Pages

Saturday, February 20, 2010

தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தில், என் ஞாபக அடுக்குகளில் ஈரம் சேர்த்துவைத்திருக்கும் ஊர்! என் சிறுவயது அனுபவங்களில் நான் பார்த்த மிகப்பெரிய ஊர்.
நான் பிறந்தது அங்குதான். திருநெல்வேலி சாலையில், முனிசிபல் ஆபீஸுக்கு பின்னால் அபிஷேகபுரம் தெரு! தெருவின் இருமருங்கிலும் நேர் எதிர் வீடுகள். தெருவின் கடைசியில் ஒரு பெரிய பிள்ளையார்.! சிறிய கோவில்.! தெருவுக்குப்பின்னால் தாமிரபரணி. ஒவ்வொருவீட்டுக்கும் ஒரு படித்துறை!

அங்கு அப்போது பரதன், பாக்கியலெட்சுமி, வாஹினி என மூன்று தியேட்டர்களில் லீவுக்குச்செல்லும் ஒரு மாதமும் திரையிடும் அனைத்துப்படங்களையும் பார்த்திருக்கிறேன். நினைச்சா குற்றாலத்துக்கு நண்பர்களுடன் நடந்தோ, சைக்கிளிலோ சென்று ஆட்டம் போட்டுவிட்டு நல்லபிள்ளையாக மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவது.!

அதைவிட்டால், சன்னதித்தெருவில் ஒரு மாடியில் இருந்த அரசு நூலகத்தில் சென்று கோகுலம், அம்புலிமாமா, பாலமித்ரா, முத்தாரம், யுனெஸ்கோ கூரியர் என்று பலவகைப் புத்தகங்களைப் படித்துவிட்டு வருவது!

தென்காசியில்தான் நான் ரம்மி விளையாடக்கற்றுக்கொண்டேன். அப்புறம் ட்ரேட் என்றொரு விளையாட்டு! கிரிக்கெட் ஆடக்கற்றுக்கொண்டதும், அதன் சட்டதிட்டங்கள் தெரிந்ததும் அங்குதான்! இரவானால் ஐஸ்பாய் அல்லது செஸ்! விளையாட்டுக்காக ஓவர் டைம் பார்த்த நாட்கள் அவை! கனவெல்லாம், கிரிக்கெட் ஸ்டெம்ப்பை செஸ் போர்டில் ஊன்றி கட்டம் கட்டமாகத் தாவி ரன் எடுப்பது போலெல்லாம் வரும்!

அந்தத்தெருவில், நான் விளையாடாத வீட்டு வாசலோ, பந்து பொறுக்காத சாக்கடையோ, முட்டியில் ரத்தம் வரவைக்காத கருங்கல்லோ இல்லை! குரங்குகளின் ராஜ்ஜியம் மிகுந்த ஊர். ஒரு நாள் அம்மா உப்புமா கிண்டிவைத்துவிட்டு , தெருவில் விளையாடிய என்னைக்கூப்பிட வர, நாங்கள் வீட்டுக்குள் நுழையும்போது, சுட்டாலும் பரவாயில்லை என்று முழு உப்புமா பாத்திரத்தையும் தூக்கிக்கொண்டு ஒரு குரங்கார் நின்று கொண்டிருந்தார். நாங்கள் அவரை விரட்ட, மேலே ஏறி நிதானமாக, என்னை பார்க்கவைத்துக்கொண்டே எல்லா உப்புமாவையும் தின்று முடித்தார். அந்த உப்புமா இன்னும் ஏக்க லிஸ்ட்டிலேயே இருக்கிறது. (அடுத்த ஜென்மத்துல நான் குரங்கா பிறந்து அதுக்கிட்டேருந்து உப்புமாவைப் பிடுங்கித்திங்கலை..? :) )

என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாவம் செய்த ஊரும் அதுதான்!
அடுத்தவர் நலன்மேல் அக்கறை வரவைத்த ஊரும் அதுதான்!

அது இன்னொரு நாளில்.....

17 comments:

 1. // தெருவுக்குப்பின்னால் தாமிரபரணி. ஒவ்வொருவீட்டுக்கும் ஒரு படித்துறை//

  படிக்கும் போதே இந்த இடத்தை பார்க்கத் தூண்டுகிறது சார்.. நான் பிறந்து வளர்ந்ததும் கிட்டத்தட்ட இந்தவொரு சூழலமைப்பு தான்.. ஒரே வித்தியாசம் சென்னை கூவம்.. :)

  //அடுத்த ஜென்மத்துல நான் குரங்கா பிறந்து அதுக்கிட்டேருந்து உப்புமாவைப் பிடுங்கித்திங்கலை..? //

  அடுத்த ஜென்மத்திலும் உப்புமாவே தானா??? ;)

  எதிர்வரும் பகிர்வுகளுக்கு காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 2. தென்காசி சாரலும், தென்பொதிகை மலை தென்றலும் உணர்ந்திட்ட உடம்பு உலகமெங்கு சென்றாலும் மறந்திடுமா..

  ReplyDelete
 3. Tenkasiyila Thamirabarani kidaytathu

  ReplyDelete
 4. வாங்க அன்புடன் மணிகண்டன்..!

  ஆறு ஆறுதானே!...ஒருகாலத்தில் கூவமும் சூப்பராத்தான் இருந்திருக்கு!

  நாமதான் அதை.... :(


  பின்ன...ஆசையா சாப்பிட வச்சிருந்த உப்புமாவை தனியா தின்னா...? :)
  நான் ஏமாந்ததுக்கு மேல ஆசைப்படலை!! :)

  மிக்க நன்றிம்மா!

  ReplyDelete
 5. வாங்க துபாய் ராஜா!

  ஆமாங்க..! அது ஒரு சுகம்!

  வருகைக்கு நன்றிங்க!

  ReplyDelete
 6. மன்னிக்கவும்...

  பதிலுக்கே நான் வரவில்லை. அது தவறாகவே இருந்தாலும்....!

  அனானிகளுக்கு பதில் இடுவதும் இல்லை.

  ReplyDelete
 7. தென்காசி மிக அற்புதமான ஊர் அல்லவா.
  நகரம், கிராமம் இரண்டின் குணங்களை கொண்ட ஒரு அற்புதமான ஊர். அதுவும் அருகில் அற்புதமான கிராமங்கள்; கீழப்பாவூர், பாவூர் சாற்றம், எலத்தூர், சுரண்டை, குத்துக் கல் வலசை, நயினாரகரம்.

  நீங்கள் சொல்லும் படித் துறை கடனா நதி அல்லது தாமிரபரணியின் பிரிவு நதியா.

  ReplyDelete
 8. ??வாஹினி??//

  வாஹினி தியேட்டர் இப்ப கிடையாது.........................

  ReplyDelete
 9. நினைவுகளை தட்டி எழுப்பி விட்டீர்கள் நன்றி.

  ReplyDelete
 10. தென்காசி- பெயரை கேட்டாலே சாரலடிக்கிறது.

  ஆனால், தாமிபரணி அங்க எங்க?

  ReplyDelete
 11. வாங்கு யாஹூ ராஜு!

  ஆமாங்க இன்னும் குறிப்பட வேண்டிய அற்புத ஊர்கள் நிறைய இருக்கு!

  இலஞ்சி, சுந்தரபாண்டியபுரம் என...

  மன்னிக்கணும். நான் தப்பா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். குற்றாலத்திலேருந்து வருவது தாமிரபரணின்னு தப்பா நினைச்சுட்டேன். அது நீங்கள் கூறும் நதியாகத்தான் இருக்கவேண்டும்.

  மிக்க நன்றி!

  ReplyDelete
 12. வாங்க அத்திரி!
  ஆமாங்க இப்போ வாஹினி கிடையாது.

  இப்போ புதுசா..குற்றாலம் ரோட்டில் தாய்பாலான்னு ஒரு தியேட்டர் இருக்கு...ரைட்டா?

  ReplyDelete
 13. வாங்க அக்பர்..!
  மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 14. வாங்க ஆடுமாடு..

  ஆமாங்க!

  தப்பா சொல்லிட்டேன். மன்னிக்கணும்.

  ReplyDelete
 15. அன்பின் சுரேகா

  கொசுவத்தி அருமை - ரம்மி ஆடிட்டு டிரேடு ஆடினீங்களா - பரவால்லையே - பயலா இருக்கும் போதே ...ம்ம்ம்ம்

  நாங்கல்லாம் ரம்மி கத்துக்கிட்டது டிரேட் கத்துக்கிட்டு ரொம்ப வருசம் கழிச்சுத்தாங்க - ஆமா

  நல்ல கொசுவத்தி
  நல்வாழ்த்துகள் சுரேகா

  ReplyDelete
 16. http://cheenakay.blogspot.com/2007/08/1.html

  http://cheenakay.blogspot.com/2007/08/2.html

  http://cheenakay.blogspot.com/2007/08/3.html

  http://cheenakay.blogspot.com/2007/08/4.html

  http://cheenakay.blogspot.com/2007/11/5.html

  நேரம் கிடைக்கும் போது படியுங்கள் - என்னோட கொசுவத்தி

  ReplyDelete
 17. MY NAME IS DIWAN

  ReplyDelete