நாடா நினைவுகள் - தொடர்ச்சி....
பின்னர் முதன்முறையாக வீட்டிற்கு ஒரு பிலிப்ஸ் டேப் ரெக்கார்டரை சித்தப்பா வாங்கி வந்தார்..,எம்.எஸ்ஸின் சுப்ரபாதம்,கந்தர் சஷ்டி கவசமும், ஒரு டி எம் எஸ்ஸின் முருகன் பாடல்கள் கலெக்ஷனும் , நினைவே ஒரு சங்கீதம், வேலைக்காரன் படப்பாடல்களையும் கேசட்டாக வாங்கி வந்திருந்தார். அதற்கு ஒரு துண்டைப்போட்டு மூடி ஒரு மேசையில் வைத்தபின் வீட்டுக்கே அழகு வந்தது.
ஆஹா! நம் வீட்டிலும் கேசட் வந்துவிட்டது என்று புளகாங்கிதமடைந்தேன். வேலைக்காரன் படப்பாடல்கள் மொட்டை மனப்பாடம் ஆனது.! ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் –திருச்சி வானொலியில் – சூரியகாந்தி என்ற தலைப்பில் வரும் நாடகங்களைக் கேட்டுவிட்டு, சித்தப்பாவின் ஏற்பாட்டின்படி ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோவின் பவ்யத்தோடு, ஒவ்வொருவரும் உள்ளறைக்குச் சென்று அந்த டேப் ரெக்கார்டரில் எங்கள் குரல் வளத்தைக்காட்டி பாட்டுப்பாடி பதிந்துவிட்டு வந்தோம். நண்டு சிண்டுகள் வரை அனைவருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் என் தங்கை பாடிய ‘சுந்தரி சௌந்தரி நிரந்தரியே….! ‘ சூப்பர் ஹிட்!
பின்னர், வீட்டில் கேசட் புழக்கம் என்னால் அதிகரித்துவிட்டது. நண்பன் ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்து, ‘சம்சாரம் அது மின்சாரம்’ வசன கேசட் வாங்கிவந்து கேட்டேன். ஏன் ஓசியில் வாங்கி வந்தாய் என்று பாட்டு கிடைத்தது. இருந்தாலும், அந்த கேசட்டை ஓடவிட்டு கேட்பதில் ஒரு சுகம்தான். பின்னர் அதன் நுணுக்கங்கள் பிடிபட ஆரம்பித்தது. மெதுவாக கையில் இருக்கும் காசிலிருந்து, கேசட்டுகள் வாங்கத்துவங்கினேன். சித்தப்பாவின் டேப்ரெக்கார்டரை ஒப்பேற்றிய பெருமையும் என்னையே சேரும்!
கல்லூரி சென்றபின், கேசட் வாங்குவது அதிகமானது. நான் கேசட் வாங்காத பஸ் ஸ்டாண்டே இல்லை எனலாம். டி சீரிஸ், ராஜா, எக்கோ, வாணி, வீணா என பல்வேறு கம்பெனி கேசட்டுகள்! டூயட் பட கேசட் – நீலக்கலரில் வந்தது. மிகவும் அழகாக இருக்கும்.
பின் மைக்கேல் ஜாக்ஸனின் டேஞ்ஜரஸ்! 99ரூபாய்க்கு கருப்பு கலரில் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருந்தது. வந்தே மாதரம் கேசட்டின் வடிவமைப்பும் மிகவும் அழகாக இருக்கும். அந்த கேசட்டின் கவர் மட்டும் மொழுக்கையாக கையில் கீறாமல் வடிவமைக்கப்பட்டிருந்தது.
காமெடி கலெக்ஷனாக, சுருளிராஜன், கவுண்டமணி செந்தில், ‘மூர்த்தி-கோபியின் காமெடி கேசட்டுகள்! மயில்சாமி-லக்ஷ்மணனின் ‘முப்பத்தாறு மொட்டைகளின் அட்டகாசங்கள்’ கேட்டு , அதன்படி கல்லூரியில் மிமிக்ரி செய்து பரிசுகள் வாங்கியது அந்த கேசட்டுகள் செய்த உதவி!
நான் படித்தது எலக்ட்ரானிக்ஸ் என்பதால், முதலில் நான் முயன்றது ஒரு ASSEMBLED டேப் ப்ளேயர்தான். அதற்கான கேஸிங், ட்ரான்ஸ்பார்பர், டையோடு, ஆம்ப்ளிபயர் போர்டு, டேப் மெக்கானிஸம், பி டி போர்ட் , ஈக்வலைஸர் போர்ட், அதற்கான எல் இ டி டிஸ்கோ லைட் என பார்த்துப்பார்த்து வாங்கி அதில் லயித்துப்போய் வீட்டையே இரண்டு செய்திருக்கிறேன். அந்தக்காலகட்டத்தில் எங்கள் வீட்டில் ஆறு ஸ்பீக்கர்கள். தெருவில் தண்ணீர் எடுப்பவர்கள், என்னம்மா? தம்பி காலேஜ்லேருந்து வந்திருச்சுபோல? என்று கேட்கும் அளவுக்கு என் ஒலி(அலறல்)பரப்பு பிரபலம்!
வேலைக்குச் செல்லும் காலகட்டத்தில், கன்னாபின்னாவென்று கேசட்டுகள் வாங்கி, அதற்கு எண்கள் போட்டு ஒழுங்குபடுத்தி , தேடும்போது உடனே கிடைக்குமாறு ஒரு நோட்டில் எழுதிவைத்து என, அதற்காக நான் செலவழித்த நேரம் அதிகம்!
ஒரு பாடலை டீக்கடையில், பேருந்தில் கேட்டுவிட்டு, மிகவும் பிடித்துப்போய்விட, அந்தப்பாட்டு நமக்கே சொந்தமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று மனம் ஆசைப்படும். அப்போது நாம் இருக்கும் ஊரில் இருக்கும் ரெக்கார்டிங் கடைக்குப்போய், தேவைப்படும் பாடல்களை பட்டியலாக எழுதிக்கொடுத்து, ஒரு புதிய TDK 90 கேசட் வாங்கி அதில் இருபுறமும் பதியச்சொல்லி , என்று தருவீர்கள் என்று கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்து நகம் கடித்துக்காத்திருப்பேன். அவர் சொன்ன தேதியில் சொன்னதைவிட கொஞ்சம் முன்னாலேயே சென்று ரெக்கார்டிங் ஆகிவிட்டதா என்று போட்டுக்கேட்டுவிட்டு ஒரு நிமிடம் பதிசெய்யப்படாமல் மிச்சம் இருக்கும்போது..
அண்ணே! தளபதி படத்தில் யமுனை ஆற்றிலே மட்டும் போட்டுருங்க! என்று நைசாகக் கேட்க,
வசந்தம் மியூசிக்கல் ஓனர் அண்ணன், அந்த ஒரு நிமிசம் ஒங்க டேப்பில் சும்மா ஓடக்கூடாதாக்கும்? 90க்கு காசு குடுத்திருக்கீங்க? அதானே! நல்ல வெவரம்டா தம்பீ! நல்லா வருவ! என்று முன்கூட்டியே கணித்து வாழ்த்தினார் . J
நாம் அழகாக கலெக்ட் செய்த பாடல்களை போட்டுக்கேட்டுவிட்டால், வேறு எங்கு அதில் உள்ள ஒரு பாடலைக் கேட்டாலும், அடுத்தபாடலாக, நம் கேசட்டில் உள்ள பாடலைத்தான் வாய் முணுமுணுக்கும். மேலும், பேருந்துகளில், நம் கேசட்டைக்கொடுத்து, அதை டிரைவர் போட்டுவிட, பயணிகள் ரசிக்கும்போது, அனைவரது முகத்தையும் (குறிப்பாக கல்லூரிப்பெண்கள்) பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டே பயணிக்கும் சுகம் இருக்கிறதே…..அனுபவிக்கணும் பாஸு!
அதில் இன்னும் சில டிரைவர்கள், அந்த கேசட்டை அப்படியே பதிந்துவிட்டு தருவதாக வாங்க, நானும் நம்ம்ம்பிக்கொடுக்க, அவர் அப்படியே அந்தக் கேசட்டை ஆட்டையப் போட்டுவிடும் சோகம் இருக்கிறதே…அதையும் அனுபவிக்கணும் பாஸு!
அப்படிச்சேர்ந்துபோன 500க்கும் மேற்பட்ட கேசட்டுகளை விட்டுவிட்டு நான் வெளிநாடு போய்விட்டு வந்தபின், என் குடும்பம் அதைப் பாதுகாத்து வைத்திருந்தது. இடையில் திருச்சி வானொலிக்காக, ‘எங்கிருந்தோ வந்தான், படத்தின் ஒரு பாடலான, ‘மௌனம் என்பது கவிதை மொழி’ என்ற அருமையான மெலடி இணையத்திலும் கிடைக்காமல், என்னிடம் இருந்த கேசட்டிலிருந்து எடுத்துக்கொடுத்தபோது, அவைகளைப்பாதுகாத்ததற்கு நன்றியாக உணர்ந்தேன்.
இதோ, கேசட்டுகள் மீண்டும் என்னுடன் சென்னைக்கு வந்துவிட்டன. ஒரு நாள் ஒதுக்கி அந்த நாடாக்களில் கேட்ட அத்துனை ஓசைகளையும் மீண்டும் கேட்க காதுகள் துடிக்கின்றன. தற்காலிக நிவாரணத்துக்கு…நாடா நினைவுகளாக !!
nostalgia?!
ReplyDeleteஅனுபவுஇங்க சுரேகா - இருப்பினும் அன்னிக்குக் கிடைச்ச மகிழ்ச்சி இப்பக் கிடைக்காது - நட்புடன் சீனா
ReplyDeleteசுரேகா உங்கள் அனுபவங்களைப் படிக்கிற போது சில என் அனுபவங்களை நீங்கள் சொல்வது போல் இருக்கிறது. குறிப்பாக எங்கள் வீட்டு டேப் ரிக்கார்டரென்பது நான் அசெம்பிள் செய்த ஒன்றிலேயே பாட ஆரம்பித்தது. டெக் வாங்கி அதில் க்நாப் பொருத்தி ஏழு வாட் ஆம்பிளிஃபயர், பிரீ ஆம்பிளிஃபயர் அசெம்பிள் செய்து... குறிப்பாக ஏழு வாட் ஆம்பிளிஃபயரில் ஐசியை கவனமற்று ஷோல்டரிங் செய்தலா ஐசி காசு அம்போதான்.... அதை நல்ல விதமாக அசெம்பிள் செய்த பின் நம் உழைப்பில் உருவான அதில் பாட்டு கேட்ட மகிழ்ச்சி இப்போதும் இனிக்கிறது. நல்ல இடுகை.. மகிழ்ச்சி...
ReplyDeleteஆம் ஷர்புதீன்...! நல்ல நினைவுகளுக்கு என்றுமே அழிவில்லை இல்லையா? :)
ReplyDeleteவாங்க சீனா சார்..!
ReplyDeleteஆமா..! எப்பொழுதும் , அப்பொழுது, அப்பொழுதுதான்..!
வாங்க குமரி.நீலகண்டன் அய்யா!
ReplyDeleteஆம். நான் சொல்ல விட்டுப்போன விஷயம் அது..! மேலும் STK என்ற ஐ சி சிலசமயங்களில், கொதித்து படேர் என்று வெடிக்கும்..பாருங்கள்!! :)
அது ஒரு கனாக்காலம்..!
மிகவும் அழகான பதிவு..... மறந்த நாடா நினைவுகளை தேயாமல் மீட்டுத் தந்தமைக்கு நன்றி தோழரே.....!
ReplyDeleteதற்காலத்தில் பாடல்களை கேட்க்க பற்பல வழிகள் வந்து விட்டதால் பாடல் கேட்பது அந்த அளவு பெரிய விஷயமாக இல்லை .ஆனால் ஒலி நாடாக்கள் வர ஆரம்பித்த காலத்தில் பாடல்கள் புதையல்களாக மதிக்கப்பட்டன .....
ReplyDelete