Wednesday, January 30, 2008

உன்னைத்தேடும் முயற்சியில்..
எழுத யத்தனிக்கும்
எல்லாக்
கவிதைகளுக்குள்ளும்
ஓடி ஒளிந்துகொள்கிறாய்
நீ !

உன்னைத்தேடும்
முயற்சியில்
வார்த்தை
வசப்படாமல்,
ஏதோவொன்றை
கிறுக்கவும் முடியாமல்
காகிதச்சிறையில்
சிக்கி முடிகின்றன
என் எல்லாக்
கவிதைகளும்!

எப்படியாவது
கண்டுபிடித்து
விடலாமென்று
பேனா மையை
அனுப்பினால்
அதற்கும் கரிபூசி
வெண்மையாய்
சிரித்து வைக்கிறாய்!

உன்னை
வெளியே
கொண்டுவர
அதிக வார்த்தைகளை
வீணாக்க
விரும்பவில்லை!

ஒரு அறிவிப்பு
வெளியிடுகிறேன்.
'முத்தமிடும்
நேரமிது!'
இதழ்களை
மட்டுமாவது
அனுப்பிவை!

நான் எழுதவேண்டும்.!

Monday, January 28, 2008

குழப்பம் மட்டுமே நிரந்தரம்.இப்படி ஒரு பதிவு போட்டுட்டு அதுக்கு தொடரும் வேற போட்ட எனக்கு எந்த ஜென்மத்திலும் மோட்சம் :-) கிடைக்காது ன்னு தெரிஞ்சிருந்தும்....


கடவுள் யார் யாருக்கு தேவையில்லைன்னு பாக்கவேண்டிய கட்டாயத்தில்...இறங்கிட்டேன்..!
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன?


நிறைய தப்பு பண்ணிட்டு.. தனக்கெதிரா ஒண்ணுமே நடக்காம இருக்கவும்..இன்னும் தவறுகளின் செறிவை அதிகப்படுத்திக்கிட்டு..ஒரு ஈன மானமே இல்லாத எல்லா ஆளுங்களுக்கும்....கடவுள் தேவை இல்லை!


இன்னிக்கு செத்தா...நாளைக்கு பீருன்னு..! (எங்க பால் கிடைக்கும்?) தன் சந்தோஷம் மட்டுமே குறியா வாழ்ந்து..தன் சார்பான குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்துற எல்லா குடிகார ஓநாய்களுக்கும்...கடவுள் தேவை இல்லை!

எல்லா இயமும் பேசிக்கிட்டு...அவர்கள் சொன்னதில் கடவுள் மேட்டரை மட்டும் எடுத்துக்கிட்டு..ஆனா சொன்னவுங்களுக்கே சிலை வச்சு மாலை போடும் எல்லா கலர் சட்டைக்காரங்களுக்கும்...கடவுள் தேவை இல்லை!


தன் சார்ந்த மக்களுக்கு எல்லா நன்மையும் செய்து. அடிப்படையில் அன்பை மட்டுமே வேலையாகவும்..மனிதாபிமானமே தொழிலாகவும் கொண்ட எல்லா மனிதனுக்கும்....கடவுள் தேவை இல்லை!

தன் தாய் தந்தையை அன்புடனும்..மனைவி (அ) கணவனை பரிவுடனும்..குழந்தைகளை அறிவுடனும் பேணும் எல்லா இயல்பான மனிதருக்கும்...கடவுள் தேவை இல்லை.!


ஊரில் இருப்பவனையெல்லாம் இளிச்சவாயனாக எண்ணி அரசு வருமானத்தை மீறி..பேனாவை எடுத்து ஒரு பேப்பரில் இங்க் தெளிப்பதற்கே..காசு கேக்கும் லஞ்ச வேட்டை ராஜாக்களுக்கு....கடவுள் தேவை இல்லை!


'அவனை'க்காண நம்ம்ம்பி வரும் பக்தர்களை அடிமாடுளை விடக்கேவலமாய் நடத்தியும், பிச்சையெடுக்க வந்தவர்கள் போல் அணுகியும் அவர்கள் போடும் உண்டியல் காசில் வயிறு வளர்க்கும் ஏமாற்றுக்காரர்களுக்கு..........கடவுள் தேவை இல்லை!

என் மதம்தான் சிறந்தது! என் சாமிதான் புனிதமானது..இங்கு வந்தால்தான் மோட்சம் கிடைக்கும்னு புத்திசாலித்தனமா எமாற்றி ( அப்படி இருந்தா , ஏண்டா .அவன் என்னை இந்த மதத்தில் படைச்சான்?ன்னு ஒரு புள்ளையும் கேக்காது ங்கிறதெல்லாம் வேற விஷயம்) ஆள்சேர்க்கும் எல்லா கூட்டத்துக்கும் அடுத்த மதக் கடவுள் தேவை இல்லை!

இன்னும்...

செய்த தவறையே திரும்பச்செய்யும் திருடர்கள். கொள்ளையர்கள்.

எந்தப்பாவத்துக்கும் அஞ்சாத கயவர்கள்..

வாழ்வின் சூழல் மேல் நம்பிக்கை உள்ளவர்கள்..வாழ்விலும் தன்னம்பிக்கை உள்ளவர்கள்...

எல்லோருக்கும்...கண்டிப்ப்பாக கடவுள் தேவை இல்லை..!


ஆக...சிலருக்கு வயிறுவளர்க்க.. கடவுள் தேவை!
சிலருக்கு அமைதியாய் வாழ... கடவுள் தேவை!
சிலருக்கு வயிறு வளர்க்க.. கடவுள் தேவை இல்லை.!
சிலருக்கு அமைதியாய் வாழ.. கடவுள் தேவை இல்லை !

முன்னர் சொன்னவர்களுக்கு கடவுள் தேவையில்லாமல் போகலாம்..அவன் இருப்பது ஊர்ஜிதமானால்..
பின்னர் சொன்னவர்களுக்கு கடவுள் தேவைப்படலாம்..அவன் இல்லாதது ஊர்ஜிதமானால்..!

எல்லாம் கலந்துதான் இருக்கிறோம்...!

அப்ப என் கருத்து.? அது இப்படித்தான் குழப்பமா இருக்கும்னு நினைக்கிறேன்..!

கடவுள் இல்லை..!     ஆனால்          கடவுள் தேவை!
கடவுள் இருக்கிறார்...ஆனால்   கடவுள் தேவையில்லை!டிஸ்கி:  இதை மொக்கையா வேணும்னாலும் எடுத்துக்குங்க ! எனக்குத்ததோன்றியதை எழுதிட்டேன்.!

Thursday, January 24, 2008

கடவுள் தேவையா? தேவையில்லையா?

கடவுள் இருக்கிறாரா?

என் அறிவுக்கு எட்டாத, என் சிந்தனை போய் முட்டி நிற்கும் எல்லாச்செயலிலும் கடவுளைக்கொண்டுவந்து நிறுத்தி, திருட்டுப்போன பொருளுக்கு மட்டும் போலீஸைத்தேடியும், முடியாத உடலுக்கு மருத்துவரைத்தேடியும் கடவுளை நட்டாற்றில் நிறுத்துகிறான் ஆத்திகன்!

கடவுள் இல்லையா?

என் பகுத்தறிவை கூறாக்கி,,, பின் அதனைக்கூராக்கி..எல்லாம் உன்னால் முடியும்.! அதற்கு ஏன் இன்னொரு ஆளை இழுக்கிறாய் ? அதற்கு கடவுள் என்று பெயர் இடுகிறாய் என்று தெளிவான முடிவைச்சொல்லிவிட்டுவீட்டுக்கார அம்மாவின் பக்தியைத்தடுக்க முடியாமல் தவிக்கிறான் நாத்திகன்.!

எனக்கு இந்த இரண்டில்கூட குழப்பமில்லை!!
ஆனால் ஒரு முக்கியக்கேள்வி!

அதெல்லாம் சரி! கடவுளைப்பயன்படுத்தி நாம் சாதித்தது என்ன?

நாம் பெரியவர்களா? கடவுள் பெரியவரா? என்று எழும் கேள்விக்கு..எப்போதும் என் பதில், நாம்தான்..ஏனெனில்..நம்மைப்படைத்ததாகக்கூறி கடவுளையே படைத்தவர்கள் நாம்.! ஆனாலும் கடவுள் பெரியவராக ஆகிவிடுகிறார். நம்மைவிட்டே தம்மைப்படைக்கவைத்துவிட்டு!
என்னதான் கோயில்,சர்ச், மசூதி, இன்னபிற மத ஆலயங்கள் போய் கும்பிட்டு வந்தாலும் நாம் சொல்லும் பொய்களும், புரட்டும், திருட்டும்,வஞ்சகமும்...கொஞ்சம் கூடக்குறையாதவர்களாக நம்மைச்சுற்றியவர்களும்..சில சமயம், நாமும்... இருந்துவிடுகிறோம்.

அப்படியென்றால்....கடவுள் தேவையா?

நிறைய மதங்களைத்தோற்றுவித்தோம். இந்தக்காலத்தில் ஒரு மனிதவள ஆலோசகர் செய்யும் வேலையை..மத குருமார்களை விட்டு செய்யச்சொன்னோம். இன்றைய உயரதிகாரிகளின் சொகுசைப்போலவே அவர்களுக்கும், நிறைய சொகுசைப்பழக்கினோம். அவர்களும் கொஞ்சம் நல்லது பண்ணிப்பார்த்துவிட்டு..இதெல்லாம் வேலைக்காகாது என்று எதையெல்லாம் சிஷ்யர்களுக்கும், இவர்களது பக்தர்களுக்கும் செய்யவேண்டாமென்று சொல்லுகிறார்களோ
அதையெல்லாம் அச்சுப்பிறழாமல் செய்து வைத்து...அதிகமாகத் தப்பித்து..ஆசி வழங்க ஆரம்பித்தார்கள்! ஆக...அந்த மாதிரி மதகுருக்களுக்கு..பிழைப்பு நடத்த..கடவுள் தேவை!

இந்தக்கோயிலுக்கு இவ்வளவு நிதிவழங்கினோம்..அந்த பேராலயத்துக்கு அவ்வளவு நிதிவழங்கினோம் ஆகவே உங்கள் மதத்தார் மேல் எங்களுக்குத்தான் லவ்வு அதிகம்! உங்க ஓட்டெல்லாம்..எங்களுக்கே..ஹி ஹி எனும் அரசியல்வாதிகளுக்கு..... கட்டாயம்
கடவுள் தேவை!

உம்மாச்சி கண்ணைக்குத்தும்...கருப்புசாமி நகர்வலம்வருது..வெளியவராத! அப்பத்தை கடிச்சா இரத்தமாவரும்..அப்பம்தான் இயேசு!..எச்சில் முழுங்கினா நோம்பு நிக்காது.., மறுமை ன்னு
குழந்தைகளையும் மாற்று மதத்தினரையும் பயமுறுத்தும் -அப்போதைக்கு தவறுகளையும், தலையீட்டையும் தள்ளிப்போடும்-பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும்...கடவுள் தேவை!

என்னதான் தவறுசெய்யும் உறுதி இருந்தாலும், "கண்காணி இல்லாதார்...." ன்னு தமிழ் இலக்கியம் வந்து பயமுறுத்தும் நேரத்தில் எதுக்கு இந்த வேலை.? நடக்கறபடி நடக்கட்டும்னு 'அவன்' மேல் பாரத்தைப்போட்டுட்டு தவறு செய்ய அஞ்சும் சாமான்ய மனிதனுக்கு....நிச்சயம் கடவுள் தேவை!

எப்படா அவளைப்பார்ப்போம்னு பகலெல்லாம் காத்திருந்து, வீட்டில் டேக்கா கொடுக்கக்கூடிய ஒரே காரணமான கோயிலைச்சொல்லிவிட்டு அவனைப்பாக்கவே வரும் அவளுக்கும் அவனுக்கும் 'அவர்' இருப்பதாகச்சொல்லப்படும் கோயில் தேவைப்படுவதால்...அவர்களுக்கும் கடவுள் தேவை!   
வாழ்வில் எவ்வளவு துன்பம் வந்தாலும், கடவுள்விட்ட வழி என்று..அதை ஏற்றுக்கொண்டு சமூகத்தவறுகளில் ஈடுபடாமல் ஒரு வித கட்டுப்பாட்டுடன் வாழும் அப்பாவி மனிதனுக்கும்...கடவுள் தேவை!

கோயில்கோயிலாகச்சுற்றி, அந்த சாமி அதுக்கு நல்லது..இந்த மாதா இதுக்கு நல்லது..அந்த தர்கா
அதுக்கு நல்லதுன்னு பத்திரிக்கையில் எழுதி பளபளன்னு பென்ஸ் வாங்க நினைக்கும் எல்லா பக்தி எழுத்தாளிக்கும்...கடவுள் தேவை! (அங்க போனவன் நாசமாப்போனா இவனுக்கென்ன?)

அப்புறம்...கல்யாணம், கருமாதி, காதுகுத்துன்னு எல்லா எழவுக்கும் காசாகவே அவனைப்பாக்கும் புரோகிதர்கள்,

வாஸ்து நிபுணர்கள்,

இறை சிகிச்சை மருத்துவர்கள்,

உங்களுக்காக பிரார்த்திக்கிறோம் என்று ஊருக்கு ஊர் உண்டியல் வைத்து காலேஜா கட்டித்தீர்ப்பவர்கள்,

எங்க பரம்பரையே இந்தக்கோயில் சொத்துன்னு ஊர்க்காசை கொள்ளையடிக்கும் தீட்சிதர்கள்,

கோயில் ஆகம கொள்ளையர்கள்,

அனைத்துக்கோயில் பூசாரிகள்,

பாதிரிமார்கள்,
உழைக்காமல் ஊர்சுற்றும் பல்வேறு மத பிரசாரகர்கள்..

(இன்னும் பலர் பட்டியலில் விட்டுப்போயிருக்கும்) ஆகிய அனைவருக்கும் வயிறு வளர்க்க...
கடவுள் தேவை!


அப்ப கடவுள் தேவையில்லையா?

யாருக்கெல்லாம் தேவையில்லை?                                                                                                                             - தொடரும்

டிஸ்கி: நீங்கள் என்னவேண்டுமானாலும் பின்னூட்டலாம். ஒரு விவாதம்தான் வேண்டும்!
இந்த சிந்தனையைத்தூண்டியவர், நண்பரும்..அண்ணனும் ஆன
சுரேஷ் என்ற கிருஷ்ணமூர்த்தி.! அற்புத சிந்தனையாளர்!

ஈரோட்டு சாப்பாடு.

ஈரோட்டில் சில நாட்களா வேலை நிமித்தமா இருக்கறதால,
சாப்பாட்டுக்கு சுத்த வேண்டியதாயிடுச்சு!

மேலும்.. நம்ம உடம்பு எதைப்போட்டாலும் தாங்குங்கிறதனாலயும்,ஒரே ஹோட்டலில் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கவேண்டாம்னு நினைச்சும், பதிவுலகத்துக்கு ஈரோட்டு உணவுவிடுதிகளை அறிமுகப்படுத்த வேண்டியும், ஊரில், ஒரு ஏரியாவை சுத்தி சுத்தி...

பேருந்து நிலையத்திலிருந்து இறங்கின உடனேயே எதிரில் தெரிவது, கண்ணன் உணவகம்...உயர்தரம்னு இப்ப எல்லாருமே போட்டுவிடுவதால். உள்ளே போனால், பார்க்க நல்லா இருக்கு !...சாப்பாடு சூப்பர்ன்னு சொல்ல முடியாது...ஓகே! உள்ளே மற்ற விஷயங்கள் அழகா இருக்கு!

ஊருக்குள்ள ஆர்.கே.வி ரோட்டில்.. இரண்டு உணவகங்கள் உள்ளன.! (எனக்குத்தெரிஞ்சு) ஒண்ணு பாரத் - உணவும், கவனிப்பும் ரொம்ப சுமார்.!அதனால் அதைப்பற்றிய விமர்சனமே வேண்டாம். ஆனால் கல்லாப்பெட்டியில் அமர்ந்திருப்பவர் நாம் சொல்வதை ஆமோதித்து
கேட்டுக்கொள்கிறார். அது மட்டும்தான் கூட்டல்புள்ளி (+.) :-)

அதை அடுத்து ஜோதி உணவகம் இருக்கு..! மிகவும் அருமையான உணவும், நல்ல காபியும், மனிதாபிமானமுள்ள முதலாளியும்...
அன்று முகூர்த்த நாள், காலை உணவு சாப்பிடப்போனபோது, சரியான கூட்டம் , என்னடா செய்வது என்று யோசித்து நிற்கும்போது எங்களுடன் வந்த ஒரு குழந்தைக்கு மட்டுமாவது இட்லி வாங்கிவிடலாம்னு நான் உள்ளே சமையலறைக்கு போய்விட்டேன். அங்குதான் அதன் முதலாளி நின்றிருந்தார். அவரிடம் 'இரண்டு இட்லி மட்டும் குழந்தைக்கு வேண்டும்' னு கேட்க, சரி தருகிறேன்னு. உடனே பார்சல் கட்ட ஆரம்பித்துவிட்டார். பார்சலை கையில் தந்துகொண்டே கேட்டார்..

"நீங்க சாப்பிட்டீங்களா?"

ரொம்ப சோகமா, நானும்..."இல்லங்க..கூட்டமா இருக்கு' ன்னேன்.

"அப்ப என்ன வேணும்னு சொல்லுங்க..! உங்களுக்கும் பார்சலே கட்டித்தரேன். காத்திருந்து சாப்பிடணும்னா லேட்டாயிடும்!' என்று பரிவுடன் சொன்னார்.
நினைவில் நின்றவர்!

ஆர் கே வி ரோட்டுக்கு பின்புறம்..திருச்சி கபேன்னு ஒரு பிரபல உணவகம்.முதலில் அங்க மதிய சாப்பாட்டுக்கு போய் டோக்கனை வாங்கிக்கொண்டு உட்கார இடம் தேடினால், எல்லாம் நிரம்பி இருக்கு...உள்ளே ஒரு சாப்பாட்டு அறை இருக்கு.. போங்கன்னு சொல்ல, அம்புக்குறி போட்டிருந்த பகுதியை நோக்கி நடந்தால்..முதலில். சமையலறை . அப்புறம் தண்ணீர் பிடிக்கும் பகுதி...கொஞ்சம் தள்ளி இடதுபுறம் காபி போடும் பகுதி..அதையும் தாண்டி வலது பக்கம் திரும்பினால் ஒரு பெரிய ஹால்..! அதிலும் முழுசா வாடிக்கையாளர்கள்.! (மணிரத்னத்தின் 'குரு' படத்தில் அபிஷேக் நம்மகிட்ட பேசிட்டு மைதானத்தை பார்ப்பார்..மைதானமே மக்கள்
வெள்ளத்தால் நிரம்பி ஒரு சின்ன அதிர்வு ஏற்படுமே..அந்த அதிர்வை உணர்ந்தேன்) எங்களப்போல நின்னுக்கிட்டே இன்னும் பல பேர்.! அடேயப்பா ன்னு ஆகிப்போச்சு! ருசியான அளவு சாப்பாடுதான்.! ஆனா அந்த கூட்டம்...அப்பப்பா! அங்கு சாப்பிட்ட கேசரியும் காபியும் அற்புதம். சாப்பிட்ட எல்லோரும் சாப்பிடாத எல்லோருக்கும் பரிந்துரைக்கும் உணவகம்!

அடுத்து, ஸ்ரீதேவி மெஸ்...திருச்சி கபேக்கு மிகவும் அருகில்..2 கடை தள்ளி இருக்கும்..காலை 11 மணிக்கு போனாலும் ஏதாவது டிபன் இருக்கும். பரோட்டா நல்ல மென்மையா இருக்கும். தோசை வீட்டுத்தோசைமாதிரி..! பந்தி பரிமாறுவது மாதிரி வரிசையா மேசை போட்டு வச்சிருப்பாங்க! சாப்பாடு சுமார்தான்.! ஆனா அளவில்லா சாப்பாடு! ஒரு 25-30 வயது பையன் மிகவும் நன்றாக கவனிப்பார். ஒரு 40+ ஆளுக்கு என்ன கஷ்டமோ..! அவர் பில் கொடுத்து நாம் சாப்பிடுவது மாதிரி ஒரு அடுப்பு முகத்தோடயே அலைவார். முதலாளியிடம் சொன்னால்.. அதை ஏன் கேக்குறீங்க.! என்னால் ஒன்னும் செய்யமுடியாது. இல்லைன்னா வேலையை விட்டுட்டு போய்டுவேன்னு மிரட்டுறார்.இவுங்களை நம்பிதான் தொழில் பண்ணவேண்டியிருக்குன்னு ஒரே அழுகாச்சி!

அப்புறம் கலைமகள் பள்ளிக்கு அருகில் உள்ள சாலையில் பட்டேல் தெருவுக்கு அருகில் ஒரு சின்ன டிபன் கடை! மருத்துவமனை நோயாளிகள்தான் முக்கிய வாடிக்கையாளர்கள்!..காலையும் , இரவும் சரியான கூட்டம். 4 பென்ச்தான்.! டிபன் நல்ல சுவை! அதிலும் அந்த கொத்து பரோட்டா ! நைஸ் எனப்படும் ஈரோட்டு ஸ்பெஷல் தோசை ஆஹா..! மிகவும் சின்ன..ஆனால் பெரிய சுவை உள்ள உணவகம்!

அதே சாலையில் போனால்....ஒரு பிள்ளையார் கோவில் உள்ள பிரதான சாலையில் ( சாலை பேரு மறந்து போச்சு) நிறைய அசைவ உணவகங்கள் உள்ளன! அதை அடுத்து உள்ளதுதான். நளன் உணவகம்.!ஈரோட்டுவாசிகள் எத்தனைபேருக்கு இதைப்பற்றித்தெரியும்னு தெரியலை.!
முழுக்க முழுக்க சித்த மருத்துவமுறைப்படி.. இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உணவு தயாரித்து வழங்கும் கடை! கிழமைக்கு ஒரு மெனு செய்து வைத்து அதன் படி உணவிடுகிறார்கள்! நாங்கள் போனபோது வெந்தய தோசையும், ஆப்பம் தேங்காய்ப்பாலும்,
காய்கறி அடையும் சாப்பிட்டோம். அங்கு பல்வேறு மூலிகை உணவுகள் உள்ளன! அதன் நிறுவனர்.. SS மியூசிக்கில் வேலை பார்க்கிறாராம்.! 'குருஜி' என்றார்கள்.

கடைசியாக ஐஸ்கிரீம்..!
ஈரோட்டில்.SOFTY ICE CREAM PARLOUR என்ற ஒரு கடை உள்ளது. ஆஹா! என்ன ஒரு சுவை! அதையும் விஞ்சி..அதில் வாடிக்கையாளர் அமர அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புகள், இருக்கைகள் மற்றும் ப்ளாஸ்மா டிவி என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்..நல்ல கூட்டம் வருகிறது..குறிப்பாக காதலர்கள்!

இன்னும் சின்னச்சின்ன உணவகங்கள்ல சாப்பிட்டிருந்தாலும்..இவைதான் மனசுல நின்னது மற்றும் ஈரோட்டுக்காரங்க யாராவது இதைப்படிச்சுட்டு போய் சாப்பிட்டாலும் உடம்புக்கு ஒண்ணும் ஆகாது!
Tuesday, January 22, 2008

தொப்பைக்கு லீவு - குசும்பனுக்காக...!

இந்தப்பதிவு என் லிஸ்ட்லயே இல்ல!

ஆனாலும் நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா இதை செஞ்சா தப்பில்லன்னு..வேலு நாயக்கர் சொன்ன மாதிரி...நண்பர் குசும்பனுக்காக!

படிக்கறப்ப ஒல்லிப்பிச்சானாவோ..கொஞ்சம் பூசினமாதிரியோ இருந்துட்டு, ஒரு நல்ல வேலைக்குச்சேரும்போதுதான்..இந்த தொப்பச்சாமி நம்மகிட்ட லேசா ஒரு இடம் கேக்கும். நம்பளும்..இருந்தா நல்லதுதானேன்னு இடம் கொடுத்துருவோம். அப்புறம்தான் இருக்கு தீபாவளி! அது மெதுவா சுற்றுவட்டாரத்தை ஆக்கிரமிச்சு, ஒரு பழைய பேண்டை 'டர்' றாக்கும்போதுதான் தெரியவரும்..ஆஹா..வில்லன் வீட்டுக்குள்ள பாய் போட்டு படுத்துட்டாண்டான்னு..!

விருந்தாளி வீட்டு ஓனராகும் வாய்ப்பு ஆரம்பிக்கும்.!

அது சொல்றபடியெல்லாம் நாம கேக்குறமாதிரி ஆரம்பிக்கணும். துணி அதிகமா தேவைப்படுவதால், மணியும் அதிகமா தேவைப்பட்டு...

தொப்பை சரணம் கச்சாமின்னு ஆகிடுவோம்...

அப்பதான்..வீட்டுல கல்யாண பேச்ச ஆரம்பிப்பாங்க! அதுவரைக்கும் கூடவே இருந்த ஆள கழட்டிவிடும் பழக்கம் மனைவி வருவதற்கு முன்னரே ஆரம்பிக்கிற கால கட்டம் இதுதான்..!எப்படியாவது இந்த தொப்பச்சாமியை கழட்டிவிட்டுடலாம்னு முடிவுக்கு வந்துடுவோம். அதுக்கான வழிமுறைதான் இப்ப வருது.!

1. யோகாசனத்தில் ஒரு முறை இருக்கு !
2. உணவுப்பழக்கத்தில் ஒரு முறை இருக்கு!

1. யோகாசனம்

அ. கால்களை நன்கு நீட்டி தரையில் படுக்கவும் ( கட்டிலுக்கும்.மெத்தைக்கும் அனுமதியில்லை)
ஆ. இரு கால் கட்டைவிரல்களும் ஒன்றை ஒன்று தொடவேண்டும்,
இ. உடலை 'ட 'வடிவத்தில் மாற்ற வசதியாக கால்களை மேலே தூக்கவேண்டும்.
ஈ. இப்போது , முழங்காலின் பின்புறத்தில் இரு கைகளாலும் இறுக்கவேண்டும்.
உ. தானாக கால் மார்புப்பகுதியை நோக்கி வரும். இறுக்கிப்பிடித்துக்கொள்ளவேண்டும்.
ஊ. இதே அமைப்புடன் மெதுவாக எழுந்திருக்கவேண்டும்.
எ. மீண்டும் படுக்கவேண்டும்.
ஏ. அ...முதல் எ..வரை 20 முறைக்கு குறையாமல் செய்யவேண்டும்.

நேரம் : அதிகாலை....அல்லது காலையில் தூங்கி எழுந்தவுடன்..!
மாலை...அல்லது இரவு உணவுக்கு முன்.!
40 நாட்களில் பலன் நிச்சயம்.!

2. உணவுப்பழக்கம்

காலையில் ராஜா மாதிரி.,
மதியம் மந்திரி மாதிரி
இரவு பிச்சைக்காரன் மாதிரின்னு சொல்லுவாங்க!
(இதை வச்சு நிறைய காமெடி பண்ணலாம்.. ஆனா இது நல்ல தகவல்)

இரவு உணவு முழுமையான இயற்கை உணவா இருந்தாத்தான் முழுப்பலனும் கைமேல...மன்னிக்கவும்..வயித்துமேல கிடைக்கும்.!அதுக்கும் நல்ல காய்கறிகள் இருக்கு.!

முட்டைக்கோஸ், பரங்கிக்காய், பீட்ரூட், தக்காளி, வெள்ளரி, வெங்காயம், வெண்டைக்காய் ஆகியவற்றை பல விதமான உணவுகளா செஞ்சு சாப்பிட்டா....நல்ல பலன் உண்டு.

மு.கோஸ், தக்காளி, வெங்காயம், வெள்ளரி ஒரு காம்பினேஷன்.! முடிந்தவரை சின்னதாக நறுக்கி, உப்புமட்டும் சேர்த்து..உண்ணலாம்.!

பீட்ரூட்டை மட்டும் நறுக்கி..மோர் கலந்து பிசைந்து உண்ணலாம்.

பரங்கிக்காயை சிறு துருவல்களாகத்துருவி, உப்புப்போட்டு பிசைந்த்து உண்ணலாம்.

வெண்டைக்காயை அப்படியே தொட்டுக்கொள்ளலாம்.

இதெல்லாம் அடுப்பிலேயே ஏத்தக்கூடாது !
காரமெல்லாம்...மூச்!
இப்படில்லாம் நடந்துக்கிட்டா...ஆத்தா ஸ்லிம்மாயி அருள் உங்களுக்கு கிடைச்சு...தொப்பச்சாமிக்கு லீவு கொடுத்து அனுப்பிடலாம்.தொடர்ந்து..(இடையிடையேயாவது) கடைபிடிக்கலைன்னா..லீவு முடிஞ்சு நச்சுன்னு வந்து ஜாயின் பண்ணிருவாரு.!

ஆக...40 நாளில் முழுமையான பின்பற்றுதலில்..தொப்பையற்ற பதிவர்..ரெடி!

டிஸ்கி : இது முழுக்க முழுக்க சொந்த அனுபவம்..பலன் 100% கிடைத்தது.

Monday, January 21, 2008

இங்கயும் டிரைலர் ஓட்டுறோம்.!

கடந்த சில நாட்களாக ஈரோட்டில் இருப்பதால், பதிவுகளுக்கான

எண்ணங்கள் ஓடி முடிந்து... வடிவமும் வார்த்தைகளும் வரும் வரை..

பதிவுலகில்...(அனேகமாக) முதல் முறையாக...எனது..வரப்போகும்

பதிவுகளின் தலைப்புகள் இப்போது..

1. ஈரோட்டு சாப்பாடு - ---------ஒரு அனுபவப்பகிர்தல்

2. கடவுள் தேவையா? இல்லையா? ------------கொஞ்சம் சூடு

3. குழப்பம் மட்டுமே நிரந்தரம்.------------------- பட்டறிவு

4, செத்தாருள் வைக்கப்படும்..! -------------------எல்லாம் புலம்பல்தான்.

5. எப்படில இருக்க?------------------------கவிதை..மாதிரி

6. தோத்து ஜெயிச்சவன்!-----------------கதை...மாதிரி


கூடிய விரைவில்....(எத்தனை டிரைலர் பாத்து ஏமாந்திருப்பீங்க?- அதான் கலர்புல்லா..)

எது எதுக்கோ காத்திருக்கீங்க..! இதுக்கு காத்திருக்க மாட்டீங்களா?

:-)

Sunday, January 13, 2008

இது வேறு..இதிகாசம்..தமிழில் திரைப்படக்கலை இன்னும் அதிகப்படிகள் முன்னேறும் என்று பறைசாற்றும்வகையில், இப்போது ஆவண, குறும்படங்கள் நன்கு அமைகின்றன.அப்படி ஒரு வரிசையில் இன்று நாங்கள் பார்த்த ஒரு அற்புத ஆவணப்படம்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தலித்களுக்கு நடந்த கொடுமைகளைத்தொட்டுவிட்டு,தமிழகத்தில் மாஞ்சோலை மரணங்களைக்காட்டிவிட்டு நேரடியாக.பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய ஊர்களில் நடத்த முடியாத தேர்தல்களையும், அதன் விளைவுகளையும், முழுக்க முழுக்க உண்மைச்சம்பவத்தை , யார் மனதும் நோகாமல் நடுநிலையோடு எடுக்கப்பட்டிருக்கும் இதன் தலைப்பு...

இது வேறு...இதிகாசம்!


1996முதல் அந்த ஊருக்குள் தேர்தலே நடத்தமுடியாமல் திணறும் அரசு,
வேட்பு மனு தாக்கல் செய்வதையே ஏற்றுக்கொள்ளாத சமூகம்,
துணிந்தவர்கள் கொலைசெய்யப்பட்ட நிலை!
அந்த மக்களின் இயல்பான வாழ்க்கை அவலங்கள்!
சர்வசாதாரணமாக கொலைகளுக்கு சாட்சியாக இருக்கும் ஆலமரம்,!
ஒப்புக்கு ஒரு வேட்பாளரை நிறுத்தி அடுத்த நாளே அவரை ராஜினாமா செய்யச்சொல்லும் கயமைத்தனம்,
பல்வேறு அமைப்புகளின் போராட்டங்கள்!
மாவட்ட ஆட்சியர் உதயசந்திரனின் முயற்சிகள், அதன் மூலம் நடக்கும் தேர்தல்!
வெற்றி பெறும் வேட்பாளர்கள்!
காவல்துறை துப்பாக்கிப்பாதுகாப்பு!
என்று அது தொடர்பான செய்திகளைத்தொட்டு
பல்வேறு துறை வல்லுநர்கள், இருதரப்பு மக்கள், அரசியல் வாதிகள் அனைவரது கருத்துக்களுடன் ஒருவழியாக தேர்தல் முடிந்தது என்று நினைக்கும்போது 2006ல் நக்கலமுத்தன்பட்டியில் நடந்த ஊரட்சி மன்றத்தலைவர் ஜக்கனின் கொலையைச்சொல்லி, அவரது மகளின் கண்ணீரோடு படம் நிறைவடைகிறது...THIS IS NOT END என்ற எழுத்துக்களோடு.! 

குழப்பமில்லாத நேர்த்தியான தொகுப்பு! இத்திரைப்படத்தைப்பார்த்தபின், அந்த கிராமங்களின் 10 ஆண்டுகால சரித்திரத்தை படித்த உணர்வு! பின்னணி குரலே இல்லாமல் முழுப்படத்தையும் பேட்டிகளாலேயே நிரப்பி, அந்த வித்தியாசம் தெரியாமலேயே கொண்டுசென்ற நுட்பம் என்று ஒரு நல்ல ஆய்வுப்புத்தகம் படித்த திருப்தியை அளித்தது.  

அதில் ஒரு கவிதை வருகிறது... அது.

என் தாய் கருவுற்றிருந்தபோது
தெள்ளித்தின்ற மண்ணைத்தவிர
இந்த பரந்த தேசத்தில்
எங்கள் மண் எது?

தடித்த உங்கள் இதிகாசங்களில்
எந்தப்பக்கத்தில்
எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும்
ஒளியையும் தராமல்
சூரியச் சந்திர சுழற்சிகள்
எதுவரை?


இந்த ஆவணப்படத்தின் இயக்குநர் திரு.ஜா.மாதவராஜ் அவர் கூறும்போது...(ஆம்..அவர் முன்னிலையில்தான் திரையிடப்பட்டது)

"1996ல் நடந்த கொலைக்குக்காரணம் ஒரு தலித் பதவிக்கு வர ஆசைப்பட்டது, 2006ல் நடந்த கொலைக்குக்காரணம் பதவிக்கு வந்த தலித் கணக்குக்கேட்டது.!

10ஆண்டுகளுக்கு முன்னால் பதவிக்கு வருவதைப்பொறுத்துக்கொள்ளாத மக்கள், இப்போது பதவிக்கு வந்தாலும் அதனைப்பயன்படுத்துவதை பொறுத்துக்கொள்ளாத நிலைக்கு வந்திருக்கிறார்கள்! இதைத்தான் ஆவணப்படுத்தியிருக்கிறேன்.!


சுமார் 75 மணிநேர காட்சிக்கோர்வைகளிலிருந்து 65 நிமிடப்படமாக தொகுக்கப்பட்டிருக்கிறது!

இதைப்படமாக்கும்போது பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது." என்றார்.

ஒளிப்பதிவாளர் ப்ரியா கார்த்தி ,இணை இயக்குநர் சு.காமராஜ் ஆகியோரும் வந்திருந்தார்கள்!

கடைசிச்செய்தி : இயக்குநர் ஜா.மாதவராஜின் மாமனார்தான் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள்!

Saturday, January 12, 2008

ஈரோட்டுப் பெண்கள்கொஞ்ச நாளாக ஈரோடு வாசம்..

அற்புதமான ஊர் !

வியாபாரத்தை வியாபார நோக்கோடு மட்டும் அணுகாத வியாபாரிகள்!

வாடகை மட்டுமல்ல, மரியாதை கொடுத்தும் மனதுக்குள் குடியிருக்கலாம் எனும் மனிதர்கள்!

வழிசொல்வதே வாழ்வுக்கடன் என்று அழகாக வழி சொல்லும் வழிப்போக்கர்கள்

அருகில்தான் இருக்கிறது ! நடந்தே போய்விடுங்கள் எனும் ஆட்டோக்காரர்கள்!!

வரி சேமிப்பு பற்றி போட்ட நாணயம் விகடனா? என்று கேட்டு விற்கும் புத்தகப்பிரியர்கள்!

யோகாவில் வென்றுவிடலாம் என்று வாழ்வியல் சொல்லும் அற்புத மாணவிகள்!

இவர்தான் முதலாளியா? என்று வியந்தபின் வணங்கி நிற்கும், தோற்றத்தில் எளிமை பூண்ட இயல்பான ரசனைக்காரர்கள்!

ஒரு மாபெரும் துணிக்கடையின் தொழிலாளர்களை வேலை நிமித்தம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது! அதிகம் படிக்காத பெண்கள்!
ஆனால் எத்தனை தெரசாக்கள் ? எடுத்தவுடன் உண்மைசொல்லும் நம்பிக்கை!
நான் சந்தித்த நங்கைகளில் சிலரது வாழ்வுத்துளிகள், படித்தபின் தான் புரியும், இந்த கணிணிக்கு முன்னால் அமர்ந்து கலாய்த்துக்கொண்டிருக்கும் நாமெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களென்று!

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். ஒருநாள் அம்மாவின் கையை அப்பா கோபத்தில் வெட்டிவிட்டு தற்கொலையும் செய்துகொண்டபோது அவளுக்கு வயது 5 ! ஒற்றைக்கையை இழந்துவிட்டு அம்மா பட்ட துன்பத்தை இன்றுவரை மறக்காமல் , தற்போது உடல்நலமின்றி இருக்கும் அம்மாவுக்காக திருமணமே வேண்டாமென்று புலனடக்கி வாழும் நங்கை ஒருத்தி!

கட்டிய காதல் கணவன் இதோ வெளியே சென்றுவருகிறேன் என்றுசென்றுவிட்டு உயிரற்று திரும்பி வர, இவளோ நிறைமாத கர்ப்பம்!கணவன் இறந்த மூன்றாம் நாள் ஒரு ஆண்பிள்ளையைப் பெற்றுவிட்டு,அம்மா வீட்டோடு வந்துவிட, அந்தப்பிள்ளையை வளர்ப்பதற்காக யாருக்கும் பாரமாக இருக்கவேண்டாமென்று அண்ணன் பார்த்துவைத்த வயதான ஆளை சீர்திருத்தத்திருமணம் செய்ய , அவளது இளமை அவனை சந்தேகப்பட வைக்க, தைரியமாக பிள்ளக்காக அவனைவிட்டு வெளியே வந்து, வேலைக்கு வந்து சமூக அவமானம் வாங்கும் நங்கை
இன்னொருத்தி !

சிறுவயதிலேயே கணவனை இழந்ததால் மறுமணம் செய்து கொண்ட அம்மா, இன்னொரு மகனைப்பெற்று , அவனை மட்டும் நன்கு வளர்த்து, முதல் கணவனுக்குப் பிறந்த இவளை வேலைக்காரியாகவே மாற்றி (பெற்ற அம்மா!) இவள் பருவமடைந்தபின் தன் கணவனுக்கே தீனியாகக்கொடுக்க முயற்சிக்க, இனிமேலும் இங்கிருந்தால் ஆபத்து என்று உறவுகளிடம் தஞ்சமடைந்த அவளுக்கு இன்னும் 10 நாளில் ஒரு நல்ல மனிதனுடன் பெரியோர் பார்த்துவைத்த திருமணம்.! அதைக்கெடுக்கும் முதல் வரிசையில் இவளது ...அம்மா! அதையும் மீறி சமூகத்தில் நல்லவளாக வாழமுடியும் என்று தைரியம் கொண்ட நங்கை வேறொருத்தி!

அம்மாவின் சகோதரனே கணவனாக வாய்க்க, அற்புதமான இல்லறம் ! அதில் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள்! சந்தோஷமான வாழ்க்கையில் ஒருநாள், பல்வலியென்று மருத்துவமனை போன அவன் இறந்ததாக செய்திவர, இடிந்துபோனாள் இவள் ! வெளியுலகமே தெரியாத இவளுக்கு முதலில் வேலை எப்படி கேட்பதென்றே தெரியாது! அந்தப்பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தன்னைத்தேய்த்துக்கொள்ளும் நங்கை மற்றொருத்தி!

தந்தையை பெரியப்பா குடும்பம் கொன்றுவிட, அவர்களை பழிவாங்குவதுதான் லட்சியம் என்று மூத்த மகனை வளர்க்கும் அம்மாவின் ஆசைக்கு, அண்ணன் வாழ்வு பாழாகிவிடக்கூடாது என்று
தங்கையாக இருந்து வருந்தி, அவனுக்கு புத்தி சொல்லி, மெதுவாக அவனை திருத்தி, வடமாநில நகரத்துக்கு அம்மாவுக்கு தெரியாமல் அனுப்பி, அவனுக்கு பதிலாக, குடும்பப்பொறுப்பை எடுத்து நடத்தும் நங்கை இன்னொருத்தி!


ஒரு முக்கியத்தகவல்...
இவர்கள் அனைவரும்....அந்த நிறுவனத்தின் முதல் தர ஊழியர்களாக பட்டியலிடப்பட்டு , பதவி உயர்வு பெற்றவர்கள் ! மேலும் இவர்கள் அனைவருக்கும் தந்தை பெரியார்தான் 'கடவுள்' !!

பெண்கள் மேலிருந்த மதிப்பு மிகமிக அதிகமாக கூடிப்போயிருக்கிறது!
இவர்கள் , என்னுடன் பேசிய பிறகு பாரம் குறைந்ததாகச்சொன்னார்கள்.ஆனால் எனக்கு ஏறியது பாரமும், மதிப்பும்தான்!

-மற்றவருக்காக வாழும் ஈரோட்டு  நங்கைகளே! ..உங்களுக்கு  , இந்தப்பதிவு சமர்ப்பணம்.
Saturday, January 5, 2008

அப்படியாவது தண்டனையை.....காப்பாற்றலாம்.!

இந்தப்பதிவு போடும் எண்ணமே இல்லை! இந்த செய்தியை படிக்கும்வரை !


தர்மபுரி' வழக்கு ! மூவரின் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு-

இதைப்படிச்சவுடனேயே இன்னும் கொதிப்பு அதிகமாகுதுங்க!


1.முதலில் இந்த வழக்கு எடுத்துக்கொண்ட காலமே மிக அதிகம்.

2. குற்றவாளிகள் முழுமையாக இனம்கண்டபின்னர் உடனே தீர்ப்பு அளித்திருக்கலாம்.

3. பொது இடத்தில் நடந்த,(பலரும் பார்த்த) ஒரு நிகழ்வுக்கு இன்னும் என்ன மறு விசாரணைகள்?

4. தன்னுடைய சொந்த கட்சியில் தன் பலத்தையும் - பார்! பஸ்ஸெல்லாம் எரிச்சேன்னு சொல்லி தலைமையிடம் சீட்டு கேட்கவும் பயன்பட்ட ஒரு அடிப்படை சுயநல,
கயமை,,காட்டுமிராண்டி,பொறுக்கித்தனத்துக்கு இவ்வளவு நாளே அதிகம்.இந்த தண்டனையே கம்மி. ஆனா இதைவிட பெரிய தண்டனை இந்தியாவில் இல்லையே !

5. ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம். ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது எனும் வாதத்தை இந்த சமூகம் உடைத்து பல ஆண்டுகளாகிவிட்டது.

6. இப்போதெல்லாம். ஒரு குற்றவாளியை விடுவிக்க, ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள்.

7.அதுனால, இடையில் ஒரு நிரபராதி மாட்டினால் கூட பரவாயில்லை. ஆயிரம் குற்றவாளிகளும் தண்டிக்கப்படணும். அப்பதான் இந்த சமூகத்தில் வாழும் தகுதியே நமக்கு வரும்.

8.தூக்குதண்டனை வேண்டாமென்று கூறும் யாருக்காவது இப்படி ஒரு சம்பவம் நடந்து அப்புறம் எதிரியை விடுவிக்க இவர்களே முயலுவார்களா? -அந்த வலி , வலித்தால் மட்டுமே புரியும் வலி.!

9.காலம் கடந்த நீதி, இப்போ மறுக்கப்பட்ட நீதி ஆகிடுமோன்னு அச்சமா இருக்கு.!

10. ஆனா, இவர்கள் விடுவிக்கப்பட்டால் , இறந்த பெண்களின் குடும்பத்தினரே முயன்று அவர்களை நடுரோட்டில் கொல்லுவார்கள். அந்த வழக்கில், கொன்றவர்கள் தூக்குதண்டனையால் சாவார்கள். (ஒரே குடும்பத்தில் இரண்டு உயிர் நஷ்டம் ! இந்த சட்ட பிறழ்வால்)

நாம் ஒன்று செய்யலாம்..தண்டனையை உறுதி செய்யச்சொல்லி உயர்நீதிமன்றம், ஜனாதிபதி, பிரதமர், உச்சநீதிமன்றத்துக்கு தந்தி அனுப்பலாம்.! மின்னஞ்சலாம்.!

அப்படியாவது...தண்டனையை.....காப்பாற்றலாம்.!

Friday, January 4, 2008

தண்டனைக்கு தண்டனையா?

கொஞ்சநாளைக்கு முன்னால சவுதி அரேபியாவில் மரண தண்டனை வழங்குவதை நேரில் பார்த்து இப்படி ஒரு பதிவு போட்டிருந்தேன். எனக்கும் மனசுக்குள்ள, இப்படிப்பட்ட தண்டனைகள் தேவைதானா? ஆனா இப்படி பண்ணினாத்தானே நம்ம ஆளுக திருந்தும்னு நடுவர் இல்லாத பட்டிமன்றமெல்லாம் ஓடிக்கிட்டிருந்தது.

சாதாரணமாகவே, இரண்டுபேருக்கு இடையில் சண்டை ஏற்பட்டு ஒரு பாதிப்பில் நீதி(?)மன்றம் போனால், இரண்டு பேரும் சமாதானமாகி , வக்கீலுக்கு கொடுக்க ஒன்றுமில்லைன்னு ஒரு முடிவுக்கு(!) வரும்வரை வழக்கு நடக்கும்.

இல்லைன்னா பகைவளர்ந்து அதை அடுத்த தலைமுறை எடுத்து நடத்தும்.அப்படியும் தீர்ப்பு சாதகமா இல்லைன்னா அப்பீலேய்!

எத்தனைநாளைக்குத்தான் இப்படியோ?

ஆனா நடு ஊரில் வைத்து தலையை வெட்டும் சவுதியில் , தீர்ப்புகள் சுடச்சுட ஒரு வாரம் அல்லது ஒரு மாதத்தில் கிடைச்சுடும். (அதுக்கு மக்கள் தொகை, குற்ற எண்ணிக்கைன்னு பல காரணங்கள் இருக்கும்.) ஆனா இங்க அப்படி இல்ல.! அதுனாலயே இதெல்லாம் நமத்துப்போயி, குற்றம் செய்தவுங்க மேல ஒரு பரிதாபத்தையே உருவாக்கிடுறாங்க நம்ம வாய்தா ராஜாக்கள்! (மக்கள்தொகைக்கு ஏற்றமாதிரி நீதிமன்றங்களும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஓரளவுக்கு இருந்தாலும்)
இதை ஒரு நீதிபதியே சொல்லியிருக்காரு!

சவுதி அரேபியாவில் இன்னொரு நடைமுறையும் இருக்கு! தண்டனை வழங்கப்பட்டவங்களை , பாதிக்கப்பட்டவங்க மன்னித்தால் தண்டனை ரத்தாகிவிடும்.

சமீபத்தில் ஒரு கொலை வழக்கில் , தண்டனை வழங்கப்பட்ட குடும்பம் மன்றாடிக்கேட்டுக்கொண்டதால், பாதிக்கப்பட்ட குடும்பம் அவரை மன்னிக்க, அவருக்கு விடுதலை கிடைத்தது.

ஆனால் இன்னொரு வழக்கு- பாதிக்கப்பட்டவர்களின் பிடிவாதத்தால் -தண்டனை நிறைவேற்றப்பட்டது.

எனக்கு இது நியாயமாகவே படுது!

ஏன்னா...

நீண்ட நாட்களாக இழுத்து நடந்த தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு, அந்த அப்பாவி
மாணவிகளின் மரணத்துக்கு பதிலா...மரணதண்டனை வழங்குவதோட முடிஞ்சிருக்கு!
அதுக்கு மேல்முறையீடு கேட்டவுங்க...இது முன்விரோதம் காரணமாகவோ, திட்டமிட்டோ செய்யப்படலை! அதனால் தண்டனையை குறைக்கணும்னு கேட்டாங்களாம்.!(நல்லவேளை...தீர்ப்பு மேல்கோர்ட்டில் மாற்றப்படலை)

சாதாரண குடிமகனே கேட்கிறான்.! "முன்விரோதமும் இல்லை, திட்டமிடவும் இல்லை! அப்புறம் ஏண்டா அப்பாவி புள்ளைங்கள கொன்னீங்க! ஒங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது! உங்க உயிர் மட்டும் எத்தனை கோர்ட் வேணும்னாலும் போய் காப்பாற்றப்படனும்..! ஆனா மத்தவுங்க உயிருக்கு உண்மையிலேயே உலை வைப்பீங்களா?

மரணதண்டனை தேவையா இல்லையா எனும் வாதத்தைவிட, பாதிக்கப்பட்டவர்களின்
குடும்பமே ஒத்துக்கொண்டால்தான் அதை அப்பீலுக்கே எடுத்துக்கொள்ளவேண்டும்.
(மிரட்டி ஒத்துக்க வைக்க வேற ஆரம்பிச்சுருவாங்களோ? அதையும் சமாளிச்சாகனும்)

இந்த தருமபுரி வழக்கு விஷயத்தில், இழந்த குடும்பத்தார் எப்போது அந்த (தண்டனை) நன்னாள் வரும்னு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கே பரிதாபம் ஏற்படும்வகையில் வழக்குகள் தள்ளிப்போவதுதான் சிரமம்.! தப்பு செய்தவர்களது குடும்பமும் தவித்துதான் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது பண்ணித்தொலைங்கப்பான்னுட்டுதான்.!

தண்டனை நிறைவேறுமா , நிறைவேறாதா என்று இரு தரப்பும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.!
இந்த தண்டனைகளுக்கும் இப்ப சோதனை ஏற்பட ஆரம்பிச்சுடுச்சு!

தண்டனைகளை நாம் தண்டிக்க ஆரம்பித்துவிட்டோமோ? அப்படி ஆரம்பித்தால் இந்தச் சமூகமே தண்டனைகளை கையில் எடுக்கும் காலம் வந்துவிடுமோ என்ற அச்சத்துடன்.......

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...