Monday, March 31, 2008

மங்களூர் சிவாவுக்கு ஒரு முரட்டு பின்னூட்டம்

மங்களூர் சிவா போட்ட இந்தப்பதிவுதான்,
இந்தப்பதிவுக்குக்காரணம்..


முதலில் எனக்கு பார்த்திபனின் கவிதைதான் ஞாபகத்துக்கு வந்தது!

வாழ்ந்து என்ன
செய்யப்போகிறோம்
செத்துதான்
தொலைப்போமே!
செத்து என்ன
செய்யப்போகிறோம்
வாழ்ந்துதான்
தொலைப்போமே!

இதில் இரண்டு விஷயங்களை அலச வேண்டியிருக்கு!


முதல்ல..ஆண் பெண் உறவுமுறை.. (ஏன்னா இதுதான் அதிகபட்ச உணர்ச்சிவசப்படலுக்கான காரணி)

அடுத்து..தற்கொலை !

      இந்த ஆண், பெண் உறவுமுறையை நாம சரியா பாக்கலைங்கறதுதான் பெரிய கொடுமை! அது, அன்றாடம் சம்பாதிச்சு வாழ்க்கை நடத்துறவனா இருந்தாலும் சரி! அடுத்த ஜென்மத்துக்கும் சேத்து சம்பாதிச்சு வச்சு சொகுசு வாழ்க்கை நடத்துற ஆளா இருந்தாலும் சரி..(என்ன இருந்தாலும் மூதாதையர் ஒண்ணுதானே ! )

      அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் பிடிச்சுப்போய். திருமணம் செய்தோ, இல்லாமலோ சேர்ந்து வாழத்துவங்குகிறார்கள்.முதல்ல எல்லாம் சுமுகமாத்தான் போயிக்கிட்டிருக்கும். ஒருத்தர் குறை இன்னொருத்தர் கண்ணுக்குத்தெரியும் வரை ! இந்த இடத்தில் அன்னை தெரசாவின் வாக்கியம் ஞாபகம் வருது.! 'குணத்தைப்பார்க்கத்துவங்கிவிட்டால் நம்மால் அன்புகாட்ட முடியாது!' - ஆனால் சேர்ந்து இருக்கும் கொஞ்ச நாளிலேயே குணத்தை அலச ஆரம்பிப்பதுதான் முதல் பொறி!

      இதில் ஓவரா உணர்ச்சிவசப்படுறது ஆண்கள்தான்! சதி லீலாவதியில் ஒரு வசனம் வரும்..." இவன் என்னவேணும்னாலும் பண்ணலாம். பொண்டாட்டி மட்டும் பத்தினியா இருக்கணும். அதேதான் சின்னவீட்டுக்கும்...!"
ஏன்னா, அவள் யாரோடயும் பேசக்கூடாது. பழகக்கூடாதுன்னு வெளிப்படுத்த ஆரம்பிச்சுடுவான். இதுக்கு பொஸஸிவ்நெஸ்ன்னு ஒரு காரணமும் சொல்வான். ஆனால் பொஸஸிவ்நெஸ் நினைப்பெல்லாம் (இது என் பொருள்..எனக்கு மட்டுமே சொந்தம்ன்னு நினைக்கிறது.இதில் பெண்ணும் அடக்கம்..இது ஆதிகாலத்து பழக்கம்.. அதுக்கு ஒரு சாயம்..அதேபோல்தான் பெண்களும் நினைப்பாங்க) சும்மா, பம்மாத்துக்கு! அதைமீறி அவனிடம் இருக்கும் இன்னொரு விஷயம்தான் அடிப்படைக்காரணி...
அது , அவளது சமூக அந்தஸ்து.! -இன்னும் நம்ம மூதாதையர் ஜீன்லேருந்து நமக்கு போகாத மேட்டர்! அவ எப்படி நம்மளை விட நல்ல நிலமைல இருக்கா? அதுவும் புத்திசாலியா வேற இருக்கா? இவ நம்பளை நம்பித்தானே இருந்தாகணும்? ன்னு நினைக்கும் அவன், இவன் இல்லாமலும் அவளால் வாழமுடியுங்கிற உண்மையை ஏத்துக்க முடியாம தவிக்கிறான். அங்கதான் ஆரம்பிக்குது பிரச்னையின் அடுத்த கட்டம்!

அதுவே சந்தேகமா மாறும். சில சமயம் அது உண்மையாவும் இருக்கும்.

உளவியல் படிச்ச ஆளா இதை வேறமாதிரி பாக்கும்போது.....இப்படித்தான் தோணுது!

அவள்.....
அவனிடம் ஏதோ பிடித்துத்தான் அவனோடு இருக்க தொடங்குகிறாள்..!
அவனிடம் ஏதோ பிடிக்காமல்தான் வேறொருவரோடு இருக்க தொடங்குகிறாள்...!

         நம்மால் ஒரு குழந்தையைக்கூட, அதோட சம்மதமில்லாம தூக்கி வச்சுக்கமுடியாது. பிடிக்கலைன்னா, கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி இறங்க முயற்சி பண்ணும். அதேபோல் நாம அந்தக்குழந்தையை சமாதானப்படுத்த முயற்சி செய்வோம். அல்லது, எதுக்குடா வம்புன்னு இறக்கி விட்டுடுவோம்.
       ஆனா அதே மாதிரி வளந்த குழந்தையான அவள்கிட்ட மட்டும், அவளுக்கே பிடிக்காம நம்ம கூட இருக்கணும்னு நினைக்கிறது, பெரிய அநியாயம்! ஒண்ணு, மனசுவிட்டு பேசி சேந்து இருக்க முயற்சி பண்ணனும். இல்லைன்னா, சந்தோஷமா பிரிஞ்சுடணும். ரெண்டையும் விட்டுட்டு, அடுத்த முடிவெடுக்கிறதுதான் கொடுமை!

       பவுனு பவுனுதான் படத்தில், ரோகிணியை,பாக்யராஜ் கல்யாணம் செஞ்சுக்க நேரம் எல்லாம் குறிச்சு வச்சு,வாசல்லயே பந்தல் போட்டிருப்பார். அப்ப அவர்கூட இருக்கும் பொடிப்பசங்கள்ல ஒருத்தன் கேப்பான். பவுனு 9 மணிக்கு வரலைன்னா...ஊர்க்காரங்க அடிப்பாங்களே என்ன பண்றதுன்னு..அப்ப பாக்யராஜ் ஒரு வசனம் சொல்லுவார்....எப்ப பவுனு சொன்ன டயத்துக்கு வரலையோ அப்பவே நான் செத்துட்டமாதிரிதான். அப்புறம் செத்த நாயை எத்தன நாய் அடிச்சா என்ன?

       இதுதான் கரெக்ட்... எப்ப அவளோ, அவனோ நம்ம கூட இருக்கறதில் நம்பிக்கையில்லா தீர்மானம் மனசுக்குள்ள கொண்டுவந்துட்டாங்களோ, அப்புறம் பழத்தை அடிச்சு கனியவைக்கிறது கடுமையான வீண்வேலை..! இதில் கற்புக்கெல்லாம் இடமில்லை. ஏன்னா முன்னாடியே தெளிவா சொல்லிட்டான். "கற்பு ஒன்றிருக்குதோ?" ன்னு!
இந்த விஷயத்தில், துரோகம்ங்கிற வார்த்தையை தப்பாத்தான் பயன்படுத்திக்கிட்டிருக்கு ஆண்டாண்டுகாலமா காமத்தை துரோக அளவுகோலா வச்சிருக்கிற நம்ம மனித சமூகம்.!

         அவளுக்கோ அவனுக்கோ அப்படி ஒரு நிலைமை வந்தா....'ரொம்ப சந்தோஷம்.. நேத்திக்கு வரைக்கும் என்கூட அன்பா இருந்ததுக்கு நன்றி' ன்னு சொல்லிட்டு, மறுபடியும் பொட்டிதட்ட புறப்பட்டாத்தான், நமக்கு இந்த ஆண், பெண் உறவுமுறையும்,சேந்து வாழும் வாழ்க்கை (திருமணமும் சேத்துதான்) பத்தின தெளிவு ஏற்படும்.

         இல்லைன்னா, கொலை, தற்கொலை எல்லாம் செய்தித்தாளை,தினமும் நூறு பக்கம் அச்சடிக்கவேண்டிய கட்டாயத்தை உண்டுபண்ணி நிரப்பிடும்.

ஏன் இந்த தற்கொலை முயற்சிகள்?

படிச்சு டயர்டா இருப்பீங்க...அடுத்த பதிவுல பாக்கலாமே?

Thursday, March 27, 2008

நான் என்ன தப்பு செஞ்சேன்..?

சுக்ரீவ ராசா ரொம்ப கவலையா இருக்காரு! அவரு சம்சாரம் அவுக அண்ணன் வூட்டுலயே இருந்துக்கிச்சாம்.

அதுவா இருந்துக்கிச்சா? அவரு புடிச்சு வச்சுக்கிட்டாரா?

அதுவும் தெரியலை..மொத்தத்துல ராசா ரொம்ப கவலையோடவே திரியிறாரு!

சரி..சரி..நீ இருக்குற வாழத்தாருல கொஞ்சத்தை எடுத்து தின்னுப்புட்டு போ..தோலை வாசல்லயே போட்டுறாத.. புள்ள வழுக்கி வுழுந்துட்டான்.

நான் ஏதாவது ரோசனைல இருந்திருப்பேன்.நீயாவது எடுத்து வீசியிருக்கலாமுல்ல.! சரி நம்ம சோட்டான் எங்க போனான். ?

அதான் பத்து வயசுக்கு மேல உள்ள புள்ளைங்களுக்கெல்லாம் சண்ட கத்துத் தராகளாமுல்ல ! அதான் போயிருக்கான். ஒங்க ராசா பொண்டாட்டிய மீக்க, ஏம்புள்ளய சண்டைக்கு அனுப்ப வேண்டியிருக்கு!

அடியே சத்தம்போட்டு பேசாதடீ! யாரு காதுலயாவது வுழுந்துடப்போவுது!

சரி..சரி பாத்து போ..வாலை மிதிச்சுப்புடாத!

ஒதுங்கி ஒக்காராம..பாதைல ஒக்காந்துக்கிட்டு அளும்பு பண்றியா?

கோவுச்சுக்காதய்யா..என் ம்ம்முத ராசா!

இப்புடி பாசமான பொஞ்சாதிக்காக என்னவேணும்னாலும் பண்ணலாம்டீ!

அது சரி..எனக்காக நீ என்னவேணும்னாலும் பண்ணலாம். ஒரு கூட்டத்தையே சங்கடப்படுத்தினா நல்லா இல்லைல்ல!

ஏய்..இப்ப என்ன சொல்ல வர்ற?

இல்ல...நம்ம சுக்ரீவ ராசா..பொஞ்சாதிய காப்பாத்த அந்த வாலி ராசாவோட சண்ட போட ஒங்களையெல்லாம் தயார்ப்படுத்துறாரேன்னுதான் பயமா இருக்கு!

அதுக்கு என்ன பண்றது..நாம எந்தப்பக்கம் இருக்கோமோ, அந்தப்பக்கம் நியாயம் இருக்கறதா நெனச்சுக்க வேண்டியதுதான்.!

சரி. பாத்து பத்தரமா போய்ட்டு வா! என்னிக்கு சண்டைன்னு சொல்லு! நான் சின்னப்புள்ளய கூட்டிக்கிட்டு காட்டுக்குள்ள வேற எடத்துல போய் உக்காந்துக்குறேன்.

கவலப்படாதடீ..எல்லாம் நல்லபடியா நடக்கும்.

வூட்டவுட்டு கெளம்பி பக்கத்து மரத்துல இருந்த சொம்பானோட காட்டுக்குள்ள மத்த ஆளுகளையும் பாத்து கூப்புட்டுக்கிட்டே போனோம்.நாங்க எல்லாரும் கவலையோடவே ராசா ஒளிஞ்சிருக்கிற எடத்துக்கு போனோம். எதுத்தாப்புல அனுமாரு சந்தோசமா , வாலே இல்லாத லச்சணமா இருந்த ரெண்டு ஆளுகளோட பேசிக்கிட்டு வந்தாரு.! ஒருத்தரு கையில பெரிய வில்ல வச்சிருந்தாரு. இன்னொருத்தரு அவரு தம்பி போல.. ரெண்டுபேரும் மூஞ்சிய உம் முன்னு வச்சிக்கிட்டு அனுமாருக்கிட்ட என்னமோ பதில் சொல்லிக்கிட்டு வந்தாக.. பாவம் அவுகளுக்கு என்ன கவலயோ?

ராத்திரி வூட்டுக்கு வந்தேன்.


மத்தாயி ! ஒரு விசயம் தெரியுமா?

என்னய்யா!

இன்னிக்கு ரெண்டு மனுசங்க நம்ம காட்டுக்கு வந்தாக!

சரி..அதுக்கென்ன?

அவுங்கள்ல ஒருத்தர் பேரு ராமனாம். பெரிய வில் வித்தைக்காரராம்.

ம்

இன்னொருத்தர் லச்சுமணனாம். அவரும் பெரிய வீரராம்.

சரி.

அவுங்களால நமக்கு ஒரு விடிவு காலம் பொறக்கப்போவுது!

என்ன விடிவுகாலம்.. நமக்கெல்லாம் வூடு கட்டி குடுக்கப்போறாராமா?

இல்லடீ! அத வுட நல்ல விசயம்!
அந்த ராமரு..வாலி மகாராசாவை கொல்லப்போறாராம். !

தனியாவா?

ஆமாங்குறேன்.

மவராசன்.நல்லா இருக்கணும்.! எங்க நீங்கள்லாம் புத்திகெட்டு அந்த வாலி ராசாவோட சண்டைக்கு போய் தோத்து...இல்ல உனக்கு எதாவது ஆகி..நான், புள்ளைகள்லாம் திண்டாடிப்போயிருவோமோன்னு நெனச்சேன்.

களுத..நீ ஏன் கவலப்படுற? அதான் நல்லது நடக்கப்போவுதுல்ல!

ஆமா..எப்புடி கொல்லப்போறாராம்.?

அதெல்லாம் திட்டம் தீட்டிட்டாங்க.. அந்த வெவரமெல்லாம் மேல் அதிகாரிகளுக்கே தெரியல.. நான் ஒரு சாதாரண சிப்பாய்!  எனக்கு எப்புடி தெரியும்?

சிப்பாயா? யோவ்..நீ பாட்டுக்கும் காட்டு வேலை பாத்துக்கிட்டிருந்த! மொத வாட்டி நடந்த சண்டைல எல்லா சிப்பாய் கூட்டத்தையும் சாகக்குடுத்துட்டு ராசா ஆளெடுத்ததுல இப்பத்தானே சிப்பாயா ஆகியிருக்க? பெருசா பீத்திக்கிற?

அது கெடக்கு! நீ ஏன் ரொம்ப கவலைப்படுற!

சொல்லுவய்யா சொல்லுவ..! உன்னய வெளில அனுப்பிட்டு , சின்னப்புள்ளய வயித்துல கட்டிக்கிட்டு , அடுத்து என்ன நடக்குமோன்னு திக்கு திக்குன்னு நானுல்ல அலையுறேன்.

சரிடா கண்ணு! நான் என்ன பண்றது சொல்லு! இனிமே சண்டை வராதுன்னு நினைக்கிறேன். சந்தோஷமா தூங்கு.!

அடுத்த நாளே அந்த நல்ல சேதி வந்துருச்சு! ராமரு எங்கயோ மறைஞ்சு நின்னு சுக்ரீவ ராசா குடுத்த சமிக்ஞை மூலமா வாலி ராசாவை கொன்னுட்டாராம். எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோசம். எந்த ஒரு போரும் இல்லாம, ஒரேடியா வேலை முடிஞ்சு போச்சேன்னு! அன்னிக்கு எல்லாருக்கும் நெறைய வாழத்தாரு..தேங்கா, பழங்க ன்னு சுக்ரீவ ராசா வாரி எறைச்சாரு.


வூட்டுக்கு சந்தோசமா வந்தேன்.


அடியே..! இப்ப பாத்தியா? உன் நல்ல மனசுக்கு ஒரு கொறையும் இல்லாம, எல்லாம் சுமுகமா முடிஞ்சிருச்சு!

எல்லாம் அந்த நல்ல மனுசன் ராமன் பண்ணுன வேலை! உங்க எல்லாராலயும் சாதிக்க முடியாதத ஒத்த ஆளா சாதிச்சிருக்காரு.! நம்ம சுக்ரீவ ராசா பொண்டாட்டிய காப்பாத்தறதுக்குன்னே வந்திருக்காரு போல!

ஆமாங்குறேன்.

அடுத்த நாள் அந்த இடி மாதிரி சேதிய அந்த சொம்பான் பய வந்து சொன்னான். அந்த ராமரோட பொண்டாட்டிய ராவணனன்னு ஒரு அசுர ராசா தூக்கிட்டு போய்ட்டானாம். அந்த அம்மாவ மீக்க எல்லாரும் படையெடுத்து போவணுமாம். அதுவும் இந்த காட்டுல இல்லயாம். வேற ஏதோ லங்காபுரியாம். ரொம்ப தூரம் தள்ளி இருக்காம். எனக்கு பக்குன்னு இருந்துச்சு.! என்னடா இது ! இப்பதான் சண்டை சச்சரவு இல்லாம பண்ணினாரேன்னு சந்தோசமா புள்ளக்குட்டிகளோட இருக்கலாமுன்னு நெனச்சோம். இப்புடி ஒரு சோதனையா?

அவக்கிட்ட போய் சொல்றதுக்குள்ள...அளுது தீத்துப்புட்டா!

கவலப்படாதடீ ! சின்ன சண்டயாத்தான் இருக்கும். சீக்கிரம் திரும்பி வந்துரலாம். காட்டை சுக்ரீவ ராசாவுக்கு மீட்டுக்குடுக்கறதா  ராமரு ஒத்துக்கிட்டதே நம்ம ஆளுக அவருக்காக லங்காபுரிக்கு சண்டைக்கு வருவோம்னுட்டுதானாம். அது முன்னாடியே அனுமாரு பேசி முடிச்சிட்டாராம்.

அது எப்புடி பேசுவாக! எனக்கு ராமரோட நாயமே புரியல! அவரு மனுசருதானே.! ராவண ராசாவை பல தடவ தொம்சம் பண்ணின வாலி ராசாவையே ஒத்த ஆளா கொன்னவரால..அவரு பொண்டாட்டிய மீக்க முடியலயா? என்ன கெரகம் இது?
அவுங்கள்லாம் அரக்கருங்களாமுல்ல! அவுகள்ட்ட இந்த மூஞ்சியையும் வாலையும் வச்சுக்கிட்டு எப்புடி நீங்கள்லாம் சண்ட போடப்போறீக? யோவ்! ஒனக்கு எதாவது ஆச்சு, நானும் புள்ளைங்களும் அடுத்த நிமிசம் செத்துருவோம் ஆமா!

ஏண்டி இப்புடி பொலம்புற? நாம எந்த பாவமும் செய்யல..அப்பறம் ஏன் கவலப்படுற?

அதான்ய்யா கேக்குறேன். நாம எந்த பாவமும் செய்யல! அப்புறம் ஏன்யா நம்மள சுத்தி சுத்தி அடுத்தவன் பொண்டாட்டிய காப்பாத்த இழுத்து வுடுறாங்க!

கவலப்படாதடீ செல்லம்.! எனக்கும் ஓன் நியாயம் புரியுது! இருந்தாலும் நாம ராச உத்தரவுக்கு கட்டுப்பட்டுத்தானே ஆவணும்.

எனக்கென்னமோ பயமா இருக்குய்யா!

அன்னிக்கு அவள சமாதானப்படுத்தறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு! ஒரு வழியா போருக்கு கெளம்பியாச்சு ! எல்லாரையும் வரிசையா நடக்க வுட்டாங்க! கடல்ல கல்லெல்லாம் அடுக்கி பாலமா மாத்தி அந்த லங்காபுரி தீவ போய் சேர்றதுக்குள்ள அசந்து போச்சு! போனவுடனேயே சண்டையப்போடுங்கன்னுட்டாங்க!

எதிரி ஒவ்வொருத்தனும் மலை மாதிரி இருக்கான். அவனுங்களை கொல்லணும்கிற நெனப்ப விட எப்பிடியாவது இவனுங்ககிட்ட தப்பிக்கணுமேன்னுதான் தோணுச்சு! நானும் ஒரு வழியா ரெண்டு நாள ஓட்டிட்டேன். அன்னிக்கு சண்டை கொஞ்சம் உக்கிரமா இருந்துச்சு. ஒரு அரக்கனை அடிக்க ஓடினேன். அவன் கையில வச்சிருந்த ஆயுதத்த இதுவரைக்கும் நான் பாத்ததே இல்ல! என்ன நோக்கி ஓடி வந்தான். நான் தப்பிக்க நெனக்கிறதுக்குள்ள வயித்துல நல்லா குத்திக்கீறிட்டான். அப்புறமா என் வாலைப்புடிச்சு தூக்கி என்னைய தரையில அடிச்சுப்புட்டான். தலை ரொம்ப வலிச்சுது. தொட்டுப்பாத்தேன் ஈரமா  இருந்தது. ரத்தம்..வயித்துலேருந்து கொடல் வெளில வந்துருச்சு ! எல்லாம் மங்கலா தெரிய ஆரம்பிச்சது! தூரத்துல ராமரு
ராவணனைப்பாத்து என்னமோ சொல்லிக்கிட்டிருந்தாரு..! உன்னிச்சு கேட்டேன்..'இன்று போய் நாளை வா' ! கண்ணெல்லாம் இருட்டிருச்சு...அனேகமா செத்துருவேன்னுதான் நெனக்கிறேன்.ஐய்யோ..! என் பொண்டாட்டி ,புள்ளைங்க கதி?

என்ன ராமரே.! நீங்க பாட்டுக்கும் கையில கிடைச்ச ராவணராசாவை வுட்டுப்புட்டு...நாளைக்கு வரச்சொல்றீஙக.! நாளைக்கு இன்னும் என் கூட்டாளிக எத்தனை பேரு சாவப்போறாங்களோ..உங்களுக்கு உங்க நியாயம் நிக்கணும்..ஆனா,

நான் என்ன தப்பு செஞ்சேன்?  

Sunday, March 23, 2008

லட்சியம் நிச்சயம் வெல்லும் ! - பாகம் 2

இதுதான் லட்சியம்னு முடிவெடுத்துட்டா..அதுக்கப்புறம் அதை நோக்கிய பயணம்தான் நம் கண்ணுக்கு தெரியணும்.
சின்ன வயசுலேயே கார்கள்மேலயே கவனத்தை வச்சு..அதுதான் வாழ்நாள் லட்சியம்னு இருந்த ஹென்றி போர்டுதான் Ford ங்கிற கார் கம்பெனியையே உருவாக்கினாரு.!
சினிமாதான் உலகம்னு 9 வயசுலேருந்து கனவுகண்டுக்கிட்டிருந்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தான் உலகமே வியக்குற அளவுக்கு ஜுராசிக் பார்க்ன்னு படம் எடுத்தாரு!
ஒருநாள் இந்த உலகத்தையே தன் வார்த்தைகளால் கட்டிப்போடலாம்னு சிறுவயதிலேயே நினைச்சதால்தான் கண்ணதாசன் சிறந்த கவிஞரா ஆனாரு!
அமைதிப்படை படத்துல...ஒரு நாயோட சண்டை போட்டு தேங்காய் பொறுக்குறவரா இருக்கும் சத்யராஜிடம் , மணிவண்ணன் கேப்பாரு..உன் லட்சியம் என்னன்னு, அதுக்கு அவரு..பக்கத்தில இருக்குற அரண்மனைய வாங்கணும் னுவாரு.! அதுக்கு மணிவண்ணன் சிரிச்சுட்டு...இதெல்லாம் நடக்குற காரியமான்னுவாரு..அப்ப சத்யராஜ் சொல்வார். முடியும்னு நெனச்சுத்தானுங்கண்ணா..நிலாவுல கால் வச்சாங்க..! நம்ம முடியாதுன்னு நினைச்சதாலதான் இன்னும் நிலாச்சோறே ஊட்டிக்கிட்டிருக்கோம். அதே மாதிரி அந்த அரண்மனையை அடைஞ்சிடுவார் சத்யராஜ்.
நம்மள்ல பாதி பேர் தோல்வி பற்றிய பயத்துலயே லட்சியங்களை அமைச்சுக்கறதில்லை! ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம். ஓட்டப்பந்தயத்தை வேடிக்கை பார்ப்பதை விட ஓடித்தோற்றுப்போவது எவ்வளவோ மேல்!
ஆனா சிலபேர் அடுத்தவுங்க லட்சியத்தில் குளிர்காயப் பாப்பாங்க!
மொக்கச்சாமிக்கு ஒரு நண்பர் இருந்தார்..அவர் திருவனந்தபுரம் போறதுக்காக கிளம்பிக்கிட்டிருந்தார். அவர் வீட்டுக்கு போன மொக்கச்சாமி..திருவனந்தபுரமா போறீங்க?ன்னார்.
ஆமா ன்னார் நண்பர். அப்படின்னா அப்படியே குற்றாலத்தில் இறங்கிட்டு போகலாமே ன்னார்.
இல்லயே அங்க போற ப்ளான் இல்லயேன்னார் நண்பர்.
இல்லல்ல குற்றாலத்துல சீசன் நல்லா இருக்காம். அதுவுமில்லாம அருவில குளிக்கிறது உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமான்னார் மொக்கச்சாமி.!
இல்ல..நான் வேற ரூட்ல போலாம்னு பாக்குறேன்னு இழுத்தார் நண்பர்..
நம்ம ஆளு விடலை.! இதுக்காக ஒருதடவை போகமுடியாது. அப்படியே போய்ட்டு வாங்களேன். ரொம்ப நல்லா இருக்கும். இதுமாதிரி வாய்ப்பெல்லாம் இழக்கக்கூடாது ன்னு ஏத்திவிட்டார்.
நண்பரும் கன்வின்ஸ் ஆகி ஒரு வழியா..சரி..நீங்க சொல்றது கூட சரிதான். ! அப்படியே குற்றாலத்துக்கும் போய்ட்டே வந்துடறேன்னார்.
அப்ப..கண்டிப்பா குற்றாலம் போறீங்கள்ல..! ன்னார் மொக்கச்சாமி.!
ஆமான்னார். நண்பர்..
அப்படின்னா..நீங்களா குற்றாலம் போறேன்னதால சொல்றேன்...! குற்றாலத்தில் என் தங்கச்சி வீடு இருக்கு..! போறப்ப அங்க இந்த ஊறுகா பாட்டிலை குடுத்துடுங்க ன்னார்.. இப்பதான் நண்பருக்கு புரிஞ்சுது...மொக்கச்சாமியோட வில்லத்தனம்.!


முயற்சிகள் தோற்கலாம். முயற்சிக்கத்தோற்கலாமான்னு சொல்லுவாங்க! அது போலத்தான். எடுத்த லட்சியத்துக்காக எதைவேணும்னாலும் இழக்கத்தயாரா இருக்கணும் அப்பதான்..அந்த இலக்கு பத்தின பார்வை நமக்கு கூர்மையாகும். தொடர் வெற்றிகள்தான் நிரந்தர சாதனைக்கு வழி வகுக்கும்.

இந்த ஜென்மத்துல சாதிக்கவேண்டாம் அடுத்த ஜென்மத்துல சாதிச்சுக்கலாம்னு எதையாவது விட்டுட்டுப்போகமுடியுமா சொல்லுங்க!
அதான் ரொம்ப வேதனைப்பட்டு பாரதியார் சொல்லுவாரு!
தேடிச்சோறு நிதந்தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித்துன்பமிக உழன்று
பிறர் வாடப்பல செயல்கள் செய்து
நரைகூடிக்கிழப்பருவமெய்தி
கொடுங்கூற்றுக்கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போல
வீழ்வேனென்று நினைத்தாயோ!
தினம் சாப்பிட்டு சாப்பிட்டு , ஊர்க்கதையெல்லாம் பேசிப்புட்டு, பிரச்னைகள்ல சிக்கிக்கிட்டு , அடுத்தவுங்களை கஷ்டப்படுத்தி, அப்படியே வயசாகி செத்துப்போகும் மத்தவுங்க மாதிரி நான் விழுந்துட மாட்டேன்ன்னாரு..
அதே மாதிரி சாதிச்சுட்டும் போனாரு..!
எந்த லட்சியமா இருந்தாலும். அதுல உங்களுக்கு அதீத நம்பிக்கை இருந்தா போதும்ங்க ! ஏன்னா..இந்த உலகம்..நீங்கள் உயரும்வரை..வேடிக்கைதான் பார்க்கும்.
வெற்றியடைஞ்சதுக்க்ப்புறம்தான் தூக்கிவச்சு கொண்டாடும்.
போராடுற வரை 'அய்யோ வீண்முயற்சி' ன்னு சொல்றவுங்க...ஜெயிச்சப்புறம் அடடா..விடாமுயற்சி' ன்னு சொல்லுவாங்க!
இன்னிக்கு வரைக்கும் எந்த லட்சியமும் இல்லாம இருந்தாக்கூட பரவாயில்ல...இப்ப முடிவெடுங்க..! உங்க லட்சியம் நிச்சயம் வெல்லும்! என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Friday, March 21, 2008

லட்சியம் நிச்சயம் வெல்லும் !எல்லாருக்கும் லட்சியம்கிற வார்த்தை நல்லா தெரியும்..ஆனா திடீர்ன்னு கேட்டா எத்தனை பேரால என் லட்சியம் இதுதான்னு அறுதியிட்டு சொல்லமுடியும்.?
லட்சியத்துல இப்போதைய லட்சியம், குறுகிய கால லட்சியம், நீண்ட நாள் லட்சியம், வாழ்நாள் லட்சியம் ன்னு நாலுவகை இருக்கு..! இந்த பதிவை பாக்கணும்னு உக்காந்திருக்கீங்க இல்லயா? இதுதான் இப்போதைய லட்சியம் ! இன்னும் 4 நாளைக்குள்ள ஒரு அதிகாரியை சந்திக்கணும், ஒரு அப்ளிகேஷன் போடணும், டெலிபோன் பில் கட்டணும்னு இருந்தால் அது குறுகிய கால லட்சியம்.! நீண்ட நாள் லட்சியங்கிறது...ஒரு பள்ளிப்படிப்பையோ கல்லூரிப்படிப்பையோ சிறப்பா முடிக்கணும்னு நினைக்கிறது. அப்ப வாழ்நாள் லட்சியம்? ...அதுதான் ஒவ்வொருத்தருக்கும் வேறுபடும்....நடிகராகனும், தொழிலதிபராகனும், கலெக்டராகனும்னு...ஒவ்வொண்ணும் ஒரு வகை...! ஆனா லட்சியமே இல்லாம இருக்குறது ரொம்ப கொடுமை!

ஒரு சாதாரண ஊர்ல..மிஸ்டர் சாதாரணம்னு ஒருத்தர் இருந்தாராம். அவர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தாராம். அதுனால அவரை ஒரு சாதாரண ஸ்கூலில் சேத்தாங்களாம். அவரும் சாதாரணமா படிச்சு சாதாரண மார்க் வாங்கினாராம். அதுனால ஒரு சாதாரண காலேஜ்ல சாதாரண டிகிரிதான் கெடைச்சுதாம். அதிலயும் சாதாரண மார்க் வாங்கிதான் பாஸ் பண்ணினாராம். அதுனால ஒரு சாதாரண கம்பெனில சாதாரணவேலைதான் கிடைச்சுதாம். அதுனால ஒரு சாதாரண பொண்ணா பாத்து சாதாரணமா கல்யாணம் பண்ணினாராம். அவங்களுக்கு சாதாரணமா ஒரு குழந்தை பொறந்ததாம். அவருக்கும் சாதாரணமா வயசாகிடுச்சாம். அப்பன்னு பாத்து மிஸ்டர். சாதாரணத்துக்கு ஒரு அசாதாரணமான வியாதி வந்ததாம். அதுனால அவருக்கு அசாதாரணமா பணத்தேவை ஏற்பட்டதாம். எல்லார்க்கிட்டயும் சாதாரணமா கேட்டுப்பாத்தாராம். ஆனா யாருமே குடுக்கலையாம்.

அப்பதான் அவருக்கு தோணினுச்சாம். ஆஹா..ஒரு
சாதாரண வாழ்க்கையை இல்ல வாழ்ந்துட்டோம். அப்படின்னு!


இதுல வர்ற மிஸ்டர்.சாதாரணமா நம்மள்ல பலபேர் இருக்கோம். வாழ்க்கைக்கு எந்த ஒரு லட்சியமும் இல்லாம, இல்லைன்னா ஏதாவது ஒரு சொத்தை லட்சியத்தோட வாழுறோம். நம்ம முன்னாள் குடியரசுத்தலைவர். டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சொல்லியிருக்கார். சிறிய லட்சியம் ஒரு குற்றம் ன்னு..!
ஆனா நமக்கு எப்படி லட்சியம் அமைக்கிறதுன்னே தெரியலை.!
பொதுவா லட்சியத்துக்கு ஒரு வரையறை வச்சிருக்காங்க...ஆங்கிலத்தில் அதை SMART அப்படின்னு சொல்லுவாங்க..! எஸ்-ன்னா specific , M for Measurable , A for Acheivable, R for Reliable, T for Time bound ங்கிறதுதான் அது. அதாவது. இதுதான் என் லட்சியம்னு சொல்றது - உதாரணத்துக்கு ஒரு சிறந்த டாக்டராவேன் . ஒரு சிறந்த தொழிலதிபரா ஆவேன்.- எந்தத்தொழில்ல அப்படின்னும் முடிவெடுத்துடறது!-ஆனா இப்ப டாக்ட்ரானாலே தொழிலதிபரா ஆன மாதிரிதான்னு வச்சுக்கங்களேன்.!
அதுக்கு ஒரு அளவீடு வச்சுக்கிட்டு அதன் படி செயல்படறது –
அது அடையக்கூடியதா இருக்கிறது- இப்ப ஒரு மாணவர்தான் டாக்டராவேன்னு சொல்லமுடியும். ஒரு 40 வயசுக்காரர் சொல்லமுடியாது.
அதே போல அது நேரம் சார்ந்து இருக்கணும்- இத்தனை வருஷத்துக்குள்ள இதை அடைஞ்சுடணும்னு உறுதியா செயல்படுறது.! இதுதான் நம்மை நம்ம லட்சியத்தை நோக்கி கொண்டு போகும்.
மொக்கச்சாமிக்கு ஒரு உயிரியல் விஞ்ஞானி ஆகணும்னு திடீர்ன்னு ஆசை வந்துடுச்சு! சரி..எப்படியாவது ஒரு உயிரினத்தைப்பத்தி வித்தியாசமா ஒரு ஆராய்ச்சி பண்றதுன்னு முடிவுக்கு வந்துட்டாரு. அப்பன்னு பாத்து ஒரு தவளை தவ்வி போயிட்டிருந்தது. பாவம் அதுக்கு நேரம் சரியில்லை! அதைப்பிடிச்சாரு.. இவரு ஜம்ப் ன்னு சொல்லும்போது குதிக்கிறமாதிரி பழக்கினாரு.! உண்மை என்னன்னா அது குதிக்கும்போது இவர் ஜம்ப் ன்னு கத்திடுவாரு.! இப்ப என்ன பண்ணாரு. அந்த தவளையை ஒரு மேசை மேல வச்சு அதைப்பாத்து,
ஜம்ப் ன்னாரு ...குதிச்சுசு
முதல்ல ஒரு முன்னங்காலை வெட்டினாரு.. இப்ப..ஜம்ப் அப்படின்னாரு...சிரமப்பட்டு குதிச்சிடுச்சு !
அடுத்து இன்னோரு முன்னங்காலையும் வெட்டினாரு...ஜம்ப்ன்னாரு ...நிறையவே சிரமப்பட்டு குதிச்சுச்சு!
அப்பறம் ஒரு பின்னங்காலை வெட்டினாரு...இப்பவும் ஜம்ப்ன்னாரு...ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு குதிச்சது!
கடைசியா மீதமிருந்த ஒரு காலையும் வெட்டிட்டு இப்ப...ஜம்ப் அப்படின்னாரு..அது ஒண்ணும் செய்யாம இருந்தது..! அதான் நாலு காலையும் வெட்டியாச்சே ..எங்க குதிக்கிறது?

மொக்கச்சாமி உடனே ஆஹா..விஞ்ஞானி ஆகிட்டேன்னு கத்திக்கிட்டே ஓடிப்போய் ஒரு ரிப்போர்ட் எழுதினாரு..!

தவளைக்கு நான்கு கால்களையும் வெட்டிவிட்டால், காது கேட்காது!

இப்படி ஆகிடக்கூடாது..நம்ம லட்சியம்! எல்லா வெற்றியாளர்களையும் கேட்டுப்பாருங்க..அவுங்க ரொம்ப சிரமப்பட்டுத்தான் அந்த இடத்துக்கு வந்திருப்பாங்க! ஆனா அதை அடைஞ்சே தீரணும்னு வெறியோட இருந்திருப்பாங்க! நமக்கு முட்டி மோதி சினிமா டிக்கெட் வாங்குறதில் இருக்கும் அக்கறை முட்டாம மோதாம இந்த உலகத்தில் முன்னேறுவதில் இல்லைங்கிறதுதான் வருத்தமான விஷயம்.                                                                                            
  (தொடரும்...)

எல்லாரும் பதில் சொன்னபிறகு...ஒப்புக்கு..!


மூளைக்கு வேலைன்னு நானே சுட்டுப்போட்டா..
நமக்கும் மேல உடனே சுடச்சுட பதிலை அடிச்சுத்தட்டிவுட்டுட்டாங்க நம்ம மக்கள்!

அதிலும் ஒரு கூத்து என்ன ஆச்சுன்னா..
நான் பாட்டுக்கும் எல்லா பதிலையும் உடனுக்குடன் பிரசுரிச்சு சுவாரஸ்யத்துக்கே வழியில்லாம
செஞ்சுட்டேன்.
(முன்ன பின்ன போட்டி நடத்தியிருக்கணும்...!)

படக்குன்னு பதில் சொன்ன பதிவர் மாதங்கிக்கு வாழ்த்துக்கள்!

ஒப்புக்கு ...பதில் தாள்!

Tuesday, March 18, 2008

மூளை வேலைக்கு வேளை !இந்த கேள்வித்தாளுக்கு
பதில் எழுதி பின்னுட்டத்தில் போடுங்களேன்.
உங்களுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கும்.
இருந்தாலும்...............

எவ்வளவோ செய்றீங்க ! இதைச்செய்ய மாட்டீங்களா ?


பதில் அடுத்த பதிவில்...!

Monday, March 17, 2008

புதுசு புதுசா மொபைல் போன்..பாகம் 2


பில்டிங் கட்டி...ஒக்காந்து...பேரு வச்சு யோசிச்சிருக்காங்க....

புதுசு புதுசா மொபைல் போன்..


பல்வேறு மொபைல் போன் கம்பெனிகள்
புதுசு புதுசா மாடல்களை அறிமுகப்படுத்தப்போறாங்க!

அவைகளில் சிலதான் மேல பாத்தது..! 

Saturday, March 15, 2008

விடைபெறுகிறேன்..

அற்புதமான சூழலில்
எழுதத்தூண்டி
சினேகத்துடன்
வாசித்து
பின்னூட்டங்களிட்டு
மகிழ்வூட்டிய
உங்களிடமிருந்து......

இல்லை...!
(அதுக்குள்ள விட்டுருவோமா?)

இப்ப ஒரு அரசு பண்பலையில் வானொலி ஓட்டி (RJ க்கு தமிழில் என்னப்பா?) யாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததால், கொஞ்சம் நல்லபிள்ளையா நடிக்கவேண்டிய கட்டாயத்தில் பதிவெழுத முடியலை...

இப்போதெல்லாம் நேயர்களிடம்.. நேரடி தொலைபேசி நிகழ்ச்சியில் பேசி...கேள்விகள் கேட்டு

விடைபெறுகிறேன்..

அதைத்தான் சொல்லவந்தேன்.. அதுக்குள்ள...!

Sunday, March 9, 2008

ஆனந்த விகடனில்.....

ஆனந்த விகடனில் டிக்..டிக்..டிக் என்ற தலைப்பில் வந்த ஜாலியான, ஆனால் ஏறத்தாழ உண்மையான தத்துவங்கள் மிகவும் நன்றாக உள்ளன. இப்போதெல்லாம், வாங்கியவுடன் அதைப்படிக்கும் அளவுக்கு அடக்கமுடியாத ஆவலைத்தூண்டும் தத்துவங்களை கொஞ்சம் கொத்தி எடுத்து..உங்கள் முன்னால்..! 

ஒரே காரணம்!
விவாகரத்துக்கு முக்கியக் காரணம்... திருமணம்தான்!

பெண்களின் தப்பு!
பல பெண்கள் ஒன்றுமில்லாததுக்கெல்லாம் பரவசப்படுகிறார்கள். அது கூடப் பரவாயில்லை; அவர்கள் செய்யும் தப்பு, அதையே கல்யாணமும் செய்துகொள்வதுதான்!

மனிதன்
திருமணம் ஆகும் வரை எந்த ஒரு மனிதனும் முழுமை பெறுவதில்லை; திருமணம் ஆன பின்போ... முடிந்தேபோகிறான்!

பின்புத்தி!
இரண்டு கால்களாலும் நீரின் ஆழத்தைச் சோதிக்காதே!

சொல்லாதே!
உண்மை என்பது மிகுந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஒரு விஷயம். அதனால், தகுதியற்றவர்களிடம் அதைக் கொடுக்கலாகாது!

அந்த முயற்சியாவது...
யாராவது உங்களிடம் வந்து உதவி கேட்டால், அதைச் செய்து தர நீங்கள் முயற்சி செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை; ஆனால், முயற்சி செய்யவாவது
முயற்சி செய்யுங்கள்!

வித்தியாசம்
அறிவாளிக்கும் புத்திசாலிக்கும் ஒரு சின்ன வித்தியாசம்தான். அறிவாளி தன் தவறுகளிலிருந்து பாடம் கற்கிறான்; புத்திசாலி பிறரின் தவறுகளிலிருந்து பாடம்
கற்கிறான்!

அந்த ஒரு கலை!
உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்கும் கலையை மட்டும் வளர்த்துக் கொண்டால் போதும்... நீங்கள் தினம் தினம் புதிது புதிதாக நிறையக் கற்க முடியும்.

வள்ளல்
பெரும்பாலும் நாம் எல்லோருமே நமக்குத் தேவையில்லாத, நாம் உபயோகப்படுத்தாத ஒன்றைத்தான் மற்றவர்களுக்கு வாரி வழங்குகிறோம். புத்திமதியும் ஆலோசனையும்கூட அப்படித்தான்!

அர்த்தம்
'வாழ்க்கை' என்பதற்கான அர்த்தத்தைத் தெரிந்துகொள்ளாமலே நாட்களைக் கடத்துவது சரியல்ல; அதனால், அகராதியை ஒருமுறை உடனே புரட்டிப் பார்த்துவிடுங்கள்!

சாக்லெட் வாழ்க்கை
வாழ்க்கை என்பது சாக்லெட் உள்ள பெட்டி என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், பலருக்கு ஒன்றிரண்டு சாக்லெட்டுகள் மட்டுமே உள்ள பிரமாண்ட
பெட்டியாகவே அமைந்துவிடுகிறது!

இயற்கை முரண்!
ஒரு வேடிக்கை பார்த்தீர்களா... மனிதனுக்குக் கண் இரண்டு; காது இரண்டு. வாய் மட்டும் ஒன்றுதான். ஆனாலும், கவனிப்பதை விட அவன் பேசுவதுதான் அதிகமாக இருக்கிறது!

இரண்டு வகை!
மனிதர்களில் இரண்டு வகையினர் உண்டு. ஒரு வகையினர் - என்னைப் போல் மனிதர்களை இரண்டு வகையாகப் பிரித்துப் பார்ப்பவர்கள்; இரண்டாவது வகையினர் - அப்படிப் பிரிக்காதவர்கள்!

புத்திசாலித்தனம்!
நீங்கள் ஜெயிக்கவில்லை என்றால் பரவாயில்லை; உங்கள் முயற்சியின் தடயங்களை அழித்துவிடுங்கள்!

இதுதாண்டா உலகம்!
யாருமே உங்களைக் கவனிக்கமாட்டார்கள் - நீங்க ஏதாவது தப்பு செய்கிற வரைக்கும்!

இரண்டு வழிகள்!
பெண்களிடம் வாதாட இரண்டு வழிமுறைகள் உண்டு. ஆனால், இரண்டுமே பயனற்றவை.

அது இயல்பல்ல!
தவறுவது மனிதருக்கு இயல்பானதுதான்! ஆனால், மன்னிப்பது கம்பெனியின் கொள்கைக்கு முரணானது!

சுய முன்னேற்றம்!
சுய முன்னேற்றத்துக்கான முதல் படி, புத்தகக் கடையில் அது தொடர்பான புத்தகத்தை சேல்ஸ்மேன் உதவியின்றி நீங்களே தேடி எடுப்பதுதான்!

காரணம்!
நாம் பிறக்கும்போதே நிர்வாணமாக, ஈரமாக, பசியோடு பிறக்கிறோம். இந்த மூன்றும்தான் மனிதர்கள் தவறு செய்யக் காரணங்களாக அமைந்துவிட்டன!

பாடம்!
தவறுகளிலிருந்துதான் பாடம் கற்றுக்கொள்ள முடியும். எனவே, அதிகம் தவறுகள் செய்வீர்!

பட்டியல்
மறப்போம்; மன்னிப்போம்! ஆனால், அவற்றுக்கெல்லாம் ஒரு பட்டியல் வைத்துக்கொள்வோம்!

அழுகிற பிள்ளை...
அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்; சமயத்தில் அடியும் வாங்கும்!

பணம்
பணம்தான் எல்லாம் என்பதில்லை; ஆனால், பணம் இருந்தால்தான் எல்லாம்!

அவர்கள்
எப்படி வேலை செய்யவேண்டும் என்று தெரிந்தவர்கள் அதிக முன்னேற்றம் அடைகிறார்கள்; யாருக்கு வேலை செய்யவேண்டும் என்று தெரிந்தவர்கள் அதிகச் சம்பளம் பெறுகிறார்கள்!

புத்திசாலித்தனம்
உன் வாகனத்தின் பிரேக்கை சரிப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்றால், ஹாரனையாவது சத்தமாக ஒலிக்கும்படி வைத்துக்கொள்!

அடையாளம்
சுத்தமான மேஜை ஒரு நல்ல ஊழியரின் அடையாளம்தான் & இழுப்பறைகள் அடைசலாக இல்லாதிருந்தால்!

முடியாது!
எதிர்மறை வாக்கியங்களையே பயன்படுத்திக்கொண்டு இருந்தால், முன்னேற முடியாது!

ஒரு வித்தியாசம்
நாய்க்கு நாம் எஜமான்; பூனைக்கு நாம் பணியாளர்!

ஆனாலும்...
கடின உழைப்பு எவரையும் கொல்லாது என்று எல்லோருக்குமே தெரியும். ஆனாலும், அதற்கு வாய்ப்பு கொடுப்பானேன் என்று சிலர் யோசிக்கிறார்கள்!

சுவர்கள்
அண்டை வீட்டுக்காரரோடு சிநேகமாக இருங்கள்; அதற்காக காம்பௌண்ட் சுவரை உடைத்துவிடாதீர்கள்!

அட, தெரியுமுங்க!
எனக்குக் கராத்தே தெரியும்; இது மாதிரி இன்னும் கூட ஏழெட்டு ஜப்பானிய வார்த்தைகள் தெரியும்!

டிஸ்கி  : இதை ஒரே  வலைப்பதிவில் போட்டுவைத்திருக்கும் திரு.ரவிப்பிரகாஷ்..விகடன் பொறுப்பாசிரியர் அவர்களிடமிருந்து சுட்டது !   :-)

Friday, March 7, 2008

பெண்களே..பெண்மையே....வாழ்க நீங்கள்!

பெண்களே..பெண்மையே வாழ்க..நீங்கள்!

அம்மா ராதா..
தங்கை வித்யா
மருமகள் சொர்ணா
மனைவி ஹேமாவயதில் மூத்த
சொந்தங்களாய்,

ஜம்பா டீச்சர்
இரண்டு லட்சுமிகள்
விசாலாட்சி
மீனாட்சி
சரோஜா
தங்கம்மாள்
விஜயலட்சுமி
கமலா


ஆசிரியைகளாய்

மேரி டீச்சர்
ரத்னாபாய் டீச்சர்
வளர்மதி டீச்சர்
சித்ரா மேடம்
பேபி லதா மேடம்
கீதா மேடம்


சகோதரிகளாய்,

சாந்தி
சித்ரா
ஆனந்தி
ஷோபனா
உஷா
உமா
புஷ்பா
மீனாட்சி
மகேஸ்வரி
சாந்தி
ரேவதி
அகிலா
சுமதி அக்கா


அண்ணிகளாய்

பத்மா
விஜி
ரமா
உமா
புஷ்பா


மற்றும்

ராஜி
உமா
சின்ன ராஜி
வித்யா
சத்யா

ஹரிணி
சத்யா
ஐஸ்வர்யா
காயத்ரி
கீர்த்தனாதோழிகளாய்

மல்லிகா
செலின் ப்ளோரா
சுகுணா
சாந்தி
அவாகனி
சுமதி
கல்யாணி
வித்யா
சாமுண்டீஸ்வரி
கவிதா
ரத்னா
சுனிதா
ரோகிணி
சில்வியா
ஜன்னத்
ஜோஸ்லின்
மெட்டில்டா
சிந்தாமணி
டெலா க்ரூஸ்
ஆன்
செலிபேத்
சிவகாம சுந்தரி
புவனா
ஹேமா
அனிதா
சத்யா
சுமதி
லதா மங்கேஷ்
ராஜி
ரமணி
சந்தியா

கவிதா
அபிராமி
சூர்யா
தேவி


பதிவர்கள்

புதுகைத்தென்றல்
துளசி கோபால்
டெல்பைன் மேடம்
மங்கை
காயத்ரி......பிறக்கப்போகும்
என் மகளுக்கும்....நீங்கள்
என்றென்றும்
இனிமையாய்,
நிறைவுடன்
வாழ்ந்து நின்று
எல்லா வளமும்
பெற்று மகிழ,

என் இனிய வாழ்த்துக்கள் !

Thursday, March 6, 2008

தொடர் விளையாட்டா....? சரி...சரி..

சமீப காலமா...பதிவுலகத்துல பாத்துக்கிட்டிருந்தேன்..ஒருத்தர் பதிவு போட்டுட்டு. அது சம்பந்தமா 4 பேரை தொடரச்சொல்றது !
அட..இது மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் மாதிரி இருக்கேன்னு பாத்தேன்.

ஆனா...வேடிக்கை பாத்தவனை கூத்தாடச்சொன்னமாதிரி...புதுகைத்தென்றல்..என்னைய இதுல இழுத்துவுட்டுப்புட்டாங்க!

சாதாரணமாவாவது ஏதாவது ரைம்ஸ் ஞாபகம் இருக்கும்! இப்ப சுத்தமா இல்லை! அப்துல் ரகுமான் ஒரு கவிதை எழுதியிருப்பாரு.

நான் மழைக்குக்கூட
பள்ளிக்கூடத்தில்
ஒதுங்கவில்லை!
ஒரு நாள் ஒதுங்க
நேரிட்டபோது கூட
மழையைத்தான்
ரசித்துக்கொண்டிருந்தேன்...!

அதுமாதிரி...எனக்கு இந்த pre-KG அனுபவமெல்லாம் கிடையாது. இருந்தாலும் எனக்கு தெரிஞ்சு ..பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுத்த பாட்டுக்கள்னா....!

1.தேனினிமையிலும்
ஏசுவின் நாமம்
திவ்யமதுரமாமே!

2. பெத்லகேமில் பிறந்தவரை போற்றித்துதி மனமே!
(ரொம்ப நாள் இதை வெத்திலையில் பிறந்தவரைன்னே பாடிக்கிட்டிருந்திருக்கேன்)

3. அதோ பார் ரோடு
ரோட்டு மேல காரு
காருக்குள்ள யாரு?
நம்ம மாமா நேரு
நேரு என்ன சொன்னாரு?
எழுதப்படிக்க சொன்னாரு!
( இதையும் எலியப்புடிக்க சொன்னாருன்னு மாத்திப்பாடி வாங்குப்பட்டிருக்கேன்)

4. இங்கிலீஷ் பாட்டு...?

ஜாக் அண்ட் ஜில்
வென்ட் அப் த ஹில்............தான்..( ஒரு பையனும் பொண்ணும் கையில ஒரு வாளியை வச்சுக்கிட்டு கிணத்துப்பக்கத்துல நிக்கிறமாதிரி படம் போட்டிருக்கும்)


இதுக்கே...மூளை கசங்கிப்போய்..அயர்ன் பண்றமாதிரி ஆகிடுச்சு..

அடுத்து யாரைக்கூப்புடறது?

ஏதாவது தள்ளுபடி உண்டுங்களா?

முயற்சி பண்றேன்.

1. தம்பி

2. ஸ்டாக் சிவா

3. துளசி கோபால்

4. குசும்பன்


Tuesday, March 4, 2008

ஒற்றை நொடி வாழ்க்கை..பாகம் 2

             நம்ம ஆளும் அலட்டிக்காம சொன்னாரு..
            'நானும் அடிக்கலாம்னுதான் கிட்டக்க போனேன். தண்டவாளத்தை விட்டு எறங்கி ஓட ஆரம்பிச்சுட்டான்.. தொரத்தி அடிக்கறதுக்குள்ள இப்படி ஆகிப்போச்சு' ன்னாராம்.
             ஒரு விஷயத்தை தப்பா புரிஞ்சிக்கிட்டோம்னா அதை எவ்வளவுதான் கவனமா செஞ்சாலும் ரிஸல்ட் தப்பாத்தான் ஆகும். நம்ப புத்திசாலித்தனம் அந்த நொடிகளில் விவரமா பயன்படுத்தப்படணும். அதைத்தான் ஆங்கிலத்தில் அழகா சொல்லுவாங்க...Presence of Mind ன்னு.. அதாவது மனம் அந்த இடத்தில் கவனமா இருந்தால் கண்டிப்பா சிறப்பா செயல்படலாம். சில சமயங்களில் அவசரப்பட்டும் அந்த நொடி முடிவெடுத்துடக்கூடாது.

ஞாலம் கருதினும் கைகூடும்- காலம்
கருதி இடத்தாற் செயின்..னாரு வள்ளுவர்!

          அதுபோல சந்தர்ப்ப சூழலையும் பாத்துக்கணும். அப்பதான் உலகையே வெல்லமுடியும். சூழலைப்பாக்காம எது செஞ்சாலும் சொதப்பிடும்!
            நம்ம மொக்கச்சாமி செத்துப்பொயிட்டாராம். அவருக்கு நரகம் அலாட் பண்ணியிருந்தாங்களாம்.! அன்னிக்கு நரகத்தில் கடவுள் விஸிட் இருந்ததால, எமன் ரொம்ப பரபரப்பா இருந்தாராம். உன் அக்கவுண்ட்டெல்லாம் பாத்துக்கிட்டுருக்க முடியாது. இங்க வரிசையா ரூம் இருக்கு! அதில் எது உனக்கு பிடிச்சிருக்கோ அதை வந்து என்னிடம் சொல்லு..! நான் திறந்துவிடச்சொல்றேன்னுட்டாராம். மொக்கச்சாமியும் அவசரமா, ஓடிப்போய் ஒவ்வொரு ரூமா பாக்க ஆரம்பிச்சாராம். எல்லா ரூமும் கண்ணாடியால் ஆகியிருக்கு! உள்ள நடக்கறதெல்லாம் தெளிவா தெரிஞ்சுதாம். முதல் ரூமில் எல்லாரையும் கொதிக்கிற எண்ணெய்ல குளிப்பாட்டிக்கிட்டிருந்தாங்க! ஆஹா இது வேண்டாம்னு, ரெண்டாவது ரூமை பாத்தாராம். அங்க பனிக்கட்டில படுக்க வச்சு அடிச்சிக்கிட்டிருந்தாங்களாம்.! இதுவும் வேண்டாம்னுட்டு மூணாவது ரூமைப்பாத்தாராம். அங்க எல்லாரும் காபி குடிச்சிக்கிட்டிருந்தாங்களாம். அவருக்கு ஒரே சந்தேகம் ப்ளஸ் சந்தோஷம் ...அட! நரகத்தில் காபி குடிக்கிறதெல்லாம் ஒரு தண்டனையான்னுட்டு, எதுக்கும் சந்தேகத்துக்கு கேட்டுக்கலாம்னு கண்ணாடிக்கதவை தட்டி...உள்ள இருந்தவர்க்கிட்ட ' என்ன? காபியா குடிக்கிறீங்க?' ன்னு ஜாடைல கேட்டாராம். அவரும் ஆமாம்னு சொல்ல, மொக்கச்சாமிக்கு ஏக குஷி..! உடனே எமன்கிட்ட ஓடிப்போய்
'அந்த மூணாவது ரூமிலேயே போட்டுடுங்க! ன்னாராம்.

எமன் ...' கன்பார்மாத்தானே சொல்லுற..அப்புறம் மாத்தமுடியாதுன்னாராம்.

இல்லல்ல கன்பார்ம்தான்..னாராம் மொக்கச்சாமி..!

அப்ப சரி..யாரங்கே..மொக்கச்சாமிக்கு மூணாவது ரூமை திறந்து விடுங்கள்ன்னாராம் எமன் ! ரூமை திறந்துவிட்டாங்க! அவருக்கு ஒரு இடம் கொடுத்தாங்க! உக்காந்தார். ஒரு கப் காபி வந்தது. குடிக்க ஆரம்பிச்சார். அரை கப் குடிச்சிருப்பார்.

அப்ப பாத்து ஒரு எமலோக அதிகாரி வந்து...ஓகே எல்லாருக்கும் காபி டைம் முடிஞ்சிருச்சு..அவுங்கவுங்க தீச்சட்டியை எடுத்து தலையில் வச்சுக்குங்கன்னாராம்.

        ஆக..அந்த நேரத்தில் எடுக்கும் முடிவு, சூழலையும் பொறுத்து மாறணும். அது நமக்கு பயனுள்ளதா இருக்கணும். அதெல்லாம் ஒவ்வொரு நொடி வார்த்தைகளையும் கவனிச்சாத்தான் முடியும்.

         கில்லி படத்தில் ... த்ரிஷாவை காப்பாத்துறதுக்காக விஜய் ரொம்ப தூரம் ரிஸ்க் எடுத்து பயணம் பண்ணுவாரு.. ஒரு சமயத்தில் ரோட்டில் போகும் ஒரு வேனை நிறுத்தி லிப்ட் கேப்பாரு...அதுலேருந்து இறங்குறது, அவுங்களை பிடிக்க துரத்தும் பிரகாஷ்ராஜ்.! இவங்களுக்கு அதிர்ச்சி! அப்ப பாத்து நல்லா மாட்டிக்கிட்டியா? தனலெட்சுமிதான் என் உயிருன்னு ஒரு நீள டயலாக் பேசுவார் பிரகாஷ்ராஜ். அப்புறம்.. விஜயை அடிக்கச்சொல்லி அடியாட்களுக்கு உத்தரவிடுவார். அவங்களும் நெருங்குவாங்க..! சடார்ன்னு காப்பாத்த கூட்டிட்டு வந்த த்ரிஷா கழுத்திலேயே கத்தியை வச்சு மிரட்டி...அந்த கும்பலில் இருந்து சுலபமா தப்பிப்பார் விஜய். அந்த இடத்தில், தப்பிக்க அதை விட்டா வேற வழியே கிடையாது. அந்த நேரம் பயந்திருந்தா அதோ கதிதான்.! இது பேருதான் presence of Mind. இன்னிக்கு பெரிய பெரிய நிறுவனங்கள் வேலைக்கு சேர்க்கும் ஊழியர்களுக்கான தகுதில பெரிசா நினைக்கிறது இதைத்தான்.
            நல்ல முடிவெடுக்கணும்னாலே நாம அந்த நொடியில் வேற சிந்தனை இல்லாம வாழ்ந்தா போதும்! ஏன்னா , எல்லாத்தையும் கவனிக்கிற ஆளாலத்தான் எல்லாரும் கவனிக்கிற ஆளா மாறமுடியும்.
           

ஒற்றை நொடி வாழ்க்கை..

நமக்கு வேலைகளைப்பற்றின பிரமிப்பு ஏற்படுறதுக்கு காரணமே, அதை அப்பவே செய்யும் மனநிலை இல்லாததுதான் ! மேலும் அதைப்பத்தி ரொம்ப பூதாகரமா நினைச்சுக்கிறதுதான்.!
          ஒரு கடிகாரம் இருந்ததாம்.! அதிலுள்ள ஒரு நொடிமுள்ளுக்கு தன் வேலையைப்பத்திய பயம் வந்துடுச்சாம். நாம ஒரு நிமிஷத்துக்கு 60 நொடி டிக், டிக் னு சுத்தணும், அது போல 60 நிமிஷம் ஆனாத்தான் ஒரு மணி நேரம் ஆகும் ! 24 மணி நேரமானாத்தான் ஒரு நாள்! ஆக ஒரு நாளைக்கு 60 x 60 x 24 , 86400 தடவை டிக், டிக்குங்கணுமே, மேலும் இந்த கடிகாரத்தில் எத்தனை நாள் பேட்டரி தீராம இருக்குமோ..? நான் இவ்ளோ வேலை பாக்கணுமா? அப்டின்னுட்டு மயக்கம்போட்டு விழுந்துடுச்சாம்..! அப்ப பக்கத்திலிருந்த நிமிஷ முள் , நொடிமுள்ளை தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டுட்டு சொல்லிச்சாம். நீ ஏன் இப்படி கவலைப்படுற ! உன் வேலை ரொம்ப சிம்பிள்! ஒரு தடவை டிக் ன்னு நகரணும். அவ்வளவுதான். அதுக்கப்புறம் அடுத்த நொடி வேலையைப்பாரு! ன்னுதாம். அப்பதான் நொடிமுள்ளுக்கு ஒரு தெளிவு பிறந்ததாம்.
                   அதுபோலத்தான் நாமளும் , காலேஜ் போறதும் , வேலைக்குப்போறதும் வருஷக்கணக்கா பண்ணனுமேன்னு கவலைப்பட்டா ஒரு வேலையும் நடக்காது ! இன்னிக்கு ஒருநாள் நல்ல ஸ்டூடண்டா.. நல்ல ஊழியரா இருந்துடணும் னு நினைச்சுக்கிட்டு போங்க! அதே போல், தினமும் நினைங்க! அவ்வளவுதான்.. நீங்கதான் வாழ்நாள் சாதனையாளர் !
                       அதே சமயம் ஒரு வேலையை கவனமா செய்யறதுன்னா, அதை செய்யும்போது ,வேற எதையும் நினைச்சுக்கிட்டு செய்யக்கூடாது..! ஆனா நிறைய நேரத்துல அப்படித்தான் நடந்துடுது! உதாரணமா, வீட்டுக்கதவை பூட்டினோமான்னு ரொம்ப தூரம் போனதுக்கப்புறமும், கியாஸை மூடினோமான்னு வீட்டைப் பூட்டினதுக்கப் புறமும் யோசிக்க ஆரம்பிச்சுடுவோம்.. சிலபேர் சந்தேகத்துக்கு போய் பாத்துட்டே வந்துடுவாங்க! மேக்ஸிமம்..பூட்டித்தான் இருப்பாங்க! இல்ல கியாஸை மூடித்தான் இருப்பாங்க.! அப்ப எங்க தப்பு நடந்துச்சு? கதவை பூட்டும்போதும், கியாஸை மூடும்போதும், ' கதவை பூட்டுறோம்,கியாஸை மூடுறோம்னு நினைக்காம வேற எதையாவது நினைச்சுக்கிட்டு செய்யும்போது இந்தமாதிரி தப்பு நடக்கத்தான் செய்யும்.. எதை செய்யுறோமோ அந்த நேரத்தில் அதைச்செய்யும் விழிப்புணர்வோட இருந்தா கவலையே இல்லை! நம்மள விட கான்சன்ட்ரேஷன் உள்ள ஆளு இந்த உலகத்திலேயே இருக்க முடியாது! அதுக்கு , அந்த நொடியை ரசிச்சு வாழணும்!
          
          ஜென் துறவி ஒருத்தர் இறக்குற தருவாயில் இருந்தாராம் ! அந்த ஆசிரமத்தில் அடுத்த தலைவர் யாருன்னு சொல்லாம இறந்துடுவாரோன்னு எல்லாரும் கவலைப்பட்டுக்கிட்டே இருந்தாங்களாம். அவருக்கு பக்கத்தில் மாம்பழம் வச்சிருந்தாங்களாம்.அவருக்கு மாம்பழம்னா ரொம்ப பிடிக்குமாம். அதையே பாத்தாராம். உடனே அவரோட சீடர்கள் மாம்பழத்தை எடுத்து அவரிடம் கொடுத்தாங்களாம். அதை சாப்பிட ஆரம்பிச்சாராம். அவர் வாயிலேருந்து வரப்போற அந்த கடைசி வார்த்தைக்காக காத்திருந்தாங்களாம். பொறுமை தாங்காம ஒரு சீடர் , ஐயா..உங்களுக்கு அடுத்ததா இங்க யாரை தலைவ்ரா போடுறதுன்னு சொல்லுங்கன்னு கேட்டுக்கிட்டராம். துறவி மெதுவா எல்லாரையும் சுத்திப்பாத்தாராம். அப்புறம் ' மாம்பழம் நல்ல டேஸ்ட்' அப்படின்னு சொல்லிட்டு இறந்துட்டாராம். அந்த நொடியை இரசிச்சு வாழணும்னு சொல்லாம சொல்லிட்டாராம். அடுத்த நொடியைப்பத்தியோ, அடுத்த நாட்கள் பத்தியோ.. நாம செய்யுற இந்த நொடி வேலைதான் தீர்மானிக்கும்! ஜென் துறவிகள் ஒரு கப் டீயைக்கூட 'அதைவிட்டா இந்த உலகத்தில் வேற வேலையே இல்லை ங்கிற மாதிரிதான் குடிப்பாங்க!
             கான்ஸன் ட்ரேஷன், ஞாபக சக்தி இதுக்கெல்லாம் அடிப்படை அந்த நொடி என்ன செய்யுறோம்கிறதை கவனிச்சு செய்யுறதுதான்.! ஆனா அதுவே வேறமாதிரியும் work out ஆகிடும்.
                  
             ஒரு ட்ரெயின் டிரைவருக்கான பயிற்சி நடந்தது. அதில் டிரைவருக்குரிய எல்லா வேலைகளையும் கத்துக்கொடுத்தாங்க! அப்ப முக்கியமா, ரயில்வே தண்டவாளத்தில் மனிதரோ விலங்கோ நின்னா இரயிலை நிறுத்தவே வேண்டாம். அடிச்சுட்டு போய்க்கிட்டே இருக்கலாம். அதுக்கு கேஸெல்லாம் கிடையாதுன்னு சொன்னாங்க..! அந்த பயிற்சியில் மொக்கச்சாமின்னு ஒரு ஆளு கலந்துக்கிட்டாரு.! நல்லா கவனமா கேட்டுக்கிட்டாரு.. யாரும் குறுக்க வந்தா அடிச்சுட்டு போயிடலாமா சார்..! ன்னு குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு உறுதிப்படுத்திக்கிட்டாரு. அந்த அதிகாரிக்கு ஒரே சந்தோஷம் ...பாருங்க ! எப்படி சின்சியரா கவனிச்சு , கேள்வியெல்லாம் கேட்டு தெரிஞ்சுக்கிறாரு..! இவர் பெரிய ஆளா வருவாருன்னு புளகாங்கிதமடைஞ்சாரு! ட்ரெயினிங் முடிஞ்சுது.. நம்ம மொக்கச்சாமி டூட்டில ஜாயின் பண்ணினாரு. சேந்து ஒரே வாரத்துல பெரிய விபத்து! பல நூறு பேர் பலியாகிட்டாங்க ! ட்ரெயின் தண்டவாளத்த விட்டு 500 அடி தள்ளி விழுந்து கிடக்கு...! உடனே மொக்கச் சாமியை கூப்பிட்டு, எப்படி விபத்து நடந்துச்சுன்னு கேட்டாங்க!

அவரும் 'நீங்க சொல்லிக்குடுத்ததை செஞ்சேன் இப்ப்டி ஆயிடுச்சு'ன்னார்.

அய்யய்யோ நான் என்னப்பா சொல்லிக்குடுத்தேன்னாரு அதிகாரி.

நீங்கதானே யாராவது தண்டவாளத்தில் நின்னா அடிச்சுட்டு போக சொன்னீங்க!

ஆமாம் சொன்னேன்..அதுக்கு என்ன? ன்னாரு அதிகாரி!

                                                                        ...............................                              தொடருமுல்ல !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...