Monday, April 28, 2008

மூட்டை முழுவதும் முரண்பாடு!இயற்கை சீரழிகிறது
மரங்களை வெட்டாதீர்கள்
அவைகள் இல்லையென்றால்
அவனியே இல்லை!
எழுதிவிட்டு
புன்னகைத்தான்
கவிஞன் !

எதுகை மோனையுடன்
மரம் காப்பாற்ற
கவிதை எழுதிய
காகிதமும்
மரம்தான் என்பதை
லாவகமாய்
மறந்து..!

இனி எதில் எழுதினால்
மரம் காக்கலாம். ?
நீ கவிதை எழுதுவதைக் குறை!
நிறைய மரங்கள் மூச்சு விடும்.

*********************

அரசு மதுக்கடையில்
அமிலக்காரமாய்
அருந்திவிட்டு
வண்டியில் போனால்
பிடிக்கிறார்கள்
குடித்துவிட்டு
ஓட்டினேனாம்!

அப்ப எதுக்குய்யா
பார் வச்சு
குடிக்க
பக்குவமா சொல்றீங்க!
குடிச்சவன்
வீட்டுக்கு
உருண்டுக்கிட்டா
போவான்?

************************

பையனை
கடத்தி
அப்பனுக்கு
செல்லில் பேசினா
பிடிச்சுருவான்னு
பயந்து
லெட்டரில் எழுதி
அனுப்பி வச்சேன்
மகனைப்பாத்து
சொன்னேன்
ஒங்க அப்பனிடம்
கொண்டு கொடு!
பயந்துக்கிட்டு
பணம் குடுப்பான்!

Friday, April 25, 2008

புறம் ஒழிஞ்சாத்தான் அகத்துக்கு நல்லது..! - 2

பெரிய பெரிய நிறுவனங்கள்ல எல்லாம், எவ்வளவு பெரிய திறமைசாலியா இருந்தாலும், இந்த மாதிரி புறம் சொல்லும் குணமுள்ளவுங்களை வெளில அனுப்பிடுவாங்க..! ஏன்னா புறம் கூறும் நபர்களாலத்தான் ஒரு நல்ல நிறுவனம் அழிஞ்சு போகும்ன்னு அவுங்களுக்கு தெரியும்.

பாட்சா படத்துல தேவன் நக்மாவோட அப்பாவா வருவாரு! அவர்தான் பாட்சாவான ரஜினிக்கிட்ட நல்லவர் மாதிரி நடிச்சு, அவரைப்பத்தி ரகுவரன்கிட்ட புறம் சொல்லி ஏமாத்தப்பாப்பாரு! அதைக்கண்டுபிடிச்சு ரஜினி தப்பிச்சுடுவாரு...அதே சமயம் கூட இருந்தே ஏமாத்தின தேவன் தான் தன் குடும்பத்தை கொன்னதுன்னு தெரிய வ்ந்ததும் ரகுவரனே , தேடிவந்து தேவனை கொன்னுடுவாரு! இதுதான் புறம் கூறுபவர்களோட நிலமை!

இந்த குணத்தை விரட்ட , முடிஞ்சவரைக்கும் ,அடுத்தவுங்களை குறை சொல்லாம இருக்கலாம். அப்படி சொல்றதா இருந்தா அவுங்க முன்னாடியே சொல்லிடலாம். அதை விட்டுட்டு, கோழைத்தனமா பின்னாடி போய் அவுங்களைப்பத்தி சொன்னா, அதை ரகசியமாவே சொன்னாலும் அது ஒரு நாள் வெளில வந்து நமக்கு அவமானமா போயிடும்.

வெளிவராமல் போன ஜக்குபாய் பட போஸ்டரில் ஒரு வாசகம் இருக்கும்...இறைவா! நண்பர்களிடமிருந்து என்னைக்காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்! இதைவிட அழகா புறம் கூறும் நண்பர்கள் பத்தி எப்படி சொல்லமுடியும்?

ஏன்னா நமக்காக பிறரைப்பத்தி குறை சொல்பவர்கள் ! பிறருக்காக நம்மைப்பற்றியும் கட்டாயம் குறை கூறுவார்கள். இந்த நினைப்பு எப்பவும் இருந்தா போதும். நாமும் அடுத்தவுங்களைப்பத்தி பின்னால் பேசமாட்டோம். அடுத்தவுங்களும் நம்மகிட்ட பிறரைப்பத்தி சொல்ல பயப்படுவாங்க!
அதையும் மீறி சொன்னா ஒரே ஒரு தடவை இப்படி சொல்லிப்பாருங்க! " இப்படித்தானே மத்தவுங்ககிட்ட என்னப்பத்தி சொல்லுவீங்க"? அதுக்கப்புறம் புறம்கூறும் வாசனையே உங்க பக்கம் அடிக்காது.

எல்லாரையும் அகம் மகிழ பாராட்டி பழகிட்டா புறத்துக்கு வேலையே இருக்காது.

இப்ப புறம் மட்டுமில்ல..அகம் மகிழ்ந்தும் கூறுகிறேன். வாழ்த்துக்கள்!

புறம் ஒழிஞ்சாத்தான் அகத்துக்கு நல்லது..!

ஒருத்தர் , நமக்கு நேரா நம்மளை உயர்வா பேசிட்டு, அடுத்தவுங்ககிட்ட நம்மளைப்பத்தி இழிவா பேசுறது நமக்கு என்னிக்குமே பிடிக்காது. ஆனா அதை நம்ம பண்ணினா ரசிச்சு பண்ணுவோம். ஏன்னா புறம் சொல்றதுங்கறது நமக்குள்ள ஊறிப்போச்சு!

திருக்குர்ரான் சொல்லுது ! ஒருவனைப்பற்றி புறம் கூறுதல் தன்னுடைய சகோதரனுடைய மாமிசத்தை சாப்பிடுவதற்குச்சமம். !

அந்த அளவுக்கு அதில் என்ன கெடுதல் இருக்கமுடியும்?
இது சாதாரண விஷயமில்லை. நம்மை படுகுழில தள்ளிடும். புறம் கூறும் மனப்பான்மை உள்ளவுங்க வெற்றிக்கோட்டை தொடவே முடியாது.

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.

முகத்திற்கு முகம், இரக்கமே இல்லாமல், நாம் கடுஞ் சொற்களைக் கூறினாலும், கூறலாம். ஆனால், கண் எதிரே, ஆள் இல்லாத பொழுது, ஒருவரைப் பற்றி மட்டும், இழிவாகப் பேசுதல் கூடாதுன்னு வள்ளுவரே சொல்றார்.

மொக்கச்சாமி ஒரு விமானத்துல போய்க்கிட்டிருந்தார். அப்ப அவர் சீட்டுக்குப்பக்கத்துல, ஒருத்தர் சாதாரணமா உக்காந்திருந்தார். அவர்க்கிட்ட மொக்கச்சாமி மெதுவா பேச்சுக்குடுத்தார். இவரு தன்னைப்பத்தி ரொம்ப பெருமையா பீத்திக்கிட்டார். போகப்போக பக்கத்தில் உள்ளவர் வியக்கற மாதிரி நான் அப்படியாக்கும், இப்படியாக்கும்ன்னெல்லாம் சொல்ல ஆரம்பிச்சார். அவரும் பேசாம கேட்டுக்கிட்டிருந்தார். இந்த ப்ளைட்ட ஓட்டுற கேப்டன் கூட நம்ம பயதான்.! ரொம்ப நாளா என்னை கெஞ்சி கேட்டுக்கிட்டதால ஏறினேன். பஸ்ட் கிளாஸ்லதான் உக்காரணும்னு ஒரே அடம்.! நாந்தான் அதெல்லாம் வேணாம்ப்பா உனக்கு வேலை போயிடும்னு சொல்லி அடக்கிவச்சேன். பள்ளிக்கூடம் படிக்கிறப்ப 10 மார்க் கூட வாங்காத பயலெல்லாம் இன்னிக்கு கேப்டன்! அவனுக்கு சைக்கிளே சரியா ஓட்டத்தெரியாது! இப்ப ப்ளைட் ஓட்டுறான்னு அந்த விமானத்தோட கேப்டனை எல்லாம் வம்புக்கு இழுத்து பேசிக்கிட்டிருந்தாரு..அப்பன்னு பாத்து ஒரு ஏர் ஹோஸ்டஸ் வந்து, சார்..! ன்னாங்க! தன்னைத்தான் கூப்புடறார்ன்னு நினைச்சு, எஸ் ன்னாரு மொக்கச்சாமி! அவுங்க அவருக்கு பக்கத்துல இருக்குறவரைக்கூப்பிட்டு...சார் ! உங்க கேப்டன் ரூம் க்ளீன் பண்ணியாச்சு ! உங்க கேபினுக்கு போலாம் ன்னாங்க! அப்பதான் தெரிஞ்சுது! அவர்தான் அந்த விமானத்தோட கேப்டன்னு! கேப்டனும் மொக்கச்சாமிய மொறச்சு பாத்தாரு ! உடனே மொக்கச்சாமி அலட்டிக்காம அவர்க்கிட்ட சொன்னாரு! அடடா..! நான் ப்ளேன் மாறி ஏறிட்டேன் போல!
என்ன ஒரு சமாளிபிகேஷன்

இந்த மாதிரி ஆட்களை நீங்க எல்லாருமே சந்திச்சிருப்பீங்க! இதுக்கான அடிப்படைக்காரணம், தன்னைப்பத்தி புகழ்ந்துக்க விஷயமில்லாதபோது, அடுத்தவங்களைப்பத்தி இகழ்ந்தா சந்தோஷமா இருக்குறதுதான் காரணம்! அது மூலமா.. நான் ரொம்ப நல்லவன்னு சொல்லி அடுத்தவரைக் கவரும் முயற்சி! ஆனா அதோட முடிவு தோல்விதான்கிறதுதான் சோகமான விஷயம்!

ஒருவர் இருக்கும்போது அவரைப்பத்தி என்ன பேசுவோமோ அதையே அவர் இல்லாதபோதும் பேசிட்டா பிரச்னையே இல்லை! ஏன்னா இல்லாதபோது பேசின குறை, அவருக்கு தெரியவரும் புள்ளியில்தான் நாம் சக மனிதனின் நம்பிக்கையை நமக்கே தெரியாமல் இழக்க ஆரம்பிக்கிறோம்

(தொடரும்..)

Tuesday, April 22, 2008

தள்ளிப்போட்டால்....!

இன்னிக்கு பாக்கவேண்டிய இந்த பதிவை அப்புறம் பாத்துக்கலாம்னு தள்ளிப்போட்டீங்கன்னா ..இந்த விஷயம் உங்களுக்கு தெரியாமலேயே போயிருக்கும். நல்ல வேளை தள்ளிப்போடலை.!

ஒரு சினிமா நாளைக்கு ரிலீஸ் ஆகுதுன்னா...என்னமோ நாளைக்கே அதோட ரீல் எல்லாத்தையும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிடுவாங்கங்கிற மாதிரி...ரொம்ப வேகமா..கூட்டத்துல சட்டை கிழிஞ்சாலும் பரவாயில்லைன்னு முதல்நாள் முதல் ஷோ பாத்தேன்னு சொல்லிக்கிற பெருமைக்காகவே போய் பாத்துட்டு வந்து லந்து பண்ணிக்கிட்டிருப்போம்.

அதை ஒரு வாரம் தள்ளிப்போட்டா சந்தோஷமா இரைச்சல் இல்லாம படம் பாக்கலாம்.

நம்ம கூடப்படிச்ச நண்பன் ஒரு வேலைக்கு அப்ளை பண்ணும்போது, நான் நாளைக்கு பண்ணிக்கிறேண்டான்னு சொல்லிட்டு அப்புறம் கடைசி நாள் , நேத்திக்கே முடிஞ்சுபோச்சேன்னு கவலைப்பட்டுக்கிட்டிருக்கும்போதே...அப்ளை பண்ணின நண்பனுக்கு அந்த வேலை கிடைச்சுட்டா , ச்சே! எனக்கு அதிர்ஷ்டமே இல்லைன்னு புலம்பிக்கிட்டிருந்திருப்போம். (இப்படி பலப்பல புலம்பல்களுக்கு காரணமே தள்ளிப்போடுதல்தான்)

முதல்நாளே அதை உடனே தள்ளிப்போடாம செஞ்சிருந்தா நமக்கும் வேலை கிடைச்சிருக்கும்.

அப்படின்னா எதை தள்ளிப்போடணும் , எதை தள்ளிப்போடக்கூடாதுன்னு கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.

முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை தள்ளிப்போடணும்
முக்கியத்துவம் உள்ள விஷயங்களை உடனே செய்யணும்!
ஆனா..
எதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதுங்கிறதுல, தெளிவா இருக்கணும்!

நாம எதையுமே தள்ளிப்போடாதவரா இருந்தா, முதல் நாள் முதல் ஷோ பாக்குறதும் தப்பே இல்லை!

நம்ம மொக்கச்சாமியும் அவரோட நண்பரும்.. ஒரு காட்டு வழியா போயிக்கிட்டு இருந்தாங்க.. அப்பன்னு பாத்து ஒரு சிங்கம் வந்துருச்சு.. உடனே அதுக்கிட்டயிருந்து தப்பிக்கிறதுக்காக ரெண்டு பேரும் ஓட ஆரம்பிச்சாங்க! சிங்கம் துரத்த ஆரம்பிச்சுடுச்சு! வேகமா ஓடிக்கிட்டிருக்காங்க! ஒரு இடத்தில் மொக்கச்
சாமி...குனிஞ்சு அவரோட ஷூ லேசை நல்லா கட்டிக்கிட்டிருந்தாரு. அப்ப ஓடிக்கிட்டிருந்த நண்பர் கேட்டாரு.. என்ன மொக்கச்சாமி! சிங்கம் தொறத்துது. இப்ப பாத்து ஷூ லேசை கட்டிக்கிட்டிருக்க நம்மளை எப்ப அந்த சிங்கம் பிடிக்கப்போகுதோன்னு பயத்தோட ஓடிக்கிட்டிருக்கோம்.அதோட வேகத்துக்கு ஈடு குடுத்து வேகமா ஓட் வேண்டாமா? ன்னு கேட்டாரு. அப்ப மொக்கச்சாமி பொறுமையா சொன்னாரு. சிங்கத்தோட வேகத்துக்கு ஈடு குடுக்க முடியுமான்னு தெரியலை.ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் உன் வேகத்துக்கு ஈடு குடுத்து உன்னைவிட முன்னாடி ஓடிட்டேன்னா போதும் ..அதுக்கிட்டயிருந்து தப்பிச்சுருவேன்.

இப்படித்தான் நாமளும் ஓடவேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். எந்த விஷயத்தையுமே தள்ளிப்போட்டோம்னா நம்மளை விட வேகமா ஓடறவுங்களுக்கு அந்த விஷயத்தில் வெற்றி காத்துக்கிட்டிருக்கும்.

நாம அன்றாட வாழ்க்கைல எத்தனை இடங்களில் தள்ளிப்போடுறதை பயன்படுத்துறோம்.?


அடுத்த பஸ்ல போயிக்கலாம்!
நாளைக்குதானே கடைசி நாள் ,நாளைக்கு டிடி எடுத்துக்கலாம். (ஆனா நாளைக்கு பேங்க் ஸ்ட்ரைக்குன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்காது)
வர்ற ஞாயித்துக்கிழமை வண்டிய துடைச்சுக்கலாம்!
இந்த வாரக்கடைசில மேசைல இருக்குற குப்பையை ஒழுங்கு பண்ணிறலாம்!
பதில் மெயில் அப்புறம் போட்டுக்கலாம்ன்னு இப்படி பலப்பல ஒத்திப்போடல்கள்!

இதுதான் உங்களை வெற்றியை அணுக விடாமல் தடுக்கும்னா நம்பவா போறீங்க? ஆனா அதுதான் உண்மை!

மருத்துவமனைகள்ல சொல்றதை கேட்டிருப்பீங்க! அரை மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டுவந்திருந்தா உயிரை காப்பாத்திருக்கலாம்.
எக்ஸாம் ஹால்ல சொல்லியிருப்பாங்க! இவ்வளவு நேரம் கழிச்சு வந்தா எப்படிப்பா உள்ள விடுறது?
ஒரு வாடகை வீடு பாத்திருப்பீங்க! நாளைக்கு பேசி முடிச்சுறலாம்ன்னு தள்ளிப்போட்டுட்டு அடுத்த நாள் போய் நின்னீங்கன்னா அடடே! நேத்து சாயங்காலமே ஒருத்தர் வந்து அட்வான்ஸ் குடுத்துட்டு போயிட்டாரே..ஸாரிங்க! ன்னு அந்த வீட்டுக்காரரு சொல்லுவாரு!

இதெல்லாம் சரியான திட்டமிடல் இல்லாம ஒத்திப்போடறதோட விலை! எப்பவுமே நல்ல விஷயங்களை தள்ளிப்போடாம உடனுக்குடன் செஞ்சு பழகுங்க! முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா அப்புறம் அது பழகிப்போச்சுன்னா வெற்றியும் உங்களுக்கு பழகிப்போகும்.

நல்ல தொழிலுக்கு ஒரு இலக்கணம் சொல்லுவாங்க! நாளைய ஆர்டர்! இன்றைய டெலிவரின்னு! நாளைக்கு வரப்போற வேலைக்கு தள்ளிப்போடாம இன்னைக்கே தயாரா இருக்கணும்னுதான் அதுக்கு அர்த்தம். ஏன்னா சில சமயம் வேலை எவ்வளவு இழுக்கும்னு நமக்கே கூட தெரியாது.

மொழி படத்துல பிரகாஷ்ராஜும், பிருதிவிராஜும் பேசிக்கிட்டிருப்பாங்க! பிருதிவிராஜ் சொல்லுவாரு..ச்சே! கல்யாணம் ஆகலைன்னு சொன்னா வீடே தரமாட்டேங்கிறாங்க! அதுக்கு நடுவயசுக்காரரா இருக்கும் பிரகாஷ்ராஜ் பரிதாபமா சொல்லுவாரு..எனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னா பொண்ணே தரமாட்டேங்கிறாங்க! திருமணத்தை தாமதிக்காம பண்ணியிருந்தா இந்த கொடுமை இருந்திருக்காது.

முடிஞ்சவரைக்கும், எந்த காரியத்தையும் தள்ளிப்போடாம உடனே செஞ்சு பாருங்க! அந்த காரியம் ரொம்ப சுலபமா முடியும். ஏன்னா தள்ளிப்போடப்போடத்தான் சுமை அதிகரிக்கும்.

இப்ப இந்த பதிவை படிச்சு முடிச்ச உடனே...இதுவரைக்கும் செய்யாம தள்ளிப்போட்டு வச்சிருந்த விஷயங்களெல்லாம் லிஸ்ட் எடுத்து , விறுவிறுன்னு செய்ய ஆரம்பிச்சீங்கன்னா வெற்றிதான்!

Wednesday, April 16, 2008

குசும்பன் கல்யாணம் சூப்பரு!
குசும்பன் கல்யாணத்துல , அவரோட அப்பாவியான போஸ் பாத்துக்குங்க!


அதிகமான  பதிவர்கள் வருகையோடு நண்பர் குசும்பனின் கல்யாணம் சூப்பரா நடந்துச்சு!


தாலி கட்றப்ப பதிவர்கள் யாரும் பக்கத்துல இல்ல ! (தூரமா நின்னு வாழ்த்தினாங்க)
நம்ம குசும்பன் கஷ்டப்பபடுறதை யாராலயும் தாங்கிக்கமுடியாததாலத்தான்னு நினைக்கிறேன்.  :)

பொடியன்,
மங்களூரார்,
நாமக்கல் சிங்கம்,
இம்சை அண்ணாச்சி,
அபி , அபி அம்மா, நட்டு...
அப்புறம் அவுங்ககூட யாரோ கெச்சலா...ஆங்க்.. அபி அப்பா! ,
நாகை புலி,
ஜ்ஜேக்கே,
ஜிஜிஜி,
காய3,
கவி ஜூனியர் 
நானு
எல்லாரும் போய் கல்யாண மண்டபத்தில் சமைச்ச 
சாப்பாடு வீணாகாம பாத்துக்கிட்டோம். 

எங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு 
கூத்தடிச்சுட்டு ஊரைப்பாக்க எஸ்கேப்...!

வாழ்க குசும்பன்!


Friday, April 11, 2008

பிரச்னையைச் சொல்லுங்க!

            சில சமூக இயக்கங்களில் பணியாற்றிவரும் நான், நுகர்வோர் அமைப்புகளில் அதிக நாட்டம் கொண்டவன். அந்த வகையில், தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயலாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாரம்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள எல்லா பதிவர்களும், நுகர்வோர் உரிமை சம்பந்தமான எந்தப்பிரச்னைக்கும் எங்களை அணுகலாம்.

தகுந்த உதவிகள் செய்துகொடுக்கப்படும்.

புகார்களையும் தெரிவிக்கலாம். அந்தந்த மாவட்ட இயக்கங்கள் மூலம் மேல் நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும்.
நம் விழிப்புணர்வுதான், வியாபாரிகளை தவறு செய்யவிடாமல் தடுக்கும்.

மின்னஞ்சல் முகவரி : tnnugarvor@yahoo.com


Sunday, April 6, 2008

திருவிழான்னு வந்தா....!

இன்று ஊருக்குப்பக்கத்தில் ஒரு கிராமத்திருவிழா.!
எப்பவும்போல, கேமிராவுடன் போனதால் சிக்கிய
காட்சிகள் இவை!

 


கிளி எடுத்துத்தரும்
சீட்டைப்பாத்து
கிழவி குரலில்
டேப் ரெக்கார்டர்
பலன் சொல்ல,
வண்டியை போத்தியிருக்கும்
வாசகங்கள்
சிரிப்பை வரவழைக்க
பக்கத்துக்கடைக்காரர்
பீட்டர் இங்க்லாண்ட்
வாடிக்கையாளரை எதிர்பார்த்து..!
(அவரிடம் ஒரு சட்டை வாங்கினேன்)
 

திடீர்க்கடைகளில்
திடீர் பக்தியும், திடீர் படிப்பும்..
சிறந்த நெட்வொர்க்கும்!
(இளையராஜா பாடல்கள் வாங்கினேன்)

 
இந்த கோபுரங்களுக்குப்பின்னே
எத்தனை
கடன்கள்,
கவலைகள்,
எதிர்பார்ப்புகள்!
கோபுரங்கள்
அழிந்தால்தான்
வீட்டில்
மகிழ்ச்சி வரும்.
(சீனிக்காராச்சேவு வாங்கினேன்)


சத்தியமாய் எனக்காக இல்லை!

 வாழ்க்கை மீதுள்ள  இவர்களது
நம்பிக்கைக்காக!


என்னய்யா நடக்குது இங்க? - ஒகேனக்கல் எங்க இருக்கு?


உங்க வீட்டுக்குள்ள ஒருத்தன் நுழையுறான். !
என்ன குழம்பு? ங்குறான். யாருன்னே தெரியலை!
இருந்தாலும் 'வெண்டைக்காய்' ன்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே

நான் வெண்டைக்காய் வாங்கின கடையிலதான் நீயும் வாங்கின!

அதுனால இந்த வெண்டைக்காயும், அதவச்சு செஞ்ச குழம்பும் இப்ப என்னுது! அதுக்கும்மேல இனிமே வெண்டக்காயை வச்சு எது பண்றதா இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்த சொல்லு.. அப்பதான் அதைப்புடுங்கிட்டுப்போக வசதியா இருக்கும்!  நானே வந்து வாங்கினதால அந்த காய்கறிக்கடையையும் நாந்தான் எடுத்துக்குவேன். அதெப்புடி என் வெண்டக்காய வச்சு சமைக்கிற எடத்துல டிவி, பைக்கெல்லாம் வச்சிருக்க! ன்னு அடிச்சு நொறுக்கிட்டு போயிடுறான்.

இப்புடி ஒருத்தன் வந்து அடாவடி பண்றதுக்கும்
கர்நாடகா அடாவடி பண்றதுக்கும் பெரிய வித்யாசம் ஒண்ணே ஒண்ணுதான்.
அது வெண்டைக்காய்...இது பல மனிதர்களின் வயிறுக்காய்..!

ஆமா..நான் தெரிஞ்சும் - தெரியாமத்தான் கேக்குறேன்

என்னய்யா நடக்குது இங்க ? ஒகேனக்கல் என்ன ஜப்பான்லயா  இருக்கு? (அவன் கூட இவ்வளவு   பண்ணமாட்டான் போல இருக்கே!)

அப்ப நாம எந்த நாட்டில இருக்கோம். இந்தியாங்குறது உண்மையிலேயே ஒரே தேசமா? இல்ல சும்மா உலுலுவாங்காட்டிக்கும்.....வேசமா? (எதுகைமோனையா இருந்தாலும் எரிச்சலாத்தானே வருது)

எதை எடுத்தாலும் விட்டுக்கொடுத்து போற ஆளை இளிச்சவாய்ன்னு சொல்லுவாங்க! அவன் சிரிக்காதவனாகவே இருந்தாலும்கூட!     மொத்த உடம்பும் விட்டுத்தர்ற விஷயத்துக்குக்கூட வாய்க்குத்தான் கெட்ட பேரு.......இளிச்ச வாய்!

இந்திய தேச வரைபடத்துல   கடைசில தாவாங்கட்டைக்குப்பக்கத்துல
பெரிய இளிச்சவாய் ஒண்ணு  இருக்குடோய்ன்னு எல்லா மாமாநிலமும்
ரவுண்டு கட்டி அடிச்சாலும், வாங்கிட்டு இருக்குறதுக்கு...
நம்ம சொரணை செத்துப்போய் பல நூற்றாண்டா ஆகிப்போச்சோன்னு
தோணுது.!

முன்னாடி ஒரு கொசுவத்தி பதிவுல
காமெடியா ஒரு விஷயம் சொல்லியிருந்தேன்.

Unlimited   க்கும்  ஒரு  limit இருக்கு!

இப்ப அதே மாதிரிதான்

சகிப்புத்தன்மைக்கும் ஒரு சகிப்புத்தன்மை இருக்கு!

அதுக்கும் மேல போனா..... என்ன பண்றதுன்னு யோசிக்காம
ரௌத்ரம் காட்டுறதுதான் நல்லது!

இதே நெய்வேலி, கர்நாடகத்தில் இருந்தா இந்த பதிவை அடிக்கமுடியாம
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஏதாவது ஒரு புத்தகத்தை மேஞ்சுக்கிட்டுதான் இருக்கமுடியும்.  இந்நேரம் பீஸைப்புடுங்கிருப்பாங்க! அவுங்களுக்கு பிரச்சனை வேணும் அவ்வளவுதான்! நியாயமா ? கிலோ என்ன விலைன்னுருவாங்க! ஏன்னா கர்நாடகத்தனம்னா இதுதான்.

அதுக்கும்மேல நம்ம வீட்டுக்கும் பக்கத்துவீட்டுக்கும் பெரிய பிரச்னை நடந்துக்கிட்டிருக்கு! ஊர் நாட்டாமை உங்க வீட்டுக்குள்ள வந்து சமையல் அறையில் வந்து தண்ணிகுடிச்சுட்டு கண்டுக்காம வெளில போனா எப்புடி இருக்கும்? அதுவும் நாட்டாமை வீட்டுலதான் நம்ம அண்ணனும் வேலை பாக்குறாரு!

அப்படித்தான் பண்ணிக்கிட்டிருக்காங்க சோனியா அம்மா! காரைக்குடிக்கு வருவாங்களாம்
பிரச்னையைப்பத்தி சென்னைல வந்து பேசமாட்டாங்களாம். (ஓ..இப்ப தொகுதி பங்கீடு இல்லையோ?) சிதம்பரம்ன்னு ஒரு அண்ணன் என்னா ஆனாருன்னே தெரியல! உங்க கம்பேனி  பெரிய லந்துல்ல பண்ணிக்கிட்டிருக்கு!

நமக்கு மேல இருக்கிறது
மத்திய அரசா?
இல்ல
'தத்தி'ய அரசான்னு வெளங்கல!

அதுக்கும்மேல.....
ஒத்தி வக்கிறேன் எனும் பிரச்னை

இப்ப வெண்டைக்காய் சமைக்கிறதை அவன் வீட்டு கல்யாணம் முடியறவரைக்கும் ஒத்தி வைக்க நீங்க முடிவெடுத்துட்டீங்க!  அய்யா! இதை இப்ப ஒத்தி வச்சா அப்புறம் ஒகேனக்கல்ல  அவனுக்கு ஒத்தி*க்கு வச்ச மாதிரிதான்.!

அவன் என்னடான்னா
ஒகே நக்கல் பண்ணிக்கிட்டிருக்கான்.

நமக்கு பிரச்னை வேணும்!  நியாயம் வேண்டாம்.!  இன்னிக்கு பொழப்பு ஓடுச்சான்னு திரியிற அரசியல் வியாதிகளுக்கு மத்தியில் தீர்வு காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்.

நாம என்ன செய்ய முடியும்ன்னு நினைக்கிறீங்களா?  ஒரு  ஐம்பது பைசா போஸ்ட் கார்டு வாங்குங்க!
(முடிஞ்சா ரெண்டா வாங்குங்க)

" தயவு செய்து - எப்போதும் போல கண்டுகொள்ளாமல் இருங்கள்-
தமிழனுக்காக பரிந்துகொண்டு வந்து சிரமப்படவேண்டாம்! ஆனால்
இந்த பாராளுமன்ற தேர்தலில் என் ஓட்டை எதிர்பார்க்காதீர்கள் " - ன்னு எழுதி
பிரதமருக்கு அனுப்புங்க!

'ஒகேனக்கல் பிரச்னையை இந்தியப்பிரச்னையாக பாவித்து உடனடி நடவடிக்கை
எடுக்குமாறு ஒரு இந்தியனாக கேட்கிறேன்' ன்னு எழுதி ஜனாதிபதிக்கு  அனுப்புங்க!

இல்லைன்னா... ரெண்டு கன்னடக்காரங்க சந்திச்சுக்கிட்டா  இப்படித்தான் பேசிக்குவாங்க! தமிழ்நாட்டுக்காரன் எதைப்புடுங்கிட்டு வுட்டாலும் பேசாம இருக்கான் எப்புடி அடிச்சாலும் தாங்கிக்கிறான் இவன்  ரொம்ப நல்ல்லவன்ன்ன்ன்....! அவ்வ் :)

ஒன்று மட்டும் உண்மை நண்பர்களே!
எல்லாப்புரட்சிகளும் இப்படி ஒரு புள்ளியில்தான் ஆரம்பித்தன.


* ஒத்தி - அடமானம் மாதிரி...
ஒரு வீட்டை ஒருலட்சம் கொடுத்து
ஒத்திக்கு வாங்கினா...வாடகை கிடையாது.
வெளில வரும்போது ஒரு லட்சம்
திரும்ப கிடைக்கும்.
மும்பைல எல்லாம்
ஒத்திக்கு வந்தவன்...
காலி பண்ண, சொத்து மதிப்புக்கு மேலயே
பணம் கேப்பான்...-(அடேயப்பா
எம்மாம்பெரிய விளக்கம்?)


(அய்யய்யோ..நான் கண்டது கனவு இல்லையா? நெஜமாவே பதிவா எழுதி போஸ்ட் பண்ணிட்டேனா...? எனவே..இதை இப்போதைக்கு - அடுத்த பதிவு போடும்வரை ஒத்தி வைக்கிறேன்.! :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...