பொட்டண வட்டி

'எப்புடி இருந்தாலும் ரெண்டு லெச்சம் இல்லாம ஒண்ணும் செய்யமுடியாது.'' நேற்று இளங்கோ அண்ணன் சொன்னது மீண்டும் மீண்டும் வந்துபோனது. அப்பா காலத்திலிருந்த டெடில் மிஷினை வைத்து அச்சகம் நடத்தி ,இன்றைய தேதிக்கு பிழைப்பது என்பது , பேப்பர் வெட்டும் இயந்திரத்தில் தலையைக்கொடுப்பதற்குச் சமம் என்று தெரிந்து போனது. சரி..இருக்கும் பொருட்களை விற்கலாம் என்றால், அதுவும் முடியாது, வேண்டுமானால் அச்சு எழுத்துக்களின் ஈயத்தையும் இரும்பையும் எடைக்கும், படக்கட்டைகளை குப்பைக்கும். எழுத்துக்களை வைத்திருந்த சிறு அறைகளாகப்பிரிக்கப்பட்ட பெட்டிகளை உடைப்பதற்கும்,அந்த பிரம்மாண்டமான லண்டனில் செய்யப்பட்ட , ராயல் சிம்பல் பொறித்த அச்சடிக்கும் எந்திரத்தை பழைய இரும்பு விற்கும் சுரேஷ் அண்ணனிடமும் கொடுக்கலாம். அதில் ஒரே மிச்சம், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் , பெடலால் மிதித்து ஓட்ட முடியவில்லை என்பதற்காக பொருத்திய மோட்டார்.! அதையும் ஆயிரம்கூடப்பெறாது அண்ணே என்று எலக்ட்ரீஷியன் பாலு சொல்லிவிட்டான். நானும் பல்லைக்கடித்து இத்தனை ஆண்டுகள் ஓ...