பண்பலை அரசியல்
சிறிய திரைப்படங்கள் திரையரங்குகளை எட்டுவதே
மிகவும் கடினமான சூழலாக இன்று இருக்கிறது. அது எல்லோராலும் பரவலாக விவாதிக்கப்பட்டாலும்,
சிறிய படங்கள் எனப்படும், நட்சத்திர அந்தஸ்து இல்லாதவர்கள் இயக்கியோ, நடித்தோ எடுத்த
படங்கள் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கின்றன. அப்படி
முடித்து, வெளியிடவே முடியாத படங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு மட்டும் 60 ஐத் தாண்டுகிறது. இந்த விஷயத்தில்,
திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள் என்று பலருக்கும் பங்கு இருக்கிறது. பேசப்படும்
நடிகர்கள் இருந்தால்தான் அந்தப்படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கின்றன. சிறிய படங்களை
மக்களிடம் கொண்டு சேர்ப்பது இயலாத காரியமாகிவிட்டது. இவையெல்லாம், எல்லா ஊடகங்களும்,
திரைப்படத்துறையில் உள்ளவர்களும் துவைத்துத் தொங்கவிட்ட தகவல்கள்.!
இவையனைத்தையும் மீறி, பண்பலை எனப்படும் தனியார்
FM வானொலிகள் சிறு படங்களுக்கு எதிராக ஒரு அரசியலைச் செய்துவருகின்றன. ஒரு படத்தின்
இசை வெளியிடப்படுகிறது. அதன் பாடல்கள் நன்றாக இருந்தால், அவை வானொலியில் திரும்பத்திரும்ப
ஒலிபரப்பப்படுகிறது. அதன்மூலம் அந்தப் பாடலுக்கான விற்பனை அதிகரிக்கலாம். அந்தப்பாடலை
அலைபேசியின் அழைப்பு ஒலியாக பலரும் வைத்துக்கொள்ளலாம். அந்தப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும்
அதிகரிக்கலாம்.
ஆனால், அனைத்து வானொலி நிலையங்களும், எந்தப்படத்தின்
இசை வெளியிடப்பட்டாலும், எந்தவித பாரபட்சமும் இன்றி ஒலிபரப்ப முயற்சிக்கிறார்களா என்றால்,
அங்குதான் ஒரு புதுவித அரசியலை அவர்களும் அரங்கேற்றுகிறார்கள். ஒரு பெரிய படம், பெரிய
இசையமைப்பாளரின் இசை வெளியீட்டு விழா நடந்த அன்று மாலையே அந்தப்படத்தின் பாடல்கள் அனைத்து
வானொலிகளிலும் ஒலிபரப்பப்பட்டுவிடும். ஒரே நாளில் பத்துமுறை எட்டு சேனலிலும் வந்து
கிழித்தெடுக்கும். ஆனால், அதுவே ஒரு சிறிய படம், புதிய இசையமைப்பாளர் என்றால் அவர்கள்
ஒலிபரப்புவதே இல்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் ’ அந்தப்படமெல்லாம் ரிலீஸே ஆகாது
சார்!’ அல்லது ‘ படம் ரிலீஸ் ஆனவுடன் தான்
பாட்டுப்போடவேண்டுமென்பது உத்தரவு!”( இது எங்கள் சென்னை அகில இந்திய வானொலிக்கும் பொருந்தும்.
ஆனால் அவர்கள் கொஞ்சம் பரிசீலிப்பார்கள்! ) அப்படியென்றால், இன்னும் ரிலீஸாகாத பெரிய
படத்தின் பாடலை ஏன் ஒலிபரப்பினீர்கள் என்றால் ‘ஹி..ஹி..ஹி..!’ அல்லது ’அது கட்டாயம்
ரிலீஸ் ஆகிடும் சார்! என்றுதான் பதில் சொல்கிறார்கள்.
இவர்கள் ஏன் இப்படி புரியாதவர்களாக இருக்கிறார்கள்
என்று தெரியவில்லை. ஒரு திரைப்படத்தின் பாடல்கள் என்பது வேறு ! அதை ஆல்பம் என்கிறோம்.
அதாவது ஒரு படத்துக்கான பாடல்களை இசையமைப்பாளர் மூலம் வடிவமைத்து, பாடலாசிரியர் கொண்டு
வார்த்தைகள் கோர்த்து, பாடகர்களை வைத்துப் பாடி அவற்றை ஒரு ஆல்பமாக்கி, இந்தப்பாடல்களுக்கான
காட்சிகள் , மேற்கண்ட படத்தில் படமாக்கப்பட்டுள்ளன என்பதை அறிவிப்பதுதான் இசை வெளியீட்டுவிழா!
அதாவது , தனிப்பட்ட முறையில், அதிகாரப்பூர்வமாக பாடல்கள் வெளியிடப்பட்டுவிட்டன.
அதற்கும், அந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கும்
சம்பந்தமே இல்லை.! இதைப்பற்றி கவலைப்படவேண்டியவை தொலைக்காட்சிகள்..! அவர்களால்தான்
காட்சி இல்லாமல் பாடலை ஒளிபரப்ப முடியாது. ஆனால், சிறுபடங்களை முற்றிலும் ஓரங்கட்டும்
கூட்டமாகவே தனியார் வானொலிகளும் இருக்கிறார்கள்.
80,90 களில், எனக்குத்தெரிந்து, வெளிவராத
படங்களின் பாடல்கள் பல பிரபலமாகியிருக்கின்றன. ராமராஜன் நடித்து ‘காவலன்’ என்ற படம்
தயாரானது. அதில்தான் பிரபலமான ‘ ஒட்டடை ஒட்டடை கம்பத்துல மாமா!’ எனத்தொடங்கும் பாடல்
பதிவாகியிருந்தது. அதேபோல்…’சோலைப்பூந்தென்றலில் ஊஞ்சலாடும் செல்லப்பைங்கிளி..! இது
பூவே பொன் பூவே என்ற படம் என்று நினைவு! அதனை இலங்கை வானொலி ஒரு நாளைக்கு மூன்று முறை
ஒலிபரப்பி பிரபலப்படுத்தினார்கள்.‘ ‘ஒரு ஆலம்பூவு அத்திப்பூவைப்பாத்ததுண்டா! ‘ போன்ற
பாடல்கள் வெளிவராத படங்களில் பிரபலமானவை! இன்னும் பல பாடல்கள் உண்டு.
இன்றும், நான் பார்த்த வகையில், இசை வெளியீட்டு
விழா முடிந்து, ஆனால் படம் வெளிவராத பல பாடல்கள் மிகவும் இனிமையான இசையுடன் உள்ளன.
ஆனால், அவை மக்கள் கேட்கும் அளவுக்குச் சென்றடையாமல் உள்ளன. காரணம் அவை பிரபலப்படுத்தப்
படாததுதான்.!! ‘வர்ணம்’ என்றொரு படம் வந்தது. அதில் ஒரு பாடல் மிக நன்றாக இருந்தது.
ஆனால், ஒரு வானொலி கூட ஒலிபரப்பவில்லை.
திரைப்படம் இல்லாமல், திரை இசை இல்லாமல்
ஒரு நாள் கூட நமது பண்பலை வானொலிகள் நிகழ்ச்சிகள் நடத்த முடியாது. ஆனால், அவர்களும்
பெரிய படங்கள், பெரிய இசையமைப்பாளர்கள் என்று சாய்ந்துவிட்டு, பின்னர் சிறிய படங்கள்
ஏன் தோற்கின்றன? என்று கேட்டு நேயர்களை SMS செய்யச்சொல்லி, காசு பார்க்கிறார்கள்.
இந்த விவகாரத்தில், பல ரேடியோ ஜாக்கிகள்
மிகப் பெரிய காரணிகள்.! அவர்கள் தாங்கள் விரும்பும் பாடல்களை ஒலிபரப்புவது…! அல்லது
தங்களுக்குத் தெரிந்த பாடல்களை ஒலிபரப்புவது என்ற வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். சிறு
படங்களின் பாடல்களைக் கேட்பதுகூட இல்லை. எல்லா சிறுபடங்களின் பாடல்களும் நன்றாக இருப்பதில்லை.
அதில் சர்வ மொக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பெரிய படங்களிலும் அது சாத்தியம்தானே! ஆனால், ஒரு சிறு படத்தின் இசை வெளியிடப்பட்டுவிட்டால், அதன் பாடல்களில் ஏதாவது நல்ல பாடல்
சிக்கினால், அவற்றை ஒலிபரப்புவதால் எந்த நேயரின் காதும் கெட்டுப்போய்விடாது. இவர்களாகவே
முன் முடிவு எடுத்துக்கொண்டு, பாடல்களை ஒதுக்குவது, திரை உலகின் வளரும் எத்தனையோ கலைஞர்களை
தன்னால் இயன்றவரை கீழே அழுத்தும் முடிவாகத்தான் இருக்கும்.
இதற்கு பல தீர்வுகள் இருக்கின்றன. ஒரு நாளில்,
சிறு படங்களுக்கென்று ஒரு மணி நேரம் ஒதுக்கலாம். அதில் 5 முதல் 8 பாடல்களை ஒலிபரப்பலாம்.
இடையில் அந்தப்படங்களின் விளம்பரங்கள் வாங்கிக்கொள்ளலாம். அந்த படக்குழுவினரை பேட்டி
எடுக்கலாம். இப்படி ஒரு படம் வர இருக்கிறது அல்லது இப்படி ஒரு படத்தின் இசை வெளியிடப்பட்டிருக்கிறது
என்றாவது நேயர்கள் தெரிந்துகொள்வார்கள்.
என் திரையுலக நண்பர் ஒருவர் கூறுவார். ‘கட்டுச்சோத்தை
பிரிச்சு வைங்க! ‘ பிடிச்சவன் தின்னுட்டுப்போறான்’ என்று! அதுபோல், பாடலை ஒலிபரப்பினால், பிடித்தவர்கள் மீண்டும் அழைத்துக் கேட்டுவிட்டுப் போகிறார்கள்.
தமிழில் நிறையப்பாடல்கள் வருவதற்கான வாய்ப்புகளும் வரும். புதிய இசையமைப்பாளர்களும்
உற்சாகத்துடன் வேலை பார்ப்பார்கள்.
எல்லா அனிருத்துக்கும் 3, தனுஷ், ஐஸ்வர்யா
ரஜினிகாந்த் கிடைத்துவிடமாட்டார்கள். அவர்களையும் அலட்சியப்படுத்தாமல் ஆதரிக்கட்டும்
நமது FM வானொலிகள்!
ஏனெனில்…எறும்புகளும் சேர்ந்ததுதான் உயிர்க்கோளம்.!
small film producers should push this issue through their association/chamber.
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள். அவர்கள் தனித்தனியாகத்தான் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.! அதுதான் கொடுமை!
ReplyDeletegood post..ஆனால் இன்னும் விரிவாக எழுத வேண்டும் சுரேகா..
ReplyDeleteஇதற்கெல்லாம் ஆப்பு வரப் போகிறது.
ReplyDeleteஅன்பின் சுரேகா
ReplyDeleteஆதங்கம் புரிகிறது. சிறிய திரைப்படத் தயாரிப்பாளர்கள் கூட்டாக வானொலி நிலயங்களைச் சந்தித்துப் பேச வேண்டும். வானொலி நிலையங்களும் அனைத்து நல்ல பாடல்களையும் பாரபட்சமில்லாது ஒலி பரப்ப வேண்டும்.
நட்புடன் சீனா
வாங்க தலைவரே!
ReplyDeleteவெளிவராத பக்கமா இருப்பதால் ஒரு அறிமுகத்துக்கு எழுதினேன். இன்னும் நிறைய மேட்டர் இருக்கு!
கேபிள் ஜி!
ReplyDeleteஎன்ன ஆப்பு!
எப்படி?
நீங்க ஏதாவது திட்டம் வச்சிருக்கீங்களா?
வாங்க சீனா சார்!
ReplyDeleteதனியார் பண்பலை வானொலியாளர்கள் எப்போதும் தங்களை தேவதூதர்கள் போல் நினைத்துக்கொள்வதுதான் இதில் உச்சபட்ச நகைச்சுவை!
நல்ல பதிவு. சுரேகா இதற்கும் காலம் வரும்
ReplyDeleteவாங்க முரளி கண்ணன் அண்ணே!
ReplyDeleteஆம்..காலம் வரவேண்டும்.!
அரசியல் தான் எல்லா இடத்துலயும். :(
ReplyDeleteஇங்கே ஆந்திராவில் சின்ன பட்ஜட், அதிகம் ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர் படங்களை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் ரெடியாக இருப்பதில்லை. பெரும் பட்ஜட், பெத்த ஸ்டார் படங்கள்தான் ஓடும் (ஓடவிடுவங்களோன்னு கூட நினைப்பேன்)
டப்பிங் படங்கள் சக்கை போடு போடும். பையா, ஆயிரத்தில் ஒருவன் எல்லாம் அப்படித்தான். இன்று ஏதோ மீட்டிங் போட்டு இந்த குறைபாடுகளை எல்லாம் நிவர்த்தி செய்ய ஆவன செய்யப்போவதா சொல்லிக்கிட்டு இருக்காங்க.
இது மாதிரி தயாரிப்ப்பாளர் சங்கமே ஏதாவது செஞ்சா சரியாவருமோ?
வாங்க புதுகைத் தென்றல்..!
ReplyDeleteஆமா..!
கண்டிப்பா தயாரிப்பாளர் சங்கம் முழுமையாக ஈடுபடவேண்டிய விஷயம் இது!
பூவே பொன் பூவே படம் வெளியாகவில்லை என்ற தொனியிலா எழுதப்பட்டிருக்கு? அப்படியென்றால் திருத்திவிடுங்கள்
ReplyDeleteஇப்போதெல்லாம் சின்ன பட்ஜெட்டில் வந்தாலும் பெரும் திறமைகளைக் கூடச் சீண்டமாட்டாங்க, கொலவெறி பிடிச்சு அலையுதே இசையுலகம்
வாங்க கானாபிரபா !
ReplyDelete’பூவே பொன் பூவே பற்றி...
ஓ...அப்படியா? பிரசாந்த் நடித்த படம்தானே? வெளிவந்ததா? மன்னிக்கணும். தெரியவில்லை.
அந்தப்படத்தை விட பாடல் பிரபலமானது என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தாலும்..
வெளியாகவில்லை என்று எண்ணித்தான் இருந்தேன்.
அந்தப்படம் மலையாள டப்பிங், மம்முட்டி நடிச்சிருந்தார் பாசில் இயக்கம்
ReplyDelete