Monday, January 23, 2012

கந்தக சாமி!அய்யா..

ஏம்பேரு கந்தக சாமி!
பொறந்த எடம் பூமிதாஞ் சாமி!
நான் வானத்தில் இல்லாத சாமி
ஆனா வாணம் செய்யுற சாமி!

நாம்பாட்டுக்கும் செவனேன்னு
நல்லகாலம் பொறக்குமுன்னு
மண்ணுக்குள்ள மகிழ்ச்சியா
மக்கிக்கெடந்தேன் சாமி!

என்னயத்தேடிவந்து
எக்குத்தப்பா நோண்டித்தந்து
எதுக்காவது பயன்படுவேன்னு
எப்படியோ கண்டுக்கிட்டாங்க.!

மொதல்ல நாம்பாட்டுக்கும்
மொறயாத்தான் இருந்தேன்.
பொறவியிலேயே நமக்கு
கோபம் கொஞ்சம் அதிகம் சாமி!
அதப்போய் மறந்துப்புட்டு
அடக்கிவச்சு அடக்கிவச்சு
அழுத்தமா மூடிவச்சு
ஒருநாள் வெடிக்கவச்சு
ஒண்ணுமில்லாம பண்ணிப்புட்டாங்க!

நானும் சும்மா இல்ல..
நாலஞ்சு பயலுகளை நயமா
நரகத்துக்கனுப்பிட்டு..

அதெப்புடி நரகம் னு
அசதியா கேக்குறீகளா?
என்னய தூக்கிப்போட்டு
எகனை மொகனையா
வெளயாண்டவன்
எப்புடி சாமி சொர்க்கம் போவான்?

நல்லதே நடக்காதான்னு
கலங்கிப்போய் கெடந்தப்பதான்
பளபளப்பா எரிய வச்சு
பட்டாசா மாத்தி என்னை
பார்புகழ வச்சாங்க.!

சிவகாசிப்பக்கம்
அந்த சின்னப்புள்ளைங்க
என்னைத்தொட்டு
வேலைபாத்து
அவுக தாத்தா பட்ட கடன
தடுமாறி அடச்சாங்க!

அதுல ஒரு கொடுமை சாமி!
ஏங்கொணம் எனக்கே பிடிக்காது.
மனுசப்பய மாதிரியே
எங்க இருக்கோம்னு தெரியாம
ஏறிக்குதிச்சுப்புடுவேன்.
அப்புடித்தான் செலபேர
அழிக்கவேண்டியதா போச்சு!

எல்லாப்பயலுக்குள்ளும்
எங்கேயோ நான் இருக்கேன்
கோபம் சேமிக்காம
கொதிச்செழுந்து வர்றவனும்
கோபத்துக்கே பொறந்த நானும்
கிட்டத்தட்ட ஒண்ணுதான்!

நல்லவன் ஒருத்தன
நசுக்க நெனக்கிறவன்
ஒருத்தன குறிவச்சு
ஒரு கூட்டம் கொல்லுறவன்
அத்தன பேருந்தான்
என்னோட மொதலாளி!
ஆனாலும் பலதடவை
அவனுக்கே நான் கொலையாளி!

நாட்டு வெடிகுண்டா
நெறய நாள் இருந்திருக்கேன்.!
நக்ஸலைட் பொக்கிஷமா
நாந்தானே எப்பவுமே!

சீனாக்காரன் என் சித்தப்பா
மொறவேணும்
ஆனா இந்த அமெரிக்கா.?
அண்ணன் மொற வேணும்.!
என்னய விட மோசமா
இடம் பொருள் பாக்காம
எதுத்தவன அடிக்கும் பய!

இப்பல்லாம் நமக்கு
வயசாகிப்போச்சு சாமி!
இளந்தாரிப்பயலுக
பலபேரு வந்துட்டாய்ங்க!

டெட்டனேட்டர் பூதம்கிறான்
ஆர் டி எக்ஸ் ங்குறான்!
பாஸ்பரஸ் பாமுங்குறான்!
பெட்ரோல் வெடிகுண்டுங்குறான்!

டைனமைட்டுன்னு ஒரு
சாத்தான செஞ்சவரு
தப்பால்ல போயிருச்சுன்னு
நோபல் பரிசு செஞ்சு
நல்லபேர வாங்கிக்கிட்டாராம்.!

என்னய கண்டபய
என்ன புண்ணியம் செஞ்சாலும்
என் பாவம் கழுவ
இன்னும் எவனும் பொறக்கல !

ஆனாலும் நாந்தான் சாமி
அத்தனைக்கும் மூத்த சாமி!
ஏன்? னு கேளு சாமி
எனக்கப்புறம் இங்க
எத்தனைபேர் வந்தாலும்
மொதல்ல வெடிச்சது
நாந்தான் சாமி!

இருந்தாலும் எனக்கு
மனசு கொதிக்குது சாமி!
எத்தனை பேரை
கொன்னுருப்பேன்!
எத்தன நிம்மதி
தின்னுருப்பேன்!
இதெல்லாம் வேணாம்னு
இப்பவே முடிவெடுத்து
என்னய மறுபடியும்
எடுத்த எடத்துலயே
புதைங்க சாமி!

அப்படிச்செய்யலைன்னா
அதுவரைக்கும்...

ஆக்கலுக்கு யாருன்னு
அடிச்சுக்குங்க சாமி!

காத்தலைப்பத்தி நீங்களே
கவலைப்படல சாமி!

அழிக்கறதுக்கு
நமக்குத்தான்
ஆணை இருக்கு சாமி!


அதுனால இங்கு நான்
கடவுள் வரிசையிலே...

கந்தகசாமி!


ஒரு நெருங்கிய பிரபலத்தின் விருப்பத்தின் பெயரில் மீண்டும்.. 


 (   பதிவெழுத நேரமில்லைன்னா சும்மா இருக்கலாமுல்ல.. மீள்பதிவு...!! ஹூம் ...இது ஒரு பொழைப்பு!?   - என்று தங்கமணி சொல்லலை!  )

5 comments:

 1. எனக்கென்னவோ இப்பதான் படிக்கிறமாதிரி இருக்கு.

  நல்லாயிருக்கு

  ReplyDelete
 2. வாங்க புதுகைத் தென்றல்..!!

  நன்றிங்க!

  ReplyDelete
 3. கந்தக வகை கவிதை சூப்பர்.

  ReplyDelete
 4. மிக்க நன்றி தனசேகரன்!

  ReplyDelete
 5. அருமை... இதுக்கு மேல சொல்ல தெரியலங்க

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...