வெறும் கணக்கு



விகடனில், எஸ்.ராவின் ‘வெறும் கணக்கு’ சிறுகதை எனக்குள் பல
நினைவலைகளையும், நெகிழ்ச்சியையும் உண்டாக்கிவிட்டது.
பண விஷயத்தில், யாராலும் நம்பப்படாத ஒருவர், தன்னை நம்பிய ஒருவரின் மரணச் செலவை பைசா சுத்தமாக அவரது மகனிடம்
ஒப்படைக்கும் நிகழ்வை இத்தனை அற்புதமாக, நுட்பமாக எழுதி எஸ்.ரா எப்போதும்போல் நம் மனதில் தனக்கான சிம்மாசனத்தை இன்னும் பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்தக் காலகட்டத்தில், எத்தனை பேர் அன்றாடச் செலவுகளை பைசா சுத்தமாக கணக்கு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பெரும்பாலும் எழுதி எக்ஸலில் பதிவு செய்துவிடுவேன். அது பல விதங்களில் உதவியிருக்கிறது. அதனை நான் சந்திக்கும், பயிற்றுவிக்கும் அனைவருக்கும் சொல்லி வருகிறேன்.
ஏனெனில் செலவில் நமக்கிருக்கும் விழிப்புணர்வே நமது வருமானத்தைப் பற்றிய அறிவை அதிகமாக்கும் என்பது எனது எண்ணம். அதைப் பின்பற்றும் பலரும் கிடைத்த மகிழ்ச்சியையோ, கவன உணர்வையோ பகிர்ந்துகொள்ளும்பொழுது இன்னும் பெருமையாக இருக்கும்.
இந்தக் கணக்கெழுதும் விஷயத்தில் எனது தந்தைதான் எனக்கு
முன்னோடி.எத்தனை அதிக வேலைப்பளு இருந்தாலும், அன்றாட செலவுக்கணக்கை மிகச்சரியாக எழுதிவைத்துவிட்டுத்தான் தூங்கப்போவார்.
மிகக்குறைவான
வருமானத்தில்கூட, அதனை தவறாமல் செய்து வந்து, இன்றும் அந்தக் கணக்கெழுதும் வழக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
எத்தனையோ தருணங்களில், அவரது கணக்கு நோட்டின் மூலம், முன் ஆண்டுகளில் புதுக்கோட்டை -
சென்னை பேருந்துக் கட்டணம் 55ரூபாய் ,
வசந்தவிஹார் சாப்பாடு 5ரூபாய்,
ஒரு சீப்பு வாழைப்பழம் 1ரூபாய் ,
சாரதாஸில் வாங்கிய சட்டை 44 ரூபாய்,
திண்ணை பூச கொத்தனாருக்குக் கொடுத்த நாள் கூலி 10 ரூபாய் என்று பல நிகழ்வுகள், பொருட்களின் விலைவாசியைத் தெரிந்துகொள்ளும்போது பொருளியலே படித்த அளவுக்கு சிந்தனை விரிந்திருக்கிறது.
ஒரு திருமண நிகழ்வு மாதிரியான குடும்ப விழாக்களில் அதன் மொத்தச் செலவையும் எழுதி வைத்து, பின்னர் எடுத்துப் பார்க்கும்போதோ, அந்தச் செலவுக்குப் பிறகு , மிச்சமிருக்கும் தொகை சரியாக இருக்கும்போதோ கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதேபோல் அந்த விழா வீட்டினர் , நம்மிடம் கொடுத்த தொகைக்கு சரியான இரசீதுகளுடன் கணக்குக் கொடுத்துவிட்டு, நிமிர்ந்து நடக்கும் பெருமை அதைவிட அலாதி!
பொதுவாக இப்போது நம்மில் எத்தனை பேருக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னால், எல்லா வீடுகளிலும் ஒரு கணக்கு நோட்டு இருந்திருக்கும்.
இந்த நினைவுகள் அனைத்தையும் தூண்டி , நெகிழவும் மகிழவும் வைத்த எஸ்.ராவுக்கு அழைத்துப் பேசியபின்னரும் மீதமிருக்கிறது உணர்வின் மிச்சம்!
நன்றி எஸ்.ரா , இப்படிப்பட்ட உணர்வுகளைப் பதிவு செய்தமைக்கு! நீங்கள் எங்கள் பொக்கிஷம்!

Comments

  1. நீங்கள் எழுதியிருப்பது 'நியாயம்தான். ஆனால், நம் மறதியால் சில செலவுகளை எழுதவிட்டு, கணக்கு சரியாக வராமல், எங்க தொலைத்தோம்...யாராகிலும் எடுத்துவிட்டார்களா? அதிகமாகக் கொடுத்துவிட்டோமா என்றெல்லாம் மன உளைச்சல் வருகிறது. (of course, if we realize where we spent, it would give greater pleasure, as if we earned some extra money). கணக்கெழுதுவது சாலச் சிறந்த பழக்கம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இறைவி - எண்ணங்கள் எனது !

நித்யானந்தாவும், நானும்..!

சென்னைப் பிழை!