கீசக வதம்
மெரினா காந்தி சிலையில் நடந்த ஒரு பதிவர்
சந்திப்பில் அறிமுகமானவர்தான் அந்தப் பதிவர். அந்தச் சந்திப்புக்குப் பிறகு சில நாட்களில்
என்னைத் தொடர்புகொண்டார். திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வம் காரணமாக,, திரையுலக நடிப்பு
வாய்ப்புகள் பற்றிக் கேட்டார். பேசிக்கொண்டிருந்தோம். நல்ல திறமைசாலியாகத் தெரிந்தது. அடிக்கடி சந்தித்தோம். பல்வேறு விஷயங்களில் தெளிவு நிறைந்தவராகத் தெரிந்தார்.
சினிமாவில் நடிக்கவேண்டும் என்று சும்மா
சொல்லிக்கொண்டிராமல், உண்மையான அக்கறை இருந்ததால், கூத்துப்பட்டறையிலிருந்து வெளிவந்த
தேவி அவர்கள் நடத்தும், ‘தி விருக்ஷா ‘ என்ற நடிப்புப் பட்டறையில் பயிற்சி எடுத்துவருவதாகச்
சொன்னார். மகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் பட்டறையின் படைப்பாக ‘கீசக வதம்’ எனும் கூத்தில்
தானும் நடித்திருப்பதாகச் சொன்னார். 17ம் தேதி (நேற்று) மாலை , அதன் அரங்கேற்றம் என்று
அழைத்தார். என் பங்குக்கு திரு.லிவிங்ஸ்டன் அவர்களை அழைத்தேன். அவரும் வந்தார்.
சாலிக்கிராமம், எம்.ஜி.ஆர். ஜானகி பள்ளி
வளாகத்தில் திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டு, வித்தியாசமான ஒளி அமைப்புடன் கூத்துக்குத்
தயாராக இருந்தது.
சரியாக 7:15க்கு கீசக வதம் கூத்து ஆரம்பமானது.
பாண்டவர்கள், 13 ஆண்டு வனவாசத்தில், கடைசி
ஒரு ஆண்டை அஞ்ஞாத வாசம் எனப்படும் , அடையாளம் தெரியாமல் மறைந்துவாழும் வாழ்க்கையைத்
தொடங்குகிறார்கள். விராட நாட்டு மன்னரிடம் வந்து கூத்தாடிகளாக அறிமுகப்படுத்திக்கொண்டு,
வெவ்வேறு வேலைகளில் அமர்கிறார்கள். விராட மன்னனின் மச்சினன் (மனைவியின் தம்பி) கீசகன்.
அவன் வருணனையே கட்டுப்படுத்தும் சூரன். அவனுக்கு சைரேந்திரி என்ற பெயரில் வந்திருக்கும்
திரௌபதியின்மேல் மோகம்.! தன்னை அடைய முயற்சிக்கும் அவனிடமிருந்து காக்கும்படி – சமையற்காரனாக
வாழும் – பீமனிடம் அவள் கேட்க, அவன் கீசகனை தந்திரமாக வரவழைத்து வதம் செய்கிறான்.
இந்தக் கதையை எடுத்துக்கொண்டு மிக இயல்பாக
, தேர்ந்த நடிகர்களுடன் ஒரு மணிநேரம் மிகச்சிறப்பாக
நடித்துக்காட்டினார்கள்.
தருமர் (பிரதீப்) தான் கதைசொல்ல ஆரம்பிக்கிறார்.
தங்கள் நிலையை எடுத்துரைக்கிறார். தன் கூட்டத்தை கூத்தாடிகள் என அறிமுகப்படுத்துகிறார். விராட மன்னனிடம் வேலை கேட்கிறார். மன்னனுடன்
விளையாட்டுக்குச் சூதாடுகிறார். நிறைய விபரங்கள் பேசுகிறார். பிரச்னைகளின்போது மட்டும்
வாயை மூடி மன்மோகனாய் இருக்கிறார். மது அருந்திவிட்டு சௌமியனுடன் கட்டி உருள்கிறார்.
சைரேந்திரியை கீசகன் சீண்டுகிறான் என்று தெரிந்து, உள்ளம் குமுறி கூத்தாடிகள் நிலைபற்றி
ஒரு பாடல் பாடுகிறார். இந்தப்பாடலை எழுதியதும் ப்ரதீப் தான் என்பது கூத்து முடிந்தபின்தான்
எனக்குத் தெரியவந்தது. தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்து, வசனங்களின் ஏற்ற இறக்கங்களில்
சரியாகப் பயணித்து கைதட்டல் பெறுகிறார். மது அருந்திவிட்டு, சௌமியனுடன் பேசும் மொழியைக்
கண்டு நானும்,லிவிங்ஸ்டன் அவர்களும் மனம் விட்டுச் சிரித்தோம். கூத்தாடிகளின் வாழ்வுபற்றிப்
பாடிய பாடலின் முடிவில் எனக்குக் கண்ணில் நீர் வழிந்தது. தென்றல் படத்தின் ‘தாண்டவக்கோனே’
பாடலின் கடைசிவரிகளில் ஏற்படும் அதே உணர்வு எழுந்தது. உயரம் தொட வாழ்த்துக்கள் ப்ரதீப்.!
சுல்தான், வல்லன்(பீமன்) எனப்படும் சமையற்காரனாகவும்,
விராட மன்னனின் மனைவி அரசி சுதர்சனையாகவும் வருகிறார். அரசியாக வரும்போது அந்த நெளிவுகளும்,
ஒரு பெண்ணின் பொறாமையை உடல்மொழியில் காட்டியும் பிரமாதப் படுத்துகிறார். மன்னனுக்கு
மது ஊற்றிக்கொடுக்கும் வல்லனாக வரும்பொழுது அப்படி ஒரு மாற்றம். கூத்தின் பாதி வரை,
அவர்தன் இரு வேடங்களும் செய்கிறார் என்று திரு.லிவிங்ஸ்டனே கண்டுபிடிக்கவில்லை. அந்த
அளவுக்கு வேறுபாட்டைக் காட்டியிருக்கிறார். கீசகனை வதம் செய்யும்போது உண்மையிலேயே அவரை
ஏதாவது செய்துவிடுவாரோ என்று அஞ்சுமளவுக்கு ஆவேசம் காட்டுகிறார்.
டாக்டர். ரஞ்சித் பிரகனளை (அர்ஜுனன்) எனப்படும்
திருநங்கையாக வருகிறார். விராட மன்னனைச் சூடேற்றுகிறார். தன்னுடைய நெளிவு சுளிவுகளால்
, பின்னுகிறார். விக் வைத்திருந்தால் பெண் என்றே கூட்டம் நம்பிவிடும்.
நகுலன் , சகாதேவனாக முறையே பாலாஜியும், ராஜ்குமாரும்
நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை. ஆனால் பாலாஜி சூரியக்குஞ்சு
எனும் பாத்திரத்தில் வந்து ஒரு ஆட்டம் ஆடிவிட்டுப் போகிறார்.
சைரேந்திரியாக வைஷாலி என்ற ஆந்திரப்பெண்ணை
நடிக்கவைத்திருக்கிறார்கள். பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். பூப்பறிக்கும் காட்சியில்
பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஆனால், எல்லோரும் நல்ல தமிழ் பேசி நடிக்கும்போது, அவரது
தமிழ் மட்டும் கொஞ்சம் உறுத்துகிறது.
சௌமியராக வரும் சுரேஷ், பின்னியிருக்கிறார்
மனிதர்.. அவரது நடிப்பு ஒரு தேர்ந்த நகைச்சுவை நடிகருக்கான அத்துணை கூறுகளையும் கொண்டிருக்கிறது. அவ்வளவு பெரிய உடம்பை வைத்துக்கொண்டு அவர் அடிக்கும் குட்டிக்கரணங்கள் ஆச்சர்யப்படுத்துகின்றன.
கீசகனாக வரும் ராம்குமாரிடம் பசுபதியின்
அங்க அசைவுகள் தெரிகிறது. கீசகனாகவே வாழ்கிறார். சைரேந்திரியை மோப்பம் பிடிக்கும்போதும்..போதையில் புலம்பும்போதும் … சிறப்பாகச் செய்திருக்கிறார்.
விராட மன்னனாக நீல் ஆனந்த் , உணர்ந்து நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் திடீரென்று தலைப்பாகை கட்டிக்கொண்டு வந்து சிலம்பம் சுழற்றுகிறார். அரசனாக, மது அருந்தும் காட்சியிலும், பிரகணளையிடம் வழியும் காட்சியிலும் பிரமாதம்.!
அரசியின் தோழியாக விஜயா, உதட்டசைவை வைத்து,
பேசுவதைச் சொல்லும் காட்சியில் அங்கதம் நன்றாக இருக்கிறது.
காவலாளியாக புருஷோத்தமன் , ஆரம்பக்காட்சியில்
அவர் தனது நகைச்சுவை நடிப்பை நன்கு வெளிப்படுத்தி கவனம் கவர்கிறார்.
சரித்திரக்
கூத்துக்களைப் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. தஞ்சையில் இருந்தபோது, மெலட்டூரில் ஒரு முறை ஹிரண்ய வதம் பார்த்தேன். இப்போது கீசக வதம்! கூத்தின் அத்துணை அம்சங்களும் குறையாமல்,
அதே சமயம் சில இடங்களில் நவீன நாடக அம்சங்களையும் கோர்த்து, அரங்கப் பொருட்களில் ஒன்றாக
மைதானத்திலுள்ள மாமரம் ஒன்றைப் பயன்படுத்தி , ஒரு நல்ல கூத்தினை அளித்திருக்கிறார்கள்
டி விருக்ஷா குழுவினர்.!
எழுத்து
- கூத்துப்பட்டறை திரு.முத்துச்சாமி
வடிவமைப்பு
– திரு.ஆனந்தக் கண்ணன்
இயக்கம்
– செல்வி. G. தேவி
இந்தக்கூத்தில் சிறப்பாக நடித்திருந்து, என்னையும் அழைத்த அந்தப் பதிவர்தான் தருமராக நடித்திருந்த...
Thanks for your presence(+ Guest), wonderful and detailed comments Surekaa! This will really help our team, i will read this to them :-)
ReplyDeleteஅட! நம்ம ப்ரதீப்பா!!!!!
ReplyDeleteஇனிய பாராட்டுகள்.
அன்பின் சுரேகா - அருமையான் விமர்சனம் - ஆழ்ந்து நோக்கி - மனதில் முழுவதும் உள்வாங்கி - ஒவ்வொரு காட்சியினையும் அழகான் முறையில் விவரித்தது நன்று. நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி ப்ரதீப்! இதில் என்ன இருக்கிறது? வளர வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க துளசி டீச்சர்!
ReplyDeleteஆமா. நம்ம ப்ரதீப்பே தான்!
வாங்க சீனா சார்!
ReplyDeleteஅன்புக்கு நன்றி!