எதிரிவினைகளுக்கு எதிர்வினை!

நண்பர்கள் வட்டத்தின் ஆரத்தை அதிகப்படுத்தி அதன் சுற்றளவைப் பெரிதாக்குவதில் பதிவுலகை விட மிகச்சிறந்த அமைப்பு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.

ஆனால், அத்தகைய நட்பு தரும் பதிவுலகில் நாம் எந்த அளவுக்கு நன்மையை விதைத்திருக்கிறோம் என்பதில் எனக்கு ஒரு ஐயம் இருந்துகொண்டே இருக்கிறது. மாபெரும் பதிவர்கள் என்று போற்றப்பட்டவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்துக்கொள்வதும், ஒரு காலகட்டத்தில் அயர்ச்சியால் பதிவே எழுதாமல் இருப்பதும் நடந்தேறி வருகிறது.

இதற்கு என்ன காரணமென்று பார்த்தால், ஏதோவொரு சர்ச்சை அவர்களது எழுத்தை முடக்கியிருக்கும். அல்லது இன்னொரு சர்ச்சையின் விளைவு அவர்களுக்கு ஆயாசத்தை ஏற்படுத்தி , நமக்கும் இது நடக்கலாம் என்ற பயம் கிளம்பியிருக்கும்.

அதைவிட மேலாக, இதை எழுதினால்..இவருக்குப்பிடிக்காது. அதை எழுதினால், அவருக்குப்பிடிக்காது என்று - எந்த எழுத்தால் நட்பு வளர்ந்ததோ - அந்த எழுத்தை நசுக்க வேண்டியிருக்கும்.

தொடர்பில்லாமல் பத்துப்பதிவுகளை எடுத்துப்பார்த்தால், குறைந்தபட்சம் ஆறு பதிவுகள் ஏதாவதொன்றின் எதிர்வினையாக அமைந்துவிடுகிறது. அது ஒன்றும் தவறில்லை. எதிர்வினைகள் தொடர்கதையாக மாறி அந்தச்சங்கிலி இறுகி சம்பந்தப்பட்டவர்களின் நட்புச்சங்கிலியை அறுக்கும்வரை!

வலையுலகின் மிகப்பிரபலமான, இன்று நாம் எழுதும் கட்டமைப்பு வசதிகளுக்கு ஆதாரமாக இருந்த, இருக்கும் ஒரு தளத்துக்கு நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் ஒரு அன்பான பதிவரை சமீபத்தில் சந்தித்தேன். ஏன் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை என்று கேட்டேன். அவர் சொன்ன பதில் அப்படியே மேற்சொன்ன கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தது. எதிர்வினைகள் அதிகமாகிவிட்டன என்றார்.

உண்மைதான். நீங்கள் ஒரு விஷயத்தைப்பார்க்கிறீர்கள். உங்கள் கோணத்தில் பதிக்கிறீர்கள். அது மற்றொரு நண்பருக்கு தவறாகப்படுகிறதென்றால், உங்களுக்கு பின்னூட்டமிடலாம். அல்லது தன் மாற்றுக்கருத்தை தனது தளத்தில் தாராளமாகப்பதியலாம். அத்துடன் அது நின்றுவிட்டால், எதிர்வினைகள் தொடர்ச்சியாகி, வன்மம் வளர்ந்து, அந்தப்பதிவர் எதிரியாகவே பாதிக்கப்பட்டு, பதிவுலகில் நுழைவதே ஒரு வருத்தமான விஷயமாய் ஆகாது.

ஆனால், விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று முன்னவரும், அந்த விளக்கத்தை உடைக்கிறேன் என்று பின்னவரும் கச்சை கட்டிக்கொண்டு இறங்கும்போது நட்பு தன் பலத்தை இழந்து, விளக்கங்களும், தர்க்கங்களும் கோலோச்ச ஆரம்பிக்கின்றன. பின்னர் இந்தப்பக்கம் நாலுபேர் , அந்தப்பக்கம் நாலுபேர். அதற்குப்பிறகு பதிவுலகம், தன் கையில் தயாராக வைத்திருக்கும் பெயிண்ட் டப்பாவிலிருந்து ஒவ்வொரு தரப்பிற்கும் தகுந்த வண்ணங்களை அடித்து அனுப்பிவிடுகிறது.ஆக..எதிர்வினைகளின் தொடக்கம் விளக்கம் சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம்!

நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!
நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!


அழகான சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு, வெற்றி பெறுவோம்.
நாம் ஒரு பிரம்மாண்டமான பதிவர்கள் சமூகத்தை நம்மையறியாமல் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். அதன் வளர்ச்சி நிலையில் ஏற்படும் சில குளறுபடிகள்தான் இப்போது நடந்து கொண்டிருப்பதும்!


திரு. செந்தில்நாதனை காப்பாற்ற தோள்கொடுத்த கூட்டம்தான் நாம்!

பதிவர் பட்டறைகளை நடத்திய கூட்டம்தான் நாம்!

சிறுகதைப்போட்டிகளை சிறப்பாக நடத்தியவர்கள்தான் நாம்!

குட் டச்! பேட் டச்! குறைவில்லாமல் நடத்திக்(கொண்டு) காட்டியவர்கள்தான் நாம்!

எத்தனையோ பத்திரிகைகளின் எதிர்(நிகழ்)காலத்தீனிதான் நாம்!

எத்தனையோ திரைப்படங்களின் இலவசக் காட்சி வழங்கிகள் நாம்!

பிரபலங்களும் தன்னை இச்சமூகத்தின் அங்கமென்று பெருமைப்பட வைத்தவர்கள்தாம் நாம்!

நமக்குள் ஏற்படும் சச்சரவுகள் நம் வீட்டுப் பிரச்னை!

நாம் பொழுதுபோக்காய் ஆரம்பித்தது , மன உளைச்சலின் சாவியாகக்கூடாது!

அழகாகச்சிந்திப்போம்..!
அனைவரையும் அரவணைப்போம்!
தெரியாமல் தவறுசெய்தால்
தெளியவைக்கும் திறன் கொடுப்போம்!
தனிமனிதத் தாக்குதல்களை
தரம்பிரித்து தள்ளி நிற்போம்!

மீண்டும் மீண்டும் பணிவுடன் விளம்புகிறேன் !

கூடிக்கரையும் காகங்களல்ல நாம்!
கூடி மழை பொழியும் மேகங்கள்!

Comments

 1. //நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!
  நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!///


  அருமையான வரிகள்

  வாழ்க்கை பயணத்தில் பயன்படுத்திக்கொள்கிறேன்!

  ReplyDelete
 2. அருமை சுரேகா. இந்த சூழ்நிலையில் பதிவுலகத்துக்கு தேவையான வரிகள்.

  அப்படியே வழி மொழிகிறேன்.

  ReplyDelete
 3. அழகாகச்சிந்திப்போம்..!
  அனைவரையும் அரவணைப்போம்!
  /தெரியாமல் தவறுசெய்தால்
  தெளியவைக்கும் திறன் கொடுப்போம்!
  தனிமனிதத் தாக்குதல்களை
  தரம்பிரித்து தள்ளி நிற்போம்!/

  குழம்பிக் கிடக்கும் மனதுக்கு ஆறுதலாக ரொம்ப அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
  /கூடிக்கரையும் காகங்களல்ல நாம்!
  கூடி மழை பொழியும் மேகங்கள்!/
  அதைவிட இது அழகு.

  ReplyDelete
 4. நான் எப்போதும் நினைவில் நிறுத்தும் ஒரு வாசகம்:

  ஒரு விரோதியை நண்பராக்க, ஆயிரம் சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுப்போம்.
  ஆனால், நல்ல நண்பரை விரோதியாகக எந்த சந்தர்ப்பங்களையும் ஏற்ப்படுத்தகூடாது.

  ReplyDelete
 5. /அழகாகச்சிந்திப்போம்..!
  அனைவரையும் அரவணைப்போம்!
  தெரியாமல் தவறுசெய்தால்
  தெளியவைக்கும் திறன் கொடுப்போம்!
  தனிமனிதத் தாக்குதல்களை
  தரம்பிரித்து தள்ளி நிற்போம்!/

  குழலி புருஷோத்தமனுடைய ஜிமெயில் ஸ்டேடஸ் மெசேஜை வைத்துத் தான் இங்கே கடந்த மூன்று நாட்களாக எனேகெங்கே எப்படிப் புகைந்து கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்தேன்.

  நல்லெண்ணங்களை விதைத்தல் தமிழ்ப் பதிவர்களுக்கு மிகவும் தேவைப்படுகிற ஒன்றாக ஆரம்ப நாள் முதலே இருந்து வருகிறது.

  வார்த்தைகள், கடுமையான எழுத்து, விமரிசனங்கள் எவ்வளவு கூரிய கொலைகார ஆயுதங்களாக ஆகிவிடக் கூடும் என்பதைக் கொரிய மக்கள் கற்றுக் கொண்டுவிட்டார்கள்!

  சொன்ஃபில் என்ற இயக்கமாகவே அங்கே வளர்ந்து கொண்டிருக்கிறது.

  இங்கேயும் அப்படி ஒரு இயக்கமாக வளரவேண்டுமே!

  பொறுப்பான பதிவுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. /
  ஆயில்யன் said...
  //நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!
  நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!///


  அருமையான வரிகள்

  வாழ்க்கை பயணத்தில் பயன்படுத்திக்கொள்கிறேன்!/

  boss...unga blog kadagam...vaazhkkai payanam illa...:))

  ReplyDelete
 7. நன்றி சுரேகா ஸார்..!

  நான் எப்போதும் நினைவில் நிறுத்தும் ஒரு வாசகம்:

  [[[ஒரு விரோதியை நண்பராக்க, ஆயிரம் சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுப்போம். ஆனால், நல்ல நண்பரை விரோதியாகக எந்த சந்தர்ப்பங்களையும் ஏற்ப்படுத்தகூடாது.]]]

  வழிமொழிகிறேன்..!

  ReplyDelete
 8. கடந்த சில நாட்களாக எங்கும் பின்னூட்டம் போட மனம் வரவில்லை சுரேகா...

  அருமையான பதிவு..

  இந்த பதிவில் இருக்கும் நேர்மையை அனைவரும் கை கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசையும்.

  நன்றி.

  ReplyDelete
 9. நல்ல பதிவு ...!  /// ஒரு விரோதியை நண்பராக்க, ஆயிரம் சந்தர்பங்களை ஏற்படுத்திக் கொடுப்போம்.
  ஆனால், நல்ல நண்பரை விரோதியாகக எந்த சந்தர்ப்பங்களையும் ஏற்ப்படுத்தகூடாது.//

  super

  ReplyDelete
 10. //நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!
  நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!
  //

  நல்ல பதிவு.

  நன்றி

  ReplyDelete
 11. நம்மை நம்புகிறவர்களுக்கு விளக்கம் சொல்லவேண்டியதில்லை!
  நம்மை நம்பாதவர்களுக்கு விளக்கம் சொல்லி பிரயோஜனமில்லை!

  இதைச் சொல்லித்தானே அய்யா என்னை மீட்டெடுத்தீர்!

  ReplyDelete
 12. முழுதும் வழிமொழிகிறேன்...

  ReplyDelete
 13. இயல்பான குணம் என்பது மாற்றக்கூடியது. காலப்போக்கில் அனுபவத்தால் மாறிவிடும். பக்குவம் அடைந்த மனமாக மாறி விடும்.

  ஆனால் உள்ளே இருக்கும் வன்மம் ஏதோ ஒரு வழியில் வெளியே வந்து தான் ஆகி விடும். இடுகை என்பதில் மட்டுமல்ல சராசரி வாழ்க்கையிலும்.

  பாமரர்கள் எளிதில் சமரசம் ஆகிவிடுவதுண்டு.
  படித்தவர்கள் "பார் புகழும் காரியங்களை " செய்வது போல் இவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் நண்பரே.

  ReplyDelete
 14. //ஆனால் உள்ளே இருக்கும் வன்மம் ஏதோ ஒரு வழியில் வெளியே வந்து தான் ஆகி விடும். இடுகை என்பதில் மட்டுமல்ல சராசரி வாழ்க்கையிலும்.//

  ஜோதிஜி...அருமை.

  ReplyDelete
 15. சரியான பதிவு.

  கிருஷ்ணமூர்த்தி. உங்களது அகன்ற ஆழ்ந்த வாசிப்பு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது..

  ReplyDelete
 16. உணர வேண்டிய அறிவுரை.
  சம்பந்தமில்லாதவன் என்றாலும் சில இடங்களில் நடுக்கும் சண்டையும் சச்சரவும் வார்த்தை பிரயோகங்களும் "ஏன் இங்கே வந்து சேர்ந்தோம் " என்ற உணர்வையே ஏற்படுத்துகிறது.
  மாற்று கருத்துக்களை கண்ணியமாக சொல்லவும்,
  மாற்று கருத்துக்களை கண்ணியமாக நாம் ஏற்கவும் பழக்கப்படவில்லை.
  இங்கே வண்மம் எதற்கு என்று தான் புரியவில்லை.
  தான் சொல்லும் எதையும் பிறர் கேட்டே ஆகவேண்டும் என்ற
  ஆதிக்க மனப்பான்மைதானே! ஆனால் இவர்கள் தான் இறுதியில் மூக்குடைந்து ரத்தம் ஒழுக நிற்பது
  பரிதாபம்.

  ReplyDelete
 17. நன்றி ஆயில்யன்

  ReplyDelete
 18. மிக்க நன்றி பட்டர்ஃப்ளை அண்ணே!

  ReplyDelete
 19. வாங்க அன்புடன் அருணா!

  மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 20. வாங்க கிருஷ்ணமூர்த்தி ஸார்!

  நீங்க சொன்ன அந்த குழுமம் ரொம்ப சிறப்பா செயல்படுது!

  சன்பில் போல ஒன்றை நாமும் தொடங்கவேண்டும்.

  ReplyDelete
 21. உங்கள் பேச்சை போலபொறுப்பான பதிவு
  சுரேகா..

  ReplyDelete
 22. அருமை சுரேகா. இந்த சூழ்நிலையில் பதிவுலகத்துக்கு தேவையான வரிகள்.

  அப்படியே வழி மொழிகிறேன்.
  :)

  ReplyDelete
 23. உங்கள் கருத்துகளோடு உடன்படுகிறேன் நானும்.

  ReplyDelete
 24. Sureka,
  thoughtful and timely post,brief and best writen one.

  ReplyDelete
 25. ரொம்ப நல்லா சொல்லி இருக்கிங்க.. வரிக்கு வரி உடன்படுகின்றேன்...

  ReplyDelete
 26. சரியான நேரத்தில் பொருத்தமான பதிவு.

  வலையுலக நண்பகளே, மறப்போம், மன்னிப்போம்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

சென்னைப் பிழை!