யான்பு அல் சினைய்யா

ஊர்களும் மனிதர்களும் என்னைச்செதுக்கியவர்களென்றால்...அது மிகையில்லை. கடல்கடந்த ஒரு தேசத்தில், அதன் கலாச்சாரம், மொழி, உணவுவகைகள் என்று எதுவுமே தெரியாமல் நான் போய் இறங்கிய ஊர்தான் யான்பு அல் சினைய்யா. சௌதி அரேபியாவின் மிகச்சிறந்த கடற்கரை நகரங்களில் இதுவும் ஒன்று.!

சௌதி அரேபியாவின் பல கடற்கரை நகரங்கள் அரபிக்கடலில் அமைந்திருந்தாலும்..யான்பு என்ற அந்த நகரம் செங்கடல் ஓரத்தில் அமைந்திருக்கிறது. அதாவது தேசத்தின் மேற்கு எல்லையில்..! ஊருக்குக்கிளம்பும் முன்னால், சௌதியைப்பற்றி பல்வேறு வதந்திகளை சுற்றியுள்ளவர்கள் கிளப்பியிருந்தாலும், ஊர்களும், மனிதர்களும் தரும் போதையில் நான் ஆட்பட்டிருந்ததால், அவர்கள் சொல்லியவற்றை காதில் வாங்காமல், மனதை வெள்ளைக்காகிதமாய் வைத்துக்கொண்டு , எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் சென்று இறங்கினேன்.

அதற்கு பங்கம் வைக்காமல், ஒரு அழகான, சக மனிதர்களை மதிக்கும், உழைப்பை நம்புபவர்களுக்கு உயர்வளிக்கும், கட்டுப்பாடான வாழ்க்கையை வலியுறுத்தும், ஒழுங்கைக் கடைபிடிக்கும்,கடவுளை நம்பும் ஒரு அற்புத தேசம் என்னை வரவேற்றது.

சௌதி அரேபிய மன்னராட்சி, இரண்டு நகரங்களை தொழில் வளர்ச்சிக்கென்றே நிறுவியிருக்கிறது. அவை ஜுபைல் மற்றும் யான்பு..அப்படி 1970களின் இறுதியில் நிர்மானிக்கப்பட்ட யான்புவில்தான் நான் குடியேறினேன். யான்பு அல் பஹார் என்பது நகரத்தின் பெயர். அதாவது கடற்கரையிலுள்ள யான்பு அல்லது துறைமுக யான்பு! அங்கிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் மதினா செல்லும் சாலையில் கட்டமைக்கப்பட்ட நகரத்தின் பெயர்தான் யான்பு அல் சினைய்யா! அதாவது தொழிற்பூங்கா யான்பு!

சாலைகளும், கட்டிடங்களும் எனக்கு பிரமிப்பூட்டின. இப்படி ஒழுங்காக இருக்கமுடியுமா என்று ஏங்க வைத்தன. யான்புவிலிருந்து கிளம்பும் சாலையில் மனித நடமாட்டமே இல்லாத பகுதிகளிலும், சாலை முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது. யான்பு அல்சினைய்யா. இரண்டு பெரிய பகுதிகளை உள்ளடக்கியது. Yanbu Light Industries Park, Yanbu Industrial College. LIP யில்தான் அனைத்து தொழிற்சாலைகளும், இதில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமும், கடல்நீரைக்குடிநீராக்கும் நிறுவனமும் அமெரிக்க நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலை இங்குதான் உள்ளது. மணல் மாபியா என்று தூத்துக்குடி பக்கம் டாட்டாவுக்கும், இன்னொரு .....ராஜன் (பெயர் நினைவில்லை) என்பவருக்கும் முட்டிக்கொண்டு பிரச்னையானதே , அந்த டைட்டானியம் டை ஆக்ஸைடுதான்!

மக்களில் பாதிக்குப்பாதி வெளிநாட்டவர்கள். ! இந்தியா,இலங்கை , வங்கதேசம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மக்கள்தான் அதிகம். அதிலும் பெரும்பான்மையானவர்கள் தன் குடும்பத்தை விட்டுவிட்டு தனியாளாக வந்து வேலைபார்க்கும் ஆண்கள்தான்.! சொற்ப அளவிலான பெண்கள் தாதிகளாகவும், வீட்டு வேலைக்கும் வந்திறங்கியிருப்பார்கள்.

அவர்கள் தேசத்திலும், ஆண்டாண்டு காலம் வாழ்ந்தவர்களை ஒதுக்கிவிட்டு, வந்தேறிகள் ஆட்சிசெய்யும் ஒரு அவல நிலை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது பெரிய அளவில் வெளிவரவில்லை. காரணம், மன்னராட்சி..சுமுகமாக, மக்களுக்கு எல்லாம் கிடைக்கும் வண்ணம் நடந்துகொண்டிருப்பது.!ஆதி அரேபியர்களை பதூ.. என்று அழைப்பார்கள். அவர்கள் பெரும்பான்மையாக விவசாயம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். ஒட்டகம் வளர்த்துக்கொண்டிருப்பார்கள்.

மக்களைப்பொறுத்தவரை, வெளிநாட்டவரைப் புகழ்வதும் இல்லை . இகழ்வதும் இல்லை. சமமாகத்தான் பாவிக்கிறார்கள். நம் ஆட்கள் செய்யும் சேட்டைதான் அவர்களை கோபப்பட வைத்துவிடுகிறது.

மக்கள் அனைவரும், சட்டதிட்டத்துக்கு கட்டுப்பட்டுவிடுவார்கள். ஆளில்லா சாலையில் கூட சிக்னலை மீறும் சௌதிக்கள் மிகக்குறைவு. எல்லா விஷயங்களிலும் ஒரு ஒழுங்கை இங்குதான் நான் கற்றுக்கொண்டேன். வேலை செய்யும் நேரம் காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிக்கு முடிந்ததும் இங்குதான்.

பெரிய அதிகாரிகளை நேரடியாகப் பெயர்சொல்லி அழைக்கலாம். தவறில்லை என்று கற்றுக்கொண்டதும் இங்குதான். (நமக்குத்தான் சார்..சார்.. என்றே கூப்பிட்டுப்பழகிவிடுகிறது)
அதிவேகமாகக் கார் ஓட்டி முன்னூறு கிலோமீட்டர் தூரத்தை இரண்டு மணிநேரத்தில் கடந்ததும் இங்குதான்!
யான்புவில்தான் நான், பில்லியர்ட்ஸ் ஆடக்கற்றுக்கொண்டேன். செஸ்ஸில் பல உயரங்களை எட்டினேன். பிலிப்பினோ மாஸ்டர் திரு. மெலிட்டன் டெலா க்ரூஸிடம் கராத்தே கற்றுக்கொண்டேன்.

நிறைய வாசித்தேன். அதைவிட நிறைய நிறைய படம் பார்த்தேன். நிறைய நண்பர்களைப்பெற்றேன். மலையாளம், உருது, அரேபிய மொழிகளும், வங்காள , பிலிப்பினோ மொழிகளில் கொஞ்சமும் கற்றுக்கொண்டேன்.

விடுமுறையில், கெய்ரோ, அலெக்ஸாண்ட்ரியா என்று எகிப்திய நகரங்களைச் சுற்றிவந்தேன். கெய்ரோ விமான நிலையத்தில் நடந்த நிகழ்வு ஒன்று....இன்று நான் தொடர்ந்து குருதிக்கொடை கொடுப்பதற்கு அடிப்படைக்காரணமாக அமைந்தது.(அது இன்னொரு சமயம்..)

என் வாழ்வின் 3 ஆண்டுகளைக் கழித்த இந்த நகரம், என் வாழ்வின் 10 ஆண்டுகளுக்கான அனுபவத்தை அள்ளித்தந்தது.

பொதுவாக சௌதிக்கள் ஆழ்ந்து சிந்திப்பதில்லை என்று ஒரு எண்ணமுண்டு. சில நேரங்களில் அது உண்மையென்பதை நானே கண்டிருக்கிறேன். அப்படி ஒருமுறை முட்டாள்தனம் செய்த ஒரு சௌதி நண்பனிடம் பேசிக்கொண்டே காரில் சென்று கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் நான் கேட்டேன்.

ஏண்டா..நீங்க கொஞ்சம் மந்தமாவே இருக்கீங்க? சில சமயங்களில் அடி முட்டாளா இருக்கீங்க?

அதற்கு அவன் சொன்னான்.

நாங்க முட்டாளா இல்லைன்னா, உங்களை இங்க வந்து வேலை பாக்க வர விட்டிருப்போமா? உங்க பொழைப்பு நாறியிருக்கும்...!

வாஸ்தவமான பேச்சு! :)





Comments

  1. /என் வாழ்வின் 3 ஆண்டுகளைக் கழித்த இந்த நகரம், என் வாழ்வின் 10 ஆண்டுகளுக்கான அனுபவத்தை அள்ளித்தந்தது./
    இதைவிட வேறென்ன வேண்டும் இந்த ஊரைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள????

    ReplyDelete
  2. அட எப்ப சவுதியில் இருந்தீங்க!!!ஜெத்தாவில்தான் ஒரு 10 வருசமா குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறேன்
    /நாங்க முட்டாளா இல்லைன்னா, உங்களை இங்க வந்து வேலை பாக்க வர விட்டிருப்போமா? உங்க பொழைப்பு நாறியிருக்கும்/
    உண்மைதான்.ஆனால் முட்டாள் இல்லை சோம்பேறிகள் தொடர்ந்து ஒரு 8 மணிநேரம் ஒரு வேலையை செய்யமாட்டார்கள்.

    ReplyDelete
  3. அட!

    இங்கதான் இருக்கீங்களா?நான் அல்-கோபாரில் இருக்கேன் சுரேகா.அழை எண் தெரியபடுத்த இயலுமா?

    rajaram.b.krishnan@gmail.com

    அருமையான பகிர்வு.

    ReplyDelete
  4. வாங்க அன்புடன் அருணா..!

    ஆமாங்க! :)

    மிக்க நன்றி!

    ReplyDelete
  5. வாங்க கல்ஃப் தமிழன் அண்ணாச்சி!

    அது ஒரு கனாக்காலம்...! :)

    1997 - 2000 வரை 3 ஆண்டுகள் 3 மாதங்கள்.

    ஆமா.. இப்போ கொஞ்சம் வளந்திருப்பாங்களே..அப்துல்லா மன்னரான பிறகு!

    ReplyDelete
  6. வாங்க பா.ராஜாராம் சார்!
    மன்னிக்கணும்.
    இப்ப இல்லை!

    முன்னாடி இருந்தேன்.

    மிக்க நன்றி!

    ReplyDelete
  7. ஏங்க பட்டம் வாங்குனா ஒரு லிஸ்ட்.கத்துக்கப்போனா சதுரங்கம் முதல் ஒரு லிஸ்ட்.ஏங்க மக்க,மனுஷளோட உரையாட,உறவாட பொழுதிருக்குமா? சௌதியர்களப்பத்தி சொன்னிங்கள்ல.அது மாதிரி தான் இங்கயும்.இங்க உள்ள ஆதிவாசிகள் முழிச்சுக்கற அன்னிக்கு நாங்களும் ஊர்ப்பக்கம் வரணும்தான்.

    ReplyDelete
  8. 1997 - 2000 -சவுதி சென்று அங்கு தன்கி அதனைப் பற்றிய ஒரு ந்லல இடுகை இட இத்தனை ஆண்டுகளா ? அது சரி 10 ஆண்டு அனுபவம் - அதனால் தான் 2010 ல் இடுகையா
    வாழ்க சுரேகா

    ReplyDelete
  9. வாங்க சாந்தி லெட்சுமணன்...

    நேரம் நிறைய இருந்ததுங்க! அதுவும் சிலவிஷயங்கள் திட்டமிடாம, தானா நடந்துடும்.அதுமாதிரிதான் இந்த கற்றுக்கொண்ட விஷயங்களும்...

    ReplyDelete
  10. வாங்க சீனா சார்!

    ஆமா... :)

    இந்த விளக்கம்கூட நல்லா இருக்கே!

    ReplyDelete
  11. இன்னும் எவ்வளவு மிச்சமிருக்கு..?:))

    ReplyDelete
  12. நல்லா எழுதிருக்கீங்க சார்.

    ReplyDelete
  13. //இன்னும் எவ்வளவு மிச்சமிருக்கு..?:))//

    repeattu

    ReplyDelete
  14. nanum yanbu al sinaiyahvil than kuppai kotti kondirukiren!!!

    ReplyDelete
  15. ஒவ்வொரு ஊரைப்பற்றியும் மிக அருமையாகப் பகிருகிறீர்கள் சுரேகா இந்த அனுபவங்களை அனுபவித்து உணரவே தொடர்ந்து படிக்கிறேன் அருமை

    ReplyDelete
  16. //அப்துல்லா மன்னரான பிறகு!

    //

    அட!நான் எப்ப ராஜாவானேன்?? வேணும்னா கெசட்டில் என் பேரை ராஜான்னு மாத்திக்கலாம் :))

    ReplyDelete
  17. அன்பு அப்துல்லா..!

    நீங்க எப்பவுமே எங்களுக்கு ராஜாதான் ராஜா! :)

    ReplyDelete
  18. வாங்க தேனம்மை லெட்சுமணன்.!

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  19. வாங்க கேபிள் ஜி!

    அது இருக்கு நிறைய!! :))

    ReplyDelete
  20. வாங்க இப்னு ஹம்துன், பாபு, மூர்த்தி!

    மிக்க நன்றிங்க!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !