ஆட்டோ மீட்டர் - கேட்டால் கிடைக்கும்






குற்றாலத்திலிருந்து தனியார் பேருந்தில் வந்து, சென்னை வடபழனியில் இறங்கும்போது காலை 6:20 ஆகியிருந்தது.

     கதவு திறந்தவுடன் வரவேற்கக் காத்திருந்தவர்கள்போல், ஆட்டோ டிரைவர்களின் கூட்டம் மொய்த்தது. இறங்கி,

விருகம்பாக்கம் போகணும். ஆனா மீட்டர் போட்டாத்தான் வருவேன்

என்று நான் சொல்லி , நாக்கை மடித்து உள்ளே வைப்பதற்குள் கூட்டம் காலி…!! என்னை விட்டுவிட்டு அடுத்த பயணியைத் தேடிச் சென்றுவிட்டார்கள்.

நான் விடவில்லை. அந்த வரிசையில் இருந்த சுமார் 15 ஆட்டோக்களிலும் வரிசையாகக் கேட்டேன். அனைவரது பதில்களும் இப்படி இருந்தன..

100 ரூபா ஆகும் சார்!

டேய்! சாருக்கு மீட்டர் போடணுமாம்.

வராது சார்!

என் மீட்டர் ரிப்பேர்.

சார் மீட்டர் போட்டாத்தான் வருவாராம்..நீ போறியா?

இப்போ இன்னாத்துக்கு சார் மீட்டரு 60 ரூவா வரும். 10 ரூபா சேத்து 75(!) ஆ குடுத்துருங்க!

மீட்டரெல்லாம் சும்மா சார்… அதெல்லாம் கட்டுப்படியாவாது.

பேப்பர்ல படிச்சுட்டு வராதீங்க சார்! சென்னைல எங்கயும் மீட்டர் போடுறதில்லை.

மீட்டர் போடுறேன். ஆனா, 80 ரூவா தரியா?

பக்கத்து ஏரியாக்கெல்லாம் மீட்டர் போடமுடியாது சார்!

கம்ப்ளெயிண்ட் செய்யலாமா என்று கேட்டதற்கும்.. பண்ணிக்க சார்! என்று அடாவடியாக ஒருவர் லந்தடித்தார்.

     வடபழனி போலீஸ் ஸ்டேஷன் பக்கம் திரும்பி நடந்தால், அங்கு ஷேர் ஆட்டோ கிடைக்கும். 10 ரூபாய்க்கு சென்று சேர்ந்துவிடலாம். ஆனால், என்னால் அப்படிச் செல்ல முடியவில்லை. நேராக வடபழனி காவல் நிலையம் சென்றேன். வாசலிலேயே ஒரு பேட்ரல் வண்டியில் ஒரு போக்குவரத்துக் காவலரும், சார்ஜெண்ட்டும் இருந்தார்கள். அவர்களிடம் சென்று விபரம் சொன்னேன்.

     உடனே இறங்கினார்கள். சார்ஜெண்ட் என்னிடம் வந்தார்.

“சார்.. நீங்க மறுபடியும் போய் மீட்டர் போடச்சொல்லுங்க…மாட்டேன்னு சொன்னான்னா , சரின்னு ஒத்துக்கிட்டு ஆட்டோவில் ஏறி இந்தப்பக்கம் வாங்க பிடிச்சுக்கிறேன். என்றார்.

அந்த வரிசையில் இருக்கும் எல்லா ஆட்டோவும் இதே தப்பைத்தான் செய்யுறாங்க … கேள்வியே வேண்டாம் எல்லாரையுமே பிடிக்கலாம் என்றேன்.

இருந்தாலும், நீங்க கையும் களவுமா பிடிச்சாத்தான் சார் நாங்க கேஸ் போடமுடியும் என்றார். சரி என்று ஒத்துக்கொண்டு, நானும், மீண்டும் அந்தச் சாலையில் நடந்தேன்.

ஏற்கனவே என்னிடம் தெனாவெட்டாக பதில் சொன்ன ஒரு டிரைவரிடம் சென்று, மீட்டர் போட்டு, விருகம்பாக்கத்துக்கு வரீங்களா என்றேன்.
அதற்கு..அந்த இளைஞன்.

இன்னா சார்.. யாருமே மீட்டர் போடலையா? அதான் சொன்னேன்ல.. சரி 100ரூபா குடுங்க.. மீட்டரெல்லாம் ஓடாது . என் மீட்டர் ரிப்பேர் என்றான்.

நான் அவன் கையைப் பிடித்துக்கொண்டேன். சார்ஜெண்ட் கூப்பிடு தூரத்தில் நின்று கொண்டிருந்தார்.

ஸார்…………..வாங்க! என்று கத்தினேன்.

அவர் அருகில் வரவும், மீட்டர் ரிப்பேராம். ரிப்பேரான மீட்டருடன் வண்டியை ஓட்டிக்கிட்டிருக்கார் . பாருங்க ! என்றேன்.

அதை அந்த இளைஞன் எதிர்பார்க்கவில்லை.

சார்ஜெண்ட்டும் விரைந்து வந்து, கூடவே வந்த காவலரிடம்..
இவனை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப்போங்க என்று சொல்லி, அவனிடமிருந்து ஆட்டோ சாவியை வாங்கினார்.

அதற்குள் ஆறேழு ஆட்டோ ஓட்டுனர்கள் கூடிவிட்டனர்.

சார்ஜெண்ட் சொன்னார்.

என்னய்யா.. ஒருத்தனும் மீட்டர் போட்டு ஓட்டமாட்டேங்கிறீங்களாம்..!! சார் வந்து கம்ப்ளெய்ண்ட் பண்றாரு!

என்கிட்ட கேக்கலையே சார்! நான் மீட்டர் போட்டு ஓட்டுவேனே என்று கூசாமல் பொய் சொன்னார் ஒருவர்.

நான் பிடித்துக்கொண்டேன்.
அப்படியா…? உடனே வாங்க ..மீட்டர் போடுங்க..விருகம்பாக்கம் போகணும். என்று சொல்லிக்கொண்டே அவரது ஆட்டோவில் எனது லக்கேஜை வைத்தேன்.

ஆனால், ஆட்டோவில் ஏறுவதற்கு முன்.. அங்கு வந்து நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கிய ஒரு தம்பதி மற்றும் சிலரிடம் சத்தமாகச் சொன்னேன்.

இங்க உள்ள ஆட்டோ எல்லாருமே நல்லவங்க…மீட்டர் போட்டுத்தான் ஓட்டுவாங்க.. எல்லாரும் ஏறிக்கிங்க…பேரமே பேசவேண்டாம்.என்று சொல்லி மூன்றுபேரை ஏற்றிவிட்டேன்.

சார்ஜெண்ட்டை நோக்கி மற்ற ஆட்டோக்காரர்கள் வந்தார்கள். அவர் அவர்களைத் திட்டிக்கொண்டிருந்தார். “ஏண்டா இப்படி பப்ளிக்கிட்ட அநியாயம் பண்றீங்க?”

நான், லக்கேஜை வைத்த ஆட்டோவில் ஏறி, ஆட்டோவை எடுக்கச் சொன்னேன்.

ஆட்டோ 20 அடி நகர்ந்திருக்கும். போக்குவரத்துக் காவலர்.. நான் முதலில் பிடித்துக்கொடுத்த இளைஞனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

“காலங்காத்தால மீட்டர் போடலைன்னு வந்து எங்க உயிரை எடுக்குறான்” என்றார்.

உடனே ஆட்டோவிலிருந்து இறங்கி.. அவரை நோக்கிச் சென்றேன்.

யாரு சார் உங்க உயிரை எடுத்தது? போலீஸ் ஸ்டேஷன் பக்கத்துலேயே இருந்துக்கிட்டு தைரியமா மீட்டர் போடாம அடாவடி பண்றாங்கன்னா நீங்கதான் பப்ளிக் உயிரை எடுக்கிறீங்க..  இந்த அநியாயத்துக்கு நீங்கதான் காரணம்.. உங்களை வந்து பாத்த எனக்கு..உங்க உயரதிகாரியப் பாக்க எவ்வளவு நேரமாகும்? போய்ப் பாக்கவா? தட்டிக்கேக்க நேரம் ஒதுக்காத ஆள் நான் கிடையாது. இப்போ நீங்களும் சேந்து மாட்டுறீங்க! என்றேன். கடைசியாக என் ஊடக அடையாளத்தையும் சொன்னேன்.

அதிர்ந்தார்..

“சார் அதான் எங்கயோ பாத்தமாதிரி இருக்கேன்னு நினைச்சேன் என்று வழிந்துவிட்டு.....சார்! நான் உங்களைச் சொல்லலை .. டிரைவரைத்தான் சொன்னேன். பிரச்னையை பெருசு பண்ணாதீங்க சார்! என்று சொல்லி நான் ஏறிய ஆட்டோ டிரைவரிடம்..


சாரை பத்திரமா விட்டுட்டு வாய்யா ! என்று சொல்லி என்னை அனுப்ப யத்தனித்தார்.

இந்த ஸ்டாண்டில் யார் வந்து இறங்கினாலும், ஆட்டோவில் மீட்டர் போட வைங்க சார்! அப்போதான் கவர்மெண்ட்டுல வாங்குற சம்பளம் ஒட்டும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

அதுவரை இறங்கிய பயணிகளாகட்டும்.. அந்தப்பக்கம் ஆட்டோவில் பேரம்பேசி ஏறிக்கொண்டிருந்தவர்களாகட்டும்.. ஒருவராவது கவனிக்கவேண்டுமே… ம்ஹூம்..


தட்டிக் கேட்காதவரை எந்த டேஷையும் யாராலும் சரிசெய்யமுடியாது என்பதை உணர்ந்த பிறகு…இந்தியாவை புரட்டுவது பற்றிப் பேசலாம்.



Comments

  1. சார்ஜன்ட் சொன்னது எதிர்பாராதது.... ஏதோ நீங்க ஊடகம் என்னும் அடையாளத்தைக் காட்டி பேசிட்டீங்க.... எங்களை மாதிரி சாமானியன் போலீஸ் உயர் அதிகாரியைப் பாக்கறேன்னு சொன்னா என்ன ஆகும்?

    ReplyDelete
  2. ம்ஹூம்... எதுவென்றாலும் ஒட்டுவது சிரமம் தான்...

    ReplyDelete
  3. Well done திரு சுரேகா அவர்களே! வாழ்த்துக்கள்! நானும் மீட்டர் போட சொல்லித்தான் பயணிக்கிறேன். உங்களைப்போல் எல்லோரும் இருக்கவேண்டும் என்பதே என் ஆசை.

    ReplyDelete
  4. சுரேகாஜி,

    நல்ல முயற்சி,பாராட்டுக்கள்!

    ஹி..ஹி,நமக்கும் ஊடகத்தில ஒரு வேலைப்போட்டுக்கொடுத்திங்கன்னா, இதே போல பலரையும் மாட்டி விடுவேன் அவ்வ்!

    #//சாரை பத்திரமா விட்டுட்டு வாய்யா ! என்று சொல்லி என்னை அனுப்ப யத்தனித்தார்.//

    இப்படி சாமானியனுக்கு சொல்லி இருக்க மாட்டாங்க, மேலும் ஆட்டோ ஓட்டுனர் வழியில் சண்டைப்போடுவான்னு பயந்துக்கிட்டே இருக்கும் நிலைக்கும் ஆளாக நேரிடும்.

    ஒரு முறை ரொம்ப கடுமையாக பேரம் பேசி ஆட்டோவில் வந்தேன்,புள்ளையார் கோயில் அருகில் என சொன்னதால் சரியா கோயில் கிட்டே நிறுத்திட்டு இங்கே தானே சொன்னிங்க இறங்குனு சொல்லுறான், அதே தெருவில் கடைசியில் வீடு , ஆனால் அவன் கேட்ட காசு கொடுக்கலைனு இப்படி ரூல்ஸ் பேசுறான் ,நைட் 11 மணிக்கு என்னத்த சொல்ல,சரி போடானு இறங்கி நடந்தாச்சு அவ்வ்!

    இதை விட ஏர் போர்ட்ல இருக்க பிரிபெய்ட் டாக்சி காரங்க அடிக்கிற கூத்து கொடுமையா இருக்கு, அந்த சீட்டுல எந்த ஏரியா எழுதி இருக்கோ அங்கே கொண்டு வந்து நிறுத்திடுறான் அவ்வ்! வீட்டுல கொண்டு விட தனியா காசுக்கேட்கிறாங்க!

    # காவல் துறையில் புகார் கொடுக்க சோம்பேறினு நினைச்சிப்பிங்க, ரெண்டு முறை ஆட்டோ ஓட்டுனர்கள் பத்தி புகார் செய்தும் ,சரி விசாரிக்கிறேன் போங்கனு தான் சொல்லி அனுப்பினாங்க அவ்வ்!

    தாம்பரம் ஷண்முகம் சாலையில் மார்க்கெட் அருகே ஆட்டோ ஸ்டாண்ட், போலீஸ் பூத் ரெண்டுமே இருக்கு ,மீட்டர் போட சொல்லி உத்தரவு வந்த பின்னர் , ஆட்டோவில மீட்டர் போடலைனு ,பூத்தில இருந்த காவலர் கிட்டே சொன்னதுக்கு ,போய் கேளுங்க போடுவாங்கனு சொல்லிட்டு அவர் வேலைய தான் பார்த்தார் அவ்வ்!

    //அதுவரை இறங்கிய பயணிகளாகட்டும்.. அந்தப்பக்கம் ஆட்டோவில் பேரம்பேசி ஏறிக்கொண்டிருந்தவர்களாகட்டும்.. ஒருவராவது கவனிக்கவேண்டுமே… ம்ஹூம்..//

    இதான் எப்பவும் நடக்குது, ஒருத்தன் கூட ஏன் இப்படினு கவலைப்படமாட்டாங்க, போதாக்குறைக்கு நம்மள அட்ஜெஸ்ட் செய்துட்டு போங்கனு சொல்வாங்க அவ்வ்!

    நீங்களாவது ஊடகப்பின்ப்புலம்,நமக்குலாம் அப்படியில்லை,ஆனாலும் புகார் ,வம்புனு ஏகப்பட்டது முயற்சித்துவிட்டு ,சரி போய் தொலையட்டும்னு ,விட்டாச்சு!

    # எங்க பகுதியில இருக்கிற தெரிஞ்ச ஆட்டோ ஓட்டுனர்கள் ஒரே சீரானா கட்டணத்தை தான் வாங்குறாங்க, இத்தினிக்கும் 2-3 வருசமா அதே தொகை தான் ,ஏற்றக்கூட இல்லை.

    ReplyDelete
  5. I have been regularly going only by Auto. I insist on Meter. If they do not I skip that auto wait for the next. But in early morning around 4 - coming by bus - i was helpless. Yet many are not following unless we insist.

    ReplyDelete
  6. தங்கள் வீரத்தை மெச்சி சிரம் தாழ்த்துகிறேன் சுரேகா... உங்கள் பகிர்வு எங்களுக்கு உரம்... ஆம் கேட்டால் கிடைக்கும்...

    ReplyDelete
  7. சாமான்ய மக்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது. காவலர்களே ஒத்துழைக்கும்போது யார் என்ன செய்ய முடியும்? கொஞ்சம் பொருட்களையும் சேர்த்து ஏற்றிக் கொண்டு வர, (ஆபே வண்டி) ஒருமுறை நான் கே கே நகரில் பேரம் பேசிய பிறகு அந்த வரிசையில் எல்லோரும் ஒரே போல முடியாது என்று சொன்னார்கள். போகப் போக முதலில் கேட்ட தொகையை விடவும் கூடக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். 'தட்டிக் கேட்க ஆளில்லேன்னா தம்பி சண்டப் பிரசண்டன்..." தட்டிக் கேட்டாலும் மறுபடி கொஞ்ச நேரத்திலேயே அவர்கள் சண்டைப் ப்ரசண்டர்கள்தான்! :))

    ReplyDelete
  8. 150 ரூபாயும், 180 ரூபாயும் கூசாமல் கேட்டு வாங்கிக் கொண்டிருந்த தூரம் ஒன்றுக்கு ஒருமுறை ஒரு நேர்மையான ஆட்டோக்காரர் வந்து மீட்டருடன் பயணம் செய்ததில் 70 ரூபாய் மீட்டர் காட்டி, அதையும் அவர் ஒன்றும் சொல்லாமல் வாங்கிச் சென்றது சந்தோஷத்தைத் தந்தது.

    ReplyDelete
  9. அருமை. வாழ்த்துகள்.
    உங்கள் பதிவில் Feedburner Widget இணைத்து விடுங்கள். மின்னஞ்சல் பதிந்து விடலாம்.
    எனது மின்னஞ்சல் rathnavel.natarajan@gmail.com
    நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!