ஏழாம் அறிவு

    


      பிரம்மாண்டமான எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்த ஏழாம் அறிவு , தமிழர்களின் பெருமையை உலகத்துக்குப் பறைசாற்றும் படைப்பாக வெளிவந்திருக்கிறது.
1600 ஆண்டுகளுக்கு முன், காஞ்சியை ஆண்ட பல்லவ வம்ச போதிவர்மன் (சூர்யா) , ராஜமாதாவின் உத்தரவுப்படி சீனாவுக்குச் செல்கிறான். அங்கு ஒரு கிராமத்தில் ஏற்பட்ட கொடிய நோயைத் தன் மூலிகை மருத்துவத்தால் தீர்க்கிறான். அதன் சூட்சுமத்தை சீன மருத்துவர்களுக்குக் கற்றும் கொடுக்கிறான். மேலும், சீன மக்களை எதிரிகளிடமிருந்து காத்து, தற்காப்புக்கலைகளை போதிக்கிறான். அவர்களால் போற்றப்பட்டு தாமோ என்று அழைக்கப்படும் குருவாகிறான். இந்தியா திரும்ப நினைக்கும்போது, சீனர்களின் ஆசைப்படி, அவர்கள் கொடுத்த நஞ்சு கலந்த உணவை உண்டு அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறான்.
         
        கதை நிகழ்காலத்துக்கு வருகிறது.

       அர்விந்த் என்ற சர்க்கஸ் கலைஞனாக சூர்யா! அங்கு குரங்கு கேட்டு வரும் மரபணு அறிவியல் மாணவி சுபா (ஸ்ருதி)வைக் கண்டு மயங்கி,  அவளைச்சுற்ற ஆரம்பித்து, சில சுவாரஸ்ய கலாட்டாக்களுக்குப்பிறகு தன் காதல் சொல்ல, அவள் மறுக்கிறாள்.
      சீனா, இந்தியாவில் ஆபரேஷன் ரெட் என்ற ஒரு தாக்குதலை திட்டமிடுகிறது. அதற்காக அவர்கள் நியமிக்கும் ஆள், டாங்.லீ.(ஜானி). அவன்மூலம் இந்தியாவில் 1600 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் வந்த கொடிய நோய்க்கிருமியை ஒரு நாய் மூலம் பரப்பி, இந்தியா கைபிசைந்து நிற்கும்போது, அதற்கான மருந்தைக் கொடுத்து,  பதிலாக சீனா கேட்பதை இந்தியாவைச் செய்யவைக்கலாம் என்பதுதான் திட்டம். மேலும், இந்த மூலிகை ரகசியம் தெரிந்த, ஒரே ஆளான போதி தர்மரின் டி என் ஏ பற்றி ஆராய்ச்சி செய்து மீண்டும் அவரது வம்சாவளி மூலம்  போதி தர்மரை கொண்டுவரும் முயற்சியில் இருக்கும் ஸ்ருதியைக் கொல்லும் பணியும் டாங் லீக்குத் தரப்படுகிறது.
    
   போதிவர்மரின் வாரிசான அரவிந்தை , சுபா நீண்ட நாட்களாக திட்டமிட்டு பின் தொடர்ந்து, அவனது டி என் ஏவை எடுத்து ஆராய முயற்சிப்பது அவனுக்குத் தெரியவருகிறது. இது பற்றி அவன் சுபாவிடம் கேட்க, அவள் கூறும் தகவல்களில் பற்றிக்கொள்கிறது பரம்பரை டி என் ஏவுக்கும், அதை பலி வாங்க நினைக்கும் சீன டாங்குக்குமான பகை!

    டாங்கின் மிகப்பெரும் சக்தி என்ன? அரவிந்த்துக்கு போதி தர்மரின் ஆற்றல் வருவது எப்படி? போன்ற சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளுடன்,  அறிவியல் கலந்து அழைத்துச்செல்கிறது மீதிக்கதை.!

    
     தமிழன் கற்றுக்கொடுத்த வித்தையை , தமிழனுக்கு எதிராகவே பயன்படுத்தினால் என்ன ஆகும்? என்பதுதான் அடிநாதம். அது மிகச்சிறிய முடிச்சில் ஆரம்பித்து, பிரம்மாண்டத்தைத்தொடுகிறது.

அதையும் மீறி, நம் தேசத்தின் அறிவியல் என்பது வாழ்வு சார்ந்தது. அதை நாம் காரணமே இல்லாமல் புறக்கணித்து இன்று வெளிநாடுகளில் கையேந்துகிறோம் என்று கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் இயல்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்!
ஒரு புராணக்கதையுடன் , நிகழ்காலத்தைப் புனையும்போது ஒரு சமூகக்காரணம் இருந்தால்தான் வெற்றிபெறும் என்பது திரை நியதி! அதை தெளிவாகப் பயன்படுத்தியிருக்கிறார். இயக்குநரின் பெயர் போடும்போது எழுந்த கைதட்டல் மற்றும் விசில் ஒலியே அவரைப்பற்றிய எதிர்பார்ப்பின் வெற்றி!
ஷாவ்லின் கோவில் வரலாறு, குங்பூவில் சூறாவளி உருவாக்கும் முறை, பல்லவ, சீன கால உடைகளில் கவனம், போதிதர்மனின் குதிரைப்பயண நிலப்பரப்புகள் என பார்த்துப் பார்த்து செய்த குழு முயற்சியைப் பாராட்டவேண்டும்.
எல்லாக் கொலைகளையும் காட்டிக்கொண்டிருக்காமல், சிறு சிறு சுவாரஸ்யங்களில் புரியவைத்திருக்கிறார் இயக்குநர். கால்டாக்சி அலுவலகத்திலிருந்து கடலை தின்றுகொண்டே படியிறங்கி வருவது, பாலத்தில் அனைவரும் ஒருபக்கம் ஓடிப்போய் எட்டிப்பார்ப்பது என தமிழ் ரசிகனை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.


போதிதர்மனான சூர்யாவை சீன மக்கள் எதிரியாகப் பார்க்கும்போது, ஒரு தீர்க்கமான புன்னகையுடன் குதிரையைப்பிடித்துக்கொண்டு வெளியேறும் காட்சியில், அவமானப்படும்போது இருக்கவேண்டிய அமைதியைக் கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார் சூர்யா!.. தமிழ், வீரம், துரோகம் பற்றிப்பேசும்போது காட்டும் உணர்ச்சிகளில் நடிப்பா, உண்மையா என்று இனம் காணமுடியவில்லை. சூர்யாவுக்கு அழுத்தமான வாய்ப்பு! அவரது அறுபது வயதுக்குப் பின்னும் பேரன்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம்.!
வித்தியாசமான குரல் வளத்துடன், நல்ல தமிழ்பேசும் நாயகியாக ஸ்ருதிஹாசன்! காட்சிப்பொருளாக வராமல் நன்றாகவே நடித்திருக்கிறார். அவர் தன் அப்பா பற்றி சொல்லும்போது தியேட்டரில் மிகப்பெரிய ஆரவாரம்.! அவர் கூறுவது வேறு! ஆனாலும் ஆடியன்ஸ் கமல், கமல் என்று கத்தாமல் அந்தக்காட்சி முடியவில்லை.
படத்தின் அடுத்த ஹீரோ...வில்லனான ஜானி! சிறு கண்ணில் சீற்றம் காட்டி, தன் வித்தையை வெளிப்படுத்துவதில் பின்னுகிறார். ஒவ்வொருவராகப் பார்த்து அடிக்க அனுப்பும் காட்சியில் அவருக்கும் கைதட்டல் அள்ளுகிறது.
அந்தச் சாக்கடை அள்ளும் தொழிலாளியும், பை வைத்த பெண்ணும் குங்பூ சண்டை போடும்போது அதகளப்படுத்தியிருக்கிறார்கள்.
இன்னும் ஒரு ஹீரோவைப்பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன்.! விளையாடியிருக்கிறார் மனிதர். ! ஒரு தவம்போல் சண்டைக்காட்சி அமைத்திருப்பது தெரிகிறது. தமிழ்ப்படத்துக்கு இது மிகவும் புதிது. அந்நியனின் கராத்தேவும், 7ம் அறிவின் குங்பூவும் முழுக்க வேறு விதமாகத் தெரியவைத்திருக்கிறார்.
இசையில் கொஞ்சம் கஜினி வாசனை! அதுவும் உன்னித்துப்பார்த்தால்(கேட்டால்)தான் தெரியும். நிறைய போலீஸைக் கொன்றவனை போலீஸ் தேடவே இல்லையா? நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விஞ்ஞானியை மாணவி ஏன் அரசிடம் ஒப்படைக்கவில்லை? சர்க்கஸ் கலைஞர் பாதிப் படத்துக்குப்பின் ஏன் வேலைக்கே போவதில்லை? இடையில் ஏற்பட்ட கொலைகள் மற்றும் டாங் லீ பற்றி ஏதாவது விசாரணைக் காட்சிகள் இருந்திருக்க வேண்டாமா? என சிறு சிறு கேள்விகள் எழுந்தாலும், சுவாரஸ்யமான திரைக்கதை தலையைத் தடவிக் கூட்டிச்செல்கிறது.


ஒரு முழுமையான பொழுதுபோக்குச் சித்திரத்தில் , அறிவியலும், அறிவுரையும் சுவாரஸ்யத்துடன் மிகச்சரியாகக் கலந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. 
எதிர்பார்ப்பில்லாமல் போனால் ஒரு வித்தியாசமான புனைவுடன் கூடிய பொழுதுபோக்குப்படம் பரிமாறப்படுகிறது.

Comments

 1. நல்ல விமர்சனம்! என்ஜாய் பண்ணி பாத்ருகீங்க போல!சில பேரு மூட் அவுட் ல படம் பாத்துட்டு , நல்லா இல்லைங்கிறாங்க! என்ன கேட்டா, அந்த படத்தை பார்க்க போகும்போது,
  எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போனாலே , படம் நல்லா தான் இருக்குங்குற பீல் கட்டாயம் வரும்.

  ReplyDelete
 2. அன்பின் சுரேகா

  அருமையான விமர்சனம். படத்தை நேரில் பார்ப்பது போஅல் இருக்கிறது. ஊன்றிக் கவனித்து, நினைவில் நிறுத்தி, எதனையும் விட்டு விடாமல் எழுதியமை பாராட்டுக்குரியது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. நல்ல விமர்சன... நல்ல பகிர்வு.

  ReplyDelete
 4. //எல்லாக் கொலைகளையும் காட்டிக்கொண்டிருக்காமல், சிறு சிறு சுவாரஸ்யங்களில் புரியவைத்திருக்கிறார் இயக்குநர். கால்டாக்சி அலுவலகத்திலிருந்து கடலை தின்றுகொண்டே படியிறங்கி வருவது, பாலத்தில் அனைவரும் ஒருபக்கம் ஓடிப்போய் எட்டிப்பார்ப்பது என தமிழ் ரசிகனை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்//


  சுரேகா... இனிமேல் யுரேகா:-)) இதெல்லாம் அடுத்த கட்டமா...அவள் அப்படித்தான் படத்தில் வந்த யுக்தி இது...

  ReplyDelete
 5. வாங்க இளையதாசன்.!
  நன்றிங்க!

  இது முழுக்க முழுக்க என் பார்வைதான்.! எல்லாப்படமும் எல்லோருக்கும் பிடிப்பதில்லையே!

  ReplyDelete
 6. வாங்க சீனா சார்!

  உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 7. வாங்க லவ்டேல் மேடி!

  நன்றிப்பா!

  ReplyDelete
 8. வாங்க மணிஜி அண்ணே!

  :))

  அவள் அப்படித்தான்!!

  அதுக்கு என்ன பண்றது..?
  அதுக்கப்புறமும் நம்ப ஊர்ல,விளக்கமா கொலையைக் காட்டுறாங்கள்ல..!

  அதை சாதாரண ரசிகன் புரிஞ்சுக்கிறமாதிரி சிம்பிளா பண்ணியிருக்கார்ன்னு சொல்லவந்தேன்.

  நான் போன, கிராமத்து தியேட்டர் மனிதர்களே காட்சி புரிந்து ஆர்ப்பரிக்கிறார்கள். அதைத்தான் சொன்னேன்.

  நான் என்னதான் சொன்னாலும்.....நீங்க சொன்னா சரிதான்! :))

  ReplyDelete
 9. Vanakkam sir...

  I haven't watched the movie yet but felt waching while read down your post...
  just one thing i got...this movie might be the detailed explanation of the begining introduction of the movie "Reign of Assassins" - a chinese movie released in 2010...
  I think you might have watched that one as well...Hopefully i will watch this movie soon.

  Thank you very much for your posting...

  ReplyDelete
 10. சுரேகா,

  நலமா, 7 ஆம் அறிவு உங்களுக்கு வேலை செய்ஞ்சுடுச்சு போல :-)) நீங்களும் தெகாவும் நாணயத்தின் ரெண்டு பக்கமா அங்கே சிங்கம் சீறிடுச்சு இங்கே பூதூவிட்டிங்களே!

  தமிழ், தமிழன், என்று ஜல்லி அடிக்காமல் தெளிவா திரைக்கதைல ஒரு கமெர்சியல் படமா குடுத்தா யாரும் தப்பா நினைக்கமாட்டாங்க, லாஜிக் எல்லாம் யார் பார்க்கப்போறா, அதிசயமா நாங்க படம் எடுக்கிறோம்னு சொன்னா ,அப்போ சரியா இருக்கானு உரசிப்பார்க்கத்தான் செய்வாங்க.

  மஞ்சளுக்கு வெளிநாட்டுக்காரன் பேடண்ட் வாங்க்கிட்டான்னு வசனம்லாம் பேசி உசுப்பேத்துறாங்களே, அந்த பேட்டண்ட் வாங்கியது யாருமில்ல, இந்தியாவில இருந்து அங்கே போய் செட்டில் ஆன இந்தியன் தான், நம்மாளுங்க தான் நமக்கு ஆப்பு வைக்கிறது வெள்ளைக்காரன் கூட கொஞ்சமா தான் வைக்கிறான், அதே போல பாசுமதி அரிசியும் ரைஸ்டெக்னு இந்தியக்காரன் பண்ண வேலைதான்!

  ReplyDelete
 11. வாங்க வவ்வால்!

  :)

  நீங்க சொல்றது சரிதான்!

  எந்த ஒரு முன்னோட்டமும் தராம, பெரிசா பில்ட் அப் பண்ணாம இருந்திருக்கணும்.

  அதனால்தான் எதிர்பார்ப்பு அதிகமாகி...

  விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்குன்னு நினைக்கிறேன்.

  மேலும்...

  அந்தப்படத்தின் வளர்ச்சியின்போது அந்த அலுவலகத்துக்கு வேறு வேலையாகச் சென்றுவந்தவன் என்ற முறையில்...

  அவர்கள் படமாக்கியதில் பலவற்றை விட்டுவிட்டார்கள் என்று எண்ணுகிறேன்.

  மேலும்..இயக்குநருக்கு தெரிந்தவன் என்ற முறையில்...தவறுகளை அவரிடமே சொல்லும், மின்னஞ்சல் அனுப்பும் உரிமை இருப்பதால்...பொதுவெளியில் குறை சொல்லவேண்டிய தேவை எனக்கில்லை.

  ReplyDelete
 12. உண்மையில்..முதல்நாள், நான் பார்த்தபோது, கிராமத்து ரசிகர்கள் முழு திருப்தியுடன், சந்தோஷமாக, ரசித்துப் பார்த்தார்கள். அந்த அதிர்வைத்தான் பதிவு செய்தேன்.

  ReplyDelete
 13. "சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளுடன . . ."

  விமர்சனம் போல் இல்லை . . .
  தினத்தந்தி விளம்பரம் போல் இருக்கிறது


  நன்றி

  ReplyDelete
 14. நல்ல விமர்சனம்

  ReplyDelete
 15. வாங்க குரங்குபெடல்!

  உளம் திறந்த பின்னூட்டத்துக்கு நன்றி! :)

  ReplyDelete
 16. வாங்க ராஜபாட்டை...!

  நன்றிங்க!

  ReplyDelete
 17. வாங்க கேரளாக்காரன் !

  :)

  ReplyDelete
 18. நியாயமான விமர்சனம்..!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

உன்னைக் காணாது நானிங்கு..