Thursday, June 24, 2010

சீனான்னா சும்மா இல்லை!
சிறுவயதிலிருந்தே சீனாவைப்பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உண்டு. ஆனால் சொல்ல ஆளோ, படிக்க தாளோ இல்லை! அதனாலேயே சென்னை புத்தகக்காட்சியில், செக்கச்செவேல் என்று இருந்த அந்த புத்தகம் என்னை ஈர்த்தது. கிட்டச் சென்று பார்த்தேன். சீனா- விலகும் திரை என்று போட்டிருந்தது. (உபயம் - கிழக்கு பதிப்பகம்) ஆங்கிலத்தில் பல்லவி அய்யரால் எழுதப்பட்டு வெளிவந்த glasses and smokes என்ற புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பு!நிறைய விபரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகையாளராக சீனாவில் அவர் இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக ஒவ்வொரு விஷயத்திலும்,இந்தியாவுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். இது ஒரு கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கிறது.

சீனர்களின் நிதானமான வாழ்க்கைமுறை,
சரியோ தவறோ அரசாங்கம் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்,
பழமைக்கும், புதுமைக்கும் இடையில் தடுமாறும் நிலை
அரசாங்கத்தின் அதிரடித் திட்டங்கள்
மொழியின் மீது சீன அரசின் ஆளுமை
அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை பல்வேறு சூழல்களில் தரப்பட்டிருக்கிறது.

சீனா எப்படியெல்லாம் தன்னை உலக நாடுகளிடத்தில் நிலை நிறுத்திக்கொள்ள அடி போடுகிறது. அதற்கு உள்ளூரில் என்னன்ன தகிடுதித்தங்கள் செய்கிறது என்று விளக்கப்பட்டிருக்கிறது.
// மொத்த சீன சமுதாயத்துக்கும் தன் மனதில் இருப்பதை எடுத்துச்சொல்ல வழி இல்லாமல், நாடே ஒரு பிரஷர் குக்கர் மாதிரி இருக்கிறது. மேலே அமைதி, உள்ளே எரிமலை! //

புத்தகத்தின் இந்த வரிகளின் வீரியம் இன்னும் சில ஆண்டுகளில் வெளிவர வாய்ப்பிருப்பதை அரசாங்கமும் அறிந்துகொண்டு, மக்களுக்கான தேவைகளை அடித்துப்பிடித்துச் செய்து வருகிறது என்று விளங்கிக்கொள்ளமுடிகிறது.

ஹூடாங் என்ற ஒரு வீட்டமைப்பே இப்போது அழிந்துவரும் நிலை இருப்பதை அங்கேயே வாழ்ந்திருந்து சொல்லியிருக்கிறார் பல்லவி! சீனர்களின் விருந்தோம்பலையும் விளக்கியிருக்கிறார்.

படித்துக்கொண்டே வரும்போது சீனாவின் யீவு என்ற நகரைப்பற்றி கூறியவற்றை நினைத்து பிரமித்துப்போனேன்.உலகநாடுகளின் வியாபாரிகள் அனைவரும் வந்து பொருட்கள் வாங்கும் ஊர் யீவு ! இதைப்பற்றி அடிக்கடி சீனா சென்றுவரும் நண்பரிடம் பேசலாம் என்று போனால், அவரே இந்தமுறை யீவு சென்று வந்ததைப்பற்றி சொல்கிறேன் என்று ஆரம்பித்தார்.
இருபத்தைந்து லட்ச ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியிருக்கிறார். அவை குறைந்தபட்சமாக முப்பத்தைந்து லட்சரூபாய்க்கு விலை போகுமாம்.

சீனாவின் மத தத்துவங்கள், திபெத் பிரச்னை, கம்யூனிஸத்தின் கடவுள் மறுப்பிலிருந்து மெல்ல வழுவி மடாலயங்களும், மத வழிபாடுகளும் ஆரம்பிக்கும் அரசாங்கம் ஆகியவற்றை சொல்லியிருக்கிறார்.

என்னதான் உள்பகைமை உள்ள நாடு, நம் எல்லைகளை ஆக்கிரமிக்கும் நாடு, இலங்கையில் காலூன்றி நம்மை அச்சுறுத்த நினைக்கும் நாடு, இந்தியாவிடம் ஒருபோதும் தோழமை பாராட்டாத நாடு என்ற எண்ணம் இருந்தாலும், அவர்களைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்ததற்கு , எதிரியைப்பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரியவைத்திருப்பதை நினைத்து திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.

டிஸ்கி: புத்தகத்தை வாங்கி, தாமதமாகத்தான் படித்தேன். " காந்தியை சுட்டுட்டாங்களா? " , " இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுருச்சா?" என்று லந்து கொடுத்தாலும் பரவாயில்லை! :)

15 comments:

 1. நல்ல பகிர்வு.

  எனது MBA படிப்பு காரணமாக ஏப்ரல் மாதத்தில் சீனாவிற்கு இரண்டு வார பயணம் சென்றிருந்தேன். எனது பார்வையில் சீனாவைப்பற்றி சீக்கிரம் ஒரு பதிவு போடுகிறேன்!

  அன்புடன்,
  -ரவிச்சந்திரன்

  ReplyDelete
 2. நல்ல அறிமுகம்.

  ReplyDelete
 3. தாமதமாக இருந்தாலும், கொஞ்சம் தெரிந்து வைத்திருக்கவேண்டிய விஷயம் தான்!

  1962 இந்திய சீன யுத்தத்திற்குப் பிறகு சீனா என்றாலே, கண்ணையும் காதையும் பொத்திக் கொண்டு ஓடுகிற ஒரு பூச்சாண்டியாகவே இங்கே உள்ள அரசியல்வாதிகளால் காட்டப்பட்ட திரை விலகி, இப்போது சீனாவைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதைப் பார்க்க முடிவதற்கு, சீனாவில் போய்க் கல்வி பயிலச் செல்லும் மாணவர்களுடைய எண்ணிக்கை வெறும் இரண்டாயிரத்துக்கும் கீழே என்றிருந்தது, போன வருடம் ஒன்பதாயிரமாகி, இந்த வருடம் பதினோராயிரம் என்று வளர்ந்து கொண்டிருப்பதே ஒரு சின்ன அளவீடாக வைத்துக் கொள்ளலாம்.

  தமிழில் சிறுவயதில் சீனாவைப்பற்றி அறிந்துகொள்ள எனக்குக் கிடைத்த ஒரு நல்ல புத்தகம் வெ.சாமிநாத சர்மா எழுதிய "சீனாவின் வரலாறு" தான்.

  பல்லவி ஐயர் எழுதிய புத்தகத்தைத தமிழில் படிக்கவில்லை என்றாலுமே கூட, நவீன சீனத்தைப்பற்றி நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.

  சீனர்கள் உட்பட கிழக்கத்திய நாடுகள் அனைத்திலும் ஒரு பொதுப்பண்பு காணப்படுகிறது.

  பெற்றவர்களுக்கு, பெரியவர்களுக்கு, அரசனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் இயல்பு. வேலைக்கார எறும்புகளைப் பற்றிப் படித்திருப்போமில்லையா, அதேமாதிரியான அரசனுக்காக வேலை செய்யும் இயல்பு.

  சீனாவைப் பற்றி இன்னும் வேறு கோணங்களில் தெரிந்து கொள்ள Opium wars, Indo-china war,Deng Xiao Ping என்று கூகிளிட்டுத் தேடினால் விக்கிபீடியா பக்கங்கள் உட்பட நிறைய, விரிவான தகவல்களைப் பார்க்க முடியும்.

  ReplyDelete
 4. அருமையான பதிவு வாழ்த்துகள்..!

  உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
  தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
  http://rkguru.blogspot.com/2010/06/blog-post_23.html

  ReplyDelete
 5. அப்படியே சீனப் பூச்சாண்டியை வளர்த்து விட்டு இப்போது பயந்து அலறிக் கொண்டிருக்கும் அமெரிக்க ராஜ தந்திரத்தைப் பற்றி ஒரு சுவாரசியமான வலைப்பதிவு

  http://chellaney.spaces.live.com/Blog/cns!4913C7C8A2EA4A30!1220.entry

  ReplyDelete
 6. அண்ணே நம்ம நினைக்கிறத எல்லாம் விட எங்கியோ முன்னேறி போய்கிட்டிருக்கு சைனா.

  நேத்து ஒரு நியூஸ் படிச்சேன் நீங்களும் படிச்சி பாருங்க

  அதோட லிங்க்
  http://www.straitstimes.com/BreakingNews/Asia/Story/STIStory_544495.html

  ReplyDelete
 7. மங்களூர் சிவா கொடுத்திருக்கும் லிங்க் சொல்வது கொஞ்சம் பழசு! அல்லது ஏற்கெனெவே தெரிந்த சீனர்களின் காப்பியடிப்பதில் அல்லது பைரசியில் இருக்கும் திறமைதான்!

  இதே மாதிரி முதல் முயற்சி அமெரிக்காவில் தான் வெற்றிகரமாக நடந்தது, மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதை (கார்டை செருக்கும் இடத்தின் மீது இன்னொரு பிளாஸ்டிக் மௌல்டை வைத்து, ஏ டிஎம்மில் ஒருவர் பணம் எடுக்கும்போதே, சுடச் சுட அவர் பதிவு செய்யும் பாஸ்வோர்ட் முதல் கணக்கு விவரங்கள் வரை ஹேக் செய்யும் விதத்தைப் படங்களோடு)பார்த்திருக்கிறேன்.

  நகலெடுப்பதில், சீனர்கள் மிகத் திறமைசாலிகள் தான்! அதிலும் கூட ஒரு ஒரிஜினாலிடி உண்டு!

  இங்கேஇந்தியாவில் கூட உல்லாஸ்பூர் என்ற இடத்தில் made as japan என்று அச்சு அசலாக ரேடியோ, வாக்மேன் முதலான எலக்ட்ரானிக் பொருட்களைத் தயாரிப்பதைப் பார்த்திருக்கலாமே!

  ஒரே வித்தியாசம், உல்லாஸ்பூர் தயாரிப்புக்கள் தரமாகவே இருக்கும்.

  ReplyDelete
 8. /

  இதே மாதிரி முதல் முயற்சி அமெரிக்காவில் தான் வெற்றிகரமாக நடந்தது, மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே எப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதை (கார்டை செருக்கும் இடத்தின் மீது இன்னொரு பிளாஸ்டிக் மௌல்டை வைத்து, ஏ டிஎம்மில் ஒருவர் பணம் எடுக்கும்போதே, சுடச் சுட அவர் பதிவு செய்யும் பாஸ்வோர்ட் முதல் கணக்கு விவரங்கள் வரை ஹேக் செய்யும் விதத்தைப் படங்களோடு)பார்த்திருக்கிறேன்.
  /

  ATM மெசினில் டேட்டா திருடும் அட்டாச்மெண்ட் வேற

  பிசியான சிட்டில டேட்டா திருடுவதற்காக சொந்தமா ஏடிஎம் மிசினே வைக்கிறது வேறங்க

  என்னைக்கு இந்த டெக்னாலஜி இந்தியாக்கு வந்திடப்போகுதோன்னு பயம்மா இருக்கு இனிமேத்து 100 ரூவா வேணும்னாகூட செக் எழுதி கவுண்டர்ல எடுக்கவேண்டியதுதான்~

  ReplyDelete
 9. மிக்க நன்றி ரவிச்சந்திரன்!

  சீக்கிரம் பதிவா போடுங்க!

  ReplyDelete
 10. வாங்க கேபிள் ஜி! மிக்க நன்றி!

  ReplyDelete
 11. வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்!
  உங்கள் பின்னூட்டம் செறிவானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் எப்போதும் இருக்கிறது.

  நான் சீனாவைப்பற்றி இன்னும் நிறையப் படிக்க வேண்டும்.

  உங்கள் வருகைக்கு மிக நன்றி சார்!

  ReplyDelete
 12. வாங்க rk guru ! உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

  ReplyDelete
 13. வாங்க சிவா!
  ஆமாம்ப்பா! படிச்சுட்டு அதிர்ந்தே போய்ட்டேன்.

  சீட்டிங் பண்றதுல, சீனாக்காரன் சீனாக்காரந்தான்!

  ReplyDelete
 14. சீனாவைப்பற்றி எனது பார்வை:

  http://vssravi.blogspot.com/2010/07/blog-post_13.html

  ReplyDelete
 15. சீனாவில் தமிழ் வானொலி ஒன்று இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...