை!

அப்படி ஒரு குழப்பம் ஏற்படாதவகையில் -சொர்க்கமாக - மூன்று பேர் அமரும் இருக்கையின் உள் ஓர இடம் எனக்குக்கிடைத்தது. மெதுவாக கூட்டம் சேர ஆரம்பித்து, பேருந்தும் நகர ஆரம்பித்தது.
வழக்கம்போல் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கியும் போனேன்.

ஒரு குலுக்கலில் , கண்விழித்தபோது கூட்டத்தில் நெருக்கிக்கொண்டு ஒரு பத்து வயதுச்சிறுவனும், அவன் இடுப்பில் மூன்றுவயதுச்சிறுவனும் இருந்தார்கள். அந்தப்பத்துவயதுச்சிறுவன் நல்ல கறுப்பாக, ஒரு பச்சை நிற பள்ளி பெயரிட்ட பனியனும், வறுமையைப்பறைசாற்றும் ஒரு ஜீன்ஸும் அணிந்திருந்தான். குட்டிச்சிறுவன் இன்னும் கறுப்பாக, ஆனால் அழகாக, ஒரு வெள்ளை டிராயரும், இரண்டு மேல் பொத்தான்கள் இல்லாத சட்டையும் அணிந்திருந்தான். இதுதவிர பெரியவனின் இன்னொரு கையில் ஒரு ஜவுளிக்கடையின் அழுக்கேறிய கட்டைப்பை இருந்தது. இவர்கள், தன் உடல்நலமில்லாத தாயுடன் வந்திருந்தார்கள். தாய் என் அருகில் நின்றிருந்தாள். சிறுவன் எனக்கு முன் இருக்கையின் அருகில் நின்றுகொண்டிருந்தான். 

அப்போதுதான் எனக்கு முன் இருக்கைப்பயணியை கவனித்தேன். 
அவள் ஒரு கல்லூரி மாணவி, சுடிதார் அணிந்துகொண்டு, ஒரு சிறு பையை வைத்துக்கொண்டு, காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இருந்தாள். அது செல்போனாக இருக்கலாம், ஐ பாடாகவும் இருக்கலாம்!

இப்போது அந்த பெரிய சிறுவன் கூறினான்..

டேய்! தம்பி! வழுக்குதுடா..!

டேய் தம்பி! வலிக்குதுடா ..!

அவன் வயதுக்கு அந்தக்குட்டிச்சிறுவனை தூக்கி வைத்துக்கொண்டு ஓடும்,-நம்மூர் சாலையில் ஆடும்- பேருந்தில் நிற்பது என்பது கொஞ்சம் கடினம்தான்.! இதை நான் நினைத்துக்கொண்டிருக்கும்போதே...
அவன் அந்தப்பெண்ணிடம்..

அக்கா! தம்பியை உக்கார வைச்சுக்கிறீங்களா? -என்று கேட்க,

ஹெட்போனை காதிலிருந்து எடுத்து அவன் சொன்னதை மறுபடியும் கேட்டு, பின்னர் ஆக்ரோஷமாக மறுத்தாள்..அவளது முழு முக அசைவும் தெரியாவிடினும், திரும்பிச்சுளித்ததை தெளிவாக கவனித்தேன். என்ன பொண்ணு இவள்!? ஒரு சின்னப்பையன் இப்படிக்கேட்கிறான். கூப்பிட்டு வைத்துக்கொள்ளாமல் , பெரிய அலம்பல் பண்ணுகிறாளே? என்று வருந்தினேன்.

எனக்கென்னமோ குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரிப் பார்க்கத்தோன்றும். ஆகவே , அவள் மறுத்த மறுவினாடி, என்கிட்ட குடுடா..என்று கேட்டு வாங்கினேன். சில நெருக்கல்களுக்குப்பிறகு, அந்த வானமே எல்லை அழகன், என் மடிக்கு வந்தான். ஆனால் அவனுக்கு என்னைப்பிடிக்கவில்லை. சிறிது முறைத்துக்கொண்டு, அண்ணனிடம் மழலையில் பேசிக்கொண்டே வந்தான். அம்மாவிடம் குடும்ப நிலைமைகள் பற்றியும், பள்ளியில் கேட்ட கட்டணம் பற்றியும் முதிர்ந்த மனிதனாக அந்த பத்துவயதுப்பையன் பேசிக்கொண்டு வந்தான். 

நான் இறங்கவேண்டிய நிறுத்தத்துக்கு இரண்டு நிறுத்தம் முன்னால் வண்டி வந்தபோது, அடுத்த நிறுத்தத்தில் இறங்க என் முன்னிருக்கை கல்லூரிமாணவி வேகமாக எழுந்தாள்....

டர்ர்ர்ர் !

அவள் அணிந்திருந்த சுடிதாரின் கீழ்ப்பகுதி (கால்சட்டை) மேலிருந்து கீழாக தொடைப்பகுதியில் ஒரு அடி நீளத்துக்கு கிழிந்துவிட்டது. அப்படியே அவளது தொடை மற்றும் உள்ளாடை பளீரெனத்தெரிந்தது. ஒரு வினாடி அவளுக்குத்தன் உடை கிழிந்தது தெரியவில்லை. நான் நேர் பின்னால் என்பதால் உடனே பார்த்துவிட்டேன். அவள் மானம் போவதை எண்ணிப்பதறுவதை மீறி, கடவுள் இருக்கான்ப்பா! ஒரு குழந்தையை வச்சுக்க மாட்டேன்ன்னு சொன்னவளுக்கு உடனே கூலி குடுத்துட்டான் என்று ஒரு சாத்தான் குரல் எனக்குள் ஓடியது.அவளுக்கு அருகில் இருந்த பெண் 'அய்யய்யோ! சுத்தமா கிழிஞ்சிருச்சுப்பா!' என்றாள். இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் நிறுத்தம் வந்துவிட்டது.

அந்தப்பத்துவயதுக்காரனும் பார்த்துக்கொண்டிருந்தான்.
படீரென்று தன் கட்டைப்பையைத்திறந்தான்.
ஒரு சிகப்புத்துண்டை எடுத்தான்! அவள் இடுப்பில் ஒருபக்கமாக சுற்றி, அவள் கையில் திணித்தான்.
அக்கா! ஸ்டாப்பிங் வந்துருச்சு ! எறங்குக்கா! கவலப்படாம போக்கா!
அவள் விழிகள் என்ன சொன்னதென்று எனக்குப்படிக்க முடியவில்லை!

நான் அவனையே கண்ணீர் முட்டப்பார்த்துக்கொண்டிருந்தேன்..

Comments

  1. அருமையான நிகழ்வை பதிந்திருக்கின்றீர்கள். மனிதர்களின் அழகு அவர்களின் செயல்களில்தான் இருக்கிறது.

    ReplyDelete
  2. மனிதாபிமானம் இறக்கும்போது கடவுள் அதற்கு மறுபடியும் உயிர் கொடுப்பார்

    ReplyDelete
  3. நல்லதொரு காட்சி - பகிர்வினிற்கு நன்றி - பல தடவை இது மாதிரி நடக்கிறது - இன்னும் வறுமையிலும் சிறு வயதினரிடமும் மனிதாபிமானம் இருக்கிறது.

    ReplyDelete
  4. வாங்க சுல்தான் அண்ணே!

    மிக்க நன்றிங்க! ஆமாம்..!

    ReplyDelete
  5. வாங்க ஸ்மைல்ஸ்ஸ்!

    ஆம்.. சரிதான்!

    ReplyDelete
  6. வாங்க சீனா சார்...

    ஆமாம்..! கண்டிப்பா சிறுவர்களிடம் இருக்கும் மனிதாபிமானம் வயதானபின் நம்மிடம் தொலைந்துவிடுகிறது.!

    ReplyDelete
  7. சுரேகா,

    நலமா? பதிவு சினிமா மாதிரி இருக்கிறது. கதையா அல்லது சொந்த அனுபவமா? இப்போதெல்லாம் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் அடிப்படை மனிதாபிமானம் மிக்கவர்களாகவே இருக்கிறார்கள் என்பது என்னுடைய அனுமானம்.

    ReplyDelete
  8. nalla pathivu

    nellai p nadesan
    dubai

    ReplyDelete
  9. வாங்க அமரபாரதி!

    அனுபவம் தலைவா! உண்மையில் நடந்தது...!

    ReplyDelete
  10. வாங்க நடேசன் அண்ணாச்சி!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  11. உண்மைதான். கடவுள் இருக்கிறார். நம் எப்போதும் உடன் இருக்கிறார். நமக்குத்தான் தெரிவதில்லை. இனி அந்தப் பெண் உணர்ந்து கொள்வாள்..!

    ReplyDelete
  12. நானும் இப்பொழுது கடவுளை பார்த்தேன்..இந்த பதிவை படித்ததன் மூலமாகவும்....அருமை..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!