Tuesday, May 31, 2011

ஓமப்பொடி
ஆச்சர்யம் # 1கோ படத்தில், அஜ்மல் நடத்தும் அமைப்பின் பெயர் சிறகுகள், அது மாணவர்களை ஒருங்கிணைத்து நன்மை செய்வதாகச் சொல்லியிருப்பார்கள்.
உண்மையிலேயே, 2003ஆம் ஆண்டு புதுக்கோட்டையில், சிறகுகள் (WINGS – Winners and Ignitors of New Generation Society) என்ற அமைப்பைத் துவக்கி, மாணவர்களை ஒருங்கிணைத்து, நேர்மைதான் தாரகமந்திரம் என்ற நோக்கத்தில் ஒரு இயக்கமாக மாற்றி கிட்டத்தட்ட 3000 மாணவர்களை ஒருங்கிணைத்து வைத்திருந்தேன். அதன் தலைமைப்பொறுப்பில் நாங்கள் 3 இளைஞர்கள் இருந்தோம். பள்ளிகளில் என் எஸ் எஸ், ரெட் ரிப்பன் கிளப் போல, சிறகுகள் அமைப்பையும் உருவாக்கினோம். அதற்கு வலைப்பூ கூட உருவாக்கினேன். இதோ அதன் சுட்டி! 

இரு வாரங்களுக்கு ஒருமுறை கூட்டம் கூடும். அதுவும், மாதிரி பாராளுமன்றமாக இருக்கும்.

மாதம் ஒருமுறை வங்கி, அஞ்சலகம், தாலுகா அலுவலகம் போன்ற அரசு நிறுவனங்களின் நடைமுறைகள் அந்தந்த அதிகாரிகளின் துணையோடு பயிற்றுவிக்கப்படும்.

நேர்மையான அரசியல் என்றால் என்ன? என்று கற்பிக்கப்படும்.

அரசியல் எவ்வளவு முக்கியம் என்று நாடகம் நடித்துக்காண்பிக்கப்படும்.

லஞ்சம் கொடுக்கமாட்டோம் என்ற உறுதிமொழி வாங்கிக்கொள்ளப்படும்.

சுயநீதிமன்றம் என்ற நடைமுறை பின்பற்றப்படும். அதாவது வகுப்பில் ஒருவன் தவறு செய்துவிட்டால், அது கண்டுபிடிக்கப்பட்டாலும், ஆசிரியரிடம் போகாமல், சிறகுகளே அவனை விசாரித்து, அவனுக்கான தண்டனையை அவனே நிர்ணயம் செய்துகொள்ளும் நேர்மையை வலியுறுத்தும்.

அரசு போடும் சட்டங்களை முழுமையாகப் பின்பற்ற பயிற்சியளிக்கப்படும்.
சிறகுகள் என்ற மாத இதழ் நடத்தப்படும். அதை சிறகுகள் மாணவர்களே நடத்துவார்கள். சமூகம் சார்ந்த விஷயங்களை மட்டுமே எழுதுவார்கள். படைப்பார்கள்.

தட்டிக்கேட்கும் பழக்கம் வலியுறுத்தப்படும்.

தன்னம்பிக்கைக்கு உரம் போடப்படும்.

அவர்கள் என்னவாக விரும்புகிறார்கள் என்று கண்டுபிடித்துச் சொல்லப்படும்.

இப்படி அழகாகச் சென்றுகொண்டிருந்த இயக்கம்…இப்போது இல்லை..! ஏன்? அதற்கான காரணத்துக்கு ஐந்து பதிவுகள் போடவேண்டியிருக்கும். ஆனால் இன்றும் சிறகுகள் இளைஞர்கள் அதிகபட்ச(!) நேர்மையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இது எப்படி கே.வி.ஆனந்த் குழுவிற்கு சிந்தனையில் உதித்தது என்பது ஆச்சர்யமாகவே உள்ளது.! அவரை அணுகி கேட்கும் எண்ணமும் இருக்கிறது.

ஆச்சர்யம் # 2

சென்ற பதிவாக நான் எழுதிய நாடா நினைவுகள், கேசட்டுகள் பற்றியது. இதை எழுதவேண்டுமென்று ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து யோசித்து, கொஞ்சம் எழுதிவைத்துவிட்டு, சென்றவாரம் புதன் இரவுதான் முடித்து பதிவேற்றினேன். பதிவின் நீளம் கருதி, இரண்டு பாகங்களாக்கி அடுத்த பாகத்தை வெள்ளியன்று வலையேற்றினேன். அன்று காலை வந்த ஆனந்தவிகடனில்…மூங்கில் மூச்சு என்ற தொடரில்..சுகா அண்ணன் (தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன் அவர்களின் புதல்வர்..சுரேஷ் கண்ணன் அவர்கள்) அதே நினைவலைகளை , அவர் கோணத்தில் மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருந்தார். அட! எப்படி அவர் எழுதிய அதே விஷயத்தை நாமும் எழுதியிருக்கிறோம் என்று ஆச்சர்யப்பட்டேன். அவரிடமும் இதைப்பற்றி விவாதிக்கும் எண்ணம் இருக்கிறது.
                        ------------------------------------------------------

சென்னையில் மிகவும் சிக்கனமான போக்குவரத்து எதுவென்றால், அது..ஷேர் ஆட்டோதான் ! ஆனால், அதில் ‘ கொஞ்சம் உள்ள போங்க சார்! என்று டிரைவர் சாதாரணமாகச்சொல்லும் இடத்துக்கு நாம் சென்றால், ஆட்டோவின் அந்தப்பக்க வாசல் வழியாக வெளியில் விழும் ஆபத்து இருக்கிறது. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ! என்று சொல்லியே நான்கு பேர் அமரும் இடத்தில் ஏழு பேரை ஏற்றும் சர்க்கஸ் நாள்தோறும் நடந்தேறுகிறது.

அடுத்து..ஆட்டோ..? இல்லை! அவர்களிடம் பேரம் பேசியே ஒழிந்துவிடுவோம். நீண்ட தூரப்பயணத்துக்கு, பாதுகாப்பான சிக்கனமான வழி – கால் டாக்ஸிதான்.!

 
மிகவும் தொழில்நேர்த்தியாக , சிறப்பாகச்செய்கிறார்கள். சமீபத்தில் நான் சென்ற கால்டாக்ஸி காட்டிய கிலோமீட்டருக்கும், அது காட்டிய தொகைக்கும் வித்தியாசம் இருந்தது. உடனே அதை புக் செய்த எண்ணுக்கு அழைத்துக்கேட்டேன். உடனே...மீட்டர் தவறாக இருக்கலாம் சார்! உங்க கணக்குப்படி கிலோமீட்டருக்கு என்ன உண்டோ அதைக்கொடுங்க போதும் என்று கூறி, அதையே டிரைவருக்கும் அறிவுறுத்திவிட்டனர். மிகவும் மகிழ்வாக இருந்தது.  ஆட்டோ ஸ்டாண்ட் அண்ணாச்சிகளா? முழிச்சுக்குங்க! ஏதாவது செய்ங்க!! 

Thursday, May 26, 2011

நாடா நினைவுகள் - தொடர்ச்சி....


பின்னர் முதன்முறையாக வீட்டிற்கு ஒரு பிலிப்ஸ் டேப் ரெக்கார்டரை சித்தப்பா வாங்கி வந்தார்..,எம்.எஸ்ஸின் சுப்ரபாதம்,கந்தர் சஷ்டி கவசமும், ஒரு டி எம் எஸ்ஸின் முருகன் பாடல்கள் கலெக்‌ஷனும் , நினைவே ஒரு சங்கீதம், வேலைக்காரன் படப்பாடல்களையும் கேசட்டாக வாங்கி வந்திருந்தார். அதற்கு ஒரு துண்டைப்போட்டு மூடி ஒரு மேசையில் வைத்தபின் வீட்டுக்கே அழகு வந்தது.


ஆஹா! நம் வீட்டிலும் கேசட் வந்துவிட்டது என்று புளகாங்கிதமடைந்தேன். வேலைக்காரன் படப்பாடல்கள் மொட்டை மனப்பாடம் ஆனது.! ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் –திருச்சி வானொலியில் – சூரியகாந்தி என்ற தலைப்பில் வரும் நாடகங்களைக் கேட்டுவிட்டு, சித்தப்பாவின் ஏற்பாட்டின்படி ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோவின் பவ்யத்தோடு, ஒவ்வொருவரும் உள்ளறைக்குச் சென்று அந்த டேப் ரெக்கார்டரில் எங்கள் குரல் வளத்தைக்காட்டி பாட்டுப்பாடி பதிந்துவிட்டு வந்தோம். நண்டு சிண்டுகள் வரை அனைவருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் என் தங்கை பாடிய ‘சுந்தரி சௌந்தரி நிரந்தரியே….! ‘ சூப்பர் ஹிட்!

பின்னர், வீட்டில் கேசட் புழக்கம் என்னால் அதிகரித்துவிட்டது. நண்பன் ஹரிகிருஷ்ணன் வீட்டில் இருந்து, ‘சம்சாரம் அது மின்சாரம்’ வசன கேசட் வாங்கிவந்து கேட்டேன். ஏன் ஓசியில் வாங்கி வந்தாய் என்று பாட்டு கிடைத்தது. இருந்தாலும், அந்த கேசட்டை ஓடவிட்டு கேட்பதில் ஒரு சுகம்தான். பின்னர் அதன் நுணுக்கங்கள் பிடிபட ஆரம்பித்தது. மெதுவாக கையில் இருக்கும் காசிலிருந்து, கேசட்டுகள் வாங்கத்துவங்கினேன். சித்தப்பாவின் டேப்ரெக்கார்டரை ஒப்பேற்றிய பெருமையும் என்னையே சேரும்!
கல்லூரி சென்றபின், கேசட் வாங்குவது அதிகமானது. நான் கேசட் வாங்காத பஸ் ஸ்டாண்டே இல்லை எனலாம். டி சீரிஸ், ராஜா, எக்கோ, வாணி, வீணா என பல்வேறு கம்பெனி கேசட்டுகள்! டூயட் பட கேசட் – நீலக்கலரில் வந்தது. மிகவும் அழகாக இருக்கும்.
பின் மைக்கேல் ஜாக்ஸனின் டேஞ்ஜரஸ்! 99ரூபாய்க்கு கருப்பு கலரில் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருந்தது.  வந்தே மாதரம் கேசட்டின் வடிவமைப்பும் மிகவும் அழகாக இருக்கும். அந்த கேசட்டின் கவர் மட்டும் மொழுக்கையாக கையில் கீறாமல் வடிவமைக்கப்பட்டிருந்தது.
காமெடி கலெக்‌ஷனாக, சுருளிராஜன், கவுண்டமணி செந்தில், ‘மூர்த்தி-கோபியின் காமெடி கேசட்டுகள்! மயில்சாமி-லக்‌ஷ்மணனின் ‘முப்பத்தாறு மொட்டைகளின் அட்டகாசங்கள்’ கேட்டு , அதன்படி கல்லூரியில் மிமிக்ரி செய்து பரிசுகள் வாங்கியது அந்த கேசட்டுகள் செய்த உதவி!
நான் படித்தது எலக்ட்ரானிக்ஸ் என்பதால், முதலில் நான் முயன்றது ஒரு ASSEMBLED டேப் ப்ளேயர்தான். அதற்கான கேஸிங், ட்ரான்ஸ்பார்பர், டையோடு, ஆம்ப்ளிபயர் போர்டு, டேப் மெக்கானிஸம், பி டி போர்ட் , ஈக்வலைஸர் போர்ட், அதற்கான எல் இ டி டிஸ்கோ லைட்  என பார்த்துப்பார்த்து வாங்கி அதில் லயித்துப்போய் வீட்டையே இரண்டு செய்திருக்கிறேன். அந்தக்காலகட்டத்தில் எங்கள் வீட்டில் ஆறு ஸ்பீக்கர்கள். தெருவில் தண்ணீர் எடுப்பவர்கள், என்னம்மா? தம்பி காலேஜ்லேருந்து வந்திருச்சுபோல? என்று கேட்கும் அளவுக்கு என் ஒலி(அலறல்)பரப்பு பிரபலம்!
வேலைக்குச் செல்லும் காலகட்டத்தில், கன்னாபின்னாவென்று கேசட்டுகள் வாங்கி, அதற்கு எண்கள் போட்டு ஒழுங்குபடுத்தி , தேடும்போது உடனே கிடைக்குமாறு ஒரு நோட்டில் எழுதிவைத்து என, அதற்காக நான் செலவழித்த நேரம் அதிகம்!
ஒரு பாடலை டீக்கடையில், பேருந்தில் கேட்டுவிட்டு, மிகவும் பிடித்துப்போய்விட, அந்தப்பாட்டு நமக்கே சொந்தமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று மனம் ஆசைப்படும். அப்போது நாம் இருக்கும் ஊரில் இருக்கும் ரெக்கார்டிங் கடைக்குப்போய், தேவைப்படும் பாடல்களை பட்டியலாக எழுதிக்கொடுத்து, ஒரு புதிய TDK 90 கேசட் வாங்கி அதில் இருபுறமும் பதியச்சொல்லி , என்று தருவீர்கள் என்று கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்து நகம் கடித்துக்காத்திருப்பேன். அவர் சொன்ன தேதியில் சொன்னதைவிட கொஞ்சம் முன்னாலேயே சென்று ரெக்கார்டிங் ஆகிவிட்டதா என்று போட்டுக்கேட்டுவிட்டு ஒரு நிமிடம் பதிசெய்யப்படாமல் மிச்சம் இருக்கும்போது..
அண்ணே! தளபதி படத்தில் யமுனை ஆற்றிலே மட்டும் போட்டுருங்க! என்று நைசாகக் கேட்க,
வசந்தம் மியூசிக்கல் ஓனர் அண்ணன், அந்த ஒரு நிமிசம் ஒங்க டேப்பில் சும்மா ஓடக்கூடாதாக்கும்? 90க்கு காசு குடுத்திருக்கீங்க? அதானே! நல்ல வெவரம்டா தம்பீ! நல்லா வருவ! என்று முன்கூட்டியே கணித்து வாழ்த்தினார் . J

நாம் அழகாக கலெக்ட் செய்த பாடல்களை போட்டுக்கேட்டுவிட்டால், வேறு எங்கு அதில் உள்ள ஒரு பாடலைக் கேட்டாலும், அடுத்தபாடலாக, நம் கேசட்டில் உள்ள பாடலைத்தான் வாய் முணுமுணுக்கும். மேலும், பேருந்துகளில், நம் கேசட்டைக்கொடுத்து, அதை டிரைவர் போட்டுவிட, பயணிகள் ரசிக்கும்போது, அனைவரது முகத்தையும் (குறிப்பாக கல்லூரிப்பெண்கள்)  பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டே பயணிக்கும் சுகம் இருக்கிறதே…..அனுபவிக்கணும் பாஸு!
அதில் இன்னும் சில டிரைவர்கள், அந்த கேசட்டை அப்படியே பதிந்துவிட்டு தருவதாக வாங்க, நானும் நம்ம்ம்பிக்கொடுக்க, அவர் அப்படியே அந்தக் கேசட்டை ஆட்டையப் போட்டுவிடும் சோகம் இருக்கிறதே…அதையும் அனுபவிக்கணும் பாஸு!
அப்படிச்சேர்ந்துபோன 500க்கும் மேற்பட்ட கேசட்டுகளை விட்டுவிட்டு நான் வெளிநாடு போய்விட்டு வந்தபின், என் குடும்பம் அதைப் பாதுகாத்து வைத்திருந்தது. இடையில் திருச்சி வானொலிக்காக, ‘எங்கிருந்தோ வந்தான், படத்தின் ஒரு பாடலான, ‘மௌனம் என்பது கவிதை மொழி’ என்ற அருமையான மெலடி இணையத்திலும் கிடைக்காமல், என்னிடம் இருந்த கேசட்டிலிருந்து எடுத்துக்கொடுத்தபோது, அவைகளைப்பாதுகாத்ததற்கு நன்றியாக உணர்ந்தேன்.
இதோ, கேசட்டுகள் மீண்டும் என்னுடன் சென்னைக்கு வந்துவிட்டன. ஒரு நாள் ஒதுக்கி அந்த நாடாக்களில் கேட்ட அத்துனை ஓசைகளையும் மீண்டும் கேட்க காதுகள் துடிக்கின்றன. தற்காலிக நிவாரணத்துக்கு…நாடா நினைவுகளாக !!

Wednesday, May 25, 2011

நாடா நினைவுகள்     வீடு மாற்றும்போது, பழைய பொருட்களை பரணில் இருந்து இறக்கிக்கொண்டிருந்தேன். ஒரு பெரிய அட்டைப்பெட்டி கண்ணில் பட்டது. அட! என்று ஆசையுடன் அதை இறக்கிவைத்து விட்டு, திறந்து காட்டி, இதையும் சென்னை கொண்டு போறோம். என்று தங்கமணியிடம் சொல்ல, ”ஹ்க்க்ம்!” என்ற ஒரு கனைப்பு வந்தது. அதற்கு என்ன அர்த்தம் என்று அவரிடம் கேட்கவும் முடியாது.
பாட்டு கேட்பது என்பது இப்போது மிகவும் எளிமையான செயல். கேட்க நினைக்கும் பாடலை இணையத்தில் தேடி, நமது இசைபாடும் கருவியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் கேட்கத்தொடங்கிவிடலாம். இதில் இருக்கும் வேகமும், எளிமையும் நம்மை பரவசத்தில் ஆழ்த்துவது உண்மைதான்!
ஆனால்,ஒரு காலத்தில், திருவிளையாடல் படத்தின் அனைத்துப்பாடல்களும், ஒரு கருப்பு வட்டத்தட்டில் இருக்கும். அதற்கு இசைத்தட்டு என்று தமிழிலும், ரெக்கார்ட் என்று ஆங்கிலத்திலும் கூறினார்கள். இந்த வார்த்தைகளை நான் மனப்பாடம் செய்துகொள்ள பலமுறை சொல்லிப்பார்த்திருக்கிறேன். அதனை ஒரு பெரிய அட்டை உறையில் போட்டு வைத்திருப்பார்கள். ஒவ்வொருமுறை பாடலை ஒலிக்கவிடும்போதும், ஒரு பெரிய கிராமபோன் பெட்டியில் போட்டு சுழல விடுவார்கள். இப்போதுபோல் பாடலை உடனே தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், இலுப்பூர் பிடாரிகோயிலில் இசைத்தட்டு போடும் அந்த அண்ணன் இப்ப பாக்குறியா? கரேட்டா ‘பாட்டும் நானே’ போடுறேன் என்று ஓரளவு அதற்கு அருகில் போய் முள்ளை வைத்துவிடுவார். அது ’பாத்தா பசுமரம்’ என்று ஆரம்பிக்கும். எப்படி மாறிப்போச்சு என்று முனகிக்கொண்டே, மீண்டும் முயற்சித்து பாடவைத்துவிடுவார்.
லேசான கொரகொரப்புடன் அது ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என ஆரம்பித்து ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்று ஆரம்பிக்கும்போது, நான் அவ்வையார் இதற்குள் எப்படிப் போனார் என்று பலமுறை வியந்திருக்கிறேன். ஆனால், கிராமபோன் வாங்கித்தாருங்கள் என்று அப்பாவிடம் கேட்க எனக்கும் தைரியமில்லை. வாங்கிவந்தால், மூன்றாவது நாள் அதை நோண்டாமல் ஒழுங்காக வைத்திருப்பேனா என்று என்மேலும் நம்பிக்கையில்லை. ஆனால், அதில் அவ்வளவு ஆசை இருந்தது.
பின்னர் பாடல்கள் கேட்கும் ஆர்வம் , வானொலியிலும், எங்காவது செல்லும் விழாக்களிலுமாக சுருங்கியிருந்த வேளையில், பக்கத்துவீட்டு லைப்ரேரியன் வீட்டில், சிங்கப்பூரிலிருந்து ஒரு பெரிய பெட்டிபோன்ற வஸ்து வந்து அமர்ந்திருந்தது. சிறுவர்கள் அனைவரும் அதைச்சென்று பார்த்தோம். அதன் பெயர் நேஷனல் டேப் ரெக்கார்டர் என்றார்கள். அது என்ன ஒற்றுமை என்று தெரியவில்லை. அதில் நான் கேட்ட முதல் பாடல் ‘ இசையால் வசாமாகா இதயமெது?’. அன்றே அந்த டேப் ரெக்கார்டரில், என்னைப்பாடச்சொல்லி, பதிவுசெய்வதாகச் சொன்னார்கள். நான் பாடிய முதல் பாடல் ‘ புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!’
பாடல்கள் பெட்டியிலேயே இருக்குமா? அல்லது வெளியில் எடுக்கலாமா? இசைத்தட்டு எங்கே வைப்பார்கள்? முள்ளை எப்படி நகர்த்தி வைப்பது? பட்டனெல்லாம் எதுக்கு? செவப்பு பட்டனை ஏன் அமுக்கினீங்க? என்று நான் கேட்ட கேள்விகளால் அந்த கருப்பையா மாமா திணறித்தான் போயிருப்பார். சொல்றேன் என்று கூறிவிட்டு, ஒரு பட்டனை அழுத்தினார். பிளந்த எங்கள் வாய்கள் போலவே ஒரு சிறிய கதவு திறந்தது. அதிலிருந்து, ஒரு பொருளை எடுத்தார்.  இருபுறமும் துளைகளுடன் ஒரு செவ்வகப்பெட்டி. அதில் ஒருபக்கம் மட்டும் வெளியில் தெரியும் காப்பிப்பொடி நிற நாடா. அதைச்சுற்றிக்கொள்ள இரு துளைகளிலும் சுழலுமாறு இரு சக்கரங்கள் என மிகவும் அழகாக இருந்தது. அதனுள் இருக்கும் நாடாவில்தான் பாடல் இருக்கும் எனவும், அது ஒருபக்கம் சுற்றிமுடித்தபின் திருப்பிப்போட்டால், வேறு பாடல் கேட்கலாம் எனவும் தெரிந்துகொண்டேன். அது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஏனெனில், நம் குரலையும் அதில் பதிந்துகொள்ளலாம் என்ற இன்னொரு அம்சம்! அதற்கு கேசட் என்று பெயர் சொன்னார்! ‘சட்டுன்னு பாட்டு கேட்கலாம் என்று யோசித்து ‘கேள்-சட்’ ஐத்தான் இப்படி வைத்திருக்கிறார்கள் என்று நானாகவே ஒரு காரணம் யோசித்துவைத்துக்கொண்டேன்.


அப்போதிலிருந்து ஆரம்பித்தது கேசட் மோகம். கேசட்டுகளை எங்கு பார்த்தாலும் ஆசையாக இருக்கும். வெளிவரும் எல்லா கேசட்டுகளையும் வாங்கிவிடவேண்டும் என்று லட்சியம் வைக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கேசட் கடைக்காரர்கள் மீது பொறாமையாக இருக்கும். பிடாரிஅம்மன் கோயில் அண்ணன் கேசட் ப்ளேயருக்கு மாறியதும் கேசட்டுகளின் நெருக்கம் அதிகமானது. தெரிந்த விழாக்களுக்குச்செல்லும்போது, முதலில் மைக் செட் அண்ணனை நட்பாக்கிக்கொள்ளுவது அத்தியாவசியமாகிப்போனது.


                                     நாடா நினைவுகள் தொடரும்....!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...